விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

(விக்கிப்பீடியா:2009taWikiReport இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியா பரந்த தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 20,000 க்கும் மேலாகக் கூடி ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 13,486 க்கும் மேலாகக் கூடியுள்ளது.[1] 2009 இல் நான்கு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். நாளாந்தம் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு மேலும் 10 000 ஆகக் கூடி 62,977 ஆக உயர்ந்தது.[2]


இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவை பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்கங்கள், வலைப்பதிவு, வானொலிகள், பத்திரிகைகள், இதழ்கள், நேரடிப் பயிற்சிகள் ஆகிய வழிகளின் ஊடாக அறிமுகப்படுத்துவதில் சிறப்புக் கவனம் தந்தோம். தமிழ் விக்கிப்பீடியா மூன்று பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தது. மூன்று கருத்தரங்கங்களில் பங்கு கொண்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் முதலாவது பட்டறை சென்னை விக்கிமீடியா அறிவகத்தின் முன்னெடுப்போடு சனவரி 18 இல் நடைபெற்றது. இரண்டாவது பட்டறை பெங்களூரில் சனவரி 31 ம் திகதி நடைபெற்றது. மூன்றாவது பட்டறை இந்திய அறிவியல் கழகத் தமிழ்ப் பேரவையினரால் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் மார்ச் 21 இல் நடாத்தப்பட்டது. இந்த பட்டறையில் கணிதப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தமிழர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏன் பங்களிக்க வேண்டும் என்ற உரை கவனிக்கப்பட வேண்டியது.[3]


சென்னையில் சூன் 14 இல் கிழக்குப் பதிப்பகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. ரொரன்ரோவில் ஒக்டோபர் 14 இல் நடைபெற்ற தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு களம் அமைந்தது. நவம்பர் 7 இல் கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கணிமை கருத்தரங்கிலும் நாம் கலந்துகொண்டோம். ஒக்டோபர் கடைசிக் கிழமையில் தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு தமிழ்மண நட்சத்திரமாக பல புதிய விக்கிப்பீடியர்களின் விரிவான படைப்புக்களுடன் வெளிவந்தது.[4] இவை தவிர தினமணி, அம்புலிமாமா, கல்கி, புதிய தலைமுறை, உத்தமம் மஞ்சரி, சென்னை ஆன்லைன், த இந்து, வடபழனி டோக் ஆகிய ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆக்கங்கள் வெளிவந்திருந்தன.[5] தமிழ் விக்கி பயனர் சுந்தரின் Tamil Wikipedia: A Case Study ஆய்வுக் கட்டுரை 2009 விக்கிமேனியா மாநாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் செப்டம்பர் 15 இல் அர்ச்சென்டீனாவில் தனது ஆய்வுரையை வழங்கினார்.[6] தமிழ் விக்கிப்பீடியா பற்றி மயூரன் தமிழ் இணைய மாநாட்டுக்காக எழுதிய கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் இலங்கையில் கடவுச் சீட்டு மறுக்கப்பட்டதால் அவரால் நேரடியாக பங்களிக்க முடியவில்லை.


மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது வாசகர்கள் எனப் பலதரப்பட்டோருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுகிறது. எ.கா மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை பாட வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள். “தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது” என்று தலைமையாசிரியர் ஜோதிமணி கூறுகிறார்.[7]. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து பல தகவல்களைப் பெற்றும், தமிழ் விக்கிப்பீடியாவின் நடையை அலசியும் முனை.ரெ.கார்த்திகேசு "தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.[8]


இந்த ஆண்டு நிகழ்ந்த ஈழப் போர், ஈழத்தமிழர் இனப் படுகொலைகள் பற்றி முழுமையான ஆவணப்படுத்தல் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள், பாதிப்புக்கள் பற்றி நிகழ்காலத்தில் தகவலை சேகரித்து பகிர்வதற்கு தேவையான வளங்கள் இருக்கவில்லை. இலங்கையில் இருந்து பங்களிப்போரின் எண்ணிக்கையும் அருகியது.


2009 ஆம் ஆண்டு முதற்பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, செய்திகள், இன்று, சிறப்புப் படம் ஆகிய பகுதிகள் ஓரளவு நேர்த்தியுடன் இன்றைப்படுத்தப்பட்டன. எனினும் குறிப்பிடத்தக்க சில தடங்கல்கள் இருந்தன. 2009 இன் இறுதியில் புதிதாக விக்கிப்பீடியர் அறிமுகம் என்ற முதற்பக்க பகுதி தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களாக விரிவாக்கப்பட வேண்டும் என்று இருந்த உதவிப் பக்கங்கள் மிக அழகான முறையில் விரிவாக்கப்பட்டன.


நீலான், மனித மூளை, சூரியன், வடமுனை ஒளி, காச நோய், ரீமன் இசீட்டா சார்பியம், மின்னூலகம், பொறியியல், பி.எச்.பி, தமிழ்நாடு வனத்துறை, ஹொங்கொங் தமிழர் போன்று பல்துறைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதப்பட்டன. கூகிள் மொழிபெயர்ப்புக் கருவியின் துணையுடனும் சில பெயர் குறிப்பிடாத பயனர்கள் மிக ஆழமான கட்டுரைகளை மொழி பெயர்புச் செய்துள்ளார்கள். முக்கியமாக எழுதப்படவேண்டிய கட்டுரைகளின் தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. உயிரியல் துறையினர், ஆர்வம் உள்ளோர் சேர்ந்து விக்கித்திட்டம் உயிரியல், விக்கித்திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டன.


இந்த ஆண்டு கலைச்சொற்கள், கிரந்தம் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் கலைச்சொற்களைத் தகுந்த கருத்துச்சூழலில் பயன்படுத்துவதே தமிழ் விக்கியின் கொள்கை. சில சொற்களுக்கு கலைச்சொற்கள் அறியப்படாமல் இருந்தால், தமிழறிஞர்களிடம் இருந்து தக்க பரிந்துரைகள் கேட்டுப் பயன்படுத்துகிறோம். மேலும் பொருத்தமான சொற்கள் தெரியவந்தால், தகுந்த மாற்றங்களை விக்கியில் இலகுவாகச் செய்யலாம். தமிழர்கள் ஆங்கிலம் மட்டும் அல்லாமல் மலேயா, நேர்வீயன் மொழி, பிரான்சிய மொழி போன்ற பல்வேறு மொழிகளை இரண்டாம் மொழிகளாகப் பயன்படுத்துவதாலும், ஆங்கிலச் சொற்களை அப்படியே எடுத்தாள்வது தவிர்க்கப்படுகிறது. கிரந்தம் தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியா ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. தமிழ் ஒலிப்புமுறைக்கும், தமிழ் இலக்கணமுறைக்கும் உட்பட்ட தமிழ் எழுத்துநடை பரிந்துரைக்கப்படுகிறது. பெயர்களில் வரும் கிரந்தம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


2005 2006, 2007, 2008 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.


இந்த 2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2009 ஆண்டு செயல்பாடுகளை விவரித்து, 2010 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007, 2008 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்க்களைப் பாக்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

மேற்கோள்கள்

தொகு
  1. மொழிவாரி பட்டியல்
  2. நாளாந்தப் வாசகர்கள்
  3. கணிதப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை
  4. தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு
  5. ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
  6. சுந்தர் 2009 விக்கிமேனியாவில் ஆய்வுரை நிகழ்த்தல்
  7. மாங்குடி மாறிய கதை
  8. "தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்", பன்னாட்டுத் தமிழ் மொழியியல் மாநாடு, குவால லும்பூர்: மலாயாப் பல்கலைக் கழகம், 23–24 அக்டோபர் 2009, பார்க்கப்பட்ட நாள் 2009-12-18{{citation}}: CS1 maint: date and year (link) CS1 maint: date format (link)
குறுக்கு வழி:
WP:2009taWikiReport

உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் பதிக. நன்றி.