ஹோலி

(ஹோலி பண்டிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.[2]

ஹோலி
வண்ணத் திருவிழா
ஹோலி கொண்டாட்டம்
கடைபிடிப்போர்இந்துக்கள், உலகளவில்
வகைஇந்து, கலாச்சாரம், இந்தியர்
கொண்டாட்டங்கள்இரவுக்கு முன்: ஹோலிகா தகனம்
கோலி: மற்றவர் மீது நிறம் அடித்தல், நடனம், விருந்து, கொண்டாட்டம்[1]
தொடக்கம்பல்குனா பூர்ணிமா (பௌர்ணமி) அல்லது பூரன்மாசி (முழு நிலா நாள்)
நாள்Phalguna Purnima
நிகழ்வுவருடாந்தம்

துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள். ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை (துலாந்தி) மார்ச் 11 ஆம் தேதியன்றும் ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது.

பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.

பண்டிகையின் சிறப்பு

தொகு

வைணவ இறையியலில், இரண்யகசிபு அசுரர்களின் அரசன். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இவ்வரத்தின்படி இவனை இரவிலோ பகலிலோ வீட்டிலோ வெளியிலோ மண்ணிலோ விண்ணிலோ விலங்காலோ மனிதனாலோ நடைமுறையாலோ கோட்பாட்டாலோ கொல்ல இயலாது. இதனால் இவன் செருக்கு மிகுந்து வானகத்தையும் மண்ணகத்தையும் போரிட்டு வென்றான். எவரும் கடவுளைத் தொழாமல் தன்னை வழிபடவேண்டும் என ஆணையிட்டான்.

இருந்தாலும் இவனது மகன் பிரகலாதனே திருமாலின் பற்றாளன் (பக்தன்). இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகலாதன் திருமாலை வழிபட்டு வந்தான். பிரகலாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லாத காயத்தோடு விளங்கினான். பாம்புகளுக்கு இடையில் பசியோடு ஓரறையில் தனியாக அடைத்தபோதும் உயிர்வாழ்ந்தான். தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன. இறுதியாக, பிரகலாதனை அவனது தங்கை மடியில் அமரச் செய்து தீயில் இறுத்த ஆணையிட்டான். அவள் தீயில் காப்பாக வாழும் துப்பட்டாவை அணிந்தவள். இதை பிரகலாதன் எற்று தனக்கு ஓர் ஊறும் நேராவண்ணம் காத்திடுமாறு திருமாலை வழிபட்டுத் தப்பினான்.தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பிரகலாதனை மூடவே, அவள் தீயில் மடிய, பிரகலாதன் மட்டுமே தப்பிப் பிழைத்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர். தங்கை ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.

 
இராதாவும் கோபியரும் ஹோலியை இசைக்கருவிகள் மீட்டிக் கொண்டாடல்

பின்னர் திருமால் பாதி மனித, பாதி சிங்க வடிவில், அதாவது நரசிங்க வடிவில், வந்து அந்தியிருட்டில் (பகலோ இரவோ அல்லாத நேந்ரத்தில்) வந்து, வீட்டின் தாழ்வாரப் படிகளில் (வீட்டிலோ வெளியிலோ அமையாத இடத்தில்) அவ்னை தன் மடியில் வைத்து (மண்ணிலும் விண்ணிலும் இல்லாதபடி) கருவியும் கோட்பாடும் ஆகாத தன் விரல்நகங்களால் கிழித்துக் கொன்றார்.

கண்ணன் பிறந்து வளர்ந்த விரிந்தாவனத்திலும் மதுராவிலும் இந்தத் திருவிழா 16 நாட்களுக்கு இராதா கண்ணன் தெய்வீகக் காதலைக் கொண்டாடும் அரங்கபஞ்சமி வரை கொண்டாடப்படுகிறது . கண்ணனே கோபியருடன் விளையாடி இத்திருவிழாவைப் பரவலாக்கியதாக நம்பப்படுகிறது. கண்ணன் தன் தோலின் நிறம் கருப்பாகவும் இராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தன் தாயாரிடம் பூசலிட்டதாகவும் நம்பப்படுகிறது. இதனால் அவரது தாயார் இராதைக்கு முகத்தில் வண்ணம் பூசிட முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. கொண்டாட்டங்கள் வழக்கமாக காதற்பருவமான இளவேனிற் காலத்தில் நிகழ்கின்றன.

ஹோலிப் பண்டிகை உருவானதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது. இக்கதை காதல் கடவுளான காமதேவனைப் பற்றியது. பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் பூக்கணையைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தபோது காமனின் உடல் அழிந்தது. சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் ஆற்றல் செறிந்த அவரது பார்வையைத் தாங்கமுடியாமல் காமனின் உடல் சாம்பலானது. காமனின் மனைவி ரதியின் (மனக்கிளர்ச்சி) வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார். ஆனால் உணர்வுவழி மட்டுமே அன்பை வெளிப்படுத்தக்கூடிய, ஆனால்உடல்வழி காமத்தை வெளிப்படுத்த முடியாத, அருவ உருவத்தை அவருக்கு உருவாக்கினார். இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே ஹோலிப் பெருந்தீ கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

அண்டத்தில் ஒளியின் (தேஜாவின்) திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.[3]

ஹோலியின் சடங்குகள்

தொகு

ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியதற்கான பழைய பனுவல் மேற்கோளை, 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத நாடகமான இரத்தினாவளியில் காணலாம்.[4] ஹோலியோடு பல சடங்குகள் பிணைந்துள்ளன. அவற்றில் முதலாவது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவல், நிறமும் நறுமணமும் கலந்த நீரைப் பீய்ச்சிகள் (பீச்காரிகள்) வழியாகப் பீய்ச்சுதல் ஆகியவை அமையும். இந்தப் பீய்ச்சிகள் பெரிய உறிஞ்சிகளைப் போலவோ வேகமாக நீரை வெளியேற்றும் நுண்குழல்களைப் போலவோ அமைந்திருந்தன. ஓலிமிலான், பைதாக்குகள் போன்றவற்றில் இது பல நாட்களுக்கு முன்பே தொடங்கி விழா சர்ந்தும் இராதா-கிருஷ்ணன் காப்பியக் காதல் சார்ந்தும் அமையும் பலகுழுவிசைப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஓரி எனும் நாட்டர் பாடல்களும் கூட பாடப்படுகின்றன. Aaj biraj mein Holi re rasiya, போன்ற சில செவ்வியல் பாடல்களும் பலதலைமுறைகளாக இந்நாட்டர் பாடல்களில் விரவியுள்ளன.

பல நாட்கள் முன்பாகவே, கஜ்ஜாக்கள், அப்பளங்கள், பலவகை நொறுக்குத் தீனிகள், கஞ்சிகள், மாப்பூரிகள், மாத்திரிகள், பூரணப் போலிகள், தயிர் வடைகள் ஆகியவை ஹோலி விருந்தினருக்குப் படைக்க செய்யப்படுகின்றன. ஹோலியன்று இரவு, கிளர்வூட்டும் பாற்குழைவைகளில் கலக்க, கன்னபீசுகள் எனும் பாலடைகள் பாலைக் கடைந்து செய்யப்படுகின்றன .

ஹோலிகா தகனம்: ஹோலிப் பெருந்தீ

தொகு
 
ஓலிகா தகனம் (ஹோலிப் பெருந்தீ)

இப்பண்டிகையின் முதன்மையான அழுத்தம் ஹோலிகா தகனம் அல்லது ஹோலிப் பெருந்தி மூட்டலில் குவிகிறது. பெருந்தீ மூட்டும் இம்மரபின் தோற்றம் ஒலிகா, ஓலகா, புதானா போன்ற அரக்கிகளின் எரித்தழிப்பில் தோன்றியதாகவும் சிலரால் மாடன் எரித்தழிப்பில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.

ஹோலியன்று மரபாக பெருந்தீ மூட்டுவது, இந்துமத புராணத்தின்படி பக்த பிரஹலாதனைக் கொல்ல முயற்சித்த அரக்கன் இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகாவை எரிப்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக செய்யப்படுவதாகும்.[4]

விஜயதசமி (தசரா) அன்று இராவண தகனம் செய்வது போன்று திருவிழாக்களில் உருவ பொம்மையை எரிக்கும் பிற பண்டிகைகள் ஹோலி பண்டிகை ஒத்துள்ளன. உலகம் முழுதும் பல மதங்களிலும் தீய சக்திகளின் அழிவை ஹோலிகா தகனம் போன்று குறிப்பால் உணர்த்துகிறார்கள். தற்போது பிரஜா மண்டலத்தின் சில பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உருவ பொம்மை எரிப்பது அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக அதனையொத்த பிற வடிவங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் தெரு மூலைகள், பொது இடங்கள், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மரத்தாலான உருவப் பொம்மைகளைக் காணலாம். இந்த சடங்குகளைச் செய்த பிறகு இதனை தீமூட்டி அந்தத் தீயை மக்கள் வணங்குவார்கள். அதற்கு அடுத்த நாள் இந்த வெற்றியை துலேந்தி தினமாகக் கொண்டாடுவார்கள்.

துலேந்தி

தொகு

அனைத்து வகை வண்ணங்கள் அபீர் மற்றும் குலால் போன்றவை கொண்டாட்டத்தின் முதன்மைப் பொருட்களாக உள்ளன. அடுத்து பீய்ச்சிகளைப் பயன்படுத்தி வண்ணம் கலந்த நீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த நீர் என்பது நறுமனப் பூக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றது. தேசுப் பூக்களை மரங்களிலிருந்து முதலில் பறித்து வெயிலில் காய வைத்து அரைத்துப் பின்னர் அதனுடன் நீர் சேர்த்து ஆரஞ்சு-மஞ்சள் வண்ணங்கள் கொண்ட நீராகத் தயாரிக்கின்றனர். இலட்சக்கணக்கில் கோள வடிவங்களால் மூடப்பட்ட சிவப்பு பொடி, உடனடியாக உடைக்கப்பட்டு கொண்டாட்டப் பகுதி முழுவதும் பொடியால் நிரப்பப்படும். மற்ற மரபான ஹோலிப் பொருட்கள் தற்போது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.[5]

மண்டலச் சடங்குகளும் கொண்டாட்டங்களும்

தொகு

நேபாளம்

தொகு
 
ஹோலிகா தகனம், காத்மண்டு, நேபாளம்.

நேபாளத்தில் தாஷைன் (இந்தியாவில் இது தசரா என்று அழைக்கப்படுகின்றது) மற்றும் திஹார் அல்லது தீபாவளி (இந்தியாவிலும் தீபாவளி என்றே அழைக்கப்படுகின்றது) போன்றவை போலவே ஹோலி மிக முதன்மையான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் 80% மேற்பட்ட மக்கள் இந்துக்கள்,[6] அங்கு பெரும்பாலான இந்துத் திருவிழாக்கள் தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் மதங்களைக் கடந்து ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். அதாவது முஸ்லீம்கள் கூட இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவர்கள் கூட அவர்களின் லெண்ட் நேரத்தில் ஹோலி வந்தபோதும் அதனைக் கொண்டாடுவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஹோலி தினம் நேபாளத்தில் தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

மக்கள் வெளிவந்து தங்கள் அருகில் குடியிருப்பவர்களுடன் ஒருவொருக்கொருவர் நிறங்களைத் தூவுதல் மற்றும் நீரைப் பீய்ச்சுதல் மூலம் ஹோலியைக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் லோலா (நீரடைக்கப்பட்ட பலூன் எனப் பொருள்படும்) எனப்படும் நீரடைக்கப்பட்ட பலூனை வீசிக்கொள்வது மிகவும் பரவலான செயல்பாடுகளில் ஒன்றாகும். மேலும் பலர் மக்கள் தங்கள் அருந்தும் பானத்திலும் உணவிலும் 'பாங்க்' (கடைந்த பாற்பாகைக்) கலந்து சிவராத்திரியைக் கடைபிடிப்பார்கள். இத்திருவிழாவின் போது வெவ்வேறு வண்ணங்களின் கலவையில் விளையாடுவதால் அனைத்துக் கவலைகளும் கலைந்து வாழ்க்கை மிகவும் வண்ணமயமாக மாறும் என நம்பப்படுகிறது.

இந்தியா

தொகு
பஞ்சாப்

பஞ்சாபில் சீக்கியர்கள் இதே போன்ற பண்டிகையை ஹோலா மொஹல்லா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகை அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உண்மையில் அனந்தபூர் சாஹிப் ஹோலி கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒன்றாகும். வெளிநாட்டு மக்கள் கூட பஞ்சாப் சென்று வடக்கத்திய முறையில் ஹோலி கொண்டாடுகிறார்கள்.

உத்தரப் பிரதேசம்

ஹோலி சமயத்தில் பார்சானா என்ற இடத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்கு பெயர்பெற்ற இலத் மர் ஹோலியானது ராதா ராணி கோவிலின் நீண்ட வளாகத்தில் கொண்டாடப்படுகின்றது. இலத் மர் ஹோலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் பெண்கள் ஆண்களைத் தடியால் அடிப்பார்கள். மேலும் உணர்ச்சிப்பூர்வமாக ஹோலி பாடல்களைப் பாடுவார்கள் அல்லது ஸ்ரீ ராதே அல்லது ஸ்ரீ கிருஷ்ணா என உரக்கக் கூறுவார்கள். பிரஜ் மண்டலத்தில் பாடப்படும் ஹோலி பாடல்கள் தூய பிரஜ் மொழியில் பாடப்படுகின்றன.

பர்சானாவில் கொண்டாடப்படும் ஹோலியில் பெண்கள் ஆண்களைத் தடிகளுடன் விரட்டுவது தனித்துவமான ஒன்றாகும். ஆண்கள் கூட பெண்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களை அழைக்கும் விதமாக தூண்டல் பாடல்களைப் பாடுவார்கள். பெண்கள் அதை எதிர்க்கும் விதமாக இலத்தி எனப்படும் நீண்ட தடிகளைக் கொண்டு அடிபட முடியாதபடி தடுப்புக்க வசத்தை அணிந்துள்ள ஆண்களை அடிப்பார்கள்.

உ.பி.யில் உள்ள சுல்தான்பூரில் ஹோலி வேடிக்கையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்குள்ள அனைத்து ஊர்களின் மக்களும் ஒன்றிணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கிருஷ்ண பகவான் பிறந்த இடமான மதுரா, விருந்தாவன் ஆகிய இடங்களில், இந்நாட்களில் மரபுப்படி சிறப்புப் பூசைகளைச் செய்து பகவான் கிருஷ்ணரை வணங்குகிறார்கள். இங்கு திருவிழா பதினாறு நாட்களில் நிறைவடைகிறது.[2] பிரஜ் மண்டலம் முழுதும் மற்றும் அதன் அருகிலுள்ள ஹத்ராசு, அலிகார், ஆக்ரா போன்ற பகுதிகளில் ஏறக்குறைய மதுரை, விருந்தாவன், பார்சானாவில் கொண்டாடப்படுவது போன்றே ஹோலி கொண்டாடப்படுகின்றது.

உத்திரப் பிரதேசத்தின் வடகிழக்கு மாவட்டமான கோரக்பூரில் இந்நாள் ஹோலி தினமாகக் காலையில் சிறப்பு பூசைகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மிகவும் மகிழ்ச்சியான, வண்ணமயமான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது "ஹோலி மிலன்" எனப்படுகிறது. இதில் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஹோலி பாடல்களைப் பாடி நிறப்பொடிகளைப் (அபீர்) பூசுவதன் மூலம் தங்கள் நல்லுணர்வினை வெளிப்படுத்துகிறார்கள். இந்துக்களின் நாள்காட்டிப்படி ஆண்டின் கடைசி பங்குனி மாதத்தின் இறுதி நாளில் ஹோலி வருவதாகவும் கருதப்படுகின்றது. ஹோலியன்று மக்கள் மாலையில் புது ஆண்டு இந்து நாள்காட்டியுடன் (பஞ்சாங்கம்) அடுத்த ஆண்டிற்கான திட்டமிடுதலில் ஈடுபடுவார்கள்.

 
இராசத்தானில் உள்ள புஷ்கரில் நிகழும் ஹோலி கொண்டாட்டங்கள்.
பீகார்

பீகாரில் மற்ற வட இந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படும் அதே புத்துணர்வுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இங்கும் ஹோலிகா பற்றிய பாரம்பரியக் கதைகள் பொதுவாகவே உள்ளன. பங்குனி மாதத்தின் பெளர்ணமி மாலையில் மக்கள் நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் சாண வரட்டிகள், அராட் அல்லது ரேடி, ஹோலிகா மரக்கட்டைகள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள்,தேவையற்ற காய்ந்த இலைகள் ஆகியவற்றை அந்த நெருப்பில் போட்டு எரிப்பார்கள். தொடர்ந்து மரபைக் கடைபிடிக்கும் மக்கள் தங்கள் வீட்டினை அந்நாளில் தூய்மைப்படுத்துவார்கள்.

ஹோலிகா சமயத்தில் மக்கள் நெருப்புக்கு அருகில் ஒன்று கூடுவார்கள். அங்குள்ள மூத்த குடிமகன் அல்லது புரோகிதர் தீபமேற்றுவார். பின்னர் அவர் மற்றவர்களையும் அழைக்கும் விதமாக மற்றவர்கள் மீது வண்ணங்களைப் பூசுகிறார். பண்டிகையின் அடுத்த நாள் வண்ணங்களுடனும் நிறைய கேளிக்கைகளுடனும் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களும் இளைஞர்களும் இந்த திருவிழாவில் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகின்றனர். பொதுவாக இத்திருவிழா வண்ணங்களுடனே கொண்டாடப்பட்டபோதும் சில இடங்களில் மக்கள் சகதிகளிலும் ஹோலியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். நாட்டுப்புறப்பாடல்கள் உரத்த பண்களில் பாடப்படும். மேலும் மக்கள் மத்தள (டோலக்) இசைக்கேற்ப ஹோலியின் ஆர்வத்தில் நடனமாடுவார்கள்.

திருவிழா மனநிலையைப் பெருகச் செய்ய, கடைந்த பாற்பாகு (பாங்க் பகோராஸ்), தண்டை போன்ற சுவைமிக்க பல்வேறு பண்டங்களை கலந்து உண்பர்.

வங்காளம்

டோல் பூர்ணிமா தினத்தன்று அதிகாலையில், மாணவர்கள் குங்குமப்பூ நிறத்தில் ஆடைகளை உடுத்தி நறுமணமிக்க பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவார்கள். அவர்கள் ஏக்தரா, டூப்ரி, வீணை போன்ற இசைக் கருவிகளை இசைத்து பாடிக்கொண்டே நடனமாடுவார்கள். அது பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். மேலும் அந்த நினைவுகள் பல ஆண்டுகட்கு நினைவில் இருக்கும்.

ஹோலிப் பண்டிகை 'டோல் ஜத்ரா', 'டோல் பூர்ணிமா' அல்லது 'வசந்தகாலத் திருவிழா' போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. திருவிழாவில் கிருஷ்ணா மற்றும் ராதாவின் சிலைகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நகரம் அல்லது ஊரில் உள்ள முதன்மையான தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு சென்று மிகவும் கண்ணியமான முறையில் கொண்டாடுவர். பக்தர்கள் அச்சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஊஞ்சலாட்டுவார்கள். அப்பொழுது பெண்கள் அவற்றைச் சுற்றி நடனமாடிப் பக்திப்பாடல்களைப் பாடுவார்கள். அப்போது ஆண்கள் அவர்களின் மீது வண்ணம் கலந்த நீரைப் பீய்ச்சி அபீர் எனும் நிறப்பொடிகளைத் தூவுவர்.

வீட்டின் தலைவர் கிருஷ்ண பகவான் மற்றும் அக்னிதேவனை வணங்கி நோன்பு இருப்பார். பின்னர் அவர் கிருஷ்ணர் சிலையில் குலால் நிறங்களைப் பூசி, கிருஷ்ணர் மற்றும் அக்னிதேவனுக்கு "போக்" எனப்படும் படையலைப் படைப்பார். இதன் பிறகு மரபான சடங்குகள் நடைபெறும்.

சாந்திநிகேதனில் ஹோலிப் பண்டிகை சிறப்பான இசையைக் கொண்டுள்ளது.

மால்போவா, கீர் சந்தேஷ், பாசந்தி சந்தேஷ் (குங்குமப்பூ உடன்),குங்குமப்பூ பால், பாயசம் உள்ளிட்டவை மரபான பண்டங்கள் ஆகும்.

ஒரிசா

ஒரிசா மக்களும் ஹோலியை இதே விதமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அங்கு கிருஷ்ணர், இராதை சிலைகளுக்கு பதிலாக பூரியில் உள்ள ஆலயத்தின் கடவுளான ஜகந்நாதர் சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

குஜராத்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிறங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றது. பங்குனி மாதத்தின் முழு நிலவு நாளில் வரும் முதன்மை இந்துத் திருவிழாவான ஹோலிப் பண்டிகை குளிர்கால வேளாண் அறுவடை காலத்தின் அறிகுறியாகும்.

கிராமங்களின் முக்கிய இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நெருப்பு மூட்டப்படும். தீமை அழிந்து நன்மை வெற்றியடைந்ததின் அறிகுறியான நெருப்பு மூட்டும் நிகழ்வை மக்கள் பாட்டுபாடி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஹோலியை மிகுந்த ஆர்வத்தோடு நெருப்பைச் சுற்றி நடனமாடிக் கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ணனும் மற்ற மாடு மேய்க்கும் சிறுவர்களும் வெண்ணெய் திருடியதையும் மற்ற 'கோபியர்கள்' அதை தடுக்க முயன்றதையும் நினைவு கூறும் வகையில் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் தெருவில் உயரத்தில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் வெண்ணெய் நிரம்பிய பானையை ஆண்கள் மனிதப் பிரமிடுகள் மூலமாக அடைந்து அதை உடைக்க முயற்சிப்பார்கள். அச்சமயம் பெண்கள் நிறம் கலந்த நீரை அவர்கள் மீது தெளித்து அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். இந்த நேரத்தில் கிருஷ்ணர் தங்கள் வீடுகளுக்கு வெண்ணெய் திருடுவதற்காக வரலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறங்களால் நனைக்கப்பட்ட ஆண்கள் பெரிய ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கேலி செய்யப்படுவார்கள். இறுதியாக பானையை உடைப்பவரே அந்தச் சமூகத்தில் அந்த ஆண்டின் ஹோலி மன்னனாக முடிசூட்டப்படுவார்.

பல இடங்களில், கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வழக்கப்படி தங்கள் சகோதரியின் கணவர் மீது கேலியான சினம்கொண்டு தங்கள் சேலையில் கயிற்றைச் சுற்றி அதில் அவர்களை அடிப்பார்கள். மேலும் அவரை நிறங்களால் அமிழ்த்த முயற்சிப்பார்கள், மாறாக சகோதரியின் கணவர் மாலையில் இனிப்புப் பண்டங்களை அவர்களுக்குக் கொடுப்பார்.


மகாராட்டிரம்

மகாராட்டிரத்தில் ஹோலிப் பண்டிகை முக்கியமாக ஹோலிகாவை எரிப்பது தொடர்புடையதாகவே இருக்கின்றது. ஹோலி பெளர்ணமி இங்கு சிம்கா எனவும் கொண்டாடப்படுகிறது. திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இளைஞர்கள் சுற்றியுள்ள இடங்களுக்கு சென்று விறகுக் கட்டைகள், பணம் போன்றவற்றைச் சேகரிக்கின்றனர். ஹோலி தினத்தன்று சுற்றுப்புறத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அனைத்து விறகுக் கட்டைகளும் பெரிய குவியலாக அடுக்கி வைக்கப்படுகின்றன. மாலையில் அவற்றிற்கு நெருப்பு மூட்டப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டாரும் இனிப்புகளும் முழுமையான உணவுகளும் தயார் செய்து அக்னிக் கடவுளுக்குப் படைப்பார்கள். பூரன் போலி என்பது இங்கு முதன்மையான உணவுப் பண்டமாகும். மேலும் சிறுவர்கள் " ஹோலி ரே ஹொலி புரானச்சி போலி " எனக் கத்துவார்கள். சிம்கா அனைத்து தீமைகளையும் அழித்தலுடன் தொடர்புடையது. வட இந்தியாவைப் போல் இரண்டாவது நாளில் வண்ணங்களைக் கொண்டு கொண்டாடாமல், இங்கு மரபான அரங்கபஞ்சமி அன்று வண்ணங்களுடன் கொண்டாடப்படுகின்றது.

மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மணிப்பூர்வாசிகள் ஹோலிப் பண்டிகையை ஆறு நாட்கள் கொண்டாடுகின்றனர். இது வைணவ மதத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பண்டிகையான யாசாங்குடன் இணைந்துவிட்டது. மரபுவழியில், பங்குனி முழுநிலவு இரவில், 'தாபல் சோங்க்பா' என்றழைக்கப்படும் ஒரு குழு நாட்டுப்புற நடனமும் அதனோடு கூட நாட்டுப்புறப் பாடல்களும் பாடுவர்; உள்ளூரைச் சார்ந்த மேளக்காரர்களின் பண்ணுக்கேற்ற தாளங்களையும் இளைஞர்கள் இரவில் நிகழ்த்துவார்கள். இருப்பினும் இப்போது இந்த நிலவொளிக் கொண்டாட்டம் நவீன இசைக்குழுக்களையும் ஒளிர் விளக்குகளையும் கொண்டிருக்கின்றன. கொண்டாட்டத்திற்கு எரியவிடுவதற்காக கொப்புகளும் வைக்கோலும் வைத்துக் கட்டிய கூரை வேய்ந்த குடிசையும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆண்கள், தங்களோடு சேர்ந்து 'குலால்' விளையாடுவதற்காகப் பெண்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும். கிருஷ்ணர் கோவில்களில் பக்தர்கள் வெள்ளை, மஞ்சள் நிற மரபான தலைப்பாகைகளை அணிந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியும் நடனங்கள் ஆடியும் 'குலால்' விளையாடுகின்றனர். பண்டிகையின் கடைசி நாளின் போது இம்பாலுக்கு அருகில் இருக்கும் முக்கிய கிருஷ்ணர் கோவிலிற்குச் செல்ல பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும்; அங்கு பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

தென்னிந்தியா

கொச்சியிலுள்ள மட்டன்சேரி பகுதியில் 22 வேறுபட்ட சமுதாயத்தினர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்கின்றனர். மேலும் மேற்குக் கொச்சியிலிருக்கும் சேர்லை பகுதியில் கொங்கனிப் பேசும் கௌட சாரஸ்வாத் பிராமணர்களும் (GSB) ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்கள் அதை கொங்கனியில் உக்குளி என்றும் அல்லது மலையாளத்தில் மஞ்சள் குளி என்றும் அழைக்கின்றனர். இது கோசரிபுரம் திருமலைக் கோவில் என்றழைக்கப்படும் மதிப்புவாய்ந்த கொங்கனிக் கோவிலில் நடத்தப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டின் உக்குளி 23 மார்ச் 2008 அன்று சேர்லையில் கொண்டாடப்பட்டது. பாகல்கோட்டில் ஹோலிப் பண்டிகை இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஹோலிப் பண்டிகையன்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது. மேலும் பெங்களூரில் 2009 ஆம் ஆண்டில் டாட்டா அறிவுரைப் பணிகள், காக்னிசென்ட் தொழில்நுட்பத் தீர்வுகள் போன்ற சில பன்னாட்டுக் குழுமங்கள் ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தன. குழந்தைகளும் பெரியோர்களும் ஹோலியை ஒரே வகையில் கொண்டாடுகின்றனர்.

காஷ்மீர்

காஷ்மீரில் குடிமக்களும் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் கூட ஹோலியைக் கொண்டாடுகின்றனர். இங்கு ஹோலி என்பது கோடைப் பயிர்களை அறுவடை தொடங்குவதைக் குறிக்க மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் இப்பண்டிகை வண்ணம் கலந்த நீரையும் தூளையும் பீய்ச்சியும் எறிந்தும் பாடலோடும் ஆடலோடும் கூடக் கொண்டாடப்படுகின்றது.

 
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் இயக்கத்தினால் நடத்தப்படும் ஹோலி கொண்டாட்டங்கள்
ஹரியானா, கிராமப்புற டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம்

இந்த மண்டலமும் அதற்கு ஏற்ற ஹோலிப் பண்டிகையைக் கொண்டிருக்கின்றது. இங்கு இப்பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கொண்டாடப்படுகின்றது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

தொகு

ஆண்டுகள் செல்ல செல்ல ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிற்கு அருகிலிருக்கும் நாடுகள் போன்ற பல பகுதிகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஹோலி முக்கியமான பண்டிகையாகிவிட்டது.[7]

மரபான ஹோலி

தொகு
 
தக் அல்லது பலாஷ் பூக்கள் மரபு வண்ணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன

வசந்த காலப் பருவ மாற்றத்தின்போது நச்சுயிரி சார்ந்த காய்ச்சலும் சளியும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எறிவதால் உண்டாகும் மருத்துவப் பயன்கள் கிடைப்பதால், இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைச் செய்யப்படும் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், மற்ற மருத்துவ மூலிகைகளினால் மரபு முறையில் செய்யப்படுகின்றன.

இப்பண்டிகையின் போது தண்டை என்றழைக்கப்படும் ஓரு சிறப்பு பானம் செய்யப்படும். சிலநேரங்களில் அதில் பாற்பாகைக் (கான்னாபீசு சதிவாவுடன் ) கலந்து தருவர். ஈர வண்ணங்களுக்காக மஞ்சள் வண்ண நீரைத் தயாரிக்க, பாரம்பரிய பலாஷ் மலர்களைக் கொதிக்கவைத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைப்பர். இதுவும் மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இக்கொண்டாட்டத்தின் வணிகநோக்குப் பார்வை, செயற்கை வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. இது சில நேரங்களில் நஞ்சாகவும்கூட இருக்கலாம்.

செயற்கை வண்ணங்கள்

தொகு
 
இளைஞர்கள் ஹோலி கொண்டாடுகிறார்கள்

முன்பு ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த இளவேனிற்காலத்தில் அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாகத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைச் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 2001 ஆம் ஆண்டில் தில்லியில் இருக்கும் நச்சுத் தொடர்பு இயக்கம், வட்டவரன் போன்ற சூழல் ஆர்வக் குழுக்களால் பண்டிகையில் பயன்படுத்தப்படும் வேதி சாயங்களைப் பற்றிய ஒரு உண்மை அறிக்கை வெளியிடப்பட்டது.[8] அவர்கள் கண்டுபிடித்த ஆய்வில் ஹோலி நிறங்கள் தயாரிக்கப்படும் அனைத்து மூன்று முறைகளிலும் உள்ள பாதுகாப்பு சிக்கல்களாக பசைகள், உலர்வண்ணங்கள், நீர்வண்ணங்கள் ஆகியவை பயன்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.

பசைகளை ஆய்வு செய்கையில், உடல்நலக்கேட்டை அதிகம் உண்டாக்கக்கூடிய நச்சு நிறைந்த வேதிப் பொருட்களை அவர்கள் கண்டுபிடித்தனர். கருப்புப் பசைகளில் சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்கக்கூடிய காரீய ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது. காசினோசனிக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்ட இரண்டு நிறங்களாக அலுமினியம் புரோமைடைக் கொண்ட வெள்ளி, பாதரச சல்பேட்டைக் கொண்ட சிவப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. நீலப் பசையில் பயன்படுத்தப்படுகின்ற பிரசியன் நீலம் அயற்பொருளைத் தொடும்போது உண்டாகும் தோலழற்சியை உண்டாக்குகிறது. பச்சையில் இருக்கும் மயில் துத்தம் கண் ஒவ்வாமை, அதைப்பு, தற்காலிகக் குருட்டுத் தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது.[9]

குலால்சு என்றும் அழைக்கப்படும் உலர்ந்த நிறங்களில் அதிக எடையுள்ள உலோகங்களுடன் பயன்படுத்தப்படுகின்ற நிறங்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள், தற்காலிக குருட்டுத்தன்மை ஆகியவற்ரை விளைவிக்கும் நச்சு நிறைந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்படும் கல்நார் அல்லது சிலிக்கா ஆகிய இரண்டும் உடல்நலக் சிக்கல்களை உண்டாக்குவன.[10]

செந்தியன் ஊதா நிற மூலப்பொருட்களை ஈரமான வண்ணங்களில் பயன்படுத்துவதால் அவை தோல் நிறமாற்றம் தோல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று அறியப்பட்டுள்ளது.

