காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா 2022

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா 2022 (Kanchipuram book festival 2022) 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தொடங்கி 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது.[1]

புத்தகங்களை கையில் எடுத்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் என்ற நோக்கத்தை இலக்காகக் கொண்டு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்தின. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அண்ணா காவல் அரங்க விளையாட்டரங்க வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அரசு சார்பில் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இத்துடன் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் நிதி உதவி வழங்கின.

புத்தகத் திருவிழாவில் சுமார் 120- எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ரூ.10 முதல் 1000- ரூபாய்க்கும் மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 5 ஆயிரம் தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களுக்கு சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

முன்னெடுப்புகள் தொகு

புத்தகத் திருவிழா காஞ்சிபுரத்தில் முதன் முறையாக நடத்தப்படுவதால் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், திட்ட இயக்குனர் சிறீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். புத்தகத் திருவிழாவுக்கான பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி வெளியிட்டார். விழாவுடன் தொடர்புடைய குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். நட்சத்திர பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் ஆகியவை விழாவில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.[2]

தொடக்க விழா தொகு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வியின் வரவேற்புரையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் 23.12.2022 அன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கின. பப்பாசி தலைவர் வைரவன் அறிமுகவுரை நிகழ்த்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. ஆர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.[3] நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, க.செல்வம் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், க.சுந்தர், சி. வி. எம். பி. எழிலரசன், கு. செல்வப்பெருந்தகை முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னிலை உரை நிகழ்த்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் போன்றவர்களின் சிறப்புரை மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் காஞ்சிபுர நகரத் தந்தை போன்றவர்களின் வாழ்த்துரைகளுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்தன.

சிறப்பம்சங்கள் தொகு

1. கைலாசநாதர் கோயில் கோபுரத்துடன் "புத்தியை தீட்டுவோம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளும் இடம் பெற்ற்றிருந்த புத்தக திருவிழா சின்னம்.

2. காஞ்சிபுரத்தின் பெருமை எனற மையக்கருத்துடன் ஓர் அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் ப‌ட்டு நெசவாளரை கொண்டு முதல் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை ஒரு பட்டு புடவை நெய்யப்பட்ட நிகழ்வு.[4]

3. பல்லவர் சிற்ப கலையை மையமாகக் கொண்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆளி சிங்கச் சின்னம்.

4. கைலாசநாதர் கோயில் கோபுர வடிவில் மணல் சிற்பம்.[5]

5. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பிரத்யேகமான புத்தகம் படிக்கும் மூலை என்றோர் அரங்கு

6. ஒரு புத்தகத்தை நன்கொடையாக கொடுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்து புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக ஓர் அரங்கம்.

7. புத்தகத் திருவிழாவிற்கு தினம் தோறும் வரும் சிறுவர் சிறுமியர்களுக்கு புத்தகம் பரிசாக அளிக்கும் பரிசுக்கூப்பன் திட்டத்திற்கு ஒர் அரங்கு

8. அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தினமும் மர கன்றுகள் வழங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு.

9. கலை நிகழ்ச்சி அரங்கம் அருகில், கோளரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூமி, சூரியன், செவ்வாய் என கோள்களை 360 பாகை அளவில் காணும் நிகழ்வு.[6]

கலையும் கருத்துரையும் தொகு

புத்தகத் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்
வ.எண் தேதி கருத்தாளர் தலைப்பு கலைநிகழ்ச்சி
1 23.12.2022 தொடக்க விழா
2 24.12.2022 எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழை நேசிப்போம் சூப்பர் சிங்கர், இசைநிகழ்ச்சி
3 25.12.2022 1. சுந்தர ஆவுடையப்பன்
2. சசிலயா
1.காஞ்சியின் பெருமை அறிஞர் அண்ணா
2. அன்பிற் சிறந்த தவமில்லை
சிறீ பச்சையம்மன் கட்டைக்கூத்து மன்ற கலை நிகழ்ச்சி[7]
4 26.12.2022 1. கோபிநாத்
2. கவிதா ஜவகர்
1. ‘அ’ னா ‘ஆ’ வன்னா
2. அன்பிற்கு நிகர் அன்பே.
எண்ணும் எழுத்தும்
கோ. சரவணன்
5 27.12.2022 1. ஈரோடு மகேஷ் மனித சக்தி கலக்கப்போவது யாரு
நகைச்சுவை நிகழ்ச்சி
6 28.12.2022 1. பாரதி பாஸ்கர் ஊக்கமது கைவிடேல் தமிழுக்கு பெருமை சேர்ப்பது சங்க காலமா? சமகாலமா
பட்டிமன்றம்
தலைவர்: கு. ஞானசம்பந்தன்
7 29.12.2022 1. சுகி சிவம்
2. சுகிர்தராணி
1. சிகரங்களை நோக்கி
2. சிறகுகள் பறப்பதற்கானவை
சிந்தனை செய் மனமே
மோகன சுந்தரம்
8 30.12.2022 1. பர்வீன் சுல்தானா
2. கவிப்பித்தன்
1. உண்டு தீர்த்தோம் உழுது பார்ப்போம்
கலை மற்றும் பண்பாட்டுத் துறையினர்
9 31.12.2022 1. சி. வி. எம்.பி. எழிலரசன்
2. எஸ். இரவி
1. கருத்துரை
2. மனமே கவனம்
கலை மற்றும் பண்பாட்டுத் துறையினர்
10 01.01.2023 1. கு. சிவராமன் 1. சமூகமும் சுகாதாரமும் பத்மசிறீ கலைமாமணி நர்த்தகி நடராஜ்
அமுதத்தமிழ் ஆடரங்கம்
11 02.01.2023 நிறைவு விழா

நிறைவு விழா தொகு

புத்தகத் திருவிழாவில் சுமார் 1,50,000 பார்வையாளர்கள் கலந்துக்கொண்டு, சுமார் ஓரு கோடி மதிப்பிலான புத்தகங்களை பெற்றதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தன்னுடைய நிறைவு நாள் உரையில் தெரிவித்தார். மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர் என்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய குழுத்தலைவர்கள், நன்கொடை வழங்கிய 43 நன்கொடையாளர்களுக்கு புத்தக திருவிழா நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி சிறப்பித்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி வரவேற்புரை வழங்க காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 02.01.2023 அன்று மாலையில் தொடங்கின. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. ஆர்த்தி முன்னிலை உரை நிகழ்த்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருத்துரையையும் பப்பாசி அமைப்பின் செயலாளர் கே. முருகன் வாழ்த்துரையையும் வழங்க புத்தகத் திருவிழா நிறைவடைந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Jayakumar. "காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா- அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்!". KUMUDAM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  2. Maalaimalar (2022-12-16). "100 அரங்குகளுடன் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  3. "காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா;அமைச்சர் தா மோ அன்பரசன் தொடக்கி வைத்தார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/dec/23/book-festival-in-kancheepuram-3972106.html. பார்த்த நாள்: 7 January 2023. 
  4. "பட்டு சேலை தயாரிப்பதைப் பார்க்க வேண்டுமா.. காஞ்சி புத்தக திருவிழாவிற்கு அடிங்க ஒரு விசிட்". News18:. https://tamil.news18.com/news/kanchipuram/kanchipuram-book-fair-showcased-silk-sarees-making-863161.html. பார்த்த நாள்: 7 January 2023. 
  5. "புத்தக கண்காட்சி வளாகத்தில் மணல் சிற்பம் வடிவமைப்பு!". one india இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230107101801/https://tamil.oneindia.com/videos/kanchipuram-2022-dec-23-1671780113086167220-3545136.html. பார்த்த நாள்: 7 January 2023. 
  6. "காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  7. "கலை நிகழ்ச்சிகளுடன் புத்தக திருவிழா". www.dinakaran.com. Archived from the original on 2023-01-07. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.