ஓட்டன் சமவெளி தேசிய வனம்

ஓட்டன் சமவெளி (Horton Plains) இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக (புகலிடம்) காணப்பட்ட ஓட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான (பசுமை மாறா) மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.[2] இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.[3]

ஓட்டன் சமவெளி தேசிய வனம்
உலக முடிவு எனப்படும் இடம்
Map showing the location of ஓட்டன் சமவெளி தேசிய வனம்
Map showing the location of ஓட்டன் சமவெளி தேசிய வனம்
ஓட்டன் சமவெளி தேசிய வனம்
அமைவிடம்மத்திய மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்நுவரெலியா, ஒஹிய
ஆள்கூறுகள்6°48′N 80°48′E / 6.800°N 80.800°E / 6.800; 80.800
பரப்பளவு3,160 எக்டேர்கள் (12.2 sq mi)
நிறுவப்பட்டது1969 (பாதுகாக்கப்பட்ட இயற்கைப்பகுதி)
1988 (தேசிய வனம்)
வருகையாளர்கள்150,000
நிருவாக அமைப்புவனவிலங்குத் திணைக்களம்
உலகப் பாரம்பரியக் களம்2010 (இலங்கையின் மைய உயர்நிலங்களுக்குள் அமைந்துள்ளது)[1]

வரலாறு

தொகு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக்குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி முன்னர் மகாஎலிய என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு காணப்படும் தொடுபலை மலை, இராவணன் சீதையை கடத்திக் கொண்டுவந்து தனது விமானத்தில் இருந்து தரையிரங்கிய இடம் என்பது தொன் நம்பிக்கையாகும். 10,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு வாழ்ந்த மனிதர்கள் பார்லி மற்றும் ஓட்ஸ் பயிரிட்டதற்கும் மந்தைகளை வைத்து இருந்ததற்குமான சான்றுகள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.[4] 1831 முதல் 1837 வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆளுநரான சர். வில்மட் ஓட்டன், சபரகமுவா மாகாணத்தின் தலைவருக்குமிடையில் 1836 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற சந்திப்பின் [5] பின்னர் இப்பகுதிக்கு வந்த பிரித்தானிய கப்டன். வில்லியம் பிஷ்சர், கேணல். எல்பேர்ட் வொட்சன் என்பவர்கள் இப்பகுதிக்கு ஆளுநர் சர். வில்மட் ஓட்டன் என்பாரின் பெயரை இப்பகுதிக்கு இட்டனர்[6][7]. இப்பகுதி பிரித்தானியரின் வேட்டையாடும் காடாக மாற்றப்பட்டது. 1837 ஆம் ஆண்டளவில் யானைகள் முற்றாக அழிவுற்றிருந்தன இதற்கு அப்போதைய ஆளுநரின் நடவடிக்கைகள் காரணம் எனக் கூறப்பட்டது.[2]

1961 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் விவசாய திணைக்களத்துடன் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட உருளைக்கிழங்கு பயிர் செய்கை காரணமாக ஓட்டன் சமவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக பின்னர் இத்திட்டம் கைவிடபபட்டது. இருப்பினும் பயிர்ச்செய்கை நிலங்களில் ஓட்டன் சமவெளிக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆக்கிரமித்தன. இன்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் விட்டுச் சென்ற கட்டிடங்களை இங்கு காணலாம்.[5]

புவியியல்

தொகு

ஓட்டன் சமவெளி சராசரியாக 2130 மீட்டர் உயரமான ஒரு மேட்டுநிலப்பகுதியாகும். இது அருகில் காணப்படும் மலைசார்ந்த பகுதிகளில் இருந்து சடுதியாக மேலெழுந்துக் காணப்படுகிறது. வனப்பகுதியின் உச்சியின் பெரும்பகுதி சமவெளியாக காணப்படுகிறது. இலங்கையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயரமான மலைகளான கிரிகல் பொத்தை, தொடுபலை மலைகள் வனப்பூங்காவின் எல்லைக்குள் அமைந்துள்ளன. வனப் பூங்காவின் தெற்கு எல்லையில் 700-1000 மீட்டர் செங்குத்துச் சாய்வு ஒன்று காணப்படுகிறது. இச்சாய்வு உலகமுடிவு என அழைக்கப்படுகிறது. இவ்வனம் இலங்கையின் மூன்று முக்கிய ஆறுகளான வளவை, களனி, மகாவலி ஆறுகளின் என்பவற்றின் ஆரம்ப ஆறுகளான பெலிவுல், பொகவந்தலா, அக்ரா ஆறுகள் ஓட்டன் சமவெளியில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. சமவெளியின் எல்லைக்குள் பெலிவுல் ஆற்றில் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[8]

