தமிழர் காலக்கணிப்பு முறை

தங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் (வாழ்வையும் சேர்த்து) இடம், காலம், செயல் ஆகியவற்றை முதன்மையாக வைத்துப் பகுத்தத் தமிழர் தாங்கள் அளக்கும் முறையையும் ஏழாகப் பகுத்தனர். அவற்றில் ஒன்று தெறிப்பு அளவையாகும். இது காலத்தை அளக்க உதவுகின்றது.

தமிழர் காலக்கணிப்பு முறையின் அடிப்படை

தொகு

தமிழர் காலக்கணிப்பு முறை சூரியனின் இயக்கத்தை மையமாக வைத்துக் கணக்கிடப்படுகிறது. பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும் (நேரம்) வாரங்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும் (காலம்) வருடங்களும் உருவாகுகின்றன.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை:

தொகு

நாழிகை பகுப்பின் அடிப்படை

தொகு
ஒரு நாழிகையின் பகுப்பு முறை
அளவை அளவை முறை குறிப்புகள்
1 குழி(குற்றுழி) கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்
10 குழி 1 கண்ணிமை கண்ணை இமைக்கும் நேர அளவு
2 கண்ணிமை 1 கைந்நொடி[1] கையை நொடிக்கும் நேர அளவு
2 கைந்நொடி 1 மாத்திரை[1]
2 மாத்திரை 1 குரு[1]
2 குரு 1 உயிர்[1]
5 தற்பரை 1 சணிகம்
6 உயிர் 1 சணிகம்[1] தற்கால 2 நொடி அளவு
12 சணிகம் 1 விநாடி[1] தற்கால 24 நொடி அளவு
60 தற்பரை 1 விநாடி
60 விநாடி 1 நாழிகை(நாடி)[1] தற்கால 24 நிமிட அளவு

ஓரை பகுப்பின் அடிப்படை

தொகு

ஓரை என்பது தமிழர்கள் காலத்தை அளக்கப் பயன்படுத்திய அளவைகளுள் ஒன்றாகும். ஓர் ஓரை என்பது 2½ நாழிகைகளைக் கொண்டது. தற்கால அளவில் இது ஒரு மணிநேரமாகும். ஓரை ஏழு வகைப்படும். ஒவ்வொரு வகையான ஓரையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான செயல்களை செய்தால் அது நன்றாக அமையும் எனக்கொண்டிருந்தனர்.

ஓரையின் வகைகளும் அவைகளுக்கான உகந்த செயல்களும்
வரிசை எண் ஓரை உகந்த செயல்
1 ஞாயிறு(சூரியன்)
2 வெள்ளி(சுக்கிரன்)
3 அறிவன்(புதன்)
4 திங்கள்(சந்திரன்)
5 காரி(சனி)
6 வியாழன்(குரு)
7 செவ்வாய்(அங்காரகன்)

நாள் பகுப்பின் அடிப்படை

தொகு

தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர். ஒரு நாளின் (ஒரு திகதியின்) பொழுதுகளை ஆறு சிறுபொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறுபொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து (காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் (வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு (வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

சூரியன் உதிக்கும் நேரம் ஒரு நாளின் தொடக்கமாகக் கொள்ளப்படுவதாலும், பூமி சுழல்வதற்கேற்ப ஒவ்வொரு இடத்திற்கும் சூரியன் உதிக்கும் நேரம் மாறுபடுவதாலும், ஒவ்வொரு இடத்திற்கேற்றவாறு ஒரு நாளின் தொடக்கமும் மாறுபடும்.

