விக்கிப்பீடியா:2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2010 Tamil Wikipedia Annual Review
2010 ம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியா புதிய முயற்சிகளோடு வளர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்து 6,500 கூடி, மொத்தம் 26,700 ஆக உயர்ந்தது.[1] கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வளர்ச்சி மிகக் கூடியதாகும். பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய இரண்டு மடங்காகி, 24,000 க்கும் மேலாக கூடியுள்ளது.[2] 2010-இல் புதிதாக நான்கு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். நாள்தோறும் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு கடந்த ஆண்டை விட 25,000 ஆல் கூடி 89,256 ஆக உயர்ந்தது.[3]
செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட 2010 தமிழ் இணைய மாநாட்டில் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றி விளக்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரங்குகளில் தமிழ் விக்கிப்பீடியர்களால் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் உதவியுடன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அறிமுகங்கள் வழங்கப்பட்டது. இணைய மாநாட்டில் நடைபெற்ற தமிழ் மி்ன்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் தேனி.மு.சுப்பிரமணிதமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ் இணையக் கல்விக்கழகம் இரண்டு இலட்சம் சொற்களைக் கொண்ட தரவுத்தளத்தை தமிழ் விக்சனரியில் சேர்ப்பதற்கென வழங்கியது.
2010 விக்கிமேனியா மாநாடு கடான்சுகு, போலந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மயூரநாதன் சமர்ப்பித்த Tamil Wikipedia: A Study of The Challenges and Potentials in Relation to Socio-Cultural Context of the Tamil Community(தமிழ் விக்கிப்பீடியா: சமூக பண்பாட்டுச் சூழலில் தடைகளும் வாய்ப்புக்களும் பற்றிய ஒர் ஆய்வு)[5] என்ற கட்டுரையும், இரவிசங்கர் சமர்ப்பித்த A Review of Google Translation project in Tamil Wikipedia: Role of voluntarism, free and organically evolved community in ensuring quality of Wikipedia (தமிழ் விக்கிப்பீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்புச் செயற்திட்டம் பற்றிய மதிப்பீடு: விக்கிப்பீடியாவின் தரத்தை உறிதிப்படுத்துவதில் இயல்பாக உருவான தன்னார்வலர் குமுகத்தின் பங்கு)[6] என்ற கட்டுரையும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரவி நேரடியாக கலந்து கொள்ள முடியாமையால் மயூரநாதன் இரு கட்டுரைகளையும் வழங்கினார். இரவியின் கட்டுரை தொடர்பாக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன, நியூயார்க் ரைம்சு போன்ற அனைத்துலக ஊடகங்களிலும் செய்திக் குறிப்புகள் வெளிவந்திருந்தன.[7]
கடந்த ஆண்டில் இருந்து கூகிள் நிறுவனம் அவர்களது மொழிமாற்றிக் கருவியைப் பயன்படுத்தி, துறைசார் மொழிபெயர்ப்பாளர்களையும் ஈடுபடுத்தி ஆங்கில விக்கியில் இருந்து சில இந்திய விக்கிகளுக்கு கட்டுரை மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறது. இந்த கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தினால் நூற்றுக்கணக்கான ஆழமான கட்டுரைகள் விரைவாக ஆக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தொடக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெரும்பாலான கட்டுரைகளின் தரம் மிக மோசமானதாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பிடியர் சமூகம் கூகிள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஓரளவு இணக்க முடிவு எட்டப்பட்டது. தமிழ் விக்கியில் சேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில், ஏற்றுக் கொள்ளப்பட்டத்தக்க தரத்தில் ஆங்கில விக்கியின் சிறப்புக் கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தற்போது மொழிபெயர்க்கப்படுகின்றன.
இந்த ஆண்டு விக்கியூடக அறக்கட்டளையின் இந்தியப் பிரிவும் அலுவலகமும் பெங்களூரில் தொடங்கப்பட்டது.[8] அது தொடர்பான சந்திப்புகளிலும், அணிகளிலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்கு கொண்டார்கள். மேலும் துபாயில் நடந்த சந்திப்பு ஒன்றிலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்கு கொண்டார்கள்.
கடந்த ஆண்டுகளைப் போலவே ஊடகங்கள், பட்டறைகள், நிகழ்வுகள் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவை பரந்த தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டோம். இந்த ஆண்டு இரு அறிமுகப்படுத்தல் பட்டறைகள் பேர்கன், நோர்வேயில்அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட ஆதரவுடன் நடைபெற்றன.[9] பேர்கனில் முதல் முறையாக நிகழ்ந்த 2010 தமிழ் தாய்மொழி மாநாட்டிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் தரப்பட்டது. சென்னையில் நவம்பரில் ஒரு விரிவான பட்டறை நிகழ்ந்தது. ரொறன்ரோ, கனடாவில் யோர்க் பல்கலைக்கழக தமிழ் வகுப்பு மாணவர்களுக்கும், கனடா சொற்கோவைக் குழுவிற்கும் அறிமுகப்படுத்தல்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் முதன் முறையாக டிசம்பர் 28, 2010 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நீண்ட காலத்திற்குப் பின்பு இலங்கையில் இருந்து பங்களிப்புகள் மீண்டும் வளர்ச்சி பெறத் தொடங்கி உள்ளன. தமிழில் உயர் கல்வி வரை இருக்கும் இலங்கை தமிழ் விக்கியூடகங்களுக்கு ஒரு முதன்மை வளர்ச்சி முனை ஆகும்.
தமிழ் விக்கிப்பீடியா, விக்கியூடகத் திட்டங்கள் பற்றிய ஆய்வு மற்றும் செய்திக் கட்டுரைகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தினமணியில்தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்![10] என்ற மு. இளங்கோவன் எழுதிய கட்டுரை வெளியானது. இந்தியன் எக்சுபிரசு, த இந்து, தினமலர், தாய் வீடு, காலம் சஞ்சிகை போன்ற பல ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆக்கங்கள் வெளிவந்திருந்தன. தமிழ் விக்கிப்பீடியா குறித்து அனைத்து வாசகர்களுக்கும் எளிமையாக அறிமுகம் செய்யும் வண்ணம் தேனி.மு.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் இந்த ஆண்டு வெளியானது.
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை வேகப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு தன்னார்வலர் நடுவம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நடுவம் தமிழ் விக்கியூடகத் திட்டங்கள், தமிழ்க் கணிமை, பல்லூடக ஆவணப்படுத்தல், அறிவியல் தமிழ், உசாத்துணை ஆய்வு போன்ற துறைகளில் களப்பணியில் ஈடுபடலாம் எனப்பட்டது. எனினும் தமிழ்நாட்டில் வலுவான ஒரு விக்கி அணி இன்னும் இல்லாதால் இந்தத் திட்டம் ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, பிரித்தானியா, யேர்மனி போன்ற தமிழர்கள் செறிந்து வாழும் இதர நாடுகளில் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பயனர்களைக் கூட்டுவது எமது நோக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு சில நல்ல பயனர்களை இந்த நாடுகளில் இருந்து பங்களிக்கத் தொடங்கி உள்ளார்கள். எனினும் தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகம் மிகவும் குறைந்தளவே இங்கு உள்ளது.
2005, 2006, 2007, 2008, 2009 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.
இந்த 2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2010 ஆண்டு செயல்பாடுகளை விவரித்து, 2011 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007, 2008, 2009 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்களைப் பாக்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.