பனசங்கரி அம்மா கோயில்

கருநாடகத்தில் உள்ள அம்மன் கோயில்

பனசங்கரி தேவி கோயில் (அல்லது பனசங்கரி கோயில் ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் பாதமிக்கு அருகிலுள்ள சோளச்சகுட்டாவில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும் . திலகாரண்ய வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இக்கோயில் 'சாகம்பரி' 'பனசங்கரி அல்லது வனசங்கரி' என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள தெய்வம் சாகம்பரி என்றும் அழைக்கப்படுகிறார் ( கன்னடம்: ಶಾಕoಭರಿ ). இவர் பார்வதி தேவியின் அவதாரம் எனக் கருதப்படுகிறார்.

பனசங்கரி அம்மா கோயில்
பனசங்கரி அம்மா கோயில் is located in கருநாடகம்
பனசங்கரி அம்மா கோயில்
கருநாடகத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பாகல்கோட்டை
அமைவு:பாதமி
ஆள்கூறுகள்:15°53′14″N 75°42′18″E / 15.88722°N 75.70500°E / 15.88722; 75.70500
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
வரலாறு
அமைத்தவர்:ஆதியில் சாளுக்கியரால் கட்டபட்டது

இந்தக் கோயிலுக்கு கர்நாடகத்திலிருந்தும் அண்டை மாநிலமான மகாராட்டிரத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதன் அசல் கோயில் ஏழாம் நூற்றாண்டின் பாதாமி சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்கள் பனசங்கரி தேவியை தங்கள் குலதெய்வமாக வழிபட்டனர். பனசங்கரி ஜாத்ரே என்றழைக்கப்படும் திருவிழா ஆண்டுதோறும் சனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. திருவிழாவின்போது அம்மனின் தேரோட்டம் நடத்தப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக பண்பாட்டு நிகழ்ச்சிகள், தெப்போற்சவம் போன்றவை நடத்தப்படுகின்றன. பனசங்காரி என்பது மா ஷகம்பரி தேவியின் ஒரு வடிவமாகும் எனப்படுகிறது. இதன் உண்மையான, முதன்மையான, பழமையான கோயில் உத்தரபிரதேசத்தில் உள்ள சகாரன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அது சக்திபீட ஷாகம்பரி தேவி என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையுடன் வீமன், பிரமாரி, சகதாட்சி, பிள்ளையார் ஆகிய சிலைகள் உள்ளன.

சொற்பிறப்பியலும் பிற பெயர்களும்

தொகு

பனசங்கரி அல்லது வனசங்கரி என்பது இரண்டு சமசுகிருத சொற்களான வன ("காடு") மற்றும் சங்கரி (" சிவனின் மனைவி, பார்வதி ") ஆகியவற்றின் சேர்க்கையாகும். திலகாரண்ய வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இக்கோயில் வனசங்கரி என்று அழைக்கப்படுகிறது. வன- என்ற சமசுகிருத சொல் கன்னடத்துக்கு வந்தபோது பன- என்று மாற்றமடைந்ததுள்ளதைப் பிரதிபலிக்கிறது. இந்த தெய்வத்தின் மற்றொரு பிரபலமான பெயர் சாகம்பரி, அதாவது "காய்கறி தெய்வம்". இது ஷாகா மற்றும் அம்பாரி என்ற இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. சமசுகிருதத்தில், ஷாகா என்றால் காய்கறிகள் அல்லது சைவ உணவு மற்றும் அம்பாரி என்றால் "பசித்தவர்கள் உடுத்தி அல்லது தாங்குமிடம்" என்று பொருளாகும். மேலும் விரிவுபடுத்தினால், "ஷாகம்பரி" என்பது ப்ரி என்ற வேருடன் சேர்ந்த ஷகம் என்பதிலிருந்து வந்தது (ஷாகா = காய்கறிகள் அல்லது உணவு மற்றும் ப்ரி = ஊட்டுவதற்கு).

