மு. க. ஸ்டாலின்

தமிழக அரசியல்வாதி
(மு.க. ஸ்டாலின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு.க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மைந்தன் ஆவார்.

மு.க. ஸ்டாலின்
Mkspicture (cropped).jpg
8-ஆவது தமிழக முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆர். என். ரவி
முன்னவர் எடப்பாடி க. பழனிசாமி
தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 ஆகத்து 2018
முன்னவர் மு.கருணாநிதி
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
25 மே 2016 – 3 மே 2021
துணை துரைமுருகன்
முதல்வர் ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்,
எடப்பாடி க. பழனிசாமி
முன்னவர் விஜயகாந்த்
1-ஆவது துணை முதலமைச்சர்
பதவியில்
29 மே 2009 – 15 மே 2011
ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா
முதல்வர் மு. கருணாநிதி
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி ஆயிரம் விளக்கு
உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 மே 2006 – 15 மே 2011
முதல்வர் மு. கருணாநிதி
முன்னவர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம்
பின்வந்தவர் மோகன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2011
முதல்வர் ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்,
எடப்பாடி க. பழனிசாமி
முன்னவர் தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதி கொளத்தூர்
பதவியில்
13 மே 1996 – 15 மே 2011
முதல்வர் மு. கருணாநிதி,
ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்
முன்னவர் கே. ஏ. கிருஷ்ணசாமி
பின்வந்தவர் பா. வளர்மதி
தொகுதி ஆயிரம் விளக்கு
37-ஆவது சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்)
பதவியில்
25 அக்டோபர் 1996 – 6 செப்டம்பர் 2002
முன்னவர் ஆறுமுகம்
பின்வந்தவர் மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
தனிநபர் தகவல்
பிறப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
1 மார்ச்சு 1953 (1953-03-01) (அகவை 68)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி Indian Election Symbol Rising Sun.png திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்)
துர்கா ஸ்டாலின் (தி. 1976)
உறவினர் கருணாநிதி குடும்பம்
பிள்ளைகள் உதயநிதி ஸ்டாலின்
செந்தாமரை
பெற்றோர் தந்தை: மு. கருணாநிதி
தாய்: தயாளு அம்மாள்
இருப்பிடம் 25/9, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்வி இளங்கலை
படித்த கல்வி நிறுவனங்கள் மாநிலக் கல்லூரி, சென்னை
பணி
 • அரசியல்வாதி
கையொப்பம்
இணையம் mkstalin.in
பட்டப்பெயர்(கள்) தளபதி

இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[1] 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.[2][3]

இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தால் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு.க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1953-ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த 4 நாட்களுக்குப் பிறகு பிறந்ததால் அவரது நினைவாகத் தம் மகனுக்கு ஸ்டாலின்[5][6] எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[6].

ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[7] விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.[8][9][10][11]

மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 25, 1975-இல் துர்கா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.

பள்ளிப்பருவம்

ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்ததாக இவர் தெரிவித்தார்.[12] இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.[13]

அரசியல் வாழ்க்கை

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் தி.மு.க. உறுப்பினரானார். இவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே இவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையும் செய்து வந்தார்.

மாநிலச் செயலாளர்

இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980-இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [5]. 1980-இல் திருச்சியிலே 2-ஆம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஓர் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க. ஸ்டாலின் ஓர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

சிறை வாசம்

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காகச் சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975-இல் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார் என்பதை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசுகின்றனர்.[14]

இளைஞரணி தலைமையகம்

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காகத் திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.[5]

முதல் தேர்தல்

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984-ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.[5] அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

மேயர்

இளைஞர் அணியின் செயலாளராகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரைச் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதன்முறையாக 1996-ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.[5]

2001-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்.[5][15][16] ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்தச் சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.[5]

அமைச்சர்

மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாகத் முதல்வர் பொறுப்பை ஏற்க, முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.[5]

எதிர்க்கட்சித் தலைவர்

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் இளைஞர்களைக் கவரும் விதமாக நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். அந்தத் தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை வென்றார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொருமுறை நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். பின்னர் 2018-ஆம் ஆண்டில், அவரின் தந்தை கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றார்.

