கால்பந்து கூட்டமைப்பு

(சங்கக் கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொதுவாக கால்பந்து அல்லது சங்க கால்பந்து (association football) என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.[1][2][3]

கால்பந்து கூட்டமைப்பு
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புஃபிஃபா
பிற பெயர்கள்கால்பந்து, சாக்கர்
முதலில் விளையாடியது19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்து இங்கிலாந்து
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
அணி உறுப்பினர்கள்அணிக்கு 11 பேர்
இருபாலரும்ஆம், தனித்தனிப் போட்டிகள்
பகுப்பு/வகைஅணி விளையாட்டு, பந்து விளையாட்டு
கருவிகள்காற்பந்து (சங்கக் காற்பந்து)
விளையாடுமிடம்கால்பந்து ஆடுகளம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1900

இந்த விளையாட்டு, செவ்வக வடிவ புல்தரை அல்லது செயற்கைப் புல்தரை ஆடுகளத்தில் விளையாடப்படுகிறது. இதில் குறுகிய பக்கங்கள் ஒவ்வொன்றின் மையத்திலும் ஓர் இலக்கு இருக்கும். விளையாட்டின் நோக்கம், பந்தினை எதிர் கோல்/இலக்குக் கம்பத்திற்கு உள்ளே தள்ளி எண்ணிக்கை பெறுவதாகும். சங்கக் கால்பந்து விளையாட்டில், கோல்கீப்பர்கள் மட்டுமே பந்தினை நகர்த்துவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்; அணியின் மற்ற உறுப்பினர்கள், பந்தினைக் கால்களால் அல்லது கைகளைத் தவிர்த்த மற்ற உடல் பாகங்களால் மட்டுமே நகர்த்த அனுமதிக்கப்படுவர். ஆட்டத்தின் முடிவில் அதிகமான கோல்களை எடுத்திருக்கும் அணி வெற்றிபெறுகிறது. இரு பாதிகளாக ஆடப்படும் ஆட்டத்தின் நிறைவில் இரு அணிகளும் பெற்ற கோல் எண்ணிக்கை சமமாக இருந்தால், ஆட்டம் சமன் என அறிவிக்கப்படுகிறது. அல்லது போட்டியின் வடிவத்தை சார்ந்து ஆட்டம் கூடுதல் நேரம் மற்றும்/அல்லது ஒரு சமன்நீக்கி மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

நவீன கால்பந்து ஆட்டத்தின் விதிகள் இங்கிலாந்தில் கால்பந்துச் சங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இதன் 1863 காற்பந்தாட்டச் சட்டங்கள் தான் இன்று விளையாட்டு ஆடப்படும் முறைக்கு அடித்தளம் இட்டன. சர்வதேச ரீதியாக கால்பந்து விளையாட்டு பொதுவாக ஃபிஃபா (FIFA) என்கிற சுருக்கப் பெயரால் அறியப்படும் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மிகவும் புகழ் வாய்ந்த சர்வதேச கால்பந்து போட்டி காற்பந்து உலகக்கோப்பையாகும். இது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. உலகளவில் மிகவும் பரந்த அளவில் பார்க்கப்படும் இந்த நிகழ்வு, கோடை ஒலிம்பிக் போட்டிகளை விடவும் இரு மடங்கு பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் பெருமையுடையது.[4]

வரலாறு

தொகு
 
உலகெங்கிலும் சங்கக் கால்பந்து பெற்றிருக்கும் பிரபலத்தைக் காட்டும் வரைபடம். சங்கக் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டாகத் திகழும் நாடுகள் பச்சையிலும், அவ்வாறு இல்லாத நாடுகள் சிவப்பிலும் வண்ணமிடப்பெற்றுள்ளன. 1,000 பேருக்கு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை பச்சை மற்றும் சிவப்பின் பல்வேறு பட்டைகள் காட்டுகின்றன.

ஒரு பந்தை அங்குமிங்கும் உதைத்து விளையாடும் ஆட்டங்கள் வரலாறு முழுவதும் ஆடப்பட்டிருக்கின்றன. ஃபிஃபாவின் கூற்றுப்படி, "இந்தத் திறமையான நுட்பத்தை துல்லியமாக பயின்றதற்கான அறிவியல் ஆதாரம் சீனாவின் கிமு 2வது மற்றும் 3வது நூற்றாண்டு காலம் வரை செல்கிறது (சுஜு விளையாட்டு)."[5] மத்தியகால ஐரோப்பாவில் கால்பந்தின் பல்வேறு வகைகளும் விளையாடப்பட்டன; காலகட்டம் மற்றும் இடத்தைப் பொறுத்து ஆட்ட விதிகள் பெருமளவு மாறுபட்டன.

இங்கிலாந்தில் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், பொதுப் பள்ளிகளில் விளையாடப்பட்ட கால்பந்தின் பரவலான வேறுபட்ட வகைகளை ஒருங்குபடுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து கால்பந்து விளையாட்டின் நவீன விதிகள் வடிவம் பெற்றன. 1848 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில், கால்பந்து விளையாட்டுக்கான விதிகள் வரைவுபெற்றன. கேம்பிரிட்ஜ் விதிகள் என்றழைக்கப்பட்ட அவ்விதிகள், அடுத்து வந்த காலங்களில் வரையறுக்கப்பட்ட விதிகளின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் செல்வாக்கு செலுத்தின. கேம்பிரிட்ஜ் விதிகள் டிரினிடி கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் இயற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் எடன், ஹரோ, ரக்பி, வின்செஸ்டர் மற்றும் ஷ்ரூஸ்பெரி பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விதிகள் அனைவராலும் ஏற்றுக்கொண்டிருக்கப்படவில்லை. 1850களில், ஆங்கில உலகெங்கிலும் கால்பந்தின் பல்வேறு வடிவங்களை விளையாடுவதற்கு பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில்லாத பல கழகங்கள் உருவாகின. சில கழகங்கள் தங்களுக்கான பிரத்தியேக விதிகளை உருவாக்கின. அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, 1857 ஆம் ஆண்டில் முன்னாள் பொதுப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஷெஃபீல்டு கால்பந்துக் கழகம் ஆகும்.[6][7] இது ஷெஃபீல்டு கால்பந்துச் சங்கம் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது; அச்சங்கம், தமக்கான கால்பந்து விதிமுறைகளை உருவாக்கியது. மேலும், 1862-ஆம் ஆண்டில் உப்பிங்காம் பள்ளியைச் சேர்ந்த ஜான் சார்லசு த்ரிங் என்பவரும் மிகச் சிறப்பான, செல்வாக்கான காற்பந்து விதிமுறைகளை உருவாக்கினார்.

