விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/தொகுப்பு 1

(இத்திட்டம் சூலை7ந்தேதியன்று (2015)ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. இதுவளரும் திட்டமென்பதால், இங்குத் தனியாகத் தொடங்கப்படுகிறது.)

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பொதுக்கருத்து வலுவாகும் வகையில் பல்வேறு விக்கிப்பீடியர்களும் பல்வேறு களங்களில் பங்களித்து வருகிறோம். இதன் நல்விளைவாக தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெரும் வாய்ப்புகளைப் பற்றி அறிய வந்துள்ளோம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய மாநிலம் தழுவிய பரப்புரை, தமிழ் இணையப் பயிற்சி, புதிய கட்டுரைகளைத் துறை சார் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு எழுதுவிப்பது, பல்வேறு நூல்களைக் படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமத்தில் பொதுவகத்தில் பதிவேற்றுவது, விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புகளை ஈர்க்கும் வண்ணம் போட்டிகளை நடத்துவது முதலிய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதற்கான முதற்கட்ட உரையாடலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாடு தழுவிய இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியர்கள் இயன்ற அளவு களப்பணியில் இறங்கிச் செயற்படுவதன் மூலமே திட்டத்தைப் பயனுடையதாக மாற்ற முடியும். இதற்கான தயாரிப்புப் பணிகளில் இணையம் ஊடாகவும் தங்கள் தற்போதைய இருப்பிடங்களில் இருந்தும் பங்களிக்க முடியும். திட்டம் குறித்து இன்னும் மேல் விவரங்கள் அறிய வரும்போது இன்னும் விரிவாக இங்கு பதிவு செய்கிறோம். அப்போது செய்ய வேண்டிய பணிகளுக்கு ஏற்ப தங்கள் ஆர்வத்தைப் பதிந்து திட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டுகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 05:10, 7 சூலை 2015 (UTC)Reply

ஏறத்தாழ 12 ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியா தொய்வில்லாமல் இயங்கி வந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்திலே நாம் பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், ஊடக நேர்காணல்கள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்ற பல்வேறு வழிகளில் நமது இருப்பை இடைவிடாது வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி வந்துள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளின் வாயிலாகவும், தமிழ் விக்கியை இன்றைய நிலைக்கு வளர்த்து எடுப்பதில் நமது பயனர்கள் வழங்கிய அயராத உழைப்பின் காரணமாகவும், இன்று நம்மைச்சுற்றிப் பல நலம் விரும்பிகளையும், நம்மீது நம்பிக்கை கொண்டுள்ள பலரையும் நாம் உருவாக்கியுள்ளோம். இது ஒருபுறம் இருக்க, உலக அளவில் அறிவு உருவாக்கம், அறிவுப் பரவல் என்று பேசும்போது விக்கிப்பீடியாவையும் ஏனைய விக்கித் திட்டங்களையும் குறிப்பிடாமல் பேசமுடியாது என்ற நிலை இன்று உள்ளது. நாம் இந்தத் திட்டத்தின் பங்குதாரர்கள் என்ற அளவிலும் நம்மீது மற்றவர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. பொதுவாகத் தமிழ் மொழி வளர்ச்சி, சிறப்பாகத் தமிழில் அறிவுத் திரட்டல் போன்ற விடயங்கள் பற்றிச் சிந்திப்பவர்களுக்குத் தமிழ் விக்கித் திட்டங்களும் இதற்கான ஒரு சிறந்த வழியாக ஞாபகத்துக்கு வருவதை நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது. எனவே இந்த நிலைமையையும், இதனால் எழுகின்ற வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொண்டு தமிழ் விக்கித் திட்டங்களை நாம் அடுத்த நிலைக்கு வீறுடன் எடுத்துச்செல்ல வேண்டும். இந்த வகையில், இரவி மேலே கோடிட்டுக் காட்டிய விடயங்கள் பெரிய திருப்பு முனையாக அமையக்கூடியவை. இந்த வாய்ப்புக்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி வரலாற்றில் ஒரு பெரிய பாய்ச்சலாக இவை அமையும் என்பதில் ஐயம் இல்லை. ---மயூரநாதன் (பேச்சு) 14:59, 7 சூலை 2015 (UTC)Reply
விக்கிமீடியா இந்தியக் கிளை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் என்பவற்றினூடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகளைப் பயனுறுதி மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும். முழுமையான திட்டம். செயலொழுங்கு என்பன தீர்க்கமான பின் இவைபற்றி மேலும் பேசமுடியும். தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிய கலைக்களஞ்சியத் தொகுப்பு முதலானவற்றை ஒரு வதிவிடச் செயலரங்கு மூலம் ஒரு நாளில் காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை ஒரு முழுநேரச் செயலங்காக 10-15 பேர் ஒரே இடத்தில் இணைய வசதிகளுடன் கூடி முழுமூச்சுடன் தொகுப்பது மாதிரியான செயற்பாடுகளையும் ஒழுங்கு படுத்தலாம். செயலரங்கின் முடிவில் இத்தனை கட்டுரைகள் முடித்தோம் என்ற அடைவு நமக்குக் கிடைக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:50, 9 சூலை 2015 (UTC)Reply

நிகழ்வுகள் தொகு

கடந்த சூலை 9, 2015 வியாழன் அன்று தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநரைச் சந்தித்து உரையாடினேன். உடன் தமிழ் விக்கிப்பீடியரும் தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநருமான தமிழ்ப்பரிதி மாரி இருந்தார். மேற்கண்ட உரையாடலின் தொடர்ச்சியாக உடனடியாக சில செயற்றிட்டங்களை அடையாளம் காணும் நோக்குடன் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு முன்னோட்டமாக சூலை 3, 2015 வெள்ளி அன்று பெங்களூரில் நானும் சுந்தரும் தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநரைச் சந்தித்து உரையாடினோம். இந்த முதற் சந்திப்பின் அடிப்படையில் சூலை 4, 2015 அன்று முதல்நிலைத் திட்டமிடல் சந்திப்பு பெங்களூரில் தமிழ்ப்பரிதி மாரியுடன் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சூலை 6, 2015 திங்கள் அன்று வளரும் மொழி விக்கிப்பீடியாக்களுக்கான விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் உடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தமிழ் விக்கிப்பீடியர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு கோரி உறுதி செய்யப்பட்டது. இதில் மயூரநாதன், கோபி, சஞ்சீவி சிவக்குமார், சுந்தர், சண்முகம், நான் கலந்து கொண்டோம். இன்னும் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் குறுகிய கால அறிவிப்பு என்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. இச்சந்திப்புகளின் விவரங்கள் யாவும் பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்களுடன் மின்மடல் மூலம் உடனுக்கு உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இச்சந்திப்புகள் மிகவும் தொடக்க நிலையிலானவை என்பதால் ஆலமரத்தடியில் உடனுக்குடன் பகிர்வதில் சில இடர்கள் இருந்தன. இனி வரும் சந்திப்பு விவரங்கள் யாவும் இங்கு முழுமையாக இற்றைப்படுத்துவோம். இன்னும் பலரும் இத்தகைய சந்திப்புகளில் கலந்து முன்வர வேண்டும் என்று கோருகிறோம்.

சில அடிப்படைச் செயற்றிட்டங்கள் தொகு

சூலை 9, 2015 சந்திப்பின் விளைவாக அடையாளம் காணப்பட்ட சில அடிப்படைச் செயற்றிட்டங்கள்:
  • தமிழ்நாடு அரசு நிதியின் உதவியுடன் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் ஆக்கங்கள் யாவும் கட்டற்ற உரிமத்தின் கீழ் கிடைக்க ஆவன செய்தல். இவற்றின் மின்படியை தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலமாக விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றுதல்.
  • ஆகத்து 15, 2015 முதல் ஆறு மாதங்களும் மாபெரும் தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துதல். இதில் துறை வாரியாகவும் மாவட்டம் வாரியாகவும் பரிசுகளை வழங்குதல். கடந்த பல பத்தாண்டுகளில் தமிழர் வாழ்வியலை வெளிக்கொணரும் அரிய ஊடகங்களை விக்கிமீடியா காமன்சில் கட்டற்ற உரிமத்தில் பதிவேற்றுவது இதன் முக்கிய நோக்கமாக இருக்கும். இவ்வரிய ஆவணங்களை கொணர்வதற்குத் தேவைப்படும் அரசுத் துறை ஆதரவைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும்.
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் "கட்டற்ற அறிவுக்கான நடுவம்" ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக மாநிலம் தழுவிய தொடர் பயிற்சிக் கூட்டங்கள் நடத்துவது. இப்பயிற்சிக் கூட்டங்கள் கணினி, அலைபேசிகளில் தமிழைப் பயன்படுத்துவது முதற்கொண்டு தமிழ்க் கணிமை நிரலாக்கம், விக்கிமீடியா பங்களிப்புகள் வரை ஒருங்கே பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ளும். இது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் போறும் தமிழ்க் கணிமைப் பேரவைகள் உருவாக்கப்பட்டு அவை ஊடாக வட்டாரப் பரப்புரைகள் ஒருங்கிணைக்கப்படும். இப்பரப்புரை முயற்சிகளில் தமிழ் விக்கிப்பீடியர்கள், கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் பகுதி நேரமாகவும் திட்டப்பணி அடிப்படையிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
  • தமிழகம் முழுவதும் துறை சார் வல்லுநர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றிய பயிற்சிகள் அளித்து கட்டுரைகள் எழுதக் கோருவது. இது தொடர்பான முக்கிய தலைப்புகள் பட்டியலை உருவாக்க வேண்டும். இம்முயற்சிகளில் ஊடகவியலாளரும் தமிழ் விக்கிப்பீடியா நலம் விரும்பியுமான ஆழி. செந்தில்நாதன் குடிமைச் சமூகத்தின் சார்பாக ஒருங்கிணைப்புகளைச் செய்ய முன்வந்துள்ளார்.
  • முதலில் மேற்கண்ட பல்வேறு திட்டங்கள் ஊடாக புதிதாக ஒரு இலட்சம் கட்டுரைகளை ஆறு மாத காலத்தில் உருவாக்குவது என்ற இலட்சிய இலக்கை அலசினோம். பிறகு, அதில் பல்வேறு இடர்கள் உள்ளன என்பதை உணர்ந்து வழமை போல எண்ணிக்கையை முன்வைக்காமல் தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்புக்கு உட்பட்டு இயல்பான முறையில் பயனர்களை உள்வாங்கி கட்டுரைகளைச் சீராக உருவாக்குவது என்ற புரிந்துணர்வு எட்டப்பட்டது.

அடுத்து தொகு

  1. இவ்வாரம் மெக்சிக்கோவில் நடைபெறும் விக்கிமேனியா மாநாட்டில், இது தொடர்பாக நேரடியாக விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர்களைச் சந்தித்து விவரங்களைத் தெரிவித்து ஆதரவு தரக் கோர உள்ளோம். நிதி, கொள்கை ஆவணங்கள் வகுப்பு, பரப்புரை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற வளங்கள் என்பவற்றை உள்ளடக்கி ஆதரவு கோருவது இருக்கும். இதில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக தினேசு, தமிழ்ப்பரிதி, நான் பங்கேற்க தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் ஆதரவைக் கோருகிறோம். இச்சந்திப்பின் முழுமையான விவரங்கள் இங்கு ஆவணப்படுத்தப்படும்.
  2. இத்திட்டம் அரசு நிறுவனம் ஒன்றுடன் முறையான கூட்டுறவாக இருப்பதாலும், தனிநபர்களால் கையாள முடியாத பெரும் நிதி முதலியவற்றைக் கையாள வேண்டி இருப்பதாலும், முறையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி இருப்பதாலும், முறையான மற்ற அமைப்புகளே நிறுவன ஆதரவை வழங்க முடியும். எனவே, இது தொடர்பாக இரு நிறுவனங்களைப் பரிந்துரைத்து ஆதரவு கோருகிறேன்.
    1. விக்கிமீடியா இந்தியா - இது இந்தியாவில் உள்ள அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சிக்காகவும் செயல்படும் நிறுவனம். விக்கிமீடியா அறக்கட்டளையின் முறையான ஏற்பு பெற்றது. சுந்தர் இதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். சோடாபாட்டில் இதன் செயற்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றி உள்ளார். நான் இதன் திட்ட இயக்குநராக பணியில் இருப்பதால் என்னுடைய பணி நேரத்தின் பகுதியாகவும் கணிசமான அளவு இத்திட்டத்தில் ஈடுபட முடியும். அதே வேளை, தமிழ் விக்கிப்பீடியா சமூக இயங்கியலை உணர்ந்து செயற்படவும் முடியும்.
    2. தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியர்கள் இணையத்தில் சிறப்பாகப் பங்களித்தாலும் தொடர் களப்பணியில் ஈடுபடுவது சிரமமே. இதனை தமிழ்விக்கி10 நிகழ்வின் போது உணர்ந்தோம். ஏற்கனவே மாநிலம் தழுவிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள இவ்வமைப்பு இத்திட்டத்தின் பல்வேறு பயிற்சிகள், ஒருங்கிணைப்புகளில் சிறப்பான பங்களிக்க முடியும். ஏற்கனவே, தாமாகவே விக்கிப்பீடியா பரப்புரைகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். சிபி உள்ளிட்ட இன்னும் சில தமிழ் விக்கிப்பீடியர்கள் இவ்வமைப்பில் இருப்பதால் நமது கொள்கைகளை உணர்ந்து சிறப்பாக எடுத்துச்செல்ல முடியும்.

வழமையான தன்னாட்சிக் குறிப்புகள் தொகு

  • தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வழமையான தன்னாட்சியோடே இத்திட்டத்தில் பங்கெடுக்கும். முக்கிய முடிவுகள், இறுதி முடிவுகள், கொள்கை முடிவுகள் முதலியன தமிழ் விக்கிப்பீடியாவின் வழமையான முடிவெடுக்கும் முறைக்கு உட்பட்டே இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே இணைந்திருக்கும் நிறுவனங்களின் பணியும் கடமையுமாக இருக்கும். நிறுவன ஆதரவு நடைமுறைக் காரணங்களை முன்வைத்தே தேவைப்படுகிறது.
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒரு தமிழக அரசு நிறுவனமாக இருந்தாலும், அதன் நோக்கம் உலகளாவிய அளவில் தமிழ் பரப்புதலே. எனவே, இத்திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணியும் பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்களை உள்ளடக்கியே செயற்படும்.

