கொங்கை

மாந்த இனத்தின்பால்சுரக்கும் உறுப்பு
(முலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்பகம் (மாற்று சொற்கள்: கொங்கை, முலை), பெண் பாலூட்டிகளின் உடலில் மேற்பகுதியில் இரு பக்கங்களிலும் அமைந்து, பாற்சுரப்பியைக் கொண்டு பாற்சுரந்து, குழந்தைகளுக்குப் பாலூட்டப் பயன்படுத்தப்படுகிறது. இருபாலருக்கும் ஒரே கருவியல் இழையங்களில் இருந்து மார்பகங்கள் வளருகின்றன. எனினும், பருவமடையும் போது, பெண்களின் பாலின இயக்குநீர்கள் குறிப்பாக ஈத்திரோசன் மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், ஆண்களில் மிகுந்த அளவு ஆண்மையியக்குநீர் காரணமாக மார்பக வளர்ச்சி ஊக்குவிப்பதில்லை. இதன் விளைவாகப் பெண்களின் மார்பகங்கள் ஆண்களை விட முதன்மை வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

மார்பகம்
கொங்கை, முலை
முலைக்காம்புத்தோல், முலைக்காம்பு, முலையின் கீழ்மடிப்பு ஆகியவற்றையுடைய மார்பகங்களின் உருவம்.
விளக்கங்கள்
தமனிஉள் மார்புத் தமனி
சிரைஉள் மார்புச் சிரை
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்mamma (mammalis 'மார்பகத்தின்')[1]
MeSHD001940
TA98A16.0.02.001
TA27097
FMA9601
உடற்கூற்றியல்

ஒவ்வொரு மார்பகமும் 15 முதல் 20 எளிய பாற்சுரப்பிகளைக் கொண்டிருக்கின்றது. தோலடிக் கொழுப்பிழையங்கள் பாற்சுரப்பிகளை உள்ளடக்கி இருப்பதால், மார்பகத்திற்கு அளவும், வடிவமும் கொடுக்கின்றன. ஒவ்வொரு பாற்சுரப்பியும், பாற்சேர்க்கும் சிறுகுழாய்களுடன், முடிவில் பைகளுடன் (லோபூல்) அமைந்துள்ளன; அவை இயக்குநீரின் குறிகைகளுக்கு ஏற்ப பாலை உற்பத்திச் செய்கின்றன. கருவுற்ற காலத்தில் தாய்ப்பாலைச் சுரக்கும் பொருட்டு, அதன் இயக்குநீர்கள் மார்பகத்தில் இழைய வளர்ச்சியும், விரிவாக்கமும் செய்கின்றன. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், புரோலாக்டின் இம்மூன்று இயக்குநீர்களும் மார்பகத்தில் சுரப்பிழையத்தை உருவாக்குகிறது. மேலும், மாதவிடாய் சுழற்சியின் போது மார்பகத்திலும், கருப்பையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

பெண்களின் மார்பகங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டப்படுவதுடன் அவற்றிற்குச் சமூகம், பாலியல் சிறப்பியல்புகள் உள்ளன. பண்டைய, நவீன சிற்பத்திலும், கலையிலும், நிழற் படக் கலையிலும் மார்பகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பெண்ணின் உணர்தலின் படி தங்களின் மெய் உருவத்திற்கும், பாலியல் ஈர்ப்புத்தன்மைக்கும் மார்பகங்களை முதன்மைவாய்ந்ததாகக் கொள்வர். பல மேற்கத்திய பண்பாடுகளில் மார்பகங்களை பாலியலுடனும் இணைப்பதால், உடையற்ற மார்பகங்களை இழிவாகவும், நாணமில்லாத செயலாகவும் கருதுகின்றனர். பெண்களின் மார்பகங்களும், குறிப்பாக முலைக்காம்புகளும் காமவுணர்ச்சிப் பகுதிகளாக உள்ளன. மார்பக அளவிலும், கவர்ச்சியிலும் சில பண்பாடுகளில் முதன்மை கொடுக்கப்படுவதால், பெண்கள் சிலர் தங்கள் மார்பக அளவினைப் பெரியதாகவோ, சரியதாகவோ மாற்றிக்கொள்வதற்கும், மார்பகத்தொய்வினை மாற்றியமைப்பதற்கும் மார்பக ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தை நாடுகின்றனர்.

