விலங்கினவாதம்

விலங்கினவாதம் (ஆங்கிலம்: Speciesism) என்பது இன உறுப்பின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு ஆகும்.[1][2][3] அஃதாவது இருவேறு இன விலங்குகளின் நலத்தேவைகள் ஒன்றாக இருப்பினும் ஒரு இனத்தை மேன்மையாகவும் மற்றொன்றை தாழ்மையாகவும் நடத்தும் பாகுபாட்டை இச்சொல் குறிக்கிறது.[4][5] குறிப்பாகக் கூறின், ஒத்த நலத்தேவைகள் உள்ள இருவேறு இன விலங்குகளை அவற்றின் இன அடிப்படையில் வேறுபடுத்தி அத்தேவைகளை சமமாகக் கருதத் தவறும் செயலே விலங்கினவாதம் எனப்படும். இச்சொல் முதன்முதலில் 1970-ல் ரிச்சர்ட் ரைடர் என்ற அறிஞரால் பயன்படுத்தப்பட்டது. விலங்கினவாதத்தை "தனது சொந்த இனத்தின் நலன்களுக்கு ஆதரவாகவும் மற்ற இனங்களின் நலன்களுக்கு எதிராகவும் எடுக்கும் ஓரவஞ்சனையுடன் கூடிய ஒரு சார்பு நிலை" என்று ரைடர் விவரிக்கிறார்.[6] விலங்குகள் தங்களுக்காகத்தான் படைக்கப்பட்டவை என்றும் விலங்குகளைத் தங்கள் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் மனிதர்கள் கருதுவதற்கு விலங்கினவாதமே காரணம் என்றும் சமூகத்தில் விலங்கினவாதச் சிந்தனை வெகுவாகவே விரவிக்கிடக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.[7][8][9] விலங்குகளை மனிதர்கள் பயன்படுத்திக் கொள்வதையும் விலங்குச் சுரண்டலையும் ஆதரிக்கும் நபர்கள் நிறவாதம், பால்வாதம் போன்ற மற்ற பாகுபாடுகளையும் ஆதரிப்பவர்களாக இருப்பர் என்று மென்மேலும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கூடுதலாக, இஃது ஒடுக்குமுறைகளையும் பாரபட்சங்களையும் நியாயப்படுத்தும் மனித ஆதிக்க எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றும் இவ்வாராய்ச்சிகள் நிறுவுகின்றன.[8][9][10][11][12]

நிறவாதம், பால்வாதம், தற்பாலினர் வெறுப்பு போன்ற பாரபட்சங்களுக்கும் விலங்கினவாதத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்று அறிஞர்கள் நிறுவுகின்றனர்.[1][11][13][14][15][16] பாகுபாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக விலங்கினவாதம் முதன்முதலில் 1970-ம் ஆண்டு விலங்குப் பரிசோதனைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டது. விலங்குப்பண்ணைத் தொழில், விலங்கு அறுப்பு, வன்விளையாட்டுகள் (காளைச் சண்டை, ஜல்லிக்கட்டு, ரோடியோ), விலங்குத் தோல் மற்றும் உரோமத் தயாரிப்பு, விலங்குகளின் மீதான பரிசோதனை[17][18][19][20] ஆகியவற்றை உள்ளடக்கிய விலங்குத் தொழிற்கூட்டின் இயக்கத்தில் விலங்கினவாதம் தலையாய பங்கு வகிக்கிறது என்று அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்களும் சுட்டுகின்றனர்.[21] மேலும் காட்டில் வாழும் விலங்குகளின் இயற்கை இன்னல்களை களையாதிருத்தல்,[22][23] ஒரு சில விலங்குகளை தொல்லை தரும் இனங்களாகப் பகுத்து பின்னர் அப்பகுப்பின் அடிப்படையில் அவ்விலங்கினங்களை அழித்தல் போன்ற செயல்களனைத்தையும் விலங்கினவாதத்தின் வெளிப்பாடாகவே அறிஞர்கள் கருதுகின்றனர்.[24] ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரு விலங்கின் இயற்கையான நலத்தேவைகளை தடை செய்து அவ்விலங்கினை ஒடுக்குவதற்குக் காரணமாக விலங்கினவாதம் அமைவதால் அதனை அறிஞர்கள் "பொன் விதியினை மீறும் பாகுபாடு" என்றழைக்கின்றனர்.[14]

விலங்கினவாதத்தை ஆராய்ந்து வரையறுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பீட்டர் சிங்கர், ஆஸ்கார் ஹோர்டா, ஸ்டீவன் எம். வைஸ், கேரி எல். பிரான்சியோனி, மெலனி ஜாய், டேவிட் நிபர்ட், ஸ்டீவன் பெஸ்ட், இங்க்ரிட் நியூகர்க் ஆகியோர் ஆவர். கல்வியாளர்களிடையே, அறவொழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றோடு விலங்கினவாதக் கருத்தும் கணிசமான தத்துவ விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.[30]

வரலாறு

தொகு

முன்னோடியான சிந்தனைகள்

தொகு

1753-ல் வெளியிடப்பட்ட இயற்கை வரலாறு (Histoire Naturelle) என்ற தனது படைப்பில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலரான பஃப்பன், "நம்முடைய அமைப்பை ஒத்த விலங்குகள் நம்மைப் போன்ற உணர்வுகளை அனுபவிக்க வல்லதாக இருக்கும்" என்பதிலோ "அந்தத் தன்மை அவற்றின் உணர்வுகளின் செயற்பாட்டிற்கும் முழுமைக்கும் ஏற்ற விகிதாசாரத்தில் இருக்கும்" என்பதிலோ சந்தேகம் ஏதும் இருக்க முடியுமா என்று கேள்வி ஒன்றை எழுப்பினார்.[31] இந்த வலியுறுத்தல்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதாக அதில் அவர் கூறியிருந்தார்.[32] "Poème sur le désastre de Lisbonne" என்ற தனது கவிதையில் வோல்ட்டயர் மனிதர்களையும் பிற விலங்குகளையும் உள்ளடக்கிய உணர்திற உயிரினங்களிடையே ஒரு உடன்பிறந்த உறவு இருப்பதை விவரித்தார்: "ஒரே கடுஞ்சட்டத்தால் பிறந்த அனைத்து உணர்திறப் பொருட்களும், / என்னைப் போலவே துன்பப்படுகின்றன, என்னைப் போலவே இறக்கின்றன."[33]

1824-ல் வெளியிடப்பட்ட தனது "மனிதன் மற்றும் மிருகங்களின் நிலைமை பற்றிய தார்மீக விசாரணைகள்" என்ற படைப்பில் ஆங்கில எழுத்தாளரும் விலங்குரிமை ஆர்வலருமான லெவிஸ் கோம்பெர்ட்ஸ் சமத்துவம் பற்றியும் மனிதரல்லா விலங்குகளிடம் (non-human animals) அச்சமத்துவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் விவரித்தார்.[34] மனிதர்களும் பிற விலங்குகளும் அனுபவிக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் மிகவும் ஒத்திருப்பதாக அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "நம்மை பாதிக்கும் விஷயங்கள் பொதுவாக விலங்குகளையும் ஒரே மாதிரியாகப் பாதிக்கின்றன; குறைந்தபட்சம் பசி, ஆசை, முன்னவரைப் பின்பற்றுதல், சுதந்திரத்தின் மீதான தாகம், விளையாட்டுத்தனம், பயம், அவமானம், கோபம் உள்ளிட்ட பல உணர்வுகள் இருவருக்கும் பொதுவானவை."[35]:41–42 மனிதர்களும் பிற விலங்குகளும் ஒத்த பல உடலியல் பண்புகளைப் பொதுவாகக் கொண்டுள்ளன என்றும் இதுவே "உணர்வுகளின் ஒப்புமைக்குச்" சான்று என்றும் அவர் சுட்டுகிறார்.[35]:41–42 மனிதரல்லா விலங்குகளை மனிதர்கள் பயன்படுத்துவதை கடுமையாக விமர்சிக்கும் கோம்பெர்ட்ஸ், "விலங்குகளின் உணர்வுகள், தேவைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல்" மனிதர்கள் அவற்றைப் தங்கள் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிடுகிறார்.[35]:27

ஆங்கில இயற்கையியலாளர் சார்லஸ் டார்வின் 1838-ல் தனது குறிப்பேட்டில் மனிதன் தன்னை கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பாகக் கருதினாலும் "விலங்குகளிலிருந்து மனிதன் படைக்கப்பட்டிருப்பதாகக் கருத வேண்டும் என்பது தான் உண்மை" என்றே தான் நினைப்பதாகப் பதிவு செய்கிறார்.[36] தனது 1871-ம் ஆண்டு புத்தகமான தி டிசென்ட் ஆஃப் மேன் என்ற நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்:

மனிதமையவாதம் என்பது கிறித்தவ, யூத மதங்களின் அடிப்படைக் குறைபாடு என்று ஜெர்மானிய மெய்யியலாளர் ஆர்தர் ஷாபன்ஹவுர் சுட்டுகிறார். ஆபிரகாமிய மதங்கள் மனிதனை விலங்குகளின் உலகத்திலிருந்து தனியே பிரித்து, விலங்குகளை பொருட்களாக மட்டுமே கருதுவதற்கு வழிவகுப்பதால் இது விலங்குகள் உள்ளிட்ட உணர்வுள்ள உயிரினங்களுக்குப் பெரும் துன்பங்களைத் தருவதாக அவர் கூறுகிறார். அதே சமயம் பிராமணியம், பௌத்தம் உள்ளிட்ட இந்திய சமயத் தத்துவங்களை மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் இடையிலான உறவின் மீது அக்கறையும் கவனமும் செலுத்துவதற்காகவும், அதோடு அவற்றுக்கிடையேயான தொடர்பினை பரகாயப் பிரவேசம் உள்ளிட்ட சிந்தனைகள் மூலம் வலியுறுத்துவதற்காகவும் ஸ்கோபன்ஹவுர் பாராட்டுகிறார்.[38]

 
ஹென்றி எஸ். சால்ட் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே "பெரிய இடைவெளி உண்டு" என்ற கருத்தை வன்மையாக எதிர்த்தார்.

