சூழலியல் திறனாய்வு

சூழலியல் திறனாய்வு (Ecocriticism) என்பது, இலக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவைப் பல்துறைக் கோணத்தில் நோக்கும் பரந்துபட்ட ஆய்வாகும்.[1] இதை மேற்கொள்ளும் இலக்கிய அறிஞர்கள், சுற்றுச்சூழல் அக்கறையை வெளிப்படுத்தும் படைப்புகளை எடுத்துக்கொண்டு அவை இயற்கையை அணுகும் பாங்குகளை ஆராய்வர்.[2] சூழலியல் திறனாய்வாளர்களுள் சிலர், தற்காலச் சுற்றுச்சூழல் நிலையை சீர்செய்யும் நோக்கில் வாய்ப்புள்ள தீர்வுகளைத் திரட்டுவர். எனினும் சூழலியல் திறனாய்வின் நோக்கம், வழிமுறை, வரம்பு ஆகியவை பற்றி ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலும் இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றத்தோடு (ASLE) சூழலியல் திறனாய்வு இணைத்துப் பார்க்கப்படுகிறது.[3] சூழல்சார் மானுடப்புல ஆய்வாளர்களுக்காக ஒரு மாநாட்டை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இம்மன்றம் நடத்துகிறது. மேலும் இப் புலத்தில்  நடப்பிலுள்ள பன்னாட்டு ஆய்வுகளின் தொகுப்பாக இலக்கிய - சுற்றுச்சூழல் பல்துறை ஆய்வுகள் (ISLE) என்ற ஆய்விதழை வெளியிட்டுவருகிறது.

சூழலியல் திறனாய்வுக்கு பசுமை (பண்பாட்டு) ஆய்வுகள் , சூழற்செய்யுளியல், சூழல்சார் இலக்கியத் திறனாய்வு உள்ளிட்ட பிறபெயர்களும் உண்டு. இலக்கியம், காட்சிக் கலைகள், இசை போன்ற பண்பாட்டுத் துறைகளிலேயே சூழலியல் திறனாய்வு கண்ணாயிருந்தாலும் இதற்கு அறிவியல், சூழலியல், சூழலியம், பசுமை வடிவமைப்பு, உயிரி அரசியல், சூழலியல் வரலாறு, சமூகச் சூழலியல், மெய்யியல், சமூகவியல் உள்ளிட்ட பிற துறைகளும் பங்களிக்கின்றன.[4]

புவியின் சூழல் இக்கட்டை மேற்கொள்ள வேண்டுமெனில் , மாந்தருக்கும் இயற்கைச் சூழலுக்கும் உள்ள தொடர்புகள் இன்றியமையாதவை என்ற கருதுகோளே சூழலியல் திறனாய்வின் அடிப்படையாக உள்ளது.[4]

வரலாறு

தொகு

1962-இல் அமெரிக்க எழுத்தாளர் ரேச்சேல் கார்சன் வெளியிட்ட மௌன வசந்தம் (Silent Spring) என்ற நூல், 1960கள் மற்றும் 1970களின் பிற்பகுதியில் சூழலியத்தின் பெருவளர்ச்சிக்கு வித்திட்டது. அப்போதிலிருந்து சுற்றுச்சூழல் எண்ணமுள்ள தனியர்களும் அறிஞர்களும், சூழல் கோட்பாடு மற்றும் திறனாய்வு தொடர்பான முற்போக்குப் படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், இலக்கியத்தின் சூழல் / சுற்றுச்சூழல் முகத்தை ஆராயும் ஒழுங்கமைவான இயக்கமேதும் இல்லாமையால்[5] இப் படைப்புகள், முல்லைநிலவியம் (pastoralism), மாந்தர் சூழலியல், பிராந்தியவாதம், அமெரிக்க ஆய்வுகள் போன்ற வெவ்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டன.