அவை எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது பற்றியே தெரியாத வணிகரால் அடிக்கடி விற்கப்படுவதால் இந்த வண்ணங்களின் தரத்தையும் மூலப்பொருள்களையும் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

ஹோலியை இயற்கையான முறையில் கொண்டாடுவதற்காக இந்த அறிக்கை சில குழுக்களை ஊக்கப்படுத்தியது. டெல்லியிலுள்ள மேம்பாட்டிற்கான மாற்றுகள், பூனாவிலுள்ள கல்பவிருட்சம்,[11] கிளின் இந்தியா பரப்புரை[12] ஆகியவை சேர்ந்து பாதுகாப்பான இயற்கையான மூலபொருட்களிலிருந்து குழந்தைகள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வண்ணங்களைத் தயாரிப்பதற்குக் கற்றுக்கொள்ள உதவுவதற்கான பரப்புரைகளைத் தொடங்கினார்கள். அதேசமயத்தில் தேசியத் தாவர ஆராய்ச்சி நிறுவனம் போன்ற சில வணீக நிறுவனங்கள் "மூலிகை" சாயங்களைக் கொடிய மாற்றுக்களை விட விலை அதிகமாக இருந்தபோதிலும் அவற்றை விற்பனை செய்யத் தொடங்கி விட்டன. எனினும் இந்தியக் கிராமப்புறங்களின் பெரும்பகுதிகளில் இயற்கையான வண்ணங்களின் கிடைக்கும் தன்மையைப் பொருத்து, அவற்றைப் பயன்படுத்துவதை (வண்ணங்களைவிட கொண்டாட்டத்தின் மற்ற பகுதிகளில்) எப்போதும் கடைசி முயற்சியாகத்தான் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய ஹோலிகா தகனம் கொண்டாட்டத்திற்காக உண்டாக்கும் நெருப்பே, ஹோலி கொண்டாட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும். இந்த நிகழ்வு வன அழிப்புக்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. ஒரே ஒரு காலகட்டத்தில் மட்டும் 30,000 விழவெரித் தீக்கள் உண்டாக்கப்படுவதால் ஏற்படும் ஒவ்வொரு நெருப்பிலும் தோராயமாக 100 கி.கி மரக்கட்டைகள் எரிக்கப்படுகின்றன என்று உள்ளூர் சிறுபக்கச் செய்தித்தாளில் ஒன்றில் கருத்துரை வெளியிடப்பட்டது. இந்த மரக்கட்டை பயன்பாட்டைத் தடுப்பதற்காக மரக்கட்டைகளுக்கு பதிலாக தேவையில்லாத பொருட்களை எரித்தல் அல்லது ஒரே சமூகத்தினர் பல சிறிய நெருப்புக்களை மூட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு நெருப்பை மூட்டுதல் உள்ளிட்ட பல வழிமுறைமைகள் முன்மொழிப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதும் ஏதோ ஒரு சில சமுதாயத்தின் முக்கியப் பிரிவினர், மற்ற இடங்களில் கொண்டாடப்படும் இதே போன்ற கொண்டாட்டங்களில் பல எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டி தேவையில்லாத பொருட்களை எரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Rituals of Holi Society for the Confluence of Festivals in India (2010)
  2. 2.0 2.1 ஹோலி - நிறங்களின் பண்டிகை பரணிடப்பட்டது 2016-02-01 at the வந்தவழி இயந்திரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்
  3. ஹோலி பற்றிய தகவல்
  4. 4.0 4.1 ஹோலியின் பிறப்பிடம் BBC
  5. நிறங்களின் பண்டிகை BBC.
  6. "CIA - வேல்டு பேக்ட்புக் - நேபாளம்". Archived from the original on 2010-12-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. "மேற்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை". Archived from the original on 2010-02-26. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  8. Toxics Link (February 2000). The Ugly Truth Behind The Colourful World Fact sheet. 8. http://www.toxicslink.org/pub-view.php?pubnum=71 பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
  9. தோல் புற்றுநோயைத் தூண்டும் கொண்டாட்டங்கள்
  10. ஆஸ்துமா மற்றும் குருட்டுத்தன்மையைத் தூண்டும் கொண்டாட்டங்கள்
  11. பாதுகாப்பான ஹோலி பிரச்சாரம் பரணிடப்பட்டது 2007-03-26 at the வந்தவழி இயந்திரம் - கல்பவிருக்ஷ் சுற்றுசூழல் செயல்பாட்டுக் குழு, பூனா
  12. "CLEAN இந்தியா பரப்புரை". Archived from the original on 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Holi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஹோலி - காமதஹனப் பண்டிகை வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோலி&oldid=4030389" இலிருந்து மீள்விக்கப்பட்டது