இவ்வாறான தொடர்ந்த முயற்சிகள் 1863-ஆம் ஆண்டில் கால்பந்துச் சங்கம் (FA) உருவாவதற்கு பங்களிப்பு செய்தன. இந்தச் சங்கம் லண்டன், கிரேட் குவீன் ஸ்ட்ரீட்டில் உள்ள ஃப்ரீமேசன்ஸ்' டேவர்ன் என்கிற இடத்தில் 26 அக்டோபர் 1863 அன்று தனது முதல் கூட்டத்தை நடத்தியது.[8] அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில், அவ்விடத்தில் மேலும் ஐந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன; இதன் விளைவாக, சங்கக் காற்பந்து விளையாட்டின் திறம்பட்ட விதிகளின் முதல் தொகுப்பு உருவாகியது. இறுதிக் கூட்டத்தில் பிளாக்ஹீத் கழகப் பிரதிநிதி, கால்பந்துச் சங்கத்துக்கான தனது கழகத்தின் ஆதரவை விலக்கிக் கொண்டார். முந்தைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட இரண்டு வரைவு விதிகள் அகற்றப்பட்ட காரணத்தால், விலகும் முடிவை அக்கழகம் எடுத்தது. முதலாவது, கையில் பந்து இருக்கும் நிலையில் ஓடுவது குறித்தது; இரண்டாவது, இப்படி ஓடுகையில் எதிரணி வீரரின் கால்களை தட்டி விடுவது மற்றும் பிடிப்பது ஆகியவை குறித்தது. இங்கிலாந்தின் பிற ரக்பி கால்பந்துக் கழகங்களும் இதனைப் பின்பற்றி கால்பந்துச் சங்கத்தில் சேரவில்லை அல்லது அதில் இருந்து விலகின. பின்னர், 1871-ஆம் ஆண்டில் ரக்பி கால்பந்து ஒன்றியம் உருவாக்கப்பட்டது. எஞ்சியிருந்த பதினொரு கால்பந்துக் கழகங்களும், எபினேசர் கோப் மோர்லியின் தலைமையின் கீழ், ஆட்டத்தின் பதின்மூன்று மூல விதிகளையும் உறுதிப்படுத்தின.[8] ஷெஃபீல்டு கால்பந்துக் கழகம் 1870-கள் வரை தன்னுடைய சொந்த விதிகளின் படி விளையாடியது. ஷெஃபீல்டு விதியைப் பின்பற்றும் ஆட்டங்களுக்கும், கால்பந்துச் சங்க விதிகளைப் பின்பற்றும் ஆட்டங்களுக்கும் வித்தியாசம் வெகு குறைவாக இருந்தவரை கால்பந்துச் சங்கம், ஷெஃபீல்டின் சில விதிகளை உள்ளீர்த்துக் கொண்டது.

ஆட்டத்தின் விதிகள் தற்போது பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தின் (IFAB) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. கால்பந்துச் சங்கம், இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம், வேல்சு கால்பந்துச் சங்கம், மற்றும் அயர்லாந்து கால்பந்துச் சங்கம் ஆகியவை பங்குபெற்ற மான்செஸ்டர் கூட்டத்திற்கு பிறகு 1886-ஆம் ஆண்டில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.[9]

உலகின் மிகவும் பழமையான கால்பந்துப் போட்டி கால்பந்துச் சங்கக் கோப்பையாகும். இது, 1872-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் உள்நாட்டுக் கால்பந்துக் கழக அணிகளுக்கிடையே நடத்ததப்பட்டு வருவதாகும்; இது சி.டபிள்யூ.அல்காக் என்பவரின் முயற்சியில் முதலில் நடத்தப்பட்டது. உலகின் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கால்பந்து ஆட்டம், 1872-ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிளாஸ்கோவில் நடந்தது; இதுவும் சி.டபிள்யூ.அல்காக் என்பாரின் உந்துதலின் பேரிலேயே நடத்தப்பட்டது. உலகின் முதல் கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டிகளின் தாயகமாக இங்கிலாந்து விளங்குகிறது; இக்கால்பந்துக் கூட்டிணைவு 1888-ஆம் ஆண்டில் பெர்மிங்காமில் ஆரம்பிக்கப்பட்டது.[10] தொடக்க காலங்களில், மத்திய இங்கிலாந்து மற்றும் வட இங்கிலாந்தில் இருந்து 12 கால்பந்துக் கழகங்கள் இக்கூட்டிணைவில் பங்கேற்றன. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) பாரிஸில் 1904-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது; கால்பந்துச் சங்கத்தின் ஆட்ட விதிகளையே இது பின்பற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது.[11] பன்னாட்டளவில் கால்பந்து ஆட்டமானது புகழ்பெற்றதைத் தொடரந்து, ஃபிஃபா-வின் பிரதிநிதிகள் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தில் இணைய அனுமதிக்கப்பட்டனர். இப்போது இந்த வாரியத்தில் பிபாவில் இருந்து நான்கு பிரதிநிதிகளும் நான்கு பிரித்தானிய சங்கங்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதியுமாக மொத்தம் எட்டுப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இன்று கால்பந்து, உலகெங்கிலும் அனைத்து இடங்களிலும் தொழில்முறை மட்டத்தில் விளையாடப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் மனதைக் கவர்ந்த அணிகளின் ஆட்டத்தைக் காண கால்பந்து மைதானங்களுக்கு தொடர்ந்து செல்கிறார்கள்.[12] மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள்.[13] மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கால்பந்தினை விளையாடவும் செய்கிறார்கள்; 2001-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபிஃபா கணக்கெடுப்பு ஒன்றின் படி, 200க்கும் அதிகமான நாடுகளின் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து கால்பந்து விளையாடுகிறார்கள்.[14] இதன் எளிய விதிகளும் குறைந்தபட்ச சாதன அவசியங்களும் சந்தேகமில்லாமல் அது பரவலாகப் பிரபலமடையவும் வளர்ச்சியடையவும் உதவியுள்ளது. காற்பந்தானது, உலகளவில் எந்தவொரு விளையாட்டையும் விட அதிக அளவிலான தொலைக்காட்சிப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது.

உலகின் பல பாகங்களில், கால்பந்து உணர்வுப்பூர்வமான பாத்திரத்தை ஏற்றுள்ளதோடு, ரசிகர்கள், உள்ளூர் சமுதாயங்கள், ஏன் நாடுகளின் வாழ்க்கையிலும் கூட ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றுகின்றன. ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது 2005-ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு யுத்தத்தில் ஒரு போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்திருக்கிறது; போராளிகளின் இராணுவமும், தேசிய இராணுவமும் போராளிகளின் தலைநகரில் ஒரு கால்பந்துப் போட்டியில் ஆடினர். இவ்வாறாக, கால்பந்து அமைதியின் தூதுவனாக இருந்திருக்கிறது. அதே வேளையில், சூன், 1969-இல் எல் சால்வடார் மற்றும் ஹோன்டுராஸ்க்கு இடையே நடந்த போருக்குக் காரணம் கால்பந்து விளையாட்டுதான் என்று பரவலாய்க் கருதப்படுகிறது.[15] 1990-களில் யூகோசுலேவியப் போரின் துவக்கத்தில் பெருமளவில் பதற்றம் அதிகரித்ததற்கு, கால்பந்துப் போட்டியே காரணம் எனப்படுகிறது; மார்ச், 1990, அன்று டினமோ சாக்ரெப் மற்றும் ரெட் ஸ்டார் பெல்கிரேடு அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கலவரத்தில் முடிந்தது.[16]

பெயர்வரலாறு

தொகு

கால்பந்து விதிகள் இங்கிலாந்தில் 1863 ஆம் ஆண்டில் கால்பந்துச் சங்கத்தால் உருவாக்கப்பட்டன. சங்கக் கால்பந்து (Association Football) என்கிற பெயரானது, அந்த சமயத்தில் விளையாடப்பட்ட கால்பந்தின் மற்ற வடிவங்களில் இருந்து, குறிப்பாக ரக்பி கால்பந்தில் இருந்து, பிரித்துக் காட்ட உருவாக்கப்பட்டது. சாக்கர் என்கிற வார்த்தை இங்கிலாந்தில் தான் உருவானது, இது 1880களில் "அசோசியேசன்" என்கிற ஆங்கில வார்த்தையின் கொச்சைமொழிச் சுருக்கமாக முதலில் தோன்றியது,[17] பல சமயங்களில் முன்னாள் இங்கிலாந்து கேப்டனான சார்லசு ரெபோர்ட்-பிரவுன் தான் இப்பெயருக்கு காரணகர்த்தாகவாக கூறப்படுகிறார்.[18]

இந்நாட்களில், அநேக நாடுகளில் இந்த விளையாட்டு கால்பந்து என்றே பொதுவாக அறியப்படுகிறது. கால்பந்தின் பிறவகை ஆட்டங்களும் பிரபலமாக இருக்கும் நாடுகளில், இந்த விளையாட்டு பொதுவாக சாக்கர் எனக் குறிப்பிடப்படுகிறது, அமெரிக்கா மற்றும் கனடாவின் கட்டுப்படுத்தும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பெயர்களில் இவ்வண்ணமே பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டின் உலக அளவிலான கட்டுப்படுத்தும் அமைப்பான ஃபிஃபா, இந்த விளையாட்டை தனது சட்டவிதிகளில் சங்கக் கால்பந்து என்றே வரையறை செய்கிறது.[19] ஆனாலும், ஃபிஃபா மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தும் வார்த்தை கால்பந்து என்பதாக இருக்கிறது.

