ரேணுகா

இந்து பெண் தெய்வம்

ரேணுகா அல்லது ரேணு (Renuka) என்பது இந்திய மாநிலங்களான கர்நாடகா, மகாராட்டிரம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முக்கியமாக வழிபடப்படும் ஒரு இந்து தெய்வம் ஆகும்.[1] மகாராட்டிரத்தில் மாகுர் என்ற இடத்திலுள்ள ரேணுகா கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .

ரேணுகா
ரேணுகோக்/ ரேணுக்
மஹூர் கோயிலின் கருவறையில் ரேணுக் சிலை சக்தி பீடங்கள்
தேவநாகரிरेणुका
சமசுகிருதம்ரேணுகா/ரேணு
வகைதேவி
இடம்மஹூர், மகாராஷ்டிரா
துணைஜமதக்கினி
குழந்தைகள்பரசுராமர், வசுக்கள்

வெவ்வேறு பெயர்கள்

தொகு

ரேணுகா / ரேணு அல்லது எல்லம்மா அல்லது எக்விரா அல்லது எல்லை அம்மன் அல்லது எல்லை அம்மா (மராத்தி: रेणुका /, கன்னடம் : தெலுங்கு: శ్రీ రేణుక / ఎల్లమ్మ, தமிழ் : ரேணு / ரேணு) தெய்வம், தேவி போன்ற பல்வேறு பெயர்களில் இந்து மதத்தில் வணங்கப்படுகிறார். தென்னிந்திய மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் காவல் தெய்வம் எல்லம்மா என்பதாகும். அவளுடைய பக்தர்கள் அவளை "பிரபஞ்சத்தின் தாய்" அல்லது " ஜெகதம்பா" என்று போற்றுகிறார்கள்.

வரலாறு

தொகு
 
ரேணுகா சாகரா, மலப்பிரபா ஆறு, சவுன்டட்டி. (பெல்காம் மாவட்டம்), வடகர்நாடகம், கருநாடகம்

ரேணுகாவைப் பற்றிய புனைவுகள் மகாபாரதம், அரி வம்சம் மற்றும் பகவத புராணங்களில் உள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ரேணு என்ற அரசன் (ரேணுகாவின் தந்தை) ஒரு வேள்வியை செய்கிறார். இந்த வேள்வியின் பயனாக தீயிலிருந்து ரேணுகா என்ற ஒரு மகளைப் பெறுகின்றனர். ரேணுகாவைப் பெற்றோரின் மிகவும் பிரியமாக வளர்க்கின்றனர்.

அரசர் ரேணுவின் குருவாக அகத்தியர் இருக்கிறார். ரேணுகாவுக்கு எட்டு வயதானபோது அவளை ஜமதக்கினிக்கு திருமணம் செய்துவைக்க அறிவுறுத்துகிறார். ஜமதக்னி ருச்சிக முனிவருக்கும் சத்தியாவதிக்கும் மகனாவார். அவர் கடும் தவம் புரிந்து தவவலிமைப் பெற்றவர். ரேணுகா ஜமதக்னி முனிவருக்கு சடங்குகள், பூசைகள் போன்ற அனைத்து பணிகளிலும் உதவியாக உள்ளாள். சிறிது காலம் கழித்து ரேணுகாவுக்கு அஞ்சனா (அஞ்சனா தேவி) என்ற மகள் பிறக்கிறாள். ரேணுகா அதிகாலையில் எழுந்து மலபிரபா ஆற்றில் குளித்து, நாள்தோறும் வெறும் மணலால் புதிய பானையை வணைவாள். அந்தப் புதியப் பானையில் ஆற்றில் இருந்து தண்ணிரை முகந்து எடுத்துச் செல்வாள். ஆற்றின் அருகிலிருந்த ஒரு பாம்பை சும்மாடாக சுருட்டி தன் தலையில் வைப்பாள். அதன் மீது நீர் நிரப்பபட்ட மணல் பானையை வைத்து சுமந்துவந்து, ஜம்தக்னியின் சடங்குகளுக்காக தண்ணீரைக் கொண்டு வருவாள். ("ரேணுகா" என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையான "மணலிருந்து" பெறப்பட்டது. )

பிற்கால வாழ்வு

தொகு

ரேணுகா வாசு, விஸ்வா வாசு, ப்ரிஹுத்யானு, புருத்வகன்வா, ராம்பத்ரா ஆகிய ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள். இளைய மகனான ராம்பத்ராமீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்தாள். ராம்பத்ரா சிவன் மற்றும் பார்வதியின் அருளைப் பெற்றவர். அவர் கடுமையான தவத்தை மேற்கொண்டு ஒரு கோடாரியை (பரசு) பெற்றார். அதனால் அவர் பரசுராமர் ( விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்) என்று அழைக்கப்பட்டார். ஒரு நாள் ரேணுகா ஆற்றுக்குச் தண்ணீர் எடுத்துவர சென்றாள். அப்போது வானில் கந்தர்வர்வர்களான இளம் தம்பதிகள் சரசமாடியபடி சென்றனர். அவர்களின் அந்த பிம்பத்தை ரேணுகா ஆற்று நீரில் கண்டாள். அப்போது ஒரு கணம் அந்த கந்தர்வணின் அழகில் சற்று தடுமாறிவிட்டாள். அதனால் அவள் கற்புத்தன்மையால் பெற்றிருந்த ஆற்றலை இழந்து, மணலை பாணையை வணையும் ஆற்றலை இழந்தாள். இதனால் தண்ணீரைக் கொண்டு செல்லமுடியாமல், ஆசிரமத்திற்குத் திரும்பினாள். ரேணுகா வெறுங்கையுடன் திரும்பி வருவதைக் கண்ட ஜமதக்கினி அதன் காரணத்தை தன் யோக சக்தியால் அறிந்து கோபமடைகிறார். பின்னர் தன்னைவிட்டு நீங்கிச் செல்லுமாறு அவளுக்குக் கட்டளையிடுகிறார்.

கணவனால் சபிக்கப்பட்ட பின்னர், ரேணுகா கிழக்கு நோக்கிச் சென்று காட்டில் அமர்ந்து தியானம் செய்கிறாள். அவள் தன் தவத்தில், ஏக்நாத் மற்றும் ஜோகிநாத் என்ற புனிதர்களை சந்திக்கிறாள். அவள் தன் கணவனின் கருணையைப் பெற்றுத்தரும்படி அவர்களிடம் கேட்கிறாள். அவர்கள் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். பின்னர் அவளுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவற்றைப் பின்பற்றும்படி அறிவுறுத்துகின்றனர். அவர்கள் அவளை அருகிலுள்ள ஏரியில் குளித்து தூய்மைப்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்கள் அவளுக்குக் கொடுத்த சிவலிங்கத்தை வழிபடவும் சொல்கின்றனர். அடுத்து, அவள் அருகிலுள்ள ஊருக்குச் சென்று வீடுகளிலிருந்து அரிசியை பிச்சையாக பெறச் சொல்கின்றனர். ("ஜோகா பெடோடு" என்று அழைக்கப்படும் இந்த சடங்கு, கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் / மராத்தியில் "ஜோகாவா", "யெல்லம்மா ஜொகு" தெலுங்கானா).

யாசகமாக பெற்ற அரிசியில், புனிதர்களுக்கு பாதியைக் கொடுத்து, மீதியை சமைக்க வேண்டும். சமைத்த சோற்றில் வெல்லம் சேர்த்து, பக்திசிரத்தையுடன் சாப்பிடவேண்டும். அவள் இந்த சடங்கை மூன்று நாட்கள் செய்தால், நான்காவது நாளில் அவள் கணவரைப் பார்க்க முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஜமதக்னியின் கோபத்தை அறிந்த அவர்கள், அவர் முழுமையாக அவளை மன்னிக்க மாட்டார் என்றும், அவள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலத்தை சில நிமிடங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அதற்குப் பிறகு, "நீங்கள் மதிக்கப்படுவீர்கள், உங்கள் கணவருடன் சேர்வீர்கள். இனிமேல் நீங்கள் மக்கள் அனைவராலும் வணங்கப்படுவீர்கள்." என்று அவளை ஆசீர்வதித்த பிறகு, அவர்கள் மறைந்து போகின்றனர். ரேணுகா அவர்களின் அறிவுறுத்தல்களை பக்தியுடன் பின்பற்றி சிவலிங்கத்தை முழு அக்கறையுடனும் பயபக்தியுடனும் வணங்கினாள். நான்காம் நாள், அவள் கணவனைப் பார்க்கச் செல்கிறாள்.

 
எல்லம்மா கோயில் பாதமி.

தண்டனையும் உயிர்த்தெழுதலும்

தொகு

ஜமதக்னி ரேணுகாவைப் பார்த்ததும் அவள் மீது கோபம் கொண்டு தன் மகன்களுக்கு அவர்களின் தாயைத் தண்டிக்கும்படி கட்டளையிடுகிறார். ஒவ்வொருவரும் அதை மறுக்கின்றனர். தன் கட்டளையை நிறைவேற்ற மறுத்த தன் நான்கு மகன்களையும் தன் தவ வலிமையால் எரித்து சாம்பலாக்குகிறார். அப்போது அங்கு இல்லாத பரசுராமர் பின்னர் அங்கு வந்து சேர்கிறார். அவர் வந்தபோது சாம்பல் குவியல்களையும், தன் தாயார் அழுதுகொண்டிருப்பதையும் காண்கிறார். நடந்த விவரத்தை ஜமதக்னி அவரிடம் சொல்கிறார். அவள் செய்த துரோகத்திற்காக தாயின் தலையைத் துண்டிக்க பரசுராமருக்கு உத்தரவிடுகிறார். பரசுராமர் ஆழ்ந்து சிந்திக்கிறார். தந்தையின் சக்தியையும் கோபத்தையும் அறிந்த பரசுராமர் உடனடியாக தனது கோடரியால் தந்தையின் கட்டளையின்படி தன் தாயில் தலையைத் துண்டிக்கிறார். தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட பரசுராமரைக் கண்டு ஜமத்கனி மகிழ்கிறார்

தன் ஆணையை நிறைவேற்றிய பரசுராமருக்கு வேண்டிய வரத்தை கேட்குமாறு ஜமத்கனி கூறுகிறார். அவர் தன் தாயையும் அண்ணன்களையும் மீண்டும் உயிர்ப்பித்துக் தருமாறு புத்திசாலித்தனமான வரத்தைக் கேட்கிறார். ஜமத்கனி பரசுராமரின் கோரிக்கையை ஏற்று அவரது தயையும், அண்ணன்களையும் உயிர்பிக்கிறார். சினத்திலிருந்து மீண்ட ஜமதக்னி தன் அன்பு மனைவிக்கு தான் இழைத்த துன்பத்தை நினைத்து வருந்துகிறார். பின்னர் தான் மீண்டும் கோபம் கொள்ளமாட்டேன் என்று சபதம் செய்கிறார்.

 
ரேணுகா கோயில், எல்லம்மாகுடி, சவுன்டட்டி, பெல்காம் மாவட்டம், வட கர்நாடகா, கர்நாடகம்

ரேணுகா மற்றும் எல்லம்மா

தொகு

பல மரபுகளில், ஒரே தெய்வத்திற்கு ரேணுகா மற்றும் எல்லம்மா ஆகிய இரண்டு பெயர்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறன. இருப்பினும், இரண்டையும் வேறுபடுத்துகின்ற வாய்வழி பாரம்பரியமும் உள்ளது. இந்த கதைகளின்படி, ரேணுகா தனது மகன் பரசுராமர் தன்னைக் கொல்ல வந்தபோது தாழ்ந்த சாதியினரிடம் அடைக்கலம் தேடி ஓடினாள். பரசுராமர் தன் தாயை வெட்ட வரும்போது அவளைப் பாதுகாக்க முயன்ற ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் தலையையும், பின்னர் தன் தாயின் தலையையும் என இருவரையும் வெட்டிக் கொன்றார். பின்னர் பரசுராமர் தன் தாயை உயிர்பிக்கவே்ண்டி தன் தந்தையிடம் வரம் கேட்டபோது, அதற்கு இசைந்த ஜமத்கனி அவரிடம் புனித தீர்த்தத்தை கொடுத்து தலையை உடலுடன் சேர்த்துவைத்து தீர்த்தத்தைத் தெளிக்குமாறு கூறினார். உற்சாகமைடைந்த பரசுராமர் தவறுதலாக தன் தாயின் உடலுடன் கீழ்சாதி பெண்ணின் தலையை வைத்து உயிர்பித்தார். அவளையே அவரது தந்தையும் அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியானது. உயர் சாதி ரேணுகாவின் தலை அச்சமூகத்திடமே விடப்பட்டது. ரேணுகா-எல்லம்மாவின் வணக்கத்திற்காக ஒரு தெய்வமாக இருக்கிறார்.

கோயில்கள் மற்றும் தொடர்புடைய இடங்கள்

தொகு

ரேணுகா எல்லம்மாவின் மிகவும் பிரபலமான மற்றொரு கோயில் இந்தியாவின் கருநாடகத்தின் பிடரஹள்ளி, கடாகில் அமைந்துள்ளது. ரேணுகா-எல்லம்மாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் கோயிலுக்கு வருகிறார்கள். ஜமதக்னி முனிவருடன் திருமணத்திற்குப் பிறகு, ரேணுகா தேவி இந்த இடத்தில் வசித்து வந்தார் என்று நம்பப்படுகிறது. ரேணுகா அதிகாலையில் எழுந்து புனித துங்கபத்ரா ஆற்றில் குளிப்பார். ஆற்றின் கரையில் உள்ள மணலில் இருந்து பானை தயாரிக்கவும், அங்கிருந்த பாம்பைப் பிடித்து, அதை சம்மாடாக்கி, தலையில் வைப்பதற்கும், ஜமதக்னி முனிவருக்கு பக்தியுடன் சடங்குகளுக்கு உதவினார் எனப்படுகிறது.

மற்றொரு கோயில் ரேணுகாம்பே [யெல்லம்மா] சீமக்காவில் சோரபா தாலுகாவின் சந்திரகுட்டியில் உள்ள ஒரு மலையின் மேல் உள்ளது. இந்த கோயில் பண்டைய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் கதம்பர் காலத்திற்கு முந்தையதாகவும் உள்ளது. மற்றொரு கோயில் மகூர், மகாராட்டிராவில் உள்ளது, இது தெய்வத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது, இது தேவி பகவதத்தின் இறுதி அத்தியாயமான ' தேவி கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, "சஹ்யாத்ரியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், மத்ரிபுரா மலை; இங்கே தேவி ரேணுகா வசிக்கிறார்..".[2]

ரேணுகா தேவியின் கோயில்களில் ஒன்று நாசிக் இல் சந்த்வாட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்தோரின் மகாராணி அகில்யா தேவி கோல்கரால் கட்டப்பட்டது. தென் நாட்டில் யாத்திரைக்கு கோலாபுரா என்ற சிறந்த புனித இடம் உள்ளது. இங்கே தேவி இலட்சுமி எப்போதும் வசிப்பதாக ஐதீகம் உள்ளது. இரண்டாவது இடம் சஹ்யாத்ரே மலையில் உள்ள மத்ரிபுரா; ரேணுகா வசிக்கிறார்.[3]

