துடுப்பாட்ட உலகக்கிண்ண வரலாறு
உலகக் கோப்பைகளுக்கு முன்பு பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள்
தொகு1877ஆம் ஆண்டு ஆத்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதல் தேர்வுத் துடுப்பாட்டம் நடந்தது. 1900 வேனில்கால ஒலிம்பிக் போட்டிகளில் துடுப்பாட்டம் சேர்க்கப்பட்டு பிரித்தானியா பிரான்சை 158 ஓட்டங்களில் வென்றது. [1] ஆயினும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு துடுப்பாட்டம் ஓர் ஒலிம்பிக் விளையாட்டாக இருந்ததை பின்னர் விலக்கிக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் பன்னாட்டுப் போட்டி ஒன்றை அமைக்கும் வண்ணமாக எடுக்கப்பட்ட முதல் முயற்சி 1912ஆம் ஆண்டின் முக்கோணப் போட்டியாகும் (Triangular Tournament). இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்வுப் போட்டியான இதனில் அக்காலத்தில் இருந்த மூன்று தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளான இங்கிலாந்து,ஆத்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா கலந்து கொண்டன. ஆயினும் மோசமான வானிலை, குறைந்த மக்கள் ஆதரவு போன்றவற்றால் இச்சோதனை மீண்டும் நடத்தப்படவில்லை.[2] இதன்பிறகு பன்னாட்டு துடுப்பாட்ட அணிகள் தங்களுக்குள் இருபக்க ஆட்டத்தொடர்களை விளையாடினவே தவிர இரண்டுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற ஆட்டத்தொடர்கள் விளையாடப்படவில்லை.
1960களில் இங்கிலாந்தின் கௌன்டி (மாவட்டம்) அணிகள் தங்களுக்குள் ஒருநாளுக்குள்ளேயே முடியுமாறான மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டத்தை ஆடத் தொடங்கின.1962ஆம் ஆண்டு நான்கு அணிகள் பங்கேற்ற வெளியேற்றப் போட்டியான மிட்லாண்ட்சு வெளியேற்ற கிண்ணம்,[3] 1963ஆம் ஆண்டின் பிரெண்ட்ஸ் பிராவிடன்ட் கோப்பை முதலியன ஒருநாள் துடுப்பாட்டத்தில் மக்களை ஆர்வம் கொள்ளச் செய்தன. இதன் தொடர்ச்சியாக 1969ஆம் ஆண்டு இங்கிலாந்து முற்றும் தழுவிய ஞாயிறு சங்கப்போட்டிகள் (Sunday League) உருவானது.
முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் 1971ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையே மெல்பேர்ணில் நடைபெறவிருந்த தேர்வுத் துடுப்பாட்டம் மழையினால் தடைபட்டதையடுத்து கடைசிநாளன்று ஒருநாள் போட்டியாக நிகழ்ந்தேறியது. ஏமாற்றமடைந்த கூட்டத்தினருக்காக அணிக்கு எட்டு பந்துகள் கொண்ட 40 பந்துப் பரிமாற்றங்கள் ஆட்டமாக விளையாடப்பட்டது.[4]
இங்கிலாந்தில் மற்றும் பிற நாடுகளில் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட ஈடுபாட்டையும் துவக்க கால ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களை கருத்தில் கொண்டும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஓர் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டித்தொடரை அமைப்பது குறித்து கவனம் கொள்ளத் தொடங்கியது.[5]
புருடென்சியல் உலகக்கிண்ணங்கள்
தொகு1975 துடுப்பாட்ட உலகக்கோப்பையை இத்தகைய உலகளாவிய போட்டியொன்றை நடத்தக் கூடிய வளங்களைக்கொண்ட இங்கிலாந்து மட்டுமே நடத்த முன்வந்தது. [6] முதல் மூன்று போட்டிகளும் பரவலராக விளங்கிய நிதி சேவைகள் நிறுவனம் புருடென்சியல் நிறுவனத்தின் நினைவாக அலுவல்முறையில் புருடென்சியல் கோப்பை என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆட்டமும் அணிக்கு 60 பந்துப் பரிமாற்றங்கள் கொண்டதாகவும் சிவப்புப் பந்துகள், வெள்ளை சீருடைகளுடனும் ஆடப்பட்டது. பகல் நேரத்திலேயே அனைத்து ஆட்டங்களும் ஆடப்பட்டன. முதல் உலகக்கிண்ணத்தில் எட்டு அணிகள் பங்கேற்றன: ஆத்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாக்கித்தான், இந்தியா, மற்றும் நியூசிலாந்து (இந்த ஆறும் அக்காலத்தில் தேர்வு நிலை பெற்றிருந்தன); இவற்றுடன் இலங்கையும் பன்னாட்டு அணியான கிழக்கு ஆபிரிக்காவும் இணைந்தன. பங்குகொள்ளாத முக்கிய அணியாக அப்போது நிலவிய பன்னாட்டு விளையாட்டு விலக்கலால் தென்னாபிரிக்கா இருந்தது. இந்த முதல் உலகக்கிண்ணப் போட்டித்தொடரில் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஆத்திரேலியாவை 17 ஓட்டங்களில் தோற்கடித்து கோப்பையை வென்றது.