ஒரு நாளின் பகுப்பு முறை
அளவை குறிப்புகள்
2½ நாழிகை 1 ஓரை[2] தற்கால ஒரு மணிநேரம்
3¾ நாழிகை 1 முகூர்த்தம்[2]
7½ நாழிகை 1 சாமம்[2]
10 நாழிகை 1 சிறுபொழுது
4 சாமம் 1 பொழுது[2]
2 பொழுது 1 நாள்(திகதி)[2] தற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்)
ஒரு நாளின் சிறுபொழுதுகளும் அதன் ஓரைகளும்
சிறுபொழுது நேரம்
காலை 1 ஓரை முதல் 4 ஓரை வரை ( 6 முதல் 10 மணி வரை)
நண்பகல் 5 ஓரை முதல் 8 ஓரை வரை (10 முதல் 2 மணி வரை)
எற்பாடு 9 ஓரை முதல் 12 ஓரை வரை (2 முதல் 6 மணி வரை)
மாலை 13 ஓரை முதல் 16 ஓரை வரை (6 முதல் 10 மணி வரை)
இடையாமம் 17 ஓரை முதல் 20 ஓரை வரை (10 முதல் 2 மணி வரை)
வைகறை 21 ஓரை முதல் 24 ஓரை வரை (2 முதல் 6 மணி வரை)

வாரப் பகுப்பின் அடிப்படை

தொகு

ஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் முடிந்த பிறகு அடுத்த சுற்று தொடங்கும். அப்படி ஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் கொண்ட ஒரு சுற்று, ஒரு வாரம் (அ) ஒரு கிழமை எனப்படும். ஒரு நாளின் தொடக்க ஓரை, ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.[சான்று தேவை]

  1. ஞாயிற்றுக்கிழமை
  2. திங்கட்கிழமை
  3. செவ்வாய்க்கிழமை
  4. புதன்கிழமை
  5. வியாழக்கிழமை
  6. வெள்ளிக்கிழமை
  7. சனிக்கிழமை
ஒரு வாரத்தின் பகுப்பு முறை
அளவை குறிப்புகள்
7 நாள் 1 கிழமை(வாரம்)[2] தற்கால ஒரு வாரம்

பூமி சூரியனைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை

தொகு

மாதப் பகுப்பின் அடிப்படை

தொகு

பண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

சூரியமானம்
தொகு
 
இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.

சூரியமானம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் (Degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே ஞாயிறு (சூரியமாதம்) ஆகும். இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம்+தேர், ஆங்கிலம்: calendar) என்று அழைக்கிறோம். தமிழர், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு ஞாயிற்றைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமான முறையையே பின்பற்றுகிறார்கள். தமிழகத்தில் சூரியமான முறையே வழக்கத்தில் இருந்தாலும் ஞாயிறுகளைக்(சூரியமாதங்களைக்) குறிக்க திங்கட்பெயர்களே(சந்திரமாதப்பெயர்களே) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதப் பிறப்பு
தொகு

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நேரம் அந்தந்த சூரியமாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய மறைவுக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.

மாதங்களின் கால அளவு
தொகு

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சூரியமாதங்களின் கால அளவுகள்
வ.எண் ஞாயிறு(இராசி,சூரியமாதம்),கேரள நாட்காட்டியில் மாதப்பெயர் அடையாளம் நாள் நாடி விநாடி தற்பரை வசதிக்காக
1 மேழம்/மேடம் வருடை(ஒரு வகை ஆடு) 30 55 32 00 31
2 இடவம்/இடபம் காளை அல்லது மாடு 31 24 12 00 31
3 மிதுனம் இரட்டைகள் 31 36 38 00 32
4 கடகம்/கர்க்கடகம் நண்டு 31 28 12 00 31
5 சிம்மம்/சிங்கம் சிங்கம் 31 02 10 00 31
6 கன்னி கன்னிப்பெண் 30 27 22 00 31
7 துலாம் இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் 29 54 07 00 29/30
8 விருச்சிகம்/விருட்சிகம் தேள் 29 30 24 00 29/30
9 தனுசு/தனு வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை 29 20 53 00 29
10 மகரம் முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினம் 29 27 16 00 29/30
11 கும்பம் ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் 29 48 24 00 29/30
12 மீனம் இரு மீன்கள் 30 20 21 15 31
- மொத்தம் - 365 15 31 15 -

வருடப் பகுப்பின் அடிப்படை

தொகு

தமிழர் ஒரு வருடத்தின்(ஆண்டின்) பொழுதுகளை காலத்திற்கேற்ப ஆறு பெரும்பொழுதுகளாகவும் ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு ஞாயிறு கால அளவாகவும் பகுத்தனர்.

