தங்கம்மா அப்பாக்குட்டி

தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925ஜூன் 15, 2008[1]) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்துச் சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தார். "சிவத்தமிழ்செல்வி" என்று அழைக்கப்பட்டு வந்தார்.

தங்கம்மா அப்பாக்குட்டி
Thangamma Appakkuddi
பிறப்பு(1925-01-07)சனவரி 7, 1925
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசூன் 15, 2008(2008-06-15) (அகவை 83)
யாழ்ப்பாணம்
தத்துவம்சைவ சித்தாந்தம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஜனவரி 7, 1925 இல் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.

ஆசிரியப் பணி

தொகு

1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.

தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார்.

சைவப்பணி

தொகு

யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. "பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.

ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுக்காக "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் "திருவாசகக் கொண்டல்", "செஞ்சொற் செம்மணி", "சிவஞான வித்தகி", "துர்க்கா புரந்தரி" போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்.

தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.

சமூகப் பணி

தொகு

தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார்.

ஆலய வளாகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கென "துர்க்காபுரம் மகளிர் இல்லம்" என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவிச் சேவையாற்றி வந்தார். பசித்துவரும் ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்க்கவும், தொண்டர்தம் பசியாற்றவும் "அன்னபூரணி அன்னதான மண்டபம்" அமைத்தார். அத்துடன் கல்யாண மண்டபம் ஒன்றை நிறுவிக் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்ய உதவினார். ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதியர்களுக்குக் கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்துத் தொண்டாற்றினார்.

மறைவு

தொகு

திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி சில வாரங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். 16 ஜூன் மாலை 4:00 மணிக்குத் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன[2].

தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்கு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி இரங்கல் தெரிவித்திருந்தார்[3].

விருதுகள்

தொகு

பட்டங்கள்

தொகு
  • செஞ்சொற் செம்மணி - மதுரை ஆதீனம் (1966)
  • சிவத்தமிழ் செல்வி - காரைநகர் மணிவாசகர் சபை, ஈழத்துச் சிதம்பரம் (1970)
  • சித்தாந்த ஞான கரம் - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
  • சைவ தரிசினி - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
  • திருவாசகக் கொண்டல் - சிலாங்கூர் (மலேசியா) இலங்கைச் சைவச் சங்கம் (1972)
  • திருமுறைச் செல்வி - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
  • சிவமயச் செல்வி - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
  • சிவஞான வித்தகர் - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
  • துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
  • செஞ்சொற்கொண்டல்- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
  • திருமொழி அரசி - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)
  • கம்பன் புகழ் விருது, 2001 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
  • தெய்வத் திருமகள் - அகில இலங்கை இந்து மாமன்றம் (2005)

இவரது நூல்கள்

தொகு
  • பெண்மைக்கு இணையுண்டோ? (2004, மணிமேகலைப் பிரசுரம்)
  • வாழும் வழி (2002, மணிமேகலைப் பிரசுரம்)

மேற்கோள்கள்

தொகு
  1. தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்
  2. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கமா அப்பாக் குட்டிக்கு இறுதிமரியாதை செலுத்தினர் அணுகப்பட்டது 18 ஜூன் 2008 (ஆங்கில மொழியில்)
  3. தங்கம்மா அப்பாக்குட்டி மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் இரங்கல்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்மா_அப்பாக்குட்டி&oldid=3317099" இலிருந்து மீள்விக்கப்பட்டது