அடுத்த இரு உலகக்கோப்பைகளும் இங்கிலாந்திலேயே நடத்தப்பட்டது. 1979 உலகக்கிண்ணத்தில் முதல்முறையாக தேர்வுநிலை அடையாத நாடுகளிடையே உலகக்கிண்ணத்தில் போட்டியிடத் தகுதி பெற்றவர்களை கண்டறியும் விதமாக ஐசிசி கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.[7] 1979 பதுஅ கோப்பைப் போட்டிகளில் இலங்கையும் கனடாவும் தகுதி பெற்றன. இந்தப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை 92 ஓட்டங்களில் தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்தப் போட்டியினை அடுத்து நடந்த தங்கள் சந்திப்பில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை உலகக்கிண்ணப்போட்டிகளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்தது.
இங்கிலாந்து மூன்றாம் முறையாக நடத்திய 1983 நிகழ்வின்போது இலங்கை தேர்வுநிலை நாடாக உயர்வு பெற்றிருந்தது. பதுஅ கோப்பை மூலமாக சிம்பாப்வே போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஏமாற்றமாக இந்தியா அவ்வணியை 43 ஓட்டங்களில் தோற்கடித்து கோப்பையை வென்றது. [5]
1987–1996
தொகு1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இந்தியாவும் பாக்கிஸ்தானும் இணைந்து, இங்கிலாந்திற்கு வெளியே, நடத்திய முதல் உலகக்கிண்ணமாகும். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் இறுதி ஆட்டத்தில் பங்கெடுக்காத முதல் முதல் உலகக்கிண்ணமும் ஆகும். இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் துணைக்கண்டத்தில் நிலவும் குறைந்த பகல்நேரத்தைக் கருத்தில் கொண்டு இதுவரை 60 பந்துப் பரிமாற்றங்களாக இருந்த ஆட்டம், தற்போது சீர்தரப்படுத்தப்பட்டுள்ள, 50 பந்த்ப் பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டது. ஆத்திரேலியா இங்கிலாந்தை 7 ஓட்டங்களில் தோற்கடித்து உலகக்கோப்பையை வென்றது; இதுவரை ஆடியுள்ள உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களிலேயே மிக்குறைவான வேறுபாட்டில் முடிந்த ஆட்டமாக விளங்குகிறது.
ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து ஏற்று நடத்திய 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் வண்ணச் சீருடைகள், வெள்ளைப் பந்து, பகல்/இரவு ஆட்டங்கள், களத்தடுப்பில் சில புதியக் கட்டுப்பாடுகள் என பல புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பன்னாட்டு விளையாட்டுப் புறக்கணிப்பு நீக்கலை அடுத்து தென்னாபிரிக்கா பங்கெடுத்த முதல் உலகக்கிண்ணமாக இது அமைந்திருந்தது. துவக்கத்தில் மோசமாக ஆடிய பாக்கிஸ்தான் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களில் தோற்கடித்து வெற்றிவாகைச் சூடியது.[8]
1996 உலகக்கோப்பைப் போட்டிகள் இரண்டாம் முறையாக மீண்டும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்பட்டது; இம்முறை இலங்கையும் சில முதற்கட்ட பிரிவு ஆட்டங்களை ஏற்றுக் கொண்டது. இது துடுப்பாட்ட விளையாட்டரங்கில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத அரசியலின் பின்னணியில் நடந்தது. 1995/96 ஆண்டில் இலங்கையின் ஆத்திரேலிய ஆட்டப்பயணத்தினூடே மெல்பேர்ண் ஆட்டரங்கில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் நடுவர் டர்ரெல் ஹைர் புறச்சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வீசுச்செயலை ஐயுற்று "நோ பால்" (கணக்கெடுக்கவியலா பந்து) என அறிவித்தது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பயணத்தின் இறுதி நிகழ்வாக சிட்னியில் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலிய பந்து வீச்சாளர் கிளென் மெக்ராவிற்கும் இலங்கையின் சனத் ஜயசூரியவிற்கும் இடையே கைகலப்பு மூண்டது. ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணியினர் எதிரணியுடன் கை குலுக்கவும் மறுத்தனர். இதனைத் தொடர்ந்து சில ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்களுக்கு கொலைமிரட்டல் வந்ததாலும் கொழும்பில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தாலும் ஆத்திரேலிய அணி இலங்கையில் ஆட மறுத்தது. மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட மறுத்தது. இந்த இரு அணிகளும் தங்கள் ஆட்டத்தை இழந்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பின்னர் கென்யாவும் சிம்பாப்வேயும் இலங்கையில் தங்கள் ஆட்டங்களில் பங்கெடுக்க சம்மதித்தனர். ஆத்திரேலியாவின் இந்த புறக்கணிப்பை துணைக்கண்டத்து துடுப்பாட்ட அலுவலர்கள் கண்டித்தனர்; இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ் ஆத்திரேலியாவின் வெளியேற்றத்தை வலியுறுத்தினார். துணைக் கண்டத்து ஆட்டக்களங்களின் தேய்க்கும் தன்மையால் துவக்க ஓவர்களில் மட்டையாளர்களுக்கு சாதகமாக இருந்த பந்து பிந்தைய ஓவர்களில் மென்மையாகி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி புரிந்தது. துவக்க ஆட்டக்காரராக விளங்கிய மார்க் வா ஒரே போட்டியில் மூன்று சதங்களை அடித்த சாதனையை நிகழ்த்தினார்.
காலிறுதியில் போட்டிநடத்துனர்களான இந்தியாவும் பாக்கித்தானும் பெங்களூரில் மோதின. பாக்கித்தானின் அணித்தலைவர் வாசிம் அக்ரம் காயம் காரணமாக களத்தைவிட்டு விலக, இந்திய மட்டையாளர் அஜய் ஜடேஜா வாக்கர் யூனிசின் கடைசி இரு ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியின் மொத்த புள்ளிகளை 288 ஓட்டங்களாக உயர்த்தினார். பாக்கித்தானின் எதிர் ஆட்டத்தில் 109/1 என்ற புள்ளிக்கணக்கில் இருந்தபோது வெங்கடேஷ் பிரசாத்தின் பந்து வீச்சில் நான்கு அடித்த ஆமீர் சோகைல் அவரை வெறுப்பேற்ற, பிரசாத் உந்தப்பட்டு சோகைலை வெளியேற்றியதுடன் அல்லாது அடுத்த 19 ஓட்டங்களில் மூன்று விக்கெட்களைச் சாய்த்தார். 39 ஓட்டங்களில் தோல்வியுற்ற பாக்கிதானின் ஆடுதிறனை ஐயுற்று பாக்கித்தான் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. வாசிம் ஆட்டத்தை களத்திற்கு வெளியே தீர்மானித்திருக்கிறார் என்று பாக்கித்தான் பொதுமக்கள் நடத்திய கலவரத்தில் ஒருவர் மரணமடைந்தார். மற்ற காலிறுதிகளில் ஆத்திரேலியாவும் இலங்கையும் முறையே நியூசிலாந்தையும் இங்கிலாந்தையும் வென்றன; மேற்கிந்தியத் தீவுகள் அதுவரை அனைத்து ஆட்டங்களையும் வென்று வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை வென்றது.
