விசுவநாதர் கோயில், கஜுராஹோ

இந்தியாவின் கஜுராஹோவிலுள்ள இந்துக் கோயில்

விசுவநாதர் கோயில் (Vishvanatha Temple) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் மேற்கு குழுவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள தெய்வம் "விசுவநாதர்" என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது "பிரபஞ்சத்தின் இறைவன்" எனப் பொருள்.

விசுவநாதர் கோயில்
விசுவநாதர் கோயில், கஜுராஹோ is located in இந்தியா
விசுவநாதர் கோயில், கஜுராஹோ
இந்தியாவில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:சத்தர்பூர்
அமைவு:கஜுராஹோ
ஏற்றம்:223 m (732 அடி)
ஆள்கூறுகள்:24°51′12″N 79°55′21″E / 24.853303°N 79.922613°E / 24.853303; 79.922613
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மத்திய இந்திய இந்துக் கோயில் கட்டிடக்கலை
கட்டடக் கலைஞர்:சிச்சா

இந்தக் கோயில் சந்தேல மன்னன் தங்கனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பொ.ச. 999 அல்லது 1002-இல் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம். இதன் கட்டிடக்கலை பாணி பழைய இலக்குமணன் கோயில் மற்றும் புதிய கந்தாரிய மகாதேவர் கோயில் போன்று உள்ளது. இங்கு பல்வேறு தெய்வங்கள், சுரசுந்தரிகள் (வான கன்னிகள்), காதல் செய்யும் இணைகள், புராண உயிரினங்களின் பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது.

வரலாறு தொகு

தற்போது இக்கோயிலின் தாழ்வாரத்திலுள்ள ஒரு கல்வெட்டு, சந்தேல மன்னன் தங்கனால் சிவனுக்குக் கோயில் கட்டியது பற்றிய தகவலை வழங்குகிறது. [1] கல்வெட்டின் அசல் தேதி 1056 விக்ரம் நாட்காட்டி (999 பொ.ச.) [2] அல்லது 1059 வி.நா (1002 ) என பலவாறு படிக்கப்படுகிறது. [3]

விக்ரம் நாட்காட்டி 1173இல் தங்கனின் வழித்தோன்றலான செயவர்மன் தெளிவான எழுத்துக்களில் மீண்டும் எழுதப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. தங்கன் இரண்டு இலிங்கங்களுடன் ஒரு அற்புதமான சிவன் கோயிலைக் கட்டினார் என்று அது கூறுகிறது.[4] மரகதத்தால் ஆன மரகதேசுவரர் இலிங்கமும், கல்லால் ஆன பிரமதநதன் என்ற மற்றொரு இலிங்கமும் இங்குள்ளது. [5] தங்கனின் மரணத்திற்குப் பிறகு இந்த கல்வெட்டு வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த தங்கன் கங்கையிலும், யமுனையின் நீரிலும் மூழ்கி வீடுபேறு அடைந்ததாகக் கூறுகிறது. வேறு சில சந்தேலக் கோயில் கல்வெட்டுகளைப் போலல்லாமல், இது கூர்ஜர-பிரதிகார அதிபதிகளைப் பற்றி குறிப்பிடவில்லை. இந்த நேரத்தில் சந்தேலர்கள், பிரதிகாரர்களின் அடிமைகளாக இருக்கவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. மரகத லிங்கத்தைப் பற்றிய குறிப்பு (ஒருவேளை மரகதம் பதித்த இலிங்கம்) இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கிறது. புராணங்களின்படி, நகைகள் பதித்த இலிங்கம், ஆசை நிறைவேறியவுடன் செய்யப்படும் தானமாகும். ஒரு இறையாண்மையாக உயர்ந்த அரசியல் அந்தஸ்தைப் பெற்ற பிறகு தங்கன் கோயிலைக் கட்டினார் என்று இது அறிவுறுத்துகிறது.

இந்தக் கல்வெட்டின் அடிப்படையில், இக்கோயில் பொ.ச. 999 [6] [7] அல்லது 1002-இல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். [8] [9] இருப்பினும், கலை வரலாற்றாசிரியர் சோபிதா புஞ்சாவின் கூற்றுப்படி, இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் விசுவநாதர் கோயிலாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அவரது கூற்றுப்படி, தங்கன் இரண்டு கோயில்களைக் கட்டியிருக்கலாம்: ஒன்று கல் இலிங்கம் மற்றும் மற்றொன்று மரகத இலிங்கம்.[1]

கல்வெட்டு, சிச்சா (அல்லது சிக்கா) என்பவரை கோயிலின் கட்டிடக் கலைஞராகக் குறிப்பிடுகிறது. கோயிலின் தோரணம் (வாசல்) கட்டிடக் கலைஞரின் உடலில் நுழைந்த விசுவகர்மனால் (பாண்டவர்களுக்காக, புதிய நகரை நிர்மாணித்த, கட்டிடக்கலையின் கடவுள்) வடிவமைக்கப்பட்டது என்று அது கூறுகிறது.

கட்டிடக்கலை தொகு

விசுவநாதர் கோயில் மத்திய இந்திய கட்டிடக்கலை பாணியின் சிறப்பியல்பாகும். இது இலக்குமணன் கோயிலில் (சுமார் பொ.ச.930-950) தொடங்கி கந்தாரிய மகாதேவர் கோயிலுடன் (பொ.ச. 1030) முடிவடைகிறது. இந்த மூன்று கோயில்களும் கஜுராஹோவில் மிகவும் முழுமையாக வளர்ந்த பாணியைக் குறிக்கின்றன.

கோயிலின் தளம் பஞ்சயாதன வளாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு சிறிய துணை கோவில்களால் சூழப்பட்ட ஒரு முக்கிய சன்னதியை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், இரண்டு சிறிய கோவில்கள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளன. பிரதான சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கஜூரஹோ நந்திக்கோவில், அதன் கிழக்கே சிவனின் வாகனமாகவும் கருதப்படும் நந்தி தேவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் 2.2 மீ உயரமுள்ள சிலை பிரதான சன்னதியை எதிர்கொள்கிறது.[10] தென்மேற்கில் உள்ள சன்னதி சிவனின் மனைவி பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பார்வதி கோவில் பகுதி சேதமடைந்துள்ளது. அதன் கர்ப்பக்கிருகமும் விமானமும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. கருவறையில் பேரோந்தி (உடும்பு) மீது பார்வதியின் சிலை உள்ளது.[11]

இரண்டு துணை சன்னதிகளுடன் கூடிய பிரதான ஆலயம்

பிரதான சன்னதி இந்துக் கோயில் கட்டிடக்கலை பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது கோபுரத்துடன் ஒரு நுழைவு மண்டபம், ஒரு சிறிய மண்டபம், ஒரு பெரிய மண்டபம், ஒரு முன்மண்டபம் ஒரு கர்ப்பகிருகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [11] இவை அனைத்தும் பல சிற்பங்களுடன் கூடிய அடித்தளத்தில் அமைந்துள்ளன. அடிவாரத்திலிருந்து தாழ்வாரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஒருபுறம் சிங்கங்களும், மறுபுறம் யானைகளும் உள்ளன. பிரதான சன்னதியின் செவ்வகத் திட்டம் 27.5 மீட்டர் (90 அடி) x 13.7 மீட்டர் (45 அடி) ஆகும். [11]

கருவறையில் கல் இலிங்கம் உள்ளது; கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மரகத இலிங்கம் காணவில்லை.[12] இலிங்கம் பரிக்ரமா (சுற்றம்) செய்வதற்கான பாதையால் சூழப்பட்டுள்ளது. கருவறையில் வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்காகவும் மூன்று பக்கங்களிலும் மேல்மாடங்கள் உள்ளன. [11] கட்டுமானத்தில் மணற்கல் முக்கிய கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. [13]

சிற்பங்கள் தொகு

கோயிலின் அடிவாரத்தில் சப்தகன்னியர், பார்வதி, நடனமாடும் பிள்ளையார் ஆகியக் கடவுள்களின் சிற்பங்கள் பல இடங்களில் உள்ளன. [11] [13]

அடித்தளத்திற்கு மேலே உள்ள வெளிப்புறப் பகுதியில் பல்வேறு தெய்வங்களின் சிற்பங்கள், சுரசுந்தரிகள் (பெண் உருவங்கள்) அரம்பையர்கள், புராண உயிரினங்கள் போன்றவைகள் செதுக்கப்பட்டுள்ளன. சுரசுந்தரிகள் தங்கள் நெற்றியில் குங்குமம் இடுவது, கண்ணில் மை பூசுவது, குளித்தபின் தலைமுடியை கோதுவது, புல்லாங்குழல் வாசிப்பது, காலில் முள்ளைப் பிடுங்குவது, நடனம் ஆடுவது, தங்களைப் போற்றுவது, ஒரு கண்ணாடி, ஆடை அணிதல் அல்லது வெறுமனே ஆத்திரமூட்டும் வகையில் தோற்றமளித்தல் எனப் பல்வேறு அன்றாடச் செயல்களைச் செய்து காட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் சிகை அலங்காரங்கள், வடிவமைக்கப்பட்ட ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் வெளிப்படையான முகங்கள் இந்த சிற்பங்களில் கவனிக்கத்தக்கவை.[11] [13]

கர்ப்பகிருகத்திலுள்ள செதுக்கல்களை வரலாற்றாளர்கள் அலி ஜாவித்தும், தபசும் ஜாவீத்தும் "கஜுராஹோவில் உள்ள பெண்களின் மிகவும் குறிப்பிடத்தக்க செதுக்கல்கள்" என்று அழைக்கின்றனர். [13] ஒரு உருவத்தில், ஒரு சுரசுந்தரி புல்லாங்குழல் வாசிப்பதைக் காட்டுகிறது. அவளுடைய உடல் சற்று பக்கவாட்டில் வளைந்து, பெண் உடலை வெளிப்படுத்துகிறது. பகுதி சேதமடைந்த மற்றொரு உருவத்தில், நடனமாடும் நிலையில் ஒரு பெண்மணியைக் காட்டுகிறது. ஒரு சிற்பம் ஒரு தாய் தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது: அவள் குழந்தையை இடுப்பில் உட்கார வைப்பதற்காக அவள் சற்று பக்கவாட்டாக வளைந்து நிற்கிறாள். மற்றொன்று, ஒரு பெண் தன் இடது பாதத்தை தனக்குப் பின்னால் தூக்கி, அதன் மீது சாயம் பூசுவதைக் காட்டுகிறது. இன்னொரு உருவத்தில், ஒரு பெண் தனது முதுகுக்குப் பின்னால் தனது மார்பு கச்சையைக் கட்ட முயற்சிப்பதைக் காட்டுகிறது. முறுக்கப்பட்ட உடல் அவளது வளைவுகளை வெளிப்படுத்துகிறது. [13]

கோவிலின் வடக்கு மற்றும் தெற்குச் சுவர்களில் சிற்றின்பப் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றான. [11] முன்மண்டபம் மற்றும் கருவறையின் சந்திப்பு புதிய கந்தாரிய மகாதேவர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற "சிற்றின்ப சிற்பங்களின்" மாறுபாட்டைக் கொண்டுள்ளது. கந்தாரிய சிற்பத்தைப் போலவே, இதுவும் இரண்டு பெண்கள் கட்டித் தழுவுவது போன்ற சிலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சிற்பத்தில், ஆண் சிலை மேலே உள்ளது. கீழே உள்ள பெண் ஒரு கையால் இடதுபுறத்தில் உள்ள பெண்ணை விரல்களால் தூண்டுகிறார். அதே நேரத்தில் அச்சிலையின் மற்றொரு கை ஆதரவிற்காக தரையைத் தாங்கி நிற்கிறது. சில சிற்பங்களில் ஆண்கள் மிருகத்தனமாக பாலியலில் ஈடுபடும்போது பெண்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டு இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது.[13]

உட்புறத்தில் அனைத்து அறைகளிலும் முகத் தூண்கள் உள்ளன. உச்சியிலும், அதை ஆதரிக்கும் அடைப்புக்களிலும் நுணுக்கமாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [11] இருப்பினும், பெரிய மண்டபத்தில் உள்ள அடைப்புகளிலிருந்த உருவங்கள் இப்போது மோசமான நிலையில் காணப்படுகின்றன.[13]

சிற்றின்ப சிற்பங்களின் விளக்கங்கள் தொகு

சிற்றின்ப சிற்பங்களுக்கு பல்வேறு விளக்கங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. காலனித்துவ கலை நிர்வாகி எர்னஸ்ட் பி. ஹேவெல் இவை இந்து சமுதாயத்தில் ஒரு நலிந்த கட்டத்தின் விளைபொருளாக கருதினார். ஒரு மாறுபட்ட பார்வை என்னவென்றால், இவை பரந்த மனப்பான்மை கொண்ட சமூகத்தின் காமசாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட கலை பாரம்பரியமாகும். [14]

இந்த சிற்பங்கள் கௌலர் மற்றும் கபாலிகர் பிரிவினரின் சடங்குகளை சித்தரிப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கலைப் பேராசிரியரான வித்யா தெகேஜியா கூறுகிறார். சிற்றின்பச் சோதனைகளை எதிர்க்கக்கூடியவர்களால் மட்டுமே இரட்சிப்பை அடைய முடியும் என்று இந்தப் பிரிவுகள் நம்பின. இத்தகைய சோதனைகளுக்கு மேல் ஒருவர் உயர முடியுமா என்பதை உணர, ஒருவர் பாதிக்கப்படாமல் இருக்கும்போதே அவற்றை அனுபவிக்க வேண்டும். எனவே, இந்த பிரிவினர், "மிகவும் கீழ்த்தரமான செயல்களில்" ஈடுபடுவதற்கு, அதிகப்படியான சந்தேல ஆட்சியாளர்களுக்கு ஒரு இறையியல் சாக்குப்போக்கு வழங்கினர். [15]

இந்திய கலை வரலாற்றாசிரியர் தேவாங்கன தேசாய் கருத்துப்படி, விசுவநாதர் மற்றும் கந்தாரிய மகாதேவர் கோயில்களில் உள்ள சிற்றின்ப சிற்பங்கள் பின்வரும் செயல்பாடுகளை செய்தன: [16]

  • இந்த சிற்பங்கள் ஆழமான, மறைவான பொருளைக் கொண்டுள்ளன: அவை சந்தியா-பாஷா (உருவகக் குறியீடு மொழி) பயன்படுத்தி "யோக-தத்துவக் கருத்தை" பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தாந்திரிகள் ( தாந்திரீகப் பயிற்சியாளர்கள்) தங்கள் நடைமுறைகளை பொது மக்களுக்கு வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய மொழியைப் பயன்படுத்தினர்.
  • இந்த உருவங்கள் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஒரு யந்திரத்தை மறைக்கிறது.
  • சன்னதியை மண்டபத்துடன் இணைக்கும் சந்திச் சுவர்களில் தம்பதிகள் உடலுறவு கொள்ளும் உருவங்கள் உள்ளன. இவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள நினைவுச்சின்னத்தை மாயமாக பாதுகாப்பதாக நம்பப்பட்டது.
  • சிற்றின்ப சிற்பங்கள் கோயிலுக்கு வராத பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கட்டிடக்கலை பேராசிரியரான பிரெட் கிளீனர், இந்த சிற்பங்கள் "வளர்ப்பு மற்றும் வாழ்க்கையின் இனப்பெருக்கம் மற்றும் புனிதமான கோவிலின் மங்களகரமான பாதுகாவலர்களாக செயல்படுகின்றன" என்று நம்புகிறார். [17] மார்கரெட் புரோஸ்ஸர் ஆலன், டெலாவேர் பல்கலைக்கழக கல்வியாளர், சிற்றின்ப சிற்பங்கள் மனித வாழ்க்கையின் நோக்கத்தை சித்தரிக்கின்றன என்கிறார். இந்த சித்தரிப்பு பிரபஞ்சம் "ஆண் மற்றும் பெண் கூறுகளின் அண்ட ஒன்றியத்தின்" விளைவாகும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.[18]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Shobita Punja (2010). Khajuraho: The First Thousand Years. Penguin Books Limited. பக். 30–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85890-40-6. https://books.google.com/books?id=BZpYCwAAQBAJ&pg=PT31. 
  2. Naval Krishna (2004). The Ananda-Vana of Indian Art: Dr. Anand Krishna Felicitation Volume. Indica Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86569-48-1. https://books.google.com/books?id=b_vpAAAAMAAJ. 
  3. Vibhuti Bhushan Mishra (1973). Religious Beliefs and Practices of North India During the Early Mediaeval Period. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-03610-5. https://books.google.com/books?id=LB1qhsw10IwC&pg=PA16. 
  4. Lorenz Franz Kielhorn (1892). James Burgess (archaeologist). ed. Epigraphia Indica. 1. Archaeological Survey of India. பக். 137–139. https://books.google.com/books?id=G5dEAQAAMAAJ&pg=PA137. 
  5. Devangana Desai (1986). "Lord of Kalanjara and his Shrine of the Emerald Linga: Eleventh Century Khajuraho". Marg 39 (2). 
  6. Phanikanta Mishra (2001). Khajuraho, with latest discoveries. Sundeep Prakashan. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788175741010. https://books.google.com/books?id=guzVAAAAMAAJ. 
  7. Devangana Desai (2000). Khajuraho. Oxford University Press. பக். xvi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-565391-5. https://books.google.com/books?id=amPqAAAAMAAJ. 
  8. David Abram. The Rough Guide to India. Rough Guides. பக். 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4093-4267-0. https://books.google.com/books?id=FfKtAAAAQBAJ&pg=PT425. 
  9. Journal of the Ganganatha Jha Kendriya Sanskrit Vidyapeetha. Ganganatha Jha Kendriya Sanskrit Vidyapeetha. 1999. பக். 65. https://books.google.com/books?id=Me53AAAAIAAJ. 
  10. Ramakrishna, Lalitha (September 2018). "Grand temples of Madhya Pradesh". Tattvaloka (சிருங்கேரி: Sri Abhinava Vidyatheertha Mahaswamigal Educational Trust) XLI (6): 47–52. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-8901. 
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 11.7 . 
  12. Mitra, Sisirkumar (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120819979. https://books.google.com/books?id=irHN2UA_Z7gC&pg=PA194. 
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 13.6 Ali Javid and Tabassum Javeed (2008). World Heritage Monuments and Related Edifices in India. Algora. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780875864822. https://books.google.com/books?id=iXVNBAAAQBAJ&pg=PA204. 
  14. Shobita Punja (2010). Khajuraho: The First Thousand Years. Penguin UK. பக். 57–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789385890406. https://books.google.com/books?id=BZpYCwAAQBAJ&pg=PT57. 
  15. Vidya Dehejia (1978). Looking Again at Indian Art. Publications Division. பக். 70–71. https://books.google.com/books?id=pOsJAQAAIAAJ. 
  16. Devangana Desai (1996). The Religious Imagery of Khajuraho. Franco-Indian Research. பக். 191–193 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304114145/http://www.learn.columbia.edu/indianart/pdf/khajuraho_desai.pdf. பார்த்த நாள்: 2022-02-10. 
  17. Fred S. Kleiner (2015). Gardner's Art Through the Ages: Backpack Edition, Book C: Non-Western Art to 1300. Cengage Learning. பக். 453–454. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-305-54491-8. https://books.google.com/books?id=JJxvCgAAQBAJ&pg=PT70. 
  18. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. பக். 209–210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87413-399-8. https://books.google.com/books?id=vyXxEX5PQH8C&pg=PA209. 

வெளி இணைப்புகள் தொகு