புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு
புறநானூறு வள்ளல்கள் பலரின் கொடைத் தன்மை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. எப்போது, யாருக்கு, என்ன நோக்கத்தில் வழங்கினர் என்பது இங்குத் தொகுத்துத் தரப்படுகிறது. இங்கு அனைத்து வள்ளல்களின் பெயர்களும் அகர வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
புரவலர் கொடை
தொகுஅ
தொகு- அகுதை தன்னைப் பாடியவர்களுக்கெல்லாம் யானைகளைப் பரிசாக வழங்கினான். [1]
- அதியமான் நெடுமான் அஞ்சி - உண்டால் நீண்ட நாள் வாழக்கூடிய நெல்லிக்கனியை, அதன் தன்மையைத் தன் மனத்தில் அடக்கிக் கொண்டு, ஔவை நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஔவையாருக்குக் கொடுத்தவன். [2] இரவில் வந்த பொருநனுக்கு உடை, உணவு, தேறல் வழங்கியதோடு ஊர்ப்பொதியில் மடத்தில் தங்கியிருந்த அவன் சுற்றத்தாரை அழைத்து போரோடு நெற்குவிலைக் கொண்டியாக வழங்கினான் என்று ஔவையார் குறிப்பிடுகிறார் [3]
- அருவந்தை - அம்பர் கிழான் - இவன் கல்லாடனார் பசியைப் போக்கி, புத்தாடை வழங்கினான் [4]
- அவியன் - புலவர் மாறோக்கத்து நப்பசலையார் கிணைப்பறையை முழக்கினார். அவியன் மனைவியுடன் வந்து மூங்கிலில் உரியும் தோல் போன்ற ஆடை வழங்கினான் [5]
ஆ
தொகு- ஆதனுங்கன் வேங்கட நாட்டு அரசன். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் இவனைக் முதியன் ஆதனுங்கன் எனக் குறிப்பிட்டு அவன் தன் சுற்றத்தார் வறுமை நீங்க வழங்கியது போல் நீ கொடை வழங்க வேண்டும் என்று வேண்டுகிறார். [6] பின்னர் இவன் அறத்துறை அம்பியாக விளங்கினான். [7]
- ஆய் அண்டிரன் - முடமோசியார் பாடுகிறார் - புலவரின் புகலிடம் என்கிறார். [8] தலையில் சூடும் பொன்-தாமரை விருதினைப் புலவர்க்கு வழங்கினான். [9] இம்மை செய்தால் மறுமைக்கு உதவும் என்று இவன் அறத்தை விற்கமாட்டான். [10] வானத்து விண்மீன் எண்ணிக்கை போலக் கொடை வழங்கினான். [11]
இ
தொகு- இளஞ்சேட் சென்னி - செருப்பாழி எறிந்தவன். இவன் தந்த அணிகலன்களை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியாமல், தன் எதோ ஒரு உறுப்பில் புலவர் ஊன்பொதி பசுங்குடையாரின் சுற்றத்தார் அணிந்துகொண்டனர். [12] போர்க்களத்தில் இருக்கும்போதும் புலவர்க்கு உண்ண உணவு அளித்தான். [13]
ஓ
தொகு- ஓரி - இவன் யானைக்கு அணிகலன்களைப் பூட்டி வழங்குவான். வெள்ளிநாரில் கட்டிய பொன்குவளைப் பூ வழங்குவான் என்கிறார் வன்பரணர். [14] தான் வேட்டையாடிய மான் கறியைச் சுட்டுப் புலவர்க்குத் தந்து காட்டிலேயே பொன்மணிக் குவியல் நல்கினான். [15]
க
தொகு- கரும்பனூர் கிழான் - புலவர் புறத்திணை நன்னாகனார் போதும் போதும் என்றாலும், நெல், பொன், கள் ஆகியவற்றைப் போதும் போதும் என்றாலும் கொடுத்துக்கொண்டே இருந்தான் [16] அறத்துறை அம்பி என்று இவரால் போற்றப்படுகிறான் [17]
கா
தொகு- காரி - இவன் பாணர்க்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை வழங்கினான். பகைவரை வென்று அவன் பட்டத்து யானையின் நெற்றி ஓடையிலிருந்த பொன்னால் அந்தத் தாமரை செய்யப்பட்டது. இவ்வாறு புலவர் நப்பசலையார் குறிப்பிடுகிறார். [18] அணிகலன்களைத் தேரில் ஏற்றி வழங்கினான் என்று கபிலர் குறிப்பிடுகிறார். [19] புலரவர்களின் தரம் பார்காமல் வழங்கினான் என்று இவர் மேலும் குறிப்பிடுகிறார். [20]
