நெடுந்தீவு
நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத் தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்[1].
நெடுந்தீவு | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 9°31′0″N 79°41′0″E / 9.51667°N 79.68333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | நெடுந்தீவு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,824 |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 2500 இருந்து 3000 மக்கள் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கூட கிடைப்பதில்லை.
வரலாறு தொகு
தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும், வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல! இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான்[மேற்கோள் தேவை]. நெடுந்தீவின் வளங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகைச் செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன்[மேற்கோள் தேவை].
போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.[2]
அமைவிடமும் பரப்பளவும் தொகு
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3]
நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.
துறைமுகங்கள் தொகு
நெடுந்தீவு மக்கள் பண்டைய காலத்தில் தென்னிந்தியாவுக்குச் செல்வதற்கு பெரியதுறை என அழைக்கப்பட்ட துறைமுகத்தைப் பயன்படுத்தினர். இங்கிருந்து மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்தனர். இது நெடுந்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இதனைவிட மாவிலித் துறைமுகம், கிழக்கே கிழக்குத்துறை, வடக்கே தாளைத்துறை, குடுவிலித்துறை, தெற்கே குவிந்தாதுறை, வெல்லாதுறை ஆகிய துறைமுகங்களும் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தது.[1] இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.[1]
நெடுந்தீவின் சிறப்புகள் தொகு
நெடுந்தீவுக் கட்டைக்குதிரைகள் தொகு
நெடுந்தீவு கட்டைக்குதிரைகளுக்குப் பேர் பெற்றது. இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களைக் கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்.[4] 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன[5]. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.
பெருக்குமரம் தொகு
நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் உள்ளது. இது நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இம்மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. இங்கு ஒரு குடும்பம் நிற்கக்கூடிய இட வசதி உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இம்மரத்தை அரேபிய வியாபாரிகள் இங்கு ஏழாம் நூற்றாண்டளவில் இங்கு கொண்டு வந்தனர்.[6]
நெடுந்தீவில் உள்ள ஊர்கள் தொகு
ஆலயங்கள் தொகு
- மொட்டையர் (சிவன்) ஆலயம் (1ம் வட்டாரம்)
- உயரப்புலம் அரிகரபுத்திர ஐயனார் ஆலயம் (1ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)
- பிடாரி அம்பாள் ஆலயம் (1ம் வட்டாரம்)
- சுழிவைரவர் ஆலயம் (1ம் வட்டாரம்)
- நாச்சிமார் அம்மன் ஆலயம் (2ம் வட்டாரம்)
- மலையான்குளம் ஞானவைரவர் ஆலயம் (3ம் வட்டாரம்)
- கொத்தி அம்பாள் ஆலயம் (3ம் வட்டாரம்)
- பைரவர் ஆலயம் (3ம் வட்டாரம்)
- புக்காட்டு வைரவர் ஆலயம் (4ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)
- வேம்படி ஞானவைரவர் ஆலயம் (4ம் வட்டாரம்)
- மெலிஞ்சியம்பதி காளி அம்பாள் கோயில் (4ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)
- கரமத்தைக் கந்தசுவாமியார் ஆலயம் (4ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)
- நெழுவினி சித்திவிநாயகர் ஆலயம் (5ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)[10]
- நெடுங்குளம் ஞானவைரவர் ஆலயம் (5ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு)
- தண்டையம்பதி ஞானவைரவர் ஆலயம் (5ம் வட்டாரம்)
- ஈச்சம்புலவு மீனாட்சி அம்மன் ஆலயம் (5ம் வட்டாரம்)
- கூட்டுப்புளி அம்பாள் ஆலயம் (5ம் வட்டாரம்)
- தெற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயம் (அம்பிகைபுரம், 5ம் வட்டாரம்)
- அரசினர் வைத்தியசாலை ஞானவைரவர் ஆலயம் (6ம் வட்டாரம்)
- நடுக்குறிச்சி பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் கோயில் (10ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி)[11]
- மாவிலித்துறை இராஜஇராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் (12ம் வட்டாரம், நெடுந்தீவு)
- மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயம் (13ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு)
- கமலாலயம்பதி முருகன் ஆலயம் (நெடுந்தீவு கிழக்கு)[12]
- ஆலமாவன சித்தி விநாயகர் ஆலயம் (15ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு)
- நெடுந்தீவு காட்டுப் பிள்ளையார் ஆலயம் (நெடுந்தீவு கிழக்கு)
- அருள்மிகு முனியப்பர் ஆலயம் (15ம் வட்டாரம்)
நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் தொகு
- இராயப்பு யோசேப்பு, ஆயர்
- சேவியர் தனிநாயகம், தமிழறிஞர்
- வ. ஐ. ச. ஜெயபாலன், கவிஞர், எழுத்தாளர்
- கி. பி. அரவிந்தன், எழுத்தாளர்
- இரா. வை. கனகரத்தினம், பேராசிரியர், எழுத்தாளர்
- அமுது, புலவர்
- மா. சித்திவினாயகம், எழுத்தாளர்
- இசைப்பிரியா, ஊடகவியலாளர், போராளி
- சிவஞானம் சிறீதரன், அரசியல்வாதி
- ஆவூரான், எழுத்தாளர்
இவற்றையும் பார்க்கவும் தொகு
படங்கள் தொகு
-
வளரும் கல்
-
இராட்சதக் காலடி, ஆதாமின் காலடி அல்லது சிவனின் காலடி
-
1 கி.மி நீளத்தில் அமைந்திருந்த குதிரை லாயங்களின் எச்சம்
-
காலணித்துவ காலத்தில் அஞ்சல் தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட புறாக்களின் கோபுரம்
-
பவளப்பாறை மதில்கள்
-
இராணியின் கோபுரம் (குயிண்டாக் கோபுரம்)
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 நீளமான தீவு என்பதாலா நெடுந்தீவு என்று பெயர் வந்தது? பரணிடப்பட்டது 2015-07-21 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி, சூன் 13, 2012
- ↑ சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும், ரொறன்ரோ, கனடா.
- ↑ வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு
- ↑ நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம் அமைக்கப்படும்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், டிசம்பர் 28, 2013
- ↑ நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும் பரணிடப்பட்டது 2013-08-01 at the வந்தவழி இயந்திரம் செங்கை ஆழியான், தினகரன் வாரமஞ்சரி, மார்ச் 21, 2012
- ↑ "Sustainable Development of Delft Island: An ecological, socio-economic and archaeological assessment" (PDF). பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "கணநாதம்: நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய வரலாற்று மலர் 2009". https://noolaham.org/wiki/index.php/கணநாதம்:_நெடுந்தீவு_மேற்கு_நெழுவினி_சித்தி_விநாயகர்_ஆலய_வரலாற்று_மலர்_2009.
- ↑ "Papers on Tamil Linguistics, Literature and Culture (2001)". https://archive.org/details/72879.
- ↑ "Hora-vinna, Eeri-minna, Ne'lu-vini". TamilNet. March 8, 2016. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38177.
- ↑ "DELFTMEDIA". https://delftmedia.com/.
- ↑ "நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் மீது பாடப்பட்ட திருவூஞ்சல் (2013)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.
உசாத்துணை நூல்கள் தொகு
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.