சூரியக் குடும்பம்

சூரியனின் குடும்பத்தின் அமைப்பு.
(ஞாயிற்றுத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.

கதிரவ அமைப்பு
கதிரவ அமைப்பில் உள்ள எட்டுக் கோள்கள் (தொலைவுகள் அளவீட்டிற்கில்லை)
வயது4.568 பில்லியன் ஆண்டுகள்
அமைவிடம்உள் மீனிடை மேகம், உட் குமிழி, ஓரியன் கை, பால் வழி
தொகுதித் திணிவு1.0014 கதிரவ நிறைகள்
அண்மைய விண்மீன்புரோக்சிமா செண்ட்டாரி (4.22 ஒஆ)
அறியப்பட்டுள்ள அண்மைய கோள் தொகுதிபுரோக்சிமா செண்ட்டாரி அமைப்பு (4.37 ஒஆ)
போள் தொகுதி
புறக் கோள்களின் அரைப்பேரச்சு (நெப்டியூன்)4.503 பில்லியன் கிமீ (30.10 வாஅ)
கைப்பர் பட்டைல் இருந்து உள்ள தொலைவு50 வாஅ
கோள்களின் எண்ணிக்கை8
புதன், வெள்ளி (கோள்), புவி, செவ்வாய் (கோள்), வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன்
அறிந்த குறுங்கோள்கள்5 (IAU)
செரசு, புளூட்டோ, அவுமியா, மேக்மேக், ஏரிசு
நூற்றுக்கும் அதிகமான பொருட்கள்[1]
அறிந்த இயற்கைத் துணைக்கோள்கள்406 (இவற்றில் 176 கோள்களினவை[2] மற்றும் 230 சிறு கோள்கள்[3])
அறிந்த சிறுகோள்கள்600,642 (2012-12-13 இன் படி)[2]
அறிந்த வால்வெள்ளிகள்3,179 (2012-12-13 இன் படி)[2]
அறியப்பட்ட வட்ட செயற்கைக்கோள்கள்19
Orbit about the Galactic Center
Inclination of invariable plane to the galactic plane60.19° (சூரியவீதிசார்)
பால்வெளி மையத்தில் இருந்து உள்ள தொலைவு27,000±1,000 ஒஆ
சுற்றுவட்ட வேகம்220 கிமீ/செ
சுற்றுவட்டக் காலம்225–250 Myr
Star-related properties
அலைமாலை வகைG2V
பனிக்கோடு≈5 வாஅ[4]
கதிரவக் கோள எல்லையில் இருந்து உள்ள தொலைவு≈120 வாஅ
மலைக் கோள ஆரம்≈1–2 ஒஆ

சுமார் 460 கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசைச் சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியைக் கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள் (Inner Planets) , புவியொத்த கோள்கள் (Terrestrial Planets) என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் (Gas Giants) என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப் பெருங்கோள்கள் (Ice Giants) என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.

கதிரவ அமைப்புச் சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுங்கோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்றும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.

புதன்: சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். புதன் மிகவும் மங்கலாகவும், சிறியதாகவும் காணப்படுவதால், வெறும் கண்ணால் பார்ப்பதைவிட ஒரு தொலைநோக்கியால் அதை நன்கு காண முடியும். அதை எப்போதும் கிழக்கு அல்லது மேற்குத் திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண இயலும். புதனுக்கு இயற்கை நிலவுகள் கிடையாது.

வெள்ளி : வெள்ளி கோள் சூரியனுக்கு நெருக்கமாக உள்ள இரண்டாவது கோள் ஆகும். இது கரியமிலவாயு, கந்தக வாயுக்கள் மற்றும் இதர வாயுக்களால் ஆன அடர்த்தியான மேகங்களைக் கொண்டுள்ளதால் பசுங்குடில் விளைவினால் மிக அளவிலான வெப்பநிலையைக் கொண்டு உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோளை விட மிக அதிக வெப்பமான கோள் இதுவே ஆகும். இது பூமியிலிருந்து அதிகாலை மற்றும் அந்தி மாலையில் முறையே கிழக்கு மற்றும் மேற்கு வானத்தில் வெறும் கண்களாலேயே காணலாம். இதனால் இக்கோளினை விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வெள்ளிக் கோளுக்கும் இயற்கை நிலவுகள் கிடையாது.

பூமி: சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான தழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப் பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.

செவ்வாய்: புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள் என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன.

வியாழன்: வியாழன் கோளானது, பெருங்கோள் என்று அழைக்கப்படுகின்றது. சூரிய குடும்பத்தில், உள்ள கோள்ககளில் மிகப்பெரியது இதுவே. (புவியை விட 11 மடங்கு பொருன்மைைைலும் , 318 மடங்கு அதிக எடை கொண்டது). இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும்.

சனி: வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரு வாயுக்கோளாகும். குறைந்தபட்சம் சனியில் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.

யுரேனஸ்: யுரேனஸ் ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். பெரிய தொலைநோக்கியின் மூலமாகவே இதைக் காணஇயலும். இது மிகவும் சாய்ந்த சுழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.

நெப்டியூன்: இக்கோளானது பச்சை நிற விண் மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன, அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.

கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும்

தொகு

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் கதிரவ அமைப்பைப் பற்றிப் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் அண்டத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி வந்தனர். கண்ணுக்குப் புலப்படும் வான் வழியே பயணிக்கின்ற தெய்வீகப் பொருட்களை விட புவி வேறுபட்ட வகையைச் சேர்ந்தது என்று கருதிவந்தனர்

இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்டா மற்றும் கிரேக்கத் தத்துவ அறிஞர் அரிசுடாட்டில் ஆகிய இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம்[5] பற்றி மறுவரிசைப் படுத்தினர். அரிச்சுடார்க்கசு என்ற அறிஞர் கதிரவனை மையமாகக் கொண்ட முறையை ஊகித்தார். இருப்பினும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர்தான் கதிரவ அமைப்பில் மையப்பகுதியில் கதிரவன் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தவர். 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, எனபவர் கதிரவனில் கதிரவப் புள்ளிகள் இருப்பதையும் வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பின்பற்றிக் கிறித்தியான் ஐகன்சு என்பவர் சனியைச் சுற்றி வரும் டைடன் என்ற நிலவையும் சனியைச் சுற்றியுள்ள கோள் வட்டத்தையும் கண்டறிந்தார். 1705ஆம் ஆண்டு எட்மண்டு ஏலி என்பவர் ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார். இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது. 1838ஆம் ஆண்டு பிரீட்ரிக் பெசல் என்பவர் முதன்முறையாக இடமாறு தோற்றப் பிழை வாயிலாக கதிரவனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். அதன்பிறகு நோக்கீட்டு வானியல் மற்றும் ஆளில்லா விண்கலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, கதிரவ அமைப்பில் உள்ளவற்றைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உதவியது.

அமைப்பு

தொகு
கதிரவ அமைப்பு. (தொலைவு மட்டும் அளவீட்டிற்கானது.)

கதிரவன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும்.

கதிரவன்

தொகு
 
கதிரவன் மற்றும் கோள்களின் அளவு ஒப்பீடு

கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது.

கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகச்செறிவு மிக்க விண்மீன் வகையைச்சார்ந்தது.

கதிரவ அமைப்பின் உட்பகுதி

தொகு
 
உட்புறக் கோள்களின் அளவு ஒப்பீடு: (இடமிருந்து வலமாக) புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்

நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்குக் கோள் வளையங்கள் கிடையாது.

இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்புநிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன. அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன.

உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியைக் காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும்.

புதன்

தொகு
புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும். இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காகப் பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும்[6]. புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும்[7]. இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது[8][9].

வெள்ளி

தொகு
வெள்ளி என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும். இது கதிரவனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (சிலிகேட்) மூடகத்தைக் கொண்டுள்ளது. இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. இது மிகமிக வெப்பமான கிரகமாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 400 °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்[10]. நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. எனவே அதன் வளிமண்டலம் எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது [11].

புவி

தொகு
புவி (1 வாஅ) உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும். இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.[12][12][12][12][12][12][12][12][12][12][12][12][12][12][8][7] புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ நீர்க்கோளம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் புவியில் காணப்படும் 'ண்டத்தட்டு' இயக்கவியல் அதன் தனிச்சிறப்பைக் கூடுதலாக்குகின்றது. புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது. உயிரினங்கள் வாழத் தேவையான 21 சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன[13]. அதற்கு நிலவு என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு. அந்த நிலவே கதிரவ அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் பெற்றுள்ளது.

செவ்வாய்

தொகு
செவ்வாய் (1.5 வாஅ) என்பது புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது. அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் 'ஒலம்பஸ் மான்ஸ்' போன்ற எரிமலைகள் மற்றும் 'வாலிஸ் மேரினாரிஸ்' போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.[14] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்[15] ஏற்பட்டதாகும். செவ்வாய்க் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன.[16][17]

கதிரவ அமைப்பின் வெளிப்பகுதி

தொகு

கதிரவ அமைப்பின் வெளிப்புறப் பகுதி வளிமப் பெருங்கோள்கள் (gas giants) மற்றும் அவற்றின் துணைக்கோள்களுக்குத் தாயகமாக அமைந்துள்ளது. பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் ('சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள் உள்பட) சுற்றி வருகின்றன. கதிரவனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புறத்தில் அமைந்து இருப்பதால் இவை விரைந்து ஆவியாகும் தண்ணீர், அமோனியா, மீதேன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் உட்புற கதிரவ குடும்பத்தில் உள்ள பாறைகள் குளிர்ந்த நிலையில் திடமாகவே இருக்கச்செய்கின்றன.

 
புறக்கோள்களின் அளவு ஒப்பீடு: (இடமிருந்து வலமாக) வியாழன், சனி, யுரேனசு மற்றும் நெப்டியூன்

வெளிப்புறக் கோள்கள்

தொகு

கதிரவ அமைப்பில் நான்கு வெளிப்புறக் கோள்கள் அல்லது பெருங்கோள்கள் உள்ளன. இவை மொத்தமாக 99 சதவீதம் பெரும்பான்மையுடன் கதிரவனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வியாழன் மற்றும் சனிக் கோள்களில் அதிகபட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனசு மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டிகள் உள்ளன. எனவே வானியலாளர்கள் இவைகளை 'பனி அரக்கர்கள்' என்று தனியாக வகைப்படுத்துகின்றனர்.[18] நான்கு பெருங்கோள்களுக்கும் கோள் வளையங்கள் இருப்பினும் சனியின் வளையத்தை மட்டும் புவியிலிருந்து எளிதாகக் காண இயலும்.

வியாழன்

தொகு
வியாழன் (5.2 வாஅ) 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும். அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் மொத்த பெரும்பான்மையைக் காட்டிலும் அதிகமானதாகும். இது ஐட்ரசன் மற்றும் ஈலியம் இரண்டாலும் உருவாகியுள்ளது. இதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தியுள்ளன. வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. எரிமலைச் செயற்பாடு, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[19] 'கனிமீடு' நிலவு கதிரவ அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும்.
சனி (9.5 வாஅ) தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும் வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில்  உள்ளன. வியாழனின் கொள்ளளவில் 60 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாக உள்ளது. கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும். இதற்கு 60 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [20] கதிரவ அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடப் பெரியதும் கதிரவ அமைப்பில் கணிசமான வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே துணைக்கோளும் ஆகும்.

யுரேனசு

தொகு
யுரேனசு (19.6 வாஅ) 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புறக் கிரகங்களுள் மிக மென்மையானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லாக் கோள்களைக் காட்டிலும் கதிரவனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும். ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு அரக்கர்களைக் காட்டிலும் இது மிகக்குளிர்ந்த மையப்பகுதியைக் கொண்டுள்ளது. அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது[21] யுரேனசு 27 அறியப்பட்டத் துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய நிலவான டைட்டன் புவிவியல் செயல்பாட்டுடன் உள்ளது.

நெப்டியூன்

தொகு
யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வாஅ) புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால் அதிக அடர்த்தியுடன் உள்ளது.  இதன் உள்வெப்பக் கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.[22] நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய 'டிரைட்டன்' புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், நீர்ம நைட்ரஜன் [23] கொண்டுள்ளன. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும். நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகோள்களைக் கொண்டுள்ளது. நெப்டியூன் டிரோசன்கள் என்று அழைக்கப்படும் அவை ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன

நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதி

தொகு
 
நெப்டியூனுக்கு அப்பால் உள்ள அறியப்பட்ட பொருட்களுடன் புவியின் அளவு ஒப்பீடு

நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன. சில நேரங்களில் இது கதிரவ அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.

கைப்பர் பட்டை

தொகு

கைப்பர் பட்டை (Kuiper belt) என்பது பனிப்பொருட்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும் . இது கதிரவனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் உள்ளது(30AU-50AU). இது கதிரவ அமைப்பு உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப்பகுதியிலேயே புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை.

குறிப்புகள்

தொகு
  1. Mike Brown (August 23, 2011). ""Free the dwarf planets!"". "Mike Brown's Planets (self-published)".
  2. 2.0 2.1 2.2 "How Many Solar System Bodies". NASA/JPL Solar System Dynamics. பார்க்கப்பட்ட நாள் 2012-12-13.
  3. Wm. Robert Johnston (2012-10-28). "Asteroids with Satellites". Johnston's Archive. பார்க்கப்பட்ட நாள் 2012-12-13.
  4. எஆசு:10.1016/S0273-1177(03)00578-7 10.1016/S0273-1177(03)00578-7
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  5. WC Rufus. "The astronomical system of Copernicus". Popular Astronomy: 510. http://adsabs.harvard.edu/full/1923PA.....31..510R. பார்த்த நாள்: 2009-05--09. 
  6. ச்சென்க் P., மேலோஷ் H.J. (1994), லோபடே த்ருச்ட் ச்கார்ப்ஸ் மற்றும் பருமன் மெர்குரி லிதொச்ப்தேரே , சுருக்கம் 25 சந்திரன் மற்றும் கிரக அறிவியல் மாநாடு, 1994LPI....25.1203S
  7. Bill Arnett (2006). "Mercury". The Nine Planets. பார்க்கப்பட்ட நாள் 2006-09-14.
  8. பென்ஸ் , W., ச்லட்டேரி , W. L., காமேரோன் , A. G. W. (1988), புதன் மோதல் களைதல் மேல்பலகை ,இகாருஸ் , v. 74, p. 516–528.
  9. காமேரோன் , A. G. W. (1985), புதன் பாகுபாடான ஆவியாகும் முறைமை {/௦ } , இகாருஸ் , v. 64, p. 285–294.
  10. Mark Alan Bullock (1997) (PDF). The Stability of Climate on Venus. Southwest Research Institute. http://www.boulder.swri.edu/~bullock/Homedocs/PhDThesis.pdf. பார்த்த நாள்: 2006-12-26. 
  11. Paul Rincon (1999). "Climate Change as a Regulator of Tectonics on Venus" (PDF). Johnson Space Center Houston, TX, Institute of Meteoritics, University of New Mexico, Albuquerque, NM. Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2006-11-19.
  12. "Is there life elsewhere?". NASA Science (Big Questions). Archived from the original on 2009-05-28. பார்க்கப்பட்ட நாள் 2009-05-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. Anne E. Egger, M.A./M.S. "Earth's Atmosphere: Composition and Structure". VisionLearning.com. பார்க்கப்பட்ட நாள் 2006-12-26.
  14. David Noever (2004). "Modern Martian Marvels: Volcanoes?". NASA Astrobiology Magazine. Archived from the original on 2010-03-13. பார்க்கப்பட்ட நாள் 2006-07-23.
  15. "Mars: A Kid's Eye View". NASA. Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  16. Scott S. Sheppard, David Jewitt, and Jan Kleyna (2004). "A Survey for Outer Satellites of Mars: Limits to Completeness". The Astronomical Journal. பார்க்கப்பட்ட நாள் 2006-12-26.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  17. கிரகத்தில் தண்ணீர்: புதிய ஆதாரங்களுக்காக நாசாவை கவுரவித்த கூகுள் தி இந்து தமிழ் 30 செப்டம்பர் 2015
  18. Jack J. Lissauer, David J. Stevenson (2006). "Formation of Giant Planets" (PDF). NASA Ames Research Center; California Institute of Technology. Archived from the original (PDF) on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16.
  19. Pappalardo, R T (1999). "Geology of the Icy Galilean Satellites: A Framework for Compositional Studies". Brown University. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  20. J. S. Kargel (1994). "Cryovolcanism on the icy satellites". U.S. Geological Survey. Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16.
  21. Hawksett, David; Longstaff, Alan; Cooper, Keith; Clark, Stuart (2005). "10 Mysteries of the Solar System". Astronomy Now. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  22. Podolak, M.; Reynolds, R. T.; Young, R. (1990). "Post Voyager comparisons of the interiors of Uranus and Neptune". NASA, Ames Research Center. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  23. Duxbury, N.S., Brown, R.H. (1995). "The Plausibility of Boiling Geysers on Triton". Beacon eSpace. Archived from the original on 2009-04-26. பார்க்கப்பட்ட நாள் 2006-01-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: multiple names: authors list (link)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியக்_குடும்பம்&oldid=4083009" இலிருந்து மீள்விக்கப்பட்டது