ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4][5]. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.[6]

திருவாசகம் பாடல் பெற்ற
திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar temple
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்
பெயர்:திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் கோயில், புதுக்கோட்டை Tiruperundurai aavudaiyaar temple
அமைவிடம்
ஊர்:திருப்பெருந்துறை
மாவட்டம்:புதுக்கோட்டை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆத்மநாதசுவாமி, ஆவுடையார்
தாயார்:யோகாம்பாள்
தல விருட்சம்:குருந்த மரம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:திருவாசகம்
பாடியவர்கள்:மாணிக்கவாசகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:மாணிக்கவாசகர், விக்ரமாதித்ய சோழன்

இவ்வூரின் சிறப்பு

தொகு

இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது

தொகு
கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.

ஆவுடையார் கோவில்

தொகு

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால், சோழநாட்டில் நல்ல குதிரை வாங்கி வருமாறு கொடுத்த பணத்தை எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை[7] என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்

தொகு

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

தேரின் சிறப்பு

தொகு

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரியத் தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்

தொகு

இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

வடக்கயிறு

தொகு

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்

தொகு

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

பூத கணங்கள் கட்டிய கோயில்

தொகு

ஆவுடையார் கோயிலை பூதகணங்கள் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கை

தொகு

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

ஒரே கல்லிலான கற்சங்கிலி

தொகு
 
கல் வளையங்களாலான சங்கிலி

இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்

தொகு

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.

உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

படைகல்

தொகு

இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்

தொகு

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.

அணையா நெருப்பு

தொகு

6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது

தொகு

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.

இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள், தஞ்சாவூரை ஆண்ட தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், இராமனாதபுரம் சேதுபதி மன்னர்கள், சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், பாலைவன ஜமீன்தார், ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது .

உருவமற்ற அருவக் கோயில்

தொகு

தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

தேவதாரு மரம்

தொகு

மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

வற்றாத திருக்குளம்

தொகு

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

கவிபாடும் கற்சிலைகள்

தொகு

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்

தொகு

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். ʽFile:Avudayar Kovil.jpeg|கருவறை கோபுரக்காட்சிʼ

நரியைப் பரியாக்கியது

தொகு

நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும்[8][9] . இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளைநிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி

தொகு

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

தொகு

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்". Archived from the original on 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
  3. http://pudukkottai.nic.in/taluks-avkoil.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
  5. http://pudukkottai.nic.in/blocks-avkoil.htm
  6. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
  7. திருப்பெருந்துறை
  8. http://dinamani.com/edition_madurai/article1255627.ece
  9. http://www.tamilvu.org/slet/l4180/l4180uri.jsp?song_no=26&book_id=116&head_id=66&sub_id=2311

வெளி இணைப்புகள்

தொகு