மூதபித்ரி
மூதபித்ரி (Moodabidri) முத்பித்ரி, மூதபித்ரே மற்றும் பெத்ரா என்றும் அழைக்கப்படும், இது தெற்கு கன்னட மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், வட்டமுமாகும். இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 34 கி.மீ வடகிழக்கில் அமைந்துள்ளது.[2]
மூதபித்ரி
பெத்ரா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தென்னாட்டின் சைன காசி, ஓய்வு பெறறவர்களின் சொர்க்கம் | |
ஆள்கூறுகள்: 12°54′36″N 75°00′11″E / 12.9101°N 75.003°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தெற்கு கன்னட மாவட்டம் |
வட்டம் (தாலுகா) | மூதபித்ரி |
பிராந்தியம் | துளு நாடு |
அரசு | |
• வகை | நகர நகராட்சி |
• நிர்வாகம் | நகராட்சி நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 39.62 km2 (15.30 sq mi) |
ஏற்றம் | 147 m (482 ft) |
மக்கள்தொகை (2011[1]) | |
• மொத்தம் | 29,431 |
• அடர்த்தி | 740/km2 (1,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
• பிராந்தியம் | துளு, கொங்கணி, பியரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 574227 |
வாகனப் பதிவு | கேஏ-19 |
மங்களூர் நகரத்திலிருந்து தூரம் | 34 கிலோமீட்டர்கள் (21 mi) |
இணையதளம் | moodbidritown |
பண்டைய நாட்களில் பரவலாக வளர்ந்த மூங்கில் இருந்ததால், இந்த இடத்திற்கு மூதபித்ரி என்று பெயரிடப்பட்டது. மூதபித்ரி இரண்டு கன்னட சொற்களிலிருந்து வருகிறது. 'மூதா' என்பது 'கிழக்கு' என்றும் 'பித்ரி' என்பது 'மூங்கில்' என்றும் கன்னட மொழியில் அறியப்படுகிறது.[3] இதன் சராசரி உயரம் 147 மீட்டர் (482 அடி) ஆகும்.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] இதன் மக்கள் தொகை 25,710 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 48%, பெண்கள் 52% ஆகும். இந்த ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 88.57%, ஆண் கல்வியறிவு 93.13%, பெண் கல்வியறிவு 84.13%.[5]
இந்நகரம் அடிப்படையில் பிரந்த்யா மற்றும் மார்நாடு என்ற இரண்டு கிராமங்களைக் கொண்டுள்ளது. இது "தெற்கின் சைன காசி" என்றும் அழைக்கப்படுகிறது.[3][6]
அமைவிடம்
தொகுமூதபித்ரி தேசிய நெடுஞ்சாலை 169 (பழைய எண் 13) இல் உள்ளது. இதை மங்களூர் நகரத்திலிருந்து சாலை வழியாக அணுகலாம் (34 கி.மீ. தொலைவு).[2] இங்கிருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையம் 23 கி.மீ. தூரமாகும்.[7]
இது உடுப்பியிலிருந்து 54 கி.மீ தொலைவிலும், கர்கலாவிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள பிற இடங்கள் வேனூர் (20 கி.மீ), பெள்தங்கடி (37 கி.மீ), குத்ரேமுக் (66 கி.மீ), அகும்பே (68 கி.மீ), புட்டூர் (54 கி.மீ) மற்றும் மிஜார் (5) கி.மீ).
மொழிகள்
தொகுஇங்கு பெரும்பான்மையான மக்களால் துளு பேசப்படுகிறது, அதைத் தொடர்ந்து கன்னடமும், கொங்கணியும் பேசப்படுகிறது. முஸ்லிம்கள் உருது மொழியையும் ஒரு சிறிய முஸ்லிம் மக்கள் பியரி மொழியையும் பேசுகிறார்கள்.
