விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

Add topic
Active discussions

தமிழ் விக்கிப்பீடியாவின் 2009 ஆம் ஆண்டைய அறிக்கை குறித்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயல் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள், பயனர் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் இங்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். இங்கு பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதால் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் மேன்மைப்படுவதுடன், பிற விக்கிப்பீடியாக்களில் தமிழின் நிலை முன்னிலைப்படுத்தப்படும். பயனர்களே இங்கு தங்கள் மேலான கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுங்கள்.

மயூரநாதன்தொகு

 • நன்றி நற்கீரன், நல்ல ஆண்டறிக்கை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள். இணையத்துக்கு வெளியிலும் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாகப் பல செயற்பாடுகள் இந்த ஆண்டில் இடம்பெற்றிருக்கின்றன. இவை பற்றிய தகவல்கள் படங்களுடனும், நிகழ்படக் கோப்புக்களுக்கான இணைப்புக்களுடனும் அறிக்கையில் விபரமாக இடம்பெற்றிருப்பது சிறப்பாக உள்ளது. இணையத்துக்கு வெளியினான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் விக்கிப்பீடியா 2009 ஆம் ஆண்டில் புதிய காலகட்டம் ஒன்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது எனலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இதன் தாக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இது குறித்த பகுப்பாய்வு ஒன்று தேவை. முக்கியமாக, தவி பரந்த அளவில் அறிமுகமாகி வருவதால் பல புதிய பயனர்கள் தம்மைப் பதிவு செய்துள்ளார்கள். பலர் பங்களிப்புச் செய்யவும் தொடங்கியுள்ளார்கள். வேறு பலர் பங்களிப்புச் செய்ய முயன்றுவருவதும் தெரிகிறது. இதனால் ஆண்டின் இறுதிப் பகுதியில் பல புதிய பயனர்களிடமிருந்து பல கட்டுரைகள் கிடைத்துள்ளன. இவர்களில் சிலர் தீவிரமாகவும் சிறப்பாகவும் இயங்கிவருவது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. கூகிள் வழி மொழிபெயர்ப்புச் செய்யப்படும் கட்டுரைகள் நீளமாக இருப்பதனால் தவியில் உள்ள கட்டுரைகளின் சராசரிப் "பைட்" அளவும் கூடிக்கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. அதே நேரம் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்புடையதாக இல்லாத பல பக்கங்களும் அதிகரித்த அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அன்றாடம் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் நீக்கப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அத்துடன் முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள் பெரும்பாலும் சிறியவை. இதனால், அனுபவம் உள்ள பயனர்கள், தேவைப்படும்போது இவற்றில் பிழை திருத்தங்கள், விக்கியாக்கம், படிம இணைப்புக்கள் முதலியவற்றைச் செய்வது இலகுவாக இருந்தது. தற்போது நீளமான கட்டுரைகள் உருவாகின்றன. எடுத்துக் காட்டாக கூகிள் வழி மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். இவை தொடர்பில் துப்புரவு வேலை, விக்கியாக்கம், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், படிமங்களைப் பதிவேற்றல், வார்ப்புரு மொழிபெயர்ப்பு, கட்டுரைகளை இணைத்தல் போன்ற தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு அதிக நேரமும் பிற வளங்களும் தேவைப்படுகின்றன. இவ்விடயங்கள் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுவதுடன், இவற்றுக்குத் தேவையான மேலதிக வளங்கள் குறித்த கணிப்பு ஒன்றும் தேவை. 2010 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிப் போக்கை நெறிப்படுத்துவதற்கும், கட்டுரைகளின் தரத்தைப் பேணுவதற்கும் இத்தகைய கணிப்பு ஒன்றும், எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான திட்டங்களும் அவசியம்.
 • இவற்றுடன், தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நூல்களும் 2010ல் வெளிவர இருக்கின்றன. இதனால், அடுத்த ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவின் மீது ஊடகங்களின் பார்வை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சிந்திப்பது நல்லது. தமிழ் விக்கி மீது கவனம் அதிகரிக்கும்போது கூடவே கருத்து வேறுபாடுகளும், விமர்சனங்களும், கண்டனங்களும் அதிகரிக்கவே செய்யும். இவற்றையும் கவனமாகக் கையாள வேண்டியிருக்கும்.மயூரநாதன் 06:22, 18 டிசம்பர் 2009 (UTC)

ரவிதொகு

 • நற்கீரன், வழமை போலவே மிக அருமையாக 2009 அறிக்கையைத் தந்துள்ளீர்கள். இவ்வறிக்கை மீதான கருத்துகளை மிகச் சிறப்பாக மயூரநாதன் தந்துள்ளார். கூகுள் தமிழாக்கம் மூலம் செயல்படுவோர் ஒரு சோதனைக் குழுவாக இருக்க வேண்டும் என்பது என் ஊகம். துப்பறிய வேண்டும் :)
 • 2009ல் இலங்கையில் இருந்து வரும் நேரடிப் பங்களிப்புகள் குறைந்துள்ளன என்பது கவலை அளிக்கும் விசயம். இப்போக்கு தொடருமோ :
 • 2004-2009 வரை தமிழ் விக்கியின் முதல் 5 ஆண்டுகளாக கருதலாம். 2010 தொடங்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலை நோக்குடைய செயல் திட்டம் ஒன்றை வரைய வேண்டும். என் கருத்து:
 • அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் வழியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மிக அடிப்படையான முழுமையான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதை முதற்பணியாக கொள்ள வேண்டும். இம்மாணவர்களே வருங்கால சமூகம் என்பதால் விக்கிப்பீடியா இவர்களுக்குப் பயன்பட்டால் வருங்காலத்தில் இதற்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். பரப்பல் பணிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வாசகர்களை முன்வைத்துச் செயல்படுவது நன்று. என்ன செய்யலாம்?