அமைப்பு தொகு

 
மார்பகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
1. மார்புச்சுவர்
2. மார்புத்தசைநார்கள்
3. சேர்க்குஞ்சிறுகுழாய்கள்
4. முலைக்காம்பு
5. முலைக்காம்புத்தோல்
6. பாற்நாளம்
7. கொழுப்பிழையம்
8. தோல்

பெண்களில் மார்பகங்கள் முதன்மை மார்புத்தசைகளின் மேலடுக்கிலும், பொதுவாக மனித விலா எலும்புக்கூடு முன் இரண்டாவது விலாயெலும்பு நிலையிலுருந்து ஆறாவது விலாயெலும்பு நிலை வரையிலும் நீட்டிக்கின்றது; இதனால், மார்பகங்கள் மிகுந்த மார்புப்பகுதியியையும், மார்புச்சுவர்களையும் மறைத்தபடியுள்ளன. மார்பு முன்னுள்ள மார்பக இழையங்கள் கழுத்துப்பட்டை எலும்பிலிருந்து மார்பெலும்பின் மையத்திற்கு வரையிலும் நீட்டிக்கின்றன. மார்புப் பக்கங்களிலுமுள்ள மார்பக இழையங்கள் அக்குள் வரையிலும், பின்னே கீழ் முதுகிலிருந்து மேற்கையெலும்பு வரை நீட்டித்த மேற்கையெலும்பு ஒடுக்கிநீட்டி உட்சுழட்டுத்தசை வரையிலும் நீட்டிக்கின்றன. ஒரு பாற்சுரப்பியென மார்பகம் பல்வேறு இழையங்களாலான அடுக்குகளைக் கொண்டது; அதில் கொழுப்பிழையமும், சுரப்பிழையமும் மார்பகங்களில் பாற்சுரத்தலைச் செயல்பாடுத்தும் பெரும்பான்மையான இரண்டு இழையங்கள்.[2]:115

வடிவ அமைப்பியல் படி மார்பகம் ஒரு கூம்பாகத் தளத்தில் மார்புச்சுவரையும், நுனியில் முலைக்காம்பையும் கெண்டிருக்கிறது. மேலோட்டமான இழையப்படலத் தோலில் இருந்து கொழுப்பிழையத்தில் 0.5 முதல் 2.5 செ.மீ., வரைப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாரிழையமான கூப்பரின் தொங்கித் தசைநார்கள் மேலோட்டமான இழையப்படலத்திலிருந்து தோலுறை வரைப்பரவி நீட்டிக்கின்றது. பூப்பெய்தோரின் மார்பில் 14 முதல் 18 ஒழுங்கற்ற பாற்சுரக்கும் மடல்கள் காம்பிலும், நாளங்களிலும் 2.0 முதல் 4.5 மிமீ விட்டம் வரை ஒருங்கிணைத்துக் காணப்படுகிறன. பாற்நாளங்கள் உடனடியாக ஒரு சார்புக் கட்டமைப்பைச் செயல்படுவதற்கு அடர்ந்த இணைப்பிழையத்தால் சூழப்பட்டுள்ளன. மார்பகத்தில் சுரப்பிழைய உயிர்வேதியியல் படி ஈஸ்ட்ரோஜனை பற்றுக்கோடுகின்றது; இதனால், ஒரு பெண் மாதவிடாய் நிறுத்தம் அடையும் போது, அவளினுடல் எஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது; பாற்சுரப்பிழையம் பின்னர் மெலிந்தும், உலர்ந்தும் மறைந்துவிடும்; இதன் விளைவாக மார்பகம் கொழுப்பிழையத்தையும், மேலோட்டமான இழையப்படலத்தையும், தொங்கித் தசைநார்களையும், தோலுறையையும் கொண்டிருக்கும்.[3] ஆவியாகும் கூட்டுப்பொருள்கள் இச்சுரப்பிகளில் இருப்பதால் பிறந்த குழற்தைகளுக்கு உண்ணுமுணர்வு நுகர்ச்சியை ஊக்குவிக்கும் பொருளாகப் பணிபுரிகின்றன.[4]

மார்பகத்தின் பரிமாணங்களும், எடையும் பெண்கள் இடத்தில் வேறுபடுகின்றன; ஒவ்வொன்றும் சுமார் 500 முதல் 1,000 கிராம்கள் வரை எடை கொண்டது. ஒரு சிறு நடுத்தர அளவுள்ள மார்பகம் 500 கிராம்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ எடையுடையது; ஒரு பெரிய மார்பகம் சுமார் 750 முதல் 1000 கிராம்கள் வரை எடையுடையது. மார்பகத்தில் இழைய அமைப்பு விகிதங்களும் இதேபோல் பெண்கள் இடத்தில் வேறுபடுகின்றன; சில மார்பகங்களில் கொழுப்பிழையமோ, இணைப்பிழையமோ சுரப்பிழையத்தை விட நிறைந்த விழுக்காட்டிலோ, குறைந்த விழுக்காட்டிலோ இருக்கும்; எனவே, கொழுப்பு, இணைப்பு இழையங்களின் விழுக்காடு மார்பகத்தின் அடர்த்தியைத் (உறுதியைத்) தீர்மானிக்கிறன. ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையில் பருவமடைந்து மார்பகம் வளர்வதிலும், மாதவிடாயிலும், கருவுற்ற நிலையிலும், ஒரு குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டலிலும், மாதவிடாய் நிறுத்தத்திலும் தன்னுடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளது மார்பகங்களின் அளவும், வடிவமும், எடையும் மாற்றமடையும்.

