கெண்டை (மீன் குடும்பம்)

(கெண்டைமீன் (குடும்பம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெண்டைமீன்
carp
கெண்டை (பொது)
Cyprinus carpio carpio
புற்கெண்டை
Ctenopharyngodon idella
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
குடும்பம்:
கெண்டைமீன்கள்[6]
பேரினம்:
12-15 (எண்ணிக்கை)
இனம்:
180-210 (எண்ணிக்கை)
பேரினங்கள்
  1. Abramis
  2. Aristichthys
  3. Barbodes
  4. Carassius
  5. Cirrhinus
  6. Ctenopharyngodon
  7. Culter
  8. Cyprinus
  9. Epalzeorhynchos
  10. Henicorhynchus
  11. Hypophthalmichthys
  12. Labeo
  13. Mylopharyngodon
  14. Tinca
மற்றும் சில.

கெண்டைமீன் (carp, உயிரியல் பெயர்: Cyprinidae, பண்டைய கிரேக்க மொழி: κυπρῖνος, கெண்டைமீன் குடும்பம்) தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. [7] இம்மீன் குடும்பத்திற்குள், 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும், 180-210சிற்றினங்களும் உள்ளன. இதன் தாயகம் ஐரோப்பாவும், ஆசியாவும் ஆகும். எனினும், உலகின் பலநாடுகளில் பணத்திற்காகவும், நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தவும், அழகுணர்வுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய சூழ்நிலையில் இவை நிலைத்து வாழ்கின்றன.

சிறப்புகள்

தொகு
  • 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர்[மேற்கோள் தேவை].
  • கெண்டைமீன் தனது மேலுதட்டின் மீதுள்ள, இரண்டு இணை குட்டைமீசைகளின் உதவியால், ஆற்றின் வண்டல் அடித்தளத்தின் மேல், இரை தேடியவாறு, அவசரமின்றி மெதுவாக நீந்துகிறது.
  • இவை வெபுரியன் ஒலியுணர் உறுப்பு[8] என்ற சிறப்பான ஒலிஉணரும் உறுப்பினைப் பெற்றுள்ளன.
  • Tribolodon மட்டுமே (cyprinid பேரினம்) உப்புநீரிலும் வாழும் திறன் உடையது.
  • நெடுங்காலமாகவே மனிதன் உணவாக உட்கொள்ளும் மீன்வகைகளில், இது மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.
  • ஆற்றில் வாழும் சில கெண்டைமீன்களின் தேவைகளும் நடத்தையும் கட்டமைப்பும் வேறு வகையானவை. இது மற்ற மீன்களை வேட்டையாடுவதில்லை. பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிர்களையும் நீர்த் தாவரங்களையுமே இது உணவாகக் கொள்கிறது.
  • கெண்டையின் வாய் பெரியதல்ல. அதில் கூரிய பற்களும் கிடையாது. நுண்ணியதும், இயக்கம் குறைந்ததுமான தனது இரையை, இத்தகைய வாயினால் கூட எளிதில் பற்றிக் கொள்ளும். தொண்டைக்குழிக்குள் மட்டுமே, மொண்ணையான மிடற்றுப் பற்களும், எலும்புத் தகடும் உள்ளன. மெல்லுடலிகளின் ஓடுகளை, நொறுக்குவதற்கு இவ்வுறுப்புப் பயனாகிறது.

கெண்டைமீன் வளர்ப்பு

தொகு

இந்தியாவில் மீன்வளர்ப்பு

தொகு

மீன் வளர்ப்பினை நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆகிய மூன்று வகை நீர்களிலும் மேற்கொள்ளலாம். இந்திய நாட்டில் உவர்நீர், கடல்நீர் ஆகிய இரண்டு நீர்வளங்களைப் பயன்படுத்தி, இறால்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. மேலும், நண்டுகளும், இங்கி இறால்களும், சில வகை உவர்நீர் மீன்களும், கடல்நீர் மீன்களும், சிலவகை கடற்பாசிகளும், நுண்பாசிகளும்,மிதவை உயிருணவுகளும் வளர்க்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன.