ஒரு வருடத்தின் பகுப்பு முறை
அளவை குறிப்புகள்
48 நாள் 1 மண்டலம்
2 ஞாயிறு(சூரியமாதம்) 1 பெரும்பொழுது
6 ஞாயிறு(சூரியமாதம்) 1 அயனம்[2]
2 அயனம் 1 ஆண்டு(வருடம், ஆட்டை)[2] தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை). வருடை எனும் ஒரு வகை ஆட்டை அடையாளமாகக் கொண்ட மேழ மாதத்தை முதன்மையாகக் கொண்டதால் வருடம் என்றழைக்கப்பட்டது.[சான்று தேவை]
பெரும்பொழுதுகளும் அதற்கான ஞாயிறும்(சூரியமாதமும்) திங்களும்(சந்திரமாதமும்)
பெரும்பொழுது ஞாயிறு(சூரியமாதம்) திங்கள்(சந்திரமாதம்)
இளவேனில் மேடம், இடபம் சித்திரை, வைகாசி
முதுவேனில் மிதுனம், கடகம்/கர்க்கடகம் ஆனி, ஆடி
கார் சிம்மம்/சிங்கம், கன்னி ஆவணி, புரட்டாசி
கூதிர் துலாம், விருச்சிகம் ஐப்பசி, கார்த்திகை
முன்பனி தனுசு/தனு, மகரம் மார்கழி, தை
பின்பனி கும்பம், மீனம் மாசி, பங்குனி
வருடப் பிறப்பு
தொகு

சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை வடசெலவு (உத்ராயணம்) எனவும் பின்பு தெற்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை தென்செலவு (தட்சனாயணம்) எனவும் அழைப்பர். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும்.

சந்திரன் பூமியைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை

தொகு

மாதப் பகுப்பின் அடிப்படை

தொகு

பண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

சந்திரமானம்
தொகு

ஒரு சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையான அமைவாதையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் நிலையான பூரணைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், வளர்பிறை காலம் எனப்படும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலையான அமைவாதைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், தேய்பிறை காலம் எனப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமைவாதையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமைவாதைகளுக்கு இடைப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு(29.53059 நாட்கள்) 29 நாட்கள் 31 நாழிகைகள் 50 விநாடிகள் 8 தற்பரைகள் ஆகும். சந்திரன் பூமியை 27.3 நாட்களிலேயே சுற்றி முடித்துவிடுகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றி வருவதால், சந்திரமாதம் தொடங்கிய பொழுது சூரியன் இருந்த அதே நிலைக்கு சந்திரன் வர 2.23 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது.

ஒரு சந்திர மாதத்தின் பகுப்பு முறை
அளவை குறிப்புகள்
15 நாள் 1 அழுவம்(பக்கம்)[2] வளர்பிறை(15 நாள்), தேய்பிறை(15 நாள்)
30 நாள் 1 திங்கள்(மாதம்)[2] தற்கால ஒரு சந்திரமாதம்
மாதப் பிறப்பு
தொகு

சந்திரமாதத்தைப் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு சில சமுதாயங்களில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, வேறு சில பண்பாடுகளில் பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கின்றன. முதல் முறை அமாந்த முறை என்றும், இரண்டாவது பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது. பூர்ணிமாந்த முறையில் ஒவ்வொரு இடத்திற்கும் கணிக்கப்பட்ட சூரியமாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நக்கத்திரத்தில்(நட்சத்திரத்தில்) வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. இப்படி, ஒவ்வொரு சூரிய மாதத்திற்கும் இணையான சந்திரமாதம் கணித்தனர். உதாரணமாக, ஒரு இடத்தில் சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் பங்குனி நக்கத்திரம் வந்தால் சூரியமாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திரமாதம் பங்குனியாகக் கொள்வர்.[சான்று தேவை]

வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இசுலாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

சூரியமாதத்திற்குரிய சந்திரமாதம்
- சூரியமாதப் பெயர் சந்திரமாதப் பெயர்
1 மேழம் சித்திரை
2 விடை வைகாசி
3 ஆடவை ஆனி
4 கடகம் ஆடி
5 மடங்கல் ஆவணி
6 கன்னி புரட்டாசி
7 துலை ஐப்பசி
8 நளி கார்த்திகை
9 சிலை மார்கழி
10 சுறவம் தை
11 கும்பம் மாசி
12 மீனம் பங்குனி

தமிழர் புத்தாண்டு

தொகு

சந்திரமாதத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், 12 மாதங்களுக்கு மொத்தம் 354 நாட்கள் 20 நாழிகைகள் 1 விநாடி 36 தற்பரைகள் ஆகும். இதன் மதிப்பு வருடத்திற்கு வருடம் ஏற்றஇறக்கம் கொண்டது. மேலும், பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் பூமியில் இயற்கையாக பெரும்பொழுதுகள் உருவாகின்றன. ஆகவே, ஒரு இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் அடுத்த இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் இடையில் உள்ள காலம்(ஒரு வருடம்) 365 நாட்கள் 15 நாழிகைகள் 31 விநாடிகள் 15 தற்பரைகள் ஆகும். இது சந்திரன் 12 முறை பூமியைச் சுற்றி வரும் மொத்த காலத்தை விட 11 நாட்கள் கூடுதலாகும். ஆகையால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிடும் பொழுது, பூமியில் இயற்கையாக நிகழும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் முடிவையும் எளிதாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால், அவை பூமி சூரியனைச் சுற்றுவதால் தோன்றுபவை. இதனால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், அடிக்கடி நாட்காட்டியை மாற்றியமைக்க வேண்டும். ஆகையால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் புது வருடத்தைக் கணிக்க இம்முறை உதவாது. ஆனால், தோராயமாக புது வருடத்தின் வருகையைக் கணக்கிடலாம். இதனால், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்து புது வருடத்த்தின் தொடக்கத்தையும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் சூரியமாதங்களையும் அறிவியல் பூர்வமாகக் கணித்தனர்.

அக்காலத்தில் கணியர், வள்ளுவர் போன்றவர்கள் காலத்தைக் கணிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். ஆனால், சாதாரண பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு(முக்கியமான விடயங்களைத் தவிர) பெரும்பொழுதுகளை ஓரளவிற்கு கணக்கிட முடிந்தாலும் சூரியனை வைத்து சூரியமாதத் தொடக்கத்தையும் நாட்களையும் கணிப்பது கடினமாக இருந்தது. ஆகையால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். சந்திரன் ஒரு பூரணையிலிருந்து அடுத்த பூரணைக்கு செல்லும் காலம் தங்கள் அன்றாட வாழ்வில் ஒரு மாதமாகக் கொண்டனர். பூரணையில் என்ன நக்கத்திரம் வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே அச்சந்திரமாதத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.

உதாரணமாக, தலைவன் தலைவியிடம் சந்திரமாதத்தில் சித்திரை மாதம் பூரணை அன்று திரும்பி வருவேன் என்றுக் கூறினால், சித்திரை மாத பூரணையைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். இதே, தலைவன் தலைவியிடம் சூரியமாதத்தில் கூற முயன்றால் மேட மாதத்தில் திரும்பி வருவதாக மட்டுமே கூற முடியும். முடிந்தால், மேட மாத பூரணையில் வந்துவிடுவேன் எனக்கூற முடியும். ஆனால், சூரியமாதத்தின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இதனால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். ஆனால், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர்.