ஆடும் முறை

தொகு
 
சமன்நீக்கப் பகுதிக்குள் இருந்து உதைக்கப்படும் பந்தை இலக்கு காவலர் தடுத்து பாதுகாக்கிறார்

கால்பந்தானது ஆட்ட விதிகள் என்று அழைக்கப்படும் ஒரு விதிகளின் தொகுப்பின் படி விளையாடப்படுகிறது. காற்பந்து என்று அழைக்கப்படும் ஒற்றை கோளவடிவப் பந்து கொண்டு இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் பந்தினை அடுத்த அணியின் இலக்கு கம்பங்களுக்கு உள்ளே செலுத்துவதற்கு போட்டியிடுகின்றனர். அப்படி செலுத்தி விட்டால் ஒரு இலக்கு எண்ணிக்கை பெறுகின்றனர். ஆட்டத்தின் முடிவில் அதிகமான இலக்குகளை ஈட்டியிருக்கும் அணி வெற்றி பெற்றதாகும்; இரண்டு அணிகளும் சம எண்ணிக்கையில் இலக்கு எண்ணிக்கை கொண்டிருந்தால் ஆட்டம் சமன். ஒவ்வொரு அணியும் ஒரு அணித்தலைவர் மூலம் வழிநடத்தப்படுகிறது.

அடிப்படை விதியானது ஆட்டவீரர்கள் (இலக்கு காவலர்கள் தவிர) பந்தினை தங்கள் கைகள் அல்லது புயங்கள் மூலம் கையாளக் கூடாது என்பதாகும் (ஆயினும் ஒரு உள்ளெறி மறுதுவக்க சமயத்தில் அவர்கள் கைகளைப் பயன்படுத்துகிறார்கள்). வீரர்கள் பொதுவாக பந்தினை நகர்த்த தங்கள் கால்களைத் தான் பயன்படுத்துகிறார்கள் எனினும், தங்களின் கைகள் அல்லது புயங்கள் தவிர்த்து தங்கள் உடம்பின் எந்த பாகத்தையும் அவர்கள் பயன்படுத்தலாம்.[20] பொதுவான ஆட்டத்தில், அனைத்து வீரர்களும் பந்தினை எந்த திசையிலும் ஆடவும் ஆடுகளம் முழுவதும் நகரவும் சுதந்திரம் உண்டு.

பொதுவான விளையாட்டில், வீரர்கள் கடைவது, பந்தினை அணி சகாவுக்கு கடத்துவது, இலக்குக்கு பந்தை உதைப்பது ஆகிய தனிநபர் கட்டுப்பாடு மூலம் இலக்கு எண்ணிக்கை பெறும் வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது எதிரணி இலக்கு காவலரால் தடுக்கப்படுகிறது. எதிரணி வீரர்கள் பந்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஒரு கடத்தப்பட்ட பந்தினை குறுக்கே சென்று எட்டப் பார்ப்பார்கள் அல்லது பந்தினை கால்வசம் கொண்டிருக்கும் எதிரணி வீரரின் அருகில் சென்று அதனை தட்டிப் பறிக்க முயல்வார்கள்; ஆயினும் எதிரணி வீரர்கள் இடையில் உடல் ரீதியான தொடல் இருக்கக் கூடாது. கால்பந்து பொதுவாக தடையின்றி செல்லும் ஒரு விளையாட்டாகும். பந்து ஆடுகளத்தை விட்டு வெளிச் சென்றாலோ அல்லது நடுவர் ஆட்டத்தை நிறுத்தினாலோ மட்டும் தான் ஆட்டம் நிற்கும். ஒரு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, குறிப்பிடப்படும் மறுதுவக்கத்துடன் ஆட்டம் மறுபடியும் தொடங்கும்.[21]

 
கோலாகி விடாமல் பந்தினை தடுக்க ஒரு இலக்கு காவலர் பாய்கிறார்

தொழில்முறை விளையாட்டு மட்டத்தில், அநேக ஆட்டங்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலான இலக்குகள் தான் பெறுவதாய் இருக்கும்.[22] இலக்கு காவலரைத் தவிர வேறு எந்த வீரருக்கும் இருக்குமிடத்தை ஆட்ட விதிகள் குறிப்பிடுவதில்லை.[23] ஆனால் ஏராளமான சிறப்பு பாத்திரங்கள் உருவாகியுள்ளன. பரந்த வகையில், இது மூன்று முக்கிய வகைகளை அடக்கியிருக்கிறது: தாக்கு வீரர்கள், அல்லது முன்னணியினர்: இவர்களின் முக்கிய வேலை இலக்குகள் உதைப்பது; அரண் வீரர்கள்: இவர்களின் சிறப்பு பாத்திரம் எதிரணியினரை இலக்குகள் பெறவிடாமல் தடுப்பது; நடுக்கள வீரர்கள்: இவர்கள் எதிரணியிடம் இருந்து பந்தினை கைப்பற்றி தங்கள் அணி முன்னணியினருக்கு கடத்துவார்கள். இந்த நிலைகளில் இருப்பவர்கள் புறப்புல வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலைகள், அந்த வீரர் அதிக நேரத்தை களத்தின் எந்த பகுதியில் செலவிடுகிறார் என்பதைக் கொண்டு மேலும் துணைப்பிரிவுகளாக்கப்படுகின்றன. உதாரணமாக, நடு அரண்கள், மற்றும் இடது மற்றும் வலது நடுகள வீரர்கள் ஆகியோர் உள்ளனர். பத்து புறப்புல வீரர்களும் எந்த கூட்டணியாகவும் ஒழுங்குபடுத்தப்படலாம். ஒவ்வொரு நிலையிலும் வீரர்களின் எண்ணிக்கையும் அணியின் ஆட்ட நடையைத் தீர்மானிக்கிறது; கூடுதலான தாக்கு வீரர்களும் குறைவான அரண் வீரர்களும் இருந்தால் ஒரு கூடுதல் மூர்க்கமான தாக்குதல் நோக்க ஆட்டமாக இருக்கும். இதற்கு நேரெதிராக இருந்தால் மெதுவான, கூடுதல் பாதுகாப்புடனான பாணியாக இருக்கும். வீரர்கள் ஆட்டத்தின் பெரும்பகுதியை ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் கழிக்கிறார்கள். வீரர் நகர்வில் குறைவான கட்டுப்பாடுகள் உள்ளன. வீரர்கள் எந்த நேரத்திலும் நிலைகளை மாற்றிக் கொள்ளலாம்.[24] அணி வீரர்களின் ஒரு வரைபடத் தோற்றம் "நிலை அணிவகுப்பு" எனப்படுகிறது. அணியின் நிலை அணிவகுப்பு திட்டப்படம் மற்றும் தந்திர உத்திகளை வரையறை செய்வது பெரும்பாலும் அணி மேலாளரின் முழுஉரிமையாக இருக்கிறது.[25]

