நா. முத்துநிலவன்

நாகரெத்தினம் முத்துபாஸ்கரன் எனும் இயற்பெயா் கொண்ட நா. முத்துநிலவன் (Muthu Nilavan; பி. 11 மே 1956) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், முன்னாள் தமிழாசிரியர், கவிஞர், மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ஆவார்.[1][2] கட்டுரை, கவிதை, சிறுகதை, பாடல், நாடகம், ஓவியம், இலக்கிய ஆய்வு, வரலாற்று ஆய்வு, இணையத் தமிழ், மேடைப் பேச்சு எனப் பல்வேறு களங்களில் பங்களித்துள்ளார்.

நா. முத்துநிலவன்
2015-ஆம் ஆண்டுவாக்கில் முத்துநிலவன்
துணைத் தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2008 (?)
பொதுச்
செயலாளர்(கள்)
ச. தமிழ்ச்செல்வன் (?)
சு. வெங்கடேசன் (2011-18)
ஆதவன் தீட்சண்யா (2018-)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முத்துபாஸ்கரன்

11 மே 1956 (1956-05-11) (அகவை 68)
புதுக்கோட்டை, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
துணைவர்மல்லிகா
பிள்ளைகள்
  • வால்கா (மகள்)
  • லட்சியா (மகள்)
  • நெருடா (மகன்)
பெற்றோர்
  • கோவிந்தம்மாள் (தாய்)
  • வே.மு. நாகரெத்தினம் (தந்தை)
முன்னாள் கல்லூரி
வேலைதமிழாசிரியர் (பணி நிறைவு)
கல்விபுலவர்,
முதுகலை தமிழ்,
இளங்கலை கல்வியியல்
இணையத்தளம்https://valarumkavithai.blogspot.com/

தொடக்க வாழ்க்கை

தொகு

பிறப்பு

தொகு

புதுக்கோட்டை நகரில் 11 மே 1956 அன்று கோவிந்தம்மாள் - வே. மு. நாகரெத்தினம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் முத்துநிலவன். இவருக்கு முதலில் இடப்பட்ட பெயர் முத்துபாஸ்கரன். இவருக்கு மூன்று சகோதரர்கள்.

பள்ளிக் கல்வி

தொகு

இவரது குழந்தைப் பருவத்தில் தந்தை நாகரெத்தினம் காவல்துறைப் பணி மாறுதல் காரணமாக ஆண்டுக்குதோறும் ஊா் மாறிச் செல்ல முத்துபாஸ்கரனின் பள்ளிப் படிப்பும் பலப்பல ஊா்களில் தொடர்ந்தது. இதன் விளைவாக சிறுபருவத்திலேயே உலகப் பட்டறிவும் இணையப் பெற்றார். மூன்றாம் வகுப்பு ஆசிரியா்களின் பரிந்துரையில் அதிராம்பட்டினம் நகர நூலகத்தில் குழந்தைகள் இலக்கியங்களைத் தேடிப் படித்தார்.

11-ஆம் வகுப்பில் வரலாற்றுப் பிரிவில் தமிழ்வழியில் படித்தார்.

கல்லூரிக் கல்வி

தொகு

மகனை மருத்துவா் ஆக்க விரும்பிய நாகரெத்தினம், முத்துபாஸ்கரனை புதுக்கோட்டை மேன்மைமிகு மன்னர் கல்லூரி அறிவியல் பிரிவில் (ஆங்கிலவழி) சேர்த்தார். ஆனால் இயற்பியல் பாடத்தில் இரண்டு மதிப்பெண்ணில் தோல்வியடைந்த முத்துபாஸ்கரன்,  11-ஆம் வகுப்புத் தமிழ் மதிப்பெண் கொண்டு தான் விரும்பிய தமிழ்ப் புலவா் படிப்பில், மாதம் 40 உரூபாய் உதவித் தொகை தந்த திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரி இலக்கியப் போட்டிகளில் பலமுறை முதற்பரிசு பெற்றார். இக் காலத்தில் 'நா. முத்துநிலவன்' எனும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார். முத்துப்பேட்டை தா்மலிங்கம் நடத்திய தஞ்சை அமுதம் இதழில் இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். புது தில்லி மாநகரில் சிலகாலம் வாழ்ந்த தமிழறிஞர் சாலை இளந்திரையன் நடத்திய அறிவியக்கம் திங்களிதழில் இவரின் ”ஒரு காதற் கடிதம்” ஓராண்டு தொடராக வந்தது. மறைமலை அடிகள் நூற்றாண்டை ஒட்டிய போட்டிக்காக மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் என்ற படைப்பை இயற்றினார்.[சான்று தேவை]

ஆசிரியப்பணி

தொகு

பத்தாம் வகுப்புக்கான பட்டதாரித் தமிழாசிரியராக 18 திசம்பர் 1980 அன்று பணியில் சேர்ந்தார்.[3]

1985-இல் நடந்த ஆசிரியர்-அரசு ஊழியர் சங்க (JACTEA) போராட்டத்தில் பங்கேற்றுப் புதுக்கோட்டையில் சிறையிருந்தவர்களில் இவரும் ஒருவர்.

2014-இல் மே 17-18 ஆகிய இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள சிறீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பெற்ற இணையதளப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இணையதளப் பயன்பாடுகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் குறித்து பயிற்சியளித்தார்.[4] அதே மாதம் 31-ஆம் நாளில் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[3]

பிற பணிகள்

தொகு

1975-இல் மாநில அளவில் மதுரை மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) தொடங்கியதையடுத்து அதே ஆண்டில் அதன் திருவையாறு கிளையின் முதல் செயலரானார் முத்துநிலவன். பிறகு 1978-இல் புதுக்கோட்டை தமுஎச கிளையைத் தொடங்கி, அதன் முதல் கிளைச் செயலரானார். பின்னர் மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கு உயர்ந்தார்.

தமிழ்நாட்டு அறிவொளி இயக்கத்தின், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றியதைத் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாகக் குறிப்பிடுகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தலைமையில் “கணினித் தமிழ்ச்சங்கம்” தொடங்கி, அதன் வழி இணையத் தமிழ்ப் பயிற்சிவகுப்புகளை நடத்தி வருகிறார்.

11 அக்டோபர் 2015 அன்று புதுக்கோட்டையில் நடந்த “வலைப்பதிவர் திருவிழா”வை க்கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.

தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல் ஆக்கக் குழுவில் 2008, 2018ஆம் ஆண்டுகளில் முறையே 6, 9ஆம்வகுப்பு ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார்.

தமிழாசிரியர் சங்கத்தின் மூலமாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாகவும் இருமுறை பயிற்சிகளை தந்திருக்கிறார். அருள்முருகனின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சிகளை தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளும், பதிவர்களும் ஆசிரியர்களுக்குத் தந்தனர்.[5]

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிர்வாகிகளில் ஒருவராக அவ்விழாவை மூன்றாண்டுகள் நடத்தினார்.

நூல்கள்

தொகு

இவர் படைப்புகளில் கல்வி மற்றும் தமிழ் இலக்கிய-இலக்கண ஆய்வு அடிப்படையாக அமைந்துள்ளது. இவரது நூல்களில் ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” தனித்த வரவேற்பினைப் பெற்று ஐந்தாண்டில். ஐந்து பதிப்புக் கண்டது. . இவரது வாழ்நாள் லட்சியமாக “கவிதையின் கதை” எனும் பெருநூல் அச்சில் வரவுள்ளது.[சான்று தேவை]

‘மனிதகுல வரவாற்றை எழுத இலக்கியச் சான்று தரும் உலகின் ஒரே இலக்கியத் தொகுப்பு, நமது சங்க இலக்கியம் தான். கவிதையில் வடிவம் ஏன் மாறிமாறி வந்தது எனும் எனது ஆய்வுக்கும் அரிய கருவூலம் தமிழரின் பெருஞ்சொத்து. இன்று மட்டுமல்ல இனிவரும் தலைமுறைக்கும் வாழ வழிகாட்டும் பழந்தமிழா் காலப் பெட்டகம். இன்றைய பிள்ளைகள் விரும்பும் வகை இதன் சாரத்தை கொடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார்.

நூலாசிரியராக

தொகு
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1993

& 2014

புதிய மரபுகள் [6] கவிதைத் தொகுப்பு அன்னம் பதிப்பகம்
1995 20ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகள் திறனாய்வு
2003 நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் கட்டுரைத் தொகுப்பு
2008 நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம்
2014 கம்பன் தமிழும் கணினித்தமிழும்
முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே அன்னம் - அகரம் வெளியீட்டகம், தஞ்சாவூர்
2018 நீட் தேர்வு, புதிய கல்வி யாருக்காக
2021 இலக்கணம் இனிது பாரதி புத்தகாலயம், சென்னை
? கவிதையின் கதை தமிழ்க் கவிதை வரலாறு

தொகுப்பாசிரியராக

தொகு
ஆண்டு தொகுப்பு
1991 அறிவொளி மாவட்ட மலர்
2015 உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு
2019 “வீதி” கலை இலக்கியக் கழக 50ஆம் நிகழ்வு மலர்

இதழியல் பணி

தொகு

தினமணி, ஜனசக்தி, கல்கி, தீக்கதிர், கணையாழி, செம்மலா், இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களுக்குப் பங்களித்துள்ளார் முத்துநிலவன்.