காலநிலை

தொகு

ஓட்டன் சமவெளி இலங்கையின் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுகளிலும் பருவபெயர்ச்சியிடைக் காலத்திலும் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. ஆண்டுக்கு 2450 மில்லிமீட்டருக்கும் கூடுதலான மழைவீழ்ச்சி இப்பகுதியில் ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் மழைவீழ்ச்சி கூடிய மாதமாகும். ஜனவரி - மார்ச் வரையான காலப்பகுதி ஓரளவுக்கு மழைவீழ்ச்சி குறைவான காலப்பகுதியாகும். இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 13 பாகை செல்சியஸ் ஆகும். அதிகூடிய வெப்பநிலையாக ஆகஸ்ட் மாதத்தில் 27 பாகை செல்சியசும் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஜனவரி மாததில் 5 பாகை செல்சியசும் பதிவாகி உள்ளது. மாலை வேலைகளில் முகில் மூட்டங்கள் காணப்படும். அ [8][9] [10]

உயிரினங்கள்

தொகு
 
ஓட்டன் சம்வெளியின் பாதையருகே சாம்பர் மான்

இங்கு காணப்படும் வனங்கள் 5000 அடிக்கு மேல் உயரமான இடங்களிலுள்ள காடுகளை ஒத்ததாகும். இந்தக் காடுகள் தாவரவியலாளர் சர். ஜோசஃப் ஊக்கர் என்பவரின் முயற்சிகள் காரணமாக 1873 முதல் சிறிதளவான பாதுகாப்பைப் பெற்று வந்தன.[11] இங்கு 57 வகையான தாவரவகைகள் காணப்படுவாதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைகள் இலங்கைக்கே உரிய தாவர இனங்களாகும்.[12] இக்காடுகளில் கலோபியம் வகை (Calophyllum sp.), சிஸ்ஜியம் வகை (Syzygium sp.), இராட்சத மரப்பன்னம் (Cyathea sp.) போன்ற தாவரங்கள் முக்கியமானவையாகும். நெலு (Strobilanthes sp.), போவிட்டியா (Osbeckia sp.), பினர (Exacum trinervium) முதலிய இலங்கைக்கே உரிய மலரினங்களும் பல ஓர்கிட் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய கர்னோடியா மூங்கில்கள் (Arundinaria densifolia) ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. புல்தரைகளில் கிறிஸ்போகன் செலனிகம் (Chrysopogon zeylanicum), கர்னோடியா மியுடீகா (Garnotia mutica) வகைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.[8]

இங்கு 14 இனங்களைச் சேர்ந்த பாலூட்டி விலங்குகளும், 16-20 ஈரூடக வாழி இனங்களும், 6 ஊர்வன இனங்களும், 98 பறவையினங்களும், 2 மீனினங்களும், 20 வகையான வண்ணத்துப் பூச்சியினங்களும் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 98 பறவையினங்களில் 21 இலங்கைக்கே உரியவையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. பல பறவைகள் வேறுநாடுகளில் இருந்து குளிர்காலத்தைக் களிக்க வருபவையாகும்.[7] 70% இலங்கைக்கே உரிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு யானைகள் காணப்பட்டப் போதும் 1800களில் பிரித்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இன்று இவை அருகிவிட்டன. இங்கு 4000 சாம்பர் மான்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள் என்பன இங்கு காணப்படும் ஏனைய பெரிய பாலூட்டிகளாகும். இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப் பூனைகள் என்பனவும் இங்கு காணப்படுகின்றன.[8]

முக்கிய இடங்கள்

தொகு
 
பேர்கஸ் நீர்வீழ்ச்சி

பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி

தொகு

ஓட்டன் சமவெளிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் பார்வையிடும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது வளவை ஆற்றின் தலையாறான பெலிவுல் ஆற்றில் அமைந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது இப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய பிரித்தானியரான சர். சமுயெல் பேர்கஸ் என்பரின் நினவாக பெயரிடப்பட்டுள்ளது.[13] இங்கு மக்கள் நீராடுதல் பொதுவான காட்சியாகும், இருப்பினும் இங்குள்ள நீர் வெப்பநிலை குறைவானதால் அவதானத்துடன் இருப்பது முக்கியமாகும்.

கிரிகல் பொத்தை மலை

தொகு

ஓட்டன் சமவெளியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2,313 மீட்டர் உயரமானதாக இருந்தாலும் ஓட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதே. எனினும் இதன அடிவாரத்தை அடைவதற்கு சதுப்பநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். மழை நாட்களில் ஏறுவதைத் தவிர்த்தல் நன்று.[14]

தொடுபலை மலை

தொகு

ஓட்டன் சமவெளியின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 2,360 மீட்டர் உயரமானது. ஓட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதாகும். எனவே இதனை ஓட்டன் சமவெளியில் இருந்து ஏறுவது இலகுவானதாகும். மலையடிவாரமும் இலகுவாக அடையலாம்.[14]

உலக முடிவு

தொகு
 
ஓட்டன் சமவெளியின் உலக முடிவு

இது ஓட்டன் சமவெளியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள 700-1000 மீட்டர் உயரமான செங்குத்து உயரத்தைக் குறிக்கும். ஓட்டன் சமவெளியின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகும். மழையற்ற நாட்களில் பலாங்கொடை, பெலிவுல் ஓயா போன்ற பகுதிகளைக் கீழே காணலாம். இங்கு பாதுகாப்பு வேலி காணப்படுவதில்லை. எனவே சரிவுக்கு அருகில் இருக்கும் போது அவதானமாக இருத்தல் வேண்டும்.[8]

பார் இன்

தொகு

இது முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஓட்டன் சமவெளியின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்த்-கோவ் தேயிலைப் பெருந்தோட்டத்தின் முன்னாள் அதிகாரி தோமஸ் பார் என்பவரால் 1901ஆம் ஆண்டு வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான தனிப்பட்ட விடுதியாக அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு பார் இங்கிலாந்தில் மரணமான போது இவரது சாம்பல் ஓட்டன் சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு தூவப்பட்டது. இவரது மரணத்துக்குப் பிறகு விடுதி உல்லாசப்பிரய்யாணிகளுக்கான தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இது அரசவசப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இது ஒரு நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது.[15][16]

சுற்றுலா

தொகு
 
அருவி அருகே செல்பி எடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

ஓட்டன் சமவெளி பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மத்திய மலைநாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. தேசிய வனத்துக்குள் தனியான சுற்றுலா விடுதிகள் சிலவும், கூட்டுச் சுற்றுலா விடுதிகள் சிலவும் காணப்படுகின்றன.

அடைவுப் பாதைகள்

தொகு
 
ஓட்டன் சமவெளியின் ஒரு பகுதி

நுவரெலியாவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளியின் முக்கிய நுழைவாயிலை தனியார் பேருந்து அல்லது ஏனைய வாகனங்கள் மூலம் அம்பேவலை, பட்டிபலை வழியாக அடையலாம். பொதுப் போக்குவரத்து வசதிகள் இப்பகுதியில் இல்லை. பிரதான நுழைவாயில் வரையான பாதை பல ஊசிவளைவுகளைக் கொண்டுள்ளதால் பெரிய பேருந்துக்கள் இங்கு வருவது கடினமானதாகும். பிரதான நுழைவாயிலில் இருந்து 10 கி.மீ. தூரமான வட்டப்பாதையில் செல்வதன் மூலம் இங்குள்ள முக்கிய இடங்களைக் கண்டுகளிக்கலாம். இப்பாதையில் வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.[17]

பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட குதிரைமூலம் செல்லக் கூடிய பாதையை மேம்படுத்துவதன் மூலம் 2005 ஆண்டு முதல் பட்டிபொலைக்கு அருகிலும் ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.[7]

ஒயியா தொடருந்து நிலையம் இப்பகுதியில் காணப்படும் பொதுப்போக்குவரத்து மையமாகும். இங்கிருந்து 11 கி.மீ. தூரம் மிகச்சரிவான பதையில் செல்வதன் மூலம் முக்கிய நுழைவாயிலை அடையமுடியும். அங்கிருந்து மீண்டும் 10 கி.மீ. தொலைவான பாதையில் செல்வதன் மூலம் வனத்தைக் கண்டு களிக்கலாம்.[18]

பலாங்கொடை நகருக்கு அருகாமையில் காணப்படும் பெலிவுல்ஓயா கிராமத்தில் இருந்து நக்ரக் தேயிலைப் பெருந்தோட்டத்தின் வழியாக ஓட்டன் சமவெளியின் தெற்குப்பகுதியை அடைவதற்கான ஓரு பாதையும் காணப்படுகிறது. இப்பாதை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் குதிரை மூலம் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்ட பாதையை ஒட்டிச் செல்வதாகும். இருப்பினும் இப்பாதை தற்சமயம் பயன்பாட்டில் இல்லாததோடு பாதையும் அழிவுற்றுள்ளது. இது மொத்தம் 11 கி.மீ. நீளமான பாதையாகும். இப்பாதை செங்குத்துச் சரிவுகளையுடைய ஆபத்தான பாதையாகும். இது பொதுவான பயனர்களுக்கு உகந்த பாதையல்ல.[19] இதற்கு அருகில் பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகில் கும்புருதென்னிவலை என்ற கிராமம் ஊடாகவும் ஒரு பாதை அமைந்துள்ளது.[20]

