கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(கே. பி. சுந்தராம்பாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980)[1] தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[2][3][4]

கே. பி. சுந்தராம்பாள்
K.B.Sundarambal
பிறப்பு(1908-10-11)11 அக்டோபர் 1908
கொடுமுடி, கோயமுத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம் (தற்போதைய ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு)
இறப்பு19 செப்டம்பர் 1980(1980-09-19) (அகவை 71)
வாழ்க்கைத்
துணை
கிட்டப்பா (தி. 1927⁠–⁠1933)
விருதுகள்
  • பத்மசிறீ
  • சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சுந்தராம்பாள் சென்னை மாகாணத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் [[ (தற்போதைய ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு) கொடுமுடியில் கிருஷ்ணசாமி–பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்ற சகோதரர் மற்றும் சுப்பம்மாள் என்ற சகோதரி இருந்தனர். சுந்தராம்பாள் இளம்வயதிலேயே தந்தையை இழந்தார் மற்றும் தனது சகோதரர் ஆதரவால், குடும்பத்தை தாயார் நடத்தி வந்தார். இவர் கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.[5] மற்ற ஆதாரங்களின்படி, பாலாம்பாளுக்கு அறிமுகமான கிருஷ்ணசுவாமி ஐயர் என்ற போலீஸ் அதிகாரி சுந்தராம்பாளின் திறமையைக் கண்டறிந்து, நாடகக் கலைஞர்களில் ஒருவரான பி.எஸ்.வேலு நாயருக்கு அறிமுகப்படுத்தினார்.[6]

1927ஆம் ஆண்டு சுந்தராம்பாள் சக நாடக நடிகரான கிட்டப்பாவை திருமணம் புரிந்து கொண்டார். 1933 டிசம்பர் 2 இல் 28 வயதில் கிட்டப்பா காலமானார். அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார் மற்றும் எந்தவொரு ஆண் நடிகருடனும் சோடியாக நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார், அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 1980 இல் காலமானார்.

நாடக வாழ்வு தொகு

 
இள வயதில் சுந்தராம்பாள்

வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். இதை தொடர்ந்து இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் மற்றும் சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார். சுந்தராம்பாள் 1917−ல் கொழும்பு சென்று நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இதை தொடர்ந்து இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகங்கள் அரங்கேறின. 1920−ல் சுந்தராம்பாள் மீண்டும் நாடு திரும்பினார். இவர் வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் பல புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

சுந்தராம்பாள் 1926−ல் மீண்டும் கொழும்பு சென்றார். அக்காலத்தில் கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் சுந்தராம்பாளுடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார். 1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. பல்வேறு இசைத் தட்டுகளில் சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. 1933−ல் அவருடைய கணவர் கிட்டப்பாவின் இறப்புக்கு பின்னர், நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த சுந்தராம்பாள் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். இவைகளில் பெரும்பாலும் இவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

திரைப்படத் துறை தொகு

1935−ல் சுந்தராம்பாள் பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். படத்தில் மொத்தம் இருந்த 41 பாடல்களில் சுந்தராம்பாள் 19 பாடல்களை பாடி இருந்தார். அடுத்ததாக மணிமேகலை திரைப்படத்தில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார். சுந்தராம்பாள் தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார். தொடர்ந்து அவ்வையார் என்ற திரைப்படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. படத்தில் மொத்தம் இருந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் 30 பாடல்களை பாடி இருந்தார். இவற்றில் 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. 1964 பூம்புகார் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார். பின்னர் மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்தார்.

அரசியல் தொகு

காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவை தொடர்பாக பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

விருதுகளும் சிறப்புகளும் தொகு

சில திரைப்படப் பாடல்களின் பட்டியல் தொகு

எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்
2 அரியது அரியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)
3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்
6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்

மேற்கோள்கள் தொகு

  1. தெ. மதுசூதனன் (1 March 2003). "வெண்கலக் குரல் கொடுமுடி கோகிலம்". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2017.
  2. த. ஸ்டாலின் குணசேகரன் (28 அக்டோபர் 2021). "தமிழகத்தின் தியாக தீபங்கள் - 74: கே. பி. சுந்தராம்பாள்". தினமணி இம் மூலத்தில் இருந்து 2022-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220806053546/https://www.dinamani.com/tamilnadu/2021/oct/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---74-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3725328.html. 
  3. "வரலாற்று நூல்". விருபா. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  4. "கே.பி.சுந்தரம்பாள்". eegarai.net. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  5. கே. ஜீவபாரதி. வாழும் வரலாறு. https://books.google.co.in/books?id=-_A4EAAAQBAJ&pg=RA4-PT30&lpg=RA4-PT30&dq=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88&source=bl&ots=L76bTPoEi8&sig=ACfU3U2RJwKHjZWP0EovMAAAQ6sCAmKlHA&hl=en&sa=X&ved=2ahUKEwiW466hwLH5AhWATmwGHYVzA7cQ6AF6BAgCEAM#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88&f=false. 
  6. "Biography". Sony. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  7. "Sundarambal". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  8. from The Hindu பரணிடப்பட்டது 2002-03-12 at the வந்தவழி இயந்திரம், 4 February 2001
  9. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 December 2018. Archived from the original on 12 February 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018.

வெளி இணைப்புகள் தொகு

இவர் பாடிய சில தனிப்பாடல்கள்