மணிரத்னம்
மணிரத்னம் (Manirathnam, பிறப்பு:2 சூன் 1956) இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது[1] வழங்கி கௌரவித்தது.
மணி ரத்னம் | |
---|---|
பிறப்பு | சூன் 2, 1956 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாளர் |
வலைத்தளம் | |
http://www.madrastalkies.com |
மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர்
தொகு- தமிழ் திரையுலகில் 1980களில் பெரும் இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணியாகும்.
- இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
- மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
- ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
- மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ்[2] என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இளமை
தொகுமணிரத்னம், 2 சூன் 1956 இல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும் தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக[3] இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது. திரைப்படம் பார்ப்பது, அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார்.
பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.
மணவாழ்க்கை
தொகுதிரைப்பட நடிகை சுஹாசினியை 1988 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.
இயக்கிய திரைப்படங்கள்
தொகுஇவரது வெற்றித் திரைப்படங்களில் சில:
- 1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
- 1984 - உணரு (மலையாளம்)
- 1985 - இதய கோவில்
- 1985 - பகல் நிலவு
- 1986 - மௌன ராகம்
- 1987 - நாயகன்
- 1988 - அக்னி நட்சத்திரம்
- 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)- தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
- 1990 - அஞ்சலி
- 1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாகக் கருதப்பட்டது).
- 1992 - ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது).
- 1993 - திருடா திருடா
- 1995 - பம்பாய்
- 1997 - இருவர்
- 1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
- 2000 - அலைபாயுதே
- 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
- 2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
- 2010 - ராவணன் திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.
- 2013- கடல்
- 2015 - ஓ காதல் கண்மணி
- 2017 - காற்று வெளியிடை
- 2018 - செக்கச்சிவந்த வானம்
- 2022- “பொன்னியின் செல்வன் 1”
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindu : Padma Vibhushan for Rangarajan, Soli Sorabjee", www.thehindu.com, பார்க்கப்பட்ட நாள் 2018-06-24
- ↑ "About Us| Maniratnam | Suhasini Maniratnam", Madras Talkies | Maniratnam | Suhasini Maniratnam, பார்க்கப்பட்ட நாள் 2018-06-24
- ↑ "Technical finesse, superb craft make Mani Ratnam the hottest director on the scene", India Today (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-10
வெளி இணைப்புகள்
தொகு- மணிரத்னம் - சர்வதேச திரைப்பட தரவுதளம் (ஆங்கில மொழியில்)
- அனிதா நாயரின் நேர்க்காணல் பரணிடப்பட்டது 2005-02-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- மணிரத்னம் விசிறிகள் குழுமம் பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)