கி
தொகு- கிள்ளி வளவன் - குராப்பள்ளித் துஞ்சியவன் - கருவூர்ப் போர்க்களத்தில் சாகக் கிடக்கையில் புலவர் கோவூர் கிழாருக்குத் தன் கழுத்தில் இருந்த ஆரத்தை வழங்கினான். [21]
- கிள்ளி வளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்) - தெண்கண் மாக்கிணை முழக்கிச் சென்ற புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்க்கு விடியலில் பாம்புத்தோல் போன்ற கலிங்கம், நெய்யில் பொறித்த கறி, மணிக்கலத்தில் தேறல் [22] ஆகியவற்றை வழங்கினான். புலவர் நல்லிறையனார் வாய்வாள் வளவன் என்று இவனைப் போற்றிப் பாடி, நல்லாடையும் செலவமும் வழங்கும்படி வேண்டுகிறார். [23] புலவர் கோவூர் கிழார்க்கு வறுத்த உப்புக் கண்டம், கலம் நிறைய பால் வழங்கினான். [24]
கீ
தொகு- கீரஞ்சாத்தன் - இவனிடம் சென்றவர் ‘பசி இல்லை’ என்று சொல்லி உண்ண மறுத்தால், ‘என் மேல் ஆணை, உண்ணுங்கள்’ என்று ஊட்டுவான். ஆவூர் மூலங்கிழார் பாடுகிறார். [25]
கு
தொகு- குட்டுவன் - பொலந்தார்க் குட்டுவன் எனப் போற்றப்படும் முசிறி அரசன். கடல் செல்வமும், மலைச் செல்வமும் வழங்கினான். [26]
- குட்டுவன் கோதை - இவன் வானம் போல் வரையாது வழங்குவான். [27]
- குமணன் - இவன் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வறுமையைப் போக்கத் தன் தலையை வெட்டிப் கொண்டுபோய்த் தம்பி கையில் கொடுத்து அதற்கான பரிசினைப் பெற்று வறுமையைப் போக்கிக்கொள்ளுமாறு தன் வாளைப் புலவர் கையில் கொடுத்தான். [28]
கோ
தொகு- கோப்பெருஞ்சோழன் - வடக்கிருந்து உயிர் துறந்த பின்னரும் தன் நண்பர் பொத்தியாருக்கு தன் கல்லறையில் உடனிருக்க இடம் தந்தவன். [29]
ச
தொகு- சிபி - புறாவின் துன்பத்தைப் போக்கியவன் [30]
- செல்வக் கடுங்கோ வாழியாதன் - இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சியவன். பூழியர் பெருமகன் எனப் போற்றப்படும் இவன் பொருநை ஆறு பாயும் இக்காலக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். புலவர் குண்டுகட் பாலியாதனார்க்கு, புலவரின் சிறுமையை நோக்காமல், தன் பெருமையை எண்ணி, களிறு, பரி, ஆனிரை, களத்தில் குவித்த நெல் முதலானவற்றைக் கனவு என மருளுமாறு வழங்கினான். [31]
- சோழிய ஏனாதி திருக்குட்டுவன் - வாய்வாள் குட்டுவன் எனப் போற்றப்படும் இவன் வஞ்சி நகரில் வாழ்ந்தவன். புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவனைப் பாடிப் பரிசில் வேண்டினார். அவன் போர்-யானை ஒன்றைப் பரிசாக வழங்கினான். புலவர் அதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கினார். பரிசில் போதவில்லை என்று புலவர் ஒதுங்குவதாக எண்ணிய குட்டுவன் அதுபோல் மற்றுமொரு போர்யானையை வழங்கினான். இது அவன் கொடைச்சிறப்பு [32]
த
தொகு- தாமான் தோன்றிக்கோன் - ஐயூர் முடவனார் என்னும் கால் முடம் பட்ட புலவர்க்கு அவிப்புழுங்கல், வண்டி இழுக்கும் எருது, மேலும் பல ஆனிரைகள் [33] ஆகியவற்றை வழங்கினான்.
ந
தொகு- நலங்கிள்ளி - பலர் துஞ்சும் இரவில் தெண்கிணை முழக்கிய புலவர் கோவூர் கிழார்க்குக் கலிங்க ஆடை, நார் அரி நறவு [34] முதலானவை வழங்கினான். புலவரின் சிறுவர் உள்பட அனைவருக்கும் வழங்கினான் [35]
- நல்லியக்கோடன் - இவன் பாரியின் பனிச்சுனை நீர் இனிப்பது போல் கொடை வழங்கினான். [36]
- நள்ளி, கண்டீரக்கோ - இவன் வெளியில் சென்றிருக்கும்போது பரிசில் பெற வரும் புலவர்களுக்கு அவனது மனைவியர் பெண்யானைகளுக்கு அணிகலன்களைப் பூட்டிப் பரிசாக வழங்குவர், என்கிறார் பெருந்தலைச் சாத்தனார். [37] நள்ளி தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் கறியைக் காட்டில் ஞெலிகோலால் தீ மூட்டிச் சுட்டுப் புலவர் வன்பரணர்க்கு உண்ணத் தந்தான். தன் கழுத்தில் இருந்த முத்தாரம், கையில் இருந்த கடகம் ஆகியவற்றைப் புலவர்க்கு வழங்கிவிஅட்டுத் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் சென்றுவிட்டான். [38]
நெ
தொகு- நெடுஞ்செழியன் - தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் - புலவர் கல்லாடனார்க்குப் போர்க்களத்தில் போர்யானையை வழங்குகிறான் [39]
- நெடுஞ்சேரலாதன், குடக்கோ - சோழன் வேல் பல் தடக்கைப் பெருநற் கிள்ளியோடு, திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போரிட்டு வீழ்ந்தவன். சாகும்போது புலவர் கழாத்தலையாருக்குத் தன் முத்தாரத்தை வழங்கினான். [40]
ப
தொகு- பண்ணன், சோழநாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்தவன். இவன் வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கியதோடு, அவர்களது இல்லத்தில் இருப்போர்க்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கின். வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவனது கொடையைப் போற்றும் வகையில் ‘தன் வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு இந்தப் பண்ணன் வாழ வேண்டும்’ என வாழ்த்திப் பாடியுள்ளான் [41]
- பண்ணன் பாண்டிய நாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்தவன். தென்னவன் மறவன் எனப் போற்றப்படுபவன். புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் கிணைப்பறையை முழக்கிக்கொண்டு அவனிடம் சென்றார். வெள்ளிக் கோள் சூரியனுக்குத் தெற்கில் செல்வதால் மழைவளம் குன்றும் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்தக் காலத்திலும் உதவும் வகையில் கொடை நல்கினான். [42]
பா
தொகு- பாரி - பாணர்க்குத் தேறல் ஊற்றித் தருவான் [43] கபிலர் சொல்கிறார். கிணை முழக்கும் பாடினிக்கு நாட்டையும் தருவான். [44] தன் நாட்டு 300 ஊர்களையும் இரவலர்களுக்கு அவன் கொடுத்துவிட்டான் [45] என்கிறார் ஔவையார்.
பி
தொகு- பிட்டன் - இவன் விறலியர் விரும்பிய எல்லாவற்றையும் வழங்கினான். [46]
- பெருஞ்சாத்தன் (பிடவூர் கிழான் மகன்) - இவன் "அறப்பெயர்ச் சாத்தன்" என்று போற்றப்படுகிறான். இவனது பிடவூர் உறையூருக்குக் கிழக்கில் இருந்தது. இவனைப் பாடிச் சென்ற புலவர் மதுரை நக்கீரர். "என்னைப் பேணுவது போல இந்தப் புலவரையும் பேணுக" என்று தன் மனைவிக்குக் கூறிப் பேணினான். [47]
பெ
தொகு- பெருஞ்சேரல் இரும்பொறை - அரசு முரசுக் கட்டிலின் பெருமை அறியாமல் அதில் ஏறி உறங்கிய புலவர் மோசி கீரனார்க்கு இவன் கவரி வீசினான். [48]
- பெருநற் கிள்ளி - இராச சூயம் வேட்டவன் - புலவர் உலோச்சனாருக்கு நள்ளிரவில் கொடை வழங்கினான் [49]
பே
தொகு- பேகன் - இவன் மயில் குளிரால் நடுங்குகிறது என்று தன் போர்வையை அதற்குப் போர்த்திவிட்டான், என்று பரணர் தெரிவிக்கிறார். [50] இதனை வறள் நிலத்தில் பெய்யாமல் களர் நிலத்தில் பெய்யும் மழை போன்ற கொடைமடம் என்று இவர் குறிப்பிடுகிறார். [51]
பொ
தொகு- பொகுட்டெழினி, அதியமான் நெடுமான் அஞ்சி மகன் - ஔவையாருக்கு நுண்ணூல் கலிங்கம், தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல், பொன் வட்டியில் சோறு ஆகியவற்றை வழங்கினான். [52]
- பொறையாற்று கிழான் - வேங்கட நாட்டில் பசியால் வாடிய புலவர் கல்லாடனார் இவன் நாட்டுக்கு வந்தபோது குடும்பத்துடன் தங்கி வாழ வேண்டியன எல்லாம் செய்து கொடுத்தான் [53]
வ
தொகு- வஞ்சன். இவன் பாயல் மலை அரசன். இவனைப் புலவர் திருத்தாமனார் பாடுகிறார். வேண்டியபோதெல்லாம் வாருங்கள் என்று சொல்லித் தான் உண்ண வைத்திருந்த மான்கறிச் சோறு தடாரி முழக்கிய பாணர்க்குக் கொடுத்தான் [54]
- வள்ளுவன் நாஞ்சில் நாட்டு வள்ளல். தென்னவன் வயமறவன் என்று போற்றப்படுபவன். இவனைப் புலவர் வல்வேல் கந்தன் என்று குறிப்பிடுகிறார். இவன் கொடை நண்பர்கள் கையில் அடையாளமாகத் திகழும் [55]
- வள்ளுவன், நாஞ்சில் நாட்டு அரசன் - தான் பறித்துவந்த கீரையில் சேர்த்துச் சமைப்பதற்காக ஔவையார் இவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டார். அவன் தன் பெருமையை எண்ணி யானை ஒன்றை வழங்கினான். இதனைத் தேற்றா ஈகை என்று புலவர் குறிப்பிடுகிறார். [56]
- வாட்டாற்று எழினி ஆதன் முயல் கறி, நெய்ச்சோறு ஆகியவற்றை, கிணை முழக்கிக்கொண்டு சென்ற புலவர் மாங்குடி கிழார்க்கும், அவர் குடும்பத்தார்க்கும் வழங்கினான் [57]
வி
தொகு- விண்ணத்தாயன் - இவன் பார்ப்பான். இவன் ஆவூர் மூலங்கிழார்க்கு உணவுப்பொருள்கள் வழங்கினான். [58]
- வில்லியாதன் ஓய்மானாட்டு அரசன். கிணைக் கலைஞர்களுக்கு முயல் கறியை நெய்யில் பொறித்துத் தருபவன். நன்னாகனார் புலவரை, தாய் பேணுவது போல் பாதுகாத்தான். [59] தானே நள்ளிரவல் புத்தாடை உடுத்திவிட்டான். [60]
இரவலர் பெருமிதம்
தொகு- புரவலர் அகரவரிசை
அ
தொகு- அதியமான் நெடுமான் அஞ்சி - இவன் புலவரை நேரில் காணாமல் பரிசில் அனுப்பிவைத்தான் என்று வாங்க மறுத்து, பாட்டை விற்றுப் பரிசில் வாங்க நான் வாணிகப் பரிசிலன் அல்லேன். பேணித் தினை அளவு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்கிறார் பெருஞ்சித்திரனார் [61] அதியமானின் வாயில் காவலன் தன்னைத் தடுத்தபோது உள்ளே செல்லத் தனக்கு உரிமை உண்டு என்று ஔவையார் கூறுகிறார். [62]
இ
தொகு- இருங்கோவேள் - பாரிமகளிரை மணத்துகொள்ளும்படிக் கபிலர் இவனை வேண்டினார். இவன் மறுத்துவிட்டான். புலவர் கழாத்தலையாரை இகழ்ந்த அரசன் எவ்வி கெட்டொழிந்தது போல் உனக்கும் கேடு நேரும் என்று கபிலர் அவனை எச்சரித்துவிட்டுச் சென்றார். [63]
- இளஞ்சேட் சென்னி - சேரமானின் பாமுள்ளூர் எறிந்தவன் - புலவர் இன்னும் கேட்டாலும், பின்னும் மேலும் மேலும் கொடுக்க வேண்டும், என்கிறார், புலவர் ஊன்பொதி பசுங்குடையார். [64]
- இளவெளிமான் - விரும்பித் தராத பரிசிலை ஏற்கமாட்டேன் என்று இவனிடம் பெருஞ்சித்திரனார் கூறுகிறார். [65] குமணனிடம் பெற்றுவந்த யானையை இளவெளிமான் ஊர்க் காவல் மரத்தில் கட்டிவிட்டு அவனிடம் நேரில் சென்று ‘இரவலரைப் பேணுபவன் நீ அல்லை’ என்று தன் பெருமிதம் தோன்ற, பெருஞ்சித்திரனார் பாடினார். [66]
ஓ
தொகு- ஓரி - புலவர் கழைதின் யானையார் அரசன் வல்வில் ஓரியிடம் பரிசில் பெறச் சென்றார். வள்ளலாகிய அவன் வழங்கவில்லை. அதனால் புலவர் தான் வந்த வேளை சரியில்லை என்று நொந்துகொண்டு அவன் கொடையைப் பாராட்டினார். [67]
க
தொகு- கடிய நெடு வேட்டுவன் - இவன் கோடைமலை (கோடைக்கானல்) மலைத் தலைவன். மூவேந்தர் என்றாலும் விருப்பம் இல்லாமல் பரிசில் வழங்கினால் வாங்கமாட்டேன். நீ அன்புடையவன் ஆதலால் உன்னிடம் யானையைப் பரிசாகப் பெறாமல் மீளமாட்டேன், என்கிறார் புலவர் பெருந்தலைச் சாத்தனார். [68]
கு
தொகு- குடக்கோச் சேரல் இரும்பொறை - இவன் பரிசில் தரக் காலம் நீட்டித்தான் என்று புலவர் பெருங்குன்றூர் கிழார் அவனிடம் பரிசில் பெறாமல் திரும்பினார். [69]
- குமணன் தன் குடிப்பெருமைக்கு ஏற்ப வழங்கவேண்டும் என்று பெருஞ்சித்திரனார் கூறுகிறார். [70]
ந
தொகு- நன்மாறன், இலவந்திகைப்பள்ளித் துஞ்சியவன் - பரிசில் தராமல் காலம் நீட்டித்தான். "முடியுமானால் கொடு. இல்லையென்றால் இல்லை என்று சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டுப் பரிசில் பெறாமலேயே இல்லம் திரும்பினார், புலவர் ஆவூர் மூலங்கிழார் [71]
ப
தொகு- பெருந்திருமா வளவன், குராப்பள்ளித் துஞ்சியவன் - இவன் தரக் காலம் கடத்தினான். அப்போது புலவர் எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் "என் பாடு அறிந்து ஒழுகும் பண்பாளனையே மதிப்பேன்" என்று கூறுகிறார் [72]
- பேகன் - இவன் தன் மனைவியை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான். அவனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருங்குன்றூர் கிழார் பேகன் தன் மனைவியொடு வாழ்வதே தனக்குத் தரும் பரிசில் என்று கூறுகிறார். [73] புலவர் அரிசில் கிழாரும் [74] புலவர் பரணரும் [75] இதே செய்தியை இவனிடம் தெரிவிக்கின்றனர்.
ம
தொகு- மூவன் - இவனிடம் "ஈயாய் ஆயின் இரக்குவேன் அல்லேன்" என்று புலவர் பெருந்தலைச்சாத்தனார் கூறுகிறார். [76]
புரவலர் பகுப்பு நோக்கு
தொகுகொடை, சேர சோழ பாண்டிய வேந்தர்
தொகு- இளஞ்சேட் சென்னி
- கிள்ளி வளவன், குராப்பள்ளித் துஞ்சியவள்
- கிள்ளி வளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன்
- குட்டுவன்
- குட்டுவன் கோதை
- கோப்பெருஞ்சோழன்
- சிபி
- செல்வக் கடுங்கோ வாழியாதன்
- நலங்கிள்ளி
- நெடுஞ்செழியன், தலையிலங்கானச் செரு வென்றவன்
- நெடுஞ்சேரலாதன், குடக்கோ
- பெருஞ்சேரலிரும்பொறை
- பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்டவன்
கொடை, கடையெழு வள்ளல்கள்
தொகு- அதியமான் நெடுமான் அஞ்சி
- ஆய் அண்டிரன்
- ஓரி
- காரி
- நள்ளி
- பாரி
- பேகன்
கொடை, பிறர்
தொகு- அகுதை
- அருவந்தை
- அவியன்
- ஆதனுங்கன்
- கரும்பனூர் கிழான்
- கீரஞ்சாத்தன்
- குமணன்
- சோழிய ஏனாதித் திருக்குட்டுவன்
- தாமான் தோன்றிக்கோன்
- நல்லியக் கோடன்
- பண்ணன், சோழநாட்டுச் சிறுகுடி
- பண்ணன், பாண்டிய நாட்டுச் சிறுகுடி
- பிட்டன்
- பெருஞ்சாத்தன், பிடவூர் கிழார் மகன்
- பொகுட்டெழினி, அதியமான் மகன்
- பொறையாற்று கிழான்
- வஞ்சன்
- வள்ளுவன் (தென்னவன் மறவன்)
- வள்ளுவன் (நாஞ்சில் சாட்டு அரசன்
- வாட்டாற்று எழினியாதன்
- விண்ணத்தாயன்
- வில்லியாதன், ஓய்மானாட்டு அரசன்
மேற்கோள்
தொகு- ↑ புறநானூறு 233
- ↑ புறநானூறு 91
- ↑ புறநானூறு 390
- ↑ புறநானூறு 385
- ↑ புறநானூறு 383 சிதைந்த பாடல்
- ↑ புறநானூறு 389
- ↑ புறநானூறு 175
- ↑ "புலவர் புக்கில்" - புறநானூறு 375
- ↑ புறநானூறு 374
- ↑ புறநானூறு 134
- ↑ புறநானூறு 129
- ↑ புறநானூறு 378
- ↑ புறநானூறு 370
- ↑ புறநானூறு 153
- ↑ புறநானூறு 152
- ↑ புறநானூறு 384
- ↑ புறநானூறு 381
- ↑ புறநானூறு 126
- ↑ புறநானூறு 123
- ↑ புறநானூறு 121
- ↑ புறநானூறு 373
- ↑ புறநானூறு 397
- ↑ புறநானூறு 393
- ↑ புறநானூறு 376
- ↑ புறநானூறு 178
- ↑ புறநானூறு 343
- ↑ புறநானூறு 54
- ↑ புறநானூறு 165
- ↑ புறநானூறு 223
- ↑ புறநானூறு 37, 39, 46,
- ↑ புறநானூறு 387
- ↑ புறநானூறு 394
- ↑ புறநானூறு 399
- ↑ புறநானூறு 400
- ↑ புறநானூறு 382
- ↑ புறநானூறு 176
- ↑ புறநானூறு 151
- ↑ புறநானூறு 150
- ↑ புறநானூறு 371
- ↑ புறநானூறு 368
- ↑ புறநானூறு 173
- ↑ புறநானூறு 388
- ↑ புறநானூறு 115
- ↑ புறநானூறு 111
- ↑ புறநானூறு 110
- ↑ புறநானூறு 172
- ↑ புறநானூறு 395
- ↑ புறநானூறு 50
- ↑ புறநானூறு 377
- ↑ புறநானூறு 141, 145
- ↑ புறநானூறு 142
- ↑ புறநானூறு 392
- ↑ புறநானூறு 391
- ↑ புறநானூறு 398
- ↑ புறநானூறு 380
- ↑ புறநானூறு 140
- ↑ புறநானூறு 396
- ↑ புறநானூறு 166
- ↑ புறநானூறு 379
- ↑ புறநானூறு 376
- ↑ புறநானூறு 208
- ↑ புறநானூறு 206
- ↑ புறநானூறு 202
- ↑ புறநானூறு 203
- ↑ புறநானூறு 207
- ↑ புறநானூறு 162
- ↑ புறநானூறு 204
- ↑ புறநானூறு 205
- ↑ புறநானூறு 210
- ↑ புறநானூறு 159
- ↑ புறநானூறு 196
- ↑ புறநானூறு 197
- ↑ புறநானூறு 147
- ↑ புறநானூறு 146
- ↑ புறநானூறு 145
- ↑ புறநானூறு 209