விக்கிப்பீடியா:2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2011 Tamil Wikipedia Annual Review

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரிப் பட்டறை (மார்ச் 5, இந்தியா)
கல்முனை உயர்தரப் பாடசாலைப் பட்டறை (நவம்பர் 9, இலங்கை)
சென்னை பட்டறை, விக்கிமீடியா 10 ம் ஆண்டு நிறைவு (சனவரி 15, இந்தியா)
சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியீடு (சனவர் 15, இந்தியா)
தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகம் பட்டறை (சனவரி 16, கனடா)
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் விக்கி பட்டறை (பெப்ரவரி 20, இந்தியா)
பிரக்யான் பட்டறை திருச்சி (பெப்ரவரி 20, இந்தியா)
கோவை கிரியா பட்டறை (பெபரவரி 26, இந்தியா)
ரொறன்ரோ தமிழ் சிறுவர் நாள் விக்கி/நூலகம் அறிமுகம் (மார்ச் 19, கனடா)
யாழ் முகாமையளர் மன்ற அறிமுகம் (மார்ச் 12, இலங்கை)

2011 ம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா பெரும் வளர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை முன்னர் எந்த ஆண்டுகளிலும் பார்க்க 16,000 ஆல் கூடி, மொத்தம் 43,000 ஆக உயர்ந்தது.[1] இது 61% வளர்ச்சி ஆகும். கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் எல்லா மொழிகளின் வரிசையில் 8 இடங்கள் முன்னேறி 59 ம் நிலைக்கு வந்தது.[2] இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியா தொகுக்கப்பட்ட எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது. தொகுப்பு எண்ணிக்கை சமூகப் பங்களிப்பைச் சுட்டி நிற்பதால் இது ஒரு நல்ல குறிகாட்டி ஆகும். இந்திய மொழிகளில் இந்தி, மலையாளத்துக்கு அடித்தபடியாக தமிழ் விக்கிப்பீடியாவே அதிகமாகத் தொகுக்கப்படுகிறது. பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 10,000 ஆல் கூடி 34,000 தாண்டியது. இது 41% வளர்ச்சி ஆகும். இதில் சராசரியாக 250 பேர் செயல்படும் பயனர்கள் (active users) ஆவர். 2011 இல் புதிதாக நான்கு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

2011 இல் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு 50% மேலால் உயர்ந்தது. நாள்தோறும் 136,000 தடவைகள் பார்க்கப்பட்டன.[3] இதில் 2500 பார்வைகள் நடமாடும் கருவிகளில் (mobile devices) இருந்து வருகின்றன.[4] மாணவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் என எல்லோரும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள்.

பயனர்களின் வெவ்வேறு துறைகள், ஈடுபாடுகளுக்கு ஏற்ப 2011 ம் ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் பல துறைகளில் விரிவு பெற்றது. குறிப்பாக கணிதம், குருதி, உயிர்வேதியியல், நோய்கள், கிறித்தவம், மலேசியா, மலேசியத் தமிழ்ப் பள்ளிகள், துடுப்பாட்டக்காரர்கள், ஃகொங்கொங், சிங்கப்பூர் தொடருந்துப் போக்குவரத்து, தமிழ் இதழ்கள், இலங்கைத் தமிழ் நூல்பட்டியல்கள், தமிழர் விளையாட்டுகள் ஆகிய பகுப்புகள் சிறப்பாக விரிவு பெற்றன. 2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி அது தொடர்பான பல கட்டுரைகள் தொடங்கப்பட்டன. இலங்கையில் இருந்து புன்னியாமீன், இந்தியாவில் இருந்து பூராட்லி.பி, சிங்கப்பூரில் இருந்து கார்த்திக், ஃகொங்கொங்கில் இருந்து அருண், மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன், இந்தோனேசியாவில் இருந்து பாஹிம், சுவீடனில் இருந்து நந்தகுமார், பெலரூசில் இருந்து செந்தி, நோர்வேயில் இருந்து கலை, ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பவுல் லியோன் வறுவேல் எனப் பல்வேறு நாடுகளில் இருந்து பயனர்கள் பங்களித்துள்ளார்கள்.