நன்னீர்மீன் வளர்ப்பு

இந்திய நாட்டில் ஏறத்தாழ 29,000 கி.மீ நீளத்திற்கு ஆறுகளும், 31,50,000 எக்டர் பரப்பளவு நீர்த்தேக்கங்களும், 2 இலட்சம் எக்டர் பரப்பளவு வெள்ளை நீர் தேங்கும் சமவெளிப்பகுதிகளும், நன்னீர்மீன் வளர்ப்புக்கேற்ற, பொது நீர்வளங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்பொதுநீர் வளங்களின் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே உள்ளது. இந்திய மீன் உற்பத்தியில் கிட்டத்தட்ட 95 விழுக்காடு, நன்னீர் மீன்வளர்ப்பு மூலமே பெறப்படுகிறது. எனவே இந்திய துணைக்கண்டத்தில் மொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்வளர்ப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

கெண்டைமீனின் உற்பத்திநிலை

இந்தியாவுக்கு ஏற்ற நன்னீர் மீன்களாக கெண்டை, விரால், கெளுத்தி, நன்னீர் இறால் இனங்கள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களால், நன்னீர் மீன்வளர்ப்பு உற்பத்தியில், 85 விழுக்காட்டிற்கும் அதிகமான உற்பத்தி கெண்டை மீன்கள் மூலமே பெறப்படுகிறது.

காரணிகள்

தொகு

கெண்டை மீன்வளர்ப்பு இந்திய நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வேளாண் தொழிலாகும். இத்தொழிலிலுள்ள பல அனுகூலங்கள்;-

  1. கெண்டை மீன்கள் இந்திய தட்ப வெப்ப சூழலுக்கு மிகவும் ஏற்றவை. இந்தியசூழலில் குறுகிய காலத்திலேயே வேகமாக வளர்ந்து, விற்பனை எடையைப் பெறும் தன்மை கொண்டவை.
  2. இவற்றின் வளர்ப்பு மற்றும் குஞ்சு உற்பத்தி தொழில் நுட்பங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. மீன் குஞ்சுகள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன
  3. கெண்டை மீன்களின் தேவை, உள்நாட்டிலேயே அதிகமாக உள்ளதால் விற்பனை செய்வது எளிது
  4. இம்மீன்கள் தாவரப்பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களை உண்ணும் தன்மை கொண்டுள்ளதால், குறைந்த செலவில் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். எனவே இத்தொழிலுக்கு அதிக முதலீடு தேவை இல்லை
  5. இம்மீன்கள் ஓரளவு பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளதாலும், சுற்றுப்புற சூழலிலுள்ள பல இடர்பாடுகளைத் தாங்கி வளரும் தன்மையுடையது.
  6. தனி இன வளர்ப்பை விட, பல பெருங்கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் இருப்புச் செய்து வளர்க்கும், 'கூட்டு மீன் வளர்ப்பு' எளிது.
இனவிருத்தி
கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புற்கெண்டை ஆகிய இனங்கள், இரண்டாம் வயது முடிவில் இனவிருத்திக்குத் தயாராகின்றன. இணக்கமான தட்பவெப்ப சூழலில், ஆறு போன்ற ஓடுநீர் நிலைகளில், இயற்கையாகவே இனவிருத்தி செய்யும் இம்மீன்களை, குளங்களில் தகுந்த தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் போது, தூண்டுதல் இனப்பெருக்க முறை மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
இனத்தேர்வு
கீழ்கூறப்பட்டுள்ள ஆறு இனங்களுமே கூட்டு மீன்வளர்ப்பிற்கு ஏற்றவை. இருப்பினும் பெரும்பாலான பண்ணைகளில் மூன்று அல்லது நான்கு இனங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் புல்கெண்டை ஆகிய இனங்களே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. இருப்பினும் கூட்டு மீன் வளர்ப்பில் முழுமையான உற்பத்தியைப் பெற ஆறு வகையான மீன்களையுமே சேர்த்து வளர்ப்பது அவசியமாகும்.