இணையத்தில் கிடைக்கும் தமிழகப் பள்ளிப் பாட நூல்களைத் தரவிறக்கி அவற்றில் உள்ள தலைப்புகளை இனங்கண்டு வரிசைப்படுத்தலாம். பிறகு, அத்தலைப்புகள் குறித்து முதலில் ஒரு அடிப்படைக் கட்டுரை. அடுத்த கட்டமாக பாட நூலில் உள்ளதற்கும் கூடுதலான தகவல்கள், படங்கள் தரலாம். தேவைப்படும் துணை நூல்கள், பயிற்சிகளை விக்கி நூல்களில் சேர்க்கலாம். இதனால் மாணவர், ஆசிரியர் இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

1 - 5 வகுப்புகள் - ஒரு ஆண்டு

6-8 வகுப்புகள் - ஒரு ஆண்டு

9-10 வகுப்புகள் - ஒரு ஆண்டு

11ஆம் வகுப்பு - ஒரு ஆண்டு

12ஆம் வகுப்பு - ஒரு ஆண்டு

என்று வகுத்துச் செயற்படலாம்.--ரவி 08:10, 18 டிசம்பர் 2009 (UTC)


மணியன்தொகு

 • அருமையான 2009 ஆண்டறிக்கையை தந்துள்ள நற்கீரனுக்கு முதற்கண் நன்றி.மயூரநாதன் வெளியிட்டுள்ள கவலைகள் உண்மையானவை.தரத்தை சில கோணங்களில் உயர்த்தினாலும் பொதுவாக பணிச்சுமையை கூடுதலாக்கக் கூடியவை.
 • 2010 ஆண்டிற்கான செயற்திட்டம் மற்றும் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டங்களும் வரையறுத்து ஒருமுகமாக செயல்படுவது தேவையானது. இரவியின் கருத்தான பள்ளிப்பாட நூல்கள் விக்கியில் இடம் பெறுவது கூடுதல் தகவல்களை கொண்டிருக்கும் நேரத்தில் தான் பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் பாடபுத்தகங்களை தவிர்த்து யாரும் த.வி வரப்போவதில்லை. மாணவர்கள் கல்விசாரா செயல்களுக்கே பெரும்பாலும் இணையத்தை நாடுவதால் அவர்கள் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி போன்றவற்றிற்கு உதவிடும் வகையில் பொதுக்கல்வி எனப்படும் நடப்பு நிகழ்வுகளின் விளக்கங்கள் கூடுதல் வெளிச்சம் பெற வேண்டும். இன்றைய செய்தியில் காணும் இவர் யார், இந்நிகழ்வின் அறிவியல் கூற்று மற்றும் பின்வரலாறு போன்றவை இடப்பட்டால் கூகிள் தேடலில் த.வி முதலில் வரவும் பிரபலமாகவும் வாய்ப்புண்டு.
 • விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 போன்றவை முன்னுரிமையுடன் ஆக்கப்பட வேண்டும். கூகிள் மொழிபெயர்பாளர்கள் உள்ள கட்டுரைகளையே மீண்டும் மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து இந்த கட்டுரைகளில் கவனம் செலுத்தினால் நமது தரம் உயரும்.
 • ஆங்கிலத்தில் உள்ள அனைத்து தமிழ்/தமிழ்நாடு தொடர்புடைய கட்டுரைகளின் பட்டியல் கிடைத்தால் அவற்றின் தமிழ் கட்டுரைகள் இருப்பதை உறுதி செய்யலாம். இல்லையெனில் நம்மைப்பற்றி ஆங்கிலத்தில் உள்ளது,ஆனால் தமிழில் இல்லை என்ற குறை தீரும்.--மணியன் 10:12, 18 டிசம்பர் 2009 (UTC)
 • மணியன், குறும்பன் - பாடப்புத்தக்கத்தில் உள்ளதை மட்டும் அப்படியே இங்கு படி எடுப்பது கண்டிப்பாகப் பெரிய பயன் தராது. ஆனால், பாட நூலில் உள்ள தலைப்புகள் மிக அடிப்படையான தலைப்புகள். எப்படி ஒவ்வொரு விக்கியிலும் இருக்க வேண்டிய ஆயிரம் கட்டுரைகள் என்றுமுன்னுரிமை தந்து செயல்படுகிறோமோ அதே போல் இந்த அடிப்படைத் தலைப்புகளுக்கு முன்னுரிமை தரலாம். அடிப்படையான தலைப்புகளை எழுதாமல், உயர் அறிவியல் தலைப்புகள், மிகவும் நுணுகிய துறைகளை எழுதுவது ஒரு கலைக்களஞ்சியத்துக்கு முழுமை தராமல் போகலாம். பாடம் பற்றிய கூடுதல் தகவல்கள்தருவதன் மூலம் ஆசிரியர், மாணவர் இருவரையும் ஈர்க்க முடியும். சில ஆர்வமுடைய ஆசிரியர்களே கூட கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம். --ரவி 05:45, 20 டிசம்பர் 2009 (UTC)

சுந்தர்தொகு

 • நற்கீரன், வழக்கம் போலவே நல்ல அருமையான ஆண்டறிக்கை. புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மாணாக்கர்கள் தமிழ் விக்கியைப் பயன்படுத்துவது பற்றிய குறிப்பையும் சேர்த்தால் நல்லது. ரவி, அந்த இணைப்பு உங்களிடம் உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 17:44, 18 டிசம்பர் 2009 (UTC)

மகிழ்நன்தொகு

 • ஆண்டு அறிக்கை மிகக் அருமை. தமிழ் விக்கி வளர என்னால் முடிந்த அளவு உழைக்க விரும்புகிறேன்.

நன்றி. -- மகிழ்நன் 17:56, 18 டிசம்பர் 2009 (UTC)


 • பலரிடம் நான் தமிழ் விக்கியில் கட்டுரை எழுதுகிறேன் என்றும், தமிழ் விக்கில் எதை பற்றியும் எழுதலாம் (எ.கா. துடைப்பம், வீட்டு பொருட்கள்) என்று விளக்கினேன். பலருக்கும் அது வியப்பை தந்தாலும், நம்மால் கட்டுரை எழுத முடியுமா? என்ற எண்ணம் தான் மிகையாக உள்ளது என நினைக்கறேன். மேலும் இணைய வசதி, தயக்கம், விக்கி பற்றி விழிப்புர்ணர்வு மிகவும் குறைவே. பள்ளியில் விக்கி பற்றிய அறிமுகம் மிக்க நன்று. விரைவில் இக்குறைகளை களைய முயற்சித்தால், நாமும் கட்டுரையின் எண்ணிக்கையும், தரத்தையும் உயர்த்தலாம். நன்றி -- மகிழ்நன் 18:12, 21 டிசம்பர் 2009 (UTC)