எடுத்துக்காட்டாக பிரித்தானிய மார்க்சியத் திறனாய்வாளர் ரேமண்ட் வில்லியம்ஸ், 1973-இல் நாட்டுப்புறமும் நகர்ப்புறமும் (The Country and the City) என்ற பெயரில் முல்லைநில இலக்கியம் குறித்த ஒரு ஆய்வுநூலை வெளியிட்டார்.

1974-இல் ஜோசப் மீக்கர் வெளியிட்ட உயிர்வாழ்தலின் இன்பியல் (The Comedy of Survival) என்ற நூல், [ பின்னாளில் சூழலியல் திறனாய்வு மற்றும் சுற்றுச்சூழல் மெய்யியல் மீது தாக்கம் செலுத்திய ] வாதமொன்றின் பதிப்பை முன்மொழிந்தது; இயற்கையைவிட்டுப் பண்பாட்டைப் பிரித்து அதைத் தார்மீக ஆதிக்கநிலைக்கு உயர்த்தும் மேலைப் பண்பாட்டு மரபே சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என்பது அவ் வாதம். உயிர்வாழ்தலை விடத் தார்மீகப் போராட்டங்களை முதன்மையாகக் கருதும் ஒரு நாயகனின் துன்பியல் பிம்பத்தில் இத்தகைய மானுட மையவியம் வெளிப்படுகிறது . இதற்கு மாறாக விலங்கின நடத்தையியலின் படி, சமாளித்துக் கொள்ளுதலையும் (போருக்கு மாறாக) அன்புசெய்வதையும் உள்ளடக்கிய இன்பியல் செயல்முறையே சிறந்ததென மீக்கர் வலியுறுத்துகிறார். இதன்பின் தோன்றிய 'இரண்டாம் அலை' சூழலியல் திறனாய்வின்போது, இலக்கிய மதிப்பின் அளவீடாக (அறிவியல் இசைவுடன்) மீக்கர் ஏற்றுக்கொண்ட சூழற்மெய்யியல் நிலைப்பாடு, [ இலக்கிய வகையொன்றின் இயற்கை சார்பாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ] வில்லியம்ஸின் கருத்தியல் - வரலாற்று மதிப்பாய்வைக் காட்டிலும் மேலோங்கியது.   

1978-இல், வில்லியம் ரூக்கர்ட் என்பவர், ''இலக்கியமும் சூழலியலும்: சூழலியல் திறனாய்வில் ஓர் ஆராய்ச்சி '' (Literature and Ecology: An Experiment in Ecocriticism) என்ற தன்  கட்டுரையில் ecocriticism (சூழலியல் திறனாய்வு) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார். இவர், "சூழலியலையும் சூழலியல் கருத்தாக்கங்களையும் இலக்கிய ஆய்வுக்குப் பொருத்துவதை" தன் நோக்கமாகக் குறிப்பிட்டார்.[6]

1980களின் நடுப்பகுதியில் அறிஞர்கள், சூழலியல் திறனாய்வை ஒரு புனைவிலி இலக்கிய வகையாக நிறுவும் நோக்கில் கூட்டாக உழைக்கத் துவங்கினர். இப் பணியில் மேலை இலக்கிய மன்றம் (WLA) முதன்மைப் பங்காற்றியது.

1989-இல் ஐடஹோவில் நடந்த WLA மாநாட்டில் கோர்னெல் பல்கலைக்கழக மாணவியான செரில் கிளாட்ஃபெல்ட்டி என்பவர், தான் சமர்ப்பித்த சூழலியல் இலக்கியத் திறனாய்வை நோக்கி (Toward an Ecological Literary Criticism) என்ற கட்டுரையில் ecocriticism என்ற சொல்லை மீண்டும் பயன்படுத்திப் பரவலான அறிமுகத்தை அதற்குப் பெற்றுத்தந்தார். மேலும் இவர் 1990 -இல், நெவாடா பல்கலைக்கழகத்தின் (ரீனோ) [UNR] முதல் இலக்கிய-சுற்றுச்சூழல் பேராசிரியராகப் பணியேற்றார். இவர் ஓய்வுபெற்றபின் மைக்கேல் பி. பிரான்ச் அப் பணியில் உள்ளார். இவ்விருவரின் பெரும் பங்களிப்பால் சூழலியல் திறனாய்வின் தொட்டிலாக UNR தொடர்கிறது.