உள்ளூர் மக்கள் இத்தெய்வத்தை பாலவ்வா, பனடவ்வா, சுங்கவ்வா, சிரவந்தி, சௌதம்மா, வனதுர்கை என்றும் அழைக்கின்றனர் . பனசங்கரி போர்த்தெய்வமான துர்க்கையின் ஆறாவது அவதாரம் என்று கூறப்படுகிறது. [1] [2] [3]

வரலாறு

தொகு
 
1855 இல் பனசங்கரி கோவில் வளாகத்தின் முழுமையான காட்சி

வரலாற்றாசிரியர்கள் இதன் முந்தையக் கோவிலை கி.பி ஏழாம் நூற்றாண்டு - கல்யாணி சாளுக்கியர் காலத்தில் கி.பி 603 இல் முதலாம் ஜகதேகமல்லன் (கல்வெட்டுகளின்படி) தெய்வத்தின் உருவத்தை நிறுவினார். தற்போது உள்ள புதுப்பிக்கப்பட்ட கோயில் 1750 இல் மராத்தியத் தலைவரான பருஷராம் அகலே என்பவரால் கட்டப்பட்டது. [1] [2] [3]

வைணவ, சைவ, சைண, சாக்த சமய நம்பிக்கைகளுக்கு அரச ஆதரவை வழங்கிய சாளுக்கியர்களின் ஆட்சிக்கு முன்னரே இதன் மூலக் கோயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் பனசங்கரியை சக்தியின் வடிவமாக வழிபட்டனர். முதலாம் ஜகதேகமல்லன் கோயிலில் பல கட்டுமாணங்களைப் புதிதாக சேர்த்து புதுப்பித்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தூணில் உள்ள கி.பி 1019 ஆண்டைய கன்னட மொழியில் உள்ள மற்றொரு கல்வெட்டு, இராட்டிரகூட மன்னன் பீமதேவனின் வீரச் செயல்களை விவரிக்கிறது. கோயிலின் நுழைவாயிலில் விளக்குத் தூண்கள் காணப்படுகின்றன; இவற்றின் கட்டுமானமானது போர்வீரன் கெட்டிமய்யாவால் செய்யபட்டதாக ஒரு கல்வெட்டால் கூறப்படுகிறது. [4]

கட்டமைப்பு

தொகு
 
சாகாம்பரி கோவிலுக்கு எதிரில் குளக் கரையில் உள்ள காவல் கோபுரம் மற்றும் விளக்குத் தூண்

இக்கோயில் முதலில் திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. புனரமைக்கப்பட்ட கட்டடம் விஜயநகரக் கட்டிடக்கலை பாணியில் உள்ளது. கோயிலைச் சுற்றி உயரமான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய அமைப்பாக ஒரு முகமண்டபம், அர்த்த மண்டபம் ( கருவறைக்கு முன்னால் உள்ள அறை), கருவறை அதன் உச்சியில் விமானம் போன்ற கூறுகளைக் கொண்டுள்ளது. கோயிலின் கருவறையில் பனசங்கரி தேவியின் சிலை உள்ளது. அச்சிலை கருங்கல்லால் அமைக்கபட்டுள்ளது. சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்மன் ஒரு அரக்கனைத் தன் காலடியில் மிதித்திருப்பது போல் காட்சியளிக்கிறார். தேவி எட்டு கரங்களைக் கொண்டளாகவும், கைகளில் திரிசூலம், உடுக்கை, கபாலம், மணி, வேத சாஸ்திரங்கள், கட்கம்- கேடயம், அரக்கனின் துண்டிக்கப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியவளாகவும் உள்ளார். இத்தெய்வம் சாளுக்கியர்களின் குலதெய்வம் ஆகும். பனசங்கரி தெய்வம் தேவாங்க சமூகத்தின் வழிகாட்டி தெய்வமாகும். [5] குறிப்பாக தேவாங்க நெசவாளர் சமூகம், இந்த அம்மனுக்கு மிகவும் மரியாதை செய்கிறது. [1] [4] [6] பனசங்கரி சில தேசஸ்த் பிராமணர்களின் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளார். [7]

