பண்டைத் தமிழகத்தின் சமயம்

சங்க காலத் தமிழகத்தில் (பொ.ஊ.மு. 600 முதல் பொ.ஊ. 200 வரை) தமிழ் மக்களின் வாழ்வில்; சைவம், வைணவம், முருக வழிபாடு, பௌத்தம், சைனம், ஆசீவகம், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு போன்ற பல சமயங்கள், வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சமய ஆசிரியர்கள் சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர், சமய விவாதங்களை வெளிப்படையாக ஊக்குவித்தனர், ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து சமய ஆசிரியர்கள் பொது மக்கள் மத்தியில் தங்கள் கோட்பாடுகளைப் பற்றி சொற்பொழிவாற்றினர்.[1]

யானைமேல் ஐயனார்

தமிழ்ச் சமயங்கள்

தொகு

தமிழ்ப் பேசும் மக்களுடைய சமய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தமிழ் மதங்களாக அவர்களிடம் இருந்து பிரிக்கவியலாததாக இருந்துள்ளன. தமிழர்களின் தாயகமானது தற்கால இந்திய மாநிலமான, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியாக அறியப்படுகிறது. தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, பெரிய பிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ரீயூனியன், மியான்மர், மொரிசியசு மற்றும் ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளிலும் தங்கள் தாயகத்தில் இருந்து குடிபெயர்ந்து வாழ்கின்றனர். குடிபெயர்ந்த பல தமிழர்கள் தங்கள் கலாச்சாரம், மொழியியல் மற்றும் சமய பாரம்பரியம் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

பழந்தமிழர் சமயம்

தொகு

கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் கற்கால கால்நடை வளர்ப்பு கலாச்சாரம் நிலவியது. ஒப்பீட்டளவில் முதல் நூற்றாண்டில், நன்கு வளர்ந்த நாகரிகமாக முதிர்ச்சியடைந்து இருந்தது. இது குறித்து தொல்காப்பியம் (பொ.ஊ.மு. ஏழாம் நூற்றாண்டு) மற்றும் சங்க இலக்கியத் தமிழ் நூல்களில் சில விவரங்கள் உள்ளன.

பண்டைய தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் துவக்கக்கால சமய வாழ்வைக் காட்டுகின்றன. தொல்காப்பியமானது தமிழர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனான என்றும் இளமையும், அழகுமுடையவனான முருகன் என்கிறது. சிவன் மிக உயர்ந்த கடவுளாக கருதப்படுகிறார். முருகன் மற்றும் சிவன் ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு சேயோன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு மாயோன், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வேந்தன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். கிருட்டிணன், பலராமன் போன்ற பிற தெய்வங்கள் காலப்போக்கில் சங்ககால சமயத்தில் இணைந்தனர். துவக்கக்கால வேத சமயத்தில் தமிழர்களின் செல்வாக்கு தெளிவாகக் காணப்படுகிறது, இந்த அம்சங்கள் பல ஏற்கனவே பழமை வாய்ந்த இந்திய-ஆரிய மொழிகளில் உள்ளன, இதில் இருக்கு வேதத்தில் (பொ.ஊ.மு. 1500) உள்ள திராவிட மொழிகளில் கடன் வாங்கப்பட்ட பன்னிரண்டு சொற்களும் அடங்கும்.[2] இது பண்டைய தமிழர்கள் மற்றும் இந்திய-ஆரியர்கள் இடையேயான ஆரம்பகால சமய மற்றும் பண்பாட்டு இணைப்பு[3][5] அல்லது கலவையைப்[6] பிரதிபலிக்கிறது. இது இந்து சமயம், பௌத்தம், சைனம் ஆகியவற்றில் புனித சின்னங்களாக விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.[7][4][8][9]

தாய்த் தெய்வ வழிபாடானது பெண்மையை பெரிதும் மதித்த ஒரு சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அனைவருக்கும் பிறப்பளித்த இந்த தாய் தெய்வம் ஒரு கன்னியாக கருதப்பட்டார். சங்ககாலத்தில் இருந்த கோயில்களில் குறிப்பாக மதுரையில், பூசிக்கப்பட்ட தாய்த் தெய்வம் இருந்ததாகத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில், பழமுதிர்சோலை சன்னதியில் குறவப் பூசாரியால் நிகழ்த்தப்பட்ட சடங்கின் விரிவான விளக்கம் உள்ளது.

வெறியாட்டம்

தொகு

"வெறியாட்டம்" என்பது வழிபாட்டின்போது பெண்களுக்கு ஏற்படும் மருளைக் குறிக்கிறது. வெறியாட்டத்தின்போது கடவுளின் செல்வாக்குக்கு ஆட்பட்டு, பெண்கள் பாடி, ஆடுவர் அப்போது ஓரளவு கடந்தக் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பர், நோய்களையும் கணிப்பர். சங்க இலக்கியங்களில் இருபது புலவர்கள் வெறியாடலைச் சித்தரித்துள்ளனர். வெறியாடும் வேலன் அட்டமாசித்திகளுடைய தீர்கதரிசியாக கருதப்பட்டுள்ளார். வெறியாடல் ஆண், பெண் என இருபாலராலும் நடத்தப்பட்டது.

நடுகல்

தொகு

துவக்கக்காலத் தமிழர்கள் மத்தியில் நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது, அது சங்க காலத்துக்குப் பிறகும் நீண்டகாலமாக சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளது. இந்த நடு கற்களை வணங்குதல் போரில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.

தெய்யம் என்ற தெய்வீக நடனம் கேரளத்திலும் மற்றும் தமிழ்நாடு, கருநாடகத்தின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ளது. தெய்யம் ஆடுபவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காக நம்புகிறார்கள். ஆடுபவர் பக்தர்கள் மீது அரிசி எறிகிறார், ஆசீர்வதிப்பதன் அடையாளங்களாக மஞ்சள் தூளைப் பிரசாதமாகத் தருகிறார். தெய்யமானது நடனம், அபிநயம், இசை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இது பழங்காலப் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை உள்ளடக்கியதாக, வீரர் வழிபாடு மற்றும் மூதாதையர்களின் ஆண்மா ஆகியவற்றிற்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது ஒரு சமூக-சமய விழாவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட தெய்யங்கள் உள்ளன, ரக்த சாமுண்டி, கரி சாமுண்டி, முச்சிலோட்டு பகவதி, வயனாடு குலேவன், குலிகன், போத்தன் ஆகியவை மிகவும் அற்புதமான தொய்ய நடனங்களாகும். இவை கோவில்களின் முன்பு மேடை, திரைச்சீலை போன்றவை இல்லாமல் ஆடப்படுகின்றன. இதில் ஆதி காலத் தமிழ்ச் சமயத்தின் பண்புகள் உள்ளன.

பெரும்பாலான கிராமங்களின் அமைப்பு தரமானதாக உள்ளதாக கருதலாம். அம்மன் (தாய் தெய்வம்) கோயில் கிராமங்களின் மையத்தில் அமைந்து இருக்கும். மேலும் ஆண் காவல் தெய்வத்துக்கு கிராமத்தின் எல்லையின் சன்னிதி இருக்கும். தற்காலத்தில், அம்மன் தனியாக வணங்கப்படும் தெய்வமாகவோ அல்லது வேத வழிபாட்டுத் தெய்வமாகவோ மாறிப்போயுள்ளது.

மன்னர் வழிபாடு

தொகு

சங்க காலமும் முன் சங்க காலமும்

தொகு

அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார். அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் கோயில் எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் கோயில் என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம்.

மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. புறநானூறில் மோசிகீரனார் கூறுவது:

அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தக் கூறுகள் பிற்காலத்தில் இந்து சமயத்தால் உள்வாங்கப்பட்டன, அதன் வெளிப்பாடாக, சிவனுக்கும் அரசி மீனாட்சியுடன் திருமணம், அவர்கள் மதுரை அல்லது வஞ்சிக்கோவில் இருந்து ஆண்டது போன்ற தொன்மங்களும், பிற்காலத்தில் தமிழ் வழிபாட்டுடன் இணைக்கப்பட்ட இந்திரன் போன்றவை இதைக்காட்டுகின்றன. தொல்காப்பியர் மூவேந்தரை வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது.

இடைக்காலம்

தொகு

இராசராச சோழனைக் குறித்து திருவேலங்காடு செப்பேடானது, "அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து,..." என்று குறிப்பிடுகிறது. பக்தி இயக்கத்தின் போது, கவிஞர்கள் பெரும்பாலும் கடவுளர்களை அரசர்களுடன் ஒப்பிட்டனர்.

இந்து சமயம்

தொகு
 
மாமல்லபுரத்திற்கு அருகில் சாளுவன் குப்பத்தில் உள்ள முருகன் கோயில்.

மாமல்லபுரத்திற்கு அருகில் சாளுவன் குப்பத்தில் 2005 இல் அகழப்பட்ட செங்கல் கோயிலானது சங்க காலத்திற்கு முந்தியது ஆகும். இது தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களில் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பெரும்பாலான இந்துக் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்துள்ளது போலன்றி, சிற்ப சாத்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

 
முருகனின் சிற்பம்

சங்க காலத்தில், சிவன், முருகன், திருமால், கொற்றவை போன்ற பிரபலமான தெய்வங்கள் இருந்தன. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து திணைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து நிலப்பகுதிகளும் ஐந்து முதன்மை தெய்வங்களுடன் தொடற்புபடுத்தப்பட்டிருந்தன.[10] மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு திருமால், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வேந்தன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான காமனும், சூரியன், சந்திரன், மரண தேவனான யமன் ஆகியோர் இருந்தனர். தமிழ் நாட்டிலிருந்த பிராமணர்கள் வேத வாழ்வுக்கு முக்கியத்துவத்தை அளிப்பவர்களாக இருந்தனர. வேத சடங்குகளைக் கற்ற பிராமணர்கள், பொதுவாக அரசர்களின் ஆதரவில் இருந்தனர்.[11]

சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.[12] இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களான கலித்தொகை, முல்லைப்பாட்டு, புறநானூறு போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... புறநிலைக்கோட்டம் (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), நெடுநிலைக்கோட்டம் (உயர்ந்த கோயில்), பல்குன்றக்கோட்டம் (மலை உச்சியில் உள்ள கோயில்), இளவந்திக்கோட்டம் (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), எழுநிலைமாடம் (ஏழடுக்குக் கோயில்), கடவுட்கட்டிநகர் (கோயில் நகர்).[13]

இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில கார்த்திகை தீபம், திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன .[14]

சைனம்

தொகு

தமிழ்நாட்டில் சைனத்தின் தோற்றம் குறித்து தெளிவாக இல்லை. இருப்பினும், சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு சைனர்கள் இருந்தனர். தமிழ் சைன மரபுகளின் தோற்றம் மிகவும் பழமையானதாக இருக்கக்கூடும். இராமன் இலங்கைக்குச் சென்றபோது தென்னிந்தியாவில் வாழ்ந்த சைனத் துறவிகளுக்கு மரியாதை செலுத்தியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது. தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தை (பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு) படைத்த ஆசிரியர் ஒரு சைனர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் பல தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சைனத் துறவிகள் மற்றும் அவர்களின் பக்தர்களோடு தொடர்புடையதாக கருதப்படுகின்றன.

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சைனராக இருக்கூடும் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். திருக்குறளில் சைவ உணவை ஆதரித்து ஒரு அதிகாரமே உள்ளது (அதிகாரம் 26), மேலும் ஒரு விலங்கைக் கொன்று உண்ணாமல் இருப்பது ஆயிரம் வேள்விகளைச் செய்வதைவிடச் சிறந்தது (குறள் 259) என்று கூறுகிறது.

தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பான சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சைனத் துறவியான இளங்கோ அடிகள் ஆவார். இது அக்காலத்திய வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அப்போதைய சமயங்களான சைனம், பௌத்தம், சைவ சமயம் ஆகியவற்றைப் பற்றி இது விவரிக்கிறது. இந்த இலக்கியத்தின் முதன்மைப் பாத்திரங்களும் தமிழர்களால் மதிக்கப்படும் பாத்திரங்களான கண்ணகி மற்றும் கோவலன் ஆகியோர் சைனர் ஆவர்.

சார்ச்சு எல். ஆர்ட்டின் கூற்றின்படி தமிழர் வரலாற்றில் கூறப்படும் தமிழ்ச் சங்கமானது "இலக்கிய சபைகளான: மதுரை சைன சங்கமே என்கிறார்:

There was a permanent Jaina assembly called a Sangha established about 604 CE in Maturai. It seems likely that this assembly was the model upon which tradition fabricated the cangkam legend."

எட்டாம் நூற்றாண்டில் சைன சமயம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது, சைன சமயத்தைச் சேர்ந்த பல தமிழ் மன்னர்கள் இந்து சமயத்துக்கு குறிப்பாக சைவ சமயத்துக்கு மாறினர். என்றாலும் அப்போதும், சாளுக்கியர், பல்லவர், பாண்டியர் போன்ற மரபினர் பல காலம் சைன சமயத்திலேயே நீடித்தனர்.

பௌத்தம்

தொகு
 
புத்தர் பாதம் கல் பொறிப்பு பொ.ஊ. முதலாம் நூற்றாண்டு

புத்தர் பாதங்களைக் கல்லில் பொறித்து அதை பௌத்தர்கள் வணங்கினர். பௌத்த பக்தர்கள் அதை வலம்வந்து, தலையைப் பதித்து வணங்கினர்.[15] சிலப்பதிகாரம் பௌத்தத் துறவிகளின் சமயப் பணிகளைப் பற்றியும், அவர்களின் புனிதம், நல்லொழுக்கம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரக் கதையின் தொடற்சியான மணிமேகலையானது கோவலன் மாதவி ஆகியோரின் மகளும் பௌத்தத்தைத் தழுவியவரான மணிமேகலையின் கதையைக் கூறுகிறது.

பௌத்த விகாரங்களில் அல்லது மடாலயங்களில், துறவியர் சொற்பொழிவாற்றினர், அவர்கள் பார்வையாளர்களின் பார்வையில் படாமல் மறைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தனர். சாதி வேறுபாடுகளை பௌத்தர்கள் கடைபிடிக்கவில்லை, அனைவரையும் ஏற்றத்தாழ்வில்லாமல் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு அழைத்தனர். சுயக் கட்டுப்பாடு, ஞானம், தொண்டு ஆகியவற்றையுடைய ஏராளமான பௌத்தத் துறவிகள் பழந்தமிழ் நாட்டில் இருந்தனர்.[1]

கிறித்தவம்

தொகு
 
சேர மன்னனின் ஆதரவோடு புனித தோமாவால் கட்டப்பட்தாக கருதப்படும் தமிழகத்தின் முதல் தேவாலயமாக கருதப்படும் திருவிதாங்கோடு அரப்பள்ளி.

பொ.ஊ. 52 இல் மலபார் கடற்கரையில் உள்ள முசிறியில் இறங்கிய புனித தாமசால் இந்தியாவில் கிறிஸ்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பண்டைய கிறித்தவர்கள் தற்காலத்தில் புனித தாமசு கிறித்தவர்கள் அல்லது சிரியன் கிரித்துவர் அல்லது நசுரானி என்று அறியப்படுகின்றனர். அவர்கள் இப்போது சிரோ-மலபார் கத்தோலிக்கர், சிரோ-மலங்கர கத்தோலிக்கர், மலங்கார மரபுவழி, யாக்கோபியர், மலங்கார மார்தோமா போன்ற பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். சிரியன் கிறித்தவர்கள் சாதி மற்றும் மக்கள் பிரிவுகளில் இந்துக்களின் அதே விதிகளைப் பின்பற்றி வந்தனர், சில நேரங்களில் அவர்கள் மக்களை பொதுவானவர்களாக கருதினர். அவர்கள் அகமண முறையைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள், மற்ற கிறித்தவ பிரிவினருடன் புறமணத்தில் கூட ஈடுபடுவதில்லை. புனித தாமசு கிறித்தவர் இடையில் சாதி அடுக்கு முறை பாரம்பரியமாக நிலை பெற்றுள்ளது.

யூதம்

தொகு

பொ.ஊ.மு. 562 இல் சேரநாட்டின் (கேரளம்) கொச்சி நகரத்திற்கு, யூதேயாவிலிருந்து வணிகர்கள் வந்தனர், பொ.ஊ. 70 இல் இரண்டாம் கோவிலின் அழிவுக்குப் பிறகு இசுரேலில் இருந்து யூதரகள் மேலும் வந்து சேர்ந்தனர். இந்தத் தனித்துவமான யூத சமுதாயமானது அஞ்சுவாம் என்று அழைக்கப்பட்டது. 1492 இல் சுபெயினில் இருந்து வெளியேற்றப்பட்ட செபராது யூத மரபினரின் பரதேசி யூத தொழுகைக் கூடமானது இன்னமும் செயல்பாட்டில் உள்ள செபக்கூடம் ஆகும்.

சமய மெய்யியல்

தொகு

மதச்சார்பின்மை

தொகு

சங்க இலக்கியத்தின் மதச்சார்பற்ற தன்மை பெரும்பாலும் தமிழ் மக்களிடையே உள்ள சகிப்புத்தன்மையைக் காட்டுவதாக உள்ளது. ச. வையாபுரிப்பிள்ளை தன் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வரலாற்றில் : பொ.ஊ. 1000 பக்கத்தின் துவக்கத்தில் :

தமிழ் நீதி நூல்கள், குறிப்பாக திருக்குறள், அதன் உலகப் பொதுத் தன்மை காரணமாக தமிழர் பண்பாட்டின் நிலையான தத்துவமாகக் கருதப்படுகிறது.

ஊழ் மற்றும் வினை

தொகு

ஊழ் என்பதன் பொருள் 'விதி' என்பதாகும் வினை என்பதன் பொருள் செயல் என்பதாகும். அக்காலத் தமிழர் மத்தியில் விதியை மீறி மனிதனால் என்ன செய்ய முடியும் என்பது போன்ற ஒரு நம்பிக்கையும் நிலவியது.

கடவுள் மற்றும் இயவுள்

தொகு

சங்க காலத் தமிழர் கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kanakasabhai 1904, ப. 233.
  2. Krishnamurti (2003), ப. 6.
  3. 3.0 3.1 Lockard 2007, ப. 50.
  4. 4.0 4.1 Lockard 2007, ப. 52.
  5. Lockard: "The encounters that resulted from Aryan migration brought together several very different peoples and cultures, reconfiguring Indian society. Over many centuries a fusion of Aryan and Tamil people occurred, a complex process that historians have labeled the Indo-Aryan synthesis."[3] Lockard: "Hinduism can be seen historically as a synthesis of Aryan beliefs with Harappan and other Tamil traditions that developed over many centuries."[4]
  6. Hiltebeitel 2007, ப. 12.
  7. Tiwari 2002, ப. v.
  8. Zimmer 1951, ப. 218-219.
  9. Larson 1995, ப. 81.
  10. Subrahmanian 1972, ப. 381.
  11. Kanakasabhai 1904, ப. 231.
  12. Subrahmanian 1972, ப. 382.
  13. Gopalakrishnan 2005, ப. 19.
  14. Balambal 1998, ப. 6.
  15. Kanakasabhai 1904, ப. 232.