சரதுசம் (ஆங்கிலம்: Zoroastrianism, சொராஷ்ட்ரியம்) உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றாகும். சிறுபான்மையாக இது மசுதயசுனா என்றும் மயியானியம்என்றும் சரத்துசரின் நெறி என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1] ஈரானிய இறைதூதர் சொராட்டிரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிவு வடிவமான அகுரா மஸ்தா எனும் இறைவனைப் போற்றுவதாக இந்தச் சமயம் எழுச்சி பெற்றது.[2]

தீ (அதர்), சொராட்டிரிகளின் இறைவடிவங்களில் ஒன்றாகும்.

பொ.மு 5000 முதல் 2000 ஆண்டுகளுக்கு இடையில் சொராட்டிரியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[3] பொ.பி 633 முதல் 654 வரை இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பு, சொராட்டிரியமே பாரசீகப் பேரரசுகளின் முதன்மை நெறியாக விளங்கியிருக்கிறது.[4] இன்றைக்கும் பெரும்பாலான சொராட்டிரிகள் இந்தியாவிலும் ஈரானிலும் வாழ்ந்து வருகின்றனர்.[5]

அறிமுகம்

தொகு

சொராட்டிரர் (ஜொராஸ்ட்ரர்) என்பது, அந்நெறியை உண்டாக்கிய ‘’சரத்துஸ்திரர்’’ எனும் ஞானியின் கிரேக்க மொழி ஒலிப்பு ஆகும். வெவ்வேறு மொழிகளில் அவர் பலவிதமாக அழைக்கப்படுகின்றார். வடகீழ் ஈரானில் அல்லது தென்மேல் ஆப்கானில் பிறந்திருக்கக்கூடிய சொராட்டிரர் இந்தியப் பண்பாட்டின் தொல்வடிவங்களில் ஒன்றுக்கு நெருக்கமானதும், பல்தெய்வங்களையும் பலியிடலையும் நம்பியதுமான சமூகமொன்றில் தோன்றினார்.[6] சொராட்டிரிய பழம்பெரும் நூல்களில் இவரது வாழ்க்கை ஓரளவு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு பூசகராகப் பணியாற்றிய சொராட்டிரியருக்கு மனைவி, மூன்று மகன், மூன்று மகள் இருந்த செய்தியை அவை சொல்கின்றன. ஹோமச்செடியை (வேதங்களின் சோமச்செடி) உட்கொள்வதையும் விலங்குப்பலியையும் நிராகரித்த அவர், சாதியப்பாகுபாடு கொண்ட தொல் ஈரானிய பழஞ்சமயத்தை எதிர்த்தே இந்நெறியைத் தோற்றுவித்தார் என்று அவேஸ்தா காதாக்கள் சொல்கின்றன.[7]

இறைத்தூதர் சொராட்டிரரின் காதா என்று அறியப்படுகின்ற திருவார்த்தைகள் சொராட்டிரிய மதத்துக்குரிய புனித நூல் அவேஸ்தாவில் அடங்குகின்றன. இந்நூலில் இறைவனை அகுரா (படைத்தவன்) மாஸ்டா (முற்றறிவாளன்) என்ற பெயர்களால் குறிப்பிடும் சொராட்டிரர், இறைவன் ஒருவனே என்பதையும் வலியுறுத்துகிறார். அகுரா மாஸ்டா என்ற பெயரைப் பின்பற்றி, சொராட்டிரிய நெறி, அதைப் பின்பற்றுவோரால் அதிகம் மாஸ்டாயாஸ்னா என்றே அறியப்படுகின்றது. அது மாஸ்டாவின் வழிபாடு எனப் பொருள்படும் சொல்.

வரலாறு

தொகு
 
சொராட்டிரிய அகாமனிசியப் பேரரசு, அதன் பொற்காலத்தில் (பொ.மு 480) எட்டு மில்லியன் சதுர கி.மீ பரப்பில் விளங்கியது.[8]

தொல்பழங்காலம்

தொகு
 
பொ.மு 3 முதல் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சொராட்டிரிய பூசகரின் களிமண் சிற்பம்.