சுரப்பி அமைப்பு தொகு

மார்பகமானது பாற்சுறப்பிகளைக் கொண்டது, அது தாய்ப்பாலைச் சுரந்து ஒரு குழவிக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மார்பகத்தின் முலைக்காம்பு முலைக்காம்புத் தோலால் சூழப்பட்டுள்ளது. முலைக்காம்புத் தோலில் பல எண்ணைச் சுரப்பிகள் உள்ளன, அதன் நிறம் இளஞ்சிவப்பு முதல் அடர் பழுப்பு வரை மாறுபடும். பருவக்ககுழாய் மடல் அலகுகள் மார்பகத்தின் அடிப்படை அலகுகளாகும், இவை கொழுப்பு நிறைந்த தாய்ப்பாலைச் சுரக்கிறது.

தோற்றமும் ஒத்துழைப்பும் தொகு

 
ஒரு கருவுற்ற பெண்ணின் மார்பகங்கள்.

அளவு, வடிவம், தொகுதி, திசு அடர்த்தி, மார்பகங்களின் இடைவெளி போன்ற உருவ அமைப்பின் வேறுபாடுகள் அவற்றின் இயற்கை வடிவத்தையும், தோற்றத்தையும், நெஞ்சில் இருக்கும் நிலையையும் தீர்மானிக்கின்றது. இயல்பான வாழ்வில் இயங்குநீரின் மாற்றங்களாலும் (மாதவிடாய், கருவுற்றல்), மருத்துவ நிலைமைகளாலும் மார்பகங்களின் அளவும், வடிவமும் பாதிக்கப்படுகின்றன. தாய்ப்பால் ஊட்டுவதால் மார்பகத் தொய்வு ஏற்படுமென்று ஒரு பொதுவான நம்பிக்கை வந்துள்ள போதிலும்; புகை பிடித்தல், பல முறை கருவுற்றல், புவி ஈர்த்தல், உடலெடை மாற்றுதல் ஆகியன நான்கு காரணிகளால் மார்பகத்தொய்வு ஏற்படுமென்று அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.

சமச்சீரின்மை தொகு

பெண்களின் மார்பகங்கள் 25% வரை மார்பக்ச் சமச்சீரின்மையைத் தொடர்ந்து தெரியும்படி அமைகின்றது. இவை குறைந்தது ஒரு கோப்பை அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் என வரையறுக்கப்படுகின்றது. 5% முதல் 10% பெண்களில், தங்களின் இடப்பக்க மார்பகம் 62% நிகழ்வுக்கூறுகளில் கடுமையாக வேறுபட்டுச் சற்றுப் பெரியதாக இருக்கின்றது. இடப்பக்க மார்பகம் இருதயத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதே இதற்குக் காரணம். இடப்பக்க மார்கபகத்திற்குக் கீழே எண்ணிக்கை மிகுந்த தமனிகளும், சிரைகளும், இருதயத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புக் கொழுப்புப் படுகையும் அமைந்துள்ளன.

சமச்சீரற்று பகிரப்பட்ட மார்பக இழையத்தின் பொதுவான இயல்பு மாறுபாடுதான், சமச்சீரற்ற மார்பக அடர்த்திக்கு மிகவும் பொதுவானக் காரணம். குறும் சமச்சீரின்மையை மென்னட்டை மார்புக்கச்சை அணிவதன் மூலம் தீர்க்கலாம். ஒரு பெண் தனது மார்பகங்களின் குறும் சமச்சீரின்மை ஆறுதலின்மையாக உணர்ந்தால், அவள் ஒரு சரியான மார்புக்கச்சை, மென்னட்டை மார்புக்கச்சை, நீர்ம மார்புக்கச்சை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் அவ்வேற்றுமையைக் குறைக்கலாம். மார்பகச் சமச்சீரின்மை மார்பகப் புற்றுநோய்க்கான அறியப்பட்ட பல இடர்க் காரணிகளுள் தொடர்புடையது.