1991-இல் ஜொனாதன் பேட் வெளியிட்ட புனைவியச் சூழலியல்: வேர்ட்ஸ்வொர்த்தும் சுற்றுச்சூழல் மரபும் (Romantic Ecology: Wordsworth and the Environmental Tradition) என்ற நூலே பிரித்தானிய சூழலியல் திறனாய்வின் துவக்கப்புள்ளியாகக் கருதப்படுகிறது.

1992 -இல் ரீனோவில் நடைபெற்ற மேலை இலக்கிய மன்ற மாநாட்டின் சிறப்பு அமர்வொன்றின்போது இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம் (ASLE) நிறுவப்பட்டது . இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான உண்மைகள், கருத்துகள், படைப்புகள் ஆகியவற்றைப் பகிர்வதே இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.[7][8][9] இதன் முதல் தலைவராக (1992-93) ஸ்காட் ஸ்லோவிக் இருந்தார். பின் இவரும் கிளாட்ஃபெல்ட்டியும் 1993-94 ஆண்டுகளில் இணைத் தலைவர்களாகப் பணியாற்றினர்.

1990கள் தொடங்கி ASLE மற்றும் அதுசார்ந்த அமைப்புகளின் புதிய கிளைகள், ஒன்றியக் கோவரசு, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து (ASLEC-ANZ), இந்தியா (OSLE-India), தென்கிழக்காசியா (ASLE-ASEAN), தைவான், கனடா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் துவங்கப்பெற்றன.

1996-இல் கிளாட்ஃபெல்ட்டியும் ஹெரால்ட் ஃப்ரம் (Harold Fromm) என்பவரும் இணைந்து சூழலியல் திறனாய்வு வாசிப்புநூல் :இலக்கியச் சூழலியலின் நிலக்குறிகள் (The Ecocriticism Reader: Landmarks in Literary Ecology) என்ற நூலை வெளியிட்டனர்.

2001- இல் டேவிட் மாஸல் (David Mazal) என்பவர் சூழலியல் திறனாய்வின் ஒரு நூற்றாண்டு - 1864-1964 (A Century of Early Ecocriticism - 1864-1964) என்ற நூலை வெளியிட்டதன் வழியே சூழலியல் திறனாய்வுக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொடுத்தார். தொடர்ந்து பலரும் இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர். லாரன்ஸ் பியோல் (Lawrence Buell) என்பவர் இது தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

வரையறை

தொகு

பிற 'அரசியல்' திறனாய்வுகளுடன் ஒப்பிடுகையில், சூழலியல் திறனாய்வின் அற, மெய்யியல் நோக்கங்களைப் பற்றிக் குறைந்தளவு சர்ச்சைகளே உள்ளன. இருப்பினும் அதன் வரம்பானது இயற்கை எழுத்து, புனைவியச் செய்யுள், ஆகம இலக்கியம் ஆகியவற்றிலிருந்து விரிவடைந்துள்ளது. தொலைக்காட்சி, நாடகம், விலங்குக் கதைகள், கட்டிடக்கலைகள், அறிவியல் விவரிப்புகள் மற்றும் தனிச்சிறப்புடைய இலக்கிய நூல்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டுள்ளது. அதேசமயத்தில் இலக்கிய, சமூக, அறிவியல் ஆய்வுகளைச் சேர்ந்த பிற துறைகளிலிருந்து வழிமுறைகளையும் கோட்பாட்டளவில் தகவலறிந்த அணுகுமுறைகளையும் கட்டற்றுக் கடன்வாங்கியுள்ளது.

