சென்னையில் பறவைகள்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சென்னையில் 200க்கும் கூடுதலான பறவைகளைக் காணலாம்; இவற்றில் சில சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவை, சில குளிர்காலத்தில் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வருபவை. பறவையியல் வல்லுநர்களுக்கு பல்லாண்டுகளாகவே மிகுந்த விருப்பமான இடமாக சென்னை விளங்கி வந்துள்ளது. இந்தியாவின் பெருநகரப் பகுதிகளிலேயே இங்கு மட்டும் தான் நகர்ப்புறத்திலேயே பெரும் பூநாரை, கரு வல்லூறு, கடற்பருந்து, யூரோவாசிய கழுகாந்தைகள் மற்றும் கோணமூக்கு உள்ளான் போன்றவற்றைக் காண இயலும். சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள சில பறவை வாழிடங்களைக் கீழே காணலாம்.
கிண்டி தேசியப் பூங்கா
தொகுஇந்தியாவின் மிகச்சிறிய தேசிய பூங்காவான கிண்டி தேசியப் பூங்கா 2.7 கிமீ2 பரப்பளவில் அமைந்துள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா 'சென்னையின் நுரையீரல்' எனப்படுகின்றது.
இப்பூங்காவின் பெரும்பகுதி பசுமையான புதர்களாலும் முட்காடுகளாலும் திறந்த புல்வெளிகளாலும் அமைந்துள்ளது; சிறிய நீர்நிலைகளையும் காணலாம். இப்பூங்காவின் சிறப்புக்கூறாக புல்வாய் மானினம், இந்திய நட்சத்திர ஆமை ஆகியன உள்ளன. புள்ளிமான், பொன்னரி, புனுகுப் பூனை, wikt:அழுங்குகள் ஆகியவற்றையும் காணலாம்; தவிரவும் பல்வேறுவகைப் பாம்புகளும், பட்டாம்பூச்சிகளும் இப்பூங்காவில் உள்ளன.[1]
சிறப்பு: குளிர்காலத்தில் சென்னையில் கிண்டியில் மட்டுமே மிக அரிதான கொன்றுண்ணிப் பறவைகள், கரு வல்லூறு ஆகியவற்றைக் காணவியலும். செஞ்சிறகு கொண்டைக் குயிலும் இங்கு காணக்கிடைக்கும் அரிய பறவையினமாகும்.
கிண்டிக்கு வழிகாட்டி: கூகுள் நிலப்படங்கள்
பிரம்மஞான சபை தோட்டம்
தொகுபிரம்மஞான சபையின் தோட்டம் பறவைகளை ஆய்வதற்கு சென்னையில் சிறந்த இடமாகும். அடையாறு கழிமுகத்தை அடுத்து அமைந்துள்ளதால், 50க்கும் மேற்பட்ட இடம்பெயர் பறவைகளை இங்கு காணவியலும்.
இத்தோட்டத்தை வாழ்விடமாகக் கொண்ட சில பறவைகள்: பொன்முதுகு மரங்கொத்தி, செம்மார்புக் குக்குறுவான், கொண்டலாத்தி, செம்போத்து, வால் காக்கை, ஆசியக் குயில், சூரியப்பறவைகள், பன்றிக்குருவி, அக்காக்குயில், சிக்ரா, புள்ளி ஆந்தை, மணிப்புறா, சிவப்பு ஆரக்கிளி, சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்தி மற்றும் கிழக்கத்திய தேன் தலைப்பருந்து.
குளிர்காலங்களில் அரசவால் ஈபிடிப்பான், பழுப்பு ஈ பிடிப்பான், ஈ பிடிப்பான், இந்திய தோட்டக்கள்ளன், நாணல் கதிர்க்குருவி போன்றவற்றைக் காணலாம். அடையாறு கழிமுகத்தில் நாரைகள், குருகுகள், நெடுங்கால் உள்ளான் போன்ற வகைகளைக் காணலாம்.
இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) வளாகம்
தொகுகிண்டி தேசியப் பூங்காவை அடுத்து அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் சில பகுதிகள் அடர்ந்த காடாக உள்ளது. குளிர் காலத்தில் இங்கு இரண்டு மணி நேரத்தில் 50 வகைப் பறவையினங்களைக் காணலாம். நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் வாழிடமாகவும் குடிபெயர் முகாமாகவும் கொண்டுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர்கள்,மாணவர்கள், ஊழியர்கள் இணைந்து நடத்தும் பிராக்ரிதி என்ற வனவாழ்வு மன்றம் வளாகத்தின் உயிரியற் பல்வகைமையைக் காப்பாற்றவும் தக்க வைத்துக் கொள்ளவும் செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றது.
இங்கு பசுமையிலைக் காடும் நாணற்புதர்களும் திறந்தவெளிகளும் உள்ளன. இங்கு புல்வாய் மான்கள், புள்ளிமான்கள், இந்தியச் சாம்பல் வண்ணக் கீரிகள், பொன்னரி, உடும்பு, பாம்புகள், மற்றும் 40க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன.
சிறப்பு: குளிர்காலங்களில் இங்கு இளஞ்சிவப்பு தலையுடை குருவிகளைக் (Zoothera citrina citrina) காணலாம்.
இதனை வசிப்பிடமாகக் கொண்டுள்ள பறவையினங்கள்: பொன்முதுகு மரங்கொத்தி, செம்மார்புக் குக்குறுவான், கொண்டலாத்தி, செம்போத்து, வால் காக்கை, ஆசியக் குயில், சூரியப்பறவைகள், பன்றிக்குருவி, அக்காக்குயில், வைரி, புள்ளி ஆந்தை, மணிப்புறா, சிவப்பு ஆரக்கிளி, சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, நத்தை குத்தி நாரை, வேட்டைக்கார ஆந்தை, வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, ஊதாவண்ண காட்டுக்கோழி, கானான் கோழி, நீல முகப் பூங்குயில், சின்னான், வெண்புருவக் கொண்டலாத்தி, செம்மீசைச் சின்னான் மற்றும் கிழக்கத்திய தேனீ
குளிர் மாதங்களில் இங்கு அரசவால் ஈபிடிப்பான், பழுப்பு ஈ பிடிப்பான், இந்திய தோட்டக்கள்ளன், இளஞ்சிவப்பு தலையுடை குருவி, நீள்மூக்கு கதிர்க்குருவி, பிளைத்தின் நாணற்புதர் குருவி, காட்டு வாலாட்டுக் குருவி ஆகியவற்றைக் காணலாம்.
வழித்தடம்: கூகுள் நிலப்படங்கள்
பள்ளிக்கரணை சதுப்புக்காடு
தொகுபள்ளிக்கரணை சதுப்புநிலம் வங்காள விரிகுடாவை அடுத்துள்ள நன்னீர் சதுப்புநிலமாகும். இது 80 சதுர கிலோமீட்டருக்கு பரந்துள்ளது. நகரத்தின் சிறப்பான இயற்கை நன்னீர் அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு 100 வகை வசிப்பிட,குடிபெயர் பறவைகளை இனம் காணலாம்.
இந்த சதுப்புநிலம் நன்னீர்/உப்புநீர் நீர்நிலைகளையும் நாணற்புதர்களையும் சேற்றுநிலங்களையும் நீரில் மிதக்கும் தாவரங்களையும் கொண்டுள்ளது.
சிறப்புகள்: சீகார வாத்து,[2] சாம்பல்தலை லாப்விங், பெரும் பூநாரை மற்றும் நீரில் நடக்கும் வகையினமான கோணமூக்கு உள்ளான், நெடுங்காற் உள்ளான், wikt:பேதை உள்ளான் போன்றவற்றை குளிர்கால மாதங்களில் காணலாம்.