ஆங்கில எழுத்தாளரும் விலங்குரிமை ஆர்வலருமான ஹென்றி எஸ். சால்ட், 1892-ம் ஆண்டு அனிமல்ஸ் ரைட்ஸ் ("விலங்குகளின் உரிமைகள்") என்ற தனது நூலில், மனிதர்கள் மற்ற விலங்குகளுக்கு நீதி வழங்க முதலில் தமக்கும் விலங்குகளுக்குமிடையே "பெரிய இடைவெளி உண்டு" என்ற கருத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டும் என்று உரைக்கிறார். "அனைத்து உயிரினங்களையும் ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தில் இணைக்கும் மனிதாபிமானம் என்ற பொதுவான பிணைப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும்" என்று மேலும் அவர் வலியுறுத்துகிறார்.[39]

1897-ல் வெளியிடப்பட்ட எவல்யூஷனல் எதிக்ஸ் அண்ட் அனிமல் சைக்காலஜி என்ற தனது நூலில் அமெரிக்க அறிஞரும் விலங்குரிமை ஆர்வலருமான எட்வர்ட் பெய்சன் ஈவன்ஸ், மனிதமைய உளவியலையும் மனிதமைய நெறியியலையும் கடுமையாக விமர்சித்தார். "இவை மனிதனை அடிப்படையில் வேறுபட்டதாக அமைத்தும் மனிதனை மற்ற எல்லா உணர்திற விலங்குகளிலிருந்தும் முற்றிலும் பிரிக்கப்பட்ட ஒரு உயிரினமாக பார்க்கச் செய்தும், இதன் மூலம் மனிதனுக்கு மற்ற விலங்குகளிடம் எந்த ஒரு மனப் பிணைப்பும் தார்மீகக் கடமைகளும் இல்லை என்பதாகவும் சித்தரிக்கின்றன" என்று ஈவன்ஸ் குற்றம் சாட்டுகிறார்.[40]:83 டார்வினிய பரிணாமக் கோட்பாடு அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களிடமும் மனிதரல்லா விலங்குகளிடமும் அனைவருக்கும் உள்ள தார்மீகக் கடமைகளையே நினைவுறுத்துகிறது என்று ஈவன்ஸ் சுட்டுகிறார். அடிமைகளுக்கு நிகழும் கொடுமைகள் தடுக்கப்பட்டு அடிமைத்தனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதோடு மட்டும் நில்லாமல் மனிதரல்லா விலங்குகளிடம் மனிதர்களுக்கு வெறும் அன்பு மட்டுமல்லாது அதைத் தாண்டிய காருண்யம் வேண்டும் என்பதை அக்கடமைகள் வலியுறுத்துகின்றன என்பது ஈவன்ஸின் கூற்று.[40]:14 விலங்குகளைப் பாதுகாப்பதற்கு அவற்றிற்கான உரிமைகள் தேவை என்றும் அவ்வுரிமைகள் எப்போதேனும் மீறப்பட்டால் அவை வலுகொண்டு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஈவன்ஸ் கூறுகிறார்.[40]:14 மனிதர்களுக்கும் மிக அற்பமான உணர்திற உயிரினங்களுக்குமிடையேயான உறவின் பரவலான அங்கீகாரம் என்பது அச்சிறு விலங்குகளைக் கூடப் புறக்கணிப்பது அல்லது தவறாக நடத்துவது என்பதை சாத்தியமற்றதாக்கி விடுகிறது என்று ஈவன்ஸ் வாதிடுகிறார்.[40]:135

தி ஜூபிலிஸ்ட் ஆய்விதழில் 1898-ம் ஆண்டு "மானுடமைய நெறிகள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கிறித்தவ சமயத்திற்கு முன்னர் இருந்த ஆரம்பகால நாகரிகங்கள் உணர்திற உயிரினங்களின் மீது அன்பும் கருணையும் கொண்டிருப்பதை ஒரு சட்டமாகக் கருதின என்ற குறிப்பு காணப்படுகிறது. சரத்துஸ்தர், புத்தர் உள்ளிட்டோர் இந்த தத்துவத்தை ஆதரித்தனர் என்றும் பிராமணர்களையும் பௌத்தர்களையும் போலவே ஆரம்பகால கிரேக்க மெய்யியலாளர்கள் பரகாயப் பிரவேசக் கோட்பாட்டைப் பின்பற்றினர் என்றும் இதுவே காலப்போக்கில் அவர்களனைவரும் தாவர உணவுமுறையை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கேள்விக்கப்பாற்பட்ட இந்த மன ஒருமைப்பாட்டின் உண்மை ஆரம்பகால கிறித்தவ சகாப்தம் வரை எடுத்துச் செல்லப்பட்டது என்றும், கிறித்தவம் அதை ஏற்க மறுத்த போது கிரேக்கத் தத்துவஞானி செல்சஸ் அதை எதிர்த்துத் தீவிரமாக விமர்சித்தார் என்றும் அக்கட்டுரை உரைத்தது. மனிதர்களின் நலனுக்காகவே விலங்குகள் உருவாக்கப்பட்டன என்றும் அவை வெறும் தானியங்கி போன்றவையே என்றும் ஆரிஜென் உள்ளிட்ட ஆரம்பகால கிறித்தவ எழுத்தாளர்கள் கருதினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அக்கட்டுரை, இந்த நம்பிக்கை அம்மதத்தில் இன்றுவரை தொடர்கிறது என்று குறிப்பிட்டது. "விலங்கு உளவியலும் பரிணாம நெறிகளுடன் அதற்கு இருக்கும் தொடர்பும் அறிவியலாளர்களின் கவனத்தை மட்டுமின்றி அறநெறியாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு துறையாக மாறியுள்ளது. இனியும் இதனை நாம் அலட்சியத்துடனும் அவமதிப்புடனும் பார்க்க முடியாது. விலங்குகளின் உலகமே நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே உள்ளது என்ற தவறான கருத்தியலைத் தாண்டிய சிந்தனை நமக்குத் தேவைப்படுகிறது" என்பதாக அக்கட்டுரை முத்தாய்ப்பு ஒன்றை வைத்தது.[41]

1895-ல் அமெரிக்க விலங்கியல் நிபுணரும், மெய்யியலாளரும், விலங்குரிமை ஆர்வலருமான ஜே. ஹோவர்ட் மூர், தாவர உணவு முறையே அனைத்து உயிரினங்களின் பரிணாம உறவின் நெறியியல் முடிவு என்று விவரித்தார். இதை மேலும் அவர் "சார்லஸ் டார்வினின் உயிரியல் ஞானத்திற்கு ஏற்ற நெறியியல் விரிவாக்கம்" என்று அழைத்தார்.[42] எனினும் தற்போதைய நெறியியல் அனைத்து மனிதரல்லா விலங்குகளும் இவ்வுலகமும் மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டவை என்ற "டார்வினியத்திற்கு முந்தைய மாயை"யையே இன்னும் நம்பிக்கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.[42] பெட்டர் வர்ல்ட் ஃபிலாசஃபி என்ற தனது 1899-ம் ஆண்டு புத்தகத்தில் மனித நெறியியல் சிந்தனைகள் மனிதனை மட்டுமே சார்ந்து இயங்கும் "பரிணாமத்தின் மனிதமையவாத கட்டத்தில்" இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். "தனிநபரிடமிருந்து குடி, குடிகளிலிருந்து குலம், குலத்திலிருந்து பாலினம், பாலினத்திலிருந்து மனித இனம் என்று வளர்ச்சியடைந்து, இன்று பெரும்பாலானோரின் அறச் சிந்தனையானது, வெளிப்படைத்தன்மையிலும் நேர்மையிலும் சற்று கூடவோ குறைந்தோ, மனித நிறங்கள், மனிதப் பாலினங்கள், மனிதப் படிநிலைகள் என்று மனிதனை மையமாகக் கொண்டே வளர்ந்திருக்கிறது" என்று விவரிக்கிறார். நெறியியல் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் "ஒட்டுமொத்த உணர்திறப் பிரபஞ்சத்தின்" நெறிகளையும் கருத்தில் கொள்ளும் "விலங்கின மையவாதம்" என்றே இருக்கும் என்று அவர் நிறுவுகிறார்.[43]

தி யுனிவர்சல் கின்ஷிப் என்ற தனது 1906-ம் ஆண்டு புத்தகத்தில், மற்ற விலங்குகள் மீதான "மாகாணவாத" (அதாவது தான் மட்டும் ஒரு தனி வகையைச் சேர்ந்தவன் என்ற) மனப்பான்மையே மனிதர்கள் விலங்குகளைத் தவறாக நடத்துவதற்கு வழிவகுக்கிறது என்று மூர் நிறுவுகிறார். மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நெறியியல் தொடர்பை மறுப்பது என்பது "ஒரு குடியையோ, குலத்தையோ அல்லது சமூகத்தையோ சார்ந்த மனிதர்கள் மற்ற குடி, குல, அல்லது சமூக மனிதர்களோடு தங்களுக்குள்ள நெறியியல் தொடர்பை மறுப்பதற்கு ஒப்பாகும்" என்று சுட்டுகிறார்.[44]:276 மனிதர்களின் மானுடமையக் கண்ணோட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் மூர், "விலங்குகளிடம் நாம் நடந்து கொள்ளும் விதத்தைக் குறித்து நாம் நினைக்கையில் ... முற்றிலும் மனிதமையக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறோம். நம்மால் பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் நம்மை நிறுத்திப் பார்க்க நாம் ஒருபோதும் நேரம் ஒதுக்குவதில்லை" என்று கூறுகிறார்.[44]:304 பொன் விதி என்பது அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மூர் தனது முடிவுரையில் வலியுறுத்துகிறார். "'உன்னைப் போலவே பிறரையும் நடத்து' என்பது ஒரு கறுப்பு ஆணுக்கோ வெள்ளைப் பெண்ணுக்கோ மட்டுமானதல்ல, அது ஒரு சிவப்புக் குதிரைக்கும் சாம்பல் நிற அணிலுக்கும் கூடப் பொருந்தும்; அது உன்னைப் போன்றே உடற்கூறு கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்" என்பது மூரின் துணிபு.[44]:327

சொல்லாக்கம்

தொகு
 
"விலங்கினவாதம்" என்ற சொல்லை ரிச்சர்ட் டி. ரைடர் 1970-ல் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.

விலங்கினவாதம் என்பதன் ஆங்கிலச் சொல்லான ஸ்பீஷீஸிசம் என்ற சொல்லும் அது ஓரவஞசனையோடு கூடிய ஒரு தப்பெண்ணம் என்ற வாதமும் முதன்முதலில் 1970-ம் ஆண்டு பிரித்தானிய உளவியலாளரான ரிச்சர்ட் டி. ரைடரால் எழுதப்பட்டு தனியாக அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் முன்வைக்கப்பட்டது. ரைடர் அப்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் தற்போது "ஆக்ஸ்போர்டு குழுமம்" என அழைக்கப்படும் ஒரு கல்வியாளர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஆக்ஸ்போர்டு குழுமம் என்பது அச்சமயம் புதிதாக உருவாக்கப்பட்டு வளர்ந்து வரும் விலங்குரிமைக் குழு ஆகும். கவலைக்குரிய பகுதிகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் அக்குழுவின் செயல்பாடுகளில் ஒன்றாகும்; "விலங்கினவாதம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரமானது விலங்கு ஆராய்ச்சிகளுக்கு எதிராக எழுதப்பட்டது.[45] இந்த சொல்லானது நிறவாதம், பால்வாதம் ஆகியவற்றிற்கு ஒப்பாகவும் அவற்றில் இழைந்தோடும் பொதுவான சிந்தனையை திட்டவட்டமாக இணைக்கும் நோக்கிலும் அவ்வறிஞர்களால் உருவாக்கப்பட்டது.[46][47]

அத்துண்டுப்பிரசுரத்தில் ரைடர் "டார்வினின் காலத்திலிருந்து மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் உயிரியல் ரீதியாக 'அதிசயிக்க வைக்கும்' அத்தியாவசிய வேறுபாடு ஏதும் இல்லை என்பது அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பிறகு ஏன் நாம் விலங்குகளோடு தார்மீக ரீதியில் நம்மை முழுமையாக வேறுபடுத்திக் கொள்கிறோம்? அனைத்து உயிரினங்களும் இயற்கையில் ஒரே தொடர் நிறமாலையில் இருக்கையில், நாமும் அதே தார்மீக நிறமாலைத் தொடரில் ஓர் அங்கமாகத்தான் இருக்க வேண்டும்." 1970-களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000,000 விலங்குகள் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும், மற்ற இன விலங்குகளைத் தவறாக நடத்தி அதன் மூலம் நமது சொந்த (மனித) இனத்திற்கு நன்மை தேட முயற்சிப்பது என்பது "சுத்த 'இனவாதம்' என்றும் அது பகுத்தறிவு கொண்டு நியாயப்படத்த இயலாத உணர்ச்சிவயப்பட்ட சுயநல வாதமாகும்" என்றும் அவர் அதில் எழுதியிருந்தார்.[48] ஆக்ஸ்போர்டு குழுமத்தின் உறுப்பினர்களும் மெய்யியல் மாணாக்கர்களான ஸ்டான்லி காட்லோவிச், ரோசாலிண்ட் காட்லோவிச், ஜான் ஹாரிஸ் ஆகியோரால் தணிக்கை செய்யப்படடு தொகுக்கப்பட்டு 1971-ல் வெளியிடப்பட்ட விலங்குரிமை கட்டுரைகள் அடங்கிய அனிமல்ஸ், மென் அண்டு மாரல்ஸ் என்ற தொகுப்பு நூலில் வெளிவந்த "விலங்குகள் மீதான பரிசோதனைகள்" என்ற தனது கட்டுரையில் ரைடர் இந்தச் சொல்லை மீண்டும் பயன்படுத்தியிருந்தார். அதில் ரைடர் கீழ்வருமாறு எழுதியிருந்தார்:

"நிறம்," "இனம்" ஆகிய இரண்டுமே உயிரினங்களை பெரும்பாலும் அவற்றின் உடற் தோற்றத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப் பயன்படுத்தப்படும் தெளிவற்ற சொற்கள் என்ற வகையில் அவற்றுக்கிடையே ஒரு ஒப்புமையைக் காணமுடியும். நிற அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது என்பது சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் ஏற்கப்பட்டாலும் இப்போது அது பரவலாகக் கண்டிக்கப்படுகிறது. இன்று "நிறவாதம்" எதிர்க்கப்படுவது போலவே "விலங்கினவாதமும்" தெளிந்த மனங்களால் வெறுத்து ஒதுக்கப்படும் நாள் ஒன்று வரக்கூடும். இவ்விரண்டு விதமான ஓரவஞ்சனைகளிலும் இழைந்தோடும் நியாயமற்ற தன்மை ஒரே மாதிரியானது. அப்பாவி மனித உயிர்களுக்குத் வேண்டுமென்றே துன்பமிழைப்பது என்பது தார்மீக ரீதியாகத் தவறு என்பதை நாம் ஏற்றுக்கொண்டால், பிற இன அப்பாவி விலங்குகளுக்குத் துன்பமிழைப்பதும் தவறு என்று கருதுவதே தர்க்கரீதியில் நியாயமான சிந்தனையாகும். ... இந்த சிந்தனை ரீதியாகச் செயல்பட வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.[49]

கருத்தின் பரவல்

தொகு
 
பீட்டர் சிங்கர் தனது அனிமல் லிபரேஷன் (1975) என்ற நூலின் வாயிலாக "விலங்கினவாதம்" என்ற சொல்லைப் பிரபலப்படுத்தினார்.
 
2015-ல் மான்ட்ரியல் நகரில் விலங்கினவாதத்திற்கு எதிரான ஒரு பேரணி
 
துரின் நகரில் சுவரொன்றில் காணப்படும் விலங்கினவாதத்திற்கு எதிரான சுவரோவியம்

"விலங்கினவாதம்" என்ற சொல்லை ஆஸ்திரேலிய மெய்யியலாளர் பீட்டர் சிங்கர் தனது அனிமல் லிபரேஷன் (1975) என்ற புத்தகத்தின் வாயிலாகப் பிரபலப்படுத்தினார். ஆக்ஸ்போர்டில் மெய்யியல் மாணவராக இருந்த காலத்திலிருந்தே ரைடரை சிங்கர் அறிந்திருந்தார்.[50] "விலங்கினவாதம்" என்ற சொல்லை உருவாக்கிய பெருமை ரைடரையே சேரும் என்று தனது நூலில் குறிப்பிடும் சிங்கர் அச்சொல்லை அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தின் தலைப்பில் பயன்படுத்தியிருந்தார். "மனிதனின் ஆதிக்கம் ... விலங்கினவாதத்தின் ஒரு சுறுக்கமான வரலாறு" என்று தலைப்பிடப்பட்ட அந்த அத்தியாயத்தில் சிங்கர் விலங்கினவாதத்தை "தனது சொந்த இனத்தின் நலன்களுக்கு ஆதரவாகவும் மற்ற இனங்களின் நலன்களுக்கு எதிராகவும் எடுக்கும் ஓரவஞ்சனையுடன் கூடிய ஒரு சார்பு நிலை" என்று வரையறுத்திருந்தார்:

விலங்கினமானது நலத்தேவைகளின் சமபாவனைச் சிந்தனையை (principle of equal consideration of interests) மீறுகிறது என்று சிங்கர் ஒரு விருப்பப் பயனெறிமுறைக் கோட்பாட்டுக் (preference-utilitarian perspective) கண்ணோட்டத்தில் குறிப்பிடுகிறார். இது ஜெரமி பெந்தாமின் "ஒவ்வொருவருக்கும் ஒன்று என்ற கணக்கில் ஒன்றுக்கு மேல் யாருக்குமில்லை" என்ற கூற்றின் அடிப்படையிலானது. அஃதாவது எந்த ஒரு தனிநபரின் நலனும் மற்றொருவருடைய நலனைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது அன்று என்பதே இதன் சாரம் என்று ஹென்ரி சிட்ஜ்விக் கூறுகிறார்.[52]:5 மனிதர்களுக்கும் மனிதரல்லா விலங்குகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், துன்பத்தை அனுபவிக்கும் தன்மை இரு தரப்பினரிடமும் பொதுவாகவே காணப்படுவதால் அந்தத் தன்மையை நாம் சமபாவனையோடு கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிங்கர் நிறுவுகிறார். ஒத்த நிலையுள்ள இரு வழக்குகளை மாறுபட்ட இருவேறு பாணியில் நடத்த அனுமதிக்கும் எந்தவொரு நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தார்மீகக் கோட்பாடாக இருக்கும் தகுதியை இழந்துவிடும் என்பது சிங்கரது நூலில் விளக்கப்படுகிறது. இதன்பின்னர் "விலங்கினவாதம்" என்ற சொல் உலக அளவில் அறிஞர்கள் மத்தியிலும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான சொல்லாக மாறியது. "விலங்கினவாதம்" என்ற சொல் சீரியதாகப் படவில்லை என்றாலும் இதைவிட ஒரு சிறந்த சொல்லைத் தன்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை என்று சிங்கர் தனது நூலில் குறிப்பிடுகிறார். 1985-ம் ஆண்டு "விலங்கினவாதம்" என்ற சொல் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஒரு பெயர்ச்சொல்லாக ஏற்கப்பட்டது. அந்த அகராதி இச்சொல்லை "மனிதகுலமே மேன்மையானது என்ற அனுமானத்தின் அடிப்படையில் மனிதர்களால் விலங்கினங்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடு அல்லது விலங்கினங்களிடம் செய்யப்படும் சுரண்டல்" என்று வளக்குகிறது.[53] விலங்கினவாதம் என்பது "நிறவெறி, பாலினவெறி ஆகியவற்றிற்கு ஒப்பாக, மனித இனத்தைத் தவிர உள்ள மற்ற விலங்கினங்களுக்கு உரிய வாழ்வு, மரியாதை, நலத்தேவை ஆகியவற்றை மதிக்க மறுக்கும் முறையற்ற நிலைப்பாடு" என்று 1994-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு மெய்யியல் அகராதி (ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி ஆஃப் பிலாசபி) இச்சொல்லுக்கு மேலும் ஒரு பரந்த வரையறையை வழங்கியது.[54]

விலங்கினவாத எதிர்ப்பு இயக்கம்

தொகு

விலங்கினவாதத்தற்கு எதிராக குரலெழுப்பிய முதல் பிரெஞ்சு ஆர்வலர்களான டேவிட் ஒலிவியர், வெஸ் போனார்டெல், மற்றும் பிராங்காய்ஸ் பிளாங்கன் ஆகியோரால் பிரெஞ்சு மொழி ஆய்விதழான Cahiers antispecistes ("விலங்கினவாத எதிர்ப்பாளர்களின் குறிப்பேடுகள்") 1991-ல் நிறுவப்பட்டது.[55] பிரான்சில் விலங்கினவாதத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதும், விலங்கு நெறியியல் தலைப்பில், குறிப்பாக விலங்கின விடுதலைக்கும் சூழலியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கும் விதத்தில், விவாதங்களை ஊக்குவிப்பதும் இவ்வாய்விதழின் நோக்கமாகும்.[56] ஆங்கிலம் பேசும் நாடுகளைப் போலல்லாது ஸ்பானிஷ் பேசும் நாடுகளில் எதிர்விலங்கினவாதச் சித்தாந்தம் (anti-speciesism) எனப்படும் விலங்கினவாத எதிர்ப்புக் கோட்பாடே விலங்குரிமை செயற்பாடுகளுக்கு ஏற்ற அணுகுமுறையாக பெரும்பான்மையாக விளங்குகிறது என்று எஸ்டெலா டியஸ், ஆஸ்கர் ஹோர்டா உள்ளிட்ட அறிஞர்கள் சுட்டுகின்றனர்.[57] இத்தாலியில், தற்கால விலங்கினவாத எதிர்ப்பு இயக்கத்தில் இரண்டு தனித்துவமான போக்குகள் காணப்படுகின்றன: முதலாவது தீவிர மேலாதிக்க எதிர்ப்பு நிலைகளையும் இரண்டாவது பிரதான நவதாராளவாத நிலைகளையும் கொண்டு செயற்படுபவை.[58]

சமீப நாட்களில், பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கம் (Farm Animal Rights Movement), பீட்டா (People for the Ethical Treatment of Animals) உள்ளிட்ட விலங்குரிமைக் குழுக்கள் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று விலங்கினவாதத்திற்கு எதிரான உலக தினத்தைக் கடைபிடித்து அதன் மூலம் விலங்கினவாத எதிர்க்கருத்தை பிரபலப்படுத்தி வருகின்றன.[59][60][61] இது போன்ற மற்றொரு நாள் உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் (WoDES) என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் கடைபிடிக்கப்படுகிறது.[62][63] இந்த நாள் 2015 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடத்தப்படுகிறது.[64]

சமூக உளவியலும் பிற ஓரவஞ்சனைகளுடனான தொடர்பும்

தொகு

விலங்கினவாதமானது மனித இனத்தின் சில குழுக்கள் தங்களை மற்ற குழுக்களை விட உயர்ந்ததாகக் கருதும் நிறவாதம் அல்லது இனவெறி போன்றது என்று பீட்டர் சிங்கர் மற்றும் தாவரவியலாளர் [[ப்ரெண்ட் மிஷ்லர்] உள்ளிட்ட அறிஞர்கள் நிறுவுகின்றனர்.[65][66]

விலங்கினவாதத்திற்கும் நிறவெறி, பால்வாதம், தற்பாலினர் வெறுப்பு உள்ளிட்ட இன்ன பிற தப்பெண்ணப் பாகுபாடுகளுக்கும் இடையே ஒரு ஒழுங்குமுறையிலான தொடர்பு இருப்பதாக மெய்யியல் அறிஞர்கள் தெளிகின்றனர்.[8][10][11] பிற ஓரவஞ்சனைகளுக்கு அடிநாதமாக விளங்கும் அதே உளவியல் செயல்முறைகளும் ஆழ்மன உந்துதல்களும் தான் விலங்கினவாதத்தின் உள்ளடக்க உளவியற் செயற்பாடாகவும் விளங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[10][11][67][68] 2019-ம் ஆண்டு வெளியான வொய் வீ லவ் அண்டு எக்ஸ்ப்ளாய்ட் அனிமல்ஸ் ("நாம் ஏன் விலங்குகளை விரும்பவும் செய்கிறோம் சுரண்டவும் செய்கிறோம்") என்ற நூலில் கிறிஸ்டோஃப் டோண்ட், கோர்டன் ஹாட்சன், அனா சி. லீட், மற்றும் அலினா சால்மென் ஆகிய அறிஞர்கள் விலங்கினவாதத்திற்கும் நிறவாதம், பால்வாதம் போன்ற பிற தப்பெண்ணங்களுக்கும் இடையிலான உளவியல் தொடர்புகளை விரிவாக அலசுகின்றனர்.[8] நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலுமான பாகுபாடுகள் ஒன்றோடொன்று வலுவாகத் தொடர்புடையவை என்று நிறுவுவதன் மூலம் நிறவெறியையும் விலங்கினவாதத்தையும் அறிஞர் மார்ஜெட்கா கோலெஸ் கெளசிக் இணைக்கிறார்.[8] இதன் விளைவாக மனித உரிமை என்ற சிந்தனையே விலங்குரிமை என்ற சிந்தனைக்கு சட்டபூர்வமான அடித்தளத்தை வழங்குகின்றது என்று உரைக்கும் கெளசிக்,[69] மேலும் நிறவாதமும் விலங்கினவாதமும் கூட்டு (சமூக) மற்றும் தனிமனித என இருதளங்களிலும் மனித சுதந்திரத்தோடு தொடர்புடயவை என்று நிறுவுகிறார்.[69] பரிசோதனைகளின் அடிப்படையில் விலங்கினவாதத்தில் அதிக மதிப்பெண் பெறும் நபர்கள் நிறவெறி, பாலினவெறி, தற்பாலினர் வெறுப்பு ஆகியவற்றிலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.[10] விலங்குச் சுரண்டலை ஆதரிக்கும் நபர்கள் மனித சமூகத்தில் நிறவெறிக் கருத்துகளையும் பால்வாதக் கருத்துகளையும் ஆதரிப்பவர்களாகவே இருக்கின்றனர் என்றும்[8][10][11] இத்தகையவர்கள் மனித மேலாதிக்கம், குழு மேலாதிக்கம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் விளைவாக சமத்துவமின்மை ஒடுக்குமுறை ஆகியவற்றை நியாயப்படுத்தத் துணிபர்களாகவும் இருக்கின்றனர் என்றும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.[8][9] இவையாவும் சமூக மேலாதிக்கம் என்னும் உளவியல் சித்தாந்தத்தோடு தொடர்புடையது என்று ஆய்வுகள் நிறுவுகின்றன.[12]

உளவியலாளர்கள் விலங்கினவாதத்தை ஒரு கோட்பாடக இல்லாது ஒரு குறிப்பிட்ட உளவியல் கட்டமைப்பாக அல்லது மனோபாவமாக ஆராயக் கருதி அதற்காகவே பிரத்தியேகமாக லைக்கர்ட் அளவுகோல் ஒன்றை வடிவமைத்துள்ளனர். விலங்கினவாதம் ஆளுமைகளிடையே வேறுபட்டு பிற மாறிகளுடன் தொடர்புடையதான ஒரு நிலையான கட்டமைப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன.[70] எடுத்துக்காட்டாக, விலங்கினவாதமானது தற்பாலினர் வெறுப்பு மற்றும் வலதுசாரி சர்வாதிகாரத்துடன் பலவீனமான நேர்மறையான தொடர்பைக் (weak positive correlation) கொண்டுள்ளது என்றும் அரசியல் பழமைவாதம், நிறவாதம், சமூக அமைப்பினை நியாயப்படுத்துதல் ஆகியவற்றோடு சற்று வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சமூக மேலாதிக்க நோக்குநிலை மற்றும் பால்வாதத்துடன் விலங்கினவாதத்திற்கு மிதமான நேர்மறையான தொடர்புகள் (moderate positive correlations) காணப்படுகின்றன. சமூக மேலாதிக்க நோக்குநிலையானது விலங்கினவாதத்துடன் பெரும்பாலான தொடர்புகளுக்கு அடிகோலுவதாகக் கருதப்படுகிறது; சமூக மேலாதிக்க நோக்குநிலையை கட்டுப்படுத்துவது இவ்வகையான அனைத்துத் தொடர்புகளையும் கணிசமாக குறைக்கிறது என்றும் பலவற்றைப் புள்ளியியல் முக்கியத்துவமற்றதாக ஆக்குகிறது என்றும் தெரியவருகிறது.[70][71] கூடுதலாக, விலங்கினங்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம், நமது உணவுத் தேர்வுகள் ஆகியவற்றின் மீதான நமது சமூக நிலைபாடுகளை விலங்கினவாதம் முன்னறிவிக்கிறது என்றால் அது மிகையல்ல.[70]

மனிதரல்லா விலங்கினங்களுக்கு விலங்கினவாதம் நியாயமற்றது என்று வாதிடுபவர்கள் ஆராய்ச்சி அல்லது விவசாய நோக்கில் சுரண்டப்படும் பாலூட்டிகளையும் கோழிகளையுமே அதிகமாக மேற்கோள் காட்டுகின்றனர்.[59][72][73] பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், பாக்டீரியா போன்றவற்றில் எவையெல்லாம் மனிதர்களுடன் சமமாக நடத்தப்பட வேண்டும் அல்லது சில சந்தர்பங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு நல்கப்பட வேண்டும் என்பது விலங்குரிமை இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவினரால் இன்னும் தெளிவான வரையறை செய்யப்படாமல் உள்ளது. மிரால்ஸ் மற்றும் சக ஆய்வாளர்கள் (2019) நடத்திய ஆய்வில் இருந்து இந்தக் கேள்வி மிகவும் சிக்கலானது என்பது தெரியவருகிறது. அந்த ஆய்வானது மனிதப் பச்சாதாப குணம், இரக்க உணர்வு ஆகியவற்றின் பரிணாமக் கூறுகளையும் மற்ற உயிர்களுக்காக மனமிறங்கும் தன்மையில் மானுடவியல் செயற்பாடுகளின் தாக்கத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அஃதாவது ஒரு உயிரினம் பரிணாம ரீதியாக நம்மிடமிருந்து எந்த அளவுக்கு விலகி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவ்வுயிரினத்தின் மீதான பச்சாதாப உணர்வுடன் கூடிய பந்தப்பிணைப்பு குறைவாக நாம்மிடம் இருக்கும் என்றும் அந்த அளவுக்கு நமது இறக்கத் தன்மையின் அளவும் குறைவானதாகவே காணப்படுகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.[74]

சமூக உளவியலின் அடிப்படையில் விலங்கினவாதம் ஒரு பாரபட்சமாக (அஃதாவது "ஒரு குழுவைச் சார்ந்தோரிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெறுப்போ அல்லது இறக்கமற்ற தன்மையோ கொண்டு அதன் வெளிப்பாடாக அவர்களிடம் நாம் வெளிப்படுத்தும் நம் குணத்திலோ, பழகும் தன்மையிலோ, நடந்துகொள்ளும் விதத்திலோ நடுநிலை தவறியிருத்தல்") அறியப்படுவதால், விலங்கினவாதத்திற்கும் "வழக்கமான" மற்ற வகை பாரபட்சங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு சாமானியரும் அறிய வாய்ப்புள்ளது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தம் சக மனிதர் ஒரு நிறவெறியராகவோ, பால்வெறியராகவோ தற்பாலினர் வெறுப்பு கொண்டவராகவோ இருந்தால் அவரதம் குணநலன்களையும் பண்புகளையும் அவருடன் பழகும் சாதாரண மக்கள் அறிந்து கொள்வது போல் ஒரு விலங்கினவாதியிடமிருந்து அதுபோன்ற குணநலன்களையும் பண்புகளையும் சாதாரண மக்கள் ஊகிக்க முனைகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனினும், விலங்கினவாதத்திற்கும் மற்ற "வழக்கத்திற்கு மாறான" பாரபட்சங்களுக்கும் (எ.கா. உடற்பருமன் கொண்டவர்களிடம் காட்டப்படும் ஓரவஞ்சனை அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீதான எதிர்மறையான அணுகுமுறை) இடையே தொடர்பு உள்ளதா என்பது இன்னும் ஆராய்ச்சி வாயிலாகத் தெரியவில்லை.[75]

விலங்குகளின் அறிவுத்திறன், உணர்திறன் போன்றவற்றைப் பற்றிய புரிதல் இருந்த பின்னரும் கூட மக்கள் சில இன விலங்குகளை வேறு சில இன விலங்குகளோடு ஒப்பீட்டளவில் தார்மீக ரீதியாக குறைவாகவே மதிப்பிடுகிறார்கள் என்று உளவியல் ஆய்வுகள் உரைக்கின்றன.[70] விலங்குகள் மீதான இந்த தார்மீக மதிப்பீட்டின் தன்மையானது அவ்வாறு மதிப்பிடும் நபர்களின் வயதிற்கு ஏற்ப வேறுபடுவதாக ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் குறைவான விலங்கினவாத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்கிறது அந்த ஆய்வின் முடிவு. இது ஒரு நபரின் விலங்கினவாத நம்பிக்கைகளின் வளர்ச்சி அந்தத் தனிநபரின் வாழ்நாளில் சமூகரீதியாகக் கட்டமைக்கப்படுகிறது என்பதையே குறிக்கிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[76]

விலங்குத் தொழிற்கூட்டுடனான தொடர்பு

தொகு

தொழிற்சாலைப் பண்ணைகள், விலங்கு உடற்கூறாய்வு, வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல், உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு வர்த்தகம் போன்ற விலங்குத் தொழிற்கூட்டின் உள்ளடக்க செயற்பாடுகளின் கருத்தியல் அச்சாணியாக விலங்கினவாதம் விளங்குவதாக பியர்ஸ் பெய்ர்ன் கருதுகிறார்.[21] விலங்குத் தொழிற்கூட்டானது ஒருபுறம் விலங்கினவாதத்தின் விளைவாகவும் மறுபுறம் விலங்கினவாதத்தின் காரணமாகவும் விளங்குகிறது என்று ஏமி ஜே. பிட்ஸ்ஜெரால்ட், நிக் டெய்லர் ஆகியோர் தெளிவுபடுத்துகின்றனர்.[7] மேலும் விலங்கினவாதமானது நிறவாதம், பால்வாதம் போன்ற பாகுபாடுகளின் வரிசையில் விளங்கும் ஓர் அடிப்படை பாகுபாடாக இருப்பதையும் அவர்கள் நிறுவுகின்றனர்.[7] இறைச்சி என்பது விலங்குகளிடமிருந்து வருவது என்ற உண்மையினை வெளிப்படுத்தாத வகையில் இயங்குவதே முதலாளித்துவ மற்றும் நவதாராளவாத சிந்தனைகளின் பிடியில் செயற்படும் விலங்குத் தொழிற்கூட்டின் மிக முக்கியப் பகுதி என்பதையும் அவர்கள் சுட்டத் தவறுவதில்லை.[7] மனிதனல்லாத விலங்குகளைப் தங்கள் தேவைக்குப் பயன்படுத்த மனிதர்களுக்கு உரிமை உண்டு என்பதுபோன்ற எண்ணமே விலங்கினவாதத்தின் விளைவால் வருவதாகும் என்பதும் நவீன சமுதாயத்தில் இவ்வெண்ணம் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.[7]

சமூகவியலாளர் டேவிட் நிபர்ட் இவ்வாறு கூறுகிறார்:[77]:208

விலங்குகளை வெறும் பொருளாதார வளங்களாக மட்டுமே குறைத்துப் பார்க்கும் அளவிற்கு அனைத்து வகையான விலங்குப் பொருட்களின் உற்பத்தியும் விலங்கினவாதத்தில் வேரூன்றியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.[3]:422 இயற்கைக்கு மாறாக விலங்குகளை உருவாக்கி அவற்றைப் பெருக்குவதையும் கொல்லுவதையுமே முதலீடாகக் கொண்ட விலங்குத் தொழிற்கூட்டானது விலங்கினவாதத்தின் செயலாக்கக் கருவியாகக் கருதப்படுகிறது. இங்கு விலங்கினவாதம் ஒரு உற்பத்திச் சாதனமாக மாறுவதைக் காணமுடிகிறது.[3]:422 தனது 2011-ஆண்டின் நூலான கிரிட்டிகல் தியரி அண்டு அனிமல் லிபரேஷன் என்ற நூலில் அறிஞர் ஜே. சன்பொன்மட்சு என்பவர் "விலங்கினவாதம் என்பது அறியாமையினாலோ அறமின்மையின் காரணமாகவோ விளையும் ஒன்றாக இல்லாது முதலாளித்துவத்தின் உந்துதலால் எழும் ஒரு உற்பத்தி முறை" என்று வாதிடுகிறார்.[3]:420

சட்டமும் கொள்கைகளும்

தொகு

சட்டம்

தொகு

"விலங்குகள் மீதான வன்கொடுமை சீரிய தடுப்புச் சட்டம்" என்ற தலைப்பில் ஐக்கிய அமெரிக்காவில் விலங்குப் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும் முதல் பெரிய சட்டம் 1867-ல் இயற்றப்பட்டது. இச்சட்டமானது விலங்கு வன்கொடுமை தொடர்பான செயல்களைக் குற்றமாக்கி விலங்குப் பாதுகாப்பை அமல்படுத்தும் உரிமையை சட்டத்திற்கு வழங்கியது. முதலில் விலங்குப் புறக்கணிப்பு, கைவிடுதல், சித்திரவதை, சண்டை, இடம்பெயர்த்தல், தடை செய்யப்பட்ட தரநிலைகள், உரிமத் தரநிலைகள் போன்றவற்றைக் கண்காணிக்கும் நோக்கில் இயற்றப்பட்ட இச்சட்டம் பின்னர் புதிய நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு மாநிலம் வாரியாகத் திருத்தப்பட்ட சட்டமாக உருமாறியது.[78] ஏற்கனவே 1800களின் பிற்பகுதியில் விலங்குரிமை இயக்கமொன்று ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்ட போதிலும், 1970களில் ரிச்சர்ட் ரைடர் விலங்கினவாதக் கருத்தை கல்வித்துறைக்கு எடுத்து வந்த காலகட்டத்தை ஒட்டியே விலங்குத் தொழிற்துறையின் வளர்ச்சியின் விளைவாக விலங்குகள் நடத்தப்படும் விதத்தைக் கண்காணிக்கும் சில சட்டங்கள் இயற்றப்பட்டன.[45] தொழிற்துறையின் வளர்ச்சி காரணமாக அறிவியல் மற்றும் தொழில்துறையில் விலங்கு நல வரையறைகளை மறுவடிவமைக்கும் சட்டம் அமெரிக்காவில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வதைகூடத்தில் வெட்டப்படும்போது கால்நடைகள் அனுபவிக்கும் துன்பங்கள் சிலவற்றைத் தணிக்க உருவாக்கப்பட்ட மனிதாபிமான வதைச் சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் 1958-ல் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 1966-ம் ஆண்டின் விலங்குகள் நலச் சட்டம் 89-வது அமெரிக்கக் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டு அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் அவர்களால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகியது. ஆய்வகப் பரிசோதனைக்காகவும் கண்காட்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் விலங்குகளைக் கையாள்வதில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை முறைகளை வடிவமைத்த இச்சட்டம் பின்னர் திருத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது.[79] பின்னாட்களில் ரிச்சர்ட் டி. ரைடர் மற்றும் பீட்டர் சிங்கர் ஆகியோர் 1970களிலும் 1980களிலும் பிரபலப்படுத்திய சிந்தனைகளுக்கு முன்னறிவிக்கும் விதமாகவும் விலங்குகளின் உரிமைகள் குறித்தும் அவற்றை மனிதாபிமான முறையில் கையாள்வது குறித்தும் நமது மனப்பான்மையை மாற்றும் விதமாகவும் இந்த சீரிய சட்டங்கள் இருந்தன என்பது நோக்கத்தக்கது.

பெருங்குரங்கின நபர்த்தன்மை

தொகு

பெரிய மனிதக்குரங்கு இனங்களின் குணாதிசயங்களைக் கருத்தில் கொண்டு வெறும் விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் அவற்றைக் காக்காது கூடுதலாக அவற்றின் உணர்திறனையும் நபர்த்தன்மையையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே பெருங்குரங்குகளின் நபர்த்தன்மை என்ற சிந்தனையின் மையக் கருத்தாகும். மனிதரல்லா முதனி வகை விலங்கினங்களுக்கு நபர்த்தன்மை வழங்குவது என்பது அவற்றின் தனிப்பட்ட நலத்தேவைகளைக் கருத்தில் கொள்ளும் செயலை உள்ளடக்கியது.[80]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Horta, O., 2010. What is speciesism?. Journal of agricultural and environmental ethics, 23(3), pp.243-266, p.247 "[S]peciesism is the unjustified disadvantageous consideration or treatment of those who are not classified as belonging to one or more particular species"
  2. Merriam-Webster's Collegiate Dictionary (11 ed.). Springfield, MA: Merriam-Webster, Incorporated. 2004. p. 1198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-825-7.
  3. 3.0 3.1 3.2 3.3 Dinker, Karin Gunnarsson; Pedersen, Helena (2016). "Critical Animal Pedagogies: Re-learning Our Relations with Animal Others". In Helen E. Lees; Nel Noddings (eds.). The Palgrave International Handbook of Alternative Education (1 ed.). London: Palgrave Macmillan. pp. 415–430. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/978-1-137-41291-1_27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-41290-4. Speciesism is the name given to the presumption of human superiority over other animals and their subjection to oppression based on this belief.
  4. Duignan, Brian. "Speciesism". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  5. Hopster, Jeroen (2019-12-01). "The Speciesism Debate: Intuition, Method, and Empirical Advances". Animals 9 (12): 1054. doi:10.3390/ani9121054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2076-2615. பப்மெட்:31805715. "There are various definitions of speciesism in circulation in the academic literature and beyond.". 
  6. Singer, 1990, ப. 6,9.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Fitzgerald, Amy J.; Taylor, Nik (2014). "The cultural hegemony of meat and the animal industrial complex". In Nik Taylor; Richard Twine (eds.). The Rise of Critical Animal Studies (1 ed.). Routledge. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9780203797631. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-20379-763-1. Archived from the original on 2021-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Dhont, Kristof; Hodson, Gordon; Leite, Ana C.; Salmen, Alina (2019). "The Psychology of Speciesism". In Kristof Dhont; Gordon Hodson (eds.). Why We Love and Exploit Animals: Bridging Insights from Academia and Advocacy (1 ed.). London: Routledge. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781351181440. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351181440. S2CID 203058733.
  9. 9.0 9.1 9.2 Weitzenfeld, Adam; Joy, Melanie (2015). "An Overview of Anthropocentrism, Humanism, and Speciesism in Critical Animal Theory". In Anthony J. Nocella II; John Sorenson; Kim Socha; Atsuko Matsuoka (eds.). Defining Critical Animal Studies: An Intersectional Social Justice Approach for Liberation. Bern: Peter Lang. pp. 3–27. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3726/978-1-4539-1230-0. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4331-2136-4.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Caviola, Lucius; Everett, Jim A. C.; Faber, Nadira S. (2019). "The moral standing of animals: Towards a psychology of speciesism". Journal of Personality and Social Psychology (Washington, DC: American Psychological Association) 116 (6): 1011–1029. doi:10.1037/pspp0000182. பப்மெட்:29517258. https://doi.apa.org/doiLanding?doi=10.1037%2Fpspp0000182. பார்த்த நாள்: 27 September 2021. 
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 Everett, Jim A. C.; Caviola, Lucius; Savulescu, Julian; Faber, Nadira S. (2019). "Speciesism, generalized prejudice, and perceptions of prejudiced others". Group Processes & Intergroup Relations (Thousand Oaks: SAGE Journals) 22 (6): 785–803. doi:10.1177/1368430218816962. பன்னாட்டுத் தர தொடர் எண்:1368-4302. பப்மெட்:31588179. 
  12. 12.0 12.1 Jackson, Lynne M. (2019). "Speciesism Predicts Prejudice Against Low-Status and Hierarchy-Attenuating Human Groups". Anthrozoös: A multidisciplinary journal of the interactions between people and other animals (London: Taylor & Francis) 32 (4): 445–458. doi:10.1080/08927936.2019.1621514. https://www.tandfonline.com/doi/abs/10.1080/08927936.2019.1621514. பார்த்த நாள்: 27 September 2021. 
  13. Singer, Peter (2009). Animal Liberation: A New Ethics for our Treatment of Animals (4 ed.). New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-171130-5.
  14. 14.0 14.1 Ryder, Richard D. (2017). Speciesism, Painism and Happiness: A Morality for the Twenty-first Century. Andrews UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84540-506-9. இணையக் கணினி நூலக மைய எண் 1004002547.
  15. Peter Singer (July 2009). "Speciesism and moral status". Metaphilosophy (Wiley) 40 (3–4): 567–581. doi:10.1111/j.1467-9973.2009.01608.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-9973.2009.01608.x. பார்த்த நாள்: 27 September 2021. 
  16. Singer, Peter; Mason, J. (2007). The Ethics of What We Eat: Why Our Food Choices Matter. Emmaus, PA: Rodale.
  17. Boscardin, Livia (12 July 2016). Greenwashing the Animal-Industrial Complex: Sustainable Intensification and Happy Meat. ISAConf.confex.com. https://isaconf.confex.com/isaconf/forum2016/webprogram/Paper78184.html. பார்த்த நாள்: 10 August 2021. 
  18. Núria Almiron and Natalie Khazaal (2016). "Lobbying against compassion: Speciesist Discourse in the Vivisection Industrial Complex". American Behavioral Scientist (SAGE Journals) 60 (3): 256–275. doi:10.1177/0002764215613402. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7642. https://journals.sagepub.com/doi/abs/10.1177/0002764215613402. பார்த்த நாள்: 10 August 2021. 
  19. Cameron, Janet (11 April 2014). "Peter Singer on Suffering and the Consequences of "Speciesism"". Decoded Past. Archived from the original on 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  20. "Speciesism". Animal Ethics. 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  21. 21.0 21.1 Beirne, Piers (May 2021). "Wildlife Trade and COVID-19: Towards a Criminology of Anthropogenic Pathogen Spillover". The British Journal of Criminology (Oxford University Press) 61 (3): 607–626. doi:10.1093/bjc/azaa084. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-3529. பப்மெட் சென்ட்ரல்:7953978. https://academic.oup.com/bjc/article/61/3/607/6031472?login=true. பார்த்த நாள்: 19 September 2021. 
  22. Horta, Oscar (2016-07-05). "Changing attitudes towards animals in the wild and speciesism". Animal Sentience 1 (7). doi:10.51291/2377-7478.1109. பன்னாட்டுத் தர தொடர் எண்:2377-7478. https://www.wellbeingintlstudiesrepository.org/animsent/vol1/iss7/15. 
  23. Faria, Catia; Paez, Eze (2015). "Animals in Need: The Problem of Wild Animal Suffering and Intervention in Nature". Relations: Beyond Anthropocentrism 3: 7. https://www.ledonline.it/index.php/Relations/article/view/816/660. 
  24. Abbate, C. E.; Fischer, Bob (November 2019). "Don't Demean "Invasives": Conservation and Wrongful Species Discrimination" (in en). Animals 9 (11): 871. doi:10.3390/ani9110871. பப்மெட்:31717868. 
  25. Hopster, Jeroen (2019-12-01). "The Speciesism Debate: Intuition, Method, and Empirical Advances". Animals 9 (12): 1054. doi:10.3390/ani9121054. பன்னாட்டுத் தர தொடர் எண்:2076-2615. பப்மெட்:31805715. "There are various definitions of speciesism in circulation in the academic literature and beyond. Some authors treat speciesism as an unjustified position by definition. This is problematic, however, since the defensibility of speciesism is subject to substantive debate. A more fruitful approach is to distinguish the descriptive concept of speciesism from its normative evaluation. Here, and in what follows, I will adopt Singer's definition, according to which speciesism involves the preferential consideration of the interests of members of one's own species.". 
  26. Gruen, Lori (2017), "The Moral Status of Animals", in Zalta, Edward N. (ed.), The Stanford Encyclopedia of Philosophy (Fall 2017 ed.), Metaphysics Research Lab, Stanford University, பார்க்கப்பட்ட நாள் 2021-03-06
  27. Jaworska, Agnieszka; Tannenbaum, Julie (2021), "The Grounds of Moral Status", in Zalta, Edward N. (ed.), The Stanford Encyclopedia of Philosophy (Spring 2021 ed.), Metaphysics Research Lab, Stanford University, பார்க்கப்பட்ட நாள் 2021-03-06
  28. Pointing, Charlotte (19 February 2020). "What Is Speciesism? The Animal Rights Issue Explained". LiveKindly. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  29. Best, Steven (2014). The Politics of Total Liberation: Revolution for the 21st Century. Palgrave Macmillan. pp. 6–11, 30–4. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9781137440723. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1137471116.
  30. [25][26][27][28][29]
  31. Buffon, Georges Louis Leclerc (1807). Natural History: Containing a Theory of the Earth, a General History of Man, of the Brute Creation, and of Vegetables, Minerals, &c. &c. &c (in ஆங்கிலம்). London: H. D. Symonds. p. 120.
  32. Caponi, Gustavo (2016-12-08). "La discontinuidad entre lo humano y lo animal en la Historia natural de Buffon" (in es). História, Ciências, Saúde-Manguinhos 24 (1): 59–74. doi:10.1590/s0104-59702016005000030. பன்னாட்டுத் தர தொடர் எண்:1678-4758. பப்மெட்:27982279. 
  33. Voltaire (1912). MacCabe, Joseph (ed.). Toleration and Other Essays. New York; London: G.P. Putnam's sons. p. 258.
  34. Horta, Oscar (2014-11-25). "Egalitarianism and Animals". Between the Species 19 (1). https://digitalcommons.calpoly.edu/bts/vol19/iss1/5. 
  35. 35.0 35.1 35.2 Gompertz, Lewis (1992) [1824]. Singer, Peter (ed.). Moral Inquiries on the Situation of Man and of Brutes. Fontwell: Centaur Press.
  36. Rachels, James (1987). Sugden, Sherwood J. B.. ed. "Darwin, Species, and Morality". Monist 70 (1): 98–113. doi:10.5840/monist19877014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-9662. https://academic.oup.com/monist/article-lookup/doi/10.5840/monist19877014. 
  37. Darwin, Charles (1874). The Descent of Man (in ஆங்கிலம்) (2nd ed.). pp. 45, 85.
  38. Evans, E. P. (September 1894). "Ethical Relations Between Man and Beast". Popular Science Monthly. Vol. 45. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  39. Salt, Henry S. (1894). "The Principle of Animals' Rights". Animals' Rights: Considered in Relation to Social Progress. New York: Macmillan & Co. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  40. 40.0 40.1 40.2 40.3 Evans, E. P. (1898) [1897]. Evolutional Ethics and Animal Psychology. New York: D. Appleton & Company.
  41. "Anthropocentric Ethics". The Zoophilist (National Anti-Vivisection Society) 18 (6): 108. 1898-10-01. https://www.google.com/books/edition/Zoophilist/3j0TAAAAYAAJ. 
  42. 42.0 42.1 Moore, J. Howard (1895). Why I Am a Vegetarian. pp. 19–20.
  43. Moore, John Howard (1899). Better-World Philosophy: A Sociological Synthesis. Chicago: The Ward Waugh Company. pp. 143–144.
  44. 44.0 44.1 44.2 Moore, J. Howard (1906). The Universal Kinship. Chicago: Charles H. Kerr & Co.
  45. 45.0 45.1 Ryder, Richard D. (2000). Animal Revolution: Changing Attitudes Towards Speciesism (in ஆங்கிலம்). Oxford: Berg Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859733257. இணையக் கணினி நூலக மைய எண் 870330772. Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  46. Oberg, Andrew (2016). "All too human? Speciesism, racism, and sexism". Think 15 (43): 39–50. doi:10.1017/S1477175616000051. https://www.cambridge.org/core/journals/think/article/all-too-human-speciesism-racism-and-sexism/71147DF4646FC4F68601FB61C949E4E1. 
  47. Cushing, Simon (October 12, 2003). "Against "Humanism": Speciesism, Personhood, and Preference". Journal of Social Philosophy 34 (4): 556–571. doi:10.1111/1467-9833.00201. பப்மெட்:16619458. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/1467-9833.00201. 
  48. Ryder, Richard D. (Spring 2010). "Speciesism Again: the original leaflet". Critical Society (2): 1–2. http://www.criticalsocietyjournal.org.uk/Archives_files/1.%20Speciesism%20Again.pdf. 
  49. Ryder (1971), p. 81
  50. Diamond (2004), p. 93; Singer (1990), pp. 120–121
  51. Diamond (2004), p. 93; Singer (1990), pp. 120–121
  52. Singer, Peter (2009). Animal Liberation. New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-171130-5. {{cite book}}: Check |author-link= value (help)
  53. Wise (2004), p. 26
  54. Blackburn, Simon (1994). The Oxford Dictionary of Philosophy (in ஆங்கிலம்). Oxford; New York: Oxford University Press. pp. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192116949. இணையக் கணினி நூலக மைய எண் 30036693.
  55. Ruhlmann, P. (2018-02-12). "Voulons nous toujours tuer des animaux?" [Do we still want to kill animals?]. Des utopies (in பிரெஞ்சு). Archived from the original on 2021-04-27. பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  56. Olivier, David. Interview with Françoise Duvivier. Cahiers Antispecistes Lyonnais: A French Magazine About the Animal's Liberation. 1993.
  57. Díaz, Estela; Horta, Oscar (2020). "Defending Equality for Animals: The Antispeciesist Movement in Spain and the Spanish-Speaking World". In Carretero-González, Margarita (ed.). Spanish Thinking about Animals. Michigan State University Press. pp. 167–184. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14321/j.ctvx1hw6p.17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60917-637-2. JSTOR 10.14321/j.ctvx1hw6p. S2CID 243130825.
  58. Losi, Giorgio; Bertuzzi, Niccolò (2020), Cimatti, Felice; Salzani, Carlo (eds.), "What Is Italian Antispeciesism? An Overview of Recent Tendencies in Animal Advocacy", Animality in Contemporary Italian Philosophy, The Palgrave Macmillan Animal Ethics Series (in ஆங்கிலம்), Cham: Springer International Publishing, pp. 71–93, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-030-47507-9_4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-47507-9, S2CID 226662072, பார்க்கப்பட்ட நாள் 2021-03-03
  59. 59.0 59.1 "World Day Against Speciesism". PETA (in அமெரிக்க ஆங்கிலம்). 4 June 2010. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  60. "World Day Against Speciesism". 5 June 2013. Archived from the original on 28 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  61. Rao, Siddharth (5 June 2021). "Call to shun 'speciesism', love all animals". Telangana Today (Hyderabad: Telangana Publications). https://telanganatoday.com/call-to-shun-speciesism-love-all-animals. 
  62. "Activists around the globe celebrate 'World Day for the End of Speciesism'". TCIJ. 2020-08-27. https://www.tcijthai.com/news/2020/8/english/10872. 
  63. Pendyala, Sweta (2018-08-27). "Hyderabadi vegans join hands to end speciesism". ETimes. https://timesofindia.indiatimes.com/entertainment/events/hyderabad/hyderabadi-vegans-join-hands-to-end-speciesism/articleshow/65551456.cms. 
  64. "Previous editions". World day for the end of speciesism. 4 April 2018. Archived from the original on October 30, 2021. பார்க்கப்பட்ட நாள் April 1, 2022.
  65. Birch, Jonathan (2023). "Is 'speciesism' as bad as racism or sexism?" (in en). Nature 618 (7966): 667–668. doi:10.1038/d41586-023-01977-z. 
  66. Sanders, Robert (9 January 2023). "Speciesism, like racism, imperils humanity and the planet". Berkeley News. University of California, Berkeley.
  67. Dhont, Kristof; Hodson, Gordon; Costello, Kimberly; MacInnis, Cara C. (2014). "Social dominance orientation connects prejudicial human–human and human–animal relations". Personality and Individual Differences (Elsevier) 61–62: 105–108. doi:10.1016/j.paid.2013.12.020. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0191886913014074. பார்த்த நாள்: 27 September 2021. 
  68. Dhont, Kristof; Hodson, Gordon; Leite, Ana C. (2016). "Common ideological roots of speciesism and generalized ethnic prejudice: The social dominance human–animal relations model (SD-HARM)". European Journal of Personality (Thousand Oaks: SAGE Journals) 30 (6): 507–522. doi:10.1002/per.2069. https://journals.sagepub.com/doi/10.1002/per.2069. பார்த்த நாள்: 27 September 2021. 
  69. 69.0 69.1 Kaučič, Marjetka Golež (2021). "From racism to speciesism". In María Herrera-Sobek; Francisco A. Lomelí; Luz Angélica Kirschner (eds.). Human Rights in the Americas (1 ed.). London: Routledge. pp. 264–281. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781003120315-21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-003-12031-5. S2CID 233975370.
  70. 70.0 70.1 70.2 70.3 Caviola, Lucius; Everett, Jim A. C.; Faber, Nadira S. (June 2019). "The moral standing of animals: Towards a psychology of speciesism". Journal of Personality and Social Psychology 116 (6): 1011–1029. doi:10.1037/pspp0000182. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-1315. பப்மெட்:29517258. http://psyarxiv.com/m5cwq/. 
  71. Dhont, Kristof; Hodson, Gordon; Leite, Ana C. (2016). "Common Ideological Roots of Speciesism and Generalized Ethnic Prejudice: The Social Dominance Human–Animal Relations Model (SD-HARM)" (in en). European Journal of Personality 30 (6): 507–522. doi:10.1002/per.2069. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-0984. http://dro.dur.ac.uk/28416/1/28416.pdf. 
  72. Sztybel, David (20 April 2006). "Can the Treatment of Animals Be Compared to the Holocaust?". Ethics & the Environment 11 (1): 97–132. doi:10.1353/een.2006.0007. https://muse.jhu.edu/article/196512. பார்த்த நாள்: 29 August 2017. 
  73. Ryder, Richard D. (1975). Victims of Science: The Use of Animals in Research. London: Davis-Poynter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7067-0151-8. இணையக் கணினி நூலக மைய எண் 1321414.
  74. Aurélien, Miralles; Michel, Raymond; Guillaume, Lecointre (20 December 2019). "Empathy and compassion toward other species decrease with evolutionary divergence time". Scientific Reports 9 (19555): 19555. doi:10.1038/s41598-019-56006-9. பப்மெட்:31862944. Bibcode: 2019NatSR...919555M. 
  75. Everett, Jim AC, Lucius Caviola, Julian Savulescu, and Nadira S. Faber. "Speciesism, generalized prejudice, and perceptions of prejudiced others." Group Processes & Intergroup Relations 22, no. 6 (2019): 785-803.
  76. McGuire, Luke; Palmer, Sally B.; Faber, Nadira S. (2022-04-11). "The Development of Speciesism: Age-Related Differences in the Moral View of Animals" (in en). Social Psychological and Personality Science: 194855062210861. doi:10.1177/19485506221086182. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-5506. http://journals.sagepub.com/doi/10.1177/19485506221086182. 
  77. Nibert, David (2011). "Origins and Consequences of the Animal Industrial Complex". In Steven Best; Richard Kahn; Anthony J. Nocella II; Peter McLaren (eds.). The Global Industrial Complex: Systems of Domination. Rowman & Littlefield. pp. 197–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0739136980.
  78. Green, Michael; Stabler, Scott L. (2015). Ideas and Movements that Shaped America: From the Bill of Rights to "Occupy Wall Street" (in ஆங்கிலம்). ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610692526.
  79. "Animal Welfare Act". National Agricultural Library. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  80. Karcher (2009)

மேற்கோள் தரவுகள்

தொகு
  • Singer, Peter (1990 (First edition published 1975)). Animal Liberation. New York: Random House. {{cite book}}: Check date values in: |date= (help)

மேலும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கினவாதம்&oldid=4049655" இலிருந்து மீள்விக்கப்பட்டது