பண்பாடு

(கலாசாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பண்பாடு (கலாச்சாரம் அல்லது கலாசாரம்) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.

பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது.[1] மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.

பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். இது, பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கிறது எனலாம். 1952-இல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய 'பண்பாடு: எண்ணக் கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை' (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள்

தொகு

18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றைய அறிஞர்கள் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம் கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அழுத்தி வைப்பதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.

 
அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர்கள், பல்வேறு சமூகங்களுக்கும் பயன்படத் தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் முதலிய மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு எனவும், அது அநுபவங்களைப் பகுத்துக் குறீயீடாக்கிக் குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள்.

இதன் விளைவாக, ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.

எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனிதச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப் பகுப்பு தேவையாக இருந்தது.

பண்பாடு என்பதை விளங்கிக் கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: அவை, 'பெறுமானம் (எண்ணங்கள்)', 'நெறிமுறைகள் (நடத்தை)', மற்றும் 'பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு)' என்பவை ஆகும்.

வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே 'பெறுமானம்' ஆகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. 'நெறிமுறைகள்' என்பன, வெவ்வேறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொது வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் 'சட்டங்கள்' எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான 'பொருள்கள்', பண்பாட்டின் 'பெறுமானங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

பண்பாட்டுக் கருத்துருக்கள்

தொகு

பண்பாடும் மானிடவியலும்

தொகு
 
19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர் எட்வார்ட் டெயிலர்.

பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப்பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

பண்பாடும் உலகப்பார்வையும்

தொகு

புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் தேசியவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள், பண்பாடு என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்களைச் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் 'நாகரிகமடைந்தோர்', 'நாகரிகமற்றோர்' அல்லது 'பழங்குடியினர்' முதலிய வேறுபாடுகளுக்கு இடமளித்தது.

சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள்

தொகு

பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப் பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம்.

வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

  • அடிப்படைப் பண்பாடு (core culture): இது செருமனியில் பஸ்ஸாம் திபி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறுபான்மையினர் தமக்கான அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும் அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும்.
  • கலப்புப் பண்பாடு (Melting Pot): ஐக்கிய அமெரிக்காவில் மரபுவழியாக இத்தகைய நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது.
  • ஒற்றைப்பண்பாட்டியம் (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப் பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் பல்பண்பாட்டிய வடிவங்கள் தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள்.
  • பல்பண்பாட்டியம் (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும்.

நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான மாறிகளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு

தொகு

உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும் உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின் தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய தொடர்புகள், குடியேற்றம், வணிகம், புலப்பெயர்வு, மக்கள் ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக் கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம். பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்களும், போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

நம்பிக்கை முறைமைகள்

தொகு
 
இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்

சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும் வலுவாக ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில் நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல.

ஆபிரகாமிய சமயங்கள்

தொகு

'யூதாயிசம்' அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச்சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருக்கின்றன.

ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 முதல் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை.

இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500 ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது.

நாடுகளின் பண்பாடுகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tylor, Edward. (1871). Primitive Culture. Vol 1. New York: J.P. Putnam's Son
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாடு&oldid=3924103" இலிருந்து மீள்விக்கப்பட்டது