கோயிலின் எதிரில் 360 அடி (109.7 மீ) சதுர வடிவ குளம் உள்ளது. இது ஹரித்ரா தீர்த்தம் என்று உள்ளூரில் அழைக்கப்படுகிறது. இது அரிசசந்திர தீர்த்தம் என்ற பெயரின் மருவு ஆகும். குளத்தின் மூன்று பக்கங்களிலும் கல் மண்டபங்கள் சூழ்ந்துள்ளன. [3] [8] [9] [10] குளத்தைச் சுற்றி பிரதட்சணம் அல்லது சுற்றுப்பாதை உள்ளது. [11]

விளக்கு கோபுரங்கள் ( தீப ஸ்தம்பங்கள் ) குளத்தின் மேற்குக் கரையில் கோயிலின் முன்புறத்திலும் கோயிலின் நுழைவாயிலிலும் காணப்படுகின்றன. குளத்தின் கரையில் உள்ள கோபுரம் ஒரு அசாதாரணமான பாதுகாப்பு கோபுரம் ஆகும். இந்த கோபுரம் "இந்து மற்றும் இஸ்லாமிய பாணியின் விஜயநகர கலவையாக உள்ளது". [11] இது வெற்றிக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. [11]

தொன்மம்

தொகு

துர்காசுரன் என்ற அரக்கன் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக கந்த புராணம் மற்றும் பத்ம புராணம் போன்றவை கூறுகின்றன. துர்காசுரனிடம் இருந்து தங்களைக் காக்க யாகம் வளர்த்து கடவுளிடம் முறையிட்ட தேவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த இறைவன், மக்களுக்கு உதவ ஷாகாம்பரி தேவியை அனுப்பினார். வேள்வியில் அம்மன் ஷாகாம்பரி வடிவில் தோன்றினார். அவர் அரக்கனிடம் கடுமையாக போர்புரிந்து அவனைக் கொன்று பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுத்தார். சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியின் அவதாரமாக பனசங்கரி கருதப்படுகிறார். [3] [4] [12]

கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் தென்னை, வாழை, வெற்றிலைக் கொடிகள், மரங்கள் போன்றவை உள்ளன. கடுமையான பஞ்சத்தின் போது, அம்மன் மக்கள் உயிர் காக்க காய்கறிகள் மற்றும் உணவுகளை அதன் மூலம் வழங்கியதாகவும், அதனால், அம்மனுக்கு ஷாகம்பரி என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. [3] [4]

