தெற்கு ரீடு மான்
தெற்கு ரீடு மான் , ( southern reedbuck, rietbok [2] or common reedbuck ) என்பது தெற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் ஒரு பகலாடி மறிமான் ஆகும். இது முதன்முதலில் 1785 இல் டச்சு மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான பீட்டர் போடார்ட் என்பவரால் விவரிக்கப்பட்டது. இது ரீடு மான் பேரினத்தையும், மாட்டுக் குடும்பத்தையும் சேர்ந்தது. இந்த விலங்கின் சராசரி நிறை 58 கிலோ (128 பவுண்டு) மற்றும் உடல் நீளம் சுமார் 134–167 செமீ (53–66 அங்குலம்) ஆகும்.
தெற்கு ரீடு மான் Southern reedbuck | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரீடு மான்
|
இனம்: | R. arundinum
|
இருசொற் பெயரீடு | |
Redunca arundinum (Boddaert, 1785) | |
Range |
வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல்
தொகுஇது முதன்முதலில் 1785 இல் டச்சு மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான பீட்டர் போடார்ட் என்பவரால் விவரிக்கப்பட்டது. இது ரீடு மான் பேரினம் மற்றும் மாட்டுக் குடும்பம் என வகைப்படுத்தபட்டுள்ளது. இதன் விலங்கியல் பெயரான Redunca arundinum என்பது இரண்டு இலத்தீன் சொற்களிலிருந்து இடப்பட்டது: ரெடுங்காஸ் (பின்னோக்கி வளைந்திருக்கும், அதே சமயம் கொம்புகள் முன்னோக்கி வளைந்திருக்கும்) மற்றும் அருண்டோ ( ஹருண்டோ ) (நாணல் என்று பொருள்; அருண்டினம், நாணல் தொடர்பானது) இந்த நாணற் புற்களுக்கு இடையில் இவை அதிகம் காணப்படுவதால் இதுவும் இதன் பெயரில் இணைந்துள்ளது.
விளக்கம்
தொகுதெற்கு ரீடு மான்கள், ரெடுங்காவில் உள்ள மற்ற இனங்களை விட பெரியது, அதாவது ஆர். ரெடுங்கா (போஹோர் ரீடு மான்) மற்றும் ஆர். ஃபுல்வோருஃபுலா (மலை ரீடு மான் ) ஆகியவற்றை விட பெரியது. [3] இது நிற்கும்போது தோள் வரை 80-90 செமீ (31-35 அங்குலம்) உயரமாக உள்ளது. பெண் மான்களின் எடை 48 கிலோ, ஆண் மான்களின் எடை 68 கிலோ என்று இருக்கும் [3] இவற்றின் ஒவ்வொரு முன்கால்களின் முன்பகுதியில் தனித்தன்மை வாய்ந்த கருத்த கோடுகள் மற்றும் கீழ் பின்னங்கால் மற்றும் கண்களைச் சுற்றி வெண்மையான வளையங்களைக் கொண்டுள்ளது. [4] இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். [5]
தெற்கு ரீடு மான்களில்இதன் உரோமம் மென்மையாக கிட்டத்தட்ட கம்பளி போன்று இருக்கும். [6] இதன் உடலின் நிறம் வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்தில் இருக்கும், மேலும் கழுத்து மற்றும் மார்பில் நிறம் மங்கியதாக இருக்கும். [5] இதன் உதடுகள் மற்றும் கன்னம் அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளை உரோமங்கள் உண்டு. இவற்றின் வால் குட்டையாகவும் முடிகள் நிறைந்ததாக இருக்கும். வாலின் அடிப்பகுதி வெண்மையாக இருக்கும். [4] இவற்றில் பெண் மான்களுக்கு கொம்புகள் இல்லை. ஆண் மான்களுக்கு முன்னோக்கி வளைந்த கொம்புகள் உண்டு. கொம்புகள் சுமார் 35-45 செமீ (14-18 அங்குலம்) நீளம் கொண்டவை. [4]
சூழலியல்
தொகுதெற்கு ரீடு மான்கள் இணையாகவோ அல்லது தனித்தோ வாழ்கின்றன.[4] சில நேரங்களில், இவை சுமார் 20 மான்களைக் கொண்ட மந்தைகளாகவும் இருக்கின்றன. இவை பகல் வெப்பத்தின்போது புல் அல்லது நாணல் படுக்கைகளில் படுத்துக் கொள்ள விரும்புகிறன. மேலும் இவை விடியற் காலையிலும், மாலையிலும், சில நேரங்களில் இரவிலும் கூட மேய விரும்புகின்றன. மூத்த ஆண் ரீடு மான் 35-60 எக்டேர் நிலப்பரப்பை தனது பிராந்தியமாக கொண்டு நிரந்தரமாக வசிக்கிறது. பொதுவாக தன் எல்லைக்குள் ஒற்றைப் பெண் மானுடன் சேர்ந்து வாழ்கிறது. பெண் மானுக்கு போட்டியாக வரும் வேறு ஆண் மான்களை எதிர்த்து தடுக்கிறது. மூத்த ஆண் மான்களுக்காக பெண் மான்களும் இளம் ஆண் மான்களும் குதித்து நடனம் ஆடுகிறன. [5] நடனத்தின் போது, குட்டி மான்கள் வேகமாக ஓடுதல், தாவுதல், வாலை சுருட்டுதல் போன்றவற்றைச் செய்கிறது. இந்த மான்கள் கோடையில் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் ஈரமிக்க காலத்தில் இரவாடிகளாக இருக்கும். ஓய்வெடுக்கவும், மேயவும், நீர்ருந்தவும், நல்ல இடங்களை அடையவும் தொடர்ந்து வழக்கமான பாதைகளைப் பயன்படுத்துகிறது. இவற்றறின் வசிப்பபிடமாக காடுகளில் இவற்றின் சராசரி வாழ் எல்லையானது பெண் மான்களுக்கு 123 எக்டேர் மற்றும் ஆண் மான்களுக்கு 74 எக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை முதன்மையாக வேட்டையாடுபவைகளாக சிங்கங்கள், சிறுத்தைகள், சிவிங்கிப்புலிகள், புள்ளிக் கழுதைப்புலிகள், கேப் வேட்டை நாய்கள், மலைப்பாம்புகள், முதலைகள் ஆகியவை உள்ளன. [2] ஏறக்குறைய ஒரே நிறத்தில் இருக்கும் இவற்றின் உடல் நிறத்தின் காரணமாக இவை புல்வெளிகளில் தங்களை எளிதாக மறைத்துக்கொள்ள முடிகிறது. காட்டு விலங்குகள் இவற்றைத் தாக்க வரும்பொழுது மிக விரைவாக ஓடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு ஓடிய பிறகு நின்று திரும்பிப் பார்க்கும். பின்னால் துரத்திவந்த விலங்கைக் காணவில்லையானால் தொடர்ந்து ஒடாமல் அப்படியே நின்றுவிடும். [2] ஆபத்து குறித்து மற்றவிலங்குகளுக்கு எச்சரிக்க இவை தங்கள் நாசி வழியாக ஒரு சீழ்க்கை மற்றும் கிளிக் என்பது போன்ற ஒலியைப் பயன்படுத்துகின்றன. [5]
உணவு
தொகுஇவை ஒரு தாவர உண்ணி ஆகும். இவை முக்கியமாக புற்களை உண்கிறது. மேலும் இவை செடிகள் மற்றும் நாணல்களையும் உண்கிறது. நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களில் வசித்தாலும் இவை தண்ணீருக்குள் நுழைவதில்லை. வறண்ட காலங்களில் சில நாட்களில் பல முறை நீர் அருந்தும்.
இனப்பெருக்கம்
தொகுதெற்கு ரீடு மான்கள் ஆண்டின் எல்லா காலங்களிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இருப்பினும் பெரும்பாலான இனச்சேர்க்கை வெப்பமான மற்றும் ஈரமான பருவங்களில் நிகழ்கிறது. பெண் மான்கள் இரண்டு வயதாக இருக்கும் போது, பெற்றோரின் பிரதேசத்தை விட்டு வெளியேறும் தருணத்தில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. சற்றே தாமதமாக பாலியல் முதிர்ச்சி அடையும் ஆண் மான்கள், மூன்றாம் ஆண்டு வரை குடும்பக் குழுவில் இருக்கும். பெண் மான்கள் கருவுற்ற ஏழு முதல் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு குட்டியை பெற்றெடுக்கின்றன. [2] குட்டியானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு அடர்த்தியான, உயரமான புல்வெளியில் மறைந்து இருக்கும். [4] பெண் மான் தன் குட்டியுடன் தங்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் 10 முதல் 30 நிமிடங்கள்வரை மட்டுமே சென்று அதற்கு பாலூட்டும்.
வாழ்விடம் மற்றும் பரவல்
தொகுதெற்கு ரீடு மான்கள் காபோன் மற்றும் தன்சானியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா வரை பரவியுள்ளன. அவற்றின் வாழிடம் வடக்கே மியோம்போ வனப்பகுதி வரை நீண்டுள்ளது. [3] இவை உயரமான புல், நாணல்கள் உள்ள நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் போன்ற ஈரமான புல்வெளிகளில் வாழ்கின்றன. [4][6] மலகரசி ஆற்றின் அருகே பருவகால வெள்ளப் பள்ளத்தாக்குகளில் இவை காணப்படுகின்றன. [3] மேலும் இவை தெற்கு சவன்னாக்களான டிச்சிபங்கா மற்றும் என்டெண்டே ( சைரில் ) ஆகியவற்றிலும் நிகழ்கின்றன.
இவை அங்கோலா, போட்ஸ்வானா, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், மலாவி, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தான்சானியா, சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளை தாயகமாக கொண்டவை. [1] சிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நமீபியாவில் உள்ள தனியார் நிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளது உட்பட, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் குறைந்தது முதல் மிதமான எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. காங்கோ குடியரசில், இது முன்னர் தெற்கு காங்கோவின் சவன்னாவில் உள்நாட்டில் காணப்பட்டன. ஆனால் அவை இப்போது அழிந்துவிட்டன. லெசோத்தோவில் இவை தற்போது உள்ளனவா என்பது சந்தேகத்திற்குரியது. செலோஸ் தேசிய பூங்கா (தான்சானியா), காஃப்யூ தேசிய பூங்கா (ஜாம்பியா), நைகா தேசிய பூங்கா (மலாவி), கோரோங்கோசா தேசிய பூங்கா (மொசாம்பிக்), ஒகவாங்கோ தேசிய பூங்கா (போட்ஸ்வானா), குருகர் தேசியப் பூங்கா மற்றும் கிழக்கு கடற்கரைகள் (தெற்கு ஆப்பிரிக்கா) போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. [1]
பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள்
தொகுதெற்கு ரீடு மான்கள் பரவலாக உள்ளன. ஆனால் இவை மனிதக் குடியிருப்புகளின் பரவலால் தங்கள் முந்தைய வாழிடங்களின் சில பகுதிகளிலிருந்து (காங்கோ போன்றவை) அற்றுவிட்டன. இது அவற்றின் வாழ்விட அழிவு மற்றும் இறைச்சி மற்றும் கொம்புடன் கூடிய தலைக்காக வேட்டையாடுவதல் போன்றவை காரணங்களாக உள்ளன. அணுகவும் கொல்லவும் எளிதான மறிமான்களில் இவையும் ஒன்று என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள அனைத்து தெற்கு ரீடு மான்களில் 60% பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், 13% தனியார் நிலங்களிலும் நிகழ்கின்றன.[1] வாழ்விட இழப்பு மற்றும் அதிகப்படியான வேட்டை ஆகிய கலவையான காரணங்களால் தெற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த இனங்கள் அரிதாகிவிட்டன. மேலும் மேற்கு மற்றும் நடு ஆபிரிக்காவில் இவற்றின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைந்துள்ளன; காபோன் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ளவை கிட்டத்தட்ட அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 IUCN SSC Antelope Specialist Group (2016). "Redunca arundinum". IUCN Red List of Threatened Species 2016: e.T19390A50193692. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19390A50193692.en. https://www.iucnredlist.org/species/19390/50193692. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Southern Reedbuck (Redunca arundinum)". Wild Animals of Africa. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Shanklin, Amber. "Redunca arundinum". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 23 October 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Southern reedbuck (Redunca arundinum)". ARKive. Archived from the original on 2011-11-12. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Huffman, Brent. "Redunca arundinum (Southern reedbuck)". Ultimate Ungulate.
- ↑ 6.0 6.1 "Southern reedbuck (Common reedbuck)". Tanzania Wildlife Research Institute. Tanzania Mammal Atlas Project. Archived from the original on 2014-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.