கூட்டு மீன்வளர்ப்பு

தொகு

இந்திய அறிவியலாளர் வளர்த்த(1970) இத்திட்டத்தின் படி, பெருங்கெண்டை இனங்கள் ஒவ்வொன்றும், மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்டவை.[9][10] எனவே, மீன் பண்ணைக் குளங்களில் ஒரு பெருங்கெண்டை இனத்தை மட்டும் தனி இனமாக வளர்க்கும் போது அந்த இனம் அதன் தன்மைக்கேற்ற இயற்கை உணவை மட்டுமே பெருமளவில் பயன்படுத்தும். இந்நிலையில் நீரில் உற்பத்தியாகும் பிற இயற்கை உணவு வகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கழிவுகளாகவே போகும். இந்நிலையைத் தவிர்க்க நீரில் இயல்பாகவே உருவாகும் மாறுபட்ட தன்மை கொண்ட பல வகை இயற்கை உணவுக்காக ஒரே இடத்திற்குச் சென்று போட்டியிடாமல், நீர்மட்டத்தில் அவற்றிற்கான இயற்கை உணவு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றின் உணவுத் தேவையை பூர்த்திச் செய்கின்றன.

இந்தியப் பெருங்கெண்டை இனங்கள்

தொகு

கட்லா

தொகு
 
கங்கைக் கெண்டை
Gibelion catla

தமிழில் தோப்பா மீன், கங்கைக் கெண்டை என்பர். கங்கை ஆற்றை பூர்வீகமாகக் கொண்ட கட்லா இனம், இந்தியப் பெருங்கெண்டை இனங்களுள் மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டது. பெரிய தலையையும், அகன்ற உடல் அமைப்பையும் கொண்ட இவ்வினம், நீரில் மேற்பரப்பில் அதிகமாகக் காணப்படும். விலங்கின் நுண்ணுயிர் மிதவைகள், பாசிகள், மக்கிய பொருட்களை இம்மீனினம் தின்று வளரும் தன்மை கொண்டது. இதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ற வகையில், இதன் வாய் சற்று மேல் நோக்கி அமைந்திருக்கும். அதிக அளவில் அங்கக உரங்கள் சேரும் குளங்களில், இம்மீன் இனம் வேகமாக வளருவதால், பொதுக்குட்டைகளிலும் இம்மீன் வளர்க்கப்படுகிறது.

குளங்களில் மிதவை உயிரினங்களால் ஏற்படும் கலங்கல் தன்மையை குறைக்க, இறால்களோடு கட்லா இனம் இணைத்து வளர்க்கப்படுகிறது. (நன்னீரிலும், உவர்நீரிலும் (குறைந்த அளவு உப்புத் தன்மை கொண்ட சுமார் 3- 4 கிராம் / லிட்டருக்கு உள்ள உவர் நீர்) கட்லா இனம், கூட்டு மீன் வளர்ப்பில் 10 – 30 விழுக்காடு அளவிற்கு வளர்க்கப்படுகிறது.

குளங்களில் முறையான எண்ணிக்கையில் விட்டு, கட்லா மீன்களை வளர்க்கும் போது, ஓராண்டில் ஒரு மீனின் எடை 1 முதல் 1 ½ கிலோ கிராம் வரை கூடுகிறது. இம்மீன் பொதுவாக இரண்டு வயதிற்கு மேல் இனப்பெருக்கம் செய்யும் திறனைப் பெறுகிறது.