சூழலியல் திறனாய்வு என்பது "இலக்கியத்திற்கும் உருவுள்ள சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆய்வு", எனத் தன் செயல்பாட்டு வரையறையை செரில் கிளாட்ஃபெல்ட்டி, வாசிப்புநூலில் முன்வைக்கிறார்.[3] மேலும் "குறைமதிப்பீடு பெற்ற இலக்கியவகையான இயற்கை எழுத்துக்கு" தொழில்முறைத் தகுதியை மீட்டுத்தருவது இவ் வணுகுமுறையின் மறைமுக இலக்குகளில் ஒன்றாகும். [10]

சூழலியல் திறனாய்வை "இலக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை [ சூழலிய செயல்முறைக்கான அர்ப்பணிப்பு உணர்வோடு ] ஆராய்தல் " என்பதாக லாரன்ஸ் பியோல் வரையறுக்கிறார். [11]

சைமன் சி. எஸ்டோக் என்பவர் பின்வருவதுபோல் கூறினார்: "விவாதங்களைத் தாண்டி சூழலியல் திறனாய்வு தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது. இதற்கு முதல் காரணம், இயற்கையுலகைக் கருப்பொருள் ஆய்வுக்கான இலக்காக மட்டும் பாராமல் அதனினும் முதன்மையானதாகக் கருதித் தன்னை அர்ப்பணிக்கும் அதன் நெறிசார்  நிலைப்பாடு. இரண்டாம் காரணம், தொடர்புகளை உருவாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு ". [12]

மேலும், ஷேக்ஸ்பியரிய ஆய்வுகளோடு சூழலியல் திறனாய்வை இணைத்து ஆராயும் தன் கட்டுரையொன்றில் எஸ்டோக் இவ்வாறு வாதிடுகிறார்: "[ சூழலியல் திறனாய்வு என்பது ] வெறுமனே இயற்கையையோ இலக்கியத்திலுள்ள இயற்கைப் பொருள்களையோ  ஆராய்வதைக் காட்டிலும் மேலானது. மாறாக அது, உருவுள்ள உலகங்களின், உருவுள்ள நடைமுறைகளுக்குப் பங்களிக்கும் (இலக்கிய அல்லது பிற) ஆவணங்களில் காண்பிக்கப்படும் இயற்கைச் சூழல் அல்லது அதன் கூறுகளின் (கருப்பொருள், கலை, சமூக, வரலாற்று, கருத்தியல், கோட்பாட்டு, அல்லது வேறுவிதமான ) செயல்பாடுகளை ஆராய்ந்து மாற்றம் ஏற்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ள ஏதேனுமொரு கோட்பாடு."[13]

எஸ்டோக் -கின் இவ் வாதம் [ சூழல் மண்டலங்கள் மற்றும் கற்பனைத் திறமுடைய படைப்புகளுக்கிடையே உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்து, இத்தகைய படைப்புகள், பண்பாட்டு அமைப்பில் சுற்றுச்சூழல் செயல்பாட்டை (மீளுருவாக்கம், புத்துயிர் பெறுதல்) கொண்டிருக்கக்கூடும் எனக் கூறும் ] பண்பாட்டுச் சூழலியலின் செயல்பாட்டு அணுகுமுறையை எதிரொலிக்கிறது.[14]

மைக்கேல் பி. கோஹென் என்பவர், "நீங்கள் ஒரு சூழலியல் திறனாய்வாளராக விழைந்தால், என்ன செய்கிறீர்கள் என்பதை விளக்கவும் [நையாண்டி செய்யப்படாவிட்டால் கூட] விமர்சிக்கப்படவும் தயாராக இருங்கள்." என்கிறார். மேலும் இத் திறனாய்வின் சிக்கல்களில் ஒன்று, அதன் "புகழ்பாடும் திறனாய்வுப்பள்ளி" எனக் கூறுவதன்வழியே அவ்வாறான விமர்சனத்துடன் தன்  குரலையும் சேர்த்துக்கொள்கிறார்.

