சமிபாடு

(செரிமானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமிபாடு அல்லது செரித்தல் (Digestion) என்பது பெரிய அளவில் உள்ள கரையாத உணவு மூலக்கூறுகளை தண்ணீரில் கரையக்கூடிய சிறிய மூலக்கூறுகளாக சிதைக்கும் வளர்சிதைமாற்ற வினையாகும். இவ்வாறு சிதைக்கப்பட்ட சிறிய மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு, நீர்மநிலை குருதி நீர்மத்தினுள் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. சில உயிரினங்களில் இச்சிறிய மூலக்கூறுகள் சிறுகுடலால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தோடு சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மனித சமிபாட்டுத் தொகுதி


செரிமானம் என்பது அனுசேபத்தின் ஒரு வடிவமாகும். பெரும்பாலும் உணவு எவ்வாறு உடைந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இதை இரண்டு செயல்முறைகளாக பிரிக்கிறார்கள். இயக்கமுறைச் செரிமானம் (mechanical digestion) மற்றும் வேதியியல் செரிமானம் (chemical digestion) என்பன இவ்விரண்டு முறைகளாகும். இயக்கமுறை செரிமானம் என்பது, உடல் இயக்கத்தால் பெரிய உணவு மூலக்கூறுகள் சிறிய துண்டுகளாக சிதைக்கப்படுவதாகும். செரிமான நொதிகளால் பெரிய உணவு மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாகச் சிதைக்கப்படுவதை வேதியியல் செரிமானம் என்பர்.

சொல் இலக்கணம் தொகு

செரித்தலின் அடிப்படையான வினையை விளக்குமாறு தமிழில் அதற்கு அறுத்தல் என்னும் சிறப்பான சொல் உண்டு. உணவைப் பிரிப்பதற்கு அறுத்தல் என்று பெயர்.

திருவள்ளுவர்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்.

(குறள் 942)

என்று கூறியதில் உள்ள “அற்றது போற்றி உணின்” என்னும் தொடரில் உள்ள அற்றது எனும் சொல் உண்ட உணவை முழுவதுமாகச் செரித்தல் என்பதைக் குறிக்கும்.

சமிபாட்டுத் தொகுதி தொகு

சமிபாட்டில் உள்ளான சமிபாடு, வெளியான சமிபாடு என இரண்டு வகைகள் உள்ளன. படிவளர்ச்சி வரலாற்றின் ஆரம்ப நிலைகளில், வெளியான சமிபாடே நிகழ்ந்தது. பங்கசு போன்ற சில உயிரினங்கள் தற்போதும் அவ்வாறான சமிபாட்டு முறையையே பின்பற்றுகின்றன.[1] இந்த முறையில், உயிரினத்தைச் சூழவுள்ள சுற்றுச்சூழலில், நொதியங்கள் சுரக்கப்பட்டு, அவற்றினால் சிறு மூலக்கூறுகளாக்கப்படும் கரிமப் பொருட்கள், பின்னர் உயிரினத்தினுள்ளே பரவல் மூலம் உள்ளெடுக்கப்படும். அதேவேளை விலங்குகளில் காணப்படும் இரையகக் குடற்பாதையில் உள்ளான சமிபாடு நிகழும். குழாய் போன்ற வடிவிலான இந்த இரையகக் குடற்பாதையினுள்ளே நொதியங்கள் சுரக்கப்பட்டு, உள்ளாகவே மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு, சிறிய மூலக்கூறுகள் அகத்துறிஞ்சப்படும். உள்ளான வேதியியல் சூழல் மிகவும் கட்டுப்பாட்டான முறையில் இருப்பதனாலும், அதிகளவிலான மூலக்கூறுகள் அகத்துறிஞ்சப்படும் என்பதனாலும், இந்த உள்ளான சமிபாடே மிகவும் வினைத்திறனானதாக இருக்கிறது.[2]

விசேட உறுப்புகள் தொகு

தங்களது உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு உதவுவதற்காக விலங்குகள் அலகுகள், நாக்கு, பற்கள் போன்ற பரிணாமமடைந்த உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

அலகுகள் தொகு

பறவைகள் தமது சூழலியல் முடுக்குக்கு இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கள், விதைகள், பூச்சிகள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.

நாக்கு தொகு

நாக்கு, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றாற்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.

பல் தொகு

பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவையல்ல. மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள பல் மிளிரி, பற்சீமெந்து, பன்முதல், பன்மச்சை போன்ற இழையங்களால் ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் நரம்பு என்பவற்றுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றன.