வளர்ச்சி தொகு

 
டேன்னர் நிலைகள் பெண்களின் இரண்டாம் பாலியல் பண்புகள் (மார்பகங்கள், அந்தரங்க முடி) ஐந்து வளர்ச்சி நிலைகளில் குறிக்கப்படும்.

பூப்பெய்தும் வரை, மனித மார்பகத்தின் வடிவ அமைப்பு இருபாலினருக்கும் ஒத்தே அமைகின்றது. ஒரு சிறுமி பூப்பெய்திய பின்னர், அவளின் மார்பக வளர்ச்சி நிலையில் பெண் பாலின இயக்குநீர்கள் குறிப்பாக ஈத்திரோசன், வளர்ச்சி இயக்குநீருடன் இணைந்து மார்பகங்கள் துளிர்ந்து, வளர்ந்தும், மேம்பட்டும் ஒரு பாற்சுரப்பியாக அவளின் எஞ்சிய மார்பில் அவை அளவிலும், கொள்ளவிலும் வளரவதற்கு ஊக்குவிக்கின்றது. இரண்டாம் பாலியல் பண்புகளின் (மார்பகங்கள், அந்தரங்க முடி) வளர்ச்சி நிலைகள், டேன்னர் அளவுகோலில் ஐந்து வளர்ச்சி நிலைகளாக விளக்கப்பட்டுள்ளது.

மார்பகங்கள் வளரும் போது சில நேரங்களில் சமமற்ற அளவுடையதாக இருக்கும்; வழக்கமாக இடப்பக்க மார்பகம் சற்றுப் பெரியதாக இருக்கும்; இத்தகைய மாறுதலைடையும் சமச்சீரின்மை நிலை புள்ளித்தொகுப்பின் படி பெண்ணின் உடல், பாலியல் வளர்ச்சிக்கு இயல்பான நிலை என்று கூறப்படுகின்றது. மேலும் சிறுமிகளிடமும், பெண்களிடமும் சில நேரங்களில் இயல்பு கடந்து மார்பக வளர்ச்சி மிகுந்த நிலையிலும், வளர்ச்சியற்ற நிலையிலும் வெளிப்பட்டிருக்கும். ஆண்களிடமும், சிறுவர்களிடமும் தங்களின் உடல் ஈத்திரோசனுக்கும் ஆண்மையியக்குநீருக்கும் இடையே ஏற்படும் உயிர்வேதியியல் ஏற்றத்தாழ்வின் விளைவாவல் ஆண் முலை வீக்கம் வெளிப்பட்டிருக்கும்.

 
ஒரு பெண்ணின் வாழ்கையில் நிகழ்ந்த அளவு மாற்றங்களை, அவளின் மார்பகம் மீதுத் தென்படும் வரித்தழும்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

பருவமடையத் தொடங்கி (ஒரு சிறுமியின் முதல் மாதவிடாய் சுழற்சியில்) கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் கழித்து, இயக்கநீராகிய ஈத்திரோசன் வளர்ச்சி இயக்கநீருடன் இணைந்து, மார்பகத்தை இயற்ற பாற்சுரப்பி, கொழுப்பிழையம், கூப்பரின் இணைப்பிழையங்கள் ஆகியவற்றை மேம்பட்டும் வளரவும் துண்டுகின்றது. மார்பகம் இறுதி வடிவநிலையை (அளவும், கொள்ளவும், அடர்த்தியும்) அடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வரை இது நீடிக்கின்றது, அப்பொழுது அவள் ஒரு பெண்ணாக சுமார் 21 அகவையை அடைந்திருப்பாள். மனிதனைக் கருத்தில் கொள்ளும் போது, விலங்கியல் ஆய்வாளர் மனிதப்பெண் முதனி மட்டுமே கருவுறாக் காலத்திலும் நிலையான, முழு வடிவ மார்பகங்களைக் கொள்ள முடியுமென்று முன்மொழிந்தனர். மற்றப் பெண்பாலூட்டிகளில் மார்பகங்கள் கருவுற்ற காலத்தில் மட்டுமே முழுமையடைகின்றன.

கொழுப்பிழையம், பாற்சுரப்பி, இணைப்பிழையங்கள் முதலியவற்றை மார்பகங்கள் முதன்மையாகக் கொண்டுள்ளன. ஏனென்றால், இவ்விழையங்களில் இயக்குநீர் ஏற்பிகள் உள்ளன. குறிப்பாக மார்பகங்கள் விரைந்து வளரும் போதும், மாதவிடாயின் போதும், கருவுற்ற போதும், பாற்சுரக்கும் போதும், மாதவிடாய் நிறுத்தம் போதும் ஏற்படும் இயக்குநீரின் மாறங்களுக்கேற்ப அவற்றின் அளவும், கொள்ளவும் ஏற்றவிறக்கம் அடைகின்றன.