குறும்பன்தொகு

 • ஆண்டறிக்கை நன்று நட்கீரன். மணியன் கூறியது போல் பொதுவாக மாணவர்கள் பொது அறிவு தொடர்பாகதான் இணையத்தை நாடுவார்கள் எல்லோரும் நடப்பு நிகழ்ச்சிகளை காண தவி , ஆவியை அணுகுவார்கள். காட்டாக இப்பொழுது நடக்கும் தெலுங்கானா மற்றும் அது தொடர்கான மற்ற செய்திகளை பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள். இது பற்றிய கட்டுரையை தொடங்கிய மணியனுக்கு பாராட்டுகள்.
 • நகரங்கள், நாடுகள் பற்றிய கட்டுரைகளில் இன்னும் அதிக அளவில் உள்ளடக்கம் சேர்க்கவேண்டும். நம்ம மக்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடு, நகரங்களை பற்றி அறிய அதிகம் ஆர்வமாக இருப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை :-) .
 • முதலில் 12 ம் வகுப்பு, அப்புறம் 11ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள தகவல்களைப்பற்றி அதிக உள்ளடக்கம் மிக்கதாக கட்டுரைகள் எழுதவேண்டும்.
 • அமெரிக்காவில் பல தமிழ் சங்கங்கள் உள்ளன. பெரும்பாலானவை செய்தி மடல்களை (மின்னஞ்சலில்) அனுப்புகின்றன. தவி பற்றி அவற்றில் ஒரு குறிப்பு இருந்தால் தவி அமெரிக்க தமிழர்களிடம் அதிகம் சென்றடையும். மேலும் பல சங்கங்கள் இதழ்களையும் அச்சடிக்கின்றன அவற்றிலும் தவி பற்றிய செய்தி வந்தால் சிறப்பாக இருக்கும். தவி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் பலருக்கு எப்படி பங்களிப்பது என்ற தயக்கம் இருக்கிறது. இது பொதுவான தயக்கம் என்றாலும் இதை எப்படி போக்குவது என்று நாம் சிந்திக்கவேண்டும் (நான் பேசிய தமிழார்வம் மிக்க பலருக்கும் இது இருக்கிறது). இது தொடர்பாக விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதி தவியிலும் வலைப்பதிவிலும் இட வேண்டும். இது சங்கங்களின் இதழ்களில் வந்தால் பலரின் தயக்கம் உடைபடும். முடிந்தால் அவர்களின் இணைய பக்கத்தில் இது பற்றிய தகவல் இடம் பெற செய்யவேண்டும். நாம் அனைத்து அமெரிக்க தமிழ் சங்கங்ளையும் இது தொடர்பாக அணுக வேண்டும்.
 • இரவி சீக்கிரம் துப்பு துலங்கினால் நல்லது :) --குறும்பன் 20:21, 19 டிசம்பர் 2009 (UTC)

வாசுதொகு

 • இந்த வருடம் நான் எதிற்பார்த்த அளவுக்கு ஈடுபாடு இல்லை. நேரம் வேலைக்கும் வீட்டிற்க்கும் செலவாகிவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சில தொகுப்புகள் செய்ய முயல்கிறது. 2010இல் கருநாடக இசை சார்ந்த பக்கங்களை எழுத ஆசை. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 08:22, 20 டிசம்பர் 2009 (UTC)

தேனி.எம்.சுப்பிரமணிதொகு

 • அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களிலும் பங்களிப்பவர்கள் தங்கள் பங்களிப்பில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கம் தொடங்கப்பட்ட பின்பு பங்களிப்புகள் சற்று அதிகரித்திருக்குமென நம்புகிறேன். மேலும் விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் எனும் தலைப்பிலான செய்தியும் நல்ல முயற்சி. விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இடதுபுறம் அதிக பங்களிப்பு செய்து வரும் விக்கிப்பீடியாவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் சுமார் 50 பங்களிப்பாளர்களின் பட்டியலை வெளியிடலாம். இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருப்பதுடன் பங்களிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும்.
 • நான் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியா எனும் தலைப்பில் எழுதியிருக்கும் நூல் சென்னை மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு மயூரநாதன் அய்யா அணிந்துரை அளித்துள்ளார்கள். இந்நூல் வெளியிடப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறேன்.
 • கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பணியாற்றுபவர்களிடம் தமிழ் விக்கிப்பீடியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த கருத்தரங்கங்கள், பயிலரங்குகள் நடத்தும் முயற்சி அதிகப்படுத்தப்பட வேண்டும்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படா விட்டாலும் அவர்களை ஊக்கப்படுத்த சான்றிதழ்கள் வழங்கலாம்.
 • தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் ஜீன்’2010-ல் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் “தமிழ் விக்கிப்பீடியா” குறித்த கருத்தரங்கம் ஒன்று நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

--தேனி.எம்.சுப்பிரமணி 02:02, 20 டிசம்பர் 2009 (UTC)

 • தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமில்லாமல் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் எவரும் தொகுக்கலாம், மாற்றங்கள் செய்யலாம் என்றிருப்பதால் விக்கிப்பீடியாவின் மீதான நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்டுரைகளையும் அவ்வப்போது மறு ஆய்வு செய்வதும் அவசியமாக இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர் நிர்வாகிகள் இதுகுறித்து அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

--Theni.M.Subramani 14:10, 28 டிசம்பர் 2009 (UTC)

 • இந்தியாவில் சமூகசேவை அமைப்பிலுள்ள பலர் அந்த அமைப்பின் சுருக்கச் சொல்லை தங்கள் பெயரின் முன்பு சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக சுழற்சங்கம் (Rotary Club) உறுப்பினர்கள் Rtn. என்றும் அரிமா சங்க (Lions Club) உறுப்பினர்கள் Lion என்றும் குறிப்பிடுகின்றனர். இது போல் விக்கிப்பீடியா பயனர்கள் wiki (விக்கி) என்று குறிப்பிடலாமே. இதனால் இதைப் பார்ப்பவர்கள் விக்கி என்றால் என்ன என்கிற கேள்வியை எழுப்பக் கூடும். இதன் மூலம் அவர்களுக்கு விக்கிப்பீடியாவை நாம் அறிமுகப்படுத்துவதுடன் விக்கிப்பீடியாவில் அவர்களையும் இணைக்க முடியும் என்று நம்புகிறேன். நாம் இந்த தமிழர் திருநாளிலிருந்து இதைத் தொடங்கலாமே? --Theni.M.Subramani 02:11, 14 ஜனவரி 2010 (UTC)

த*உழவன்தொகு

சிறந்த ஆண்டறிக்கை. தமிழ் விக்கிப்பீடியாவின் கடந்த ஆண்டுகளின் சுவடுகளை, ஒரு சில வரிகள் சேர்த்திருந்தால், இது மேலும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் முழுமையை நோக்கி பயணிக்கையில், அச்சுவடுகளும் முக்கியமானதாகும்.

 • இங்ஙைய முன்னவரின் கருத்துக்கள் குறித்த, எனது பார்வைகள் வருமாறு;-

1) மயூரநாதனின் புதியவரின் வருகைப் பற்றிய, பகுப்பாய்வு மிக அடிப்படையானது ஆகும்.. வரும் காலங்களில், புதியவரை படிப்படியாகக் கட்டுரைகளை எழுத அனுமதிக்க வேண்டும். இதனால் தரம் காக்கப் படுகிறது. புதியவரை வரவேற்கும் போதே, அவரது வழிகாட்டியையும், மாதிரிக் கட்டுரைகளையும் சுட்டினால் நன்றாக இருக்கும். இதனால் கட்டுரை ஆக்கத்தின் வேகம், ஆரம்பத்தில் மந்தப் படும். புதியவரின் அறியாமைப் பிழைகள், வெகுவாகக் குறையும்.