விலங்குகளின் பற்களின் வடிவம், உருவளவு மற்றும் எண்ணிக்கை என்பன அவை உட்கொள்ளும் உணவில் தங்கியுள்ளன. உதாரணத்திற்கு தாவர உண்ணிகள் தாவரப் பாகங்களினை அரைத்து உண்ண அதிக எண்ணிக்கையான கடைவாய்ப் பற்களைக் கொண்டுள்ளன. அதேவேளை விலங்கு உண்ணிகள் விருத்தியடைந்த வெட்டும் பற்களைக் கொண்டுள்ளன.

விசேட நடத்தைகள் தொகு

அசைபோடும் அல்லது இரைமீட்கும் விலங்கினங்களில், உணவானது முழுமையாக விழுங்கப்பட்டுச் சேமிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வாயினுள் எடுத்து அரைத்து விழுங்கப்படும். சில பறவைகள் சமிபாடடையாத உண்ணப்பட்ட உணவை மீள வாய்க்கு எடுத்து, அவற்றின் குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.[3]

சில சுறா வகை உயிரினங்கள், தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்காக, தமது இரைப்பையை உள்புறம் வெளிப்புறமாக வாயினூடாக வெளியே தள்ளிப் பின்னர் உள்ளெடுக்கும்.[4]

முயல், மற்றும் சில கொறிணிகள் சமிபாடடையாத உணவை, முக்கியமாக நார்வகை உணவை, மீள் சமிபாட்டுக்கு உட்படுத்துவதற்காக தமது மலத்தை உண்ணும் இயல்பைக் கொண்டுள்ளன.[5] யானை, பாண்டா கரடி, கோவாலா போன்ற சில விலங்கினங்களில் இளம் குட்டிகள், தாயின் மலத்தை உண்ணும் பழக்கம் உள்ளது. இளம் விலங்குகளின் குடலில் சமிபாட்டுக்குத் தேவையான நுண்ணுயிர்கள் இல்லாதிருப்பதால், அவற்றை தாயின் மலத்தை உண்ணுவதன் மூலம் இளம் குட்டிகள் பெற்றுக்கொள்கின்றன.[6]

மனிதனின் உடலில் செரித்தல் செயல்முறைகள் தொகு

மனித சீரணமண்டலம் வாயில் தொடங்கி மலவாய் வரை நீண்டிருக்கிறது. உணவு வாய்க்குள் வந்தவுடன் மெல்லுதல் என்ற உடலியக்கச் செயலால் செரித்தல் செயல்முறை ஆரம்பமாகிறது. உணவு பற்களால் அரைக்கப்படுகிறது. நாக்கின் உதவியால் கலக்கப்படுகிறது. உமிழ்நீர்ச் சுரப்பிகள் சுரக்கும் உமிழ்நீர் இங்கு உணவுடன் சேர்க்கப்படுகிறது. கோழை உணவுக்கு வழவழப்பைக் கொடுக்கிறது. ஐதரசன் கார்பனேட்டு காரத்தன்மையைக் கட்டுபடுத்தி அமைலேசு நொதியை ஊக்குகிறது. இதனால் உணவிலுள்ள மாவுச்சத்தின் ஒரு பகுதி செரிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவு சிறிய சிறிய துண்டுகளாக கவளம் போல நீர்மக்குழம்பு வடிவில் காணப்படும். தொண்டைக்குழி தசைகள் வழியாக உணவுக்குழாயை அடைந்து, தொடர் அலை இயக்கம் மூலம் இரைப்பையைச் சேர்கிறது. இரைப்பையை அடையும் உணவு வளர்சிதை மாற்றம் மூலம் சீரணிக்கப்பட்டு, சத்துக்களும், கனிமங்களும், உயிர்சத்துகளும் உட்கிரகிக்கப்படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுச்சத்துகள் முதலியன எளிதாக சிதைக்கப்பட்டு கிரகிக்கப்படுகின்றன. பின்னர் உணவு சிறுகுடல், பெருங்குடல் என நகர்கிறது. செரிக்கப்படாத உணவு இறுதியாக மலக்குடல் வழியாக வந்து மலவாய் மூலம் வெளியேற்றப்படுகிறது[7].

ஊட்டக்கூறுகளின் சமிபாடு தொகு

புரதச் செரிமானம் தொகு

புரதங்களின் செரிமானம் இரைப்பையில் ஆரம்பமாகிறது. இங்குள்ள பெப்சின் நொதி புரதங்களை பாலி பெப்டைட்டுக்களாக உடைக்கிறது. மனித இரைப்பையில் பெப்சினும் கணையத்தில் டிரிப்சின் மற்றும் கைமோ டிரிப்சினும் சுரக்கின்றன. புரதம் முற்றிலுமாக உடைக்கப்பட்ட நிலையில் அமினோ அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றின் செரிமான நடவடிக்கைகள் சிறுகுடலுக்குள்ளும், சிறுகுடல் மேற்பரப்பிலும் நடைபெறும்.