ரோகு

தொகு
 
ரோகு
Labeo rohita

கெண்டை மீன் இனங்களுள், ரோகு சுவையில் சிறந்த இனமாகக் கருதப்படுகிறது. இந்த இனத்தின் தலை சிறியதாகவும். வாய் நேராகவும், கீழ் தாடையில் உதட்டில் சுருக்கங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வளர்ந்த மீன்கள் ஓரளவு நீளத்துடன் உருண்ட உடலமைப்புடன் இருக்கும். வளர்ந்த மீன்களின் செதில்களில் சிவப்பு கலந்த நிறம் கொண்டதாக இருக்கும்.

இம்மீன் இனம் அழுகும் தாவரங்களையும், மிதக்கும் பாசிகளையும், நீரில் திடப் பொருட்களில் படிந்து வளரும் பாசி இனங்களையும் விரும்பி உண்ணும். இது தவிர நாம் அளிக்கும் மேலுணவு வகைகளையும் விரும்பி உண்ணும் தன்மை கொண்டது. இம்மீன் இனத்தை மேலுணவு மட்டுமே அளித்து கூட வளர்க்கலாம். இத்தன்மையால், கெண்டை மீன் வளர்ப்பில் ரோகு இனம் தனி இனமாக பல இடங்களில் வளர்க்கப்படுகிறது.

ரோகு மீன்களுக்கு விற்பனை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் கூட்டு மீன் வளர்ப்பில், மீன்களின் எண்ணிக்கையில் 25 – 50 விழுக்காடு அளவிற்கு ரோகு மீன் இருப்புச் செய்யப்படுகிறது. இம்மீன் இனம் ஓராண்டில் ¾ - 1 கிலோ கிராம் எடை வரை வளருகிறது.

மிர்கால்

தொகு

நீரின் அடிமட்டத்தில் வாழும் இம்மீன் இனம், அடிமட்டத்திலுள்ள கழிவுகளையும், மட்கும் பொருட்களையும், சேற்றிலுள்ள சிறிய விலங்கினங்களையும் உண்டு வளருகிறது. இதன் வாய் சற்று உள்ளடங்கி கீழ்நோக்கி அமைந்து இருக்கும். இம்மீன் நீண்ட உடலமைப்புடனும், வால் துடிப்பின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்துடனும் காணப்படும். ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் மிர்கால் சுமார ½ - ¾ கிலோ கிராம் எடை வரை வளருகிறது.

அயல்நாட்டு பெருங்கெண்டை இனங்கள்

தொகு

வெள்ளிக்கெண்டை

தொகு
 
வெள்ளிக்கெண்டை
Hypophthalmichthys molitrix

இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இம்மீனின் உடல் பக்கவாட்டில் தட்டையாகவும், வெள்ளி போன்ற சிறிய பளபளப்பான செதில்களையும் கொண்டிருக்கும். நீரின் மேல்மட்டத்திலுள்ள, தாவர நுண்ணுயிர் மிதவைகள் (phytoplankton) இம்மீனின் முக்கிய உணவாகும். இதற்கேற்ப இம்மீனின் வாய் மேல்நோக்கி அமைந்திருப்பதோடு செவுள் அரும்புகளும் மிகவும் சிறியவையாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். மேலும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகள், அழுகிய தாவரங்கள் போன்றவற்றையும் வெள்ளிக் கெண்டை ஓரளவு உண்ணும். இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1 ½ - 2 கிலோ கிராம் எடை வரை வளரும் இயல்புடையது.

புற்கெண்டை

தொகு
 
புற்கெண்டை
Ctenopharyngodon idella

இம்மீன் சிறிய தலையையும், நீண்ட உடலையும் கொண்டது. இதன் உடலில் மேல்பகுதி சாம்பல் கலந்த பச்சை நிறத்துடனும், வயிற்றின் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். சீன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புல் கெண்டை மீன் நீரிலுள்ள தாவரங்களையும், புல் இனங்களையும், பாசிகளையும் விரும்பி உண்ணும். இவை தவிர நாம் அளிக்கும் காய்கறிக் கழிவுகள், மரவள்ளி இலைகள், வாழை இலைகள், மேலுணவு போன்றவற்றையும் விரும்பி உண்ணும். இதன் உணவுப் பழக்கத்தால், இம்மீன் இனம் நீர் நிலைகளில் அபரிதமாக வளருகிற நீர்த்தாவரங்களை கட்டுப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது. ஓராண்டு வளர்ப்பு காலத்தில் சராசரியாக சுமார் 1 - 1 ½ கிலோ எடை வரை வளருகிறது. இம்மீன் இனம் நுகர்வோர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