நுட்ப அடிப்படையிலும் இந்த ஆண்டு தமிழ் விக்கித்திட்டங்களில் பல முன்னேற்றங்கள் நடந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யாவாசிகிரிப்ட் தட்டச்சுக் கருவி நரையம் மீடியாவிக்கி நீட்சியாக மாற்றியமைக்கப்பட்டது; அனைத்து தமிழ் விக்கித் திட்டங்களிலும் நிறுவப்பட்டது. ஈழத்தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பாமினி தட்டச்சுமுறையும் சோதனை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கித்திட்டங்கள் சார்பாக மீடியாவிக்கி நுட்பக்குழுவிடம் விடுக்கும் வழு வேண்டல்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க ஒரு மேற்பார்வை வழு ஒன்று பக்சில்லாவில் பதியப்பட்டுள்ளது. நீளமான ஒருங்குறித் தொடுப்புகளை பகிர்ந்து கொள்வதில் உள்ள சிரமங்களைக் களைய தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களுக்கு குறுஞ்சுட்டி கொடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளிலும் கைபேசிகளிலும் விக்கிப் பக்கங்களை வாசிக்க வகை செய்யும் இணைய எழுத்துரு நீட்சியை நிறுவ மீடியாவிக்கி நுட்ப குழுவுடன் இணைந்து தமிழ் விக்கியர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர சமூக வலைத் தளங்களில் தமிழ் விக்கிப் பக்கங்களைப் பகிர உதவும், விக்கிப்பீடியா பக்கங்களில் தோன்றும் சொற்களுக்கு அங்கிருந்தபடியே விக்சனரியில் பொருள் கண்டறிய உதவும் நிரலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2010 இன் இறுதியில் 192,000 சொற்களைத் தாண்டிய விக்சனரி 2011 இல் தொடர்ச்சியாக 46,000 சொற்களால் வளர்ந்தது. 12 நிர்வாகிகளுடனும், 50 வரையான ஊக்குமிகு பயனர்களோடும் தமிழ் விக்கியூடங்களில் முதிர்ச்சி பெற்ற திட்டங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.[5] மேலதிக தகவல்களுக்கு 2011 தமிழ் விக்சனரி ஆண்டு அறிக்கையைப் பார்க்கவும். 2011 ம் ஆண்டு தமிழ் விக்கி செய்திகள் சிறீதரனினின் முதன்மை முயற்சியால் நாள் தோறும் 2-3 புதிய செய்திகளுடன் வெளிவந்தது. இது தமிழில் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை வழங்கும் முக்கிய தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் விக்கி நூல்கள் புத்தியிர்ப்புப் பெற்று புதிய வடிவமைப்பையும், புதிய படைப்புக்களையும் பெற்றது. எ.கா சிறுவர் நூல்கள், நுட்ப நூல்கள் (சி-சார்ப், இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம், சிறு தொழில்கள்). தமிழ் விக்கி மூலம் அடிப்படைப் பராமரிப்பைப் பெற்றது.மெய்கண்டானின் முயற்சியால் பல புதிய மூலங்களும் சேர்க்கப்பட்டன. தமிழ் விக்கி மேற்கோள்களில் கிருஷ்ணபிரசாத் அடிப்படைப் பராமரிப்புப் பணிகளிலும் விரிவாக்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆண்டு 14 க்கும் மேற்பட்ட நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் இந்தியா (சென்னை, சேலம், புத்தனாம்பட்டி, கோவை, புதுச்சேரி, திருச்சி), இலங்கை, மலேசியா, கனடா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டன. சனவரியில் நடத்தப்பட்ட பட்டறைகள் விக்கிமீடியா 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையிலும் ஒழுங்குசெய்யப்பட்டன. இந்தப் பட்டறைகள், நிகழ்வுகள் மூலம் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரி, பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த வகையில் மார்ச் 5 இல் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியிலும் (இந்தியா), நவம்பர் 9 அன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் (இலங்கை) நடைபெற்ற பட்டறைகள் தமிழ் விக்கியூடகங்களை சிற்றூர்களில் இருக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் சென்றன. மார்ச் 19 இல் கனடாவில் தமிழ் சிறுவர் நாளின் போது விக்கி/நூலகம் கடை நிறுவப்பட்டு சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகம் வழங்கப்பட்டது. சிறுவர்கள் எளிய கேள்விகளுக்குப் தமிழில் பதில் சொன்னால் பரிசுப் பொம்மைகள் வழங்கப்பட்டன. மே 19-22 காலப் பகுதியில் புன்னியாமீன் மலேசியா சென்றபோது அங்கு தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக அறிமுக நிகழ்வுகளை ஒழுங்கமைத்தார். மலேசியாவில் இதுவே தமிழ் விக்கி தொடர்பாக நடைபெற்ற முதல் நேரடி நிகழ்வுகள் ஆகும். மார்ச் 12 அன்று மயூரநாதனால் யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்துக்கும், நவம்பர் 26 இல் செல்வாவால் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 260 வரையான இளம் பேராசிரியர்கள் அறிவியலாளர்களுக்கும் வழங்கப்பட்ட அறிமுகங்களும் முக்கியமானவை. களப்பரப்புரை நிகழ்வுகளைத் தவிர விக்கியின் தள அறிவிப்புகளில் விக்கியர்களின் ஒளிப்படங்களை இட்டு புதிய பயனர்களைக் கவரும் திட்டம் சூலை-நவம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட்டது. இவற்றின் தாக்கத்தை அளந்து கூற நேரடித் தரவுகள் இல்லையெனினும் இந்தக் காலகட்டத்தில் செயல்படும் பயனர்கள் எண்ணிக்கை 45% கூடியதை இவற்றின் வெற்றிக்கான ஒரு சான்றாகக் கொள்ளலாம்.[6]