கொழுப்புச் செரிமானம் தொகு

கொழுப்புச் சமிபாட்டின் ஒரு பகுதி வாயினுள்ளேயே ஆரம்பிக்கிறது. நாக்குச் சுரப்பிகளால் சுரக்கப்படும் லைப்பேசு நொதியம் வாயினுள்ளே இருக்கும் உணவில் இருக்கும் குறுகிய சங்கிலிகளாலான கொழுமியங்களை இரு கிளிசரைட்டுக்களாக உடைக்கும். இருப்பினும் பெரும்பான்மையான கொழுப்பின் செரிமானம் சிறுகுடலிலேயே நடைபெறுகிறது. சிறுகுடலிலிருக்கும் கொழுப்பு கலந்த உணவு கணையத்தில் இலிப்பேசு நொதியம் சுரக்கப்படுவதையும், கல்லீரலில் இருந்து பித்தநீர் வெளியேறுவதையும் தூண்டுகிறது. பித்தநீரானது கொழுப்புணவை குழம்பாக்குவதன்மூலம் கொழுப்பு அமில அகத்துறிஞ்சலுக்கு உதவும். கொழுப்புணவானது கொழுப்பமிலங்களாகவும், ஒரு கிளிசரைட்டு, இரு கிளிசரைட்டுக்களாகவும் மாற்றமடையும். கிளிசரைட்டு மூலக்கூறுகள் உருவாவதில்லை.[8]

மாப்பொருள் செரிமானம் தொகு

உண்ணப்படும் உணவில் உள்ள மாப்பொருள் பொதுவாக பல்சக்கரைட்டான அமைலேசு வடிவில் காணப்படும். முதலில் உமிழ்நீரில் உள்ள ஆல்பா அமைலேசால் இது உடைக்கப்படுகிறது. பின்னர் உணவு சிறுகுடலை அடையும்போது இதேபோன்ற கணையத்தில் சுரக்கப்படும் அமைலேசு நொதியத்தால் மேலும் சிதைக்கப்படுகின்றது. சிறுகுடலின் மேற்பரப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் நொதி இதை குளுகோசாக மாற்றுகிறது. இக்குளுகோசு சளிச்சவ்வு உயிரணுக்களால் உட்கிரகிக்கப்படுகிறது. உண்ணப்படும் உணவிலுள்ள எல்லா கார்போஹைரேட்டு மூலக்கூறுகளும் உணவு சிறுகுடலின் கடைசி பாகமான இலியத்தினை அடையும் முன்னரே உட்கிரகிக்கப்படுகின்றன. பொதுவாக குளுக்கோசு, மோல்ட்டோசு ஆகிய எளிய மூலக்கூறுகள் இலகுவாக அகத்துறிஞ்சப்படுகின்றன. இலக்டோசானது லக்டேசு நொதியத்தால் குளுக்கோசாகவும், கலக்டோசாகவும் உடைக்கப்பட்டு அகத்துறிஞ்சப்படும். சுக்குரோசு ஆனது சுக்குரேசு நொதியத்தால் குளுக்கோசு, பிரக்டோசாக உடைக்கப்பட்டு அகத்துறிஞ்சப்படும்.

சமிபாட்டு இயக்குநீர்கள் தொகு

 
முதன்மையான சமிபாட்டு இயக்குநீர்களின் செயல்முறை

சமிபாட்டில் உதவும் இயக்குநீர்களின் தொழிற்பாடு வெவ்வேறுவகை முதுகெலும்பிகளில் வேறுபட்டுக் காணப்படும். பாலூட்டிகளில் சமிபாட்டிற்கு உதவவும், அதனை ஒழுங்குபடுத்தவும் பல இயக்குநீர்கள் காணப்படுகின்றன.[9][10][11]