இந்நிலத்தை வாழிடமாகக் கொண்டவை: ஊதாவண்ண சதுப்புநிலக்கோழி, நாட்டுக் கோழி, நீளவால் தாழைக்கோழி, செந்நாரை, நெடுங்கால் உள்ளான், நாமக்கோழி, புள்ளி மூக்கு வாத்து, பெலிகன், சிட்டுக்குருவிகள், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, நெடுங்காற் கொண்டைக்குயில், வெண்தொண்டை மீன்கொத்தி மற்றும் சாம்பல் நாரை.
இரைவாரிப் பறவைகளான வைரி, கருப்புத்தோள் பருந்து, கள்ளப் பருந்து, செந்தலை வல்லூறு, சதுப்புநிலப் பூனைப்பருந்து, மொன்டேகின் பருந்து மற்றும் கழுகு ஆகியனவும் இங்குள்ளன.
குளிர்காலங்களில் வடக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நீரில் நடக்கும் பறவைகளும் வாத்துக்களும் இடம் பெயர்ந்து வருகின்றன. இக்காலத்தில் காணப்படும் மற்ற பறவைகள்: மீன்கொத்திப் பருந்து, பெரும் பூநாரை, ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து, நீலச்சிறகி, நெடுங்காற் உள்ளான், சாதா உள்ளான், பொரி உள்ளான் மற்றும் சதுப்புநில உள்ளான், wikt:சேற்றுஆலா, சூறைக்குருவி, மஞ்சள் வாலாட்டிக்குருவி, கொசு உள்ளான், அன்றில், கருந்தலை அரிவாள் மூக்கன், பேதை உள்ளான்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
நன்மங்கலம் வன பகுதி
தொகுநன்மங்கலம் வனபகுதி 320 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள புதர்க்காடாகும். சென்னை நகரில் இங்கு மட்டுமே கொம்பு ஆந்தையைக் காணலாம். இவை கடந்த இருபது ஆண்டுகளாக இங்கு தடையின்றி பெருகிவந்துள்ளன. நன்மங்கலம் வனப்பகுதியில் வசிப்பிடமாகவும் குடிபெயர்ந்தும் 80க்கும் மேற்பட்ட இனங்கள் பதியப்பட்டுள்ளன. இங்கு பூச்சி மற்றும் ஊர்வன இனங்களையும் மிகையாகக் காணலாம்.
புதர் மண்டிய இவ்வனத்தில் சிறு குன்றுகளும் கைவிடப்பட்ட மூன்று கற்சுரங்கங்களும் தைல மரத்தோப்புகளும் அமைந்துள்ளன.
சிறப்பு: இந்த வனத்தின் முதன்மை ஈர்ப்பாக கொம்பு ஆந்தை விளங்குகின்றது. அண்மையில் முதன்முதலாக இளஞ்சிவப்பு மார்புகொண்ட பச்சைப் புறா காணப்பட்டுள்ளது.
இங்கேயே வசிக்கும் பறவையினங்களாக கருஞ்சிட்டு, வண்ணாத்திக் குருவி, சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, கொம்பு ஆந்தை, மாம்பழச்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு, ஊதாத் தேன்சிட்டு, மணிப்புறா, கள்ளிப்புறா, சாவுக் குருவி, ஐரோவாசியா நத்தைக் குத்தி, சாம்பல் தகைவிலான், நீல முகப் பூங்குயில், தவிட்டிச் சிலம்பன், செம்மீசைச் சின்னான், சின்னான், வெண்புருவக் கொண்டலாத்தி, வைரி போன்றவை உள்ளன.
குளிர்கால மாதங்களில் இந்திய தோட்டக்கள்ளன், சூறைக்குருவி, அரசவால் ஈபிடிப்பான், பழுப்பு ஈ பிடிப்பான், சிற்றெழால், பருந்து, உள்ளான் குருவி, நீலவால் பஞ்சுருட்டான் போன்ற பறவைகள் வருகின்றன.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
சிறுதாவூர் ஏரி
தொகுசிறுதாவூர் ஏரி மீன்பிடிக்கவும் வேளாண்மைக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட மழைநீராலான நன்னீர் ஏரியாம். இங்குள்ள நன்னீர் வாத்துக்களுக்காக மிகவும் அறியப்படுகின்றது. இந்த ஏரியை வசிப்பிடமாகவும் குடிபெயர் முகாமாகவும் 70க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கொண்டுள்ளன. சென்னையின் அருகாமையில் இங்குதான் செம்மூக்கு ஆள்காட்டிப் பறவையையும் மஞ்சள்மூக்கு ஆள்காட்டிப் பறவையையும் காணவியலும்.
நன்னீர் ஏரியுடன் திறந்த புல்வெளிகளையும் அங்காங்கே உலர் புதர்கள்/ நாணற்புதர்களையும் இங்கு காணலாம்.
சிறப்பு: இந்தியக் கல்குருவி இங்கு இனப்பெருக்கம் செய்வதாக பதியப்பட்டுள்ளது. வழக்கமாக காணவியலாத இரைவாரிப் பறவைகளான செங்கழுத்துப் பருந்து, குறுங்கால் பாம்புக் கழுகு ஆகியவற்றை இங்கு காணலாம். செம்மூக்கு ஆள்காட்டிப்பறவையையும் மஞ்சள்மூக்கு ஆள்காட்டிப்பறவையையும் மிக அருகாமையில் காணலாம்.
இங்கு வசிப்பிடமாகக் கொண்டுள்ள சில பறவையினங்கள்: பச்சைப் பஞ்சுருட்டான், புதர்ச்சிட்டு, வானம்பாடி, நெற்களக் குருவி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, இந்திய வாத்துக்கள், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, சிறு ஆள்காட்டி குருவி, செம்பிட்டத் தில்லான், வைரி, வெள்ளைக்கண் கழுகு, செந்தலை வல்லூறு, குறுங்கால் பாம்புக் கழுகு, தூக்கணாங்குருவி, கருங்கொட்டு கதிர்க்குருவி, கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி மற்றும் பனங்காடை.
குளிர்மாதங்களில் குடிபெயரும் சில இனங்கள்: நீலவால் பஞ்சுருட்டான், சிற்றெழால், மஞ்சள் வாலாட்டுக் குருவி, தகைவிலான், அன்றில், கருந்தலை நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, திறந்தமூக்கு நாரை, கழுகு, கிழக்கத்திய புல்தாவு பறவை, சாதா உள்ளான், பொரி உள்ளான்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
செம்பரம்பாக்கம் ஏரி
தொகுசெம்பரம்பாக்கம் ஏரி 15 சதுர கிமீ பரப்பில் அமைந்துள்ள மழைநீர் சேகரித்த நன்னீர் ஏரியாம். இங்கு குளிர்கால குடிபெயர் பறவைகளைக் காணலாம். ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இதனை வசிப்பிடமாகவும் குடிபெயர் இடமாகவும் கொண்டுள்ளன. இங்கு நன்னீர் ஏரி தவிர புதர்கள், நாணற் படுகைகள், மிதக்கும் தாவரங்கள் உள்ளன.
சிறப்பு: குளிர்காலத்தில் இங்கு நூற்றுக்கணக்கான ஐரோவாசிய வாத்துக்கள், சீழ்க்கை வாத்து, வல்லூறு, மற்றும் குள்ளத்தாரா வருவதாகப் பதியப்பட்டுள்ளது. ஏரியின் சுற்றுப்புறத்தலும் புதர்களிலும் செங்கழுத்து வல்லூறுகளும் பொன்னரிகளும் இனப்பெருக்கம் செய்வதாகவும் பதியப்பட்டுள்ளது.
இங்கேயே வாழும் சில பறவைகளாவன: குள நாரை, சின்ன நீர்க்காகம், செந்நாரை, புள்ளியிட்ட பெலிகன், சாம்பல் தகைவிலான், முக்குளிப்பான், பச்சைப் பஞ்சுருட்டான், பருந்து, புள்ளி ஆந்தை, சிறு வெண் கொக்கு, பெருங்குருகு, சிட்டுக்குருவி, ஊதாக் கோழி, வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, புதர்ச்சிட்டு, கௌதாரி, வானம்பாடி, நெற்களக் குருவி, இரட்டைவால் குருவி, கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி, வைரி, சிவப்புச் சில்லை, நீளவால் தாழைக்கோழி.
குளிர்காலங்களில் காணப்படும் சில பறவைகள்: சிற்றெழால், நீலவால் பஞ்சுருட்டான், தகைவிலான், ஐரோவாசிய வாத்துக்கள், குள்ளத்தாரா, சீழ்க்கை வாத்து, மஞ்சள் மூக்கு நாரை
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
கேளம்பாக்கம் காயல்
தொகுகேளம்பாக்க காயல் கிழக்குக் கடற்கரை சாலையில் வங்காள விரிகுடாவை அடுத்துள்ள உவர்நீர் கடற்கரைக் காயலாகும். இங்கு பல்வேறு நீர்நடைப் பறவைகள், ஆலாக்கள், நீள்சிறகுடை கடற்பறவைகள், பல குடிபெயர் பறவைகளைக் காணலாம். இதுவரை 80க்கும் மேற்பட்ட இனவகைகள் பதியப்பட்டுள்ளன.
இதில் கடலோர நீர்நிலைகள், மணற்றிட்டுக்கள், உப்பளங்கள், சிறுபுதர்களைக் காணலாம்.
சிறப்பு: குளிர்காலத்தில் நீள்சிறகுடை கடற்பறவைகளும் ஆலாக்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஐரோவாசியக் குதிரைத்தலைக் கோட்டான், பெரும் பூநாரை, wikt:ஆலா போன்றவற்றை பெப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இங்கு காணலாம். அண்மையில், சென்னையில் முதன்முதலாக, இங்கு கருந்தலை அரிவாள் மூக்கன் காணப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் பறவைகளாவன: சின்ன நீர்க்காகம், கூழைக்கடா, முக்குளிப்பான், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, இளம்பச்சை அல்லது வரியுடை நாரை, பச்சைப் பஞ்சுருட்டான், இரட்டைவால் குருவி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, குள நாரை.
குளிர்மாதங்களில் நூற்றுக்கணக்கான நீர்நடை பறவைகளைக் காணவியலும். அக்காலத்தில் இங்கு காணப்படும் சில பறவையினங்களாவன: wikt:ஆலா, சிறு ஆலா, மீசையுள்ள ஆலா, நீள்சிறகுடை ஆலா, பெருங்கொண்டை ஆலா, வெண்சிறகு கருப்பு ஆலா, காசுப்பியன் ஆலா, நீள்சிறகுடை கடற்பறவைகள், சாதா உள்ளான், பொரி உள்ளான், குதிரைத்தலைக் கோட்டான், பருந்து, கொசு உள்ளான், பவளக்காலி, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை போன்றவையாகும்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
வேடந்தாங்கல்
தொகுவேடந்தாங்கல் பறவை சரணாலயம் இந்தியாவின் மிகத் தொன்மையான சரணாலயங்களில் ஒன்றாகும். 30 எக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான குளிர்கால குடிபெயர் பறவைகளுக்கு அடைகாக்கும் இடமாக விளங்குகின்றது. இந்த ஏரியிலுள்ள கடம்பு, கருவேல இனமரங்கள் குடிபெயர் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டிக்கொள்ளவும் குஞ்சுகளை பெற்றெடுத்து வளர்க்கவும் வசதியாக உள்ளன.
சிறப்புகள்: நாரைகள் மற்றும் குளிர்கால வாத்துகள்.
இங்கு குஞ்சு பொரித்து அடைகாக்கும் பறவையினங்களில் சில: மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கரண்டிவாயன், பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம், கூழைக்கடா, கருந்தலை நாரை, அன்றில், சிறு வெண் கொக்கு, வெண் கொக்கு, பெருங்கொக்கு, இராக்கொக்கு, குளத்துக் கொக்கு, நத்தை குத்தி நாரை. நூற்றுக்கணக்கான நீலச்சிறகிகள், ஊசிவால் வாத்துக்கள் மற்றும் ஆண்டி வாத்துகளை இங்கு காணலாம். நவம்பர் முதல் மார்ச்சு வரை இவற்றைக் காண சிறந்த காலமாகும்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
வேடந்தாங்கல் புதர்க்காடு
தொகுவேடந்தாங்கல் பறவை சரணாலயத்திற்கு செல்லும் வழியில் உள்ள வேடந்தாங்கல் புதர்/நாணற் படுகையில் பல வழமையற்ற பறவையினங்கைக் காணலாம்.அதிகம் ஆய்வு செய்யப்படாத பறவைகள் வாழிடமாக இது உள்ளது. மிகச் சிறிய இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட அரிதான இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[3]
சென்னையை அடுத்துக் காணப்படும் பறவைகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த வாழிடமாக இது உள்ளது. இங்கு புதர்களும் சிறு குளங்களும் நாணற்படுகைகளும் புல்வெளிகளும் நெல்வயல்களும் கலந்து உள்ளது.
சிறப்புகள்: காணவரிதான சாம்பல்மார்பக காடை, செங்கானான் கோழி போன்றவற்றை இங்கு காணலாம். சென்னைக்கு முதல்முறையாக, சீன புற்குருவி இங்கு காணப்பட்டதாக பதிவாகியுள்ளது.
இங்கேயே வாழும் பறவையினங்கள்: பச்சைப் பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி, கருங்கொட்டு கதிர்க்குருவி, செம்போத்து, குயில், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, செங்கானான் கோழி, சாம்பல் மார்பக காடை, கருந்தலை தினைக்குருவி, இந்தியத் தினைக்குருவி, புள்ளிச் சில்லை, சிவப்புச் சில்லை, நெல்வயல் குருவி, மஞ்சள் நாரை, கருப்பு நாரை, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு, ஊதாத் தேன்சிட்டு, கதிர்க்குருவி, வெள்ளை வாலாட்டிக் குருவி, ஆசிய பனை உழவாரன், குளத்து நாரை, கருந்தோள் பருந்து, மணிப்புறா மற்றும் கள்ளிப்புறா.
குளிர்கால குடிபெயர்விகள்: காலுடை கதிர்க்குருவி, பிளைத்தின் கதிர்க்குருவி, சிற்றெழால்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
முதலியார்குப்பம் காயல்
தொகுமுதலியார்குப்பம் கிழக்கு கடலோரச் சாலையில் வங்காள விரிகுடா அடுத்துள்ள உவர்நீர் காயலாகும். நீர்நடைப் பறவைகளுக்கும் குடிபெயர் வாத்துக்களும் இங்கு காணப்படுகின்றன. இப்பகுதியில் கடலோர நீர்நிலைகளும் மணற்றிட்டுக்களும் உப்பளங்களும் உள்ளன.
சிறப்புகள்: நூற்றுக்கணக்கான பெரும் பூநாரைகளையும் கிளிமூக்கு நாரைகளையும் ஆண்டு முழுமையும் இங்கு காணவியலும். ஆயிரக்கணக்கான குடிபெயர் வாத்துக்கள், ஆலாக்கள், நீர்நடைப் பறவைகளை குளிர்மாதங்களில் இங்கு காணலாம்.
வாழ்விடமாக்க் கொண்டுள்ள பறவையினங்கள்: சின்ன நீர்க்காகம், கூழைக்கடா, முக்குளிப்பான், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, சிறுபச்சை வரியுடை கொக்கு, குளத்துக் கொக்கு, சிவப்பு மூக்கு ஆள்காட்டி.
குளிர்காலங்களில் காணப்படும் சில பறவையினங்கள்: பெரும் பூநாரை, சாதா உள்ளான், குதிரைத்தலைக் கோட்டான், பருந்து, கொசு உள்ளான், பவளக்காலி, ஆலாக்கள், கடற்பறவைகள், மஞ்சள் மூக்கு நாரை, நீள் அலகு கொக்கு, சாம்பல் நாரை. ஆயிரக்கணக்கான ஐரோவாசிய வாத்துக்கள், ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து போன்றவையும் இக்காயலைப் பயன்படுத்துகின்றன.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
அடையாறு/தொல்காப்பியர் பூங்கா
தொகுஅடையாறுப் பூங்கா அடையாறு கழிமுகத்தில் 1.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவாகும். இங்கு 100க்கும் கூடுதலான பறவையினங்களும் 70க்கும் கூடுதலான பட்டாம்பூச்சி இனங்களும் உள்ளன.
இவ்விடத்தில் சிறு குளங்களும் பூந்தோட்டங்களும் மணற்றிட்டுகளும் சிறு புதர்களும் கழிமுக நீர்நிலையும் உள்ளன.
சிறப்புகள்: நாரைகள், நீர்நடைப் பறவைகளை குளிர்மாதங்களைக் காணலாம். வண்ணச்சீமாட்டி, கருப்பு இராசா போன்ற அரிதான பட்டாம்பூச்சிகளை இங்கு காணலாம்.
இதனை வாழ்விடமாகக் கொண்ட பறவையினங்கள்: சின்ன நீர்க்காகம், இராக்கொக்கு, முக்குளிப்பான், சூரியப்பறவைகள், சிறு நீல மீன்கொத்தி, கார்வெண் மீன்கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி, கருந்தலை மரங்கொத்தி, சிறு சிறகி, வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி, பச்சைப் பஞ்சுருட்டான்.
குளிர்காலப் பறவைகள்: நெடுங்கால் உள்ளான், சாதா உள்ளான், பொரி உள்ளான், சிறு ஆள்காட்டி குருவி, சிறு வெண் கொக்கு, பெருங்கொக்கு.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
பழவேற்காடு ஏரி/சிறீ அரிகோட்டா சாலை மற்றும் அண்ணாமலைச்சேரி காயல்கள்
தொகுபழவேற்காடு ஏரி மற்றும் அண்ணாமலைச்சேரி காயல்கள் வடசென்னையில் வங்காள விரிகுடாவினை அடுத்துள்ள உப்புநீர் காயல்களாகும். 450 சதுர கிலோமீட்டர் பரள்ளவிலுள்ள பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியாக அறியப்படுகின்றது. 130க்கும் மேற்பட்ட இருப்பிட, குடிபெயர் பறவையினங்கள் இங்கு காணப்பட்டுள்ளன.[4][5]
இங்கு ஆழமற்ற உவர்நீர் காயலைத்தவிர பொங்குதலையும் வடிதலையும் கொண்ட மணற்றிட்டுக்கள், அடர்குறைந்த புதர்கள், நெற்களங்கள், நாணற்படுகைகள் உள்ளன.
சிறப்புகள்: குளிர்மாதங்களில் இங்கு ஆயிரக்கணக்கான பெரும் பூநாரை, கிளிமூக்கு நாரைகள், குளிர்கால வாத்துக்கள், நீர்நடை பறவைகள் காணப்பட்டுள்ளன.
குளிர்கால மாதங்களில் இங்கு காணப்படும் சில பறவையினங்கள்: பெரும் பூநாரை, கிளிமூக்கு நாரை, ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து, பருந்துகள், ஆலாக்கள், கடற்பறவைகள், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அன்றில், கருந்தலைக் கொக்கு, மேற்கத்திய பவழப்பாறை கொக்கு, சிறு வெண் கொக்கு, வெண் கொக்கு, பெருங்கொக்கு, பவளக்காலி, கோணமூக்கு உள்ளான், ஐரோவாசிய குதிரைத்தலைக் கோட்டான், புள்ளியிட்ட அலகு கூழைக்கடா, வல்லூறு, சிற்றெழால்.
வழித்தடம்: கூகுள் நிலப்படம்
நெலப்பட்டு பறவை சரணாலயம்
தொகுநெலப்பட்டு பறவை சரணாலயம் புள்ளியிட்ட அலகு கூழைக்கடாக்கள் இனப்பெருக்கத்திற்கான சிறந்த இடமாக உள்ளது. 4.5 சதுர கிலோமீட்டர் பரப்பிலமைந்துள்ள இந்த ஏரி ஆயிரக்கணக்கான குடிபெயர்விகளுக்கு இனப்பெருக்கவிடமாக அமைந்துள்ளது. இந்த ஏரியில் கருவேல மர இனத்தையொத்த மரங்கள் வளர்ந்துள்ளமையால் இப்பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட வசதியாக உள்ளது. சிறப்புகள்: நாரைகளும் கொக்குகளும் குளிர்கால வாத்துகளும்.
இங்கு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் சில இனங்கள்: மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கரண்டிவாயன், பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், புள்ளியிட்ட அலகு கூழைக்கடா, கருந்தலை கொக்குகள், அன்றில், சிறு வெண் கொக்கு, வெண் கொக்கு, பெருங்கொக்கு, இராக்கொக்கு, குளத்துக் கொக்கு மற்றும் நத்தை குத்தி நாரை. நூற்றுக்கணக்கான நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, ஆண்டி வாத்து போன்றவைகளும் காணப்படுகின்றன. நவம்பர் முதல் மார்ச்சு வரையிலான காலம் இங்கு வருகைபுரிய சிறந்ததாகும்.
வழித்தடம்: கூகுள் நிலபடம்
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Madras Naturalists' Society
- Tamil Nadu Forest Department – Guindy National Park பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம்
- [1] பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu: Fulvous Whistling Duck sighted at Pallikaranai பரணிடப்பட்டது 2009-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Tamil Nadu Forest Department – Vedanthangal Bird Sanctuary பரணிடப்பட்டது 2011-11-03 at the வந்தவழி இயந்திரம்
- Journal of Bombay NHS – Waterbirds of Pulicat Lake பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்
- Nelapattu Bird Sanctuary – Overview பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்
- Pallikaranai Bird Watching
மேற்சான்றுகள்
தொகு- ↑ "தமிழ்நாடு வனத்துறை. கிண்டி தேசியப் பூங்கா". Archived from the original on 2012-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
- ↑ Fulvous Whistling Duck sighted at Pallikaranai. பரணிடப்பட்டது 2009-07-20 at the வந்தவழி இயந்திரம் தி இந்து. 17 சூலை 2009.
- ↑ "தமிழ்நாடு வனத்துறை – வேடந்தாங்கல் பறவை சரணாலயம்". Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.
- ↑ V. Kannan et al. Journal of Bombay Natural History Society. The Waterbirds of Pulicat Lake, Andhra Pradesh-Tamil Nadu, India, Including Those of the Adjoining Wetlands And Heronries. 105 (2), May–Aug 2008. Pages 162–180 http://www.pulicatlake.org/PulicatWaterbirds-Paper.pdf பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Nelapattu Bird Sanctuary – Overview. http://www.pulicatlake.org/Nelapattu%20Bird%20Sanctuary%20An%20Overview.pdf பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்