விதிகள்

தொகு

அதிகாரப்பூர்வ ஆட்ட விதிகளில் பதினேழு விதிகள் உள்ளன. கால்பந்தின் அனைத்து நிலைகளுக்கும் ஒரே விதிகள் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. எனினும் இளையோர், மூத்தவர்கள் அல்லது பெண்கள் என தனித்தனிக் குழுக்களுக்கான சில மாறுதல்கள் அனுமதிக்கப்பட்டன. பதினேழு விதிகள் தவிர, கால்பந்து வாரியத்தின் முடிவுகளும் பிற வழிநடத்தல்களும் கால்பந்து விளையாட்டின் கட்டுப்பாட்டில் பங்களிப்பு செய்கின்றன. ஆட்ட விதிகள் பிபா மூலம் வெளியிடப்படுகின்றன. ஆனால் பராமரிப்பது பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் தானே தவிர, பிபாவே அல்ல.[26][27]

வீரர்கள், சாதனங்கள் மற்றும் அதிகாரிகள்

தொகு

{{seealso|சங்கக் காற்பந்து ஆட்டக்காரர் நிலைகள்|அணிவகுப்பு (சங்கக் காற்பந்து)|[[சீருடை (சங்கக் காற்பந்து)}}

ஒவ்வொரு அணியிலும் அதிகப்பட்சமாய் பதினொரு வீரர்கள் உள்ளனர் (பதிலீட்டு வீரர்கள் இல்லாமல்), இவர்களில் ஒருவர் கோல்கீப்பராய் இருப்பார். ஒரு அணியில் குறைந்தபட்சம் ஏழு வீரர்கள் இருக்க விதிகள் கோருகின்றன. கோல்கீப்பர்கள் மட்டும் தான் பந்தினை தங்களது கரங்கள் அல்லது புஜங்கள் கொண்டு கையாள அனுமதிக்கப்படும். அதுவும் தங்களது கோல் பகுதிக்கு முன்னதாக பெனால்டி பகுதிக்குள்ளாகத் தான் அவ்வாறு செய்ய முடியும். கோல்கீப்பரல்லாத வீரர்கள் ஒரு பயிற்சியாளரால் பல்வேறு நிலைகளில் நிறுத்தப்படலாம் எனினும், இந்த நிலைகள் விதிகளால் வரையறுக்கப்பட்டவையோ அல்லது கோரப்படுபவையோ அல்ல.[23]

வீரர்கள் அணிந்து கொள்ள அவசியமான அடிப்படை சாதனங்கள் அல்லது உடைவரிசைகளில் சட்டை, கால்சட்டை, சப்பாத்து, காலுறை மற்றும் தேவையான தாடை கவசங்கள் ஆகியவை அடங்கும். தலைக்கவசம் என்பது அடிப்படையான அவசிய சாதனம் இல்லை என்றாலும், இன்று வீரர்கள் தங்களை தலைக் காயங்களில் இருந்து காத்துக் கொள்ள அவற்றை அணிந்து கொள்ளலாம். நகைகள் அல்லது கடிகாரங்கள் போன்ற தங்களுக்கோ அல்லது பிற வீரர்களுக்கோ ஆபத்தை விளைவிக்கக் கூடிய எதனையும் அணிந்து கொள்வதில் இருந்து வீரர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். கோல்கீப்பர் மற்ற வீரர்களிடம் இருந்தும் போட்டி அதிகாரிகளிடம் இருந்தும் எளிதில் பிரித்து அடையாளம் காணத்தக்க உடைகளை அணிய வேண்டும்.[28]

ஆட்டத்தின் போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் பதிலீட்டு வீரர்கள் கொண்டு மாற்றப்படலாம். அநேக போட்டித்திறன் மிகுந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு லீக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச பதிலீட்டு வீரர்களின் எண்ணிக்கை மூன்றாக இருக்கிறது. ஆயினும் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது பிற போட்டிகளில் அல்லது நட்புரீதியான ஆட்டங்களில் வேறுபடலாம். ஒரு பதிலீட்டு வீரரை களமிறக்குவதற்கான பொதுவான காரணங்கள் காயம், களைப்பு, திறன்படச் செயல்படாமை, தந்திர உத்தியான மாற்றம், அல்லது வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான கட்டத்தில் நேரத்தைக் கடத்துவது ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். பதிலீடு செய்யப்பட்ட வீரர் அந்த ஆட்டத்தில் அதற்குப் பின் பொதுவாக பங்கேற்க மாட்டார்.[29]

ஒரு ஆட்டம் நடுவரால் வழிநடத்தப்படுகிறது. அவருக்கு ஆட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முழு அதிகாரம் (விதி 5) உள்ளது. இவரது முடிவுகளே இறுதியானவை. நடுவருக்கு உதவியாக இரண்டு உதவி நடுவர்கள் இருப்பார்கள். பல உயர்நிலை ஆட்டங்களில், நான்காவது அதிகாரி ஒருவரும் இருப்பார். இவர் நடுவருக்கு உதவியாக இருப்பதோடு, அவசியப்படும் நேரத்தில் வேறொரு அதிகாரியை இடம்பெயர்த்துவதற்கும் வழிவகையளிப்பார்.[30]

ஆடுகளம்

தொகு
 
நிர்ணயமான ஆடுகள அளவுகள் ()

விதிகள் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நான்கு பிரித்தானிய கால்பந்து கழகங்களால் நிர்வகிக்கப்பட்டன என்பதால், ஒரு கால்பந்து ஆடுகளத்தின் நிர்ணயமான அளவுகள் ஆரம்பத்தில் இம்பீரியல் அலகுகளில் தான் குறிப்பிடப்பட்டன. இப்போதைய விதிகள் தோராயமான மெட்ரிக் இணை அளவுகளில் (மரபு அலகுகள் அடைப்புக்குறிக்குள் பின்தொடர) குறிப்பிடப்படுகின்றன.[31]

சர்வதேச வயதுவந்தோருக்கான போட்டிகளுக்கான ஆடுகளத்தின் நீளம் 100-110 மீ (110-120 யார்டு) மற்றும் அகலம் 64-75 மீ (70-80 யார்டு) என்கிற வரம்பில் இருக்கிறது. சர்வதேசப் போட்டிகள் அல்லாத ஆட்டங்களுக்கான களங்கள் 91-120 மீ (100-130 யார்டு) நீளம் மற்றும் 45-91 மீ (50-101 யார்டு) அகல வரம்பில் இருக்கலாம். ஆடுகளம் சதுரமாகி விடாத வகையில்.நீண்டிருக்கும் எல்லைக் கோடுகள் தொடு கோடுகள் அல்லது பக்கவாட்டுக் கோடுகளாகவும் , குறுகிய எல்லைக்கோடுகள் (இவற்றில் தான் கோல்கள் உள்ளன) கோல் கோடு களாகவும் உள்ளன. ஒவ்வொரு கோல் கோட்டின் நடுவிலும் ஒரு செவ்வகக் கோல் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.[32] செங்குத்தான கோல் கம்பங்களின் உள் விளிம்புகள் 7.3 மீ (8 யார்டு) இடைவெளியில் இருக்க வேண்டும். கோல் கம்பங்களின் ஆதரவின் மேலிருக்கும் கிடைமட்ட கம்பியின் கீழ் விளிம்பு தரைக்கு மேல் 2.44 மீ (8 அடி) உயரத்தில் இருக்க வேண்டும். கோலுக்குப் பின்னால் பொதுவாக வலைகள் அமைக்கப்படுகின்றன, என்றாலும் இது விதிகள் கட்டாயமாகக் கோருவன அல்ல.[33]

