பூமகள் ஊர்வலம்
பூமகள் ஊர்வலம் (Poomagal Oorvalam) 1999 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான குடும்பம், காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த தமிழ்த் திரைப்படம். பிரசாந்த், ரம்பா, லிவிங்ஸ்டன், மணிவண்ணன், ராதிகா, விவேக், ராசன் பி. தேவ், ராதாரவி, பொன்வண்ணன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். படத்தின் இசையமைப்பாளர் சிவா.[1] இது குடும்பப்பாங்கான வெற்றிப்படமாகும்.
பூமகள் ஊர்வலம் | |
---|---|
இயக்கம் | ராசு மதுரவன் |
தயாரிப்பு | ஆர்.பி.செளத்ரி |
கதை | ராசு மதுரவன் |
இசை | ஷிவா (ஹரிஹரன்) |
நடிப்பு | பிரசாந்த் ரம்பா லிவிங்ஸ்டன் விவேக் மணிவண்ணன் ராதிகா ராசன் பி. தேவ் ராதாரவி நிழல்கள் ரவி பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | டி. சங்கர் எம்.பிரசாத் |
படத்தொகுப்பு | வி.ஜெய்சங்கர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | 30 ஏப்ரல் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுசிதம்பரமும் (மணிவண்ணன்) அவரது மனைவியும் (ராதிகா) அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து சரவணனைத் (பிரசாந்த்) தங்கள் மகனாக வளர்க்கிறார்கள். சரவணனுக்குத் திருமணம் செய்யத் தரகர் பொன்னுச்சாமி (பாண்டு) மூலம் பெண் தேடுகிறார்கள். மற்றொரு சிதம்பரமும் (ராதாரவி) தன் மகனான ஆவுடையப்பன் என்ற ஆம்ஸ்ட்ராங்கிற்கு (லிவிங்ஸ்டன்) அதே தரகரிடம் பெண் தேட சொல்கிறார். செங்கோடனின் (ராசன் பி.தேவ்) பேத்தியான கவிதாவை (ரம்பா) ஆவுடையப்பனுக்குப் பெண் கேட்டுச் செல்லும் தரகர் தவறுதலாக சரவணன் குடும்பத்தினரின் நிழற்படத்தைக் கொடுத்து விடுகிறார்.
சரவணன் மற்றும் ஆவுடையப்பன் இருவரின் தந்தை பெயரும் சிதம்பரம் என்பதால் ஏற்படும் குழப்பத்தில் கவிதாவைப் பெண் பார்க்க இரண்டு குடும்பமும் ஒரே நாளில் வருகிறார்கள். செங்கோடன் குடும்பத்தினர் சரவணன்-கவிதா திருமணம் குறித்துப் பேசுவதை ஆவுடையப்பன் குடும்பத்தினர் ஆவுடையப்பன்-கவிதா திருமணம் குறித்துப் பேசுவதாகத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். நிச்சயதார்த்தத் தேதி குறிக்கப்படுகிறது. நிழற்படம் மாறியதால் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்த தரகர் தலைமறைவாகிறார்.
கவிதாவும் சரவணனும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குகின்றனர். ஆவுடையப்பனும் தன் திருமணம் குறித்த பல கனவுகளோடு இருக்கிறான். நிச்சயதார்த்த நாளன்று கவிதாவை சரவணனுக்குத் திருமணம் செய்வதாகப் படிப்பதைக் கேட்கும் ஆவுடையப்பனின் தந்தை தன் மகனுக்குத்தான் கவிதாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சண்டையிடுகிறார். அனைவருக்கும் தரகர் ஏற்படுத்திய குழப்பம் புரிகிறது.
சரவணனின் தாய்-தந்தை சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால் கவிதாவை சரவணனுக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் செங்கோடன். அப்போது சரவணன் மனநல மருத்துவமனையில் மனநோயாளியான தன் தாயைத் (அஞ்சு) தன்னைப் பெற்ற தந்தை விட்டுச்சென்ற கடந்த கால நிகழ்வைக் கூறக் கேட்கும் செங்கோடனுக்கு, தன் மகன் பூபதிக்கும் (நிழல்கள் ரவி) லட்சுமிக்கும் (அஞ்சு) பிறந்தவன்தான் சரவணன் என்றும், அவன் தன் சொந்தப்பேரன் என்றும் உண்மை தெரிந்து தன் சாதி மனப்பான்மை சார்ந்த குறுகிய எண்ணத்தை விடுத்து சரவணனுக்குக் கவிதாவைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்கிறார். ஆவுடையப்பன் குடும்பத்தினரும் இம்முடிவுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கின்றனர்.
நடிகர்கள்
தொகு- பிரசாந்த் - சரவணன்
- ரம்பா - கவிதா
- லிவிங்ஸ்டன் - ஆவுடையப்பன் (ஆம்ஸ்ட்ராங்)
- ராசன் பி.தேவ் - செங்கோடன்
- விவேக் - சக்தி
- மணிவண்ணன் - சிதம்பரம் (சரவணனின் வளர்ப்புத் தந்தை)
- ராதிகா - சரவணனின் வளர்ப்புத் தாய்
- ராதாரவி - சிதம்பரம் (ஆவுடையப்பன் தந்தை)
- சத்யப்பிரியா - மீனாட்சி
- நிழல்கள் ரவி - பூபதி (சரவணனின் தந்தை)
- அஞ்சு - லட்சுமி (சரவணனின் தாய்)
- பொன்வண்ணன் - கவிதாவின் தந்தை
- வையாபுரி - முனியாண்டி
- அல்வா வாசு - முருகேசன்
- பாண்டு - தரகர் பொன்னுச்சாமி
- மாஸ்டர் மகேந்திரன் - சிறு வயது சரவணன்
தயாரிப்பு
தொகுதூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான "பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்" என்ற பாடலில் இடம்பெற்ற பூமகள் ஊர்வலம் என்ற வார்த்தையை இப்படத்தின் தலைப்பாக அமைத்தனர்[2].
ராசு மதுரவன் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இதை மதுரவன் என்ற பெயரில் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பை முப்பது நாட்களுக்குள் முடித்தார்[3].
இப்படத்தின் இசையமைப்பாளர் சிவா[4]. இசையமைத்த முதல் படம் லவ் டுடே. இவர் மேலும் காதல் சுகமானது, அற்புதம், "ஒருவர் மீது இருவர் சாய்ந்து"[5][6] போன்ற தமிழ்ப் படங்களுக்கும், சில தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' திரைப்படத்தில் "ஹரிஹரன்" என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
வெளியீடு
தொகுஇப்படம் காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்து பெரும் வெற்றி பெற்றது.
சினிமா விகடன்: வில்லாதி வில்லன்கள் என்ற கட்டுரையில் இத்திரைப்படத்தில் நடித்த ராசன் பி.தேவ் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டியுள்ளது.
இசை
தொகுஇப்படத்தின் இசையமைப்பாளர் சிவா (ஹரிஹரன்). இப்படத்தின் பாடல்கள் 1999 இல் வெளியானது. பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வைரமுத்து.
வ.எண் | பாடல்கள் | பாடகர்கள் | கால நீளம் |
---|---|---|---|
1 | மலரே ஒரு வார்த்தை | ஹரிஹரன் , சுஜாதா | 05:02 |
2 | வாடா நண்பனே | உன்னி கிருஷ்ணன் | 04:58 |
3 | நான் தாய் என்று | சித்ரா | 05:33 |
4 | அந்த வானுக்கு | உன்னி கிருஷ்ணன் | 04:59 |
5 | சின்ன வெண்ணிலவே | ஹரிஹரன், ஹரிணி | 05:00 |
6 | கண்ணைப் பறிக்கிற | உன்னி கிருஷ்ணன் , அருண்மொழி, சித்ரா | 05:05 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 31 சனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2009.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Minnoviyam Star Tracks". chandrag.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "Minnoviyam Star Tracks". chandrag.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "இசையமைப்பாளர் ஷிவா". Archived from the original on 2021-01-23. பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
- ↑ [=https://cinema.dinamalar.com/tamil-news/8821/cinema/Kollywood/Lovetoday-siva-change-as-hariharan.htm "=ஹரிஹரனாக மாறிய இசையமைப்பாளர் சிவா"]. =https://cinema.dinamalar.com/tamil-news/8821/cinema/Kollywood/Lovetoday-siva-change-as-hariharan.htm.
- ↑ [=https://www.youtube.com/watch?v=C2EwFrzruZY "='ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்தின் பாடல் வெளியீட்டு விழா"].
{{cite web}}
: Check|url=
value (help)