இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக்கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரள மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஐதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது பொதுக்குழுவில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) Communist Party of India (Marxist) | |
---|---|
भारतीय कम्युनिस्ट पार्टी | |
தொடக்கம் | 1964 |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
மாணவர் அமைப்பு | இந்திய மாணவர் சங்கம் |
இளைஞர் அமைப்பு | இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் |
பெண்கள் அமைப்பு | அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் |
தொழிலாளர் அமைப்பு | CITU, (AIAWU) |
விவசாயிகள் அமைப்பு | A.I.K.S |
கொள்கை | கம்யூனிசம் மார்க்சியம்-லெனினியம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி |
இ.தே.ஆ நிலை | அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி |
கூட்டணி | இடது முன்னணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 03 / 545 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 05 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | சட்ட மன்ற உறுப்பினர்கள் 2 / 243 (பீகார்)
1 / 68 (இமாச்சலப் பிரதேசம்)
59 / 140 (கேரளம்)
1 / 288 (மகாராட்டிரம்)
1 / 147 (ஒடிசா)
2 / 200 (ராஜஸ்தான்)
2 / 234 (தமிழ்நாடு)
16 / 60 (திரிபுரா)
19 / 294 (மேற்கு வங்காளம்)
|
இணையதளம் | |
cpim | |
இந்தியா அரசியல் |
வரலாறு
தொகுபிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை
தொகு1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் எம். என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.[2]
பங்கேற்றவர்களின் விவரம்
தொகுஉறுப்பினர்கள் | சிறப்பம்சம் |
---|---|
எம். என். ராய் | 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின்
இரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் பொதுவுடைமைக் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் |
எவ்லின் | அமெரிக்கக் பொதுவுடைமையாளரும் எம். என்.ராயின் மனைவியுமாவார் |
ரோசா பிட்டிங்கோவ் | ரஷ்யக் பொதுவுடைமையாளர் , அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார். |
சதி வழக்குகள்
தொகு1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.[3] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிளவுபடாத இந்தியப் பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது, இருப்பினும், அது விரைவில் நாடாளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
உருவாக்கம்
தொகு1950 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்தியப் பொதுவுடைமை கட்சியினர் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போடமுடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வைக் காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ. எம். எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையை ஒன்றிய அரசு தலையிட்டுக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
இதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது.
மார்க்சிஸ்டு கட்சி நிறுவுதல்
தொகு1962-இல் நடைபெற்ற இந்தியச் சீனப் போரின் காரணமாக இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. எஸ். ஏ. டாங்கே தலைமையிலான தலைவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் இந்தியாவை ஆதரித்தனர். சில தலைவர்கள் சீனாவை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய மார்க்சிஸ்டு கட்சியை நிறுவினர்.[4]
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, எஸ். ஏ. டாங்கே மற்றும் அவரது ஆதரவு வலதுசாரிகளின், காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உட்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 1 இலட்சம் பொதுவுடைமைவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
தெனாலி மாநாட்டில், எஸ். ஏ. டாங்கே நடத்திய மாநாட்டிலிருந்து வித்தியாசப்படுத்த சீனப் பொதுவுடைமைத் தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
தெனாலி மாநாட்டில், பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்கத்தைச் சார்ந்த இடதுசாரி சீன ஆதரவுக் குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம். பசவபுன்னையா தயாரித்த வரைவுத் திட்டம், வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்துவார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
தெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்ட வாரியான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்க்களமானது. கல்கத்தாவின் மாவட்டக் கலந்தாய்வில் பரிமள் தாஸ் குப்தா (தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவுத் திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்றுத் திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம். பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவுத் திட்டத்தை எதிர்த்தனர்.
சிலிகுரி மாவட்டக் கலந்தாய்வில், கட்சித் திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார். பரிமள் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநிலக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
கல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது.[5] கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி. சுந்தரையா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சத சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.
கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்தியச் சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்தியப் பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமள் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளைப்போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Politburo) [6]
- பி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)
- பி. டி. ரணதிவே
- பிரமோத் தாஸ்குப்தா
- ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்
- எம். பசவபுன்னையா
- ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
- பி. ராமமூர்த்தி
- ஏ. கே. கோபாலன்.
- ஜோதி பாசு
கட்சி அமைப்பு
தொகு2004இல் நடந்த பாராளும்ன்றத் தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.[7] 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது.
