கிருட்டிணகிரி மாவட்ட வனவளம்
கிருட்டிணகிரி மாவட்ட வனவளம், கிருட்டிணகிரி மாவட்டம் 1482 சதுர கிலோ மீட்டர் வனக் காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது, இது மாவட்டத்தின் பரப்பளவில் 28% ஆகும்.[1] இம்மாவடட்டக் காடுகள் மூன்று மாநிலங்களான கர்நாடகம்,ஆந்திரம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வனங்கள் காவிரி, சனத்குமார நதி, ஆனைபித்தஹள்ளா, அஞ்செட்டி ஆறு, தென்பெண்ணை ஆறு ஆகிய ஆறுகளுக்கு நீர் பிடிப்புப் பகுதியாக உள்ளன.
வனக்கோட்டம்
தொகுமுன்பு சேலம் மாவட்டத்தின் ஒருபகுதியாக கிருட்டிணகிரி இருந்த போது, இவ்வனங்கள் 1902 ஆம் ஆண்டு முதல் சேலம் வடக்கு வனக்கோட்டமாகச் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டும், பின்னர் 1925 இருந்து புகழ்பெற்ற ஒசூர் கால்நடைப் பண்ணையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது.[1] 1968 ஆம் ஆண்டிலிருந்து ஒசூர் வனக்கோட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டு அப்பெயருடன் ஒசூர் கால்நடைப் பண்ணை வளாகத்தில் மாவட்ட வன அலுவலகம் இயங்கி வருகிறது.[2] ஒசூர் வனக்கோட்டத்தில் இருந்த மொத்தம் 1,50,000 ஹக்டேர் பரப்பில், ஏறக்குறைய 47,000 ஹெக்டேர் வனப்பரப்பு தனியாக பிரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு கிருட்டிணகிரி வனக்கோட்டமாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 1,03,000 ஹெக்டேர் பரப்பளவில் 50433 ஒசூர் வன உயிரியல் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.[3]
சரகங்கள்
தொகுஒசூர் வன உயிரியல் சரணாலயம் என்று அழைக்கப்படும் ஒசூர் வனக்கோட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய ஐந்து வனச்சரகங்கள் உள்ளன. கிருட்டிணகிரி வனக்கோட்டத்தில் கிருட்டிணகிரி, ஊத்தங்கரை சூளகிரி போன்ற மூன்று வனச்சரகங்கள் செயல்படுகின்றன.[4]
நிலவியல்
தொகுஇம்மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பான்மை பகுதி மேலகிரி என்றழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 400 முதல் 1300 மீட்டர் உயரம்வரை சிறு குன்றுகளாகவும், மலைத்தொடர்களாகவும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் மிக உயரமான சிகரமாக குத்திராயன் மலைச்சிகரம் (1395 மீட்டர்) உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு மழைக்காலங்களில் மழையைப் பெறும் இம்மாவட்டம் சராசரியாக 830 மில்லி மீட்டர் மழையைப் பெறுகிறது.[5]
காட்டு வகைகள்
தொகுகிருட்டிணகிரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும் இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும், காவிரி ஆற்றங்கரையையொட்டி ஆற்றோரக் காடுகளும் அமைந்துள்ளன.
இலையுதிர் காடுகள்
தொகுஇலையுதிர் காடுகள் அஞ்செட்டி,உரிகம், ஜவளகிரி, இராயக்கோட்டை, ஒசூர்,கிருட்டிணகிரி, போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் காணக்கூடிய முக்கிய மரங்கள் தேக்கு, வேங்கை, ஈட்டி, கடம்பு மரம், தடசு, வெக்காளி, புரசு, உசில், ஆச்சான், வெள்வேல், வாகை, வேம்பு, ஆத்தி, பலாசம், சந்தன வேம்பு, கொன்றை, சாரபருப்பு, விளா, ஆல், மைசூர் ஆல், அரசு, ஆயா, மஞ்சணத்தி, நெல்லி, நெடுநார், பூச்சக்காய், வெண்கடம்பு, பூவத்தி, எட்டி, தேத்தான், கடுக்காய், தான்றிக்காய், கருமருது, நொச்சி, வெப்பாலை, இலந்தை, குமிழ், செம்புள்ளிச்சை, அழிஞ்சில், வட்டகண்ணு, விடத்தாரை, ரோஹினி,பிராயன்,காட்டு எலுமிச்சை, மூங்கில், கல் மூங்கில், சாலை, கருங்காலி, குங்கிலியம், முன் இலவு, கிளுவை, காரை, ஆதண்டை, பாவட்டை, களா, ஆகியவகையாகும்.[6]
ஆற்றோரக் காடுகள்
தொகுஇக்காடுகள் ஆற்றோரங்களில் காணப்படுகினெறன. இதில் நீர்மருது, நாவல், புங்கை, புளி, ஆல், இலுப்பை, நறுவிலி, ஆகியன காணப்படுகின்றன.