ஒவ்வொரு கோலுக்கும் முன்னதாக பெனால்டி பகுதி என்னும் ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதி கோல் கோட்டினால் குறிக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் கோல் கோட்டில் தொடங்கி கோல்கம்பங்களில் இருந்து 16.5 மீ (18 யார்டு) சென்று கோல் கோட்டிற்கு செங்குத்தாக ஆடுகளத்திற்குள் 16.5 மீ (18 யார்டு) வரை நீட்டிக்கப்படும். ஒரு கோடு அவற்றை இணைக்கும். இந்த பகுதிக்கு நிறைய செயல்பாடுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது கோல்கீப்பர் பந்தினை எங்கு கையாளலாம் என்பதைக் குறிப்பதற்கும், எங்கு தடுத்தாடும் அணியின் ஒரு உறுப்பினரால் செய்யப்படும் பெனால்டி மீறல் ஒரு பெனால்டி கிக் மூலம் தண்டிக்கப்படத்தக்கதாய் ஆகிறது என்பதைக் குறிப்பதற்கும் அவசியமாகிறது.[34]

கால அளவும் டை-பிரேக்கிங் முறைகளும்

தொகு

வயதுவந்தோர்க்கான கால்பந்து ஆட்டம் ஒரு பாதிக்கு 45 நிமிடங்கள் கொண்ட இரண்டு பாதிகள் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாதியும் நில்லாது நடக்கும், அதாவது பந்து ஆடுகளத்தை விட்டு வெளியில் சென்றாலும் கடிகாரம் நிறுத்தப்படாது. இரண்டு பாதிகளுக்கும் இடையில் பொதுவாக பாதிநேர இடைவேளையாக 15-நிமிடங்கள் இருக்கும். ஆட்டத்தின் நிறைவு முழுமை-நேரம் (ஃபுல்-டைம்) என்று அழைக்கப்படுகிறது.

நடுவர் தான் ஆட்டத்தின் அதிகாரப்பூர்வ நேரக்காப்பாளர் ஆவார். வீரர்கள் பதிலீடு, வீரர்கள் காயத்தின் போது செலவான நேரம், அல்லது பிற நிறுத்தங்களின் இழந்த நேரத்திற்கு இழப்பீடு செய்ய அவர் கூடுதல் நேரம் ஒதுக்கலாம். இந்த கூடுதல் நேரம் பொதுவாக நிறுத்த நேரம் அல்லது காய நேரம் என்று அழைக்கப்படுகிறது. முழுமையாக இது நடுவரின் முடிவுக்குட்பட்டதாகும். நடுவர் மட்டுமே ஆட்டத்தின் முடிவை அறிவிக்க முடியும். ஒரு நான்காவது அதிகாரி நியமிக்கப்படும் ஆட்டங்களில், பாதி நிறைவை நெருங்கும் சமயத்தில், நடுவர் தான் எவ்வளவு நிமிடங்கள் நிறுத்த நேர ஒதுக்கீடு அளிக்க எண்ணுகிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறார். நான்காவது அதிகாரி அதனை வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அந்த எண்ணிக்கையை காட்டும் ஒரு பலகையைக் காட்டுவதன் மூலம் தெரிவிக்கிறார்.குறிப்பிடப்படும் நிறுத்த நேரம் நடுவரால் மேலும் நீட்டிக்கப்பட முடியும்.[35] ஸ்டோக் மற்றும் ஆஸ்டன் வில்லா ஆகிய இரு அணிகளுக்கு இடையில் 1891 ஆம் ஆண்டில் நடந்த ஆட்டம் ஒன்றின் போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாகவே இந்த கூடுதல் நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1-0 என பின்தங்கியிருக்க, ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில், ஸ்டோக்கு அணிக்கு ஒரு பெனால்டி வழங்கப்பட்டது. வில்லாவின் கோல்கீப்பர் அதனை மைதானத்திற்கு வெளியே செல்லும்படி உதைத்தார். பந்து திரும்பவும் கொண்டு வரப்படுவதற்குள், மொத்த ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்து போய் ஆட்டம் முடிந்து விட்டது.[36]

சுற்றுப் போட்டிகளில், ஆட்டங்கள் டிராவில் முடியலாம். ஆனால் தோற்றால் வெளியேறும் சுற்றுப் போட்டிகளில் வழக்கமான நேரத்தின் முடிவில் சம எண்ணிக்கையிலான கோல்களுடன் ஆட்டம் இருந்தால், கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் நீளும். இது இரண்டு 15 நிமிட காலங்களைப் பெற்றிருக்கும். கூடுதல் நேரத்திற்குப் பின்னும் கோல் எண்ணிக்கை சமமாய் இருந்தால், எந்த அணி போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்பதைத் தீர்மானிக்க சில போட்டிகளில் பெனால்டி ஷூட் அவுட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. கூடுதல் நேர காலத்தில் போடப்படும் கோல்கள் ஆட்டத்தின் இறுதி கோல் எண்ணிக்கையில் சேரும். ஆனால் ஆட்ட முடிவு தீர்மானிப்புக்காக நடத்தப்படும் பெனால்டி ஷூட் அவுட் கோல்கள் எந்த அணி போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும். அவை இறுதிக் கோல் பட்டியலில் சேராது.

இரு-கால் ஆட்டங்கள் கொண்ட போட்டிகளில், ஒவ்வொரு அணியும் தங்கள் தாயகத்தில் ஒருமுறை போட்டியிடுகிறது. இரண்டு ஆட்டங்களில் இருந்துமான கோல்களின் கூட்டு எண்ணிக்கை முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும். கூட்டு எண்ணிக்கை சமமாக இருக்கும் சமயத்தில், அவே கோல்கள் விதி வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க பயன்படலாம். அந்த சமயத்தில் தாயகத்தில் இருந்து வெளிமண்ணில் விளையாடிய ஆட்டத்தில் அதிக கோல்களை பெற்ற அணியே வென்றதாகக் கருதப்படும். அப்படியும் முடிவு சமமாக இருக்குமாயின், பெனால்டி ஷுட் அவுட் முறை பொதுவாக அவசியப்படும். சில போட்டிகளில் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தால் மறுஆட்டம் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

1990களின் இறுதியிலும் 2000களின் ஆரம்பத்திலும், ஒரு பெனால்டி ஷூட் அவுட் இல்லாமலே வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகளை சர்வதேச கால்பந்து வாரியம் பரிசோதித்தது. கூடுதல் நேரத்தில் முதல் கோல் போடப்பட்ட உடனேயோ (தங்க கோல் ), அல்லது கூடுதல் நேரத்தின் முதல் காலத்தின் நிறைவில் முன்னணி கொண்டிருக்கும் (வெள்ளி கோல் ) சமயத்திலோ முடித்து விடும் வழி முயற்சிக்கப்பட்டது. தங்க கோல் 1998 மற்றும் 2002 உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்டது. ஒரு தங்க கோல் மூலம் தீர்மானிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை ஆட்டம் 1998 ஆம் ஆண்டில் பராகுவே அணியை பிரான்ஸ் அணி வென்ற போட்டியாகும். ஒரு பெரிய போட்டியில் தங்க கோல் போட்ட முதல் நாடு ஜெர்மனியாகும். இது யூரோ 1996 போட்டி இறுதியில் செக் குடியரசை வீழ்த்தியது. வெள்ளி கோல் முறை யூரோ 2004 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு பரிசோதனைகளுமே பின்பு சர்வதேச கால்பந்து வாரியத்தால் கைவிடப்பட்டிருக்கின்றன.[37]

பந்து ஆடப்படும் மற்றும் ஆடப்படா நிலை

தொகு

விதிகளின் படி, ஒரு ஆட்டத்தின் போதான இரண்டு அடிப்படை ஆட்ட நிலைகளாக பந்து ஆடப்படும் நிலை மற்றும் பந்து ஆடப்படாத நிலை ஆகியவை இருக்கின்றன. பந்து ஆடுகளத்தை விட்டு வெளியில் செல்லும் போதோ, அல்லது நடுவரால் ஆட்டம் நிறுத்தப்படும்போதோ தவிர ஆட்ட நேரம் தொடங்கியதில் இருந்து ஆட்ட நேரம் முடியும் வரையிலும், பந்தானது எல்லா சமயங்களிலும் ஆடப்படும் நிலையில் இருக்கிறது. பந்து ஆடப்படாமல் போகும் போது, ஆட்டம் ஏன் ஆடப்படாமல் போனது என்பதைப் பொறுத்து எட்டு வகை மறுதுவக்க முறைகளில் ஒன்றின் மூலம் ஆட்டம் மறுதுவக்கம் செய்யப்படுகிறது.

