2021 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

வார்ப்புரு:Infobox government budget

2021- 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 1 பிப்ரவரி 2021 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசின் தலைமையிலான 8-வது வரவு-செலவு திட்டமாகும். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது வரவு செலவுத் திட்டமாகும்.[1][2][3][4]

இந்திய வரலாற்றில் முதன்முறையாக காகித்தில் அச்சிடப்படாத, மின்னணு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர், நாடாளுமன்றத்தில் கைக் கணினி மூலம் உரை நிகழ்த்தினார்.[5][6][7]

இந்த நிதியறிக்கையில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிடத்க்கது. எனினும் பெட்ரோல் மீது லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண்மை செஸ் வரி விதிக்கப்பட்டாலும், இப்பொருட்களில் விலை ஏறாத வகையில் இதன் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கொரானா வைரஸ் கொல்லை நோய் பரவல் காரணமாக செலவினங்கள் கூடியதால், 2021ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக இருந்தது என்றும்; 2022-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 6.8% ஆக குறைக்கப்படும் என நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.[8][9]

2021-22 வரவு-செலவு திட்டத்தின் முக்கியக் கூறுகள் தொகு

  • பெட்ரோல் மீது லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண்மை செஸ் வரி விதிக்கப்படுகிறது. எரிபொருள் விலை ஏறாத வகையில் இதன் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
  • ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத் துறை சேவைகளுக்காக ஆத்மநிர்பார் சுவஸ்த் பாரத் யோஜனா திட்டத்தின்கீழ் அடுத்த ஆறு ஆண்டுகளில் 64,180 கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • தூய்மை இந்தியா 2.0 திட்டம் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 1.41 லட்சம் கோடி செலவிடப்படும்.
  • கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக ரூபாய் 35,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக ரூபாய் 2.23 லட்சம் கோடி திட்டமிட்டுள்ளது.
  • 2.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புறப் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்படும். இது இந்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமாகும்.
  • சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், அரசுக்கு வருவாய் தரக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கான மூலதனச் செலவிற்கு 5.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வாகனங்களால் உண்டாகும் புகை மாசை குறைக்க, தனிநபர் பயன்பாட்டுக்காக 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து, அவற்றை உடைக்க ஒப்படைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தொகை வழங்குவதற்காக ரூபாய் 3.5 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும்.
  • ரூபாய் 20,000 கோடி மூலதனத்தில் வளர்ச்சி மேம்பாட்டு நிதியளிப்பு நிறுவனம் நிறுவப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது கடன் கொடுக்க வேண்டிய இலக்காக ஐந்து லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.
  • பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக 20,000 கோடி ரூபாய் நிதியளிக்கப்படும்.
  • 2101-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே துறைக்கு ரூபாய் 1,10,055 கோடி செலவிடப்படும். அதில் 1,07,100 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாக இருக்கும்.
  • எரிசக்தி துறைக்கு 3.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. எரிவாயு விநியோகச் சங்கிலியில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 100 நகரங்கள் இணைக்கப்படும்.
  • 10 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் குடியிருக்கும் 42 நகர்ப்புற பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
  • 2021-2022ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் திரட்ட இந்திய அரசு வைத்துள்ள இலக்கு ரூபாய் 1.75 லட்சம் கோடி ஆகும்.
  • காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • வேளாண்மைக் கடன் ரூபாய் 16.5 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • கிராமப்புற உள்கட்டமைப்புக்கான நிதி ரூபாய் 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
  • சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான ஒதுக்கீடு 15,700 கோடி ரூபாய் ஆகும். இது சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு ஆகும்.
  • புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் குறைந்த செலவில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள் ஆகியவை வரிவிலக்கு பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ரூபாய் 45 இலட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
  • வட்டி மற்றும் ஓய்வூதியம் மூலம் வரும் வருவாயை மட்டுமே நம்பி இருக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டுவதில்லை.
  • டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபாய் 1,500 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 வரவு-செலவு திட்டத்தில் தமிழ் நாடு தொகு

  • தமிழ்நாட்டில் 3,500 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மதுரை - கொல்லம் இடையிலான நெடுஞ்சாலை திட்டமும் இதில் அடக்கம்.
  • ரூபாய் 63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.
  • கடலோரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் கடற்பாசி பூங்கா ஒன்று அமைக்கப்படும். சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் பெரிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.

நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அரசுப் பங்குகள் விற்பனை தொகு

வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு தொகு

  • வேளாண் துறைக்கு ரூபாய் 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.[10]
  • நெல், கோதுமை போன்ற வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை விவசாயிகளுக்கு 75,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டதில் 43.36 லட்சம் கோதுமை விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
  • வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கும், சில இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கும் புதிய வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் விதித்துள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி என்று புதிய வரியை இந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்2.50 வரியும், டீசல் மீது ரூபாய் 4 வரியும் விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் வேளாண் கட்டமைப்பு வரி புதிதாக விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 100 சதவீதம் வரி, கச்சா பாமாயில் மீது 17.5 சதவீதம் கட்டமைப்பு வரி, நிலக்கரி, லிக்னைட் ஆகியவை மீது 1.50 சதவீதம் வரி, உரம், யூரியா ஆகியவை மீது 5 சதவீதம், பருத்தி மீது 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.[11]

பட்டியல் பிரிவினருக்கான கல்வி நலத்திட்டங்கள் ஒதுக்கீடு தொகு

  • பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிந்தைய உயர் கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 4 கோடி மாணவர்கள் பயன்பெறுவர். 2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய அரசு பத்தாம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகைத் திட்டத்துக்காக ரூ.2,987.33 கோடி ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.[12]

பாதுகாப்புத் துறை மற்றும் உள்துறைக்கான ஒதுக்கீடு தொகு

  • பாதுகாப்புத்துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ரூ.4.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில் இராணுவத்தினர் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக ரூபாய் 3.62 இலட்சம் கோடியும், புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூபாய் 1.35 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றியப் பகுதிகளான ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)க்கு ரூபாய் 30,757 கோடியும், லடாக் ஒன்றியப் பகுதிக்கு ரூபாய் 5,958 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பேரிடர் மேலாண்மை துறைக்கு (Disaster management in India) ரூபாய் 481.61 கோடியும், பல்வேறு இந்திய அரசின் திட்டங்களுக்காக ரூபாய் 1,641.12 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்புக்கு ரூபாய் 835.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.[13]

சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு தொகு

  • கரோனா வைரஸ் பரவல் காரணமாக சுகாதாரத்துறைக்கு ரூ.2.24 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிமோனியா காய்ச்சலால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் இறப்பைத் தடுக்கும் வகையில் தடுக்கும் தடுப்பூசிகள் போடுவதுடன், செப்டிகாமியா, மெனிங்டிஸ் ஆகிய பாதிப்புகளில் இருந்து காக்க தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.[14]

கிராமப்புற அடிப்படை கட்டமைப்பிற்கான ஒதுக்கீடு தொகு

  • கிராமப்புற அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் 2021-22ஆம் நிதியாண்டில் மேலும் ஒரு கோடி பேருக்கு நீட்டிக்கப்படும். வாகனங்களுக்கு சிஎன்ஜி கேஸ் இணைப்பு வழங்குதல், குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொகு

  • தனியார் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 15 ஆயிரம் பள்ளிகள் வலுப்படுத்தப்படும். 5 ஆண்டுகளுக்கு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
  • லடாக்கின் லே பகுதியில் புதிதாக மத்தியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
  • அரசு ஆவணங்களும் கொள்கை முடிவுகளும் அனைத்து இந்திய தேசிய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய மொழி மாற்ற மையம் உருவாக்கப்படுகிறது. அதேபோல உயர் கல்வியைக் கண்காணிக்க தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படுகிறது.
  • பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தைப் பலப்படுத்த மிஷன் போஷன் 2.0 அறிமுகம் செய்யப்படுகிறது. போஷன் அபியான் திட்டத்துடன் துணை ஊட்டச்சத்து திட்டத்தை இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். துணை ஊட்டச்சத்து திட்டம் அங்கன்வாடிகள் மூலம் அமல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் பழங்குடியினப் பகுதிகளில் 750 ஏகலைவன் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும். அதேபோல ஒவ்வொரு ஏகவலைவன் மாதிரிப் பள்ளிக்கும் வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் ரூ.20 கோடி நிதி, ரூ.38 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். பழங்குடியின மாணவர்கள் படிக்கும் மலைப்பகுதிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, ரூபாய் 48 கோடியாக உயர்த்தப்படும்.[15]

காப்பீடு & வங்கிதுறைக்கான ஒதுக்கீடு தொகு

  • காப்பீட்டுத் துறையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், மக்களுக்குக் காப்பீடு வசதி எளிதாகக் கிடைக்கும் வகையிலும், அந்நிய முதலீட்டின் அளவை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • வங்கி மறுமுதலீட்டுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[16]

வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை தொகு

வரி தொடர்பான அறிவிப்புகள் தொகு

  • ஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • வரி கோப்புகளை மீண்டும் திறக்கும் கால வரம்மை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
  • வருமான வருமான வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கு, பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலதன ஆதாயங்கள் மற்றும் வட்டி வருமானம் வருமான வரி படிவங்களில் முன்னரே நிரப்பப்படும்.
  • வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை முகமற்றதாக மாற்றவும், தேசிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய மையத்தை அமைக்கப்படுகிறது.
  • டிஜிட்டல் முறைகள் மூலம் தங்கள் வணிகத்தை அதிகம் செய்யும் நிறுவனங்களுக்கு வரி தணிக்கை வரம்பிலிருந்து விலக்கு (இரண்டு மடங்காக உயர்த்தி) ரூ .10 கோடி விற்றுமுதல் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
  • ரூபாய் 50 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை மறைக்கும் கடுமையான வரி குற்றங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியும்.
  • 12.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. வெள்ளியின் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது.

நிதிபற்றாக்குறை & நிதி ஆதாரங்களை பெருக்குதல் தொகு

  • நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
  • வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • ரெயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய நிதி ஆதாரங்களை பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Budget 2021 Live Updates
  2. Highlights of Union Budget 2021-22
  3. மத்திய பட்ஜெட் 2021-22
  4. Highlights of Union Budget 2021-22
  5. Union Budget 2021: Nirmala Sitharaman to present ‘paperless’ budget
  6. Tablet For Nirmala Sitharaman's Speech As Budget 2021 Goes Paperless
  7. Union Budget 2021 to go paperless for first time since Independence
  8. Union Budget 2021
  9. 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் முழு விவரம்
  10. வேளாண்துறைக்கு ரூ.16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிப்பு
  11. வேளாண் கட்டமைப்பை உயர்த்த திட்டம்
  12. 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி உதவித்தொகை
  13. பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு; உள்துறைக்கு ரூ.1.66 லட்சம் கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு
  14. சுகாதாரத் துறைக்கு ரூ.2.24 லட்சம் கோடி ஒதுக்கீடு; கிராமப்புற அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி
  15. தனியார் உதவியுடன் புதிதாக 100 சைனிக் பள்ளிகள்; தேசிய மொழி மாற்ற மையம்: கல்வித்துறையில் என்னென்ன அறிவிப்புகள்
  16. காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதமாக அதிகரிப்பு; வங்கிகள் மறு முதலீட்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு
  17. எல்ஐசி பங்குகள் விற்பனை; அடுத்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க இலக்கு; பிபிசிஎல் தனியார் மயம்

வெளி இணைப்புகள் தொகு