மாதவிலக்கு முன் சிறுநீர்த்தேக்கத்தாலும், நிலையற்ற வளர்ச்சியாலும் மார்பகங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பெரிதடைகின்றன. கருவுற்றிருக்கம் போது, புரோலேக்ட்டின் ஏற்பட்ட உறுப்பின் மிகைவளர்ச்சியால் மார்பகங்கள் பெரிதடைந்தும், அடர்த்தியடைந்தும் (உறுதியடைதல்) காணப்படும்; மேலும், இது தாய்ப்பாலைச் சுரக்கத் தொடங்கும்; இதனால், முலைக்காம்பின் அளவு பெருக்கமடைந்தும், முலைக்காம்புத்தோலின் நிறம் கருமையடைந்தும் காணப்படும். பாற்சுரத்தல், தாய்ப்பாலூட்டல் ஆகிய காலங்களில் இதன் மாற்றங்கள் தொடரும். ஆதற்குப்பிறகு மார்பகங்கள் பொதுவாக கருத்தரிப்பதற்கு முனிருந்த அளவிற்கும், வடிவத்திற்கும், கொள்ளவிற்கும் மாற்றியமைக்கப்படும்; இருப்பினும் வரித்தழும்புகள் தென்படக் கூடும்.

மாதவிடாய் நிறுத்தமடையும் போது, ஈத்திரோசனின் அளவு குறைவதாலும், பின் கொழுப்பிழையம், பாற்சுரப்பிகள் ஆகியவை தளர்வதாலும் மார்பகங்களின் அளவு குறைகின்றன. இத்தகைய இயற்கை உயர்வேதியியல் தூண்டுதலின் கூடுதலாக, கருத்தடை மாத்திரைகளின் தீங்குவிளைவிக்கின்ற பக்க விளைவால் மார்பகங்கள் பெரிதடைகின்றன; ஒரு பெண்ணின் உடலெடை ஏற்றவிறக்கங்களால் மார்பகங்களின் அளவு கூடவும், குறையவும் கூடும். மேலும், மார்கங்கள் மீது ஏற்படும் மாற்றங்களை அதன் தோலில் தென்படும் வரித்தழும்புகளால் பதிவு செய்யப்படுகின்றன, ஒரு பெண்ணின் வாழ்கையில் நிகழ்ந்த அளவு மாற்றங்களை இத்தகைய தழும்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

பணியும் உடல் நலமும் தொகு

பாற்சுரத்தல் தொகு

 
ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலால் ஊட்டமளிக்கிறாள்.

மார்பகங்கள் மடிச்சுரப்பிகளை உடையதென்பதால், தாய்மையடைந்து பாற்சுரக்கும் காலத்தில் தாய்ப்பாலைக் கொண்டு குழந்தைக்குப் பாலூட்டி ஊட்டமளிப்பதே இவற்றின் முதன்மையானச் செயல். மார்பகத்தின் வட்டமான வடிவம், தாயின் உடல் வெப்ப இழப்பளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது; ஏனென்றால் முறையாகப் பாற்சுரப்பதற்கு உயர் வெப்பநிலைச் சூழலைப் பொறுத்தே அமையும். பாலூட்டும் போது முலைக்காம்பை உறிஞ்சும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக, மார்பகம் வட்டமான வடிவத்தில் வளர்கிறதென்று முன்மொழியப்படுகின்றது; தட்டையான வடிவத்திலிருந்தால் குழந்தையின் சிறுதாடை தாயின் மார்பகத்தில் அழுத்தி மூச்சுத்துளைகளை மறைத்திருக்கக்கூடும்.

ஒரு பெண்ணிற்குத் தனாகப் பாற்சுரக்கும் நிலை கருத்தரிப்பின்றியும் மருந்துகளின் கேடுவிளைவுகளாலாலும், உயர் மன அழுத்தமாலும், அகச்சுரப்பியின் சீர்கேடாலும் ஏற்படும். ஒரு தாயின் இயக்குநீர்களின் பின் விளைவுகளால் புரோலாக்டின், ஆக்சிடாசின் ஆகியவை சூல்வித்தகம் வழியாக குருதி அவளின் குழந்தைக்குப் பகிரப்பட்டு அதன் குருதியோட்டத்திலும் அவை கலந்திருப்பதால், அதற்கும் பாற்சுரக்கும் திறன் ஏற்படும். ஆண்களின் உடலில் பாற்சுரப்பிகள் இருந்தும் ஆண்மையியக்குநீரால் பொதுவாக வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றன்; எனினும், ஆண்களிலும் பாற்சுரக்கும் நிலை கபச் சுரப்பியின் சீர்கேட்டால் ஏற்படும்; இத்தகைய நிலை நோயின் அறிகுறியாகக் கருதப்படும்.

