வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2007
- நவம்பர் 30 - துருக்கியப் பயணிகள் விமானம் ஒன்று துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 29 - மலேசியாவில் சிறுபான்மை இந்தியர்களுக்குச் சமத்துவ உரிமைகள் தேவை என்று கேட்டு அரசாங்கத்துக்கு எதிராக நவம்பர் 25 அன்று பெரிய அளவில் நடந்த பேரணிக்கு ஏற்பாடு செய்து உதவிய இந்து உரிமை செயல் படை என்ற அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வி. கணபதி ராவ் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். (தமிழ்முரசு)
- நவம்பர் 29 - கரிபியன் தீவுகளில் ஒன்றான வின்ட்வார்ட் தீவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது. (ஏபி)
- நவம்பர் 28 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அஷ்ஃபக் பெர்வேஸ் கியானி புதிய இராணுவத் தலைவரானார். (பிபிசி)
- நவம்பர் 27 - அரபு-இஸ்ரேல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு புதிய அமைதிப் பேச்சுக்கள் ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து, அனாபோலிஸ் என்ற இடத்தில் ஆரம்பமாயிற்று. (நியூயோர்க்டைம்ஸ்)
- நவம்பர் 26 - இந்தோனீசியாவின் சுமாத்திரா மற்றும் சும்பாவா கரைகளில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3 பேர் கொல்லப்பட்டு 45 பேர் படுகாயமடைந்தனர். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- நவம்பர் 25 - கம்போடியாவில் நடைபெற்ற பாரம்பரிய கடல்நாகப் படகுப் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் குழுவின் படகு "டோனி சாப்" ஆற்றில் கவிழ்ந்ததில் காணாமற்போன 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சீஎன்என்)
- நவம்பர் 24 - ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 1996 முதல் ஆட்சியில் இருந்த லிபரல் கூட்டணியை கெவின் றட் தலைமையிலான தொழிற் கட்சி தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. (தி ஆஸ்திரேலியன்)
- நவம்பர் 23 - அன்டார்ட்டிக் பெருங்கடல் பகுதியில் 150 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற "எக்ஸ்புளோரர்" என்ற கனேடியக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் தெற்கு செட்லாண்ட் தீவு பகுதியில் பனிப்பாறையில் மோதியதில் கப்பல் மூழ்கியது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். (தமிழ்முரசு)
- நவம்பர் 22 - பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- நவம்பர் 22 - தாகெஸ்தான் மாநில ரஷ்ய அரசியல்தலைவர் ஃபாரிட் பபாயெவ் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். (பிபிசி)
- நவம்பர் 21 - பப்புவா நியூ கினியின் ஓரோ மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 150 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 18 - உக்ரேனில் சசியாட்கோ என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர். பலர் சுரங்கத்தில் அகப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 16 - பாகிஸ்தானின் தற்காலிக பிரதம மந்திரியாக முகமது மியான் சூம்ரோ என்பவரை அதிபர் பெர்வேஸ் முபாரக் நியமித்தார். (சீனா டெய்லி)
- நவம்பர் 15 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் 2000 பேருக்கு மேல் இறந்தனர். (பிபிசி)
- நவம்பர் 14 - சிலியின் கலாமா என்ற இடத்தில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- நவம்பர் 13 - பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- நவம்பர் 12 - கர்நாடகா மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைத்தது. (பிபிசி)
- நவம்பர் 12 - ரஷ்யாவின் தாகெஸ்தான் மாநிலத் தலைநகர் மக்காச்கல என்ற இடத்தில் படையினர் எட்டு தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். (பிபிசி)
- நவம்பர் 11 - மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் போர்க்காலக் குற்றங்களையும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கெமர்ரூஜ் தலைவர்களான முன்னாள் வெளியுறவு அமைச்சர் இயங் சாரி, அவரது மனைவி இயங் திரித் இருவரும் கம்போடியாத் தலைநகர் நோம்பென்னில் கைது செய்யப்பட்டனர். (தமிழ்முரசு)
- நவம்பர் 10 - பெட்ரா பிராங்கா தீவு (அல்லது "வெள்ளை பாறைத் தீவு") உரிமை தொடர்பாக சிங்கப்பூரும் மலேசியாவும் அனைத்துலக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. (தமிழ் முரசு)
- நவம்பர் 10 - மலேசியாவின் தலைநகரில் அரசின் தேர்தல் சட்டமுறைகளுக்கெதிராக இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 40,000 பேர் கலந்து கோண்டனர். (சிஎன்என்)
- நவம்பர் 9 - எதியோப்பியப் படைகளுக்கும் சோமாலியாவின் தீவிரவாதிகளுக்கும் இடையில் மொகடிஷுவில் இடம்பெற்ற சமரில் 40 பேர் கொல்லப்பட்டனர். (ரொய்ட்டர்ஸ்)
- நவம்பர் 9 - பாகிஸ்தான் அவசரகாலச் சட்டம், 2007: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு அதே நாளில் விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் சுமார் 5000 பேர் கைது செய்யப்பட்டனர். (பிபிசி), (சிஎன்என்)
- நவம்பர் 8 - துபாயில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- நவம்பர் 7 - பாகிஸ்தானின் மதியான் நகரை தலிபான் படைகள் கைப்பற்றி தமது கொடிகளைப் பறக்கவிட்டனர்.
- நவம்பர் 7 - ஜோர்ஜியாவின் அதிபர் மிக்கைல் சாக்கஷ்விலி நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார். திபிலீசியில் அதிபரைப் பதவி விலகக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். காவற்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி ஆர்ப்பாட்டக்காரரைத் துரத்தினர். (அல்ஜசீரா), (சிஎன்என்)
- நவம்பர் 7 - பின்லாந்து, ஹெல்சிங்கி நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- நவம்பர் 7 - இந்தியாவில் குவாலியர் நகரில் பரவிய தீயினால் 400 சிறு கடைகள் எரிந்து நாசமாயின.
- நவம்பர் 7 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான தனது 15-நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு புளோரிடாவில் தரையிறங்கியது. (ஸ்பேஸ்ஃப்ளைற்.கொம்)
- நவம்பர் 7 - பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 55 Cancri என்ற விண்மீனின் சுற்றுவட்டத்தில் புதிய கோள் ஒன்றை அமெரிக்க வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)
- நவம்பர் 6 - சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் வத்திக்கன் சென்றார். சவுதி மன்னரொருவர் பாப்பரசரைச் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும். (பிபிசி)
- நவம்பர் 6 - வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டித்தாக்குதலில் குறைந்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 5 - ரஷ்யாவின் தூலா என்ற இடத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 23 பேர் இறந்தனர். [(பிபிசி)
- நவம்பர் 5 - பிஜியில் நடைப்பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கெதிராக சதிப்புரட்சி செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு நியூசிலாந்துப் பிரஜை உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 5 - பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. (பிபிசி)
- நவம்பர் 5 - ஐக்கிய அமெரிக்காவின் தொழில்நுட்பக் குழுவொன்று வட கொரியாவின் அணு மையங்களைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கின. (பிபிசி)
- நவம்பர் 3 - இந்தோனேசியாவின் சுகிவாராஸ் நகருக்கு அருகில் உள்ள கேலூட் எரிமலை வெடித்தது. (ரொயிட்டர்ஸ்)
- நவம்பர் 3 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவரசரக்காலச் சட்டத்தைப் பிறப்பித்தார். (ரொயிட்டர்ஸ்)
- நவம்பர் 2 - மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர். (ரொயிட்டர்ஸ்)
- நவம்பர் 2 - ஹையிட்டியில் நிலைகொண்டுள்ள ஐநா அமைதிகாக்கும் படையின் 950 இலங்கைப் படைகளில் 108 பேர் அங்கு பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கைக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பப்படவிருப்பதாக ஐநா அறிவித்தது. (பிபிசி)
- நவம்பர் 2 - 1892 இல் "எட்வின் ஹோல்ம்ஸ்" என்பவரால் கண்டறியப்பட்ட ஹோல்ம்ஸ் வால்வெள்ளி இலங்கையின் வடகிழக்குத் திசையில் காணக்கூடியதாக இருப்பதாக இலங்கை வான்வெளி மையம் அறிவித்துள்ளது. (டெய்லி மிரர்)
- நவம்பர் 2 - ஜோர்ஜியாவில் அதிபர் மிக்கைல் சாக்காஷ்விலியின் ஆட்சியை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் திபிலீசியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். (பிபிசி)
- நவம்பர் 1 - அட்லாண்டிக் கடலில் உருவான சூறாவளி நொயெல் இதூவரையில் 108 பேரைப் பலிகொண்டு பெர்மூடாவை நோக்கி நகர்ந்தது. (ரொய்ட்டர்ஸ்)
- நவம்பர் 1 - பாகிஸ்தானின் சராகோடா நகரில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் பாகிஸ்தான் வான்படையினர் பயணம்செய்த பேருந்தில் மோதி வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.(ரொயிட்டர்ஸ்)