இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று இரட்டை மேற்கோள்குறி ஆகும். இது ஒற்றை மேற்கோள்குறியோடு சில ஒப்புமைகள் கொண்டுள்ளது.
இரட்டை மேற்கோள்குறி (" ") இடும் இடங்கள்
தொகுஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்டவும் நூல்களிலிருந்து ஏதாவது பகுதியை ஆதாரமாகக் காட்டவும் இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.
இரட்டை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- "நானும் வருகிறேன்" என்றான் பொய்யாமொழி.
- 2) ஒரு நூல் அல்லது கட்டுரையினின்று ஏதாவது ஒரு பகுதியை ஆதாரமாக அல்லது துணையாகாக் காட்டும்போது இரட்டை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- "யாகாவாராயினும் நாகாக்க" (குறள் 127) என்னும் வள்ளுவர் கூற்று இன்றும் பொருளுடையதே.
- 3) ஒரு சொல் அல்லது சொற்றொடர் வழக்கமான பொருளன்றி வேறு பொருளில் வழங்கப்படுகிறது என்பதைக் காட்ட இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- தலைவருக்கு "வலதுகை" அவருடைய செயலரே என்றால் மிகையாகாது."
- 4) பட்டப்பெயரைக் குறிக்க இரட்டை மேற்கோள்குறி வழங்கப்படும்.
- "வெண்ணிற ஆடை" இராமமூர்த்தி எங்கள் பள்ளிக்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன.
- 5)ஒரு சொல்லைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- வடமொழியில் வழங்கும் "தர்மா" என்பதும் திருக்குறளில் வரும் "அறம்" என்பதும் ஒன்றே எனச் சிலர் தவறாகக் கருதுகின்றனர்.
சான்றுகள்
தொகு1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.