ஏவிஎம்

சென்னையிலுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு

ஏவிஎம் (ஆங்கிலம்: AVM) என்பது இந்தியாவின் பழைய மற்றும் பெரிய திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையம் ஆகும். இந்த நிலையம் தற்போது எம். சரவணனாலும் அவரது மகனான எம். எசு. குகனாலும் நடத்தப்படுகின்றது. இந்த நிறுவனம் சென்னை வடபழநியில் அமைந்துள்ளது.[1] இந்நிறுவனம் தமிழ், தெலுங்கு, திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

ஏ.வி.எம்.
AVM
வகைவரையறுக்கப்பட்டது
நிலைஇயங்குநிலை
நிறுவுகை1945
நிறுவனர்(கள்)ஏ. வி. மெய்யப்பன்
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ் சினிமா
தெலுங்கு சினிமா
பொலிவூட்
முக்கிய நபர்கள்எம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியன்
எம். எசு. குகன்
பி. குருநாத் மெய்யப்பன்
தொழில்துறைதிரைப்படங்கள்
மொத்தச் சொத்துகள்~ 200 மில்லியன் அமெரிக்க டொலர்
இணையத்தளம்http://www.avm.in/

தொடக்க வரலாறு தொகு

தென்னிந்தியாவின் திரைப்படத் துறைச் சிற்பிகளில், ஏ. வி. மெய்யப்பன் அவர்களை ஒரு தொலைநோக்குடன் கூடிய தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர், சினிமா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் எனலாம். இந்தியாவில் திரைப்படம் 1931ஆம் ஆண்டு அறிமுகமான போதே திரையுலகில் நுழைந்து, ஐம்பதாண்டு காலம் இடைவிடாமல் உழைத்து பல்வேறுபட்ட திரைப்படங்களை பல மொழிகளில் இவர் உருவாக்கினார். தொலைநோக்குப் பார்வையுடைய இந்த மனிதர், அவருடைய தொழிலில் நிறைய சோதனைகளைச் சந்தித்தாலும், ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, அயராது உழைத்து சிகரத்தைத் தொட்டவர். திறமையைக் கண்டறிந்து மெச்சும் வல்லமை கொண்ட இவர், திரைப்பட வாய்ப்புகளையும் வெற்றிகளையும் நடிகர்களுக்கும் கலை வல்லுநர்களுக்கும் வழங்கினார்

தமிழ்நாட்டில், காரைக்குடியில் ஏ. வி. & சன்ஸ் என்ற பெயரில் சிறு அங்காடியை நடத்தி வந்த அவிச்சி செட்டியாருக்கு 28 சூலை 1907 அன்று மகனாகப் பிறந்த அவிச்சி மெய்யப்பன் நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அந்த அங்காடியில் இசைத்தட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. பருவ வயதிலேயே தன் தந்தையின் வணிகத்தில் இணைந்த மெய்யப்பன், இசைத்தட்டுக்களைச் சந்தைப்படுத்துவதைவிட அவற்றைத் தயாரிப்பது இலாபமானது என்று கருதித் தயாரிக்க முடிவெடுத்தார். அவருடைய நண்பர்களான கே. எசு. நாராயண அய்யங்கார், சுப்பையா செட்டியார் மற்றும் சிலருடன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி வளர்த்தார். அவருக்குக் கே. பி. வரதாச்சாரி (சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகி) மற்றும் தூத்துக்குடி ராகவாச்சாரி கோவிந்தாச்சாரி ஆகியோர் மூலம் கிடைத்த சிறப்பான உதவியால் பல இசைத்தட்டுக்களைப் படைத்தார்.

முதல் முயற்சி தொகு

பேசும் பட யுகம் (1931) மலர்ந்த போது மெய்யப்பன் அதன்பால் ஈடுபாடு கொண்டு சரஸ்வதி ஒலி தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் தன் கன்னி முயற்சியை அல்லி அர்ஜுனா என்ற இந்துப் புராணப்படம் மூலம் தொடங்கினார். அல்லி அர்ஜுனா கல்கத்தாவில் எடுக்கப்பட்டு வெளியானபோது பெரும் தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் ரத்னாவளி என்று பெயரிடப்பட்டது. இந்த நேரத்தில், ஏ. டி. கிருஷ்ணசாமி என்ற பட்டதாரிக் கலைப்பிரியர் (நடிகர்) ஒரு உதவி இயக்குநராக இந்தக் குழுவில் இணைந்தார். மெய்யப்பனுடன் பத்து ஆண்டுகள் இணைந்த இவர் ஏவிஎம்மின் தொடக்க காலப் படங்களில் வசனம் மற்றும் இயக்குநர் பணிகளை மேற்கொண்டார்.

தோல்விகள் மெய்யப்பனைச் சிறிது காலம் தளரச் செய்தன. பெங்களூரைச் சேர்ந்த திரை அரங்கின் உரிமையாளர் ஜெயந்திலால் என்பவருடன் இணைந்து பிரகதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதிர்ஷ்ட தேவதை இவர் வழியில் வந்தாள். நந்தகுமார் என்ற மராத்திப் படத்தைத் தமிழில் பிரகதி தயாரிப்பில் எடுத்தார். இந்தப் படத்தின் மூலம் டி. ஆர். மகாலிங்கம் அறிமுகமானது ஒரு சிறப்பு.

இந்தப் படத்தின் மூலம் முதலில் பின்னணிப் பாடல் பாடுவது முயற்சிக்கப்பட்டு, லலிதா வெங்கட்ராமன் என்ற பெண் கதாநாயகி தேவகிக்காகப் பாடியது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம். சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடில்) இருந்த க்ளப் ஹவுசில் படமாக்கப்பட்டது. இது ஒரு முதல் வெளிப்புறப் படபிடிப்பு. எனவே, ஸ்டுடியோ செட் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த படப்பிடிப்பு சென்னை அடையாரில் அட்மிரால்டி ஹவுசில் நடந்தது.

வெற்றி தொகு

மெய்யப்பன் அவர்கள் 1940ஆம் ஆண்டு தயாரித்த பூகைலாஸ் (1940 படம்) என்ற புராணப்படம் வரலாற்றுச் சாதனை படைத்தது. தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை மும்பையில் பயிற்சி பெற்ற சுந்தர் லால் நட்கர்னி என்ற மங்களூர்க்காரர் இயக்கினார். இப்படம் ஒரு இமாலய வெற்றிப்படம் ஆனது. மெய்யப்பன் அவர்கள் 1941இல் முட்டைக்கண்ணரான டி. ஆர். இராமச்சந்திரன், காளி என். இரத்தினம் மற்றும் சாரங்கபாணி கூட்டணியில் தயாரித்த சபாபதி என்ற நகைச்சுவைப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து வந்த வெற்றிப் படங்கள் என் மனைவி, அரிச்சந்திரா (1943), ஸ்ரீ வள்ளி என்பன ஆகும்.

எங்கோ நடந்த இரண்டாம் உலகப்போர் சென்னையில் மிகுந்த சிரமமாக உணரப்பட்டது; மேலும் சப்பானியரின் அணுகுண்டு மிரட்டல் சென்னையைக் கலக்கியது. மெய்யப்பன் தன்னுடைய நிறுவனத்தைக் காரைக்குடி நகருக்கு வெளியே உள்ள ஒரு நாடகக் கொட்டகைக்கு மாற்றினார். வாடகைக்கு எடுக்கப்பட்ட திறந்தவெளி மைதானம் ஒரு ஸ்டுடியோவாக உருவெடுத்தது.

நாம் இருவர் (1947), அந்த நாள் (1954) என்ற வெற்றிப் படங்களும் ஹம பஞ்சி எக் தால் கே என்ற தேசிய விருது பெற்ற படமும் தயாரிக்கப்பட்டன.

மெய்யப்பன் அவர்கள் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் மறைந்தார். அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மகன்கள் நிர்வாகத்தை ஏற்றனர். ஏவிஎம்மின் சகாப்தம் தொடர்கிறது.

திரைப்படங்கள் சில தொகு

ஆண்டு திரைப்படம் இயக்குநர் மொழி
2011 முதல் இடம் ஆர். குமரன் தமிழ்
2010 இலீடர் சேகர் கம்முலா தெலுங்கு
2009 வேட்டைக்காரன் பாபு சிவன் தமிழ்
அயன் கே. வி. ஆனந்த் தமிழ்
அ ஆ இ ஈ சபாபதி தெட்சணாமூர்த்தி தமிழ்
2007 சிவாஜி எசு. சங்கர் தமிழ்
2005 திருப்பதி பேரரசு தமிழ்
2004 பேரழகன் சசி சங்கர் தமிழ்
2003 பிரியமான தோழி விக்ரமன் தமிழ்
2002 அன்பே அன்பே மணி பாரதி தமிழ்
ஜெமினி சரண் தமிழ்
1997 மின்சார கனவு இராசீவு மேனன் தமிழ்
1994 சேதுபதி ஐ. பி. எசு. பி. வாசு தமிழ்
1993 எஜமான் ஆர். வி. உதயகுமார் தமிழ்
ஆ ஒக்கட்டி அடக்கு இ. வி. வி. சத்யநாராயண தெலுங்கு
1991 மாநகர காவல் எம். தியாகராஜன் தமிழ்
1990 பம்மா மாதா பங்காரு பாத ராஜசேகர் தெலுங்கு
1989 ராஜா சின்ன ரோஜா எசு. பி. முத்துராமன் தமிழ்
1987 சம்சாரம் ஒக்க சதரங்கம் தெலுங்கு
மனிதன் எசு. பி. முத்துராமன் தமிழ்
பேர் சொல்லும் பிள்ளை எசு. பி. முத்துராமன் தமிழ்
1984 நாகு தடிநேணி பிரசாத் தெலுங்கு
முந்தானை முடிச்சு கே. பாக்யராஜ் தமிழ்
1983 தூங்காதே தம்பி தூங்காதே எசு. பி. முத்துராமன் தமிழ்
பாயும் புலி எசு. பி. முத்துராமன் தமிழ்
1982 சகலகலா வல்லவன் எசு. பி. முத்துராமன் தமிழ்
1980 புன்ணமி நாகு ராஜசேகர் தெலுங்கு
1975 பூஜா முருகன் குமரன் தெலுங்கு
1973 ஜெயசே கோ தய்சா முருகன் குமரன் இந்தி
1972 அக்கா தம்முடு தெலுங்கு
தில் கா ராஜா பி. மாதவன் இந்தி
1971 பொம்மா பொருசா கே. பாலச்சந்தர்
1969 மூக நோமு தெலுங்கு
1968 தோ கலியான்
1967 பக்த பிரகலாதா சித்ரப்பு நாராயண ராவ்
1966 லேதா மனசுலு தெலுங்கு
ராமு ஏ. சி. திருலோகச்சந்தர் தமிழ்
1965 சிட்டி செல்லலு தெலுங்கு
நாடி ஆத ஜன்மே தெலுங்கு
1964 பூஜா கே பூல் ஏ. பீம்சிங் இந்தி
1964 சர்வர் சுந்தரம் கிருஷ்ணன் பஞ்சு தமிழ்
1963 பென்சின பிரேமா தெலுங்கு
1962 மெயின் சுப் ரஹூங்கி ஏ. பீம்சிங் இந்தி
மன்முஜி கிருஷ்ணன் பஞ்சு
பவித்ரா பிரேமா தெலுங்கு
1961 சாயா ரிஷிகேஷ் முகர்ஜி இந்தி
பாப பரிஹாரம்
1960 பிந்த்யா
களத்தூர் கண்ணம்மா ஏ. பீம்சிங் தமிழ்
1959 பர்க்கா
1958 பூகைலாஸ் கே. சங்கர் தெலுங்கு
1957 பாபி ஆர். கிருஷ்ணன் ராஜு இந்தி
மிஸ் மேரி எல். வி. பிரசாத் இந்தி
1956 பாய்-பாய் எம். வி. ராமன் இந்தி
சோரி சோரி ஆனந்த் தாகூர் இந்தி
நகுல சவிதி
1955 வடினா எம். வி. ராமன் தெலுங்கு
1954 அந்த நாள் எசு. பாலச்சந்தர் தமிழ்
பெண் எம்.வி.ராமன் தமிழ்
1953 ஜாதகபலம்
லட்கி எம். வி. ராமன் இந்தி
சங்கம் எம். வி. ராமன் தெலுங்கு
1952 பராசக்தி ஆர். கிருஷ்ணன் தமிழ்
1951 பஹார் எம். வி. ராமன் இந்தி
1949 ஜீவிதம் எம். வி. ராமன் தெலுங்கு
வாழ்க்கை எம். வி. ராமன் தமிழ்
1947 நாம் இருவர் ஏ. வி. மெய்யப்பன் தமிழ்
1942 என் மனைவி சுந்த ராவ் நட்கர்ணி தமிழ்
1940 பூகைலாஸ் சுந்த ராவ் நட்கர்ணி தெலுங்கு

[2]

மேற்கோள்கள் தொகு

  1. ["ஏவிஎம் ஸ்தாபகர் பற்றி (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120218230421/http://www.avm.in/about.html.  ஏவிஎம் ஸ்தாபகர் பற்றி (ஆங்கில மொழியில்)]
  2. ["ஏவிஎம் திரைப்படம் (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120113222701/http://www.avm.in/movie.html.  ஏவிஎம் திரைப்படம் (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவிஎம்&oldid=3546655" இருந்து மீள்விக்கப்பட்டது