அனைவரின் கருத்தையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:00, 12 சூலை 2015 (UTC)Reply

கருத்துக்களம் தொகு

  1.   விருப்பம்--உழவன் (உரை) 00:16, 13 சூலை 2015 (UTC)Reply
  2.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:09, 13 சூலை 2015 (UTC)Reply
  3.   விருப்பம்--Commons sibi (பேச்சு) 03:38, 17 சூலை 2015 (UTC)Reply
  4.   விருப்பம்-- உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:40, 28 சூலை 2015 (UTC)Reply
  5.   விருப்பம்♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:10, 30 சூலை 2015 (UTC)Reply

நற்கீரன் தொகு

  • கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள், கட்டற்ற உள்ளடக்கம்/உரிமம் ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு அரச நிலையில் ஒரு விழிப்புணர்வு உருவாதல் மிகவும் வரகேற்க வேண்டிய முன்னேற்றம். குறிப்பாக அரச மற்றும் அரச ஆதரவு வெளியீடுகள் இயன்ற அளவு கட்டற்ற உரிமத்தில் அமைய வேண்டும், எண்ணிமப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அறிவியல் களஞ்சியம், மருத்துவக் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் போன்ற முக்கிய படைப்புகள்.
  • தமிழ் விக்கிப்பீடியா அமைப்புசார்ந்து செயற்படுவதில் சவால்களைச் சந்தித்து, திட்டம் சார்ந்தே செயற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் ஒரேயடியாக பல திட்டங்களை முன்வைத்தால், சமூகத்தை திணறடிக்கக் கூட்டும். அதனால் செயற்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற முடியாமல் போகலாம். குறிப்பான எந்தச் செயற்திட்டமும், சமூக அனுமதி பெறப்பட்டே (இணக்க முடிவு அல்லது வாக்கு முடிவு) முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஒரு குறிப்பான செயற்திட்டம் தொடர்பாகவே ஒரு முகாமை நிறுவனத்தை முடிவுசெய்தல் பொருத்தமானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக அல்ல.
  • கூகிள் அனுபவத்தில் இருந்து, இந்த மாதிரிச் செயற்திட்டங்கள் பெரும் வீச்சில் தொடங்கி, இடையில் தொங்கிப் போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தச் செயற்திட்டங்கள் குறிப்பான இலக்குகள், கால வரைவுடன் அமைய வேண்டும். சமூகத்தின் capacityக்கு ஏற்ப அமைய வேண்டும்.
  • இயன்ற அளவு விக்கியில் திட்டமிடல், ஒருங்கிணைப்பு நடத்தப்பட வேண்டும். விக்கி தொடர்பாகச் செயற்படும் அனைவரும் விக்கியில் எதாவது வகையில் பங்களித்தவர்களாக இருத்தல் வேண்டும். இல்லாவிடின் அவர்களை மதிப்பிட முடியாது, அவர்களிடம் நம்பிக்கை உருவாகாது.
  • எந்த நிலையிலும் தமிழ் விக்கி அரசியல் கட்சியை அல்லது பிரமுகர்களை முன்னிறுத்தப் பயன்படுத்தப்படல் கூடாது. தனிப்பட்ட promotion இக்குப் பயன்படுத்தப்படல் ஆகாது.
  • தமிழ் விக்கி அடிப்படை மனித உரிமைகளை மதிக்கா அரச அலகுகளுடன் இணைந்து செயற்படுத்தல் கூடாது.
  • பன்னாட்டுப் பங்களிப்பாளர்களை உள்வாங்குவதாக செயற்திட்டங்கள் அமைவது வரவேற்கத்தக்கது.
  • எதாவது ஒரு GLAM செயற்திட்டத்துக்கு (குறிப்பாக எண்ணிமப்படுத்தல்/விக்கியாக்கம்) முன்னுரிமை கொடுத்தால், நல்ல முன்னோடியாக அமையும்.
  • விக்கிப்பீடியா:துறைசார் பயிற்சிகள்

--Natkeeran (பேச்சு) 14:01, 13 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம்--மணியன் (பேச்சு) 13:25, 29 சூலை 2015 (UTC)Reply

மயூரநாதன் தொகு

தகவல்களுக்கு நன்றி இரவி. இது விக்கித்திட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் ஐயமில்லை. எனவே நல்ல முறையில் திட்டமிட்டு முழுமையான பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். இரவி எடுத்துக்காட்டிய நடைமுறைச் சிக்கல்களைக் கையாளுவதற்காகப் பிற அமைப்புக்கள், நலம் விரும்பிகளுடன் இணைந்து செயல்படுவதிலோ, உதவிகளைப் பெறுவதிலோ எனக்கு எதிர்க்கருத்து இல்லை. அதேவேளை தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளில் தமிழ் விக்கிமீடியர்களுக்கு முதன்மைப் பொறுப்பு இருக்கக் கூடியதாகத் திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே எனது கருத்து. இல்லாவிட்டால், திட்டங்கள் விக்கிச் சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி தமிழ் விக்கிமீடியாச் சமூகத்தின் தன்னம்பிக்கை சார்ந்த வளர்ச்சியில் தங்கியுள்ளது. இதற்கு விக்கிக்கித் திட்டங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தமது உழைப்பினால்தான் விக்கித்திட்டங்கள் முன்னேறிச் செல்கின்றன என்னும் உணர்வு ஒவ்வொரு தமிழ் விக்கிமீடியர் மனதிலும் ஏற்படும்வண்ணம் நமது திட்டங்கள் அமையவேண்டும். விக்கித்திட்டங்களின் வளர்ச்சியில் தமக்கு அதிகம் பங்கு இல்லை என்ற உணர்வு ஏற்படுமானால், விக்கிச் சமூகம் தளர்வடைந்துவிடக்கூடும். "நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துச் சென்றதுபோல" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது போன்ற ஒரு நிலைமை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். கூடியவரை, தமிழ் விக்கிமீடியர்கள் புதிய அனுபவங்களையும், அறிவையும் பெறுவதற்கும், அவர்கள் எதிர்காலத்தில் விக்கித்திட்டங்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு உதவும்வகையிலும் திட்டங்கள் அமையவேண்டும்.

மாணவர்கள், பொதுமக்களுக்கான போட்டிகளைத் திட்டமிடும்போது நமது பழைய அனுபவங்களைக் கருத்தில் கொள்வது அவசியம். நாம் முன்னர் பெரிய அளவில் நடத்திய போட்டி மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது அறிந்ததே. இதன் படிப்பினைகளை உள்வாங்கிப் புதிய செயற்பாடுகள் அமைவது அவசியம். குறிப்பாகப் போட்டியாளர்கள் கலைக்களஞ்சிய நடையில் கட்டுரை எழுதுவதை உறுதிப்படுத்தல், அவர்கள் தமிழ் விக்கித்திட்டங்களுடன் பழக்கப்படுத்திக்கொள்வதையும், அவர்களில் ஒரு சிறிய பகுதியினராவது தொடர் பங்களிப்பளர்களாக மாறுவதையும் உறுதிப்படுத்தல் என்பன திட்டங்களின் பகுதிகளாக அமைதல் வேண்டும்.

கட்டுரை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு இலக்கை வைத்துக்கொள்வது பிழையான விடயம் அல்ல. பல்வேறு அமைப்புக்கள் இவ்வாறான இலக்குகளை முன்வைத்துத்தான் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. அடையக்கூடிய நியாயமான இலக்கொன்றை ஏற்படுத்தமுடியுமானால் அது திட்டமிடுவதற்கும், முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளைச் சரியான முறையில் கையாளுவதற்கும் உதவியாக இருக்கும். இது இலக்கில்லாமல் செயற்படுவதைக் காட்டிலும் சிறப்பானது. இந்த இலக்கைப் பொது அறிவித்தலாக வைக்கவேண்டியதுகூட இல்லை. நமது வழிகாட்டுதலுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில், நமது திட்டங்கள் எவ்வாறு அமையலாம் என்பது குறித்த எனது எண்ணங்களை ஏனைய பயனர்களின் கருத்துக்களையும் அறிந்த பின்னர் பகிர்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 17:25, 13 சூலை 2015 (UTC)Reply

சிபி தொகு

//தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியர்கள் இணையத்தில் சிறப்பாகப் பங்களித்தாலும் தொடர் களப்பணியில் ஈடுபடுவது சிரமமே. இதனை தமிழ்விக்கி10 நிகழ்வின் போது உணர்ந்தோம். ஏற்கனவே மாநிலம் தழுவிய களப்பணியாளர்களைக் கொண்டுள்ள இவ்வமைப்பு இத்திட்டத்தின் பல்வேறு பயிற்சிகள், ஒருங்கிணைப்புகளில் சிறப்பான பங்களிக்க முடியும். ஏற்கனவே, தாமாகவே விக்கிப்பீடியா பரப்புரைகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். சிபி உள்ளிட்ட இன்னும் சில தமிழ் விக்கிப்பீடியர்கள் இவ்வமைப்பில் இருப்பதால் நமது கொள்கைகளை உணர்ந்து சிறப்பாக எடுத்துச்செல்ல முடியும்.//

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை முறையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் உதவ தயாராக உள்ளோம் .--Commons sibi (பேச்சு) 03:38, 17 சூலை 2015 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன் தொகு

எனக்கு நேரமில்லை என்பதால் இதை முழுதாகப் படிக்கவில்லை. ஆனால் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் சில செய்ய வேண்டியுள்ளது.

  1. நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களில் இன்னும் பலரின் நூல்கள் தரவேற்றப்படவில்லை. நூலகங்களில் நூல்களை வாங்கி தரவேற்றிவிட்டு திருப்பிக்கொடுத்தால் நலம். இப்படிச்செய்தால் பல உள்ளடக்கங்களை எளிதில் சேர்க்கலாம்.
  2. சங்க இலக்கியத்தில் சொல்லைக் கொண்டு வரிகளைத் தேடும் திட்டத்தில் வழு இருந்தது. (இலக்கணக் குறிப்பு விரிதரவு / Annotated Corpus) இப்போது முழுதாக சரி செய்யப்பட்டுவிட்டதா எனத் உறுதிப்பட தெரிய வேண்டும்.
    1. மேலும் http://stream1.tamilvu.in/annocorp/Soll.aspx என்பதற்கு பதிலாக http://stream1.tamilvu.in/annocorp/Soll&search=வழுதிlistallitems.aspx என்பது போல் இணைப்பு வரவேண்டும். அதை சொடுக்கியவுடன் வழுதி என்ற சொல் உள்ள எக்ச்.எல். ரிசல்டு வரவேண்டும். அப்படி வந்தால் மேர்கோள் காட்ட வசதியாய் இருக்கும். ஆனால் தற்போது எந்த சொல்லை இட்டு தேடினாலும் http://stream1.tamilvu.in/annocorp/Soll.aspx என்ற இணைப்பு நிலையாக இருக்கிறது.
  3. இந்த இணைப்பிலுள்ள http://tamilvu.org/library/libindex.htm பிற நூலக இணைய தளங்கள் என்பவற்றில் தமிழ் விக்கி நூல்கள் இடம்பெற வேண்டும்.

இன்னும் பல இருக்கு. நேரம் வரும்போது எழுதுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:07, 27 சூலை 2015 (UTC)Reply

மாகிர் தொகு

கோவையில் நடந்த இணைய மாநாட்டில் இப்பல்கலைக்கழகம் வழங்கிய ஒருஇலட்சத்திற்கு மேற்பட்ட சொல் அகராதி கொடை தமிழ்விக்சனரியில் முக்கிய இடத்தை பிடித்ததை நினைவு கூர்கிறேன். இணையக்கல்விக்கழகத்துடன் விக்கிப்பீடியா இணைந்து பணியாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேவேளை, அரசு தொடர்புடைய நிறுவனத்தின் பங்களிப்புகளில் தகவல் பறிமாற்றங்களில் (தரவேற்றங்களில்) அரசியல் நெடி (குறுக்கீடுகள்) இருக்காமல் - அல்லது நடுநிலைமை பிறவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில் இந்திய அரசு, இணையப் பயனர்களின் தகவல்களை கேட்டுப் பெறுவது பற்றிய செய்திகள் வெளிவருகிறது. அரசு நிறுவனம் விக்கிப்பீடியாவுடன் நெருங்கி பங்களிக்கும் போது, பயனர் தகவல்களின் பாதுகாப்பு பற்றிய விக்கிமீடியா கொள்கைகள் பேணப்பட வேண்டும்.

நன்றி -- மாகிர் (பேச்சு) 15:44, 28 சூலை 2015 (UTC)Reply

மயூரநாதன் 2 தொகு

இது போன்ற வாய்ப்புகள் வருகின்ற வேளையில் விக்கித்திட்டங்களின் வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும்போது, விக்கித்திட்டங்களின் உள்ளாற்றல், நமது இலக்கு, தமிழ் விக்கிச் சமுதாயத்தின் நிலை, நமக்கு இருக்கக்கூடிய வளங்கள், நம்முடைய தேவைகள், குறைபாடுகள், வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள், விக்கிக்கு வெளியில் இருந்து எவ்வாறான உதவிகள் தேவை போன்றவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வையின் அடிப்படையிலேயே நமது அணுகுமுறை அமைதல் வேண்டும். அதை விடுத்துத் துண்டுதுண்டாக ஏதாவது செய்யலாம் என எண்ணினால், விக்கித்திட்டங்களுக்கோ அல்லது விக்கித்திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் த. இ. க. க போன்ற அமைப்புக்களுக்கோ எதிர்பார்த்த பலன் கிட்டாது. விக்கித்திட்டங்களின் வளர்ச்சிக்கான செயற் திட்டங்களை உருவாக்குவதற்கு முன், மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கருத்தில் எடுத்த ஒரு முழுதளாவிய மேலோட்டமான திட்டம் ஒன்று அவசியம். இவ்வாறான ஒரு திட்டத்தை அடிப்படையாக வைத்து நமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கு உதவக்கூடிய குறுகியகாலச் செயல் திட்டங்களை உருவாக்கமுடியும்

தமிழ் விக்கித்திட்டங்கள் தமிழ்க் கணிமையின் அம்சங்கள் என்றவகையிலும், விக்கிச் சமூகம் கட்டற்ற அறிவு என்னும் கொள்கைக்கு ஆதரவு அளிப்பது என்ற வகையிலும், இது தொடர்பான த. இ. க. கழகத்தின் முன்னெடுப்புக்களுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்கவேண்டும். அதேவேளை, விக்கித்திட்டங்களோடு நேரடித் தொடர்பற்ற விடயங்களில் அளவுமீறி ஈடுபடுவதன் மூலம் நமது வரையறைக்கு உட்பட்ட வளங்களை வீணாக்கக்கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், நாம் உருவாக்கும் குறுகியகாலச் செயல் திட்டங்கள், நமது தற்போதைய இயலுமைக்குப் பொருத்தமானதாக இருப்பதுடன், அவ்வியலுமையை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் வாய்ப்புக்களை வழங்குவதாக இருக்கவேண்டும். பின்வருவன திட்டங்களை வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

நோக்கம்: தரமான அறிவு உள்ளடக்கங்களை விக்கித்திட்டங்களூடாகக் கட்டற்ற முறையில் தமிழ் மக்களுக்கு வழங்குதல்.

  • கட்டுரைகள்/ உள்ளடக்கப் பக்கங்களின் எண்ணிக்கை
    • எண்ணிக்கையை அதிகரித்தல்
    • உள்ளடக்க அளவை அதிகரித்தல்
  • கட்டுரைகள்/ உள்ளடக்கப் பக்கங்களின் தரம்
    • தகவல்களின் தரம்
    • முழுமை
  • வளங்கள்
    • பங்களிப்பவர்கள் (பங்களிப்பவர்களே முக்கியமான வளம். எனவே பங்களிப்பவர்களைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் முதன்மை பெற வேண்டும்)
      • பங்களிப்பவர்களைக் கவர்தல்
      • பங்களிப்பவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல். (இதற்கான வீடியோ பாடங்களை உருவாக்க த. இ. க. க. உதவலாம்)
    • தகவல் தேவை (நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் இத்தேவைகளை நிறைவுசெய்ய உதவமுடியும்)
      • உசாத்துணை நூல்கள்
      • ஆவணங்கள்
      • கட்டற்ற படிமங்கள்
    • கலைச் சொற் தேவை (கலைச்சொல் பற்றாக்குறை தமிழில் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் த. இ. க. க. ஈடுபடலாம்)
      • புதிய கலைச்சொல் உருவாக்கம்
      • கலைச்சொல் தரப்பாடு
      • மக்களுக்கு வழங்குதல்
    • மென்பொருட்கள்
      • மொழி பெயர்ப்பு
      • எழுத்துணரி
      • பிழைதிருத்தி

போட்டி: விக்கித் திட்டங்கள் தொடர்பில், போட்டிகள் பொதுவாக புதிய பங்களிப்பாளர்களைக் கவர்வதற்கும் கட்டுரைகள் அல்லது உள்ளடக்கப் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமாக ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆனாலும் பெரிய அளவில் திறந்த பங்குபற்றல் என்ற முறையின் அடிப்படையில் ஒழுங்குசெய்யப்படும் போட்டிகள் இந்த இலக்கை அடைய உதவவில்லை என்பதை நமது அனுபவங்கள் காட்டுகின்றன. இதனால், போட்டிகளில் இருந்து எதிர்பார்க்கும் பயனைப் பெற்றுக்கொள்வதற்கு போட்டியை வேறுவகையில் வடிவமைக்க வேண்டும். திறந்த போட்டிகளுக்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட வழிகாட்டலுடன் கூடிய போட்டிகள் பயனுள்ளவையாக அமையக்கூடும். போட்டிகள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

  • விக்கித்திட்டங்களுக்குப் புதிய பங்களிப்பாளர்களைக் கொண்டுவரவேண்டும்.
  • போட்டியில் கலந்துகொள்பவர்கள் போட்டிக்காலத்தில் விக்கித் திட்டங்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போதிய வாய்ப்புக்கள் இருக்கவேண்டும்.
  • போட்டிக்காலத்தில் கலந்துகொள்பவர்கள் முறையான கட்டுரைகளை எழுதக்கூடிய வகையில் பயிற்சி வழங்குதல்.

மாதிரிப் போட்டி (விக்கிப்பீடியா):

  • கலந்துகொள்பவர்கள்: ஆர்வமுள்ள 500 போட்டியாளர்கள். இவர்களை 50 போர் கொண்ட 10 குழுக்களாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குழுவும் ஒன்று அல்லது இரண்டு விக்கிமீடியர் அல்லது விக்கித்திட்டங்கள் பற்றி அறிந்த தன்னார்வலர் கொண்ட குழுவினால் வழிநடத்தப்படும்.
    • ஒவ்வொரு குழுவுக்கும் தொடக்கத்தில் குறைந்தது ஒரு நாளாவது பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்படும்.
    • பயிலரங்குக்கு முன்பே போட்டியாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
    • பயிலரங்கன்று ஒவ்வொருவரும் குறைந்தது 300 சொற்களைக் கொண்ட இரண்டு முறையான கட்டுரைகளை எழுதவேண்டும் (தாளில் எழுதலாம், சரிபார்த்த பின்னர் விக்கிப்பீடியாவில் சேர்த்துக்கொள்ளலாம்).
    • பின்னர் தொடர்ந்து மாதத்துக்குக் குறைந்தது 5 கட்டுரைகள் வீதம் ஆறு மாதங்களில் 30 கட்டுரைகள் எழுதவேண்டும். (இதன்மூலம் முறையான 15,000 கட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது).
    • மாதம் ஒரு பரிசும் இறுதியாக 3 பரிசுகளும் வழங்கலாம்.

இந்த முறையில் ஒவ்வொரு போட்டியாளரும் பயிற்சி பெற்றபின்னரே போட்டியில் கலந்துகொள்வார். இதனால், கட்டுரைகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றவகையில் அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்கள், விக்கிப்பீடியாவில் நேரடியான அனுபவத்தைப் பெறுவர். போட்டியாளர்கள் 6 மாதங்களுக்கு விக்கிப்பீடியாவுடன் தொடர்பில் இருப்பர் என்பதால் அவர்களில் பலர் தொடர் பங்களிப்பாளர்களாக மாறவும் வாய்ப்பு உள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 19:12, 28 சூலை 2015 (UTC)Reply


உலோ.செந்தமிழ்க்கோதை,பயனர் தொகு

களஞ்சியங்கள் தொகு

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அறிவியல், வாழ்வியற்களஞ்சியங்களையும் தமிழ்வளர்ச்சி கழகத்தின் மருத்துவ,சித்த மருத்துவக் களஞ்சியங்களையும் அந்தந்த நிறுவனங்களை அணுகி, விக்கி பொது உரிமத்தின் கீழ் கொணர முயலலாம். மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகராதியை முழுமையாகவும் விரைவாகவும் பார்வையிட வழிவகுத்தல் இருநிறுவனங்களுக்குமே நல்ல பயனளிக்கும்.அண்ணா பல்கலைக்கழகச் சுற்றுச்சுழல் களஞ்சிய அகராதியையும் சென்னைப் ப்ல்கலைக்கழக இயற்பியல் களஞ்சிய அகராதியையும் விக்கி பொது உரிமத்தின் கீழ் தரவேற்றலாம். மேலும் மற்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ள வாழ்வியல்புலங்கள் தொடர்பான களஞ்சியங்களையும் தேடிப் பட்டியலிட்டு அவற்றையும் விக்கி பொது உரிமத்தின் கீழ் கொணரலாம்.

அகராதிகள் தொகு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருஞ்சொல் அகராதியையும் உருவாக்கிய பகுதிகள் வரையில் இணையத்தில் தரவேற்றம் செய்ய உரிய முயற்சிகளும் நல்ல பயனைத் தரும்.மேலும் மற்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ள அறிவியல்,வாழ்வியல்புலங்கள் தொடர்பான அகராதிகளையும் தேடிப் பட்டியலிட்டு அவற்றையும் விக்கி பொது உரிமத்தின் கீழ் கொணரலாம்.

இவ்விருபணிகளைப் பட்டியலிடுவதைப் போல செயற்படுத்துவது அவ்வளவு எளியதல்ல. என்றாலும் கட்டாயம் செய்தாகவேண்டியவை என்பதில் மறுப்பிறுக்க வாய்ப்பில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:41, 29 சூலை 2015 (UTC)Reply

தகவலுழவன் தொகு


  • @Thamizhpparithi Maari: அவர்களுடன் இணைந்து, கடந்த நான்கு ஆண்டுகளில், 3 கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளேன். அதற்கு முன், தனது சொந்த செலவில் முதல் இந்திய விக்கிமாநாடு நடந்த போது, மும்பைக்கு வந்திருந்து, தானாக முன்வந்து, தமிழ் குறித்த நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தனது பணியடர்விலும், பொதுவகத்தில்(GLAM), 3000 மேற்பட்ட கோப்புகளை அளித்தவர்.
  • தமிழ் குறித்த அவரது எண்ணங்கள்/செயற்திட்டங்கள் அளப்பறியது. தமிழ் விக்கிமீடியத் திட்டங்களின் சூழலை, அவர் நன்கறிவார். காலம் கருதி, நிறைய விவரங்களை, இங்கு விவரக்க விரும்பவில்லை. தமிழ் விக்சனரியில் இன்னும் ஒரு வருடத்தில் பத்துஇலகரம் சொற்களை இணக்க உள்ளார்.
  • பல தமிழக அரசின் கல்வித் தரவகங்கள், பொது உரிமத்தில் வர, முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நமக்குக் கொடையளித்த இக்கழகம், மேலும் கொடை தர உள்ளது. பெற இருப்பது கொடை, எனவே, நமது குடையின் கீழ்வரக் காத்திருப்போம். பெரிய அளவில் முதலாவதாக நடைபெறும் செயற்திட்டம் என்பதால், நாம் காத்திருக்க வேண்டியது மிக அவசியமென்பதே எனது எண்ணமாகும். வணக்கம்.--உழவன் (உரை) 07:00, 29 சூலை 2015 (UTC)Reply

சஞ்சீவி சிவகுமார் 2 தொகு

மயூரநாதன் குறிப்பிட்டபடி தமிழ்விக்கிப்பீடியாவின் இலக்கு, நமது தேவைகள், களையப்படவேண்டிய குறைபாடுகள் நமக்குள்ள ஆற்றல் வளங்கள் என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டே செயற்பட வேண்டும்.அதற்கான திட்டமும் சரியான கருத்துப்பரிமாற்றங்களும் அவசியம். விக்கித்திட்டங்களோடும் கொள்கைகளோடும் தொடர்பற்ற அல்லது மாறுபடும் விடயங்களில் உட்படாமலும் வளங்களை விரயமாக்காமலும் பார்க்கவும் வேண்டும். த. இ. க. கழகத்தின் முன்னெடுப்புக்கள் நமக்கு உடன்படுவதால் ஆவற்றை ஆதரிப்பதும் செயற்படுவதும் நமக்கு ஒரு வாய்ப்பாகவே அமையும். அந்த வகையில் மயூரநாதனின் முன்மொழிவுடன் மேலதிகமாக பின்வரும் குறிப்புகளை இடுகின்றேன்.

1.துறை சார் அறிஞர்களை முழுநேரப் பங்களிப்பாளர்காக்குதல் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் சார்ந்த துறையில் தலா 10 கட்டுரைகளை எழுதும் வகையில் ஒரு 300 நிபுணத்துவப் பங்களிப்பாளர்களை சேர்த்தல்.

2.காலத்துக்குக் காலம் முழுநேரச் செயன்முறைப் பட்டறைகள் மூலம் 1அல்லது 2 நாள் தரித்திருந்து காலை முதல் மாலை வரை முழுநேரமாகதொகுப்பில் ஈடுபடுதல் ( உணவு, சிற்றுண்டி முதலானவற்றை வழங்குதல்), திட்டத்துக்கு இணைய வசதியுடன் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினிகளை ஒழுங்கு செய்தல். விக்கிமூலத்தில் கலைக்களாஞ்சியக் கட்டுரைகளை பதிவேற்றுவதற்கு இது சிறந்த திட்டம். செயலங்கு முடிவில் குறிப்பிட்ட எண்ணிக்கையான கட்டுரைகள் சேரும். 3.பயிற்சியுடன் கூடிய போட்டி நல்ல திட்டம்.

  • போட்டியாளர்களை தெரிவுசெய்தல்
  • வழிகாட்டல் பயிற்சி
  • போட்டி

என அமைக்கலாம்

3. மாநிலம்/ நகரம் ரீதியாக, நாடுகள் ரீதியாக, துறை ரீதியாக உக்குவிப்பு முகாம்களை நடாத்துவதால் பல்வேறு பட்ட வகையிலான விடயங்களை தொகுக்க வாய்ப்பு ஏற்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:49, 29 சூலை 2015 (UTC)Reply

நந்தகுமார் தொகு

தற்போதைய தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைத்து பணியாற்றும் போதும், பிற திட்டங்களை முன்னேடுக்கும்போதும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழ் விக்கிச் சமூகத்தின் ஒற்றுமையைப் பேணல் என்பது எனக்கு மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. திட்டங்கள் விரிவடையும்போது சமூக உறுப்பினர்களிடையேத் தொடர்பாடல்கள் குறையலாம். எனவே, திட்டங்களைப் பற்றி முன்கூட்டியே விளக்குதல், கருத்துகளைக் கோருதல், வீண் விவாதங்களில் ஈடுபடல் போன்றவற்றை விலக்குதல், மூத்த, இளம் பயனர்களுக்கிடையே நல்லிணக்கம், கருத்துகள் மாறுபடும்போதும் கண்ணியம் காத்தல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு, பயனர்களிடையே பிணக்குகள் ஏற்படின் குறைந்த கால அளவுக்குள் உறுதியான முடிவுகள் எடுத்து செயற்படுத்தல், அனைவரையும் மதித்துச் செயற்படுதல், ஒருவொருக்கொருவர் அடிப்படையாக மதித்தல் போன்றவற்றை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலேக் குறிப்பிட்டக் கருத்துகள் நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது என்றாலும், நினைவுப் படுத்திக் கொள்ள தோன்றியதை இங்கேப் பதிவிடுகிறேன். யாரையும் குற்றமாக நினைப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். தமிழர்களாகிய நாம் எப்படி ஆழ்ந்து நம் மொழியை நேசிக்கிறோமோ அது போலவே, நம்மில் உள்ள குறைபாடான ஒற்றுமையின்மையை களைவது அல்லது சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது என்பது மிகத் தேவையான ஒன்றாகும். முக்கியமாக நம் திட்டங்கள் விரிவடையும் இத்தருணத்தில் அனைவரும் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது என்னுடையக் கருத்து. --நந்தகுமார் (பேச்சு) 08:42, 29 சூலை 2015 (UTC)Reply

அன்ரன் தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா உறவு பற்றிய தெளிவு எல்லாப் பயனருக்கும் இருக்காது எனக் கருதுகிறேன். எனவே, தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் என்பதில் எவ்வித வாய்ப்புக்கள் இருக்கின்றன எனப்பட்டியலிட முடியுமா? அவ்வாறாயின் கருத்திட வசதியாக இருக்கும். அல்லது எப்படி உதவலாம் என்பதையும் கண்டறியலாம். சில கருத்துக்களைப் பார்க்கும்போது, விக்கிப்பீடியா வளர்ச்சிக்கான பொதுவான உரையாடல் போல் உள்ளது. அக்கருத்துக்களுக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் தொடர்புள்ளதா என்ற மயக்கமும் உள்ளது. நான் விளங்கிக் கொண்டதை சுருங்கச் சொல்வதாயின் பொருள் (object) - தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள். ஆனால், அதன் இலக்கும் (target), செயற்பாடுகளும் (activity) விளங்கிக் கொள்வதில் சிரமமுள்ளது. எதிர்கால ஆறு ஏனாக்கள் உதவலாம். --AntanO 19:53, 29 சூலை 2015 (UTC)Reply

அன்டன், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழக அரசினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. உலகம் எங்கும் வாழ்ந்துவருகின்ற தமிழர்களைக் கருத்தில் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு உதவுவது இதன் நோக்கம். இதன் ஒரு பகுதியாகவே கணித்தமிழ் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் த.இ.க ஈடுபட்டு வருகிறது. இந்த அடிப்படையிலேயே தற்போது கணித்தமிழ் தொடர்பான எல்லா வளங்களையும் ஒன்றிணைத்து அதன் வளர்ச்சிக்கான வழிவகைகளைக் காண்பதற்குப் பெரும் எடுப்பிலான முயற்சிகளை த. இ. க மேற்கொண்டு வருகிறது. தமிழ் விக்கித்திட்டங்களின் வளர்ச்சியும் த. இ. க வின் நோக்கத்தோடு ஒத்துப்போகக்கூடிய ஒன்றாக அடையாளம் கானப்பட்டிருப்பதால், தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு த. இ. க முன்வந்திருக்கிறது. இது உண்மையில் முழுத் தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கான த. இ. கவின் முன்னெடுப்புக்களில் ஒரு பகுதியே.
இந்த அடிப்படையில், தமிழ் விக்கித்திட்டங்களை வளர்த்தெடுப்பதில் நம்முடைய தேவைகள் என்ன? அதற்கு த. இ. க என்ன உதவிகளைச் செய்ய முடியும்? என்பதை ஆராய்ந்து ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதே இப்போது நம்முன்னுள்ள பணி. நான் விளங்கிக்கொண்டபடி, தமிழ் விக்கித்திட்டங்களை எப்படி வளர்த்தெடுப்பது என்பது பற்றித்தான் நாம் இப்போது சிந்திக்கவேண்டியுள்ளது. ஒரு வேறுபாடு என்னவென்றால், இப்போது த. இ. க. வுடன் இணைந்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் சில முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வளர்ச்சிக்கான நமது திட்டமிடுதலில், விக்கி - த. இ. க கூட்டுறவு என்னும் புதிய அம்சத்தின் உள்ளாற்றலையும் சேர்த்துச் சிந்திக்க வேண்டும். நம்முடைய அணுகுமுறை தமிழ் விக்கித்திட்டங்களின் நீண்டகால வளர்ச்சியையும், அதற்கு ஒத்த குறுகியகாலத் திட்டங்களையும் கவனத்துக்கு எடுத்துக்கொள்வதாக இருக்கவேண்டும். த. இ. க. சில குறுகியகாலத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றை அடையவேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, பொதுவான கணித்தமிழ் வளர்ச்சிக்காக த. இ. க செய்ய உத்தேசித்துள்ளவை பற்றிச் சில விடயங்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து இரவியின் அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அரசின் அமைப்புக்கள் சில உருவாக்கும் ஆவணங்களை கட்டற்ற முறையில் வழங்குதல் போன்றவை நமக்கும் பயன்தரக்கூடிய விடயங்கள், இத்தகைய விடயங்கள் தொடர்பில் நாமும் நமது ஆதரவைத் த. இ. கவுக்கு வழங்க முடியும்.
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் விக்கித்திட்டங்கள் சார்பில் அழைக்கப்பட்டிருப்பவர்கள் பயனுள்ள செயற் திட்டங்களை முன்வைக்கவேண்டும். இதற்கு ஆர்வமுள்ள விக்கிப் பயனர்கள் அனைவரும் தமது குறிப்பான கருத்துக்களை இங்கே முன்வைத்துக் கலந்துரையாடுவது மிகவும் அவசியம். -- மயூரநாதன் (பேச்சு) 03:37, 30 சூலை 2015 (UTC)Reply
விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. --AntanO 16:35, 30 சூலை 2015 (UTC)Reply

கி.மூர்த்தி தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் கலந்துரையாட விக்கிப்பீடியா அழைக்கப்பட்டிருந்தால் விக்கிப்பீடியா முன்வைக்க வேண்டிய குறிப்புகள் யாவை என்பதையும், விக்கிப்பீடியா திட்டங்களை மேம்படுத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் உதவுப்போகிறது என்ற நோக்கத்துடன் விக்கிப்பீடியாவை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தால் விக்கியின் எதிர்பார்ப்புகள் யாவை என்பனவற்றையும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக் கொள்ள இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள பயனர்களின் ஆலோசனைகள் உதவுமென நினைக்கிறேன். எனது நோக்கில் மேலும் சில கருத்துகள்….

1. உதவுதலும் உதவிபெறுதலும் தற்காலிகத் திட்டங்களாக இல்லாமல் நிரந்தரத் திட்டங்களாக தொடரும் வகையில் கலந்துரையாடல் அமைதல் வேண்டும்.
2. விக்கித் திட்டங்களை மென்மேலும் வளர்க்க ஒவ்வோர் ஆண்டும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசிடம் இருந்து நிதிஉதவியை பெற்றுவழங்க த.இ.க.கழகத்திடம் கோரலாம்.
3. விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுவது போல பல்வேறு நிலைகளில் போட்டிகளை உருவாக்கி, மாவட்ட, மாநில, சர்வதேச அளவுகளில் நடத்தி கணித் தமிழை வளர்க்க த. இ.க.கழகத்திற்கு விக்கி உதவலாம் அல்லது விக்கிக்கு த.இ.க.கழகம் உதவலாம்
4. நான்காவது தமிழான அறிவியல் தமிழை பள்ளிகளில், கல்லூரிகளில் கட்டாயத் துணைப்பாடமாக இணைக்க பரிந்துரைக்கலாம்.
5. த.இ.க.கழகம் வழங்கும் இணையத்தமிழ் பாடத்தின் சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டப்படிப்புகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துவக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரலாம். இங்ஙனம் இணையத் தமிழ் பட்டம் பெற்றவர்களை பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரலாம்.
6. இணையத் தமிழில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கக் கோரலாம்.
7. த.இ.க.கழகமும் விக்கிப்பீடியாவும் இணைந்து மழலையர் முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் மத்தியில் கருத்தரங்குகள் சொற்பொழிவுகள், பயிற்சிகள், எனத் தொடர்ந்து இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கோரலாம்.
8. பல்துறைக் களஞ்சியங்கள், பேரகராதிகள் முதலான மொழிக்கருவூலங்களை பொது உரிமத்தின்கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளக் கோரலாம்.
9. தரத்திலும், எண்ணிக்கையிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையை மேலும் மேலும் உயர்த்தும் வகையிலும், அதே நேரத்தில் விரைவாகவும் தொடர்ந்து தொய்வில்லாமலும் தொடர இவ்வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளப்படவேண்டும்.

தினேஷ்குமார் பொன்னுசாமி தொகு

தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை அளித்துவந்துள்ள த.இ.க.க தற்போது மேலும் உதவிகளை செய்ய சீரிய முறையில் செயல்படுவதற்கு தமிழ் விக்கி குழுமத்தின் சார்பாக நன்றி. நாம் செய்ய வேண்டியவைகளில் சில விடயங்களில் குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

  • விக்கிமீடியன்சு இன் ரெசிடென்சு திட்டத்தின் கீழ் இரண்டு அல்லது மூன்று முழு நேர ஊழியர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி என ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒன்று அல்லது மேற்பட்ட நபர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
  • அச்சுப்பொறி, மின்வருடி போன்ற கருவிகள் ஏதாவது தேவைப்படுமாயின், யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் வரும் யார் பயன்படுத்த முடியும் என்ற கோட்பாடு உருவாக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப கருவிகள், மென்பொருட்கள் உருவாக்கும்போது அதனுடைய உரிமம் எவ்வாறு வழங்கப்படும். கட்டற்ற முறையில் வழங்கப்பட்டால் அதனை வணிகரீதியில் பிற நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடும்.
  • ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படும் போது இத்திட்டங்களை யார் கவனிப்பார்கள், என்ன நிகழும் என்பதை எழுத்துமுறையில் ஒப்பந்தமிடவேண்டும்.
  • அரசுடன் இணைந்து இயங்கும்போது கட்டுரை எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி தரத்தில் சிறிதளவும் குறை இருக்கக்கூடாது.
  • எவ்வளவு நாட்கள், மாதங்கள், வருடங்கள் இந்த இணைப்பு இருக்கும் என்பதனையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடவேண்டும்.
  • அரசுடைமையாக்கப்பட்ட மூலங்களை விக்கித்திட்டங்களில் இணைக்கும் பொழுது ஏற்படும் பின்விளைவுகளை அரசுக்கு விளக்கி அவர்களுடைய ஒப்புதலையும் ஒப்பந்தத்தில் பதிய வேண்டும்.
  • தமிழ் மொழிக்கு மட்டும் அரசு ஒத்துழைக்குமா அல்லது பிற மொழிகளுக்கும் ஒத்துழைப்பு கிடைக்குமா இல்லையா என்பதை உறுதி செய்யவேண்டும்.
திட்டம் பொறுப்பு ஒப்பந்தம் / காலக்கெடு
அச்சுப்பொறி, மின்வருடி போன்ற கருவிகள் தமிழ் விக்கிப்பீடியா பயனர் குழுமம் ? விக்கிமீடியா இந்தியா ? ?
தொழில்நுட்ப கருவிகள், மென்பொருட்கள் கிரியேட்டிவ் காமன்சு ? ?
விக்கிமீடியன்சு இன் ரெசிடன்சு யாரை தேர்ந்தெடுப்பது ? ?
பிறமொழி தமிழக அரசு ? பிற விக்கிமொழியினர் ? ?

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:47, 30 சூலை 2015 (UTC)Reply

நீச்சல்காரன் தொகு

நேற்று வாணி-பிழைதிருத்தி தொடர்பாக த.இ.க. இயக்குநரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது முன்திட்டமிடாத பொதுவான கணித்தமிழ் விவாதம் நடந்தது. அதில் த.இ.க. விக்கிப்பீடியாவிற்கு எப்படி உதவுவது என்பதைவிட த.இ.க எப்படி விக்கிப்பீடியாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்பதாக உணர்கிறேன். த.இ.க. ஒரு அரசு அமைப்பு என்பதால் அதன் செயல்பாடுகள் உலகத்தமிழருக்குப் பயன்படவேண்டும், அடுத்து தமிழுக்குப் பயன்படவேண்டும், அடுத்தே விக்கிமீடியாத் திட்டங்களுக்குப் பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதை நோக்கியே நாமும் வாய்ப்புகளைப் பட்டியலிடலாம்.

  • நற்கீரன் குறிப்பிட்டது போல விக்கிதொடர்புடையவர் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதாலும், பலதுறை அறிஞர்களை நேரடியாக அழைத்துக் கலைக்களஞ்சியத்திற்குத் த.இ.க. உதவ இருப்பதாலும், அவர்கள் நேரடியாக விக்கிப்பீடியாவிற்கு என எழுதாமல் ஆவணமாக த.இ.க.வில் எழுதலாம். அதைப் பின்னர் விக்கியாக்கத்தை அவரோ அல்லது நாமோ செய்யலாம். இதனால் 1.விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு அவர்களை உட்படுத்தி, தகவல்களில் சமரசம் செய்யாமல் எழுதலாம். 2.விக்கிநடைக்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்களை அவர்கள் தவிர்க்கலாம் 3.அவர்களின் ஆவணம் விக்கி நிரலாகமட்டுமல்லாமல் HTML வடிவிலும் இருப்பதால் பிற திட்டங்களுக்குப் பயன்படும். 4.இவ்வளவு பங்களித்தவர் என்ற ஒரு அடையாளத்தை அவ்வறிஞருக்குக் கொடுக்கமுடியும்.
  • தமிழர் சார்ந்த வரலாறு, கலை, அறிவியல் ஆவணங்கள் ஆங்கிலத்திலும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் அல்லது மொழிபெயர்ப்பை த.இ.க. செய்யவேண்டும். அதனால் ஆங்கில விக்கி உட்பட பலமொழி விக்கியில் நமது தகவல்களை எளிதில் ஏற்றமுடியும்.
  • எங்கெல்லாம் தமிழ் வளங்கள் இருக்கின்றன அவற்றைப் பொதுவள உரிமைத்தில் கொண்டுவருவதால் எப்படி விக்கிப்பீடியா பலனடையும் என்று சுட்டிக்காட்டுதல் சிறப்பாகயிருக்கும். தமிழக அரசின் சட்டங்களை எல்லாம் அத்துறையின் தளத்தில் இருந்தாலும் ஆங்கிலத்திலோ, பிடிஎப் வடிவிலோ இருக்கின்றன. அதனைத் தமிழ் ஒருங்குறி வடிவில் மாற்றித் தருதல். அதை நாம் விக்கிமூலத்திலும், சுருக்கத்தை விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தலாம். தமிழக அரசின் பாடநூல்களை ஒருங்குறியாக்கி, பொதுவுரிமத்தில் வெளியிடவேண்டும், கொடையாகக் கொடுத்த களஞ்சியம் முதல் இதர களஞ்சியங்கள் வரை ஒருங்குறியாக்கம் செய்யப்படவேண்டும். செந்தமிழ்க்கோதை சொல்லியது போல பல்வேறு அமைப்புகளிடம் உள்ள களஞ்சியத்தை பொதுவுரிமத்திற்கு அவர்கள் கொண்டுவரவேண்டும். உள்ளாட்சித் துறை மூலம் தமிழக ஊர்களின் புள்ளிவிவரம் உட்பட வரைப்படங்களைப் பொதுவளமாகக் கொண்டுவருவதாகத் தெரிகிறது. இப்படிப் பொதுவுரிமையில் தகவல்களை வெளியிட வைத்து அதனைத் தானியங்கிகளுடனும் விக்கியாக்கத்தைச் செய்யலாம்.
  • பல அகராதிகளிலிருந்து கலைச்சொற்களைச் சேகரித்துத் தொகுத்து ஒருங்கிணைக்கப்பட்ட அகராதியை த.இ.க. உருவாக்கவேண்டும். அது தொகையகராதியாகவும், பெயரகராதியாகவும், தமிழ்-பன்மொழி அகராதியாகவும், இணைப்பெயர் கொண்ட அகராதியாகவும் இருக்கவேண்டும். தென்காசியார் சுட்டிக்காட்டியது போல அகராதியின் தேடல்விளைவுகள் அதன் முகவரியின் வினவலுக்கு ஏற்றதைப் போல இருக்கவேண்டும். உருபனியல் உருவாக்கி(morphological generator) மூலம் சொற்களைப் பெருக்கி அதை விக்சனரியில் உள்ளிடலாம்.
  • விக்கிலேப்ஸ்(tools.wmflabs.org), பைத்தான் விக்கி தானியங்கி உருவாக்கம் என விக்கிநுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளிக்க த.இ.க.வின் தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் ஒரு சிறந்த இடம். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி/முகாம்களுக்கு த.இ.க. உதவலாமே தவிர அது முன்னெடுக்கக் கூடாது. காரணம் 1.விக்கிப்பயனர்களுக்குள் இடைவெளியுண்டாகும். 2.த.இ.க. அந்த ஆற்றலை வேறு வழியில் செலுத்துவதால் தமிழருக்கு அதிகப் பயன்கிடைக்கும். 3.விக்கித்திட்டங்கள் எல்லாம் அமெரிக்க விக்கிமீடியா என்ற தனியார் அமைப்பைச் சேர்ந்தது