புதியவரிடம் குறைந்த நேரத்தில், அதிக பங்களிப்புகள் வருவதை விட, அவர் தம் பிழைகள் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளல், மிக முக்கியமானதாகும்.

2) இரவி கூறிய படி , தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனத்தின் உயிரியல் பாடங்களை முதலில் எடுத்துக் கொள்கிறேன். இருப்பினும் ஒரு மாதிரிக் கட்டுரை எழுதி, அதில் எப்படித் தேவைப்படும் துணை நூல்கள், பயிற்சிகளை விக்கி நூல்களில் சேர்ப்பது? இது குறித்த ஒரு கட்டுரை எழுதிக் காட்டினால், தயக்கமின்றி செயல் பட ஏதுவாகும்.

3) மணியனின் கருத்துப்படி, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அம்முக்கிய கட்டுரைகளில் தமிழர் க்ட்டுரைகள் வெகுக் குறைவே. தமிழில் இல்லாத, ஆங்கிலக் கட்டுரைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும், ஒரு சில கட்டுரைகளை எடுத்தாள வேண்டும்.

4) மகிழ்நன் பார்வையில் நிறைய தமிழ் ஆர்வலர் உள்ளனர் என்பது மிக உண்மை. எளிமையான படிப்படியான வழிகாட்டல்கள், புதியவர்களுக்காக புதுப் பயனர் பக்கத்தில் இயற்றப் படவேண்டும்.

5)குறும்பனின் நெறிமுறைப்படி தமிழ்சங்கங்களின் ஒருங்கிணைப்பு, மிகச்சிறந்த பலனைத் தரும். பல்வேறுநாடுகளில் வசிப்பவர், தான் வாழுகின்ற, இரசித்த நகரங்கள் பற்றியக் கட்டுரைகளை எழுத ஊக்கப்படுத்த வேண்டும். அவை சிறந்த சுற்றுலாக்களை ஏற்படுத்தும்.

6)தேனி.எம்.சுப்பிரமணி வழிகாட்டல் படி, உலகத்தமிழ் மாநாட்டில் விக்கிப்பீடியா பற்றியும், அது பிற மொழிகளுடன் கட்டுரைகளை, ஒப்பிட்டு அறியும் வசதிகளைப் பற்றியும் தெரியப் படுத்த வேண்டும். பல மொழிக் கட்டுரைகளை ஒப்பிடும் போதே, தமிழ் வளர்ச்சி மேலோங்கும்; அப்பொழுது தானியங்கிகளின் மேன்மைகளைப் பலருக்கும் உணர்த்தி, ஊக்கப் படுத்த வேண்டும்.

சிறந்த புத்தகங்களின் மதிப்புரையை, அப்பதிப்பகத்தாரே செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தினால், நல்ல தரமான நூலகக் கட்டமைப்பு உருவாகும். அதனால் கட்டுரைகளின் எண்ணிக்கையும், விக்கித்தரத்துடன் அதிகமாகும்.

யுனெசு'கோ ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிற்க்கு முக்கியத்துவம் தருகிறது. நாமும் அப்போக்கிலே, கட்டுரைகள் இயற்றப்பட வேண்டும். யுனெசுகோ கூரியரின் மாத இதழ்களைப் பதிவேற்றம் செய்யணும்.

 • எனது எண்ணங்கள் வருமாறு;-

1) சொற்பயன்பாடுகள்:பன்னாட்டு தமிழரும் பயன்படுத்தும் படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களை எளிமைப் படுத்த வேண்டும். (எ.கா) (உசாத்துணை-->ஆதாரம்); ( தமிழகத்தில் முருகன் துணை, மாரியம்மன் துணை போன்ற சொற் பயன்பாடுகள் சாதாரணம்). அதே போல் மணல் தொட்டி என்பது பயிற்சி செய்யும் இடம், இதனை உணர்த்த அச்சொல்லை, பயிற்சியகம்/ பயிற்சிக்கூடம் என மாற்ற வேண்டும். முன்பக்க வார்ப்புருவிலுள்ள விக்கிபீடியா, விக்கிப்பீடியா போன்ற பிழைகளை (விக்சனரி, விக்கிமேற்கோள்,விக்கிமூலம், விக்கிபொது, விக்கிநூல்கள் போன்றவற்றின்) மாற்ற வேண்டும். அதே போல, விக்கி இனங்கள்--> விக்கி உயிரிகள்; விக்கிபொது-->விக்கி ஊடக நடுவம்; மேல் விக்கி--> விக்கி நிருவாகம் என அத்தளங்கள் தரும் வசதிகளை, உடனே புரியும் படி மாற்றினால் சிறப்பாகும்.

தெரியாதவருக்கு, தெரிய வைப்பதே கல்வி. அறியாதவர் வழி சென்று, அவருக்கு நம்மை அரிய வைப்பதற்கு, நமக்குள் சொற்கட்டுப்பாடு மிக அவசியம் ஆகும். இதற்கு ஆராய்ச்சி அடிப்படையில் உருவான, கருவச் சொற்கள் உதவக் கூடும்..

2) ஊடகப் பயன்பாடுகள்: தமிழ் விக்கிப்பீடியாவிலிருக்கும் பல ஊடகங்கள், விக்கி ஊடக நடுவத்தில் நடப் படுவதில்லை. அங்கு நடுவதால், விக்கியின் பிற திட்டங்களுக்கும் கிடைக்குமே. இதனால் நிறைய நேரம் மீதமாகும். (எ.கா) தொல்காப்பியக் கட்டுரையிலுள்ள 13.12.08 படமும், சுந்தரின் இப்படமும் (படிமம்:TolkappiyamPalmLeaf.jpg - 16.4.2009)ஒரே இடத்தில் இருந்தால் நல்லது. ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப் பட்ட, நம்மின் உழைப்புகள் நமக்குள்ளே விரவிக் கிடக்கலாமா?

  • நேரமின்மையால் தவிப்பவருக்காக, நானும் கை கொடுக்கக் காத்திருக்கிறேன்.. எனக்குக் காப்புரிமையில்லா படங்களை அனுப்பினால், நான் பதிவேற்றுகிறேன். அதற்குரிய பொதுவான பயனர் பெயரை உருவாக்க வேண்டுமென்பது, மிக அவசியமாகும்.

//குறிப்பிட்ட தலைப்பில் எழுதித் தர எழுத்தாளர்கள் உள்ளார்கள். ஆனால் தட்டச்சு, விக்கியாக்கம் செய்ய பயனர்கள் இல்லை.(2007,நற்கீரன்)//(உள்ளார்கள்-->உள்ளனர்)

  • ஒரு சில கட்டுரைகளை, நான் தட்டச்சு மற்றும் விக்கியாக்கம் செய்ய விரும்புகிறேன்.

