ரேக்ளா வண்டிப் பந்தயம்

(ரேக்ளா வண்டி பந்தயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரேக்ளா வண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ், ஆங்கிலம்: Rekla Race) என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற ரேக்ளா வண்டிப் பந்தயங்கள் பரவலாக நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை போட்டிகளில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்டப் பகுதிகளில் எருமைக் கடாவையும் பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர்.

ரேக்ளா வண்டிப் பந்தயம்
மதுரை அவனியாபுரத்தில் ரேக்ளா வண்டிப் பந்தயம்

ரேக்ளா

தொகு

ரேக்ளா என்பது ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒருவகை மாட்டு வண்டி அகும். இது பந்தயத்தை கருத்தில் கொண்டே உருவாக்கப்படும் சிறிய வகை மாட்டு வண்டி ஆகும். இதன் சக்கரங்கள் சிறிய அளவிலும் வேகமாக சுழலக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன.

போட்டியாளர்கள்

தொகு

சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி , திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து உழவர்கள் தங்கள் ரேக்ளா வண்டிகளுடனும் காளைகளுடனும் பந்தயங்களில் கலந்து கொள்கின்றனர். பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட கிராமத்தையோ நகரையோச் சேர்ந்த பஞ்சாயத்து அமைப்புகள் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயத்தை நடத்துகின்றன. சில இடங்களில் தனியார் அமைப்புகளும் இந்தப் போட்டியை நடத்துவதுண்டு.

பந்தையக் காளைகள்

தொகு

பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்:

  • பெரிய மாடு
  • நடுத்தர மாடு
  • கரிச்சான் மாடு
  • பூஞ்சிட்டு மாடு

பந்தய தூரம் மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது. தமிழகத்தின் அய்யம்பாளையம் என்ற ஊரில் நடக்கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும், நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 07 கி.மீ தூரமும் ஓட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

காளைகளின் பரிசு பெறும் திறன்

தொகு

ரேக்ளா வண்டிப் பந்தயத்திற்குத் தேர்வாகும் ஓர் இணை காளைகள் 25 ஆயிரம் இந்திய ரூபாய் முதல் ஒரு லட்சம் இந்திய ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கொங்கு நாட்டு உழவர்கள் தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை பெருமையாக நினைக்கின்றனர். இப்போட்டியில் ஈடுபடும் மாடுகளுக்கு உணவாக இஞ்சி, எலுமிச்சை, கருப்பட்டி, பேரீச்சை, வெங்காயம் ஆகியவற்றை வெந்நீரிற் பிசைந்து கவளம் கவளமாக ஊட்டுகின்றனர்.

வேகமாக ஓடுவதில் காங்கேயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல்லை என்பது பரவலான கருத்து. கொங்குநாட்டில் தற்போது காங்கேயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த இன காளைகள் வளர்க்கப்படுகின்றன. காங்கேயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி" இன காளைகளையும் ஈடுபடுத்துகிறார்கள். ஆனால், காங்கேயம் காளைகளே பெரும்பாலும் பரிசுகளைப் பெறுகின்றன[சான்று தேவை]. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரைச் சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. தட்டுவண்டி
  2. The Hindu பரணிடப்பட்டது 2010-08-14 at the வந்தவழி இயந்திரம்
  3. Madurai man wins ‘rekla’ race பரணிடப்பட்டது 2009-02-20 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேக்ளா_வண்டிப்_பந்தயம்&oldid=3869320" இலிருந்து மீள்விக்கப்பட்டது