பொ.மு 2000ஆமாண்டுக்கு முற்பட்ட இந்தோ –ஈரானிய நம்பிக்கைகளின் பரிணாமத் தொடர்ச்சியாக இந்நெறி ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது.[9] இந்நெறியின் இறைதூதர் சொராட்டிரியர் பொ.மு 10 முதல் 6ஆம் நூற்றாண்டுக்கு இடையே வசித்தவராகக் கொள்ளப்படுகின்றார்.[10] பொ.மு 5ஆம் நூற்றாண்டிற்குரிய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசுவின் குறிப்பொன்று திறந்தவெளியில் இறந்தோரை இடும் சொராட்டிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றது. சொராட்டிரிகள் ‘’மாகிகள்’’ என்று அதில் சொல்லப்படுவதுடன், ஈரானின் அகாமனிசியப் பேரரசு காலத்தில் (648–330 பொ.மு), அவர்கள் அரசியலில் பெற்றிருந்த முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்படுகின்றது அகாமனிசியப் பேரரசு அகுரா மாஸ்டா கொண்டிருந்த பக்தியை பெஹிஸ்ட்டன் கல்வெட்டு முதலான சாசனங்களில் காணலாம். அவெஸ்தா நூலின் பெரும்பாலான பாகங்கள் இக்காலத்திலேயே இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இக்காலத்தில் உருவான அகாமனிசிய நாட்காட்டியும், யசதாக்கள் (சொராட்டிரிய தேவதூதர்கள்) பற்றிய நம்பிக்கையும் இன்றும் மாஸ்டா நெறியினர் மத்தியில் தொடர்கின்றது.

பேரரசர் அலெக்சாந்தர் பெர்சப்பொலிஸ் நகரைக் கைப்பற்றியபோது, பெரும்பாலான சொராட்டிரிய நூல்கள் அழிக்கப்பட்டதாக பிற்கால மாஸ்டா நூல்கள் கூறுகின்றன. அலெக்சாந்தரின் படையெடுப்பால் சொராட்டிரியம் நலிவுற்றாலும், அகாமனிசியப் பேரரசின் முக்கியமான பாகங்களாக விளங்கிய அனத்தோலியா, மெசொப்பொத்தேமியா, காக்கேசியா முதலான நகரங்கள் முக்கியமான சொராட்டிரிய மையங்களாக தொடர்ந்தும் திகழ்ந்தன. [10] பொ.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் இசுட்ராபோ, நெருப்பை வழிபடும் சொராட்டிரிய பாரசீகர்கள் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார்.[11] பார்த்தியப் பேரரசு காலம் வரை, ஆர்மேனிய அரசின் அரசநெறியாக சொராட்டிரிய சமயத்தின் ஒரு வடிவம் விளங்கியதற்கான ஐயமற்ற சான்றுகள் கிடைத்துள்ளன. [12] அடுத்து வந்த சாசானியப் பேரரசு, தான் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் தீக்கோயில்களை அமைத்ததுடன், சொராட்டிரியத்தின் இன்னொரு வடிவமான சூர்வனியத்தை பரப்புவதில் தீவிரமாக இருந்தது. காக்கேசியா பகுதியில் ( இன்றைய அசர்பைஜான்) சொராட்டிரியம் நிலைகொண்டது இக்காலத்தில் தான் என்று சொல்லப்படுகின்றது.

கிறித்துவ உரோமைப் பேரரசுடன் பாரசீக அரசுகளுக்கு உண்டான உறவை அடுத்து பொ.பி முதலாம் நூற்றாண்டளவில், அங்கு கிறித்தவம் கால்பதிக்கலானது,[13] அது மெல்ல மெல்ல சொராட்டிரியத்தை முற்றாக வீழ்ச்சியடைய வைத்தாலும், பொ.பி 5ஆம் நூற்றாண்டு வரை, இரண்டாம் பெருநெறியாகவேனும் சொராட்டிரியம் மத்திய ஆசியாவில் விளங்கியது என்பதற்கான சான்றுகள் உண்டு.[14]

மத்தியகாலம்

தொகு
 
இஸ்லாமியமயமாக்கத்தை அடுத்து பெருமளவு சொராட்டிரர்கள் தம் தாய்மண்ணான குராசானிலிருந்து புலம்பெயர்ந்தனர்.