3) அதே போல 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது, பிற தமிழ் விக்கித்திட்டங்களின் போக்கினை அலச வேண்டும்.

4) நிருவாகிக்களுக்கும் பயிற்சி: வருகின்ற / இணைந்த பங்களிப்பாளர்களைத் தொடர்ந்து தக்க வைப்பது அனைத்திலும் முக்கியம். அதற்குரிய கட்டமைப்புகள் மேம்படுத்த வேண்டும். முன்னோடிகளின் அனுபவங்கள் மிக முக்கியமானதன்றோ. அப்போதே பின்னவரும், முன்னவர் கொள்கைகளை முன் நிறுத்துவர்.

  • எனக்குத் தானியங்கிகளை பற்றி, நிறைய கற்றுக்கொள்ள ஆர்வம். எதைக் கற்றுக கொள்வது? எப்படி கற்றுக் கொள்வது? ஒருவரே அனைத்தும் கற்றுணர்ந்து பயன்படுத்துவதென்பது கடினமான செயலே. என்னைப் போன்ற நிருவாகிக்களுக்கும், பயிற்சி தரப் பட வேண்டும்.

எண்ணங்களை வரும் காலங்களுக்காக வார்க்கும் போது, கட்டுரையின் அளவு பெரிதாகி விட்டது. என்னில் விதைகளைத் தூவிய நற்கீரனையும், இரவியையும் மறவேன்.

என்னை, இக்கருத்தோட்டத்திற்கு அழைத்த{02:54, 19 டிசம்பர் 2009 (UTC)} நற்கீரனுக்கும் நன்றிகள் கூறி வணக்கங்களுடன் விடை பெறுகிறேன். த* உழவன் 12:52, 25 டிசம்பர் 2009 (UTC)


சந்திரவதனாதொகு

 • நற்கீரன், மிகவும் அருமையாகவும், நேர்த்தியாகவும் 2009 இன் ஆண்டறிக்கையைத் தந்துள்ளீர்கள். நன்றி.
 • தமிழ் விக்கிபீடியாவைத் தமது தேவைக்குப் பயன்படுத்துவோர்தான் இங்கு ஜேர்மனியில் அதிகம் இருக்கிறார்கள். தமிழில் பல விடயங்களை கூகிளில் தேடும் போது தமிழ்விக்கிபீடியா முன்னுக்கு நிற்பதே அதன் முக்கிய காரணமாக இருக்கிறது. மற்றும் படி பங்களிப்புச் செய்வதிலான ஆர்வம் மிகக்குறைந்த வீதத்தினருக்கே உள்ளது.

இளைய சமூகத்தினர் ஐரோப்பியாவின் அந்தந்த நாடுகளிலுள்ள மொழிகளிலேயே கற்று, வேலைகளையும் செய்து கொண்டு அந்தந்த நாட்டு நபர்களுடனேயே ஊடாட்டமும் கொண்டிருப்பதால் தமிழோடான அவர்களது செயற்பாடுகள் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. தமிழில் ஆர்வம் கொண்டிருப்பவர்களும் வாசிப்பது, எழுதுவது, பாடல்கள், திரைப்படங்களை கேட்டும், பார்த்தும் ரசிப்பது என்பதோடு நின்று விடுகிறார்கள். வளர்ந்தவர்களின் இணைய ஈடுபாடு என்பது மிகக்குறைந்த வீதமே. கொஞ்சமேனும் ஈடுபாடு உள்ளவர்களும் ஐரோப்பிய அவசரத்தில் தம்மைத் தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் முன்னவர்கள் கூறிய விடயங்கள் கருத்தில் எடுக்கப்பெற்று செயற்படுத்தப்பெறும் பட்சத்தில் கொஞ்சமேனும் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக 2010இல் வெளிவரும் விக்கிபீடியா பற்றிய நூல்களும், ஊடகங்களை ஈர்க்கும் செயற்பாடுகளும் ஓரளவு பலனைத் தரலாம்.

 • ஐரோப்பியத் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள் கட்டுரைப்போட்டிகள், பேச்சுப்போட்டிகள் போன்றவற்றிற்காக தமிழ்விக்கிபீடியாவை நாடுகிறார்கள். அவர்களது ஈடுபாட்டுக்கு ஏற்ப ஈழத்து கலை, இலக்கியம், வரலாறு... போன்ற விடயங்கள் கட்டுரைகளாக தவியில் அதிகமாக இடம்பெறும் பட்சத்தில் அவர்கள் அதை மாணவர்களுக்கு வலிந்து அறிமுகப்படுத்துவார்கள். கூடவே உலகவிடயங்கள், தொழில்நுட்ப விடயங்கள் அவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்க்கும்.
 • ஐரோப்பியத் தமிழரை விட ஆசியாவில் வாழும் தமிழர்கள் விக்கியில் பங்களிப்பதிலும், பயன்படுத்துவதிலும் கூடிய ஆர்வம் கொண்டுள்ளதைக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. இவர்களிலும் வெறுமனே கட்டுரையை எழுதிவிட்டு தம்பெயரில் அது வெளிவரவேண்டுமென எதிர்பார்ப்பவர்களே அதிகமாக உள்ளார்கள். அக்கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு ஏற்றவகையில் எழுதப்பட வேண்டுமென்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்தக் கூடிய கட்டுரைகள் எழுதப்பட்டு ஊடகங்களிலும், மின்னஞ்சல்களிலும் அவை வரவேண்டும்.
 • கூகிள்குழுமங்களுக்கு அக்கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும். கூடவே விக்கிபீடியாவின் தொலைநோக்கு பற்றியும், விக்கிபீடியாவின் பயன்பற்றியும் பாமரரும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இலகுவானதும், தெளிவானதுமான கட்டுரைகள் வெளிவரவேண்டும்.

