வேளிர் (தமிழகம்)
வேளிர் (Velir) என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள் ஆவர். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும்.[1] எனவே, இவர்களை கொடையாளிகள் என்று சொல்லலாம். சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.
வேளிர் | |
---|---|
நாடு | இந்தியா |
விருதுப் பெயர்கள் | சத்யபுத்ரா |
பிற குடும்பங்கள் | ஆய் அதியமான் மலையமான் பாரி இருக்குவேள் அரசர்கள் நன்னன் பேகன் |
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.[2] அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,
பாண்டிநாட்டு வேளிர்கள்
- ஆய் ஆண்டிரன்
- பொதியிற் செல்வன் திதியன்
- பாரி வேள்
- இருங்கோவேள்
சோழநாட்டு வேளிர்கள்
- நெடுங்கை வேண்மான்
- நெடுவேளாதன்
- செல்லிக்கோமான் ஆதன் எழினி
- வாட்டாற்று எழினியாதன்
- அழுந்தூர்வேள் திதியன்
- வேளேவ்வி
- வீரைவேண்மான் வெளியன் தித்தன்
- நன்னன்சேய் நன்னன்
- பொருநன்
சேரநாட்டு வேளிர்கள்
- நெடுவேளாவி
- வேளாவிக் கோமான் பதுமன்
- வையாவிக் கோப்பெரும் பேகன்
- நன்னன் வேண்மான்
- வெளியன் வேண்மான் ஆய் எயினன்
- வெளிமான்
- எருமையூரன்
வேளிர் வாழ்ந்த இடங்கள்
- முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.[3][4]
- வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.[5]
- குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.[6]
- குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர். [7]
வேளிர் போர்கள்
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் போரிட்டான்.[8]
- பல்யானைச் செல்கெழு குட்டுவனின் செல்வாக்கைக் கண்டு முரசு முழங்கும் வேந்தரும், வேளிரும் கடலிலும், காட்டிலும் அரண் அமைத்துக்கொண்டு நடுங்கினார்களாம்.[9]
- வேந்தரும், வேளிரும் ஒன்றாகக் கூடிப் பேசிக்கொண்டு மோகூர் என்னுமிடத்தில் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்கள் நிலைகலங்கி அதிரும்படி செங்குட்டுவன் தாக்கி வென்றான்.[10]
- வேந்தரும், வேளிரும் பிறரும் பெருஞ்சேரல் இரும்பொறையை வழிமொழிந்து நடந்துகொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆலையில் கரும்பு போல அவர்களை நசுக்கிவிடுவானாம்.[11]
- இளஞ்சேரல் இரும்பொறை வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்தி அரசோச்சினானாம்.[12]
- திதியன் என்னும் அரசன் தன் நாளவையில் இருந்தபோது வேளிரொடு போரிடுவதற்காகத் தன் வாளை உருவினானாம். அவனது வாளுக்கு இரை கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேலில் கறை படியவில்லையாம்.[13]
இதனையும் பார்க்க
ஒப்புநோக்குக
மேற்கோள்கள்
- ↑ தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' திருக்குறள்
- ↑ சங்ககால அரச வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613005, பக்கம்-258
- ↑ மாங்குடி கிழார் - புறநானூறு 24
- ↑ குப்பை = குவியல்
- ↑ இங்குள்ள உப்புக்குவியல் பெருமழையில் உருகுவது போலத் தலைவியின் தாள் தலைவன் பிரிந்தபோது உருகிப் போயிற்றாம். மதுரை மருதன் இளநாகனார் - அகநானூறு 206
- ↑ பரணர் - நற்றிணை 280
- ↑ மாங்குடி மருதனார் - குறுந்தொகை 164
- ↑ மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி பாடலடி 55
- ↑ பாலைக்கௌதமனார் - பதிற்றுப்பத்து 30-30
- ↑ பரணர் - பதிற்றுப்பத்து 49
- ↑ அரிசில் கிழார் - பதிற்றுப்பத்து 75
- ↑ பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88
- ↑ கறை படியாத அவன் வாள் போல் பாலைநில வழி இருந்ததாம். மாமூலனார் - அகநானூறு 331