பொ.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு அங்கிருந்த சொராட்டிரிய அரசை தகர்த்தெறிந்ததுடன், பாரசீகத்தை முற்றாக இஸ்லாமிய மயமாக்கியது. உமையா கலீபகத்தின் கீழ் வந்த பாரசீக நாட்டில், இஸ்லாமியர் அல்லாதோருக்கான உரிமைகளுடன் சொராட்டிரிகள் வாழ அனுமதிக்கப்பட்டனர் .[15] எனினும் சொராட்டிரி எண்ணிக்கை குறைந்து அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாக மதமாற்றப்பட்டதும், அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பொ.பி 9ஆம் நூற்றாண்டில், தன் கையாலேயே சொராட்டிரியர் நட்டதாகச் நம்பிப் போற்றப்பட்ட ஊசியிலை மரமொன்று, மாளிகை ஒன்றைக் கட்டுவதற்காக, குராசான் நகரில் தறிக்கப்பட்ட சம்பவம், இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது..[16]

இஸ்லாமிய மயமாக்கத்தால் பல்வேறு இடர்ப்பாடுகளைசந்தித்தாலும், சொராட்டிரியம் பக்தாத்திலிருந்து சற்று அப்பால் அமைந்திருந்த சில பகுதிகளில் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டது. புகாராவில் இன்றைய உஸ்பெகிஸ்தான்) ஒன்பதாம் நூற்றாண்டளவில் அரேபியத் தளபதி ஒருவர் மீண்டும் மீண்டும் மூன்று தடவை அரசாணை பிறப்பித்து மக்களை இஸ்லாமுக்கு மதமாற்றி, அதில் தோல்வியடைந்தது இவற்றில் குறிப்பிடத்தக்கது. இறுதியில் வேறுவழியின்றி அவர்களின் சொராட்டிரியக் கோயிலை பள்ளிவாசலாக மாற்றம் செய்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருவோருக்கு இரண்டு திர்காம் பணமும் கொடுத்து மிகக்கடினமான முயற்சியின் மத்தியிலேயே அவர்களை வெற்றிகரமாக முஸ்லீம்களாக மதமாற்றமுடிந்தது.[17] இத்தகைய சிக்கலான சந்தர்ப்பங்களில் தங்கள் பூர்வீக நிலத்தைவிட்டு, சொராட்டிரிகள் புலம்பெயர்ந்ததும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.[17] அம்மதத்தின் எச்சங்களுள் ஒரு குழுவினர் குராசான் நகரிலிருந்து புலம்பெயர்ந்து மேற்கிந்தியாவின் குயராத் பகுதியை வந்தடைந்தனர்.[18] இவர்களே, இன்றுள்ள சொராட்டிரிகளின் இருபெரும் குழுக்களில் ஒன்றான பார்சி மக்கள் ஆவர்.[18]

பிற்காலம்

தொகு
 
தெகுரான் நகரில் 2011இல் இடம்பெற்ற சொராட்டிரிகளின் தீத்திருவிழா

பொ.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சொராட்டிரியம் அங்கிருந்த நெறிச்சுதந்திரத்தால் செழிப்போடு வளர்ந்தது. கிறித்துவத்தின் அறிமுகத்துக்கு முந்திய சொராட்டிரியக் குடிகளின் எச்சங்கள் ஆர்மீனியாவில் 1920கள் வரை வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.[19] ஈராக்கிலும் மத்திய ஆசியாவிலும் சொராட்டிரிகளின் சிறுபான்மைச் சமூகங்கள் இன்றும் உண்டு. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா முதலான பகுதிகளில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பார்சிகள் வாழ்கின்றனர்.