--Chandravathanaa

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. ஐரோப்பாவில் ஐக்கிய இராச்சியம், பிரான்சு, யேர்மனி, சுவட்சர்லாந்து, நேர்வே போன்ற நாடுகளில் தமிழர் அதிகம் வசிக்கின்றனர் எனலாம். ஐ.இரா தவிர்ந்து இதர நாடுகளில் வீட்டில் ஓரளவு தமிழ் பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். யேர்மனியில் குறிப்பிடத்தக்க மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள். மாணவர்கள் ஒரு புறம் இருக்க, புலம் பெயர் தலைமுறையினர் தமிழுக்கு பங்களிக்ககூடிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நாடுகள், மொழிகள், பண்பாடுகள், இலக்கியங்கள், நுட்பங்கள் பற்றி தமிழில் எழுதித் தரும் வாய்ப்பை இவர்கள் பெற்று உள்ளார்கள். இவர்கள் தமிழ் பெற முடிந்தால் எவ்வளவு சிறப்பாக அமைய முடியும். அடுத்தது மாணவர்களை ஈர்க்க நீங்கள் கூறிய படி நாம் செய்யலாம். அடுத்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் பிரான்சில் இருந்து ஒரு சிலரையாவை தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும். யேர்மனியில் தமிழ் போட்டிகளில், பள்ளிக்கூடங்களில் உங்களால் த.வி அறிமுகம் செய்ய முடிந்தால் சிறப்பே. எம்மிடம் தேவையான துண்ணறிக்கை, நிகழ்த்துதல் (பிபிடி), கட்டுரைகள் ஆகியை உண்டு. எமது வலைப்பதிவில் த.வி பற்றி பல அரிய கட்டுரைகள் உண்டு. --Natkeeran 21:44, 27 டிசம்பர் 2009 (UTC)

 • நற்கீரன், நீங்கள் சொல்வது நடந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கும். இப்படியான அந்நாட்டு விடயங்களை ஒருவருமே மொழிபெயர்ப்புச் செய்யாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடக்கு ஜேர்மனியில் பல்கலைக்கழகங்களில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களில் சிலர் ஆரம்ப காலங்களில் பல அரிய பணிகளைச் செய்தார்கள். இப்போதான அவர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ள முயல்கிறேன்.
 • பிரான்சில் இருந்து பங்களிக்க ஒரு சிலரையாவது எப்படி அணுகலாம் என யோசிக்கிறேன்.
 • ஜேர்மனிய தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் கட்டுரைகளுக்காக என்னைக் நெருங்கும் போதெல்லாம் விக்கிபீடியா பற்றி அவர்களிடம் விளக்கி அவற்றிலிருந்து தகவல்களை எடுக்கத் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.
 • விக்கிபீடியாவில் பல சிறந்த கட்டுரைகள் இருப்பதை நானும் அறிவேன். ஆனாலும் அவைகளிலுள்ள பல சொற்கள் எமது நாளாந்தப் பாவனையில் உள்ள சொற்கள் அல்ல. இதனால் குழம்புவோர் பலர்.
 • என்னாலான பரப்புரையைச் செய்கிறேன். பலன் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. வேறுவழிகள் ஏதாவது கிடைக்குமா எனப் பார்க்கிறேன்.
 • தனிப்பட்ட எனது பங்களிப்புகளே நான் விரும்பியபடியோ அல்லது எனக்குள்ளான திட்டத்தின் படியோ நடந்து விடுவதில்லை. எப்படியோ மாறி மாறி ஏதாவது வந்து விடுகின்றன. அடுத்த ஆண்டிலாவது மேலான பங்களிப்பைச் செய்ய முனைகிறேன்.

--Chandravathanaa

சிவக்குமார்தொகு

எனக்கு உடனடியாகத் தோன்றும் முதன்மைக் கருத்துக்களை இப்போது பதிகிறேன்.

 • பல ஆழமான, பெரிய கட்டுரைகள் ஆக்கப்பட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கலாம். இவற்றின் நடை, பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ்ச்சொற்கள் போன்றவற்றை எளிதாகவும், நல்ல நடையிலும் அமைக்க வேண்டும்.
 • இருக்கும் கட்டுரைகள் படிப்பவர்களை மேலும் படிக்கத் தூண்டும் வகையில் இருக்கவேண்டும். மயூரநாதன் உருவாக்குவது போல் தொடர்புடைய தலைப்புகளில் கட்டுரை ஆக்கலாம். விக்கியிடை இணைப்புகள், படங்கள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும்.
 • அடுத்த முக்கியமான பணியாக நான் கருதுவது 6-10 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் தலைப்புகளில் நல்ல கட்டுரைகள் உருவாக்குதல். அறிவியல், சமூக அறிவியலுக்கு முன்னுரிமை தரலாம்.

--சிவக்குமார் \பேச்சு 14:43, 28 டிசம்பர் 2009 (UTC)


இராஜ்குமார்தொகு

12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாட நூல்களை நிச்சயம் விரைவில் சேர்க்கவேண்டும் . இது உண்மையில் தமிழ் விக்கிபீடியாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் . நான் பல கலைச்சொற்க்களை அதில் இருந்து தான் எடுத்து பயன்படுத்துகிறேன் .

 • இணைவற்ற நிலையில் விக்கிபீடியாவை பயன்படுத்த ஏதேனும் வழியுள்ளதா ? விக்கிபீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளையும் கூகிள் எர்த் தைப்போல தரவிறக்கி கொள்ளும் வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும் . இதனால் ஒரு டிவிடி மூலம் இணைவற்ற பள்ளியில் கூட பயன்படுத்தக்கூடும் .
 • இணையத்தளம் இல்லாதவர்களும் தங்கள் கட்டுரைகளை விக்கியில் சேர்க்க வழி ஏதேனும் உருவாக்க வேண்டும் . அஞ்சல் , மின்னஞ்சல் மூலமாக பயனர்கள் கட்டுரையை விக்கியில் அவர்கள் பெயரிட்டு சேர்க்க வழி ஒன்று பொதுவானதாக வேண்டும் .

--இராஜ்குமார்

ரகுநாதன்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவை அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியே சிந்திக்க வைக்கிறது. அவர்களது தேடலுக்கு ஏற்றவாறு நாம் இன்னும் பல கட்டுரைகளை எழுத வேண்டும். அவ்வாறு சிறுவர்களிடம் இருந்து தமிழ் விக்கி மீதான எண்ணத்தை விதைக்கும் போதுதான் அவர்களும் இதில் பங்களிக்கவும், எதாவது மேலதிகத் தகவல் தேவையா தேடு விக்கிப் பீடியாவை என்ற எண்ணம் வரும். அவர்கள் உயர் கல்வி, ஆராய்ச்சி போன்ற படிப்புகளுக்கு வரும் போதும் தமிழ் விக்கியை வளப்படுத்துவார்கள்.

கோவையில் அண்மையில் நான், ரவிசங்கர், சிவா மூவரும் சந்தித்தபோது பள்ளி மாணவர்களின் அறிவியல்,வரலாறு தொடர்புடைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப கட்டுரைகளை எழுதலாம் என்ற எண்ணத்தை பகிர்ந்து கொண்டனரó. இது நல்லதுதான். அந்தக் கட்டுரைகள் அப்படியே பாடப் புத்தகங்களில் இருப்பதை மட்டும் கூறாமல் அதை விளக்கும் வகையில் மேலதிகத் தகவல்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை பாடத் திட்டத்திற்கு ஏற்பவும் அது அமைதல் நலம். --Ragunathan 14:06, 30 டிசம்பர் 2009 (UTC)

நற்கீரன்தொகு

பல பயனர்களில் கருத்துக்களில் பின்வருவன பல ஏற்கனவே கூறப்பட்டன.