மதமும் கலாச்சாரமும்
தொகுமூதபித்ரியில் சமண மதம் இன்னும் வலுவான நடைமுறையில் உள்ளது. இங்குள்ள ஆயிரம் தூண்கள் கொண்ட கோயில் ( சாவீர கம்பத கோயில்) நாடு முழுவதும் உள்ள சமணர்களுக்கு ஒரு புனித ஆலயமாகும். இங்கு மற்ற சமணக் கோயில்களும் உள்ளன. அம்மன்வர சமணக் கோயில், லெப்பாடா சமணக் கோயில் போன்ற பல சமணக் கோவில்கள் உள்ளன.
இங்கு ஏராளமான இந்து கோவில்களும் உள்ளன. அனுமன் கோயில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இங்கே பக்தர்கள் கடவுளுக்கு பிரசாதமாக இளநீரை வழங்குகிறார்கள். சனிக்கிழமைகளில் சராசரியாக நான்கைந்தாயிரம் இளநீர் அனுமனுக்கு பிரசாதமாக படைக்கப்படும்
இங்குள்ள, வெங்கடரமணர் கோயில் பாறையால் கட்டப்பட்ட கோயிலாகும். இது கார்த்திகை தீப உத்சவம், புனித கர தீப உத்சவம், சாரதா மகோத்சவம் போன்ற பிற செயல்பாடுகளைக் கொண்டாடுவதற்காக அறியப்படுகிறது. இங்கு செதுக்கப்பட்ட தசாவதாரச் சிலைகளும் உள்ளன.
இங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தை கணிசமான எண்ணிக்கையில் பின்பற்றுகிறார்கள். இந்தப்பகுதியைச் சுற்றியு சுமார் 14 தேவாலயங்கள் உள்ளன. அவற்றில், 16 ஆம் நூற்றாண்டு பழமையான போர்த்துகீசியத்தால் கட்டப்பட்ட தேவாலயம் இக்ரேஜா டா சாண்டா குரூஸ் ஹோஸ்பெட் அல்லது ஹோஸபேட் தேவாலயம் ஆகும் .
பாரம்பரியத் திருவிழாக்கள்
தொகுபுலிவேசம்
தொகுபுலி வேசம் (கன்னடத்தில் ஹுலிவேஷா) (புலி நடனம்) என்பது தெற்கு கன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடனத்தின் தனித்துவமான வடிவமாகும். புலி சாரதாதேவியின் வாகனமாகக் கருதப்படுவதால், இந்த நடனம் தசரா கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்படுகிறது. , விநாயக சதுர்த்தி போன்ற பிற பண்டிகைகளிலும் இது நிகழ்த்தப்படுகிறது. விநாயக சதுர்த்தியில் நிகழ்த்தப்படும் புலிவேசம் இங்கு பிரபலமானது. அதே போல் மங்களூர் தசரா புலிவேசமும், உடுப்பி கிருஷ்ண ஜெயந்தி புலிவேசமும் பிரபலமானது.
பூட்டா கோலா
தொகுபூட்டா கோலா அல்லது ஆவி வழிபாடு இங்கு நடைமுறையில் உள்ளது. பூட்டா கோலா வழக்கமாக இரவில் நடத்தப்படுகிறது. பெரும்பாலான கோயில்களில் பூட்டா கோலா அவர்களின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது.
கம்பளா
தொகுகம்பளா அல்லது எருமைச் சவாரி நீர் நிரப்பப்பட்ட நெல் வயல்களில் நடத்தப்படுகிறது. இராணி அப்பக்கா கம்பளா மைதானம் கடலா கெரே நிசர்கதாமாவில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கம்பளா இங்கு இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோரிகட்டா
தொகுகோயில்களின் வருடாந்திர திருவிழாவில் கிராம மக்களுக்கு கோரிகட்டா (சேவல் சண்டை) மற்றொரு பிடித்த விளையாட்டாகும். காசர்கோட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள கோயில்களின் வளாகங்களில் விசேஷமாக வளர்க்கப்பட்ட கோழிகளுக்கு இடையிலான சண்டையை உள்ளடக்கிய ஒரு பழங்கால விளையாட்டாகும். இது ஒரு இரத்த விளையாட்டு அல்ல, ஆனால் துளு நாட்டின்டு வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அம்சமும், இங்குள்ள கோயில்களுடன் தொடர்புடைய ஒரு பழங்கால சடங்குமாகும்.[8]
நாக ஆராதனை
தொகுநாக தேவதையின் பிரபலமான நம்பிக்கையின் படி நாக ஆராதனை அல்லது பாம்பு வழிபாடு நடைமுறையில் உள்ளது.