முதுமையடைதல் தொகு

 
மார்பகத்தொய்வின் ஏழு நிலைகள்.

தொய்வு முதுமையானால் ஏற்படும் ஒரு வழக்கமான விளைவு இதனால், மார்பிலுள்ள மார்பக இழையங்கள் கீழ்வளைந்தும், முலைக்காம்பு கீழ்நோக்கியும் காணப்படும். ஒரு பெண்ணிற்குத் தொய்வு உருவாகின்ற விகிதம் பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது அவற்றுள்: மரபியல், புகைத்தல், உடல் நிறை குறியீட்டெண், கருவுற்ற எண்ணிக்கை, கருத்தரிப்பதற்கு முன் மார்பகங்களின் அளவு, அகவை.

மார்பகத் தொய்வை ஒட்டுறுப்பு அறுவை மருத்துவ வல்லுநர்கள் முலைக்காம்பின் நிலையை முலையின் கீழ்மடிப்பிற்கு ஒப்பீட்டு மதிப்பிட்டு வகைப்படுத்துகின்றனர் (மார்பக அடிப்பகுதியும், மார்புச்சுவரும் சந்திக்குமிடம்). இதன் அளவீடு முலைக்காம்பு மையத்திலிருந்து கழுத்துக்குழி வரையென்று தீர்மானிக்கப்படுகின்றது (மார்பெலும்பிற்கு மேலாக). நிலையான மனிதரளவையியல் படி இளம் பெண்களின் அளவு 21 செ.மீ ஆகும். இந்த அளவீடு மார்பகத்தெய்வையும், மார்பகச்சமச்சீரையும் மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அறுவை மருத்துவ வல்லுநர்கள் மார்பகங்களின் எறிகோணத்தை மதிப்பிட்டுக் கொள்வர். மார்பகத்தின் நுனி முலைக்காம்பையும் சேர்த்து தட்டையான எறிகோணமாகவும் (180 பாகைகள்), குறுகிய எறிகோணமாகவும் (180 பாகைகளுக்கு மேலாக) இருக்கலாம். மார்பக நுனி அரிதாக 60 பாகைகளுக்கும் மேலாகவும் இருக்கும். கூப்பரின் தொங்கித் தசைநார்கள் வரைப்புத்தன்மையைக் கொண்டும் ஓரளவு தீர்மானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் படுத்திற்கும் போது, மார்பக நுனி தட்டை கோணமாகவும், விகோணமாகவும் மாற்றமடையக்கூடும் (180 பாகைகளுக்கு குறைவாக), அதே நேரத்தில் மார்பகத்தின் அடிப்பகுதியிலிருந்து நீள விகிதம் 0.5 முதல் 1.0 வரை நீடிக்கின்றது.

மருத்துவ முதன்மைத்துவம் தொகு

மார்பகம் பல தீங்கற்ற, கேடு விளைவிக்கின்ற, நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றது. முலையழற்சி, மார்பக இழைமநீர்க்கட்டி, முலைவலி போன்றவை மிக அடிக்கடி ஏற்படுகின்ற தீங்கற்ற நிலைமைகள்.

மார்பகப் புற்றுநோய் தொகு

மார்பகப் புற்றுநோய் பெண்களின் இறப்பிற்கு முதன்மையானக் காரணங்களுள் ஒன்றாகத் இருக்கின்றது. உடல் நல வல்லுநரின் வழக்கமான மார்பகப் பரிசோதனைகள், முறையான முலை ஊடுகதிர்ப்படச் சோதனை, மார்பகத் தன்னாய்வு, நலம்பயக்கும் உணவுப்பழக்கம், மிகுந்த உடற்கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் விளைவு காரணிகளைக் குறைக்கமுடியும்.

சமுதாயமும் பண்பாடும் தொகு

ஆடை தொகு

 
வடநமீபியாவைச் சார்ந்த இம்பா பெண்மணி தங்களது பண்பாட்டின் வழக்கமாக வெற்று மார்பகங்களுடன் பாரம்பரிய தலைப்பாகையும் பாவாடையையும் அணிந்திருக்கிறாள்.

