இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்
இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் (Biosphere reserves of India)என்பவை இந்தியாவின் இயற்கை மூலாதாரங்களை பேணிக்காக்கவும் அதன் நிலையான பயன்பாட்டைப் பெறவும் அறிவிக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த காப்பகப் பகுதிஆகும்.[1]1971 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere Programme) என்ற திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டதே உயிர்க்கோளக் காப்பகமாகும்.[2]உயிர்க்கோளத்தைப் பாதுகாப்பதற்காக உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.[3]
உயிர்க்கோள மண்டலங்கள்
தொகுஇவ்வமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காப்பதற்காக உயிர்க்கோளக் காப்பகம் குறித்து விவாதிக்கப்பட்டது. நில அமைப்பு மற்றும் இயற்கை சூழலமைப்பில் பல்லுயிரி வளத்தைப் பாதுகாத்தல், உயிர்க்கோளக் காப்பகத்தைச் சார்ந்து வாழும் மக்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல், நீண்ட கால சுற்றுச்சூழல் பயிற்சி மற்றும் ஆய்வுக்கு உகந்த இடமாக அவற்றை இருக்க வைத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் உயிர்க்கோளக் காப்பகங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:
- மைய மண்டலம்
- தாங்கல் மண்டலம்
- நிலைமாறு மண்டலம்
மைய மண்டலம்
தொகுமைய மண்டலம் என்பது தீவிர பாதுகாப்பிற்கு உட்பட்ட மண்டலமாகும். இம்மண்டலத்திலுள்ள சூழலமைப்பை கண்காணித்தல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், சூழல் சார்ந்த சுற்றுலா மற்றும் கல்விக்காக பயன்படுத்துதல் ஆகியன இதன் செயல்பாடுகளாகும்.
தாங்கல் மண்டலம்
தொகுபொதுவாக இம்மண்டலம் மைய மண்டலத்தை சுற்றி காணப்படும் மண்டலமாகும். இங்கு சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் இயற்கை சுற்றுலா போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் நடைபெறும்
நிலைமாறு மண்டலம்
தொகுஇப்பகுதியின் மூலாதாரங்களின் நிலையான மேம்பாட்டிற்கு உண்டான செயல்பாடுகளை மேற்கொள்ளும் மண்டலமாகும். இம்மண்டலத்தில் பலதரப்பட்ட விவசாய நடவடிக்கை, குடியிருப்பு மற்றும் இன்னும் பிற பயன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இப்பகுதியில் வாழும் மக்கள், நிர்வாக துறையினர், விஞ்ஞானிகள், அரசு சாராநிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இணைந்து இப்பகுதியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர்.
யுனெஸ்கோவின் பரிந்துரைகள்
தொகுமேற்கண்ட மண்டலங்களில் இந்நோக்கங்களை நிறைவு செய்வதற்கு இக்காப்பகங்களில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு 10 முக்கிய கருத்துக்களை 1994ல் பரிந்துரைத்துள்ளது.
- நீடித்த பாதுகாப்பிற்கும் நிலையான பயன்பாட்டிற்கும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ளல்.
- பாதுகாப்புத் திட்டத்தை வடிவமைத்து நிர்வகிப்பதில் அப்பகுதி மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.
- அவர்களது சமூக பொருளாதார தேவைகளை அவர்களே கண்டறிய விட்டுவிடுதல்.
- பாதுகாப்பு திட்டங்களால் ஏற்படும் இலாப நஷ்டங்களை அம்மக்களே ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
- பல்லுயிர்ப்பெருக்கத்தின் நிலையான பயன்பாட்டிற்கு உரிய வழிமுறைகளை கண்டறிவதைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
- முடிந்தவரை அப்பகுதிக்கே உரித்தான பாரம்பரிய வழிமுறைகளால் பாதுகாத்தல்.
- உயிர்க்கோளக் காப்பகத்தின் வளங்களை அப்பகுதி மக்களே நிர்வகிக்க முன்னுரிமை வழங்குதல்
- கிராம மக்களை அபிவிருத்தி திட்டங்களை பராமரிப்பதில் பங்குதாரர்களாக்கிக் கொள்ளுதல் மற்றும் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை விளக்கி கூறுதல்.
- பாதுகாப்பு நடவடிக்கை மூலம் உள்ளூர் மக்களுக்கு தேவையான திறமைகளையும் வளங்களையும் அளித்து அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்.
- உள்ளூர் மக்களுக்கு இயற்கை பாதுகாப்பு முறையையும் அதனால் விளையும் நன்மைகளைப் பற்றியும் கல்வி புகட்டுதல்.
உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு
தொகுமுதலாவது உயிர்க்கோளக் காப்பகம் குறித்த மாநாடு மின்ஸ்க் நகரில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 62 நாடுகளில் உள்ள 226 உயிர்க்கோளக் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டாவது கூட்டம் 1995ஆம் ஆண்டு செவிலி என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் 82 நாடுகளைச் சார்ந்த 324 உயிர்க்கோளக் காப்பகங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்பொழுது 119 நாடுகளில் 631 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.[4]
இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு
தொகுஇந்திய அரசாங்கத்தால் 1979ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் வழிமுறைகளின்படி இந்தியாவில் உள்ள உயிர்க்கோளக் காப்பகங்களை கண்டறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 14 பகுதிகளை உயிர்க்கோள காப்பகங்களாக அறிவிக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததில் இதுவரை 13 பகுதிகள் உயிர்க்கோளக் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் 18 இடங்களை இந்திய உயிர்க்கோளக் காப்பகங்களாக அறிவித்துள்ளது இப்பதினெட்டில் 9 உலக உயிர்க்கோளக் காப்பகங்களில் அடங்கும்.[5][6][7]
இந்தியாவிலுள்ள உலக உயிர்க்கோளக் காப்பகங்கள்
தொகு2009 இல் இந்தியா இமயமலையின் குளிர்ப்பாலைப் பகுதியை இமய மலையை உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிப்பு செய்தது. செப்டம்பர் 20, 2010 இல் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சேசாச்சலம் மலையை 17 ஆவது உயிர்க்கோளக் காப்பகமா அறிவித்தது. மத்தியப் பிரதேசத்திலுள்ள பன்னா உயிர்க்கோளக் காப்பகம் பதினெட்டாவது உயிர்க்கோளக் காப்பகமாக ஆகஸ்ட் 25, 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.][5]
இந்திய உயிர்க்கோளக் காப்பகங்களின் பட்டியல்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wildlife Protected Area Network in India: A Review, Wildlife Institute of India, 2000
- ↑ http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/
- ↑ http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/about-mab/
- ↑ http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/
- ↑ 5.0 5.1 "Ministry of Environment and Forests: "Annual Report 2010-2011"" (PDF). Archived from the original (PDF) on 2017-01-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
- ↑ 6.0 6.1 UNESCO "20 new Biosphere Reserves added to UNESCO’s Man and the Biosphere (MAB) Programme", 11 July 2012
- ↑ UNESCO, Man and the Biosphere (MAB) Programme list
- ↑ "Nicobar Islands declared as world biosphere reserve" பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம், 31 May 2013
வெளியிணைப்புகள்
தொகு- Wildlife Institute of India webpage on India's Biosphere Reserves பரணிடப்பட்டது 2004-05-09 at Archive.today
- United Nations List of National Parks and Protected Areas: India (1993) பரணிடப்பட்டது 2001-11-25 at the Library of Congress Web Archives
- Ministry of Environment and Forests பரணிடப்பட்டது 2006-07-20 at the வந்தவழி இயந்திரம்
- The UNESCO Man and the Biosphere Program
- Man and the Biosphere Programme[தொடர்பிழந்த இணைப்பு]