சாதாக் கெண்டை

தொகு

சாதாக் கெண்டையில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றுள் கண்ணாடிக் கெண்டை சமவெளிப்பகுதிகளில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இம்மீன் தாய்லாந்திலுள்ள பாங்காக்கிலிருந்து, இந்திய நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. சாதாக் கெண்டை உருண்டு திரண்டு அடிவரையும் வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்ட பெரிய செதில்களையும், பருமனான வாய் அமைப்பையும் கொண்டிருக்கும்.

இம்மீன் குளத்திலுள்ள தாவரங்கள் அடிமட்டத்திலுள்ள கழிவுகள், புழுப்பூச்சிகள், சாணம் போன்றவற்றை விரும்பி உண்ணும் அனைத்துண்ணியாகும். சாதாக் கெண்டை ஒரே ஆண்டில் 1 - 1 ½ கிலோ எடை வரை வளரும் திறனுடையது.

இருப்பினும் இதன் வயிறு பெருத்து குடல் பகுதி அதிகமாகக் காணப்படுவதால் இதன் விற்பனை விலை பெரும்பாலும் குறைந்து விடுகிறது. தவிர இம்மீன் உணவைத் தேடி, குளக்கரைகளை சதா குடைந்து சேதப்படுத்துவதால், சில இடங்களில் இம்மீன் விரும்பி வளர்க்கப்படுவதில்லை. இனவிருத்தி/முதிர்ச்சி பெற்ற மீன்கள், தூண்டுதல் இல்லாமல் தாமாகவே குளத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.

காணழகுக் கெண்டைமீன்கள்

தொகு
 
தங்கமீன்கள்

உணவுக்காக அல்லாமல், அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களில் இரண்டு மீன் இனங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அவை,

1) தங்கமீன் - Carassius auratus auratus

2) கோய் ('錦鯉' - 'nishikigoi') - Cyprinus carpio carpio

பின்வரும் காரணிகளால், இவை அதிகம் பேணப்படுகின்றன.

  • அழுக்கு நீரிலும் வாழும் இயல்புடையது
  • குறைவான உயிர்வளியிலும் நிலைத்து வாழும் தன்மையுடையது.
  • 4 பாகை செல்சியசு குளிர்ச்சியைத் தாங்கும் வலிமையுடையதாக உள்ளது.

படக் காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. en:Actinopterygii - முள்ளெலும்புத் துடுப்பிகள்
  2. en:Neopterygii - பெரும்மாறாத் துடுப்பிகள்
  3. en:Teleostei - துருத்திவாயிகள்
  4. W:Ostariophysi = வெபுரியன் ஒலியுணர் உறுப்பிகள் - 68%நன்னீர் மீன்கள் + 123கடல்மீன்கள்
  5. en:Cypriniformes - முதுகுத்துடுப்பிகள் - 3,268 சிற்றினங்கள் .
  6. en:Cyprinidae = பண்டைய கிரேக்க மொழி - kyprînos (κυπρῖνος,) -->"carp" = கெண்டைமீன்கள்
  7. மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்புதி இந்து தமிழ் 17 டிசம்பர் 2015
  8. W:Weberian apparatus - சிறப்பான ஒலி உணரும் உறுப்பு.
  9. Strategy for transfer of composite fish culture technology
  10. "Pond fish farming". Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-08.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கெண்டைமீன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெண்டை_(மீன்_குடும்பம்)&oldid=4060367" இலிருந்து மீள்விக்கப்பட்டது