அரையிறுதியில் இலங்கை இந்தியாவை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் துடுப்பாடரங்கில் எதிர்கொண்டது. இலங்கையின் 252 ஓட்டங்களுக்கு எதிராக 98/1 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்தியா 120/8 என சுருண்டபோது பார்வையாளர்கள் வன்முறையில் ஈடுபடத்தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டு இலங்கை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. மொகாலியில் நடந்த மற்றொரு அரையிறுதியில் ஆத்திரேலியா 29 ஓட்டங்களுக்கு தனது கடைசி ஏழு விக்கெட்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகளை வென்றது. லாகூரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆத்திரேலியாவை ஏழு விக்கெட்களால் வென்று உலகக்கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது. இரு அணிகளிடமும் ஆத்திரேலியப் பயணத்தின் கசப்பான அனுபவங்களின் பின்னணியில் வெறுப்பு நிலவியது. ஆட்ட நாயகனாக அரவிந்த டி சில்வா அறிவிக்கப்பட்டார்.
ஆத்திரேலியாவின் மூன்று தொடர்வெற்றிகள்
தொகுமூன்று தொடர் விக்கெட்களைப் பெற்றால் சிறப்பாகக் கருதும் துடுப்பாட்ட உலகில் தொடர்ந்த மூன்று உலகக்கிண்ணங்களில் வெற்றிபெற்ற அணியாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி திகழ்கிறது.
1999
தொகு1999 போட்டிகள் பதினாறு ஆண்டுகள் கழித்து இங்கிலாந்திற்குத் திரும்பியது; இம்முறை இங்கிலாந்துடன் அயர்லாந்து, இசுகாட்லாந்து மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தின. பிரிவுச் சுற்றில் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட, வெற்றி வாய்ப்பாளராகக் கருதப்பட்ட, ஆத்திரேலியா வாகை சூட அடுத்த ஏழு ஆட்டங்களையும் தொடர்ந்து வெல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அவர்களது கடைசி சூப்பர் 6 ஆட்டத்தில் ஹெடிங்லே ஆட்டரங்கில் தென்னாபிரிக்காவை வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் முதலில் ஆடிய தென்னாபிரிக்கா 271 ஓட்டங்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கியப் பயணத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது ஆத்திரேலியாவின் அணித்தலைவர் ஸ்டீவ் வா அடித்தப் பந்து நேராக ஹெர்ஷெல்ஸ் கிப்ஸ் கைக்கு வந்தது. பந்தைப் பிடித்த மகிழ்ச்சியில் அதனை உயரே தூக்கி எறிய முயன்றபோது பந்து தவறியது. இந்நிகழ்வை பின்னர் வாவ் "உலகக்கிண்ணத்தைக் கோட்டை விட்டது" எனக் கேலி செய்தார். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திய வாவ் ஆட்டமிழக்காது சதமடித்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆத்திரேலியா வெற்றி பெற வழி கோலினார். அரையிறுதியில் மீண்டும் தென்னாபிரிக்காவுடன் மோதியபோது முதலில் ஆடிய ஆத்திரேலியா 213 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி பந்துப் பரிமாற்றத்தில் ஒன்பது விக்கெட்களை இழந்து ஒன்பது ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி போட்டி நாயகன் விருது பெறவிருந்த, லான்ஸ் குளுஸ்னர் மட்டையாளராக இருந்தார். முதலிரு பந்துகளை எல்லைக்கு அனுப்பி எட்டு ஓட்டங்கள் பெற்று சமநிலையை எட்டினார். இன்னும் ஒரே ஓட்டம் எடுக்கவேண்டிய நிலையில் நான்காவது பந்தில் இவரும் எதிர்புரத்தில் இருந்த ஆலன் டொனால்ட்டும் புரிந்துணர்வு இன்றி ஒரே முனையிலிருக்க களத்தடுப்பு ஆட்டக்காரரால் "ரன் அவுட்" என ஆட்டமிழக்க நேர்ந்தது. ஆட்டம் சமநிலையில் முடிவுற்றாலும் சூப்பர் 6 பிரிவில் பெற்ற வெற்றியின் காரணமாக ஆத்திரேலியா இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. பாக்கிஸ்தானுடன் நடந்த இறுதிப் போட்டியில் 132 ஓட்டங்களுக்கு பாக்கிஸ்தானை முடக்கிய ஆத்திரேலியா இருபதே பந்துப் பரிமாற்றங்களில் இரு விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி ஈட்டியது.
2003
தொகுதென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் கென்யா 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டித்தொடரை ஏற்று நடத்தின. போட்டியிட்ட அணிகளின் எண்ணிக்கையும் பனிரெண்டிலிருந்து பதினான்காக உயர்ந்தது. அரசியல் காரணங்களுக்காகவும் பாதுகாப்பு பிரச்சினைகளினாலும் எதிர்த்து ஆட மறுத்த காரணத்தால் சிம்பாப்வே அணி இங்கிலாந்திற்கு எதிராகவும் கென்யா அணி நியூசிலாந்திற்கு எதிராகவும் ஆட்டம் ஆடாமலே வென்றதாக அறிவிக்கப்பட்டன. நியூசிலாந்து அணியின் இந்த ஆட்டமிழப்பு மற்றும் இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கெதிரான வெற்றிகளின் அடிப்படையில் கென்யா அரையிறுதியில் இந்தியாவுடன் ஆடத் தகுதி பெற்றது. ஓர் துணைநிலை அங்கத்தினர் நாடு பெற்ற மிக்கப்பெரும் வெற்றியாக இது அமைந்தது. இந்த ஆட்டத்தில் கென்யாவை வென்ற இந்தியா ஜோகானஸ்பேர்க்கில் ஆத்திரேலியாவை இறுதி ஆட்டத்தில் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இறுதி ஆட்டத்திலேயே மிகக்கூடுதலான மொத்தப்புள்ளிகளாக இரு விக்கெட்கள் இழப்பிற்கு 359 ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியா, இந்தியாவை 125 ஒட்டங்கள் வேறுபாட்டில் தோற்கடித்தது. [9]
2007
தொகு2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை மேற்கிந்தியத் தீவுகள் ஏற்று நடத்தியது. இதன் மூலம் துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆறு நிலப் பெரும் பகுதிகளிலும் முதலில் நடத்தப்பட்ட ஓர் போட்டியாக பெருமை பெற்றது - ஐரோப்பா (1975, 1979, 1983, 1999); ஆசியா (1987, 1996); ஆத்திரேலியா (1992); ஆபிரிக்கா (2003); வட மற்றும் தென் அமெரிக்கா (2007).[10] அயர்லாந்து தனது முதல் நுழைவிலேயே சிம்பாப்வே மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுடனான ஆட்டங்களில் சமநிலை அடைந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாம் சுற்றிலும் வங்காள தேசத்தை வென்று பதுஅ ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திற்கான தகுநிலை பெற்றது.[11] அயர்லாந்துடனான தோல்வியின் பின்னணியில் பாக்கிஸ்தானின் பயிற்றுனர் பாப் ஊல்மர் தமது விடுதியில் இறந்திருக்க, அது தற்கொலையா அல்லது கொலையா என்ற சர்ச்சை எழுந்தது.[12] ஆத்திரேலியா இலங்கையை இறுதி ஆட்டத்தில் மோசமான ஒளியில் ட/லூ முறையில் 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றது. தங்கள் மூன்றாவது தொடர்ச்சியான உலகக்கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டதுடன் உலகக்கிண்ணங்களில் தொடர்ச்சியாக 29 ஆட்டங்களில் தோல்வியடையாத பெருமையும் பெற்றது.[13]
வடிவத்தின் வரலாறு
தொகுபங்கேற்ற அணிகளின் எண்ணிக்கையும் இறுதிப் போட்டிகளின் வடிவமும் கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து மாறி வந்துள்ளது. சுருக்கமாக:
ஆண்டு | ஏற்று நடத்தியவர் | அணிகள் | ஆட்டங்களின் எண்ணிக்கை |
சுற்று 1 | பிந்தைய நிலைகள் |
---|---|---|---|---|---|
1975 | இங்கிலாந்து | 8 | 15 | 2 பிரிவுகள் | நான்கு அணிகளின் வெளியேற்றம் |
1979 | இங்கிலாந்து | 8 | 15 | 2 பிரிவுகள் | நான்கு அணிகளின் வெளியேற்றம் |
1983 | இங்கிலாந்து | 8 | 27 | 2 பிரிவுகள் | நான்கு அணிகளின் வெளியேற்றம் |
1987 | இந்தியா/பாக்கிஸ்தான் | 8 | 27 | 2 பிரிவுகள் | நான்கு அணிகளின் வெளியேற்றம் |
1992 | ஆத்திரேலியா/நியூசிலாந்து | 9 | 39 | 1 பிரிவு | நான்கு அணிகளின் வெளியேற்றம் |
1996 | இந்தியா/பாக்கிஸ்தான்/இலங்கை | 12 | 37 | 2 பிரிவுகள் | எட்டு அணிகளின் வெளியேற்றம் |
1999 | இங்கிலாந்து | 12 | 42 | 2 groups | 6 அடங்கிய 1 பிரிவு (சூப்பர் 6), நான்கு அணிகளின் வெளியேற்றம் |
2003 | தென்னாபிரிக்கா /சிம்பாப்வே/கென்யா | 14 | 54 | 2 பிரிவுகள் | 6 அடங்கிய 1 பிரிவு (சூப்பர் 6), நான்கு அணிகளின் வெளியேற்றம் |
2007 | மேற்கிந்தியத் தீவுகள் | 16 | 51 | 4 பிரிவுகள் | 8 அடங்கிய 1 பிரிவு (சூப்பர் 8), நான்கு அணிகளின் வெளியேற்றம் |
2011 | இந்தியா/இலங்கை/வங்காளதேசம் | 14 | 49 | 2 பிரிவுகள் | எட்டு அணிகளின் வெளியேற்றம் |
விளக்கங்கள்
தொகுதுவக்க வடிவம்
தொகுதுடுப்பாட்ட உலகக் கோப்பையின் வடிவம் அதன் வரலாற்றினூடே தொடர்ந்து பெரிதும் மாறி வந்துள்ளது. முதல் நான்கு போட்டித் தொடர்களில் எட்டு அணிகள் பங்கேற்றன. இவை நான்கணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இருநிலைகளில் நடந்தப் போட்டிகளில் முதலாம் சுற்று பிரிவுச் சுற்று எனவும் இரண்டாம் சுற்று வெளியேற்ற முறையில் நடந்த வெளியேற்றச் சுற்று எனவும் அழைக்கப்பட்டது. 1975 மற்றும் 1979 துடுப்பாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளில் , ஒவ்வொரு அணியும் தொடர்சுழல் முறையில் விளையாடின. அடுத்த இரு உலகக்கோப்பை போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தாங்களிருந்த பிரிவிலுள்ள அணியுடன் தொடர்சுழல் முறையில் இருமுறை ஆடின. ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முதலிரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.அரையிறுதியின் வெற்றியாளர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
சோதனை வடிவங்கள்
தொகு1992ஆம் ஆண்டு அனைத்து அணிகளும் மற்றவற்றுடன் ஒருமுறை ஆடின. முதல் நான்கு அணிகளும் வெளியேற்றச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். வெளியேற்றச்சுற்று முந்தைய ஆண்டுகள் போலவே நடந்தன. 1996ஆம் ஆண்டில் அணிகளின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து பனிரெண்டாக உயர்ந்தமையால் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இருபிரிவுகளிலும் முதலிடம் பெற்ற நான்கு அணிகள் வெளியேற்றச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இரண்டாம் நிலையில் காலிறுதிப் போட்டிகள் இடம் பெற்றன.