அனைத்து சூழலியல் திறனாய்வாளர்களும் ஏதோவொரு சூழலிய உந்துதலைப் பகிர்ந்து கொள்கின்றனர். எனினும் அவர்களுள் பெரும்பான்மையர் 'இயற்கை ஒப்புதல்' போக்கையும்,[15] சிலர் 'இயற்கை ஐய'ப் போக்கையும் பின்பற்றுகின்றனர். ஓரளவுக்கு இது பாலின, பால், இன நெறிமுறைகளை நியாயப்படுத்த 'இயற்கை' என்ற சொல் பயன்பட்ட வழிகளின் பொது உணர்தலாக விளங்குகிறது ( தற்பால்சேர்க்கை 'இயற்கைக்கு மாறானது' எனக் கருதப்பட்டமை ஒரு சான்று). மேலும் இது, சூழலியல் திறனாய்வில் 'சூழலியல்' மொழியின் பயன்பாடுகள் குறித்த ஐயத்தையும் உள்ளடக்கியது; மேலும் இயற்கை-சுற்றுச்சூழல் சார்ந்த பண்பாட்டு விதிமுறைகள், சுற்றுச்சூழல் சீரழிவுக்குப் பங்களிக்கும் வழிகள் குறித்த மதிப்பாய்வையும் உள்ளடக்கியதாகும்.

குலைக்கப்பெறாத இயற்கையே சமன்மையும் ஒத்திசைவும் உடையது என்ற கருத்தை 'முல்லைநிலச் சூழலியல்' (pastoral ecology) என்றழைக்கிறார் கிரெக் கெரர்ட் (Greg Garrard)[16] மற்றொருபுறம் டானா பிலிப்ஸ் என்பவர்  சூழலியலின் உண்மை (The Truth of Ecology) என்ற தன் நூலில்,  இயற்கை எழுத்தின் இலக்கியத் தரத்தையும் அறிவியல் துல்லியத்தையும் விமர்சித்துள்ளார். இதேபோல், சூழலியல் திறனாய்வுக் கதையாடலை மறுவரையறை செய்வதில் சுற்றுச்சூழல் நீதி இயக்கத்தின் பங்கை அறிந்தேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.[17] 

சூழலியல் திறனாய்வு என்றால் என்ன அல்லது அது என்னவாக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் கமிலோ கோமிடிஸ் என்பவர், பரந்ததும் நுண்ணறிவுடையதுமான செயல்பாட்டு வரையறை ஒன்றை வழங்குகிறார் : "'''[இயற்கையுடனான மனிதத் தொடர்புகளைப் பற்றிய தார்மீகக் கேள்விகளை எழுப்பும்]''' கலைப் படைப்புகளை ஆராய்ந்து ஊக்குவிக்கும் ஆராய்ச்சித் துறை; அதே நேரத்தில் தலைமுறைகளைப் பிணைப்படுத்தக்கூடிய ஒரு எல்லைக்குள் வாழப் பார்வையாளர்களைத் தூண்டுவது". [சான்று தேவை] இதை இவர், அமேசானியக் காடழிப்பு பற்றிய ஒரு திரைப்படத் (பிழைத்) தழுவல் மேல் சோதித்துப் பார்த்துள்ளார்.

கோமிடிஸின் வரையறையைச் செயல்படுத்தியுள்ள ஜோசப் ஹென்றி வோகல், தொழில்நுட்பத் தீர்வற்ற வள ஒதுக்கீட்டுச் சிக்கல்களை விவாதிக்கும்படி பார்வையாளர்களைத் தூண்டுவதால், சூழலியல் திறனாய்வு ஒரு "பொருளாதார சிந்தனைப் பள்ளியாக" அமைந்துள்ளது. என்கிறார்.