மார்பகங்கள் பெரும்பாலும் கொழுப்பிழைங்களாக இருப்பதால் உள்ளாடைப் போன்ற ஆடைகளை அணிவதால் அவற்றின் வடிவம் எல்லைக்குள் வார்ப்படும். பொதுவாக மேற்கத்தியப் பெண்கள் சுமார் 90% தங்கள் மார்பகங்களைத் தாங்குவதற்கு மார்புக்கச்சுகளை அணிகின்றனர். பெரும்பாலான மேற்கத்திய பண்பாடுகளின் சமூக வரையறைகளின் படி, பொதுவிடத்தில் மார்பகங்களை மறைப்பதென்றாலும், சமூகச்சூழலைப் பொறுத்து மறைத்தலளவு மாறுபடுகின்றது. பெண் மார்பகத்திற்குச் சில மதங்களில் விதிமுறைக் கற்பித்தல் வழியாகவோ, குறியீட்டுவளம் வழியாகவோ சிறப்பு உறழ்நிலையைச் சாட்டுகின்றனர். இசுலாமியத்தில் பொதுவிடத்தில் பெண்கள் தங்கள் மார்பகங்களை வெளிக்காட்டுவதற்குத் தடைசெய்கிறது.

நிறைய பண்பாடுகள் மார்பகங்களைக் காமத்துடன் இணைக்கின்றது; மேலும், வெற்று மார்பகங்களை நாணமற்றதாகவோ, ஒழுக்கமற்றதாகவோ கருதுகின்றது. வடக்கு நமீபியாவிலுள்ள இம்பா போன்ற பண்பாடுகளில், பெண்கள் வெற்று மார்பகங்களுடன் இருப்பது வழக்கமானது; ஆனால், தங்களின் தொடை காமம் மிகுந்ததால் பொதுவிடத்தில் வெளிக்காட்டுவதில்லை. ஒரு சில மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மேலாடையின்றி கடற்கரையில் இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது; என்றாலும், அது நகரம் மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சில பகுதிகளில் ஒரு பெண்ணின் மார்பகங்களை வெளிக்காட்டுவதென்பது, அவளின் முலைக்காம்புகளை மட்டுமே வெளிக்காட்டுவதற்குப் பொருந்தும்.

அமெரிக்காவில், பெண்கள் பொதுவிடங்களில் தாய்ப்பாலூட்டினால் எதிர்மறை கவனத்தைப் பெற நேரிடும். பொதுவிடங்களிலிருந்து பெண்களை விட்டுப் போகக் கேட்டுக்கொண்டதாகச் சான்றுநிகழ்ச்சிகள் உள்ளன. வெற்று மார்பகங்களுடைய பெண்களைச் சட்டப்படியாகவும், பண்பாடுபடியாகவும் ஆஸ்திரேலியாவிலுள்ள பொதுக் கடற்கரைகளிலும், ஐரோப்பாவின் மிகுந்த இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

பாலியல் சிறப்பியல்பு தொகு

சில பண்பாடுகளில், மார்பகங்கள் மனிதப்பாலுறவுச் செயற்பாட்டில் ஒரு பங்கு வகிக்கிறது. மார்பகங்களும் குறிப்பாக முலைக்காம்புகளும் பல்வேறு காமவுணர்ச்சிப் பகுதிகளுள்ளடங்கும். நிறைய நரம்பு நுனிகளில் இருப்பதால், அவை தொடுதலுக்கு உணர்ச்சி மிகுந்துள்ளன; கைகளாலோ வாய்வழியாகவோ அவற்றைப் பாலுறவுச் செயற்பாட்டின் போதோ அதன் முன்னரோ அழுத்துவதும், உடற்பிடிப்புச் செய்வதும் வழக்கமானது. பெண்கள் சிலர் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். ஆராய்ச்சியில், முலைக்காம்பைக் கிளர்சியூட்டுவதன் மூலம் பிறப்புறுப்பில் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகின்றதென்றும்; மேலும், நேரடியாக "மூளையின் பிறப்புறுப்புப் பகுதியில்" இணைக்கப்பட்டுள்ளதென்றும் பரிந்துரைக்கப்பட்டது. முலைக்காம்பு, புணர்ப்புழை, பெண்குறி, கருப்பை வாய் இவற்றிலிருந்து வரும் உணர்ச்சிகள் மூளையின் ஒரே பகுதிற்குப் பயணிக்கின்றன. முலைக்காம்பைக் கிளச்சியூட்டுவதால் கருப்பையில் சுருக்கங்களைத் தூண்டுகிறது; பின்னர் மூளையில் பிறப்புறுப்புப் பகுதியில் ஒர் உணர்ச்சியை உருவாக்குகிறது. பண்டைய இந்தியப் படைப்புக் காம சூத்திரத்தில் நகத்தால் மார்பங்களை மெலிதாகக் கீறுவதும், பற்களால் கடிப்பதும் சிற்றின்பமாகக் கருதப்படுகிறது. காம விழிப்புணர்ச்சியின் போது, மார்பக அளவு பெருகியும், மார்பகங்கள் முழுவதும் சிரை வடிவங்கள் மேலுந்தெரிந்தும், முலைக்காம்புகள் உறுதியடைந்தும் காணப்படும். மற்ற உயர் விலங்குகளுடன் ஒப்பிடும்போது, மனித மார்பகங்கள் முதிர்ந்த பெண்களின் வாழ்நாள் முழுவதும் பெரும் விகிதத்தில் இருந்துவருகிறது. சில எழுத்தாளர் மார்பகம் வளர்வது பாலியல் முதிர்ச்சிக்கும், கருவுறுதலுக்கும் விழிசார் அறிகுறியெனக் கருத்துத் தெரிவித்தனர்.