உலர்ந்த பசுமை மாறாக் காடுகள்
தொகுஉலர்ந்த பசுமை மாறாக் காடுகளில் காயா, நாவல், செருந்தி, உலக்கை பாலை, மகிழம், ஆகிய மரங்களும் முல்லை நிலத்தின் சின்னமாகிய மூன்றுவகை முல்லைக் கொடிகள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது போன்ற பசுமை மாறாக்காடுகள், குறைந்த உயரமுடைய சோலைவனக் காடுகளில் காணப்படும் மரவகைகளும் குத்திராயன் மலைப்பகுதியில் காணப்படுகின்றன.
உயிரினங்கள்
தொகு1900க்கு முன்பு இக்காடுகளில் யானை, புலி, சிறுத்தை, புல்லியான், கடமான், காட்டுப் பன்றிகள், கரடி, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் பெருமளவில் காணப்பட்டன. தற்போது புலி, வெளிமான், ஓநாய், ஆகிய உயிரினங்கள் அழிந்துவிட்டன. கழுதைப்புலி, குள்ள நரி ஆகியன அரிதாகிவிட்டன. தற்போது காணப்படும் உயிரினங்கள்; யானை, காட்டு மாடு, நான்கு கொம்பு மான், புள்ளிமான், காட்டுப் பன்றி, சருகுமான், கேளை ஆடு, நரி, காட்டுப் பூனை, சிறுத்தை, மூன்று வகையான கீரிகள், நீர் நாய்,கரடி, முதலை,மரநாய், புனுகுப் பூனை, செந்நாய், முயல், எறும்பு தின்னி, வெள்ளை குரங்கு, அனுமான் குரங்கு, முள்ளம்பன்றி, மர அணில் முதலியன உள்ளன. இக்காடுகளில் 150 வகைக்கும் குறையாத பறவைகள் உள்ளன. 30 வகையான நீர்வாழ் பறவைகள் இருப்பதும் இனம் கண்டுகெள்ளப்பட்டது. பல்லி,ஓணான்,பாம்பு, முதலை, ஆமை உள்ளிட்ட ஊர்வனவகைகளும், 10 வகையான தவளை இனங்களும், 18 வகையான மீனினங்களும் இனம் காணப்பட்டுள்ளன. இவையல்லாது 100க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி இனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.[7]
வன உயிரினங்களில் மிகப் பெரியதான யானை இக்காடுகளில் 200க்கு மேல் காணப்படுகின்றன. அவை கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து அக்டோபர்-மார்ச் மாதங்களில் இடம் பெயர்ந்து இக்காடுகளுக்கு வலசை வருகின்றன. இதனால் வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.[8]
இதையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 http://krishnagiri.nic.in/forest.htm
- ↑ முல்லை நிலமும் ஆயர் வாழ்வும் காப்போம் (கட்டுரை), திரு.வி.கனேசன் இ.வ.ப. பக்.91
- ↑ ஜோதிரவிக்குமார் (சூலை 6 2018). "ஒசூர் வன உயிரியல் சரணாலயத்தில் வன விலங்குகளைப் பாதுகாக்க 20 வேட்டை தடுப்பு முகாம்கள் மாவட்ட வன அலுவலர் தகவல்". இந்து தமிழ்: 3.
- ↑ ஜோதி ரவிக்குமார் (சூன் 20 2018). "ஒசூர் வனக்கோட்டம் இரண்டாக பிரிப்பு புதியதாக கிருஷ்ணகிரி வனக்கோட்டம், ஒசூர் வன உயிரியல் சரணாலயம் உதயம் வன விலங்குகள் பாதுகாப்பு அதிகரிக்க வாய்ப்பு". தி இந்து தமிழ்.
- ↑ "KRISHNAGIRI PROFILE". கிருட்டிணகிரி ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ முல்லை நிலமும் ஆயர் வாழ்வும் காப்போம் (கட்டுரை), திரு.வி.கணேசன் இ.வ.ப. பக்.93
- ↑ முல்லை நிலமும் ஆயர் வாழ்வும் காப்போம் (கட்டுரை), திரு.வி.கணேசன் இ.வ.ப. பக்.94-95
- ↑ "தர்மபுரியில் யானைகள் அட்டகாசம்!". ஜன்னல். 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
உசாத்துணை
தொகுகிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுச் சுவடுகள், முல்லை நிலமும் ஆயர் வாழ்வும் காப்போம் (கட்டுரை), திரு.வி.கணேசன் இ.வ.ப. மாவட்ட வன அலுவலர். வெளியீடு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம்.