சமணர்கள் ஆண்டுதோறும் தங்கள் சமணத் திருவிழாக்களைக் கொண்டுள்ளனர். அனைத்து சமணக் கோயில்களும் இரத உற்சவத்தை மிக பிரமாதமாக கொண்டாடுவார்கள். ஒவ்வொன்றும் ஏழு நாட்களுக்கு செல்கிறது.
வரலாறு
தொகுஇந்நகரம் 1603 ஆம் ஆண்டில் சமண சவுதா வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்கள் 1603 இல் தங்கள் தலைநகரை மூதபித்ரிக்கு மாற்றினர். திப்பு சுல்தானால் இப்பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர்கள் அதிகாரத்தை இழந்தனர் [9] திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த பின்னர் அவர்கள் அடையாள சடங்குகளைத் தொடர்ந்தனர். மூதபித்ரியில் கடைசியாக முடிசூட்டு விழா 1865 இல் ஒரு பட்டாவளின்படி செய்யப்பட்டது.
மூத்பித்ரியில் 18 ஏரிகளும், பல்வேறு கிராமங்களை இணைக்கும் 18 சமணக் கோயில்களும், 18 சாலைகளும் உள்ளன.
14 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் இந்த நகரம் சமண மதம், கலாச்சாரம், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் மையமாக உருவெடுத்தது. இந்த காலகட்டத்தில் பாசாதிகள் என அழைக்கப்படும் 18 சமணக் கோவில்கள் கட்டப்பட்டன. மூதபித்ரியில் உள்ள சமண மடம், திகம்பர ஒழுங்கைச் சேர்ந்த பட்டரகா தலைமையிலானது.
அவற்றில் மிகவும் பிரபலமானவை குரு பசாதி, அம்மானாவரா பசாதி., திரிபுவன திலக சூடாமணி பசாதி ("ஆயிரம் தூண் கோயில்" என்று அழைக்கப்படுகிறது).
- குரு பசாதி: சமண நினைவுச்சின்னங்களில் முதன்மையானது. இந்த பசாதியின் கருவறையில் சுமார் 3.5 மீட்டர் உயரமுள்ள பார்சுவநாதரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. கி.பி 12 ஆம் நூற்றாண்டின் ' தவாலா நூல்கள்' என்று அழைக்கப்படும் அரிய சமண பனையோலை கையெழுத்துப் பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
- சாவீர கம்பத கோயில்: இந்த பிராந்தியத்தின் சமண கோவில்களில் மிகப்பெரியதும்,மிகவும் அலங்காரமானதும் ஆகும். மக்கள் இந்த கோவிலை ஆயிரம் தூண் கோயில் அல்லது திரிபுவன திலக சூடாமணி என்றும் அழைக்கிறார்கள். இது கி.பி 1430 இல் கட்டப்பட்ட ஒரு பெரிய கரும்பாறை கோயிலாகும். இந்த பசாதியின் கருவறையில் உள்ள சந்திரநாத சுவாமியின் 2.5 மீட்டர் உயர வெண்கல உருவம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாடி கட்டுமானத்திற்கு ஆட்சியாளர்கள், சமண பட்டாரக சுவாமிஜி, வணிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த கோயிலுக்கு முன்னால் ஒரு திறந்த தூண் மண்டபம் உள்ளது, இதில் விஜயநகர பாணியின் பொதுவான செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வகையான அலங்கரிக்கப்பட்ட தூண்கள் உள்ளன. மனஸ்தம்பா என்று அழைக்கப்படும் 15 மீட்டர் உயரமுள்ள ஒற்றை கல் தூண் பசாதிக்கு முன்னால் நிற்கிறது.