மக்கள் மனிதப்பெண்ணுடலின் மார்பகங்கள் அழகுணர்ச்சியில் மனமகிழ்வதற்கும், சிற்றின்பத்திற்கும் ஒரு முதன்மையானச் சிறப்பியல்பாகக் கருதுகின்றனர். வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்கள் பெரும்பாலும் மற்ற உடற்பாகங்களை விட முதலாக மார்பகங்களை வெகுநேரமாகப் பார்கின்றனர் என்று தெரிந்தது; ஆய்வெழுத்தாளர் தொடக்கத்தில் இதற்குக் காரணம் உட்சுரப்பி என்றும், பெரிய மார்பகங்கள் உயரளவு ஈத்திரோசனையும், கூடுதலானக் கருவுறுத்தன்மையும் கொண்டது என்றும் சிந்தித்தனர்; ஆனால், ஆய்வாளர் "ஆண்கள் பெரும்பாலும் மார்பகங்களின் அளவை பொருட்படுத்தாமல் அழகுணர்ச்சியில் மனமகிழ்வதற்கு மட்டுமே அடிக்கடி பார்கின்றனர்", என்று கூறுகின்றனர்.

மக்கள் பலர் பெண்னின் வெற்று மார்பகங்களைச் சிற்றின்பமாகவும், பல பண்பாடுகளில் ஆண்களின் காமப்பற்றை உயர்த்துவதாகவும் கருதுகின்றனர். சிலர் காமக் கவர்ச்சியை முற்றிலும் வேறுபட்ட பெண்னின் மார்பகங்கள் மீது காட்டுகின்றனர்; இதை மார்பகக் காமம் என்று கருதப்படுகின்றது. அமெரிக்க பண்பாடு இளமையான நிமிர்ந்த மார்பகங்களை விரும்புகின்றது, சில பண்பாடுகளில் பெண்களின் தொங்கிய மார்பகங்களையும், தாய்மை குறிப்பிடையும், பட்டறிவு மதிநலத்தையும் போற்றுகின்றன.

குறியீட்டமர்வு தொகு

கிறித்துவ உருவக்கலையின் சில கலைப் படைப்புகளில், பெண்கள் ஒரு புனிதத்தியாகியாக மார்பங்களைத் துண்டித்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் கைகளிலோ, ஒரு தட்டிலோ வைத்து உயிர்நீத்தனர் என்று குறிப்பிட்டுச் சித்தரிக்கப்படுகின்றன; இதற்கு ஒர் எடுத்துக்காட்டு சிசிலியின் புனித ஆகத்தா.

அரசியல் செயற்பாட்டுவாதங்கள் தொகு

 
மேலாடையின்றி பெண்ணுரிமை ஆர்வலர் குழுவின் ஒர் உறுப்பினர் எதிர்ப்பு செய்கிறார்.

மேற்சான்றுகள் தொகு

  1. "mammal". Dictionary.reference.com. http://dictionary.reference.com/browse/mammal. 
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
  3. Stöppler, Melissa Conrad. "Breast Anatomy". http://www.medicinenet.com/breast_anatomy/article.htm. பார்த்த நாள்: 28 June 2015. 
  4. Doucet, Sébastien; Soussignan, Robert; Sagot, Paul; Schaal, Benoist (2009). Hausberger, Martine. ed. "The Secretion of Areolar (Montgomery's) Glands from Lactating Women Elicits Selective, Unconditional Responses in Neonates". PLoS ONE 4 (10): e7579. doi:10.1371/journal.pone.0007579. பப்மெட்:19851461. 

நூல் பட்டியல் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மார்பகம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கை&oldid=3661790" இருந்து மீள்விக்கப்பட்டது