பனசங்கரி ஜாத்ரே

தொகு
 
தீப ஸ்தம்பங்கள் என்னும் விளக்கு கோபுரங்கள் கொண்ட பனசங்கரி கோவிலின் முன்பகுதி

பனசங்கரி ஜாத்ரே ('ஜாத்ரே' என்றால் "திருவிழா") என்ற பெயரில் ஒரு சமய, பண்பாட்டு விழாவாக, ஒவ்வொரு ஆண்டும் நடத்தபடுகிறது. விழாவின் போது கோயில் வளாகத்தில், தோரோட்டம் தொடங்கி சுமார் மூன்று வாரங்களுக்கு விழா நடத்தப்படுகிறது. இந்த விழா புஷ்ய மாதத்தின் எட்டாம் நாளில் தொடங்குகிறது. பௌர்ணமி நாளில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழா என்று தொடங்கியது என்பதை உறுதிப்படுத்தும் தரவு எதுவும் இல்லை. ஆனால் இது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கர்நாடகம் மற்றும் அண்டை மாநிலமான மகாராட்டிரத்தில் இருந்து பக்தர்கள், திருவிழாவில் கலந்து கொள்ள இங்கு அதிக அளவில் கூடுகின்றனர். திருமணத்தை நிச்சயிக்கவும், வேளாண் கருவிகள் வாங்கவும் கூட இந்த சமயம் உகந்ததாக கருதப்படுகிறது. தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்கு மட்டுமின்றி வேடிக்கை மற்றும் உல்லாசத்திற்காகவும் கூடும் பெருமளவில் கிராமப்புற மக்களை மகிழ்விப்பதற்காக பண்பாட்டு நிகழ்ச்சிகள் (இசை, நாடகம், வட்டரங்கு) நடத்தப்படுகின்றன. இது இங்குள்ள பல்வேறு சமூகத்தினரிடையே பண்பாட்டுப் பிணைப்பைக் குறிக்கிறது. திருவிழாவின் போது முஸ்லிம்களால் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகள் பலவற்றில் சாதிலிங்கம், ஆடைகள், புனித நூல்கள், இனிப்புகள் போன்றவற்றை விற்கின்றனர். அவர்கள் தங்கள் கடைகளில் பனசங்கரி தேவியின் உருவப்படத்தையும் காட்சிப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் காணப்படும் மற்றொரு சுவாரஸ்யமான சந்தைப்படுத்தலின் ஒரு பகுதியாக, ஹோலேயலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கைவினைஞர்களால், தேக்கு, அகாசியா மற்றும் பிற வகை மரங்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் அமைந்த வாசல் நிலைகள், கதவுகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இத்திருவிழாவின் போது கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. அதில் வெள்ளைக் காளைகள் விற்பனையில் கவனம் செலுத்துவது கால்நடைச் சந்தையின் ஒரு சிறப்பு. [2] [8] [13] [14]

திருவிழாவின் போது, கோயிலும், நகரமும் நூற்றுக்கணக்கான வகையான இலைகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுகிறது. பந்தாஷ்டமி நாளில் தொடங்கும் கண்காட்சியில், பல்லேட ஹப்பா அல்லது காய்கறி உற்சவம் அல்லது திருவிழாவும் நடத்தப்படுகிறது, விழாவின் தொடக்கத்தில் தெய்வத்திற்கு காய்கறிகளால் செய்யப்பட்ட 108 வகையான உணவுப் பொருட்கள் (உள்ளூர் மொழியில் ' பாசி ' என்று அழைக்கப்படுகின்றன) படைக்கபடுகின்றன. [3] [13]

இத்திருவிழாவின் மற்றொரு தனித்துவமான நிகழ்வாக கோயில் குளத்தில் தெப்போற்சவம் (தெப்பத்திருவிழா) நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது, பெற்றோர்கள் அம்மனின் அருளால் புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தைகளை வாழைத்தண்டில் செய்யப்பட்ட படகுகளை பயன்படுத்தி, குளத்தைச் சுற்றிக் கொண்டு சென்று, தங்கள் குழந்தைகளுக்கு நற்பேறு உண்டாக வேண்டுகின்றனர். [13]

தேரோட்டம்

தொகு
 
பனசங்கரி மரத் தேர், 1855 இல் தாமஸ் பிக்ஸால் எடுக்கப்பட்ட ஒளிப்படம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேர் திருவிழாவானது இந்து நாட்காட்டியில் பௌஷாவின் (சனவரி) முழுநிலவு நாளில் தொடங்குகிறது. இதில் கோயில் தெய்வமான பார்வதியின் சிலையை தேரில் அமர்த்தி கோயிலில் இருந்து கிராமத்தின் தெருக்கள் வழியாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படுகிறது. இந்த தேர்த்திருவிழாவிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சாதி, சமய வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்த பண்பாட்டு மற்றும் சமய களியாட்டத்தை காண, பக்கத்து கிராமங்களில் இருந்து மக்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட வண்டிகளைக் கட்டிக் கொண்டு வருகின்றனர். [13] [15]