தஜிகிஸ்தான் அரசின் கோரிக்கைக்கேற்ப, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், 2003ஆமாண்டை, ‘’சோராட்டிரியப் பண்பாட்டின் 3000ஆம் பேராண்டாக’’ பிரகடனம் செய்ததை அடுத்து, உலகெங்கும் பெருமளவு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. 2011இல் முதன்முதலாக சொராட்டிரியம், ஈரானிலும் வட அமெரிக்காவிலும் பெண்களைப் பூசகர்களாக ஏற்றுக்கொண்டது.[20]

சமயக் கோட்பாடுகள்

தொகு
 
பார்சி நெறியுள்ளீர்ப்பு சடங்கு

துறவறத்தின் எல்லா அம்சங்களையும் நிராகரிக்கும் மாஸ்டா நெறி, வாழ்க்கை வாழ்வதற்கே எனும் கொள்கையைக் கொண்டது. வாழ்க்கை என்பது, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தொடர்கின்ற ஒரு தற்காலிக நிலையாகவே இந்நெறியில் கொள்ளப்படுகின்றது. அகுரா மாஸ்டா உலகைத் தோற்றுவித்ததிலிருந்து, பிறப்பிற்கு முன்னான கணம் வரை, ஒரு உர்வன் (ஆன்மா) ஆனது, அதன் காவல் தேவதையுடன் (பிராவசி) இணைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்பின் நான்காம் நாளின் பின் அது மீண்டும் பிராவசியுடன் இணைகின்றது. எனினும் மரபார்ந்த சொராட்டிரியத்தில் மறுபிறவிக் கொள்கை இல்லை.

தீயும் நீரும் மாஸ்டா நெறியில் புனிதமானவை. தீ ஆன்மிக ஞானத்தை வழங்கும் ஊடகமாகவும், நீர் அந்த ஞானத்தின் மூலமாகவும் கருதப்படுகின்றது. தீயின் முன்னிலையிலேயே வழிபாடுகளை நிகழ்த்துவது சொராட்டிரிய மரபு. சடங்கின் உச்சத்தில் நீரைப் பயன்படுத்துவர். இறந்த சடலங்கள் சொராட்டிரியரைப் பொறுத்தவரை அழிவுச்சக்திக்குரியவை. இறைவனின் படைப்பை அசிங்கப்படுத்தாது சடலங்கள் அப்புறப்படுத்தவேண்டியதன் அவசியத்தை அவேஸ்தா கூறுகின்றது. பிணங்கள் பறவைகளுக்கு உணவாவதற்காக அமைக்கப்பட்ட அமைதிக்கோபுரங்கள், சொராட்டிரிய நெறியில் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் பெரும்பாலான சொராட்டிரியர்கள் பிணத்தை புதைக்கவோ எரிக்கவோ செய்வதும் உண்டு. இந்தியாவின் சொராட்டிரியர்களான பார்சிகள் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் கலப்புமணத்தில் பிறந்த குழந்தைகளை சிலவேளைகளில் சொராட்டிரிகளாகக் கருத்திற்கொள்வதுண்டு.[21] பார்சிகளைப் போலன்றி, ஈரானிய சொராட்டிரிகள் மதமாற்றத்தை அனுமதித்திருக்கின்றார்கள். [22] வாழ்க்கையின் நோக்கம் என்று, பல விடயங்களை சொராட்டிரியம் முன்வைக்கின்றது. அவற்றுள், ஹுமாதா, ஹுக்தா, ஹுவர்ஷ்தா (நல்லெண்ணம், நற்சொற்கள், நற்செயல்கள்) ஆகிய மூன்றையும் கடைப்பிடித்தல், உண்மையின் பாதை எனும் ஒரு பாதையில் மட்டும் நம்பிக்கை வைத்தல், பலனை எதிர்பார்த்து எப்போதும் நல்லவற்றையே செய்தல் முதலான நன்னெறிகளை முன்வைக்கின்றது.