இலக்கியப் பயணங்கள்

தொகு

திண்டுக்கல் ஐ. லியோனியின் இலக்கிய, பட்டிமன்றப் பேச்சாளரான முத்துநிலவன், 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்கள், இந்தியாவில் புது தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநகரங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், ஓமான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சாம்பியா, சீசெல்சு போன்ற நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.[2]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தொகு

சன், பொதிகை, விஜய், ஜெயா, கலைஞர், பாலிமர் உள்ளிட்ட பெரும்பாலான தமிழ்த் தொலைக்காட்சிகளும், உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகளும் நடத்தியுள்ள இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.[2]

விருதுகள்

தொகு
ஆண்டு விருது வழங்கியோர் குறிப்பு
1991 சிறந்த அறிவொளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
1993 சிறந்த கவிதைத்தொகுப்பிற்கான விருது தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம், எட்டயபுரம்
2009 (> ?) பாரதிதாசன் விருது கவிஞர்கள் மு. மேத்தா மற்றும் ஆர். பாலச்சந்திரன்
உலகளாவிய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பாரதிதாசன் இணையம்
2014 கல்வியியல்-இளைஞர் நல நூலுக்கான முதல் விருது கவிதை உறவு அமைப்பு முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே நூலுக்காக[7]
2016 ???? திருப்பூர் தமிழ்ச்சங்கம் 24-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில்

கம்பன் தமிழும் கணினித்தமிழும் நூலுக்காக வழங்கப்பட்டது

அமரர் கல்கி நினைவு சிறுகதைப்போட்டி விருது (இரு முறை)

பிற சிறப்புகள்

தொகு

இவரது “புதிய மரபுகள்” தொகுப்பு, 1995 தொடங்கி 15 ஆண்டுகாலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.

1989-இல் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கப் பரப்புரைக்காக இவர் எழுதிய “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” பாடல், மாவட்டத்தின் அன்றைய ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் ஆதரவுடன் பல்வேறு மொழிகளில் வெளியானது.

குடும்பம்

தொகு

இவர் இணையர் மல்லிகா, இந்திய தொடர்பாடல் கழக நிறுவனத்தின் (BSNL) புதுக்கோட்டை கிளையில் தொலைதொடர்பு அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . இவர்களுக்கு வால்கா, லட்சியா என்ற மகள்களும் நெருடா என்ற மகனும் உள்ளனர். லட்சியாவின் திருமணம் (இரா.முத்துக்குமார் என்பவரோடு), புதுக்கோட்டையில் முத்துநிலவனின் 45 ஆண்டுகால நண்பர் செந்தலை ந. கவுதமன் தலைமையில் 1 பிப்ரவரி 2021 அன்று திருக்குறள் நெறிப்படி நடந்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "நா. முத்து நிலவனின் வளரும் கவிதை". விகடன். 2011. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 முத்துநிலவனும் முழுநிலாக்கோட்டையும், முத்துநிலவன் நேர்காணல், தமிழ் நெஞ்சம், மார்ச் 2018, பக்.21-25
  3. 3.0 3.1 புதுக்கோட்டை, நா முத்துநிலவன். "வளரும் கவிதை: பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்…". வளரும் கவிதை. பார்க்கப்பட்ட நாள் 2024-07-07.
  4. "நா. முத்துநிலவனின் பங்களிப்புகள்". malarum.com. Archived from the original on 2014-05-23. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  5. "முத்துநிலவன்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  6. "புதிய மரபுகள்". Archived from the original on 2018-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.
  7. தினமணி, 20.3.2014
  8. புதுக்கோட்டை, நா முத்துநிலவன். "வளரும் கவிதை: இப்படி இருக்கணும் திருமண அழைப்பு!". வளரும் கவிதை. பார்க்கப்பட்ட நாள் 2024-07-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._முத்துநிலவன்&oldid=4050476" இலிருந்து மீள்விக்கப்பட்டது