இதன்மூலம், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்தே புது வருடத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது. பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்த்தில், சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். அயனநகர்வின் பொழுது பூமி சார்ந்த சூரியனின் இயக்கம் தெற்கிற்கும் வடக்கிற்கும்(கடக ரேகை) சென்று வரும். அப்படி ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் காலம், ஒரு அயனம் ஆகும். இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடமாகும். ஒரு வருடத்தில் இரண்டு முறை சூரியன் வான் உச்சிக்கு வரும். அதில் ஒன்று இளவேனிற்காலத்தின்(வசந்தகாலத்தின்) தொடக்கத்தைக் குறிக்கும். இளவேனிற்காலம் தொடங்கும் அந்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. வேளாண்தொழிலை அடிப்படையாக வைத்தே இளவேனிற்காலத்தின் தொடக்கம் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. மேலும், இந்நாளில், பகலும் இரவும் சமநீளம் கொண்டதாக இருக்கும். இந்நாளே, சூரிய மாதங்களில்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், இடம், காலம் மற்றும் செயல் ஆகிய மூன்றினை அடிப்படையாக வைத்து தமிழர் காலத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது.

புத்தாண்டுக் குழப்பம்

தொகு

தமிழர் புத்தாண்டு தை என்றும், சித்திரை என்றும், ஆவணி என்றும் வெவ்வேறு விதமாகக் கூறுவர். முதல் சூரிய மாதமான மேட மாதத்திற்குள் சூரியன் நுழையும் நாள் வருடப்பிறப்பாகுவதால், வருடப்பிறப்பு, சித்திரை சந்திரமாதத்தில் நடைபெறுகிறது என சிலரும், தை மாதப்பிறப்பு தமிழரின் திருநாளான பொங்கல் திருநாள் என்பதால் தை மாதம் தான் வருடப்பிறப்பு எனவும் வெவ்வேறாகக் கூறுவர்.

அயனநகர்வும் தமிழரின் பண்டிகைகளும்

தொகு
அயனநகர்வு சூரியமாதம் தமிழர் பண்டிகை
சூரியன் வான் உச்சியில் வரத் தொடங்கும் மாதம் மேடம்=சித்திரை தமிழ் புத்தாண்டு, சித்திரைச் சித்திரை
சூரியன் வடக்கிலிருந்து(கடக ரேகையில்) தெற்கு திரும்பத்தொடங்கும் மாதம்(தேர்த் திரும்புதல்) கடகம்/கர்க்கடகம்=ஆடி ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
சூரியன் மீண்டும் வான் உச்சியில் வரத் தொடங்கும் மாதம் துலாம்=ஐப்பசி
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு திரும்பத்தொடங்கும் மாதம்(தேர்த் திரும்புதல்) மகரம்=தை பொங்கல் திருநாள், தைப்பூசம்

நேரம் மற்றும் காலத்தைக் குறிக்கும் குறியீடுகள்

தொகு

நாள், மாதம், வருடம் ஆகியவற்றைக் குறிக்க தமிழ் மொழியில் குறியீடுகள் உள்ளன. அவை,

காலத்தைக் குறிக்கும் குறியீடுகள்
குறியீடு பொருள்
நாள்
மாதம்
வருடம்

கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை

தொகு

நொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.

அளவை
64(82) ஆண்டு 1 வட்டம்
4096(84) ஆண்டு 1 ஊழி
- உகம்(யுகம்)
17,28,000(8x2,16,000) ஆண்டு கிரேதாயுகம்[3]
12,96,000(6x2,16,000) ஆண்டு திரேதாயுகம்[3]
8,64,000(4x2,16,000) ஆண்டு துவாபரயுகம்[3]
4,32,000(2x2,16,000) ஆண்டு கலியுகம்[3]
4 உகங்கள்(43,20,000 ஆண்டு) 1 சதுர்யுகம்(மகாயுகம்)[4]
2000 சதுர்யுகம் 1 நான்முகன் பேராயுள்[4]
100 நான்முகன் பேராயுள் 1 ஆதிநான்முகன் யுகம்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 நாழிகை அறிதல்(17), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 சாமம், நாள் முதலியன அறிதல்(18), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்
  3. 3.0 3.1 3.2 3.3 உகங்கட்கு ஆண்டு அறிதல்(20), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்
  4. 4.0 4.1 4.2 தேவகாலம் அறிதல்(21), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார்