மைசூர் பீடபூமி

மைசூர் பீடபூமி (Mysore plateau) இந்திய மாநிலமான கர்நாடகாவின் நான்கு புவியியல் வகையிலான தனித்தனி மண்டலங்களில் ஒன்றான ஒரு பீடபூமி ஆகும். பல ஏற்ற இறக்கங்களைக் கொண்ட இந்தப் பீடபூமி மேற்கிலும் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. தெற்கில் நீலகிரி மலைகளோடு இந்த பீடபூமி இணைந்துள்ளது. இந்தப் பீடபூமி சுமார் 73,000 சதுர மைல்கள் (189,000 சதுர கி.மீ.) பரப்பளவுடன் 2,600 அடி (800 மீட்டர்) சராசரி உயரத்தில் உள்ளது. இந்தப் பகுதியின் சராசரி மழைப்பொழிவு அளவானது இங்குள்ள தெற்கு மலைப்பகுதிகளில் 80 அங்குலங்கள் (2,030 மி.மீ) முதல் வடக்குப் பகுதிகளில் 28 அங்குலங்கள் (710 மிமீ) வரை வேறுபடுகின்றது.[1]

தென் கர்நாடகப் பீடபூமி எனவும் அறியப்படும் இந்த பீடபூமிக்குப் பெயர் "கரிசல் மண் நிலம்" எனப் பொருள்படும் கருநாடு என்பதிலிருந்து பெறப்பட்டது. இது தார்வரின் எரிமலைப் பாறைகள், படிக இளகல் தீப்பாறைகள் மற்றும் கருங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பெங்களூரு, பெங்களூரு புறநகரங்கள், சாமராஜநகர், ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு மற்றும் தும்கூரு ஆகிய மாவட்டங்களை இந்தப் பீடபூமி உள்ளடக்கியுள்ளது.

வளங்கள்

தொகு

கர்நாடகா வழியாகப் பாயும் காவிரி ஆற்றின் பெரும்பகுதி மைசூர் பீடபூமி வழியாகச் செல்கிறது. மேலும் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சராவதி மற்றும் பீமா போன்ற பிற ஆறுகளையும் கொண்டுள்ளது. சராவதி ஆற்றில் இந்தியாவின் மிக உயர்ந்த அருவியான ஜோக் அருவி (830 அடி அல்லது 253 மீட்டர்) உள்ளது. இந்த அருவி இந்திய நாட்டின் நீர்மின் ஆற்றலுக்கு மிகவும் தேவையானதாகவும் முதன்மையான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

மாங்கனீசு, குரோமியம், தாமிரம் மற்றும் பாக்சைட் ஆகிய தாதுக்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. பாபா பூடன் மலைப்பகுதிகளில் பெருமளவு இரும்புத் தாதுக்களும் கோலார் தங்க வயல் பகுதிகளில் தங்கமும் உள்ளன.

சோளம், பருத்தி, அரிசி, கரும்பு, எள் விதைகள், வேர்க்கடலை (நிலக்கடலை), புகையிலை, பழங்கள், தேங்காய், காபி போன்றவை இங்கு விளையும் முதன்மைப் பயிர்கள் ஆகும். இங்கு வளரும் சந்தனமரங்கள் பெருளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மேலும் தேக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் மரச்சாமான்கள் மற்றும் காகிதங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

தொழில்கள்

தொகு

ஜவுளி உற்பத்தி, உணவு மற்றும் புகையிலை பதனிடுதல் மற்றும் அச்சிடுதல் ஆகியவை முதன்மைத் தொழில்களாக இருக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, இந்தப் பீடபூமியின் தொழில்துறை வளர்ச்சியின் முதன்மையான இடமாக இருக்கின்றது. இங்குள்ள பிற நகரங்கள் மைசூரு, பெலகாவி, கலபுரகி, பள்ளாரி மற்றும் விஜயபுரா.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_பீடபூமி&oldid=3735132" இலிருந்து மீள்விக்கப்பட்டது