மாணவர்களுக்கான கட்டுரைகள்

 • மாணவர்களுக்களின் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய மேலதிக விபரங்களைக் கொண்ட கட்டுரைகளை உருவாக்குதல்.
 • முதலில் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் தரப்பட்டிருக்கும் தலைப்புகளும் பட்டியல் இடப்பட வேண்டும்.

விக்கிக்கு வெளியே, இணையத்துக்கு வெளியே

பெரும்பான்மைத் தமிழர்களுக்கு இணைய இணைப்பு இல்லை, அல்லது தமிழ் இணையம் பற்றிய புரிதல் இல்லை. இந்த இடைவெளியை மீறி விக்கியை அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் பங்களிப்பை விக்குக்கு கொண்டு வர வேண்டும். குறுவட்டில் அல்லது அச்சில் தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுதிகளை வெளியிடுவது நல்லது. மற்றும் எப்படி இணைய இணைப்பு தொடர்ந்து இல்லாமல் தரவிறக்கி விக்கியைப் பயன்படுத்தலாம் என்று அறிய வேண்டும். இது பற்றி உமாபதி முன்னர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

கூகிள் மொழிபெயர்ப்பு நெறிப்படுத்தல்

கூகிள் மொழிபெயர்ப்பின் சில கட்டுரைகள் நன்றாகல் உள்ளன. ஆனால் பல கட்டுரைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சுந்தர் தொடர்பாடலை சுமூகமாக தொடர்ந்து பேணி, ஒரு நல்ல இணக்கப்பாட்டை ஏற்படித்த வேண்டும்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, சுவிட்சர்லாந்து

இலங்கையில் இருந்து முன்னர் பலர் பங்களித்தார்கள். தற்போது யாரும் தொடர்ந்து பங்களிப்பதில்லை. மலேசியாவில் இருந்து பல காலமாக யாரும் இங்கு பங்களிக்க வில்லை. சிங்கப்பூர், பிரான்சு, சுவிட்சர்லாந்து எந்த ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பும் இதுவரை இல்லை. இந்த நாடுகளில் கணிசமான தமிழர்கள் வசிக்கின்றார்கள். எனவே இவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை எடுத்துச் செல்வது அவசியமாகும். தமிழ் அமைப்புகள், அச்சு ஊடகங்கள், மின்னிதழ்கள், வலைப்பதிவு, தனிப்பட்ட தொடர்பு ஊடாக இவர்களைத் தொடர்பு கொண்டு அறிமுகப் படுத்த வேண்டும்.

மேலும் எண்ணங்கள் பின்னர். --Natkeeran 01:48, 31 டிசம்பர் 2009 (UTC)

நரசிம்மவர்மன்10தொகு

 • ஆண்டறிக்கை நன்று உள்ளது.
 • அறிவியல் திட்டக்குழுமம் ஒன்றை அமைக்கலாம், குறிப்பாய் இயற்பியலுக்கும், வேதியலுக்கும்.
 • இயற்பியல், அல்லது அறிவியலைப் பொருத்தவரை, முதலில் முடிந்தளவிற்கு அடிப்படை கருத்துக்கோள்கள், விதிகள், கொள்கைகள் ஆகியவற்றிர்கான கட்டுரைகளை உருவாக்க வேண்டும், இவையே மேலதிக கருத்துருக்களை விளக்க துணைசெய்யும் கருவிகளாகின்றன.
  • எ-டு: பவுளி தவிர்கை தத்துவம், கோப்பன்னாவன் விளக்கம், மெடுலங் விதி, போன்றவை
 • புதிதாய் வரும் பங்களிப்பாளர்களுக்கு விக்கியில் பட்டறிவு பெற்ற ஒரு பயனர் முதலில் வழிகாட்டியாய் செயல்பட்டு, தான் முதலில் அறிமுகமாகி பின் தன்மூலம் விக்கியை அறிமுகப்படுத்தலாம். குழுமங்கள் அமைத்து செயல்படுகையில், புதுப்பங்களிப்பாளர்களை "recruit" போல கொண்டு பயிர்சியளிக்கலாம் - ஆசிரிய-மாணவ முறையில்.

இப்பொதைய என் கருத்துக்கள் இவையே. நன்றி. வாழ்வோம். வளர்வோம். --நரசிம்மவர்மன்10 05:22, 2 ஜனவரி 2010 (UTC)

அறிவியல் துறைகளுக்கான விக்கித் திட்டங்களை உருவாக்க ஆர்வமே. ஆனால் அத்துறையைச் சேர்த பயனர்கள் ஓரளவு சேந்த பின்பே அத்துறை தொடர்பான ஒரு திட்டத்தை தொடங்குவது பயன் தரும். அந்த வகையில் தற்போது விக்கித் திட்டம் உயிரில் உள்ளது. இயற்பியல் துறைசார் பலரும் இப்பதால் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இயற்பியல் ஐயும் தொடங்கலாம். நீங்கள், பரிதிமதி, செல்வா, புதுப் பயனர் இராஜ்குமார், மணியன், கனகு, டெரன்சு போன்றோர் சேர்ந்து விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இயற்பியல் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். ஆங்கிலத் திட்டம் en:Wikipedia:WikiProject Physics நன்கு வளர்ச்சி பெற்ற திட்டம்.

ஆனால் வேதியியல், வானியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு மேலும் துறைசார் பயனர்கள் சேரவேண்டும். --Natkeeran 01:57, 3 ஜனவரி 2010 (UTC)

கார்த்திக்தொகு

மிகவும் அருமையான ஆண்டறிக்கையை தயார் செய்த நக்கீரனுக்கு என் நன்றி. 2010ல் நாம் கவனம் செலுத்தவேண்டியது நான் நினைப்பது:

 • கூகிள் மொழிபெயர்ப்பி வாயிலாக மொழி பெயர்க்கப்படுவதை நெறிபடுத்துதல். மொழி பெயர்ப்பு கட்டுரைகளுக்கு புதிய வார்ப்புரு ஒன்றை இட்டு நாளடைவில் அக்கட்டுரையை நெறிபடுத்துதல்
 • எளிய தமிழ் புத்தகக்களை (25 பக்கங்களில்) வெளியிடுதல் (கிழக்கு பதிப்பகத்தின் மினி மேக்சு போல பார்க்க: http://india360degree.blogspot.com/2009/01/blog-post.html)
 • மேலும புதிய இடங்களில் விக்கீப்பீடியா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது. ஏற்கனவே கூட்டம் போட்ட இடத்திலும் அதே நண்பர்களுடனும் கூட்டம் போடலாம்.
 • கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களை கட்டுரைகள் எழுத மற்றும் பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்.

நான் செய்ய நினைப்பதுதொகு

 • பாலூட்டிகள் திட்டத்தில் உள்ள குடும்பங்களை பற்றியும் அதன் ஒவ்வொரு உறுப்பினர்கள் (சிற்றினங்கள்) பற்றியும் கட்டுரைகள் எழுதுவது (குறைந்தபட்சம்: அனைத்திற்கும் குறுங்கட்டுரையாவது எழுதுவது)
 • தமிழ் நாட்டில் காணப்படும் தாவரங்களை பற்றிய கட்டுரைகள் எழுதுவது, இதற்கான புத்தகங்களை சேகரித்துக் கொண்டுள்ளேன். 2010 டிசம்பர்க்குள் ஒரு 150 தாவரங்களை பற்றிய கட்டுரைகள் என் இலக்கு.

--கார்த்திக் 18:48, 11 ஜனவரி 2010 (UTC)

பெரியண்ணன்தொகு

 • அதிகாரிகளுக்கும். பயனர்களுக்கும் வணக்கம்.
 • நான் ஆண்டறிக்கை 2009-ஐ படித்துப்பார்த்தேன். நன்றாக இருக்கிறது. வாழத்துக்கள்.
 • மேலும், தமிழ் விக்கிப்பீடியா இன்று 21,000 கட்டுரைகளைத் தாண்டியுள்ளதற்கு, நல்வாழ்த்துக்கள்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:29, 4 பெப்ரவரி 2010 (UTC)

 • 2009-ம் ஆண்டறிக்கை பற்றிய எனது கருத்துக்களையும், 2010-ல் செய்ய வேண்டியவைகளையும் சுருக்கமாக எழுத நினைத்து, அதுவே பெரிய கட்டுரையாக மாறியதாலும், இந்த பேச்சுப்பக்கம் பெரியதானதாலும், விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review/இரண்டாவது பக்கம் --- என்ற புதுப்பக்கத்தில் கொடுத்துள்ளேன்.
 • தாங்கள் அனைவரும், சிறிது நேரம் ஒதுக்கி அதனை முழுமையாகப் படித்து, தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 • மேலும், அதிகாரிகள் கட்டாயமாக படித்து, 2010-ல் செய்ய வேண்டியவைகளை ஆராய வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 10:03, 4 பெப்ரவரி 2010 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவை பரந்த தமிழ்ச் சமூகத்துக்கு எடுத்துச் செல்வதும், இதை அறிவியல், தொழில்நுட்ப, கணித, சமூக விடயங்களைப் பகிரும் அறிவியல் தமிழின் களமாக்குவதும் எமது அவா. அதற்கு உங்களைப் போன்றோரின் கருத்துக்களும் பங்களிப்பும் மிக்க உதவும். நன்றி. --Natkeeran 03:34, 6 பெப்ரவரி 2010 (UTC)
 • தாங்கள் நேரம் ஒதுக்கி, முழுவதையும் படித்துத் தங்களின் கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி.
 • என்னால் முடிந்த அளவு, பங்களிக்க முயற்சிக்கிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:02, 6 பெப்ரவரி 2010 (UTC)

செல்வாதொகு

நற்கீரன், நீங்கள் எப்பொழுதும்போல் தவறாமல் நல்லதோர் ஆண்டறிக்கையை எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். இவ்வாண்டுக்கான என் கருத்துகள் சென்ற ஆண்டு நான் சொன்ன அவையேதான். அதற்கு முன்னர் 2007 இல் சொன்ன அவையும் இன்னும் பொருந்தும். நான் இவ்வாண்டு செய்ய வேண்டும் என நினைத்துள்ளவை:

 1. தனிமங்கள் பட்டியலில் மீதம் உள்ளவற்றைப் பற்றி எழுதுவது. உள்ள கட்டுரைகள் பலவற்றை விரிவு செய்வது.
 2. முக்கியமான காடிகள் (அமிலங்கள்) பற்றி எழுதுவது. பல முக்கியமான மூலக்கூறுகள் சேர்மங்கள் பற்றி எழுதுவது
 3. அடிப்படை அலகுகள் பற்றி எழுதுவது
 4. மின்னியல் துறையில் அடிப்படையான கட்டுரைகள் எழுதுதல், ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்தல்.
 5. இன்னும் எழுத வேண்டிய ஆயிரக்கணக்கான விலங்குகள், உயிரிகள், செடிக்கொடிகள் பட்டியலில் முடிந்தவற்றை எழுதுவது
 6. பெரு நாடு, இன்க்கா பேரரசு, இன்க்கா நெடும்பாதை, தொடர்பான தென்னமெரிக்க தலைப்புகள்; கெச்சுவா மொழி, மக்கள்; அய்மாரா மக்கள், தித்திக்காக்கா ஏரி
 7. தான்சானியா பற்றி (தனிச்சிறப்பான செடிகொடிகள்); கிசுவாஃகிலி மொழி; மேரு, சாகா, அரூசா மக்கள்; தான்சனைட் என்னும் புதிய நீலநிற நகைக்கல், கொரோங்கொரோ பெருவெளி, 50+ வகையான உயிரினங்கள்
 8. வட அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள யோசமிட்டி புரவகம், மலைகள், டூஃவாஎன்னும் உவர்க்கூம்புகள், மோனோ ஏரி, மாமத் ஏரி, மேற்கு அமெரிக்க மர, விலங்கு வகைகள். அரைகோள முகடு, எல்க்காப்பிட்டான்,
 9. இந்தியா- குடுமியான்மலை கட்டுரையை விரிவு செய்தல் (புதிய படங்கள் சேர்த்தல்), சித்தன்னவாசல், சோமநாதபுரம் விரிவு, தலக்காடு, பரிசல் (விரிவு)
 10. பல வாழ்க்கை வரலாறுகள்
 11. எட்டாவது வகுப்பு முதல் 12 ஆவது வகுப்பு வரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தேவைப்படக் கூடிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுதல். எப்படி பல கருவிகள் இயங்குகின்றன என்று எழுதுதல்
 12. கூகுள் மொழிபெயர்ப்புவழி வரும் கட்டுரைகளைத் திருத்தி மேம்படுத்துதல்.
 13. முக்கியமாக இருக்கவேண்டிய கட்டுரைகள் என்னும் பட்டியலில் உள்ளவற்றைப் பற்றி எழுதுதல்.


இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பது என் அவா. மேலே கூறியுள்ள பலவற்றைப் பற்றியும் என்னிடம் பல ஒளிப்படங்கள் உள்ளன. மருத்துவக் கட்டுரைகள், பொருளியல் கட்டுரைகள்,பொறியியல் கட்டுரைகள், கணிதத்துறை கட்டுரைகள் என்று மிகப் பல உள்ளன. ஆனால் பலரும் சேர்ந்து உருவாக்கும்பொழுது இது இன்பமான பணியே. --செல்வா 04:29, 16 பெப்ரவரி 2010 (UTC)

Return to the project page "2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review".