இந்துக் கோயில்களில் சமயக் கொண்டாட்டங்களின் போது, கோயில்களில் வழிபடப்படும் தெய்வச் சிலைகளை, ரதங்கள் எனப்படும் பெரிய மரத் தேர்களில் வைத்து பக்தர்களால் தேர்கள் கோலாகலமாக இழுத்துச் செல்லப்படுகின்றன. தேர்கள் பொதுவாக 5–6 m (16.4–19.7 அடி) உயரமாகவும், பல டன் எடை கொண்டதாகவும் இருக்கும். திடமான மரத்தால் செய்யப்பட்ட பெரிய சக்கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி பெற்றவர்களால் தேரோட்டம் ஒருங்கிணைக்கபட்டு இழுக்கப்படுகிறது. தேர் ஒரு சிறிய கோயில் அல்லது சிற்றாலயம் போல் காட்சியளிக்கிறது, ஏனெனில் அதில் தெய்வங்கள் உள்ளிட்ட உருவங்கள் நிரந்தரமாக செதுக்கப்பட்டுள்ளன. [16]

இடமும் அணுகலும்

தொகு
 
கோயிலின் முன் உள்ள குளத்தின் காட்சித் தொகுப்பு

பாதாமியின் தெற்கே அமைந்துள்ள பனசங்கரி கோயிலும், பாதாமி நகரமும் இரண்டு மலையிடுக்குகளுக்கு இடையில் உள்ளன. இரண்டு மலையிடுக்குகளும் செங்குத்தான மணற்கல் முகடுகளைக் கொண்டுள்ளன. இங்கு உள்ள மண் பருத்திக்கு ஏற்ற கரிசல் மண் ஆகும். [4]

இக்கோயில் பாதாமியில் இருந்து கதக் செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. தென்மேற்கு இரயில்வேயின் கீழுள்ள பாதமி தொடருந்து நிலையம் இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையமாகும். பாதாமி, கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளுடனும் சாலை வலையமைப்பால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாதாமி பெங்களூரிலிருந்து 495 கிமீ (307.6 மைல்) தொலைவும், ஹூப்ளியிலிருந்து 125 கிமீ (77.7 மைல்) தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஹூப்ளியில் உள்ளது. இந்தக் கோயில் விழாவின் போது நடக்கும் கண்காட்சியில் அனைத்து வகையான ஆபரணங்கள், நகைகள், வாயிற் கதவுகள், ஆடைகள், வளையல்கள், இனிப்புகள் போன்றவை கிடைக்கும். இது 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Banashankari Amma Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 South India. Rough Guides. பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  2. 2.0 2.1 2.2 "Cultural bonding at Banashankari jatre" இம் மூலத்தில் இருந்து 20 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090620002040/http://www.hindu.com/2009/01/23/stories/2009012350950200.htm. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "ಸಿಂಹ ವಾಹಿನಿ ನೆಲೆಸಿಹ ಬನಶಂಕರಿ ಬಾಗಲಕೋಟೆ ಜಿಲ್ಲೆಯ ಸುಂದರ ತಾಣ". Kannada News Portal. Archived from the original on 1 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Veeresh B. Angadi (January 2009). Tourist Guide: Aihole,Pattadakal, Badami. Aihole: Sukanya Prakash. pp. 55–56.
  5. "Standing test time". 2017-04-03. https://www.deccanherald.com/content/604493/standing-test-time.html. 
  6. Pattadakal. Archaeological Survey of India.
  7. "People: Hindus: Brahmans" (E-book). Maharashtra Gazetteers Dept. 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-07-14.
  8. 8.0 8.1 "Bunshunkuree. Group of temples. [Banashankari]". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  9. "Banashankari Temple". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  10. "Banashankari Temple". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  11. 11.0 11.1 11.2 "Monuments:Banashankari Temple Hindu". பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
  12. "Banashankri Temple Travel". Archived from the original on 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  13. 13.0 13.1 13.2 13.3 "Temple fair and religious fervour". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  14. "Fairs & Festivals". பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
  15. "Temple Cart, Banashankari Temple, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
  16. "Bunshunkuree. Idol car with stone wheels. Banashankari, near Badami". பார்க்கப்பட்ட நாள் 2009-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனசங்கரி_அம்மா_கோயில்&oldid=3842292" இலிருந்து மீள்விக்கப்பட்டது