- இரத்னாகர வர்ணி: 16 ஆம் நூற்றாண்டின் கன்னட கவிஞரும், பாரததேச வைபவம் என்ற நூலின் இடைக்கால கன்னட எழுத்தாளருமான இரத்னகர வர்ணி இந்த இடத்தைச் சேர்ந்தவர். தவாலா நூல்கள் என அழைக்கப்படும் சமண நியமன நூல்களும் வரலாற்று மற்றும் கல்வியறிவு மதிப்புள்ள பல பனையோலை கையெழுத்துப் பிரதிகளும் சமண மடத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
சைன ஆளும் குடும்பமான சவுதாக்களின் இடமாக மூதபித்ரி இருந்துள்ளது. அவர்கள் முதலில் இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் புத்திகேவில் இருந்தனர். அவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தங்கள் தலைநகரை மூதபித்ரிக்கு மாற்றினர். 17 ஆம் நூற்றாண்டின் சௌதா அரண்மனையின் எச்சங்கள் செதுக்கப்பட்ட மரத் தூண்கள் மற்றும் கூரைகளுக்கு பெயர் பெற்றவை.
போக்குவரத்து வசதிகள்
தொகுமங்களூர், உடுப்பி, கர்கலா, ஹெப்ரி, சிவமோகா, குத்ரேமுக், சிருங்கேரி, தர்மஸ்தலா, பந்த்வால், பெள்தங்கடி, நாரவி, கின்னிகோலி மற்றும் முல்கி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு 5-10 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெங்களூர், மைசூர், ஹூப்ளி, தார்வாடு, சுப்ரமண்யா, சிக்மகளூர் போன்ற தொலைதூர இடங்களுக்கும், கர்நாடகாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் உள்ளன. மும்பை, கோவா பெங்களூர், போன்ற நகரங்களுக்கு தனியார் பேருந்துகள் கிடைக்கின்றன.
பொழுதுபோக்கு
தொகுமற்ற பொழுதுபோக்குகளில் இந்த மாவட்டத்திற்கென தனித்துவமான யக்சகானம் இருக்கிறது. இது இரவு முழுவதும் நீடிக்கும். இரவு 9:30 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு முடிவடையும். இதில் காவியங்களிலிருந்து நடத்தப்படும் நாடகமும் அடங்கும். இது பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை நிகழ்த்தப்படுகிறது. மேலும் வருடத்திற்கு சில மாதங்களில் மட்டுமே நடக்கும்.
சில தனியார் துளு நாடக நிறுவனங்கள் நவம்பர் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையே நகைச்சுவை நாடகங்களை சீரான இடைவெளியில் நடத்துகின்றன.
புகைப்படத் தொகுப்பு
தொகு-
சசாவீர கம்பத கோயிலில் சந்திரபிரபன் சிலை
-
கல்லு பசாதி, மூதபித்ரி
-
கோட்டி பசாதியும், குரு பசாதி, மூதபித்ரி
-
லெப்பாடா பசாதி, மூதபித்ரி
-
விக்ரம் செட்டி பசாதி, மூதபித்ரி
-
குரு பசாதி, மூதபித்ரி
-
சமண கோவிலுக்குள் நந்தீசுவரர் ஓவியம்
-
சமண கோவிலுக்குள் கல்ப விருட்ச ஓவியம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ 2.0 2.1 "Distance from Mangalore to Moodabidri". DistancesFrom.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ 3.0 3.1 "Welcome to Dakshina Kannada" (PDF). dk.nic.in. Archived from the original (PDF) on 12 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Dakshina Kannada District : Census 2011 data". Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11.
- ↑ Documentation Update: October 2004 to March 2005, EQUATIONS
- ↑ "Distance between Bajpe and Moodabidri". DistancesBetweenCalculator.in. Archived from the original on 12 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ "Police move against cockfight faces opposition". The Hindu. 10 January 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Police-move-against-cockfight-faces-opposition/article15140664.ece. பார்த்த நாள்: 13 December 2018.
- ↑ Brückner, Heidrun (21 April 2019). "On an Auspicious Day, at Dawn -: Studies in Tulu Culture and Oral Literature". Otto Harrassowitz Verlag – via Google Books.