பொகவந்தலாவை நகரில் இருந்து நோட்டன் கோவ் தேயிலைப் பெருந்தோட்டம் வரை வாகனமொன்றில் சென்று அங்கிருந்து காட்டில் சுமார் 7 கிலோமீட்டர் செல்வதன் மூலம் ஓட்டன் சமவெளியை அடையலாம். இங்கு ஒரு ஒற்றையடிப்பாதை காணப்படுகிறது. வனத்துக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த இப்பாதையில் நுழைவாயில்களோ காவலர்களோ இல்லை. மேலும் இப்பகுதியில் சட்டவிரோத அகழ்வுகள் நடைபெற்று வருவதன் காரணமாக பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம்.[21]

கட்டுப்பாடுகள்

தொகு

வனத்துக்கு உள்ளிடும் பயணிகள் பொலித்தீன் போன்ற உக்காத பொருட்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சமவெளியின் உள்ளே குப்பைகள் இடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.[9] இங்கு வரும் பயணிகளின் நலன் கருதி எளிதில் உக்கக்கூடிய பை ஒன்றும் நுழைவாயிலில் வழங்கப்படுகிறது.[22]

கவனிக்க வேண்டியவை

தொகு

இப்பகுதியில் தொலைபேசி சேவை நிறுவனங்கள் தமது சேவைகளைத் தருவதில்லை. எனவே இன்னல் வேளைகளில் தொலைத் தொடர்பிற்கு வாய்ப்பில்லாமல் போகலாம். இங்கு சிறுத்தைகள் காணப்படுவதால் தனியாக நடமாடுவது தவிர்க்கப்படவேண்டும். ஆண்டின் எப்பகுதியில் வந்தாலும் மழைக்கு ஆயத்தமாக வருவது பொருத்தமாக இருக்கும். பேர்கஸ் நீர்வீழ்ச்சியில் நீராடுதல் ஆபத்தானது.

பிரச்சினைகள்

தொகு

திட்டமிட்ட முறையில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான பாரிய இரத்தினக் கல் அகழ்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. பகவந்தலாவை, பெலிவுல், நொன்பெரில் பகுதிகளில் இருந்து வனத்துக்கு நுழைபவர்களை கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.[21] வெளிநாடு ஒன்றில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள உலெக்ஸ் யுரோபியாஸ் (Ulex Europeaus) என்ற தாவரம் இங்கு மிகவேகமாக பரவிவருவதால் இங்குள்ள தாவரங்கள் அழிவை எதிர்நோகியுள்ளன இதனால் 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் தன்னார்வலர்கள் இச்செடிகளை அகற்றி வருகின்றனர்.[23]

சான்றுகளும் குறிப்புகளும்

தொகு
  1. "World Heritage Committee inscribes two new sites on World Heritage List". unesco.org. யுனெசுகோ. July 30, 2010. http://whc.unesco.org/en/news/640. பார்த்த நாள்: 1 August 2010. 
  2. 2.0 2.1 "ஓட்டன் சமவெளி தகவல்கள்". Archived from the original on 2007-03-31. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  3. இலங்கையின் காடுகள் பற்றி பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் தினக்குரல்
  4. ""The discovery of cultivation of oats and barley, and herding at about 10,000 years ago (initially at 17,000 B.P.) in the Horton Plains has given a totally new dimension to what has been known about the origin of farming and herding in the world."". Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-05-03.
  5. 5.0 5.1 "INTERNATIONAL FIELD BIOLOGY COURSE 2006 பக்கம் 25" (PDF). Archived from the original (PDF) on 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
  6. ஹோட்டன் சமவெளியின் வரலாறு பக்கம் 2
  7. 7.0 7.1 7.2 "வரலாறு". Archived from the original on 2007-04-03. பார்க்கப்பட்ட நாள் 2007-05-03.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "இன்ஃவோலங்கா தளம்". Archived from the original on 2007-05-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  9. 9.0 9.1 ஹோட்டன் சமவெளி பற்றிய தகவல்கள்
  10. சாம்பர் மான்களின் உணவு பழக்கங்கள் - ஆய்வுக் கட்டுரை
  11. "tigertrails.co.uk தளம்". Archived from the original on 2007-05-24. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  12. "உயிரினத் தகவல்கள்". Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  13. "On the trail of breathtaking beauty..... சண்டே ஒஃவ்சேவர் செய்திக் குறிப்பு". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-05-03.
  14. 14.0 14.1 Horton Plains - Journey to the end of World
  15. பார் இன் பக்கம் 1
  16. இன் பக்கம் 2
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-31. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  18. [1]
  19. பெலிவுல் ஓயா ஊடான பாதை
  20. [2]
  21. 21.0 21.1 "சட்ட விரோத அகழ்வுகள்". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-04. பார்க்கப்பட்ட நாள் 2007-05-02.
  23. "உலெக்ஸ் யுரோபியாஸ் தாவரத்தை அகற்றும் தன்னார்வலர் பற்றிய தகவல்". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டன்_சமவெளி_தேசிய_வனம்&oldid=4114895" இலிருந்து மீள்விக்கப்பட்டது