இயற்கையின் புனைவியப் பதிப்பின் வரலாற்று இடர்களுக்கு மாற்றாக "நகர-இயற்கைப் பலுக்கல்" [urbanatural roosting] முறையைக் கொண்டுவர வேண்டும் என ஆஷ்டன் நிக்கோல்ஸ் வாதிடுகிறார். நகர-இயற்கைப் பலுக்கல் என்பது நகர்ப்புற வாழ்க்கையையும் இயற்கை உலகையும் நெருக்கமாக இணையக் காணும் ஒரு பார்வையாகும். மனிதர்கள் இப் புவியில் பிற உயிரினங்களைப்போல மென்மையாக வாழவேண்டும் என இப் பார்வை கோருகிறது.[18]

சூழலியல் திறனாய்வாளர்களின் ஆய்வுக்குட்படும் விடயங்களுள் சில:

  • அடிப்படை சூழலியல் விழுமியங்கள்.
  • இயற்கை என்ற சொல்லின் துல்லியமான பொருள்.
  • வர்க்கம், பாலினம் அல்லது இனம் போல "இடம்" என்பதும் ஒரு தனித்துவ வகையாக விளங்கும் வாய்ப்பு.
  • காட்டுப்பகுதி பற்றிய மனித அறிவும் அதன் வரலாற்று வளர்ச்சியும்.
  • பரவலர் பண்பாட்டிலும் நவீன இலக்கியங்களிலும் தற்காலச் சுற்றுச்சூழல் சிக்கல்களின் இடம்.
  • மானுட மையவியம் தொடர்பான வினாக்கள்.
  • "தற்காலச் சமூகத்தின் பொருள், பண்பாட்டு அடித்தளங்களிலுள்ள" கருத்துக்களை மாற்றக்கூடிய இன்றியமையா அணுகுமுறைகள் தொடர்பான வினாக்கள்.[19]

அண்மைக்காலமாக, "புலனறிவுசார் சூழலியல் திறனாய்வாளர்கள்", சூழற்புனைவு அதன் வாசகர்கள் மீது செலுத்தும் தாக்கத்தைப் புலன்சார் முறையில் மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளனர்.[20]

மேற்கோள்கள்

தொகு
  1. "What is Ecocriticism?: Literary Movements". A Research Guide for Students (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-09-05.
  2. "What is ecocriticism? – Environmental Humanities Center" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  3. 3.0 3.1 Glotfelty & Fromm 1996, p. xviii
  4. 4.0 4.1 "EASLCE » What is Ecocriticism?" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-01.
  5. Glotfelty & Fromm 1996, p. vii
  6. Glotfelty & Fromm 1996, p. 107
  7. Dobie, Ann B. (2011). Theory into Practice: An Introduction to Literary Criticism. Cengage Learning. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-49590-233-0.
  8. "Vision & History". ASLE Home Page. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
  9. "ASLE Bylaws" (PDF). ASLE Home Page. April 2016. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
  10. கிளாட்ஃபெல்ட்டி & ஃப்ரம் 1996, ப. xxxi
  11. 430, n.20
  12. எஸ்டோக் 2001, ப. 220
  13. Estok 2005, pp. 16-17
  14. Zapf 2008
  15. கேட் சாப்பர், "What is Nature?", 1998
  16. பேரி 2009, பக். 56-58
  17. பியோல் 1998
  18. Macmillan. "Macmillan".
  19. Clark, Timothy (2011). The Cambridge Introduction to Literature and the Environment. New York: Cambridge UP. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521720908.
  20. Clark, Timothy (2011). The Cambridge Introduction to Literature and the Environment. New York: Cambridge UP. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521720908.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_திறனாய்வு&oldid=4051532" இலிருந்து மீள்விக்கப்பட்டது