 
ரேணுகா ஏரி, இமாச்சல பிரதேசம்
 
ரேணுகாம்பாள் கோயில், பட்வேடு, திருவண்ணாமலை மாவட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் ரேணுகா சரணாலயத்தில் உள்ள ரேணுகா ஏரி தெய்வத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. ஒரு தொன்மத்தின் படி, மன்னர் சஹஸ்ரார்ஜுனா (கார்த்தவீரிய அருச்சுனன் ஜமதக்கினி மற்றும் ரேணுகாவிடமிருந்த காமதேனு பசுவை பெற விரும்பினார். எனவே இதற்காக அவர் ஜமதக்னியைக் கொன்றார், மகாராஷ்டிராவின் மஹுர்காட்டில் ஜமதக்னியுடன் ரேணுகா சத்தியானார்.[4]

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் படவேடு என்ற இடத்தில் ரேணுகாம்பள் அம்மன் கோயில் அமைந்துள்ளது, இது மிக முக்கியமான சக்தி தலங்களில் ஒன்றாகும்.[5] மற்றொரு புகழ்பெற்ற கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகிலுள்ள செராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள். ரேணுகா பரமேஸ்வரியின் மற்றொரு சக்திவாய்ந்த கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார்கோயில் அருகே திருச்சாம்பள்ளியில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்த ரேணுகா பரமேஸ்வரி தாயார் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

ரேணுகா தேவி மற்றும் ஜமதக்கினி முனிவரை உத்தராஞ்சலின் உத்தரகாசி மாவட்டத்தின் ரவைன் பள்ளத்தாக்கில் யமுனை ஆற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் வழிபடுகிறனர். இப்பகுதியில் உள்ள பல பழங்கால கோயில்கள் தெய்வீக தம்பதியினருக்கு கட்டப்பட்டவையாகவும் பிரபலமானவையாகவும் உள்ளன. யமுனை ஆற்றங் கரைக்கு அருகிலுள்ள தான் கிராமத்தில் உள்ள ஜமதக்னி கோயில் மற்றும் தேவதோக்ரி, பஞ்சங்கான் மற்றும் சர்ன கிராமத்தின் ரேணுகா கோயில்கள். உள்ளூர் தெய்வங்களை நினைவுகூறும் விதமாகவும், கோவில் விவகாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள், பழமையான பாரம்பரியம் இப்பகுதியில் உள்ளது.

இலங்கையில்

தொகு

பண்டைய இலங்கை இல், "ரேணுகா" என்பது விரும்பத்தகாத மரணம் மற்றும் அழிவின் ஒரு சிறு தெய்வத்தின் பெயராகும், இருப்பினும் சில சமயங்களில் படைப்பாற்றல் மற்றும் துடிப்பின் அடையாளமாகவும் இருந்துள்ளது.[சான்று தேவை]

குறிப்புகள்

தொகு
  1. "Sri Renuka Amman Parameswari". Archived from the original on 18 May 2015.
  2. Devi Gita; Chapter XXXVIII: The Vow and the Sacred Places of the Devi The Devi Gita (Song of the Goddess), Excerpt from the Srimad Devi Bhagawatam, translated by Swami Vijnanananda (Hari Prasanna Chatterji), 1921.
  3. "Archived copy". Archived from the original on 12 October 2013. Retrieved 2013-03-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) CS1 maint: bot: original URL status unknown (link)
  4. Kohli, M.S. (2002). Mountains of India Tourism, Adventure and Pilgrimage. Indus Publishing. p. 303. ISBN 978-81-7387-135-1.
  5. Arulmigu Renugambal Amman Temple, A.K. Padavedu பரணிடப்பட்டது 8 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க

தொகு
  • The Village Gods of South India (London, 1921) by H. Whitehead
  • Yellamma: A Goddess of South India (1995) by Channappa Uttangi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா&oldid=4216456" இலிருந்து மீள்விக்கப்பட்டது