இசுரேலில் நடைபெற்ற 2011 விக்கிமேனியா மாநாட்டில் இரவி, பாலா ஆகியோர் கலந்துகொண்டார்கள். இம்முறை தமிழ் விக்கியில் இருந்து யாரும் கட்டுரை வாசிக்கைவில்லை எனினும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்கள், தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். குறிப்பாக விக்கியூடக நல்கைகளின் நோக்கங்கள், விதிகள், அதை தமிழ் விக்கிக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஒரு விரிவான விளக்கத்தை பாலா பெற்றுப் பகிர்ந்து கொண்டார். அக்டோபர் 20-22 திகதிகளில் கத்தாரில் நடைபெற்ற அரபு விக்கி மாநாட்டில் பாலா கலந்துகொண்டு, தமிழ் விக்கியின் கூகிள் திட்ட அனுபவங்களைப் பற்றிய அளிக்கை ஒன்று செய்தார். நவம்பரில் மும்பையில் நடைபெற்ற இந்திய விக்கி மாநாட்டில் ஸ்ரீகாந்த், செங்கைப் பொதுவன், தகவலுழவன், எஸ்ஸார் உட்பட்டோர் கலந்துகொண்டார்கள். செங்கைப் பொதுவனுக்கும், தகவலுழவனுக்கும் இந்திய விக்கிமீடியாப் பிரிவின் சார்பாக குறிப்பிடத்தக்க விக்கியர்கள் விருது வழங்கப்பட்டது. தமிழ் விக்கிசெய்திகளும், தமிழ் விக்கி நூல்களும் விருது வழங்குதலின் போது சிறப்புத் திட்டங்களாகக் குறிப்பிடப்பட்டன. விக்கிமீடியா அறக்கட்டளையின் 2011 நன்கொடை வேண்டல் முயற்சியில் செங்கைப் பொதுவனின் கதையும் வேண்டலும் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழ் விக்கியர் ஒருவர் இவ்வாறு காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. சில ஆண்டுகள் முயற்சிக்குப்பின் 2011 சனவரியில் உருவாக்கப்பட்ட விக்கிமீடியாவின் இந்தியப் பிரிவின் நிறுவனர்-உறுப்பினராகவும் அதன் நிருவாகக் குழு உறுப்பினராகவும் தமிழ் விக்கியர் சுந்தர் பல மாதங்கள் பணியாற்றினார்.

ஆகத்தில் மலேசியாவில் நடைபெற்ற கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் பன்னாட்டு மாநாட்டில் விஜய இராஜேஸ்வரி என்பவரால் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் விக்கி தொழில்நுட்பம் என்ற கட்டுரையும் செல்வாவால் மின்வழிக் கல்வியிலொரு கூறாக விக்கி மென்கல நுட்பம் வழி தமிழில் அறிவியல், கணிதம், பயன்முக அறிவியல் பாடங்கள் கற்றல் கற்பித்தல் என்ற கட்டுரையும் வாசிக்கப்பட்டன. நவம்பரில் இல் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற பத்தாவது தமிழ் இணைய மாநாட்டில் செல்வாவின் கூட்டாசிரியப் படைப்பு: தமிழ் விக்கிப்பீடியா, ச. சந்திரலகலாவின் விக்கிப்பீடியா - தமிழ் நிரலிகள், ந. முருங்கையைனின் தமிழ் ஆங்கில விக்கிப்பீடியாக்களை வளப்படுத்தல் ஆகிய ஆய்வுக் கட்டுரைகள்[7] வாசிக்கப்பட்டன. தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கியூடகங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுப் பிரிவுகளில் ஒன்றாகவும் இருந்தது.

இந்த ஆண்டும் ஊடகங்கள் வழியாக தமிழ் விக்கியூடகங்களை பரவலாக அறிமுகப்படுத்தும் செயற்பாடுகள் தொடரப்பட்டன. இணைய இதழ்களான திண்ணை, கீற்று, தேசம், இலங்கை.நெற், தட்சு-தமிழ், முத்துக்கமலம் போன்றவை ஊடாகவும் நவமணி, புதிய தலைமுறை, ஞானம், காலம், த இந்து போன்ற தமிழ் ஆங்கில ஆச்சு இதழ்கள்/நாளிதழ்கள் ஊடாகவும் அறிமுகப்படுத்தல்கள் வழங்கப்பட்டன. கனடிய ஒம்னி தொலைக்காட்சி, இலங்கை வசந்தம் தொலைக்காட்சி, மலேசிய தொலைக்காட்சி ஆகியவற்றில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய துண்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேன் தமிழோசை (நோர்வே), வெற்றி வானொலி (இலங்கை), கனல்-கே வானொலி (சுவிசு), மின்னல் எப்.எம் (மலேசியா) உட்பட்ட வானொலிகளிலும் தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஒலிபரப்பட்டன. தமிழ்மணம், தமிழம், நூலகத் திட்டம் உட்பட்ட பல வலைத்தளங்கள் தமிழ் விக்கித்திட்ட அறிவிப்புக்கள் செய்து உதவின.

2011 ம் ஆண்டு செயற்பாடுகளில் தமிழ் விக்கி ஊடகப் போட்டி ஒழுங்கமைப்பு முக்கிய இடம் வகிக்கிறது. எமது தற்போதையை மனித வளங்களைக் கருத்தில் கொண்டும், விக்கியூடக அறக்கட்டளையின் நல்கை விதிகளை பகுப்பாய்ந்தும் பாலா பொறுப்பெடுத்து எழுதிய முன்மொழிவு விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் போட்டி விக்கிக்கு அறிமுகம் இல்லாத, கட்டுரைகள் எழுத முன்வராத பரந்த பயனர் வட்டத்தை இலக்கு வைத்து நவம்பர் 15, 2011 தொடங்கி பெப்ரவரி 29, 2012 வரை நடத்தப்படும். இதுவரை பல பத்து புதுப் பயனர்களின் பங்களிப்போடும், 5000 வரையான ஒளிப் படங்கள், நிகழ்படங்கள், ஒலிக் கோப்புக்கள் தரவேற்றத்தோடும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் விக்கிப்பீடியா பெரும் வளர்ச்சியை இந்த ஆண்டு பெற்று இருந்தாலும் அது சில சிக்கல்களையும் எதிர்நோக்கி இருந்தது. வாசகர்களை பங்களிப்பாளர்களாக மாற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தொடர்ச்சியாக சிக்கலாக இருந்து வருகிறது. தமிழ் விக்கியில் 250 செயல்படும் பயனர்களும், மலையாள விக்கியில் 300 செயல்படும் பயனர்களும் உள்ளார்கள். இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் 50 குறைந்த செயல்படும் பயனர்களைத் தமிழ் விக்கி கொண்டிக்கிறது. கூட்டாகக் கட்டுரைகள் தொகுக்கப்படுவதும் குறைவாக உள்ளது. இதன் ஒரு அளவீடு தொகுப்புக்கள்/கட்டுரை வீதம். தமிழ் விக்கியின் 17.5 மலையாள, வங்காள விக்கிகளிலும் (இரண்டும் 30) பார்க்க அரைவாசியாக உள்ளது. ஐரோப்பாவில் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, யேர்மனி) இருந்து சந்திரவதனா தவிர்த்து முதன்மைப் பங்களிப்பாளர்களை நாம் இன்னும் பெறாமல் இருப்பதும், அங்கு தமிழ் விக்கி பட்டறைகள் எவையும் இதுவரை நடைபெறவில்லை என்பதும் வரும் காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். தமிழ் விக்கியில் பங்களிப்பாளர்கள் கட்டுரை ஆக்கம் திருத்தம் தவிர்ந்த பிற திட்டங்களில் ஈடுபடுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றுவது சவால்கள் நிறைந்தாக உள்ளது. அத்தோடு விக்கிமீடியா போன்ற ஒரு நிறுவனக் கட்டமைப்புநோக்கியும் தமிழ் விக்கியூடகங்கள் எந்தவித நகர்வையும் செய்யவில்லை. அனைத்து தமிழர்களினதும் ஒரு முக்கிய தகவல் ஊடகமாகத் தமிழ் விக்கியூடகங்கள் வளர்ந்து வரும் இந்த நிலையில் ஒரு தெளிவான தொலைநோக்கு வியூகத்தை அமைத்துக் கொள்வது விக்கி சமூகத்துக்குள்ள பொறுப்பாகும்.

2005, 2006, 2007, 2008, 2009, 2010 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.

இந்த 2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2011 ஆண்டு செயல்பாடுகளை விவரித்து, 2012 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். இந்த ஆண்டு தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடலுக்கு உதவும் வகையில் சுவோட் பகுப்பாய்வு முறையில் கருத்துக்களை முன்வைக்கும் படி பரிந்துரைக்கிறோம். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

கோலாலம்பூர் தமிழ் விக்கி அறிமுகம் (மே 22, மலேசியா)
சேலம் பட்டறை (டிசம்பர் 11, இந்தியா)
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக அறிமுகம் (நவம்பர் 26, இந்தியா)
மும்பையில் நடந்த விக்கிபீடியா இந்தியா மாநாட்டில் தமிழ் விக்கி திட்டங்களைப் பற்றி பயனர் ஸ்ரீகாந்த் அறிமுகம் செய்தார். நாள் 18, நவம்பர் 2011.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் அட்டவணை
  2. List of Wikipedias
  3. Wikipedia Statistics - India Sunday October 31, 2010
  4. Indian Language wikipedia Statistics – 2011 September
  5. தமிழ் விக்சனரி தரவுகள்
  6. 25 சூன், 2011 இல் தமிழ் விக்கியில் 30 நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்த பயனர்கள் எண்ணிக்கை - 193. டிசம்பர் 15, 2011 இல் அதே எண்ணிக்கை 284 ஆக உயர்ந்திருந்தது
  7. தமிழ் இணைய விக்கி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்
குறுக்கு வழி:
WP:2011taWikiReport