அமைப்பு
தொகு- அரசியல் தலைமைக் குழு
- மத்திய குழு
- மாநிலக் குழுக்கள்
- மாநிலச் செயற்குழுக்கள்
- மாவட்டக் குழுக்கள்
- மாவட்டச் செயற்குழுக்கள்
- இடைக் குழுக்கள்
- பகுதிக் குழுக்கள்
- கிளைகள்
அரசியல் தலைமைக் குழு
தொகுதற்போதைய சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. இவர் 12 ஏப்ரல் 2018 ஐதராபாத்தில் நடந்த 22வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.[8]
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்
தொகுஎண் | பெயர் | மாநிலம் |
---|---|---|
1 | சீத்தாராம் யெச்சூரி (பொதுச் செயலாளர்) | மேற்கு வங்காளம் |
2 | பிரகாஷ் காரத் (முன்னாள் பொதுச் செயலாளர்) | மேற்கு வங்காளம் |
3 | எச்.ராமச்சந்திரன் பிள்ளை | கேரளம் |
4 | மாணிக் சர்க்கார் (முன்னாள் திரிபுரா முதலமைச்சர்) | திரிபுரா |
5 | பிணறாயி விஜயன் (கேரள முதலமைச்சர்) | கேரளம் |
6 | பிமன் போஸ் | மேற்கு வங்காளம் |
7 | பி. வி. ராகவுலு | ஆந்திர பிரதேசம் |
8 | பிருந்தா காரத் | மேற்கு வங்காளம் |
9 | கொடியேரி பாலகிருஷ்ணன் | கேரளம் |
10 | சுர்ஜியா காந்தா மிஸ்ரா | மேற்கு வங்காளம் |
11 | ம. அ. பேபி | கேரளம் |
12 | முகமது சலீம் | மேற்கு வங்காளம் |
13 | சுபாசினி அலி | உத்தரப் பிரதேசம் |
14 | கன்னன் மொல்லா | மேற்கு வங்காளம் |
15 | ஜி. ராமகிருஷ்ணன் | தமிழ்நாடு |
16 | தபன் குமார் சென் | மேற்கு வங்காளம் |
17 | நிலோட்பால் பாசு | மேற்கு வங்காளம் |
உறுப்பினர்கள்
தொகு2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[9]
மாநிலம் | 2001 | 2002 | 2003 | 2004 | வாக்காளர் எண்ணிக்கையில் உறுப்பினர் சதவிதம் |
---|---|---|---|---|---|
ஆந்திர பிரதேசம் | 40785 | 41879 | 45516 | 46742 | 0.0914 |
அஸ்ஸாம் | 10480 | 11207 | 11122 | 10901 | 0.0726 |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 172 | 140 | 124 | 90 | 0.0372 |
பீகார் | 17672 | 17469 | 16924 | 17353 | 0.0343 |
சத்தீஸ்கர் | 1211 | 1364 | 1079 | 1054 | 0.0077 |
டெல்லி | 1162 | 1360 | 1417 | 1408 | 0.0161 |
கோவா | 172 | 35 | 40 | 67 | 0.0071 |
குஜராத் | 2799 | 3214 | 3383 | 3398 | 0.0101 |
ஹரியானா | 1357 | 1478 | 1477 | 1608 | 0.0131 |
ஹிமாச்சல் பிரதேசம் | 1005 | 1006 | 1014 | 1024 | 0.0245 |
ஜம்மு காஷ்மீர் | 625 | 720 | 830 | 850 | 0.0133 |
ஜார்கண்ட் | 2552 | 2819 | 3097 | 3292 | 0.0200 |
கர்நாடகா | 6574 | 7216 | 6893 | 6492 | 0.0168 |
கேரளா | 301562 | 313652 | 318969 | 316305 | 1.4973 |
மத்திய பிரதேசம் | 2243 | 2862 | 2488 | 2320 | 0.0060 |
மகராஷ்டிரா | 8545 | 9080 | 9796 | 10256 | 0.0163 |
மணிப்பூர் | 340 | 330 | 270 | 300 | 0.0195 |
ஓடிஸா | 3091 | 3425 | 3502 | 3658 | 0.0143 |
பஞ்சாப் | 14328 | 11000 | 11000 | 10050 | 0.0586 |
இராஜஸ்தான் | 2602 | 3200 | 3507 | 3120 | 0.0090 |
சிக்கிம் | 200 | 180 | 65 | 75 | 0.0266 |
தமிழ் நாடு | 86868 | 90777 | 91709 | 94343 | 0.1970 |
திரிபுரா | 38737 | 41588 | 46277 | 51343 | 2.5954 |
உத்தர்காண்ட் | 700 | 720 | 740 | 829 | 0.0149 |
உத்தரப் பிரதேசம் | 5169 | 5541 | 5477 | 5877 | 0.0053 |
மேற்கு வங்காளம் | 245026 | 262882 | 258682 | 274921 | 0.579 |
மத்திய குழு உறுப்பினர்கள் | 96 | 95 | 95 | 87 | |
மொத்தம் | 796073 | 835239 | 843896 | 867763 | 0.1292 |
மேற்கோள்கள்
தொகு- ↑ All but one Left Front candidates lose security deposit in West Bengal
- ↑ இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த பொதுவுடைமைக் கட்சியின் வரலாறு
- ↑ ""Meerut - the trial"". Archived from the original on 2014-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.
- ↑ சீனப் போரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது ஏன்?
- ↑ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் போரால் பிரிந்தது ஏன்?
- ↑ "முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்". Archived from the original on 2013-12-22. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
- ↑ 9 July 2008 தேதியிட்ட தி ஹிந்து வின் கட்டுரை : ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர் பரணிடப்பட்டது 2008-07-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "New Central Committee Elected at the 22nd Congress". 22 April 2018. Archived from the original on 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
- ↑ உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம். வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம். பாண்டிச்சேரி தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, சண்டிகார் பஞ்சாப்பாக கூட்டப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- கட்சியின் திட்டம் தமிழில் பரணிடப்பட்டது 2021-02-26 at the வந்தவழி இயந்திரம், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
- கட்சியின் திட்டம் ஆங்கிலத்தில்
- கட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்[தொடர்பிழந்த இணைப்பு]
- கட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்
- மத்தியகுழு மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்
- தமிழ்நாடு மாநிலக்குழு பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம்