விலங்குத் தொழிற் கூட்டு

விலங்குத் தொழிற் கூட்டு என்பது மனிதரல்லாத விலங்குகளை நிறுவனமயமாக்கிய மனிதப் பயன்பாட்டுச் சுரண்டலுக்கு ஆளாக்கும் செயலுக்குக் காரணமாக அமையும் மனிதத் தேவைகளின் குவியமாகும். விலங்குகள் உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மனித நடவடிக்கைகளும் இதில் அடங்கும், முக்கியமாக உணவுத் தொழில் (எ.கா., இறைச்சி, பால், முட்டை, தேனீ வளர்ப்பு), விலங்கு ஆராய்ச்சி (எ.கா., அறிவியல் கல்வி, தொழில்துறை, விண்வெளிக்கு அனுப்பப்படும் விலங்குகள்), மதச் சம்பிரதாயங்கள் (எ.கா., பலி விலங்குகள், கோயில்களில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள்), மருந்து (எ.கா., கரடியின் பித்தநீர், கோரோசனை, புலியெலும்பு மற்றும் பிற விலங்குப் பொருட்கள்), ஆடை (எ.கா., தோல், பட்டு, கம்பளி, உரோமம்), சுமைதாங்கி (இழுவை) மற்றும் போக்குவரத்து (எ.கா., உழைக்கும் விலங்குகள், விவசாயம், போர் விலங்குகள், தொலையியக்கி விலங்குகள்), ஒய்யாரம், அழகுசாதனப் பொருட்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு (எ.கா., சர்க்கஸ், உயிரியல் பூங்காக்கள், இரத்த விளையாட்டு, வேட்டை, சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள்), தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் (எ.கா., செல்லப்பிராணி வளர்ப்புத் தொழில்) மற்றும் பல. ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட விலங்குச் சுரண்டல் என்ற வகையில் தனிப்பட்ட விலங்கு கொடுமைச் செயல்களிலிருந்து விலங்குத் தொழிற் கூட்டு முற்றிலும் வேறுபடுகிறது. சீரிய விலங்குக் கல்வி துறையின் முக்கியத் தலைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

விலங்குத் தொழிற் கூட்டின் ஒரு பகுதியாக பன்றிகள் கருத்தரிப்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டுள்ள காட்சி. "விலங்குகள் நம்மால் கணினிகள் மற்றும் இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன," என்கிறார் பார்பரா நோஸ்கே.[1]

வரையறைகள்தொகு

விலங்குத் தொழிற் கூட்டு என்ற சொல் டச்சு கலாச்சார மானுடவியலாளரும் தத்துவஞானியுமான பார்பரா நோஸ்கே தனது 1989 ஆம் ஆண்டு மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் புத்தகத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதில் அவர் "விலங்குகள் நம்மால் கணினிகள் மற்றும் இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன" என்று கூறினார்.[2] இந்த சொல் விலங்குகளை உணவு மற்றும் பிற பொருட்களாக மாற்றும் நடைமுறைகள், அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த தொழிற் நடவடிக்கைகளை இராணுவ-தொழிற் கூட்டு முறையோடு தொடர்பு படுத்தியது.[3] இச்சொல்லின் விளக்கம் பின்னர் ரிச்சர்ட் ட்வைன் என்பவரால் மேலும் துல்லியமாக்கப் பட்டது. பெருநிறுவன (விவசாய) துறை, அரசுகள், பொது மற்றும் தனியார் அறிவியல் துறைகளுக்கு இடையிலான சற்றே மறைக்கப்பட்ட வலைபின்னலே விலங்குத் தொழிற் கூட்டு என்றும், பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் உணர்ச்சிப் பரிமாணங்களுடன் கூடிய இத்தொழிற் கூட்டானது நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், படிமங்கள், அடையாளங்கள் மற்றும் சந்தைகளின் விரிவான வரம்பை உள்ளடக்கியது என்றும் விளக்குகிறார் ட்வைன்.[4]

வளாகத்தின் தோற்றம்தொகு

விலங்குத் தொழிற் கூட்டு என்பது ஆதிகாலத்தில் தோன்றிய ஒன்றாகும். பழங்காலத்தில் மனிதர்கள் விலங்குகளை வளா்க்கத் துவங்கியதிலிருந்து இதன் தோற்றத்தை வரலாற்றில் குறிக்க இயலும். இருப்பினும், 1945 ஆம் ஆண்டிலிருந்தே விலங்குத் தொழிற் கூட்டு கணிசமாக வளரத் தொடங்கியது எனலாம். கிம் ஸ்டால்வுட் என்பவாின் கருத்துப்படி விலங்குத் தொழிற் கூட்டானது தனியார்மயமாக்கலை அதிகரித்து அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்கும் நாடுகடந்த புதிய தாராளமயச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். "இது நாடுகடந்த நிறுவனங்களுக்கும் உலகளாவிய மூலதனத்திற்கும் சாதகமானதாகும்" என்கிறாா் அவா்.[5] சோரன்சனின் கூற்றுப்படி, வரலாற்றில் இரண்டு விடயங்கள் மனிதன் விலங்குகளைப் பாா்க்கும் பாா்வையை மாற்றி, விலங்குத் தொழிற் கூட்டை வலுவடையச் செய்துள்ளன: முதலாவது 1865 முதல் தொடங்கி சிகாகோ மற்றும் அதன் கிடங்குகளும் வதைகூடங்களும். இரண்டாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தீவிர விலங்குத் தொழிற்பண்ணைகள், தொழில்துறை ரீதியான மீன்பிடித்தல், உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துதல் ஆகிய முறைகள். இவை இரண்டும் விலங்குகள் மீதான மனித மனப்பான்மையின் மாற்றத்திற்கு தேவையான முடுக்கத்தைத் தந்துள்ளன.[6] அப்டன் சின்க்ளேரின் 1906 நாவலான தி ஜங்கிள் பிறப்பிலிருந்து இறைச்சிக்கூடத்தில் முடிவடையும் வரை விலங்குகள் வாழ்நாள் முழுவதும் தவறாகவும் கொடூரமாகவும் நடத்தப்படுவதை வெளிப்படையாக விவரிக்கிறது.[7] சார்லஸ் பேட்டர்சனின் எடா்னல் டிரெப்லிங்கா என்னும் நூல் வதைகூடங்களில் விலங்குகள் வெட்டப்பட்டு உடற்பாகங்கள் பிரித்தெடுக்கப்படும் முறைகளிலிருந்து ஹென்றி ஃபோர்டு எப்படி தனது தொழிற்சாலைகளில் கார்களின் பாகங்கள் ஒருங்கிணைக்கப்படும் முறைகளை உருவாக்கினார் என்றும், மேலும் நாஜி ஜெர்மனியில் மூன்றாம் ரீச் கட்டிய வதைமுகாம்கள் மற்றும் எரிவாயு அறைகளின் கட்டமைப்பிலும் செயற்பாட்டிலும் எந்த அளவுக்கு வதைகூடங்களின் தாக்கமும் பங்களிப்பு இருந்தது என்பதைப் பற்றியும் விவரிக்கிறது.[8]

வளாகத்தின் பண்புகள்தொகு

விலங்குத் தொழிற் கூட்டு மனித நுகர்வுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக விலங்குகளை பில்லியன் கணக்கில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த விலங்குகள் அனைத்தும் விலங்குத் தொழிற் கூட்டின் சட்டப்பூர்வ சொத்தாகக் கருதப்படுகின்றன. விலங்குத் தொழிற் கூட்டு மனித மற்றும் மனிதரல்லாத விலங்குகளுக்கு இடையில் ஏற்கனவே நிலவியுள்ள குழப்பமான உறவை மேலும் குழப்பமான ஒன்றாக மாற்றியமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது நுகர்வை கணிசமாக அதிகரித்து மனித உயிர்வாழலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.[5] விலங்குத் தொழிற் கூட்டின் பரவலான தன்மையே அதை நம் கவனத்திலிருந்து மறைப்பதாக அமைந்துள்ளது.[5]

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Sorenson, 2014, பக். xii, 299.
 2. Noske, 1989, பக். 20.
 3. Sorenson, 2014, பக். xii, 298.
 4. Twine, 2012, பக். 23.
 5. 5.0 5.1 5.2 Sorenson, 2014, பக். 299.
 6. Sorenson, 2014.
 7. Sinclair, 1906.
 8. Patterson, 2002.

குறிப்புகள்தொகு

மேலும் படிக்கதொகு

 • The rise of Critical Animal Studies. From the Margins to the Centre, Nik Taylor, Richard Twine [eds.], 2014
 • Defining Critical Animal Studies: An Intersectional Social Justice Approach for Liberation, Anthony J. Nocella II, John Sorenson, Kim Socha, and Atsuko Matsuoka [eds.], Institute for Critical Animal Studies, 2014. ISBN 978-1-4331-2136-4.

பன்னாட்டுத் தர தொடர் எண் 1058-1634

 • Animals as Biotechnology. Ethics, Sustainability and Critical Animal Studies, Richard Twine, 2010
 • Critical Animal Studies: Thinking the Unthinkable, John Sorenson (Ed.) (2014). Toronto, Ontario, Canada: Canadian Scholars' Press. 345 pages. ISBN 978-1-55130-563-9
 • Critical Animal Studies: Towards Trans-species Social Justice, Atsuko Matsuoka and John Sorenson (Eds.) (2018). (Rowman and Littlefield International—Intersections series). London: Rowman & Littlefield International. 374 pages. ISBN 978-1-78660-647-1
 • Critical Animal Studies: An Introduction, Dawne McCance. (2013). Albany, NY: SUNY Press. 202 pages. ISBN 978-1-43844-534-2