  • காசுட்ரின் (gastrin) - இது இரைப்பையில் சுரக்கப்படும் இயக்குநீராகும். இது இரைப்பைச் சுரப்பிகளைத் தூண்டி, பெப்சினோசன் என்னும் ஒரு நொதிய முன்னோடியையும் ஐட்ரோகுளோரிக் காடியையும் சுரக்கச் செய்கிறது. பெப்சினோசனின் இயக்கநிலை நொதியம் பெப்சின் ஆகும். இரைப்பையைச் சென்றடையும் உணவே காசுட்ரினைச் சுரக்கச் செய்கிறது. குறைந்த காரகாடித்தன்மை இருக்கையில் இதன் சுரப்பு நிறுத்தப்படும்.
  • செக்ரிட்டின் (secretin) - இது முன்சிறுகுடலில் இருக்கும் உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீராகும். இது கணையத்தில் சோடியம் இரு கார்பனேற்றுச் சுரப்பிற்கான சைகையை வழங்குவதுடன், கல்லீரலில் பித்தநீர்ச் சுரப்பையும் தூண்டுகிறது. இதன் தொழிற்பாடு இரைப்பைப்பாகு அல்லது உணவுச் செரிகலவையின் (chyme) காரத்தன்மையில் தங்கியிருக்கும். சோடியம் இரு கார்பனேற்று இரைப்பையிலிருந்து வரும் இரைப்பைப்பாகைன் காடித்தன்மையைச் நடுநிலையாக்க உதவும்.
  • கொலெக்கிசுட்டொக்கினின் (cholecystokinin - CCK) - இது சிறுகுடலில், முக்கியமாக முதல் பகுதியான முன்சிறுகுடலினாலும், இரண்டாம் பகுதியான en:Jejunum இனாலும் சுரக்கப்படும் ஒரு இயக்குநீராகும். இது கணையத்தில் சமிபாட்டு நொதியங்கள் சுரப்பினைத் தூண்டுவதுடன், பித்தப்பையைச் சுருங்கச் செய்வதன்மூலம், அங்கிருந்து பித்தநீர் வெளியேறி முன்சிறுகுடலைச் சென்றடைய உதவும். இதன் தொழிற்பாடு இரைப்பைப்பாகில் இருக்கும் கொழுப்பின் அளவில் தங்கியிருக்கும்.
  • இரைப்பை மட்டுப்படுத்தும் இயக்குநீர் (GIP - Gastric Inhibitory Peptide) - இந்த இயக்குநீர் முன்சிறுகுடலில் சுரக்கப்படும். இதன் முக்கிய தொழிற்பாடு, காசுட்ரினின் இயக்கத்திற்கு எதிர்வினை அளிப்பதாகும். அதன் மூலம் இரைப்பைச் சுரப்பிகளின் தொழிற்பாட்டைக் மட்டுப்படுத்தும்.
  • மோட்டிலின் (Motilin) - இது முன்சிறுகுடலில் சுரக்கப்பட்டு, இரையக்கக் குடற்பாதையில் மின்னலை தொழிற்பாட்டினால் ஏற்படும் அசைவைக் கூட்டும். அத்துடன் பெப்சின் சுரப்பைத் தூண்டும்.

இவை தவிர, பசியை ஒழுங்குபடுத்தும் கிரேலின் (Ghrelin), பெப்டைட் YY (Peptide YY) இயக்குநீர்களும் இரையகக் குடற்பாதையில் சுரக்கப்படுகின்றன. கிரேலின் இயக்குநீரானது, உணவு சமிபாட்டுத் தொகுதியில் இல்லாத நிலையில், பசியைத் தூண்டுவதாகவும், பெப்டைட் YY இயக்குநீரானது பசியை மட்டுப்படுத்தும் தன்மையுள்ளதாகவும் இருக்கின்றது. இவையிரண்டும் மூளையுடன் இணைந்து, ஆற்றல் தேவைக்கான உணவு உள்ளெடுத்தலை ஒழுங்குபடுத்துகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Dusenbery, David B. (1996). “Life at Small Scale”, pp. 113-115. Scientific American Library, New York. ISBN 0-7167-5060-0.
  2. Dusenbery, David B. (2009). Living at Micro Scale, p. 280. Harvard University Press, Cambridge, Mass. ISBN 978-0-674-03116-6.
  3. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  4. "Gastric Eversion (vomiting) In Sharks". Jelsoft Enterprises Limited. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Coprophagia". ScienceDirect. Elsevier B.V. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "BBC Nature — Dung eater videos, news and facts". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
  7. Maton, Anthea; Jean Hopkins; Charles William McLaughlin; Susan Johnson; Maryanna Quon Warner; David LaHart; Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. இணையக் கணினி நூலக மையம்:32308337. https://archive.org/details/humanbiologyheal00scho. 
  8. Digestion of fats (triacylglycerols)
  9. Nelson RJ. 2005. Introduction to Behavioral Endocrinology. Sinauer Associates: Massachusetts. p 57.
  10. "Digestive Hormones". GDS. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "Hormones of the digestive system". ENCYCLOPÆDIA BRITANNICA. Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இவற்றையும் பார்க்க தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிபாடு&oldid=3812435" இலிருந்து மீள்விக்கப்பட்டது