--நீச்சல்காரன் (பேச்சு) 08:06, 2 ஆகத்து 2015 (UTC)Reply

தமிழ் விக்கி செயற்திட்டங்களில் (பொதுவகம், தரவு உட்பட) எதாவது வகையில் பங்களித்தவர்கள் விக்கி சார்பாளர்களாக, விக்கி பயற்சியாளர்களாக அமைய வேண்டு என்பதே என் கருத்து. இது கட்டுப்பாடு தொடர்பான விடயம் இல்லை. ஈடுபாடு, புரிதல் தொடர்பானது. மேலும், விக்கியில் ஒரு தொகுத்தல் கூட செய்யாமல், விக்கியை விளங்கிக் கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. விக்கியை பலருக்கு பல சூழ்நிலைகளில் விளக்க முயன்ற அனுபவத்தில் இருந்து என் கருத்தை முன்வைக்கிறேன். "பின்னர் விக்கியாக்கத்தை அவரோ அல்லது நாமோ செய்யலாம்." என்பது எமது கடந்த கால அனுபவங்களில் இருந்து பார்க்க கடினமான செயற்பாடு. விக்கியாக்கம் நிகழ்நேரத்தில் நிகழ வேண்டும். விக்கியில் நேரடியாக ஒருவர் பங்களிப்பதும் ஊடாகவும் ஒரு அறிஞருக்கு recognition வழங்கலாம். அவ்வாறே பல அறிஞர்கள், துறை வல்லுனர்கள் தமிழ் விக்கியில் தமது பங்களிப்பை செய்துள்ளார்கள். அதுவே விக்கிக்கு அதிக நலன் சேர்க்கும் அணுகு முறையாக அமையும். அவ்வாறு பங்களிப்பதற்கான பயற்சிகளை உதவிகளை மயூரநாதன் குறிப்பிட்டது போன்று நாம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். The medium is the message என்ற கருத்து இங்கு நன்கு பொருந்தும். --Natkeeran (பேச்சு) 13:53, 4 ஆகத்து 2015 (UTC)Reply
நீச்சல்காரன், அனைத்து விக்கிமீடியா திட்டங்களும் விக்கிமீடியா அறக்கட்டளை என்னும் இலாப நோக்கற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. இது தனியார் அமைப்பு அன்று. இது ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (எந்த ஒரு அமைப்பும் ஏதாவது ஒரு நாட்டில் பதிவு செய்யப்படத் தான் வேண்டும்) விக்கிப்பீடியர்கள் உட்பட பன்னாட்டு குடிமக்களும் இதன் நிருவாகக் குழுவில் இடம்பெற்று இதன் செயல்பாடுகளை வழிநடத்த முடியும். நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அறக்கட்டளையின் ஏற்பு பெற்ற கிளைகள் உள்ளன. இக்கிளைகள் சார்பாகவும் நிருவாகக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்தல்கள் உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் முற்றிலும் திறந்த முறையில் நடக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இணையச் சுதந்திரம் முதலிய செயற்பாட்டிய நடவடிக்கைகளில் அந்நாட்டு அரச அமைப்புகளையே கூட எதிர்த்து நிற்கத் தயங்கியது இல்லை. விக்கிமீடியா திட்டங்களின் ஆக்கங்கள் முழுவதும் முற்றிலும் கட்டற்ற முறையில் கிடைப்பதால், இப்போதே கூட அவற்றைப் படியெடுத்து இன்னொரு புதிய திட்டத்தை உருவாக்கலாம். எனவை, இத்திட்டங்களுக்கான பங்களிப்பு என்பதை இந்நிறுவனத்தின் சொத்து அல்லது இலாபம் என்பது போல் பார்க்கவியலாது. நன்றி.--இரவி (பேச்சு) 04:46, 5 ஆகத்து 2015 (UTC)Reply

சுந்தர் தொகு

மேலே தெரிவித்துள்ள பல கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடே. இது தொடர்பான அரசு அலுவலருடனான சந்திப்பின்போது அவரது நன்னயமும், நன்னோக்கமும், இதை அணுகும் விதமும் நிறைவளிப்பதாய் இருந்தது. அரசுத்துறையினரும் விக்கிப்பீடியரல்லாத மற்றவர்களும் விக்கியின் உட்பண்புகளை ஓரளவுக்குமேல் உணர்ந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாவிட்டாலும் முரண் எதுவும் தென்படவில்லை. முன்பைக்காட்டிலும் இப்போது தமிழ் விக்கியின் குமுகம் சற்று வலுவாக இருப்பதாலும், பங்களிப்பாளர் வளம் ஓரளவு இருப்பதாலும் கூகுள் மொழிபெயர்ப்புத்திட்டத்தையும் கட்டுரைப்போட்டியையும்விட இந்த ஒத்துழைப்புத்திட்டத்தை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமென நினைக்கிறேன். அவ்விரண்டு திட்டங்களின் உறவாட்டத்திலும் பங்கேற்றபோது தென்பட்ட சில நடைமுறைச்சிக்கல்கள் இம்முறை அவ்வளவாக இல்லை. தமிழ் இணையக் கல்விக்கழகம் அடிப்படையில் கல்வி நிறுவனம் என்பதாலும், விக்கிமீடியா திட்டங்களின் மையநோக்கத்தோடு பொருந்திவரும் நோக்கைக் கொண்டுள்ளதாலும் சிறப்பு. அரசு மட்டத்திலும் இது உயர் அலுவலர்களின் நெறிகாட்டலில் நடைபெறுவதால் ஆட்சிப்பொறுப்பாளர்களுடனான தொடர்பாடல் எதுவும் தேவைப்படாதென்றே கருதுகிறேன். தமிழ்நாடு அரசின் இயக்கத்தில் நமது திட்டம் ஒரு சிறு பங்காகவே இருக்குமென்பதால் வழமைபோலவே நாம் நமது வளங்களைப்பொருத்தும், நமக்குப் பொருத்தமான விரைவுடனும் திட்டங்களைத் தொடரலாம். எத்தனை விக்கிப்பீடியர்களால் இயலுமோ அத்தனை பேரும் இத்திட்டத்தில் இணைந்து செய்ல்பட்டால் வெற்றி நமதே. சில துணைத்திட்டங்கள் பெரியவெற்றி எதையும் எட்டாவிடினும் பேரிழப்பு எதுவும் நேராது. -- சுந்தர் \பேச்சு 16:47, 2 ஆகத்து 2015 (UTC)Reply

இரவி தொகு

கருத்துகளைப் பகிர்ந்து வரும் அனைவருக்கும் நன்றி. ஆகத்து 8, 9 தேதிகளில் சென்னையில் நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்துக்கு முன்பு நாம் ஒரு அடிப்படைப் புரிந்துணர்வை நோக்கி நகர வேண்டி உள்ளது. இப்புரிந்துணர்வானது அடிப்படையான தேவைகள், களங்கள், வழிமுறைகளைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் கொள்கையானது ஒரு அடிப்படையான கொள்கை. அதனை முன்வைத்து, ஒவ்வொரு விக்கிப்பீடியா சமூகமும் தேவைக்கு ஏற்ப விரிவான புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம். சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறோம். ஆனால், எந்த ஒரு விக்கிப்பீடியாவும் எடுத்த எடுப்பில் ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு விரிவான கொள்கைகளை உருவாக்கவும் முடியாது. அது தேவையும் இல்லை. வளர்ச்சியைத் தடுப்பதாகவும் கூட அமைய முடியும். மேற்கண்ட பல்வேறு கருத்துகளில் சில போக்குகளைக் காண முடிகிறது.

எடுத்துக்காட்டுக்கு, தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனான கூட்டுறவு என்பது பின்வரும் களங்களில் அமையலாம்:

  • விக்கிமீடியாயா திட்டங்களுக்கு உதவும் வகையில் கட்டற்ற ஆக்கம், மென்பொருள் தொடர்பான அரசு கொள்கை முடிவுகள். (கொள்கை)
  • தமிழ் விக்கிப்பீடியர்களின் வழமையான செயற்பாடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அளித்தல் (உட்கட்டமைப்பு)
  • தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன் சார் பயிற்சிகளை அளித்தல் (திறன் மேம்பாடு)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் முக்கிய வழிமுறைகளுள் ஒன்றாக போட்டிகள் அமைதல் (உள்ளடக்க மேம்பாடு)
  • பொது மக்களிடையே தமிழ்த்தட்டச்சு, ஒருங்குறி முதலிய அடிப்படைத் தமிழ்க் கணினி பயன்பாட்டுக்கான விழிப்புணர்வை உருவாக்குதல் (பரப்புரை / அடிப்படைக் கல்வி)

கவனிக்க: இது ஒரு எடுத்துக்காட்டுப் பட்டியல் மட்டும் தான். இது போன்று, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை முன்னிட்டு, த. இ. க. வின் வழமையான செயற்பாடுகள், எல்லைகளுக்கு உட்பட்டு என்னென்ன களங்களில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்று வரையறுக்க வேண்டும். ஏற்கனவே, நாம் தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்த பரிந்துரைகள், இந்திய விக்கிமீடியா கிளைக்கு முன்வைத்த பரிந்துரைகள் முதலிய இவ்வாறான களங்களையே இனங்காண்கிறது. இப்போதைக்கு, இவ்வாறான களங்களை இனங்காண்பதே போதுமானது. பிறகு, ஒவ்வொரு களத்தினை முன்னிட்டும் என்னென்ன செயற்றிட்டங்களைச் செயற்படுத்த விழைகிறோம் என்பதை விரிவான திட்ட வரைவாக முன்வைக்கலாம். எடுத்த உடனேயே, மிகவும் நுணுகித் திட்டமிடுவது அவசியம் இல்லை.

தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் மட்டுமல்லாது எந்த ஒரு நிறுவனத்துடனும் ஆன கூட்டுறவு என்பது எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தான சில பொதுவான கருத்துகளும் தென்படுகின்றன.

எடுத்துக்காட்டுக்கு, நமது செயற்பாடுகள் பின்வரும் அடிப்படை நெறிகளைப் பின்பற்ற வேண்டும்:

  • தமிழும் தமிழ் விக்கிமீடியா திட்டங்களும் நாட்டு எல்லைகளைக் கடந்தது. எனவே, அனைத்துத் திட்டங்களிலும் பன்னாட்டுப் பங்களிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • விக்கிப்பீடியா ஒரு வலைத்தளம் (மட்டும்) அன்று. அது ஒரு பயனர் சமூகம். எனவே, அனைத்துத் திட்டங்களும் முறையான சமூக ஒப்புதல், பங்கேற்போடு நம் பங்களிப்பாளர்கள் முன்னின்று செயற்படுத்துவதாக அமைய வேண்டும்.
  • புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த முனையும் அதே வேளை, நமது பங்களிப்பாளர் சமூகத்தின் தாங்கு திறன் அல்லது தன்னார்வ உழைப்புக்கான அளவு அறிந்து அதற்கு ஏற்ப படிப்படியாக திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும்.
  • எந்த ஒரு திட்டமும் நமது வழமையான தரக்கட்டுப்பாட்டு முறைகளுக்கு உட்பட்டும் விக்கிப்பீடியா கொள்கைகள், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயற்படுத்தப்பட வேண்டும்.
  • எந்த ஒரு கூட்டும் செயற்றிட்டமும் விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கத்துக்குப் புறம்பான தூண்டல்களைக் கொண்டிருக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்துக்கான அவர்களது முக்கிய உந்துதல் என்பது அவர்களின் மொழிபெயர்ப்புக் கருவியை உருவாக்குவதாக அமைந்ததே பல்வேறு சிக்கல்களுக்கும் காரணம்.

கவனிக்க: இது ஒரு எடுத்துக்காட்டுப் பட்டியல் மட்டும் தான். இது போன்று, தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டுறவு முனைவுகளுக்கான வழிகாட்டல்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கி விட்டால், நுணுகித் திட்டமிடும் போது, இவ்வழிகாட்டல்களை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உறுதி செய்ய முடியும்.

அடுத்து, முக்கியமாக தெளிவுபடுத்த வேண்டும் என்று புலப்படுவது தமிழ் இணையக் கல்விக்கழகம், அதன் பின்புலம், நோக்கம், தற்போதைய கூட்டுறவு முனைவு பற்றி விவரங்கள்:

தமிழ் இணையக் கல்விக்கழகம் என்பது முதற்கண் ஒரு கல்வி நிறுவனம். தமிழ்க் கல்வி, தமிழ் வளர்ச்சி முதலியன இதன் அடிப்படைச் செயற்பாடுகள். ஒரு பல்கலைக்கழகம் செயற்படுவது போன்ற இதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இது அரசு நிதியில் இயங்கும் நிறுவனம் என்றாலும் தன்னாட்சியோடு செயற்படக்கூடியது. வழமையான தமிழ்நாட்டு அரசியல் ஆட்சி மாற்றங்கள் இதன் பணிகளில் குறுக்கிடுவதில்லை. இதன் நிருவாக அமைப்பை இங்கு காணலாம். இது வரை தேர்ந்த கல்வியாளர்களாக அறியப்படும் பலர் தலைமையிலேயே இந்நிறுவனம் நடந்து வந்திருக்கிறது. தமிழ்விக்கி10 கொண்டாட்டங்களின் போது, செல்வா முன்முயற்சியில் 20 தொகுதிகள் கலைக்களஞ்சியங்களைக் கொடையாக பெற்ற போது, சுந்தர், மயூரநாதன் ஆகியோருடன் இணைந்து இதன் செயற்பாடுகளை இன்னும் அருகில் இருந்து புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. 2000களில் பெரும்பாலும் வழமையான கல்வி நிறுவனமாகவே செயற்பட்டு வந்தாலும் அண்மைய ஆண்டுகளில் பல்வேறு பொதுமக்கள் சார், குடிமைச் சமூகம் தமிழ் ஈடுபாடுகளில் பங்கு கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

தற்போது பல்வேறு கணித்தமிழ் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தமிழ் விக்கிமீடியாவுடனும் தமிழ் மொழி சார் கட்டற்ற மென்பொருள் ஆக்கத்திலும் ஆர்வம் காட்டுகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், புகழ்பெற்ற பன்னாட்டுப் பல்கலைகள், மொழி வளர்ச்சி அமைப்புகளுடனும் பேசி வருகிறார்கள். இதற்கான அடிப்படை நோக்கம் என்பது, பல்வேறு உலக நிறுவனங்களின் சிறந்த வழிமுறைகளைக் கையாண்டு தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது என்பதே. அந்த வகையிலேயே கூகுள், மைக்ரோசாப்டுக்கு இணையாக விக்கிப்பீடியா என்ற முயற்சியையும் பார்க்கிறார்கள். விக்கிப்பீடியாவில் பல காலம் செயற்படுபவர்களுக்கே இதன் நெறிமுறைகள் கண்கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும் போது புதியவர்கள் நமது அனைத்து நடைமுறைகளையும் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அடிப்படை நோக்கம் நேர்மையாக இருக்கும் போது திறந்த மனதுடன் நமது நடைமுறைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவார்கள். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன.

2010ல் செம்மொழி மாநாடு நடந்த போது பல்வேறு தமிழ், தமிழக அமைப்புகளும் அதன் ஒரு அங்கமாக, அரசு ஏற்பைப் பெற்றுச் செயற்பட விரும்பின. ஆனால், விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் உணர்ந்து (அத்தகைய ஒரு அரசு உயர் அலுவலர் இருந்ததால்) அவர்களாகவே விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி நடத்தக் கோரினர். அதே போன்றதொரு வாய்ப்பே இப்போது மீண்டும் கிட்டியுள்ளது. ஆகத்து 8, 2015 அன்று மொத்தக் கலந்துரையாடலுக்கான நேரமே ஆறு மணி நேரங்கள் தாம். அதில் மூன்று ஒரு பகுதியைத் தமிழ் விக்கிமீடியாவுக்கும் கட்டற்ற மென்பொருள் ஆக்கத்துக்கும் ஒதுக்கியுள்ளனர் என்பது உண்மையில் பெரும் வாய்ப்பாகும். உலக அளவிலும் கூட இவ்வாறான புரிதலுடன் ஒத்துழைப்பு தரும் கல்வி நிறுவனங்களோ அரச அமைப்புகளோ மிகவும் குறைவே. எனவே, மிகுந்த பண்ணுறவாண்மையோடு இக்கூட்டுறவு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். தமிழ்நாடு அரசின் நிதியில் வெளியாகும் ஆக்கங்கள் அனைத்தும் கட்டற்ற உரிமத்தில் கிடைக்கும் என்ற ஒற்றைக் கொள்கை முடிவே கூட தமிழின் வருங்காலத்தை மிகவும் ஒளி மிக்கதாக மாற்ற முடியும். இது போன்ற முக்கிய முடிவுகளை நோக்கி நகரும் போது மிகுந்த நிதானம் தேவைப்படுகிறது. சுந்தர் மேலே சுட்டியபடி, ஒரு சில செயற்றிட்டங்கள் பல்வேறு காரணங்களாலும் எதிர்பார்த்த நல்விளைவைத் தராமல் போனாலும், நிச்சயம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஊறு நேராமல் பாதுகாக்கும் தன்னாட்சியும் கருவிகளும் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. கூகுள் திட்டத்திலும் கூட, அக்கட்டுரைகளை மேம்படுத்துவதோ நீக்குவதோ இன்றும் நம் முன் உள்ள தெரிவுகள் தாம்.

பொதுவாக, கடந்த கால படிப்பினைகளை மனதில் கொண்டு எச்சரிக்கையாக இருத்தல் முக்கியமே. அதே வேளை, ஒரு கூட்டுறவு முனைவில் இறங்கும் போது நம்முடைய சிக்கல்கள் என்ன, அவற்றைத் தீர்ப்பதற்கான தேவைகள் என்ன என்று முன்வைத்து அதற்கேற்ப திட்டங்களை முன்வைக்க வேண்டும். இது படிப்படியாக நிகழ்வது. நேர்மறையான அணுகுமுறைகள் வேண்டும். இப்படிகளைக் கடக்காமலேயே நுணுகிய அளவில் இன்னின்ன விசயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று எதிர்மறையாக மட்டுமே அணுகினால், கூட்டுறவு அடுத்த கட்டத்துக்கு நகர்வதில் சிக்கல்கள் உருவாகும். --இரவி (பேச்சு) 21:52, 2 ஆகத்து 2015 (UTC)Reply

இரவி இங்கே யாரும் எதிர்மறையாக உரையாடவில்லை என்றே எண்ணுகிறேன். எல்லோரும் நேர்மறைக் கருத்துக்களை முன்வைத்துத்தான் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நல்ல விடயங்களை முன்னெடுப்பதற்கான முயற்சியில் தவிர்க்கப்படவேண்டிய விடயங்கள் பற்றிப் பேசுவதும் முக்கியமே. அது எதிர்மறை அணுகுமுறை ஆகாது. --மயூரநாதன் (பேச்சு) 03:53, 3 ஆகத்து 2015 (UTC)Reply

தி சௌமியன் தொகு

தனி மனிதனாக நாம் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதைப்போல் நிறுவனங்களும் செய்யஇயலும். இதில் நமக்கு வேண்டியது இலக்கு மாறுபடக்கூடாது என்பதே. எப்படி நாம் விக்கிமீடியாவின் அடித்தள விதிகளை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறோமோ, அதே போல் TVA -வும் செயல்படவேண்டும்.

எண்களை இலக்காக கொள்வது தேவை என்பது என் எண்ணம். தரம் குறையக் கூடாது என்பதும் முக்கியமாகையால், இதனையும் இலக்காக கொள்ளவேண்டும். குறிப்பிட்ட தரம் கொண்ட கட்டுரைகள் இத்தனை படைக்கவேண்டும் என்று இலக்கு அமைப்பதே சரி.

எண்கள் ஏன் தேவைப்படுகின்றன? தனிப்பட்ட நபர்களின் பொழுபோக்குக்கு எண்கள் தேவை இல்லை. பொதுப்பணத்தை செலவு செய்யும்போது இலக்கு இன்றி செலவு செய்ய திட்டம் வகுப்பது சரியல்ல. ஆதலால் TVA எண்களை விரும்புவார்கள். நாம் எண்களை புறக்கணித்தால் அவர்கள் வேறு விதமாக செயல்பட வேண்டி வரலாம். அதனை தவிர்க்க நாமும் சேர்ந்து எண்களை குறிக்க முயலலாம்.

பொதுவாக இத்தனை பங்களிப்பாளர்கள் சேர்ந்து இத்தனை கட்டுரைகள் எழுத இயலும் என்ற புள்ளி விவரம் தேவைப்படும். இது கடந்த கால அனுபவத்திலிருந்து கிடைக்கக்கூடும். புதிய பயனர்கள் எண்ணிக்கை மிகும் பொழுது தரக்கட்டுபாட்டு முறைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் உயரவேண்டும். வழிகாட்டிகள், பிழை திருத்துவோர், கட்டமைப்பைதிருத்துவோர் என பல கலைகளிலும் ஈடுபட தன்னார்வலர்கள் தேவைப்படுவர். இச்செயல்கள் அனுபவம் மிக்க பங்களிப்பாளர்களிடமிருந்துதான் கிடைக்கும். இன்று 60 பேர் தீவிரமாக செயல்படுகையில் எத்தனை பேர் தங்கள் பங்களிப்பு விகிதத்தை மாற்றி அமைக்க தயார்? எத்தனை புதிய பங்களிப்பாளர்களுக்கு எத்தனை வழிகாட்டிகள் தேவை? இவற்றை கருத்தில் கொண்டு எண்களை தெரிவிக்கலாம். பங்களிப்பு என்பது தன்னார்வலர்களை சார்ந்து இருந்தாலும், வழிகாட்டிகள் எண்ணிக்கை மிகையாக இருப்பது தேவை.


உலோ. செந்தமிழ்க்கோதை 2 தொகு

த.இ.க. நிறுவன வள வாய்ப்புகள் தொகு

  • 1.தமிழ்க்கல்விப் பாடங்கள்
  • 2.மென்பொருள் உருவாக்க மையம்
  • 3.திரட்டி வைத்துள்ள அகராதிகள்
  • 4.தொகுத்துள்ள கலைச்சொல் பேரகராதி (துறைவாரியாக)
  • 5.ஒருங்கியைந்த கலைச்சொல் பேரகராதி (குறுந்தட்டு)
  • 6.அகராதித் தொகுத்த மூலக்கோப்புகள்

விக்கிப்பீடியாவுக்கு பயன்படமுடிந்த த.இ.க. நிறுவன வளங்கள் தொகு

  • 1.மென்பொருள் உருவாக்கம்
  • 2.அகரநிரல் சொல்வளம்
  • 3.ஓரளவு நிறுவனத்தின் தமிழ்க்கல்விப் பாடங்கள்

வளங்களைப் பயன்படுத்த த.இ.க. நிறுவனத்திடம் கோரவேண்டிய ஒப்புதல்கள் தொகு

  • 1.நமக்கு விக்கிப்பணிகளை விரைவுபடுத்த அல்லது தன்னியக்கப்படுத்த தேவைப்படும் மென்பொருள்களின் பட்டியலைத் திட்டமிட்டு அவற்றை உருவாக்குவதற்கான வழிவகைகளைத் திட்டமிடலில் ஒருங்கிணைப்பு எவ்வளவிற்கு இயலுமெனக் கலந்துரையாடலாம்.
  • 2.வளவாய்ப்புகளில் குறிப்பிட்ட 3 முதல் 6 வரையிலான கோப்புவளங்களை எவ்வளவிற்கு விக்‌ஷனரியை மேம்படுத்த தரவியலுமெனக் கலந்துரையாடலாம்.

நந்தக்குமார் 2 தொகு

பலரும் மேலே கருத்திட்டுளார்கள். அவை மிகப் பயனளிக்கும் கருத்துகள். பின்வருவனவற்றையும் கருத்தில் கொண்டு த.இ.க.க. உடன் உரையாடலாம்.

  • 1. ஒளிவழி எழுத்துரு அறியும் (OCR) நிரல்களை உருவாக்க த. இ. க. க. கணிசமான பரிசினை அறிவித்து விக்கிபீடியருடன் இணைந்துப் போட்டி ஒன்றை நடத்தலாம். இதன் மூலம் பல பழைய/புதிய மூலங்களைத் தமிழ் விக்கியில் ஆவணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். த. இ. க. க. இலக்கான இணையத் தமிழைப் பரப்பும் இலக்கும் இதனுடன் ஒன்றிணையும்.
  • 2. தமிழ் வழிப் பயிற்சி வகுப்புகளில் தமிழ் விக்கியில் பங்களிப்பதையும் சேர்க்கக் கோரலாம்.
  • 3. பெருமளவுப் பயனரை (மாணவர், ஆசிரியர், மற்றவர்களை) தமிழ் விக்கியில் ஆர்வத்துடனும், இலக்குகளுடனும் பங்களிக்க வைக்கத் த.இ.க.க./விக்கிபீடியா இணைந்து உலக அளவில் பயனர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்க வேண்டுகோள் விடுக்கலாம். கல்விக்கழக/விக்கிபீடியாச் சான்றிதழ் கிடைக்கும், அதன் மூலம் தம்முடைய மென் திறமைகள் (soft skills) தகுதி உயரும் எனக் கருதினால் பெருமளவுப் பயனர்கள் விக்கிபீடியாவிற்குக் கிடைக்கலாம்.
  • 4. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி வகுப்புகளில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க வேண்டித் த.இ.க.க./விக்கிபீடியாக் கூட்டாக அறிக்கைத் தயாரித்து அதைத் த.இ.க.க. அனுப்பி, அதிகளவுப் பங்களிப்பிற்குத் த.இ.க.க./விக்கிபீடியா இணைந்து அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்கும் என அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கலாம்.
  • 5. பலதரப்பட்ட அறிஞர்களும் இங்குப் பங்களிக்கத் த.இ.க.க./விக்கிபீடியாக் கூட்டாக அறிக்கைத் தயாரித்து வேண்டுகோள் விடுக்கலாம். அதனால் அறிஞர்களின் பங்கு எவ்விதம் அங்கீகாரம் (எந்த வகையில் என்பதில் பின் பேசி முடிவெடுக்கலாம்) செய்யப்படும் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

--நந்தகுமார் (பேச்சு) 05:56, 9 ஆகத்து 2015 (UTC)Reply

இற்றை தொகு

  • இங்கு குறிப்பிட்டபடி, சூலை 15, 2015 அன்று தினேசும் பரிதியும் நானும் விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் அசாப் பர்தோவைச் சந்தித்து இக்கூட்டு முயற்சி வழங்கக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைத்தோம். உடன் ஒரு சில இந்திய மொழி விக்கிப்பீடியர்களும் இருந்து, இது போன்ற முயற்சிகளைப் பற்றி அறிந்து கொண்டனர். இச்சந்திப்பு, ஏற்கனவே சூலை 6, 2015 அன்று கூகுள் கூடல் மூலம் பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களும் அவருக்கு எடுத்துரைத்ததின் விரிவான அறிமுகமாகவே அமைந்தது. குறிப்பாக, பின்வரும் விசயங்கள் குறித்து விக்கிமீடியா அறக்கட்டளையின் உதவி கோரப்பட்டது:
    • தமிழ்நாடு அரசு தனது நிதியின் கீழ் வரும் ஆக்கங்களை கட்டற்ற ஆக்கமாக அளிப்பதற்கான நடைமுறைகள் பன்னாட்டுச் சட்ட ஏற்பு பெறுவதை உறுதிப்படுத்துதல்.
    • எண்மியமாக்கம் தொடர்பாக இயங்கும் பன்னாட்டு அமைப்புகளின் சிறந்த வழிமுறைகளை அறிந்து செயற்படுத்துவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தருதல்.
    • போட்டிகள், பயிற்சிகள் போன்ற செயற்றிட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி உதவி அளித்தல்.

இவ்வாறான முயற்சிகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் விக்கிமீடியா அறக்கட்டளை ஆதரவு வழங்கும் என்பதை மீண்டும் தெளிவாக உறுதியளித்தார். அதே வேளை, இவை தொடர்பாக வழமை போல் முறையான திட்ட வரைவுடனும் விக்கிச்சமூக ஒப்புதலுடனும் அணுகுவதும் அவசியம் ஆகும்.

ஆகத்து 3, 2015 அன்று இந்திய நேரம் இரவு 08.00 மணிக்கு கூகுள் கூடல் தொகு

மேற்கண்ட பல்வேறு கருத்துகளை அடுத்து நமது அணுகுமுறை குறித்து உரையாடி ஒரு புரிந்துணர்வு நோக்கி நகரும் வண்ணம், ஆகத்து 3, 2015 (அதாவது, இன்று !), இந்திய நேரம் இரவு 08.00 மணிக்கு கூகுள் கூடல் ஒன்றில் பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

முகவரி: bit.ly/tawiki-hangout (தொலைப்பேசியில் உள்ள 3G இணைய இணைப்பு மூலமும் பங்கு கொள்ள முடியும். குரல் வழி உரையாடல் போதுமானது.)

நிகழ் நேரக் குறிப்புகள்: https://etherpad.wikimedia.org/p/tawiki-hangouts (கூகுள் கூடலில் ஒரே நேரத்தில் 10 பேர் தான் பங்கேற்கலாம் என்பதால் இயலாதவர்கள் இங்கு குறிப்புகளை எழுத்து வடிவில் தரலாம்)


ஆகத்து 5, 2015 அன்று இந்திய நேரம் இரவு 09.30 மணிக்கு கூகுள் கூடல் தொகு

இக்கூடலில் ஆழி செந்தில்நாதன் கலந்து கொண்டு பல்வேறு துறை சார் வல்லுநர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வைக்கலாம் என்ற தனது முன்மொழிவை விளக்க இருக்கிறார். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

முகவரி: bit.ly/tawiki-hangout (தொலைப்பேசியில் உள்ள 3G இணைய இணைப்பு மூலமும் பங்கு கொள்ள முடியும். குரல் வழி உரையாடல் போதுமானது.)

நிகழ் நேரக் குறிப்புகள்: https://etherpad.wikimedia.org/p/tawiki-hangouts (கூகுள் கூடலில் ஒரே நேரத்தில் 10 பேர் தான் பங்கேற்கலாம் என்பதால் இயலாதவர்கள் இங்கு குறிப்புகளை எழுத்து வடிவில் தரலாம்)

கூடுதல் உரையாடல்கள் தொகு

விக்கிப்பீடியாவில் வழமை போல் உரையாடுவோம் என்றாலும் தேவைப்பட்டால் ஆகத்து 6, 2015 வியாழன் இரவும் ஆகத்து 8, 2015 சனி இரவும் இன்னொரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்வோம். ஆகத்து 7, 2015 வெள்ளி அன்று பலரும் சென்னை நோக்கி பயணத்தில் இருப்போம் என்பதால் அன்று உரையாடுவது சிரமம். நன்றி.--இரவி (பேச்சு) 20:45, 2 ஆகத்து 2015 (UTC)Reply

ஆகத்து 8, 2015 கலந்துரையாடல் தொகுப்பு தொகு

 
தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

இன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் கூட்டறிக்கை. பயனர்களின் கருத்து கேட்டு சுந்தர் எழுதிய அறிக்கையை நான் பதிவிடுகிறேன்.

காலை தொடக்கவுரையாற்றிய தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. உதயச்சந்திரன் இ. ஆ. ப. தனது தொடர்சந்திப்புக்களின் அடிப்படையில் தமிழ்க்கணிமைக்குத் தேவையானவற்றைப்பற்றி நல்ல புரிதலை வெளிப்படுத்தினார். பல நல்ல திட்டங்களை அறிவித்ததுடன் இவ்விருநாள் நிகழ்வுகளின் இறுதியில் செயல்திட்டத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார். அவரது அறிவிப்புக்களில் த.இ.க. உதவியுடன் வெளியிடும் அனைத்து ஆக்கங்களும் கிரியேட்டிவு காமன்சு அளிப்புரிமையின்கீழ் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது நமது கண்ணோட்டத்தில் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. அதன்பின்னர் தமிழ் விக்கிப்பீடியா அமர்வில் இரவி ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தார். அதன்பின் தொலைவழியில் பேசிய மயூரநாதன் விக்கியில் சமூகமே முதன்மை என்பதை வலியுறுத்தினார். செல்வா கலைச்சொல்தரப்படுத்தத்தின் தேவையை நினைவூட்டினார். அதன்பின் ஆழி செந்தில்நாதன் விக்கிப்பீடியாவைப்பற்றிய தனது புரிதலைக்காட்டினார். நாம் எட்டிய நிலை மெச்சத்தக்கது என்றார். இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் போதிய எண்ணிக்கையிலும், ஆழத்திலும் கட்டுரைகள் இருந்தால்தான் தமிழ் விக்கியைத் தேடி அணுகும் நிலை வருமென்றார். அதற்கு துறை வல்லுனர்களின் பங்களிப்பு பெருமளவில் இருக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ஏன் இதுவரை அவ்வாறு நிகழவில்லை என்பதற்கு ஒரு மாயக்கதவு இடையில் இருப்பதுபோன்ற தோற்றப்பிழைதான் காரணமென்றார். அதற்கு முதற்கண் அறிஞர்களைத்திரட்டி அவர்களுக்கு விக்கிப்பீடியாவைப்பற்றி விளக்கி, இங்கு பங்களிப்பதன் தேவையைச் சொல்லி பயிற்சிக்கு அழைப்பதாகவும் கூறினார். தொடர்ந்து சுந்தர் துறை வல்லுநர் தன்னார்வலர் என்ற பாகுபாடு விக்கியில் இல்லை என்பதையும், பல துறை வல்லுநர்கள் தன்னார்வலர்களாக பங்களித்துள்ளனர் என்றும் விளக்கமளித்தார். சஞ்சீவி சிவக்குமார் தொலைவழியாகப்பேசி தமிழகத்தில் தமிழ் விக்கிப்பாடு பரவ வாய்ப்பு ஏற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதேவேளை அனைத்து நாடுகளையும் சேர்ந்த தமிழர்களும் வழமைபோல் தமிழ் விக்கியில் பங்களிக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து சிபி கனகராசு கட்டற்ற மென்பொருள் தேவைகளின் பயனைப்பற்றிப்பேசினார். சுந்தர் "தமிழ்க்கணிமை: வெற்றிகளும் தேவைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மீண்டும் தமிழ் விக்கிப்பீடியர்கள் தமிழ்ப்பரிதிமாரி, மணியன், பார்வதிசிரீ, தினேசு, சுந்தர், இரவி, தகவலுழவன், நீச்சல்காரன் ஆகியோர் சந்தித்துப்பேசினோம். கன்னட விக்கியர் பவனசாவும், ஆழி செந்தில்நாதனும் அவரவர் கருத்துக்களையளித்தனர். பின்னர் திரு. நாகராசன் இ. ஆ. ப. , திரு. உதயச்சந்திரன் இ. ஆ. ப. ஆகியோரும் இந்த உறவுத்திட்டம் எத்தகையதாக இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்தனர். விக்கிப்பீடியாவைப் பற்றிய போதிய புரிதலின் பயனாக விக்கிப்பீடியாவின் முறைமையிலும் கொள்கைகளிலும் எவ்வித மாற்றமும் தேவையில்லை என்று தெரிவித்தனர். அரசு நிறுவனங்களின் வழியாக பெரும் தரவுகளைப் பெற்று வேண்டியவாறு பயன்படுத்திக்கொள்ளலாமென்றும், அரசுத்துறையினர்களுக்கு பயிற்சிவகுப்புகளும் ஒருங்கிணைப்பும் விக்கிப்பீடியர்கள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்னும் சில குறிப்புகளையும் சுந்தர் பிறகு அறியத்தருவார். இதனைப் பதிப்பிப்பதில் காலம் கடப்பதால் இப்போது இந்த வரை பதிப்பிக்கிறேன்.

தொடர்ந்து இது குறித்த புரிதலைக் கூட்டி நாளை பகலில் ஒரு திட்ட முன்வரைவு அளிக்க வேண்டும். கவனிக்க: இது ஒரு வரைவு மட்டுமே. இந்தந்த அடிப்படைகளில் திட்டங்களைச் செயற்படுத்தலாம் என்பதனைச் சுட்டவே. இது முடிந்த முடிவோ கட்டாயமோ அன்று. ஆயினும், இரு நாள் நிகழ்வின் விளைவாக இத்தகைய புரிந்துணர்வு நோக்கி நகர்வதை த. இ. க. வரவேற்கிறது.

பல்வேறு நேர வலயங்களிலும் இருக்கும் பயனர்கள் இங்கு தொடர்ந்து கருத்துகளைத் தெரிவிக்கலாம். இக்கருத்துகள் தெளிவாக இன்னின்ன புலங்களில் த. இ. க. உதவலாம். அதற்கு இன்னின்ன வளங்கள் வேண்டும். அதற்கு இவ்வளவு கால எல்லையை வகுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் பரிந்துரைகளைத் தரலாம் என்ற அடிப்படையில் கருத்துகளைப் பகிரலாம்.

உடனுக்குடன் உரையாடிப் புரிதலுக்கு வர தமிழ் விக்கிப்பீடியா IRC ஓடைக்கு வரலாம்.

முகவரி: http://webchat.freenode.net/?channels=#wikipedia-ta

--இரவி (பேச்சு) 18:29, 8 ஆகத்து 2015 (UTC)Reply

ஆகத்து 9, 2015 கலந்துரையாடல் தொகுப்பு தொகு

பின்வருவது சிபி தொகுத்த உரையாடல் குறிப்புக்களைத் தழுவியது.

அமர்வு : விக்கிஊடகம் , கட்டற்ற மென்பொருட்கள் செயல் திட்டம்

பங்கேற்பாளர்கள் தொகு

  1. சுந்தர்
  2. பேரா.ச. இராமசாமி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
  3. விக்னேச்ராஜ் (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், செஃபீல்டு பல்கலைக்கழகம், இலண்டன்)
  4. அ. இரவிசங்கர்
  5. பேரா.ஆ.க. இராமகிருஷ்ணன் (இந்திய அறிவியல் கழகம்)
  6. மணியன்
  7. பார்வதிஸ்ரீ
  8. தகவல் உழவன்
  9. மு. சு. அருண் குமார் (பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர்ப் பட்ட ஆய்வாளர்)
  10. சண்முகம்
  11. தினேஷ்குமார் பொன்னுசாமி
  12. தமிழ்ப்பரிதி மாரி
  13. சிபி
  14. ஆழி செந்தில்நாதன்
  15. மரு. இளவஞ்சி
  16. மயூரநாதன் (தொலைவழி)
  17. பேரா.இரமேசு, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, சென்னை.

உரையாடற் குறிப்புகள் தொகு

நிகழ்வுக்கான ஏற்பாட்டிற்காக நாம் இங்கும் கூகுள் ஆங்கவுட்டிலும் உரையாடியவற்றின் அடிப்படையிலும் த.இ.க. உள்ளிட்ட நமது கூட்டுழைப்பாளர்களுடனான பல்வேறு சந்திப்புக்களின் அடிப்படையிலும் ஓர் உயர்நிலைச் செயற்திட்டத்தில் என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்பதை இரவி முன்மொழிந்தார். அவை கூட்டுழைப்புக்கான புலங்கள், விக்கிப்பீடியர்கள் செய்ய வேண்டியவை, த.இ.க. செய்ய வேண்டியவை, பரப்புரையாளராகவும் அறிஞர் தொடர்பாளராகவும் ஆழி செந்தில்நாதன் ஆற்றக்கூடிய பணிகள், அனைத்து தரப்புக்களிலும் உள்ள எதிர்பார்ப்புகள், விக்கிப்பீடியாவின் எல்லைகள் ஆகியவை இருக்கவேண்டுமென முன்வைத்தார். புலங்களாக கொள்கை, உள்ளடக்கம் முதலியன பரிந்துரைக்கப்பட்டன. திரு.நாகராசன் இ.ஆ.ப. அவர்களின் உரையாடலின் அடிப்படையில் தரவுத்திறப்பு என்பதையும் சேர்த்துக்கொள்ளுமாறு சுந்தர் பரிந்துரைத்தார்.

(உரையாடற் குறிப்புகளைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தொடர்ந்து சேர்க்கும் அதே வேளையில், செயற்றிட்ட முன்மொழிவின் விவரங்களைக் கீழே தருகிறேன் - இரவி)

 
த. இ. க. ஊடான தமிழ் விக்கிமீடியா வளர்ச்சிக்கான செயற்றிட்ட முன்மொழிவு

செய்யற்றிட்ட முன்மொழிவின் முதற்பகுதியாக நாம் இது வரை அரச நிறுவன / தரவு ஆதரவுடன் முன்னெடுத்துச் செய்து காட்டியுள்ள திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டோம்.

எடுத்துக்காட்டுக்கு 2010 கட்டுரைப் போட்டி, விக்சனரியில் 1,00,000+ சொற்களைக் கொடையாகப் பெற்று ஏற்றியது, 20 கலைக்களஞ்சியங்கள் கொடையாகப் பெற்றது, 2006 இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்கியது முதலியன சுட்டிக்காட்டப்பட்டன. இது, முறையான அரச ஆதரவு இருந்தால் வெற்றிகரமாகச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான திறமும் முதிர்ச்சியும் நம்மிடம் உள்ளது என்பதை எடுத்துரைத்தது.

அடுத்து, இணைந்து செயற்படுவதற்கான செயற்பாட்டுப் புலங்களைச் சுட்டிக்காட்டினோம். இவையாவன

  • கட்டற்ற ஆக்கம் சார் கொள்கை முன்னெடுப்புக்கள் (ஆக்கங்களைப் படைப்பாக்கப் பொதுமங்கள், GPLv2+ உரிமங்களில் தருவது, இவை தொடர்பான அரசு ஆணைகள், கொள்கைகள், சட்டங்கள் உருவாக்கம்)
  • உள்கட்டமைப்பு (தமிழ் விக்கிப்பீடியர்களின் பல்வேறு முன்னெடுப்புகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுதல். எடுத்துக்காட்டுக்கு, அவர்களின் நிகழ்வு அரங்கம், கணினிகள், ஆய்வகக் கூடம், படப்பிடிப்புக் கூடம், அவர்கள் மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைகள், பள்ளிகள், அரசு நிறுவனங்களில் தேவைக்கு ஏற்ப வளங்களைப் பெறுதல்.)
  • திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (தமிழ் விக்கிப்பீடியர்கள், நம்மோடு இணைந்து செயற்படுபவர்களுக்கான பல்வேறு பயிற்சிகளை ஒருங்கிணைத்தல்)
  • GLAM முன்னெடுப்புகள்.
  • உள்ளடக்க மேம்பாடு (தரவு வழி தானியங்கிக் கட்டுரைகள், பல்வேறு போட்டிகள், ஆழி செந்தில்நாதன் ஒருங்கிணைப்பில் குடிமைச்சமூக ஒருங்கிணைப்பு முதலியன)
  • தரவுத் திறப்பு (அரசு சேகரித்து வைத்துள்ள பல்வேறு தரவுகளைக் கொண்டு பயனுள்ள கட்டுரைகளை உருவாக்க முடிகிறதா என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 12,000 ஊராட்சிகளைப் பற்றிய தரவுகளை வைத்துள்ளார்கள். இதனை 2006 இல் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு கட்டுரைகள் உருவாக்கியதோடு ஒப்பு நோக்கலாம்.
  • பரப்புரை - இது வழமை போல் கல்லூரிகள், பள்ளிகள், அரசு நிறுவனங்களில் செய்வது போன்ற பரப்புரையே. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு தமிழகம் முழுதும் கல்லூரிகளில் அமைய உள்ள கணித்தமிழ் பேரவைகள் மூலம் த. இ. க உதவும்.
  • அடிப்படைக் கல்வி - தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, பாடத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா முதலான முன்னெடுப்புகள்.

இதனைச் செய்து முடிப்பதற்கான மனித வளம் பற்றி சுட்டினோம். பின்வருவோர் இத்திட்டங்களை நிறைவேற்ற உதவ இயலும்:

  • தமிழ் விக்கிப்பீடியர் சமூகம்
  • ஒப்பந்தப் பணியாக உறைவிட விக்கிப்பீடியர்கள்
  • ஏற்கனவே அரசுப் பணியில் உள்ள விக்கிப்பீடியர்கள் அரசு ஒப்புதலுடன் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ இப்பணிகளில் ஈடுபடல்
  • தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை
  • பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஆர்வலர்கள்
  • விக்கிமீடியா இந்தியா

எடுத்துக்காட்டுச் செயற்றிட்டங்களைச் சுட்டினோம்:

  • தமிழ்நாடு மின்னாளுகை முன்னெடுப்பின் வழி தரவுகளைப் பெற்று கட்டுரை ஆக்கம்.
  • ஆழி. செந்தில்நாதன் ஒருங்கிணைப்பில் குடிமைச் சமூக அறிஞர்களைக் கொண்டு துறை சார் கட்டுரைகள் ஆக்கம்.
  • திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் - விக்கிப்பீடியர்களுக்கான பல்வேறு திறன் பயிற்சிகள், பயிற்றுநர்களுக்கான பயிற்சிகள், கணித்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சிகள்.
  • பயிற்சி வளங்கள் உருவாக்கல் - நிகழ்பட உதவிக் குறிப்புகள், பயிற்சி ஏடுகள் உருவாக்கம்.
  • கட்டற்ற அறிவு முனையம் - தொலைநோக்கில் இச்செயற்பாடுகளுக்கான அடித்தளம் அமைக்க இம்முனையம் உதவும். இம்முனையம் கட்டற்ற அறிவு, பண்பாடு, மென்பொருள் தொடர்பான பரப்புரைக் களமாக, வள முனையமாக அமையும்.
  • மாவட்ட அளவிலான கணித்தமிழ், கட்டற்ற மென்பொருள், விக்கிமீடியா திட்டங்கள் பரப்புரை
  • உள்ளடக்க மேம்பாட்டுக்கான போட்டிகள்
  • கல்வியில் விக்கிப்பீடியா - குறிப்பாக, விக்கிமூலத்தில் பல்வேறு ஆக்கங்களைத் தட்டச்சுவதற்கான ஆள்வளத்தை இதன் மூலம் பெறலாம். இம்மாதிரி ஏற்கனவே கேராளவில் செயற்பாட்டில் உள்ளது.

இறுதியாக, இப்புரிந்துணர்வு தொடர்பான எதிர்பார்ப்புகளையும் எல்லைகளையும் சுட்டினோம்:

  • அனைத்துப் பணிகளின் விளைவுகளும் கட்டற்ற உரிமங்களின் கீழ் கிடைக்கும் என்ற கொள்கைத் தெளிவே அடிப்படை.
  • விக்கிப்பீடியர்கள் ஓர் ஒருங்கிணைந்த சமூகமாகச் செயற்படுபவர்கள். இச்சமூக இயங்கியலுக்கு முரணாகச் செயற்பட இயலாது.
  • விக்கிப்பீடியர்கள் தன்னார்வமாகச் செயற்படுபவர்கள். இவர்களின் தாங்கு திறனுக்கு ஏற்பவே திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முடியும்.
  • தொடர்புடைய திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களைப் பெற விக்கிமீடியா அறக்கட்டளையின் நல்கைகளைப் பெற வேண்டி இருக்கும். இதற்கான முறைமைகள், கால எல்லைகள், எதிர்பார்க்கும் செயற்பாட்டு அளவீடுகள் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டி இருக்கும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் தர உறுதி வழிமுறைகளில் சமரசமின்மை
  • விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் உள்ளிட்ட வழமையான கொள்கைகளில் சமரசம் இன்மை.

இரு நாள் நிகழ்வுகளின் தாக்கம்

இரு நாட்களும் தோராயமாக 200 பேர் பங்கு பெற்றனர். இவர்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் என்று தமிழ்நாட்டுப் புலமைச் சமூகத்தின் பல்வேறு களங்களின் சார்பாகப் பங்கு கொண்டவர்கள். பல்வேறு அரசுத் துறைகளின் செயலர்கள் உட்பட 17 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவர்கள் இடையே தமிழ் விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் குறித்து சிறப்பான அறிமுகத்தைத் தர முடிந்தது. வழமையான அதிகார அடுக்குகளில் செயற்படுபவர்களுக்கு இடையே, தமிழ் விக்கிப்பீடியர்கள், கட்டற்ற மென்பொருளாளர்களின் ஒருமைப்பாடும் தோழமை மிகுந்த இணக்கச் செயற்பாடுகளும் பெரிதும் பாராட்டப்பட்டன. நாம் பெருமளவு இளைஞர்கள் என்பதால், பொதுவாக வருங்காலத் தலைமுறை குறித்த நம்பிக்கையை விதைக்கவும் உதவியது.

தமிழ் விக்கிப்பீடியா பலரும் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. பலரும் சுட்டிய பொதுவான கருத்துகள்:

  • தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் கூடுதல் கட்டுரைகள் வேண்டும்.
  • ஒவ்வொரு துறை சார்ந்தும் முழுமையான, பரந்த தலைப்புகளிலான கட்டுரைகள் வேண்டும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள எழுத்துப்பிழைகள், தரவுப் பிழைகள், இலக்கணப் பிழைகளைக் களைந்து தரத்தை உயர்த்த வேண்டும்.
  • தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வரும் பலர் ஏற்கனவே ஆங்கிலம் அறிந்தே வருகிறார்கள். எனவே, ஓரிரு வரிக் கட்டுரைகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஒரு எளிய தேடலில் கண்டு கொள்ளக்கூடிய விசயங்களைத் தாண்டி விரிவான தரவுகளைக் கொண்டிருப்பனவாக கட்டுரைகள் அமைய வேண்டும். இவ்வாறு அமைந்தாலே தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வந்து படிக்கும் வழக்கம் பெருகும்.

பலரும் விக்கிப்பீடியா திட்டங்கள் இயங்குவது பற்றிய புரிதலின்மையைச் சுட்டிக் காட்டினாலும், பாராட்டியோரும் உளர். குறிப்பாக, ஓர் இளம் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்திப் படித்துத் தமிழ் வழி தேர்வெழுதி தேர்ச்சி பெற்றமையைக் குறிப்பிட்டது மிகவும் தெம்பூட்டியது.

அடுத்து என்ன?

கற்றல் / கற்பித்தல், எண்மியமாக்கம், மொழிக் கணிமை முதலிய பல்வேறு புலங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இந்த இரு நாள் நிகழ்வில் நடந்தாலும், தெளிவான செயற்றிட்டங்களுடன் இதனை எதிர்கொண்டது தமிழ் விக்கிப்பீடியர்களே. இது, நமக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைத் தக்க வைக்கும் வகையிலும் உடனடியாகவும் படிப்படியாகவும் செயற்றிட்டங்களைச் செயற்படுத்த முனைவது நன்று.

எனவே, தனித்தனிச் செயற்றிட்டங்கள் தொடர்பான தனித்தனிப் பகுதிகளாக இனி உரையாடலைத் தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 05:23, 13 ஆகத்து 2015 (UTC)Reply

//தமிழ் விக்கிப்பீடியாவை நாடி வரும் பலர் ஏற்கனவே ஆங்கிலம் அறிந்தே வருகிறார்கள். எனவே, ஓரிரு வரிக் கட்டுரைகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. // எனது அனுபவத்திலும் தமிழ் விக்கிபற்றி பேசியபோது இதே கருத்து பலரிடமிருந்து வந்தது. கட்டுரைகளை ஆழமாக்குவதற்கான ஒரு கட்டாயமான திட்டம் நமக்குத் தேவை. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:09, 14 ஆகத்து 2015 (UTC)Reply

கணித்தமிழ்ப்பேரவைகள் தொடக்கம் தொகு

நேற்று (செப்டம்பர் 5, 2015) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தைச்சேர்ந்த பல துறைகளையும் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவர் பங்கேற்புடன் கணித்தமிழ்ப்பேரவைக்கான தொடக்கவிழா நடந்தது. திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப., த.இ.க இணை இயக்குநரும் விக்கிப்பீடியருமான மா.தமிழ்ப்பரிதி, துணை இயக்குநர் திரு.கா.உமாராசு உள்ளிட்ட பலரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்களும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். த.இ.க. தரப்பிலிருந்து கணித்தமிழ்ப்பேரவை தொடங்கும் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஆதாரத்தொகையும் தேவையான பயிற்சிகளும் வழங்கப்படுமெனத் தெரிவித்தனர். வந்திருந்த பங்கேற்பாளர்களிடம் தத்தமது கல்லூரிகளில் கணித்தமிழ்ப்பேரவை வாயிலாகச் செய்யவிரும்பும் பணிகளையும் கேட்டு எழுத்துமூலமாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டது. விழாவில் விக்கிப்பீடியாவும் தமிழும் என்ற தலைப்பில் இரவியும், கட்டற்ற மென்பொருள் தமிழ்ச்சூழலில் எவ்வளவு தேவை என்பதை அரவிந்தும், மாணவர்கள் தமிழ்க்கணிமைக்கு எத்தகைய பங்களிப்புகளை ஆற்றவியலுமென நீச்சல்காரனும், திரு.வள்ளி ஆனந்தன் போன்றோரும் உரையாற்றினர்.

இரவு அரசு சுற்றுலா இல்லத்தில் திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப. திரு.மா.தமிழ்ப்பரிதி ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியர் (இரவி, சுந்தர், தினேசு, நீச்சல்காரன்), கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையினர், மதுரை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள், கணித்தமிழ்ச்சங்கத் தலைவர் வள்ளி ஆனந்தன் ஆகியோருடன் கலந்துபேசி இந்நிகழ்வின் குறைநிறைகளையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் பற்றிக்கேட்டறிந்தனர். இரவு உணவின்போது புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்த விக்கிப்பீடியர் சசிக்குமாரும் எங்களுடன் இணைந்துகொண்டார். -- சுந்தர் \பேச்சு 05:47, 6 செப்டம்பர் 2015 (UTC)

இவற்றையும் பார்க்க தொகு

த. இ. க. கழக இணைய அறிவிப்பு தொகு

இந்த இணையப்பக்கத்தில் கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் பரிந்துரைகள் என்பதைக் காணலாம். அதில் நான்காவதாக உள்ள பரிந்துரை, பொதுவள ஊடகப் பரப்புரை பொதுவள மென்பொருள் பயன்பாடு ஆகும். இப்பரிந்துரையே, விக்கிஊடகம் குறித்து விவரிக்கிறது. இதனை மின்னூல் வடிவில் காணலாம்.--உழவன் (உரை) 00:32, 20 ஆகத்து 2015 (UTC)Reply

வேறு அமர்வில் கலந்து கொண்டதால் இதுதொடர்பாக அமர்விலேயே விவாதிக்க முடியவில்லை. கேள்வி நேரத்தில் போதிய நேரமின்மையால் எனது பரிந்துரை விடுபட்டிருக்கலாம். விக்கிமீடியாவைத் தவிர இதரப் பொதுவளத் திட்டங்களை மேம்படுத்தல் மற்றும் காப்புரிமை கொண்ட வளங்களைப் பொது உரிமத்திற்குக் கொண்டுவருதல் தொடர்பான பரிந்துரைகளைச் சேர்க்கவிரும்புகிறேன். இதை த.இ.க. கவனத்திற்குக் கொண்டு செல்ல முயல்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:34, 20 ஆகத்து 2015 (UTC)Reply
இங்கு குறிப்பிடப்பட்ட செயற்றிட்டங்களுக்கும் வெளியீட்டுக்கும் கணிசமான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக "காப்புரிமை கொண்ட வளங்களைப் பொது உரிமத்திற்குக் கொண்டுவருதல்" விடுபட்டுள்ளது. கட்டுரையாக்கம்/உள்ளடக்க விருத்தியும் விடுபட்டுள்ளது.
"கணினி மொழியியல், மொழித் தொழில்நுட்பம்" ஆய்வுத்தன்மையே நிறையக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இயங்கும் ஆய்வுகளுக்கு ஏற்ப பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன போன்று தெரிகிறது.
[1] அணுக்கம் தொடர்பான பரிந்துரைகள் மிகவும் தளர்வாக உள்ளன. விரும்பினால் செய்யலாம் என்ற வகையிலேயே உள்ளது. O 14721:2012 Open Archival Information Systems பரிந்துரை வரேற்க வேண்டியது. பட்டியலிடலுக்கு MARC சீர்தரம் புதிய தொழில்நுட்பங்களுடம் வலுவடைந்து வரும் சீர்தரங்களோடு ஒப்புடுகையில் பொருந்துமா என்பது கேள்விக்கு உரியது. எண்ணிமப்படுத்தல் சீர்தரங்கள் தொடர்பாகவும் விரிவான விபரிப்பு இல்லை. --Natkeeran (பேச்சு) 14:05, 20 ஆகத்து 2015 (UTC)Reply
நற்கீறன், நாம் பொதுவள பயன்பாடுகள் குறித்து மட்டுமே கருத்துகளை பதிவு செய்தோம், பிற தலைப்புகளில் பங்கேற்கவில்லை, பொதும உரிமை குறித்து அரசானைக்காக காத்திருக்கிறோம், அதனால் இதில் இடம்பெறவில்லை என்று எண்ணுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:19, 20 ஆகத்து 2015 (UTC)Reply
அறிவே தினேஷ்குமார். அணுக்கம் தொடர்பான பரிந்துரைகள் சிறப்பாக எம்மையும் பாதிக்கும் என்பதால் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 14:32, 20 ஆகத்து 2015 (UTC)Reply
Return to the project page "தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/தொகுப்பு 1".