சூப்பர் நிலை காலங்கள்
தொகு1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டித்தொடரில் துவக்கப் பிரிவுகள் நிலை வடிவத்தில் மாற்றமெதுவும் இல்லாதபோதும் இரண்டாம் நிலையில் புதுமையான மாற்றமாக "சூப்பர் 6" என்றழைக்கப்பட்ட சுற்று, வழமையான காலிறுதி ஆட்டங்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டிருந்தது. ஆறு போட்டியாளர்கள் அடங்கிய இரு பிரிவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் மூன்று அணிகள் இரண்டாம் நிலைக்கு எட்டின. சூப்பர் 6 இரண்டாம் நிலையில் பிரிவு "ஏ"யின் ஒவ்வொரு தகுதியாளரும் மற்ற பிரிவு "பி"யின் ஒவ்வொரு தகுதியாளருடனும் விளையாட வேண்டியிருந்தது. சூப்பர் 6 நிலையில் அணிகள் பெற்ற வெற்றிகளுக்கு புள்ளிகள் பெற்றதுடன் முதற்சுற்றில் தங்கள் பிரிவிலிருந்து தகுதிபெற்ற மற்ற இரு அணிகளுடன் பெற்ற புள்ளிகளையும் கணக்கெடுத்துக் கொண்டன. சூப்பர் ஆறில் கூடுதலாக புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பிந்தைய ஆட்டங்கள் முந்தைய கிண்ணங்கள் போலவே நடைபெற்றன. 2003ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியும் 1999ஆம் ஆண்டைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. பங்கேற்ற அணிகள் பதினான்காக உயர்ந்ததால் ஒவ்வொரு பிரிவிலும் ஏழு அணிகள் இடம் பெற்றிருந்தன. சூப்பர் 6 தகுதியாளர்கள் கீழ்சுற்றில் தகுதி பெறாத அணிகளுடன் பெற்ற வெற்றிகளுக்கு ஒரு புள்ளியை மேல்சுற்றுக்கு முன்னெடுத்துச் சென்றன. இந்தச் சிக்கலான கணக்குமுறை அடுத்த உலகக்கிண்ணத்தில் கைவிடப்பட்டது.[14]
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பதினாறு அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளில் முதல் சுற்றைக் கொண்டிருந்தது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆட தகுதிபெற்ற பதினோரு அணிகள் நேரடியாக போட்டித்தொடரில் பங்கேற்றன; மற்ற ஐந்து அணிகள் ஐசிசி கோப்பை போட்டியாளர்களிடமிருந்து தேர்வாயினர். ஒவ்வொரு பிரிவினுள்ளும் அணிகள் தொடர் சுழல்முறையில் விளையாடினர். முதல் இரு அணிகள் "சூப்பர் 8" இரண்டாம் நிலைக்கு தகுதி பெற்றன. தாங்கள் முன்பே முதல்சுற்றில் விளையாடியிருந்த தங்கள் பிரிவிலிருந்த அணியுடன் ஆடவில்லை என்பதைத் தவிர இந்த எட்டு அணிகளும் தொடர் சுழல் முறையில் பிற அணிகளுடன் ஆடின. [15] சூப்பர் எட்டின் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கும் பின்னர் இறுதி ஆட்டத்திற்கும் முன்னேறின.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Olympic Games, 1900, Final". cricinfo.com. Archived from the original on 2006-11-08. பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.
- ↑ "The original damp squib". cricinfo.com. Archived from the original on 2007-10-16. பார்க்கப்பட்ட நாள் 2006-08-29.
- ↑ "The birth of the one-day game". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2006-09-10.
- ↑ "What is One-Day International cricket?". newicc.cricket.org. Archived from the original on 2006-11-19. பார்க்கப்பட்ட நாள் 2006-09-10.
- ↑ 5.0 5.1 "The World Cup - A brief history". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2006-12-07.
- ↑ "The History of World Cup's". cricworld.com. Archived from the original on 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
- ↑ "ICC Trophy - A brief history". cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2006-08-29.
- ↑ "1992: The 'cornered Tiger' bites back". nobok.co.uk. Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2006-09-01.
- ↑ "Aussies lift World Cup". bbc.co.uk. 2003-03-23. பார்க்கப்பட்ட நாள் 2006-08-29.
- ↑ "Previous Tournaments". ICC. Archived from the original on 2007-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
- ↑ "Ireland ranked tenth in LG ICC ODI Championship". ICC. 2007-04-22. Archived from the original on 2007-04-28. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
- ↑ "Bob Woolmer investigation round-up". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
- ↑ "Australia v Sri Lanka, World Cup final, Barbados". Cricinfo. 2007-04-28. பார்க்கப்பட்ட நாள் 2007-05-06.
- ↑ "Bacher's World Cup plan ignored". bbc.co.uk. 2003-03-28. பார்க்கப்பட்ட நாள் 2006-09-07.
- ↑ "About the Event" (PDF). cricketworldcup.com. Archived from the original (PDF) on 2006-09-05. பார்க்கப்பட்ட நாள் 2006-09-02.