  • கிக்-ஆஃப்: எதிரணி ஒரு கோல் போட்ட உடன், அல்லது ஒவ்வொரு ஆட்டநேரம் துவங்குவதற்குமான முறை.[21]
  • த்ரோ-இன்: பந்து தொடுகோட்டை மொத்தமாகத் தாண்டியிருக்கும்போது; பந்தை கடைசியாக தொட்டிருந்த அணிக்கு எதிரான அணிக்கு இது வழங்கப்படுகிறது.[38]
  • கோல் கிக்: கோல் போடப்படாமல் பந்து கோல் கோட்டை முழுவதுமாய் கடந்து விட்டிருந்து, கடைசியாக தாக்குதல் தொடுத்த அணி வீரரால் தொடப்பட்டதாய் இருந்தால் இது தடுப்பு அணிக்கு வழங்கப்படுகிறது.[39]
  • கார்னர் கிக்: கோல் போடப்படாமல் பந்து கோல் கோட்டை முழுவதுமாய் கடந்து விட்டிருந்து, கடைசியாக தடுப்பு அணி வீரரால் தொடப்பட்டதாய் இருந்தால்; இது தாக்குதல் அணிக்கு வழங்கப்படுகிறது.[40]
  • இன்டைரக்ட் ஃப்ரீ கிக்: "தண்டிக்க-வேண்டாத" மீறல்கள், சில நுட்பமான மீறல்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட மீறல் நிகழவில்லை என்றாலும் ஒரு வீரரை எச்சரிப்பதற்கு அல்லது வெளியேற்றுவதற்கு ஆட்டம் நிறுத்தப்படும்போது, அதனைத் தொடர்ந்து எதிரணிக்கு இது அளிக்கப்படுகிறது. ஒரு இன்டைரக்ட் ஃப்ரீ கிக்கில் இருந்து நேரடியாக ஒரு கோல் போடப்பட முடியாததாக இருக்கும்.[41]
  • டைரக்ட் ஃப்ரீ கிக்: சில பட்டியலிடப்பட்ட "தண்டிக்கத்தக்க" மீறல்களைத் தொடர்ந்து மீறலுக்கு உள்ளான அணிக்கு இது வழங்கப்படுகிறது.[41]
  • பெனால்டி கிக்: பொதுவாக ஒரு டைரக்ட் ஃப்ரீ கிக் கொண்டு தண்டிக்கப்படத்தக்க ஒரு மீறல் எதிரணி வீரரின் பெனால்டி பகுதிக்குள் நிகழ்ந்திருந்தால் அப்போது மீறலுக்கு உள்ளான அணிக்கு அது வழங்கப்படுகிறது.[42]
  • டிராப்டு பால்: ஒரு வீரருக்கு பலத்த காயம் ஏற்படுவது, அல்லது வெளித்தரப்பிலிருந்து ஏதேனும் குறுக்கிடல், அல்லது ஒரு பந்து குறைபாடுற்றுவிட்டது போன்ற பிற ஏதேனும் காரணத்தால், நடுவர் ஆட்டத்தை நிறுத்தியிருந்தால் நிகழ்கிறது. இந்த மறுதுவக்கமானது வயது வந்தோருக்கான ஆட்டங்களில் அபூர்வமாகத் தான் நிகழும்.[21]

துர்நடத்தை

தொகு
   
மஞ்சள் அட்டை எச்சரிக்கவும் சிவப்பு அட்டை வீரரை வெளியேற்றவும் பயன்படுகிறது. 1970 பிபா உலகக் கோப்பையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வண்ணங்கள் அதன்பின் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பந்து ஆட்டத்தில் இருக்கையில் ஆட்ட விதிகளில் பட்டியலிடப்பட்ட ஒரு தவறை ஒரு வீரர் புரியும் போது ஒரு மீறல் நிகழ்கிறது. ஒரு மீறலாகக் கருதப்படக் கூடிய தவறுகள் 12 ஆம் விதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே பந்தை கைகளில் தொடுவது, எதிரணி வீரரை இடறி விடுவது, அல்லது எதிரணி வீரரை பிடித்துத் தள்ளுவது ஆகியவை "தண்டனைக்குரிய மீறல்களுக்கு" உதாரணங்களாகும். இந்த தவறு எங்கு நிகழ்த்தப்பட்டது என்பதைப் பொருத்து ஒரு டைரக்ட் ஃப்ரீ கிக் மூலமோ அல்லது பெனால்டி கிக் மூலமோ தண்டிக்கப்படுகிறது. மற்ற மீறல்கள் இன்டைரக்ட் ஃப்ரீ கிக் மூலமாக தண்டிக்கப்படுகின்றன.[20]

ஒரு வீரர் அல்லது பதிலீட்டு வீரரின் துர்நடத்தைக்கு ஒரு எச்சரிக்கை (மஞ்சள் அட்டை) அல்லது வெளியேற்றத்தின் (சிவப்பு அட்டை) மூலமாக நடுவர் தண்டிக்கலாம். அதே ஆட்டத்தில் இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப் பெற்றால் அது சிவப்பு அட்டைக்கு சமமாகிறது, எனவே அது வீரர் வெளியேற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. மஞ்சள் அட்டை காண்பிக்கப் பெறும் வீரரின் பெயரை நடுவர் அதிகாரப்பூர்வ குறிப்பேட்டில் எழுதிக் கொள்கிறார்.

 
பெனால்டி பகுதிக்குள் தவறு செய்ததால் கொடுக்கப்பட்ட ஒரு பெனால்டி கிக்கை கோலாக்குகிறார் ஒரு வீரர்.

ஒரு வீரர் வெளியேற்றப்பட்டால், அவரது இடத்தில் பதிலீட்டு வீரர் ஒருவரை களமிறக்க முடியாது. துர்நடத்தை என்று வகுக்கப்படுகிற தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றாலும் வரையறைகள் பரந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக "விளையாட்டுநலன் கெடுக்கும் நடத்தை" என்பதானது ஆட்டத்தின் நோக்கத்தை மீறும் அநேக நிகழ்வுகளைக் கையாள பயன்படுத்தப்பட முடியும். ஒரு வீரர் அல்லது பதிலீட்டு வீரருக்கு ஒரு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையை நடுவர் காண்பிக்க முடியும். மேலாளர்கள் மற்றும் உதவி ஆட்கள் போன்ற வீரர்கள் அல்லாதவர்களுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காண்பிக்க முடியாது. ஆனால் பொறுப்பான முறையில் அவர்கள் நடந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் அவர்கள் தொழில்நுட்பப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படலாம்.[20]

தவறு எந்த அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதோ அந்த அணிக்கு அனுகூலமளிக்கலாம் என்கிற நிலையில் ஆட்டத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, ஆட்டத்தை தொடர்வதற்கு நடுவர் அனுமதிக்கலாம். இது "அனுகூலத்தை ஆடுவது" என்று அழைக்கப்படுகிறது. அனுகூலம் ஆடப்படுவதால் ஒரு தவறு தண்டிக்கப்பட முடியாதிருக்கும் சூழலிலும், ஆட்டம் அடுத்து நிற்கும் சமயத்தில் தவறிழைத்தவருக்கு துர்நடத்தைக்கான தண்டனை அளிக்கப்படலாம்.

காற்பந்து மேலாண்மை அமைப்புகள்

தொகு

கால்பந்து (மற்றும் தொடர்புள்ள கடற்கரை கால்பந்து, ஐவர் கால்பந்து, மகளிர் கால்பந்து போன்ற விளையாட்டுகள்) விளையாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச கட்டுப்படுத்தும் அமைப்பு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) ஆகும். ஃபிஃபா-வின் தலைமையகம் ஜூரிச்சில் அமைந்துள்ளது.

பிபாவுடன் ஆறு பிராந்திய கூட்டமைப்புகள் இணைந்துள்ளன; அவையாவன:

தேசியக் கால்பந்துச் சங்கங்கள், நாடுகளுக்குள் கால்பந்து விளையாட்டினை மேலாண்மை செய்கின்றன. இவை ஃபிஃபா மற்றும் தங்கள் கண்ட கூட்டமைப்புகளுடன் இணைந்துள்ளன.

சர்வதேசப் போட்டிகள்

தொகு
 
ஒரு சர்வதேச ஆட்டத்திற்கு முன் ஒரு நிமிட மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது
 
கால்பந்தில், ரசிகர்களின் அடிப்படை நோக்கம் போட்டியின் போது தங்கள் அணியை ஊக்குவிப்பதாகும்

சங்கக் கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சர்வதேசப் போட்டி உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். இது ஃபிஃபா-வினால் நடத்தப்படுகிறது. இப்போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இறுதிச் சுற்றில் இடம்பிடிப்பதற்காக தகுதிச் சுற்று போட்டிகளில் 190க்கும் அதிகமான தேசிய காற்பந்து அணிகள், கண்ட கூட்டமைப்புகளின் எல்லைக்குள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறுவதான இறுதிப் போட்டித் தொடரில் 32 தேசிய அணிகள் பங்குபெறுகின்றன.[43] 2006 உலகக்கோப்பை கால்பந்து செருமனியில் நடந்தது; 2010 உலகக்கோப்பை கால்பந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 2014 உலகக்கோப்பை கால்பந்து பிரேசிலில் நடைபெற இருக்கிறது.[44]

1900 ஆம் ஆண்டு முதல் (லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 1932 விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்த்த) ஒவ்வொரு கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் ஒரு கால்பந்துப் போட்டி நடக்கிறது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்படும் கால்பந்துப் போட்டிகள், உலகக் கோப்பை போன்றதொரு அந்தஸ்தை வென்றிருந்தது (குறிப்பாக 1920களின் சமயத்தில்). ஆரம்ப காலகட்டத்தில், இந்த நிகழ்வு தொழில்முறையற்ற காற்பந்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் என்பதாக இருந்தது,[11] ஆனால், 1984 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் சில நிபந்தனைகளுடன் தொழில்முறை வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது, ஒலிம்பிக்கில் ஆண்கள் காற்பந்துப் போட்டி 23 வயதுக்குட்பட்டோருக்குத்தான் நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில், 23 வயதை மீறிய குறிப்பிட்ட எண்ணிக்கை வீரர்கள் விளையாட ஒலிம்பிக் சங்கம் அனுமதித்திருந்தது;[45] ஆனால் அந்த நடைமுறை 2008-ஆம் ஆண்டில் இல்லாமல் போனது. பொதுவாக ஒலிம்பிக் கால்பந்துப் போட்டி, உலகக்கோப்பை காற்பந்து போன்ற அதே சர்வதேச முக்கியத்துவம் மற்றும் கவுரவத்தைக் கொண்டிருப்பதில்லை. பெண்களுக்கான போட்டித் தொடர் 1996-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது; ஆண்கள் போட்டிக்கு மாறாக, வயது கட்டுப்பாடுகள் இல்லாது, முழுமையான சர்வதேச அணிகள் மகளிர் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகின்றன. ஆகையால் இது ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு சர்வதேச அந்தஸ்தைக் கொண்டிருக்கிறது.

உலகக்கோப்பைக்கு அடுத்தபடியாக, மிக முக்கியமான சர்வதேச கால்பந்து போட்டிகளாக இருப்பவை கண்டவாரியான கோப்பைப் போட்டிகளாகும். ஒவ்வொரு கண்ட கூட்டமைப்பினால் நடத்தப்படும் இக்கோப்பைப் போட்டித்தொடர்களில், அந்தந்த கண்ட கூட்டமைப்புக்களைச் சேர்ந்த தேசிய அணிகள் போட்டியிடுகின்றன. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி(யூரோ) (UEFA), கோப்பா அமெரிக்கா (CONMEBOL), ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை (CAF), ஆசியக் கோப்பை (AFC), வட அமெரிக்க தங்கக் கோப்பை (கால்பந்து) (CONCACAF) மற்றும் ஓசியானியா நாடுகளின் கோப்பை ஆகியவை இவ்வகையில் வருகின்றன. ஒவ்வொரு கண்ட போட்டியின் வெற்றியாளர்களும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் மோதுகின்றனர்.[46]

உள்நாட்டுப் போட்டிகள்

தொகு
 
பந்தைக் கைப்பற்ற இரண்டு வீரர்கள் முயல்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் கூட்டிணைவு அமைப்புகளை நடத்துகின்றன. இவை பெரும்பாலும் பல்வேறு படி-நிலைகளை அடக்கியதாக இருக்கும். பருவம் முழுவதும் அணிகள் பெறும் புள்ளிகளைப் பொறுத்து, கூட்டிணைவு அட்டவணையில் வரிசைப்படுத்தப்படும். வழமையாக, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அணியும் தனது கூட்டிணைவில் இருக்கும் மற்ற ஒவ்வொரு அணியுடனும் தொடர் சுழல்முறைப் போட்டி முறையில் தன்னக மற்றும் வெளியக சுற்றுக்களில் விளையாடும். பருவத்தின் முடிவில், கூட்டிணைவு அட்டவணையில் முதலிடம் பெறும் அணி வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படும். முன்னணி இடங்களைப் பிடிக்கும் சில அணிகள், உயர்நிலைக் கூட்டிணைவுகளுக்கு உயர்த்தப்படலாம்; கீழிடத்தைப் பிடிக்கும் சில அணிகள் கீழ்நிலைக் கூட்டிணைவுகளுக்கு இறக்கப்படலாம்.

மேலும், ஒரு நாட்டின் உயர்ந்தபட்ச கூட்டிணைவில் சிறப்பான இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து வரும் பருவத்தில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறலாம். இந்த அமைப்பு இலத்தீன் அமெரிக்க நாடுகளைத் தவிர்த்த நாடுகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது; அங்கு,அபெர்ச்சுரா மற்றும் குளோசுரா (தொடக்கம் மற்றும் நிறைவு) என்ற இருநிலைகளில் கூட்டிணைவுகள் நடத்தப்பட்டு - இரண்டுக்கும் வாகையர் பட்டங்கள் தனித்தனியே அளிக்கப்படும். அநேக நாடுகள் கூட்டிணைவு அமைப்புடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைப் போட்டிகளையும் நடத்துகின்றன; இப்போட்டிகள் ஒற்றை வெளியேற்றப் போட்டி முறையில் நடத்தப்படும் - வெல்வோர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவர்; தோற்போர் வெளியேறுவர்.

சில நாடுகளின் முன்னணி கூட்டிணைவுகள் மிக உயர்ந்த அளவு ஊதியம் வழங்கப்படும் நட்சத்திர வீரர்களைக் கொண்டிருக்கின்றன; சிறு நாடுகளிலும் கீழ் கூட்டிணைவுகளிலும் விளையாடும் வீரர்கள் பகுதி நேர ஆட்டக்காரர்களாகவோ அல்லது தொழில்முறையற்ற வீரர்களாகவோ இருப்பர். ஐரோப்பாவின் ஐந்து முன்னணி கூட்டிணைவுகள் - தி பிரீமியர் லீக் (இங்கிலாந்து),[47] சீரீ ஆ (இத்தாலி), லா லீகா (எசுப்பானியா), புன்டசுலீகா (செருமனி) மற்றும் லீக் 1 (பிரான்சு) - ஆகியவை உலகின் மிகச் சிறந்த வீரர்களை ஈர்ப்பவையாக இருக்கின்றன. இந்தக் கூட்டிணைவின் அணிகளின் மொத்த சம்பள செலவு £600 மில்லியனுக்கும் (€763 மில்லியன் அல்லது 1.185 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகமாகும்.[48]

குறிப்புகள்

தொகு
  1. Guttman, Allen. "The Diffusion of Sports and the Problem of Cultural Imperialism". In Eric Dunning, Joseph A. Maguire, Robert E. Pearton (ed.). The Sports Process: A Comparative and Developmental Approach. Champaign: Human Kinetics. pp. p129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0880116242. the game is complex enough not to be invented independently by many preliterate cultures and yet simple enough to become the world's most popular team sport {{cite book}}: |access-date= requires |url= (help); |pages= has extra text (help); Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. Dunning, Eric. "The development of soccer as a world game". Sport Matters: Sociological Studies of Sport, Violence and Civilisation. London: Routledge. pp. p103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415064139. During the twentieth century, soccer emerged as the world's most popular team sport {{cite book}}: |access-date= requires |url= (help); |pages= has extra text (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. Frederick O. Mueller, Robert C. Cantu, Steven P. Van Camp. "Team Sports". Catastrophic Injuries in High School and College Sports. Champaign: Human Kinetics. pp. p57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873226747. Soccer is the most popular sport in the world, and its popularity is growing in the United States. It has been estimated that there were 22 million soccer players in the world in the early 1980s, and that number is increasing. In the United States soccer is now a major sport at both the high school and college levels {{cite book}}: |access-date= requires |url= (help); |pages= has extra text (help); Cite has empty unknown parameters: |origdate= and |coauthors= (help); Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: multiple names: authors list (link)
  4. "2002 FIFA World Cup TV Coverage". FIFA official website. 2006-12-05. Archived from the original on 2006-12-30. பார்க்கப்பட்ட நாள் 2008-01-06. (இணையகாப்பகம்)
  5. "History of Football". FIFA. Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2006-11-20.
  6. Harvey, Adrian (2005). Football, the first hundred years. London: Routledge. pp. pp.126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415350182. {{cite book}}: |pages= has extra text (help)
  7. Winner, David (2005-03-28). "The hands-off approach to a man's game". The Times. http://www.timesonline.co.uk/article/0,,27-1544006,00.html. பார்த்த நாள்: 2007-10-07. 
  8. 8.0 8.1 "History of the FA". Football Association website. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.
  9. "The International FA Board". FIFA. Archived from the original on 2007-04-22. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02. (இணையகாப்பகம்)
  10. "The History Of The Football League". Football League website. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07.
  11. 11.0 11.1 "Where it all began". FIFA official website. Archived from the original on 2007-06-08. பார்க்கப்பட்ட நாள் 2007-06-08. (இணையக்காப்பகம்
  12. Ingle, Sean and Barry Glendenning (2003-10-09). "Baseball or Football: which sport gets the higher attendance?". Guardian Unlimited. http://football.guardian.co.uk/news/theknowledge/0,9204,1059366,00.html. பார்த்த நாள்: 2006-06-05. 
  13. "TV Data". FIFA website. Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02.
  14. "FIFA Survey: approximately 250 million footballers worldwide" (PDF). FIFA website. Archived from the original (PDF) on 2006-09-15. பார்க்கப்பட்ட நாள் 2006-09-15. (இணையகாப்பகம்)
  15. Dart, James and Paolo Bandini (2007 பிப்ரவரி 21). "Has football ever started a war?". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24. {{cite web}}: Check date values in: |date= (help)
  16. Daniel W. Drezner (2006-06-04). "The Soccer Wars". தி வாசிங்டன் போஸ்ட்: p. B01. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/06/02/AR2006060201401.html. பார்த்த நாள்: 2008-05-21. 
  17. Mazumdar, Partha (2006-06-05). "The Yanks are Coming: A U.S. World Cup Preview". Embassy of the United States in London. Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  18. Blain, Rebecca. "The World's Most Beloved Sport - The History of Soccer". fussballportal.de. Archived from the original on 2007-12-30. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07.
  19. "FIFA Statutes" (PDF). FIFA. Archived from the original (PDF) on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07.
  20. 20.0 20.1 20.2 "Laws of the game (Law 12)". FIFA. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  21. 21.0 21.1 21.2 "Laws of the game (Law 8)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  22. "England Premiership (2005/2006)". Sportpress.com. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-05.
  23. 23.0 23.1 "Laws of the game (Law 3–Number of Players)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  24. "Positions guide, Who is in a team?". BBC. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  25. "Formations". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  26. "Laws Of The Game". FIFA. Archived from the original on 2007-09-01. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02.
  27. "The History of Offside". Julian Carosi. பார்க்கப்பட்ட நாள் 2006-06-03.
  28. "Laws of the game (Law 4–Players' Equipment)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  29. "Laws of the game (Law 3–Substitution procedure)". FIFA. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  30. "Laws of the game (Law 5–The referee)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  31. Summers, Chris (2004-09-02). "Will we ever go completely metric?". BBC. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  32. "Laws of the game (Law 1.1–The field of play)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  33. "Laws of the game (Law 1.4–The Field of play)". FIFA. Archived from the original on 2008-03-22. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  34. "Laws of the game (Law 1.3–The field of play)". FIFA. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  35. "Laws of the game (Law 7.2–The duration of the match)". FIFA. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  36. தி சன்டே டைம்ஸ் இல்லஸ்ட்ரேடட் ஹிஸ்டரி ஆஃப் புட்பால் ரீட் இன்டர்னேஷனல் புக்ஸ் லிமிடெட் 1996. ப.11 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85613-341-9
  37. Collett, Mike (2004-07-02). "Time running out for silver goal". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  38. "Laws of the game (Law 15–The Throw-in)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  39. "Laws of the game (Law 16–The Goal Kick)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  40. "Laws of the game (Law 17–The Corner Kick)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  41. 41.0 41.1 "Laws of the game (Law 13–Free Kicks)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  42. "Laws of the game (Law 14–The Penalty Kick)". FIFA. Archived from the original on 2007-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  43. போட்டி வரலாற்றில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை மாறுபட்டு வந்துள்ளது. மிகச் சமீபத்தில் 1998-ஆம் ஆண்டில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 24-இல் இருந்து 32-ஆக உயர்த்தப்பட்டது.
  44. "2010 FIFA World Cup South Africa". FIFA World Cup website. Archived from the original on 2013-11-20. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07.
  45. "Football - An Olympic Sport since 1900". IOC website. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07.
  46. "Organising Committee strengthens FIFA Club World Cup format". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. 2007-08-24. Archived from the original on 2009-08-21. பார்க்கப்பட்ட நாள் 2007-10-07. {{cite web}}: Check date values in: |date= (help)
  47. "Premier League conquering Europe". BBC News. 2008-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
  48. Taylor, Louise (2008-05-29). "Leading clubs losing out as players and agents cash in". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2008-11-28.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்பந்து_கூட்டமைப்பு&oldid=4085344" இலிருந்து மீள்விக்கப்பட்டது