அகுரா மஸ்தா

தொகு
 
பரம்பொருள் அகுரா மாஸ்டாவின் ஈரானியச்சிற்பம் (பொ.பி 4ஆம் நூற்றாண்டு)

சொராட்டிரிகளின் முழுமுதல் கடவுளாக அகுரா மஸ்தா அறியப்படுகின்றார்.[23] இருபெயராலான அச்சொற்கள், அவேஸ்த மொழியில் உயிரும் உள்ளமும் எனப் பொருள்படுவதாகவும், அது பரம்பொருளின் ஆணோ பெண்ணோ அற்ற தன்மையைக் குறிப்பதாகவும் சொராட்டிரிகள் நம்புகின்றனர். இயற்கை இறைவனின் அம்சம் என்ற சொராட்டிரக் கருத்துடன் , இந்திய சமயங்களை இணைத்துப் பார்த்து ஒப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.[24][25] மாஸ்டா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததற்கு ஆதாரமாக ஆசா (பேரறம்) விளங்குகின்றது. ஆசாவுக்கு எதிர்ப்பதமாக “திருச்சு” (Druj – த்ருஜ், பொய்மை, அழிவு) என்பதை சொராட்டிரிகள் முன்வைக்கின்றனர். ஆசாவானது அகுரா மாஸ்டாவால் இயக்கப்பட, இத்திருச்சுவானது, அகிர்மான் அல்லது அங்க்ரா மைன்யூ எனப்படுகின்ற அழிவுச்சக்தியால் இயக்கப்படுகின்றது. அகுரா மாஸ்டாவின் எதிர்விசையாக அவேஸ்தா குறிப்பிடுகின்ற ‘’அங்க்ரா மைன்யூ’’ பிற்கால நூல்களில் “அக்ரிமான்” எனப்படும் கொடுந்தேவதையாக சித்தரிக்கப்படுகின்றது.[26] ஆஷாவும் திருச்சும் இருபெரும் இருமைகளாக மோதிக்கொண்டிருப்பதன் இயக்கமே உலக இயற்கை என்பது சொராட்டிரிய முடிபு. [27]

அகுரா மாஸ்டா அங்க்ரா மைன்யூவை வென்று, அதன் விளைவாகப் படைப்பைத் துவங்கியபோது, தன் அம்சமாக, அமேசா ஸ்பந்தாக்கள் எனும் திருத்தூதர்களை வெளிப்படுத்தினார். இவர்களே உலகின் படைப்புக்கு அடிப்படையானதுடன், அமேசா ஸ்பந்தாக்கள், யசதா எனப்படுகின்ற வேறுவகை இறையம்சங்களின் துணையுடன் விளங்குகிறார்கள். யசதாக்கள், பௌதிக உலகியல் அம்சங்களின் பருவடிவங்கள் ஆவர்.[28] மாஸ்டா நம்பிக்கையில் இயற்கை முழுவதும் யசதா இறையுருவங்களால் ஆனதால், சொராட்டிரியத்தில் இயற்கையைப் பாதுகாப்பது முதன்மைக்கடமைகளுள் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது. உலகைக் காப்பது யசதாக்களை வாழவைப்பது என்ற அவர்களின் தீவிரமான நிலைப்பாடு, அம்மதத்தை உலகின் முதல் சூழலியல் மதம் என்று புகழ்பெற வைத்திருக்கின்றது.[29]

புனிதநூல்கள்

தொகு
 
ஈரான் நெருப்புக் கோவில்
அவேஸ்தா

சொராட்டிரிகளின் புனிதநூலான அவேஸ்தா, இறைவன் அகுரா மஸ்தாவால் அருளப்பட்டதாக நம்பப்படுகின்றது. அகுரா மாஸ்டாவால் சொராட்டிரியருக்கு வழங்கப்பட்ட 21 பகுதிகள், சொராட்டிரியரின் சீடரான விஸ்தஸ்பா மூலம் உலகுக்குக் கிடைத்தன. பழைமையான அவேஸ்தாவின் சிறுபகுதியே இன்று எஞ்சியுள்ளது. எஞ்சியது, கடந்த ஆயிரமாமாண்டில் தொகுக்கப்பட்டதாகும். அவேஸ்தாக்களில் 1288இல் எழுதப்பட்ட பாகமொன்றே இறுதியாக எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. காதா, யஸ்னா, விஸ்பராட், வெந்திடாட் என்பன இன்றுள்ள முக்கியமான அவேஸ்தாக்கள். வீட்டு வழிபாட்டுக்காக கோர்டே அவேஸ்தா எனும் நூல் பயன்படுகின்றது.[30]

