கொல்வின் ஆர். டி சில்வா

கொல்வின் ரெஜினால்டு ஆர். டி சில்வா (Colvin Reginald de Silva (16 பெப்ரவரி 1907 – 27 பெப்ரவரி 1989;[1] பொதுவாகக் கொல்வின் ஆர். டி சில்வா)[2] என்பவர் இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கையின் முதலாவது மார்க்சியக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.[3]

கொல்வின் ஆர். டி சில்வா
Colvin R. de Silva
தோட்டத் தொழிற்றுறை அமைச்சர்
பதவியில்
31 மே 1970 – 2 செப்டம்பர் 1975
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
அகலவத்தை
பதவியில்
1967–1977
முன்னையவர்அனில் முனசிங்க
பின்னவர்மெரில் காரியவாசம்
நாடாளுமன்ற உறுப்பினர்
வெள்ளவத்தை-கல்கிசை
பதவியில்
1956–1960
முன்னையவர்எஸ். டி சில்வா ஜெயசிங்க
பின்னவர்தொகுதி நீக்கம்
பதவியில்
1947–1952
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்எஸ். டி சில்வா ஜெயசிங்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-02-16)16 பெப்ரவரி 1907
இறப்பு27 பெப்ரவரி 1989(1989-02-27) (அகவை 82)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிலங்கா சமசமாஜக் கட்சி
முன்னாள் கல்லூரிகிங்சு கல்லூரி, இலண்டன்,
இலங்கைப் பல்கலைக்கழகம்,
கொழும்பு றோயல் கல்லூரி,
சென். ஜோன்சு கல்லூரி, பானந்துறை
வேலைவழக்கறிஞர்
தொழில்பார் அட் லா

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

கொல்வின் ஆர். டி சில்வா பலப்பிட்டி என்ற இடத்தில் 1907 பெப்ரவரி 16 இல் பிறந்தவர்.[2] இவரது தந்தை ஒபினமுனி அர்னோலிசு டி சில்வா ஒரு மருத்துவர் ஆவார். தாய் பெட்டாகன் யோசலீன் டி சில்வா பிரபலமான தொழிலதிபரான பெட்டாகன் அசனெரிசு டி சில்வாவின் மகள் ஆவார். ஆரம்பக் கல்வியை பாணந்துறை புனித யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து படித்து வரலாற்றுத் துறையில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இலண்டன் கிங்சு கல்லூரியில் "பிரித்தானிய ஆக்கிரமிப்பில் இலங்கை" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு 1932 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வு பின்னர் நூலாக வெளிவந்தது.[2]

சட்டத் துறையில்

தொகு

இலண்டனில் இருந்து நாடு திரும்பியதும், கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா இலங்கை மீயுயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதவிப்பிரமாணம் செய்து சட்டத்தரணியாகத் தனது சேவையைத் தொடர்ந்தார். மார்க் அந்தோனி பிரேசுகர்டில் மீதான ஆட்கொணர்வு மனு தொடர்பாக வழக்காடிப் பெரும் புகழ் பெற்றார்.[2] 1940 களில் இருந்து 1960 கள் வரை இவர் ஒரு குற்றவியல் வழக்கறிஞராக ஒரு இணையற்ற நற்பெயரைப் பெற்றிருந்தார். அவர் தனது நாளின் ஒவ்வொரு உயர்மட்ட குற்றவியல் விசாரணையிலும் தோன்றினார். சதாசிவம் கொலை வழக்கில், இவரது சிறப்பான குறுக்கு விசாரணைத் திறமை அவரது கட்சிக்காரரை விடுதலை செய்ய வழிவகுத்தது.[2] அதே போன்று, குலரத்தின கொலை வழக்கின் மேல்முறையீட்டில், சூழ்நிலைச் சாட்சியங்கள் பற்றிய அவரது நெருங்கிய அறிவு குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றியது. விவியன் குணவர்தன தாக்கப்பட்ட வழக்கு உட்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை டி சில்வா முன்னின்று நடத்தினார். அமைச்சராகப் பணியாற்றிய காலத்தைத் தவிர, அவர் இறக்கும் வரை தனது சட்டப் பயிற்சியைத் தொடர்ந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு

ஆரம்ப அரசியல்

தொகு

லங்கா சமசமாஜக் கட்சி 1935 திசம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்ட போது என். எம். பெரேரா, லெஸ்லி குணவர்தன, பிலிப் குணவர்தனா, இராபர்ட் குணவர்தனா ஆகியோருடன் இணைந்து கொல்வின் ஆர். டி சில்வா அதன் முதலாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு தீவிரமான திரொத்சுக்கியவாதியான டி சில்வா, இரண்டாம் உலகப் போரின் போது, கொழும்பு போகம்பரை சிறையிலிருந்து தப்பி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார், அங்கு அவர் போர்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் அவர் இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-லெனினிஸ்ட் கட்சியின் முன்னணி போராளியாக செயற்பட்டார். போருக்குப் பிறகு அவர் இலங்கைக்குத் திரும்பி போல்செவிக் சமசமாஜக் கட்சியின் முக்கியத் தலைவரானார்.[2]

நாடாளுமன்ற அரசியல்

தொகு

1947 முதலாவது நாடாளுமன்றத்திற்கு போல்சவிக் சமசமாஜக் கட்சியின் (போ.ச.க) ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொல்வின் ஆர் டி சில்வா வெள்ளவத்தை-கல்கிசை தொகுதியில் வெற்றி பெற்றார். இவரது கட்சி லங்கா சமசமாஜக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து டி சில்வா லங்கா சமசமாசக் கட்சியின் முக்கிய தலைவரானார்.[2]

சதாசிவம் படுகொலை வழக்கில் அவருக்கு கிடைத்த செல்வாக்கிழப்புக் காரணமாக கற்றதன் காரணமாக 1952 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் எஸ். டி சில்வா ஜெயசிங்கவிடம் வெள்ளவத்தை-கல்கிசை தொகுதியை இழந்தார், ஆனால் 1956 தேர்தலில் அதை மீண்டும் கைப்பற்றினார். சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அவரது உரை பெரும் வரவேற்பைப் பெற்றது: "எங்களுக்கு... ஒரே தேசம் வேண்டுமா அல்லது இரண்டு தேசங்கள் வேண்டுமா? எங்களுக்கு ஒரே நாடு வேண்டுமா அல்லது இரண்டு வேண்டுமா? எங்களுக்கு "ஒரு இலங்கை" வேண்டுமா அல்லது "இரண்டு" வேண்டுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் ஒரு விடுதலை பெற்ற இலங்கையை விரும்புகிறோமா? மொழிப் பிரச்சினையின் தோற்றம் பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம்."[5]

நான்காம் அகிலத்துடனான தொடர்புகளுக்கு சமசமாசக் கட்சி சார்பாக டி சில்வா பொறுப்பேற்றார். அவர் அகிலத்தின் சர்வதேச செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சமசமாசக் கட்சி அனைத்துலகத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரை அவர் பதவி வகித்தார். 1964 இல் லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு எதிராக டி சில்வா வலியுறுத்தினார்.

1967 இல் இடம்பெற்ற இடைத்தேர்தலில் டி சில்வா அகலவத்தைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். 1970 தேர்தலில் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார். 1970 இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் தோட்டத்தொழிற்துறை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது பணிகளில் இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதும் அடங்கும், இது முன்னர் நியதிச் சட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் முதல் அரசியலமைப்புச் சட்டமாக பார்க்கப்பட்டது.[6] அவர் 1975 வரை பணியாற்றினார், அரசுக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது கட்சி அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடதுசாரிகளுடன் சேர்ந்து அவர் தனது இடத்தை இழந்தார்.

கட்சித் தலைவர்

தொகு

என். எம். பெரேராவின் இறப்பைத் தொடர்ந்து, கொல்வின் ஆர் டி. சில்வா சமசமாசக் கட்சியின் தலைவரானார். 1982 அரசுத்தலைவர் தேர்தலில் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு 1.28% வாக்குகளைப் பெற்று ஐந்தாவதாக வந்து தோல்வியடைந்தார். 1988 இல் அவரது கட்சி மற்ற மூன்று இடதுசாரிக் கட்சிகளுடன் ஐக்கிய சோசலிசக் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டதில் கூட்டணிக்கு ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் கிடைத்தது, அதற்கு கொல்வின் ஆர். டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைவு

தொகு

கொல்வின் ஆர் டி சில்வா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவியேற்ற நில நாட்களில் 1989 பெப்ரவரி 27 இல் கொழும்பில் தனது 82-ஆவது அகவையில் காலமானார். அவரது நிவைவாக, கொழும்பு கொம்பனித் தெருவிற்கு கொல்வின் ஆர். டி சில்வா சாலை எனப் பெயரிடப்பட்டது.

குடும்பம்

தொகு

கொல்வின் ஆர். டி சில்வா தனது சொந்த ஊரான பலப்பிட்டியைச் சேர்ந்த தொழிலதிபரான பெட்டகன் பெனால் டி சில்வாவின் மகள் பெட்டகன் சுவினீத்தா டி சில்வாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். மூத்த பெண் மனோரி முத்தட்டுவேகம இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளராக இருந்ததோடு, கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தட்டுவேகமவை மணந்தார்.[7][8]

வெளியிட்ட நூல்கள்

தொகு
  • De Silva, Colvin R., Ceylon Under the British Occupation, 1795–1833 First published 1941. Reprint: Delhi, Vedam Books, 1995
  • De Silva, Colvin R., An Outline of the Permanent Revolution

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்வின்_ஆர்._டி_சில்வா&oldid=3708025" இலிருந்து மீள்விக்கப்பட்டது