க. பொன்முடி
க. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையின் உயர் கல்வி அமைச்சர் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக வளர்ந்து ஒருகினைந்த விழுப்புரம் மாவட்டத்தின் திமுகவின் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து, தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.
க. பொன்முடி | |
---|---|
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 7 மே 2021 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
போக்குவரத்து அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 19, 1950 கல்வி=வரலாற்றில் முனைவர் பட்டம்
பணி=அரசு கல்லூரி பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | விசாலாட்சி பொன்முடி |
பிள்ளைகள் | கவுதம சிகாமணி அசோக் சிகாமணி |
தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் துளுவ வேளாளர்[1] குடும்பத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்இதே திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் வென்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் 2021 மே 7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்த அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று தமிழக முழுவதும் பரவலாக பேசப்பட்டது .[4]
தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள் தொகு
ஆண்டு | தொகுதி | முடிவு |
---|---|---|
1989 | விழுப்புரம் | வெற்றி |
1991 | விழுப்புரம் | தோல்வி |
1996 | விழுப்புரம் | வெற்றி |
2001 | விழுப்புரம் | வெற்றி |
2006 | விழுப்புரம் | வெற்றி |
2011 | விழுப்புரம் | தோல்வி |
2016 | திருக்கோயிலூர் | வெற்றி |
2021 | திருக்கோயிலூர் | வெற்றி |
குற்ற வழக்குகள் தொகு
நில அபகரிப்பு வழக்கு தொகு
1996-2001ல் திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறமுள்ள ஸ்ரீநகர் காலனி விநாயகர் கோயில் எதிரே உள்ள தெருவில் சுமார் 3,630 சதுர அடி பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அக்காலி நிலத்தில் ரூபாய் 35 இலட்சம் செலவில் கட்டிடம் கட்டியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல் 6 சூலை 2023 அன்று அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.[5]
சொத்து குவிப்பு வழக்கு தொகு
1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. சூன் 2023ல் இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 28 சூன் 2023 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.[6]
சொத்து குவிப்பு வழக்கில் மறு விசாரணை தொகு
தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடியின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இதனை 10 ஆகஸ்டு 2023 அன்று தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில் இது மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத்துறைக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. நீதிபதியின் உத்தரவில் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில், வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் சூன் 23ம் நாள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28 சூன் 2023 அன்று , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்ட நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது, இந்த சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து, வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது. இவ்வாறு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.[7]
செம்மண் குவாரி வழக்கு தொகு
2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19 சூன் 2023 அன்று பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.[8][9][10][11]
பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை தொகு
17 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களில் தேடுதல் சோதனைகள் நடத்தினர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூபாய் 81.7 இலட்சம் மிதிப்பிலான பவுண்டு பணத்தாள்கள் மற்றும் ரூபாய் 42 கோடி மதிப்பிலான வங்கி நிர்ந்தர வைப்பு நிதிகளுக்கான ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.[12] சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சுமார் 13 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு அவரை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இரவு 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி வரை விசாரித்தனர். அடுத்த நாள் 18 சூலை 2023 அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொன்முடியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். 19 சூலை 2023 அன்று கவுதம சிகாமணியை அமலாக்கத்துறையினர் தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ தி.மு.க., வேட்பாளர் : பொன்முடி பயோடேட்டா. தினமலர் நாளிதழ். 12 மார்ச் 2021. https://m.dinamalar.com/detail.php?id=2728458.
- ↑ https://www.vikatan.com/news/politics/63455-will-ponmudi-win-in-tirukoilur-constituency.html
- ↑ "திருக்கோயிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி". http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=218305.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
- ↑ விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
- ↑ விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி
- ↑ Blow to Tamil Nadu minister Ponmudi as court dismisses plea in corruption case
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
- ↑ செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
- ↑ பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்