பஹ்லவி

பஹ்லவி எழுத்துருவில் எழுதப்பட்ட மத்தியகால பாரசீக நூல்கள் பொ.பி 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டன. சொராட்டிரியத்தில் இவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டிருந்தாலும், மாஸ்டா நெறியினரைப் பொறுத்தவரை இவை இரண்டாம் தர நூல்களாகவே கொள்ளப்படுகின்றன.

ஏனைய சமயங்களுடன் தொடர்பு

தொகு
 
இந்துக்களும் சொராட்டிரிகளும் ஒன்றாகப் போற்றிய பகு அதேசகம், பொ.பி. 1860 இல்

சில சொராட்டிரிய நம்பிக்கைகள், அதன் பின்பு தோன்றிய ஆபிரகாமிய சமயங்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.[31][32] சொராட்டிரியம் நம்புகின்ற சொர்க்கம், நரகம் முதலான கோட்பாடுகள், இறைத்தூதர் என்ற நம்பிக்கை முதலான இயல்புகளை கிறித்தவம் மற்றும் இஸ்லாம் முதலான சமயங்களுடன் ஒற்றுமையாகக் காணலாம்.[33] அதுபோலவே, அச்சமயங்களின் கொள்கைகளைத் தழுவி அவற்றைச் சார்ந்து சொராட்டிரியம் பிற்காலத்தில் தன்னை வளப்படுத்திக்கொண்டது.[34]

வேதநெறியில் சொராட்டிரியத்தின் சில அம்சங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக அகுரா என்பதற்கும் வேதத்திலுள்ள அசுர (பலம்வாய்ந்தவர்) என்பதற்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிடலாம். எனவே சொராட்டிரியமும் வைதிக நெறியும் ஒரு முந்து – இந்தோ ஈரானிய தொல்நெறியிலிருந்து கிளைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.[35]

குடித்தொகை

தொகு
 
சொராட்டிரிகளின் உலகளாவிய குடித்தொகை.

தெற்கு ஆசியாவிலுள்ள பார்சிகளும் , மத்திய ஆசிய சொராட்டிரியர்களும் இன்றுள்ள சொராட்டிரியரின் இருபெரும் வகுப்புகள். வட அமெரிக்க சொராட்டிரிய ஒன்றியத்தால் 2004இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, சுமார் 124000 முதல் 190,000 இடையே சொராட்டிரியர்கள் உலகெங்கும் வாழ்வதாக திருத்தமற்ற மதிப்பீடொன்றைச் செய்தது.[36] இந்தியாவின் 2011 மதிப்பீடு, 57,264 பார்சிகளை இனங்கண்டது.[37] 2008இல் பார்சிகளின் பிறப்புக்கு இறப்பு விகிதம், 1:5 ஆக இருந்தது.[38] குறைந்த பிறவிவீதத்தாலும் இடம்பெயர்வாலும் பார்சிகளின் எண்ணிக்கை இந்தியாவில் வீழ்ச்சிகண்டு வருகின்றது. 2020 அளவில் வெறும் 23,000 அல்லது 0.002% பார்சிகள் மட்டுமே இந்தியாவில் இருப்பர் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேற்கிந்தியா, மத்திய ஈரான், தென் பாகிஸ்தான், புலம்பெயர் சொராட்டிரிகள் பெரிய பிரித்தானியா, கனடா ஆத்திரேலியா, அமெரிக்காவின் கலிபோர்னியா என்பவற்றில் வாழ்கின்றனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gerardo Eastburn. The Esoteric Codex: Zoroastrianism. p.1-2.
  2. சொராட்டிரர் ஈரானிய இறைத்தூதர்
  3. Gerardo Eastburn. The Esoteric Codex: Zoroastrianism. p.3.
  4. Hourani, p. 87.
  5. உலகின் முதன்மை நெறிகள் பரணிடப்பட்டது 2011-04-22 at the வந்தவழி இயந்திரம் கண்டது 14ஏப்ரல் 2013
  6. Boyce (1979), p. 26
  7. The Heretic's Feast: A History of Vegetarianism By Colin Spencer – May 15, 1995 page 60
  8. Vasseghi, Sheda, "The other Iran story: Re-engineering the nation's cultural DNA", Breaking... WorldTribune.com World Tribune News, (12 October 2009).
  9. Foltz 2004, pp. 4–16
  10. 10.0 10.1 Patrick Karl O'Brien, ed. Atlas of World History, concise edn. (NY: Oxford UP, 2002), 45.
  11. Mary Boyce. Zoroastrians: Their Religious Beliefs and Practices Psychology Press, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415239028 p 85
  12. Mary Boyce. Zoroastrians: Their Religious Beliefs and Practices Psychology Press, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415239028 p 84
  13. Dr Stephen H Rapp Jr. The Sasanian World through Georgian Eyes: Caucasia and the Iranian Commonwealth in Late Antique Georgian Literature Ashgate Publishing, Ltd., 28 sep. 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1472425529 p 160
  14. Ronald Grigor Suny. The Making of the Georgian Nation Indiana University Press, 1994 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0253209153 p 22
  15. Boyce 1979, ப. 150.
  16. Boyce 1979, ப. 158.
  17. 17.0 17.1 Boyce 1979, ப. 147.
  18. 18.0 18.1 Boyce 1979, ப. 157.
  19. Anne Sofie Roald,Anh Nga Longva. Religious Minorities in the Middle East: Domination, Self-Empowerment, Accommodation BRILL, 11 nov. 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004216847 p 313
  20. "The Jury Is Still Out On Women as Parsi Priests". Parsi Khabar. 2011-03-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-12.
  21. CONVERSION vii. To the Zoroastrian faith in the modern period retrieved 10 August 2014
  22. Khan, Roni K (1996), Traditional Zoroastrianism: Tenets of the Religion (Online ed.), பார்க்கப்பட்ட நாள் 2009-10-08
  23. Duchesne-Guillemin, Jacques. "Zoroastrianism". Encyclopedia Britannica.
  24. The Student's Manual of Oriental History: Medes and Persians, Phœnicians, and Arabians, Page. 38, by François Lenormant, E. Chevallier
  25. General Sketch of the History of Pantheism, p.81, by Constance E. Plumptre
  26. சரத்துஸ்திரரின் மெய்யியல் – ஒரு மேற்பார்வை (ஆங்கிலம்)
  27. "Zoroastrianism: Holy text, beliefs and practices". 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.
  28. http://www.iranicaonline.org/articles/ahura-mazda
  29. சொராட்டிரியம் ஒரு சூழலியல் நெறியா?, Richard Foltz and Manya Saadi-nejad Department of Religion, Concordia University, 1455 de Maisonneuve W., Montréal (Qc) H3G 1M8, Canada
  30. Bromiley 1995, ப. 124.
  31. Black & Rowley 1987, ப. 607b.
  32. Duchesne-Guillemin 1988, ப. 815.
  33. Hinnel, J (1997), The Penguin Dictionary of Religion, Penguin Books UK
  34. e.g., Boyce 1982, ப. 202.
  35. Master, Pilsum (December 2012). "Zoroastrianism: Mankind's first known attempt to acquire social justice". FEZANA Journal. 
  36. Goodstein, Laurie (2008-09-06). "Zoroastrians Keep the Faith, and Keep Dwindling". The New York Times. https://www.nytimes.com/2006/09/06/us/06faith.html. பார்த்த நாள்: 2009-10-03. 
  37. Parsi population dips by 22 per cent between 2001-2011: study, PTI, 2016-07-26, பார்க்கப்பட்ட நாள் 2016-07-26
  38. Doomed by faith, Guardian, 2008-06-28, பார்க்கப்பட்ட நாள் 2008-06-28

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரதுசம்&oldid=4111521" இலிருந்து மீள்விக்கப்பட்டது