2019 பொதுத் தேர்தல் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மு.க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 21-இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

முதலமைச்சர்

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7-ஆம் நாளன்று மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அரசியல் வளர்ச்சி

சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்றுக் களப்பணிகள் வாயிலாகக் கட்சியின் பொறுப்புப் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, திமுகவுக்குள்ளேயே வை.கோவை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வை.கோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது.[17][5] ஒரு கட்டத்தில் வை.கோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வை.கோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.[18][19] 2018-இல் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவிற்குப் பின் ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2019-இல் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணித் தலைவர் ஆனார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 ஆயிரம் விளக்கு திமுக தோல்வி 47.94 கே. ஏ. கிருஷ்ணசாமி அதிமுக 50.44[20]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 50.59 தம்பிதுரை அதிமுக (ஜெயலலிதா அணி) 30.05[21]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 ஆயிரம் விளக்கு திமுக தோல்வி 39.19 கே. ஏ. கிருஷ்ணசாமி அதிமுக 56.5[22]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 69.72 ஜீநாத் ஷெரிப்டீன் அதிமுக 22.95[23]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 51.41 எஸ். சங்கர் தமாகா 43.78[24]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 46.0 ராஜாராம் அதிமுக 43.72[25]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 கொளத்தூர் திமுக வெற்றி 47.7 சைதை துரைசாமி அதிமுக 45.78[26]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 கொளத்தூர் திமுக வெற்றி 54.3 ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 31.8[27][28]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 கொளத்தூர் திமுக வெற்றி 60.86 ஆதிராஜாராம் அதிமுக 20.27[29]
வெற்றி தோல்வி

பொழுதுபோக்கு

ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.[5]

மேற்கோள்கள்

 1. "தமிழக ஆளுநரின் பத்திரிகைக் குறிப்பு", மே 29, 2008.
 2. "Karunanidhi makes Stalin Deputy Chief Minister". TheHindu.com.
 3. Stalin appointed Tamil Nadu Deputy CM
 4. "IE100: The list of most powerful Indians in 2019" (en-IN) (2019-09-30).
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9 தட்ஸ் தமிழ் மு.க ஸ்டாலின் பரணிடப்பட்டது 2010-09-02 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009
 6. 6.0 6.1 மு.க.இசுட்டாலின் அறிமுகம்-பெயரின் முக்கியத்துவம் பரணிடப்பட்டது 2009-04-29 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
 7. "Star-studded 175th b'day for MCC school". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (7 October 2010).
 8. http://www.bharatstudent.com.+"M K Stalin, A. R. Rahman & Mylswamy Annadurai|A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photo Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Stills, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photos" (en). மூல முகவரியிலிருந்து 2019-08-11 அன்று பரணிடப்பட்டது.
 9. "Rahman, Stalin get honorary doctorates" (en) (2009-08-01).
 10. "Stalin, Rahman, Annadurai conferred honorary doctorates | Asian Tribune". மூல முகவரியிலிருந்து 2019-08-11 அன்று பரணிடப்பட்டது.
 11. "A R Rahman to be awarded honorary doctorate".
 12. ஸ்டாலின் எனப் பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் என்னை அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 09 நவம்பர் 2018. https://www.hindutamil.in/news/tamilnadu/146648-.html. 
 13. மிசா முதல் தி.மு.க. தலைவர் வரை...!. ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையம். 27 பிப்ரவரி 2021. https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/dmk-leader-stalin-biography/tamil-nadu20210227133915113. 
 14. மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்
 15. டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் அவர்களிடமிருந்து கைநழுவி அதிமுகவிற்கு போனது பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
 16. ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ் பரணிடப்பட்டது 2008-02-26 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
 17. அ.சையது அபுதாஹிர், தொகுப்பாசிரியர் (16 மார்ச் 2019). ஸ்டாலினின் கையில் போர் வாளா... அட்டக்கத்தியா?! - வை.கோவின் வரலாறு. விகடன் இதழ். https://www.vikatan.com/government-and-politics/politics/150781-the-story-of-vaiko-is-he-in-the-right-place. "வை.கோவின் வளர்ச்சி ஸ்டாலினின் வீழ்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்கிற அச்சம் அப்போதே கருணாநிதிக்கு ஏற்பட்டது மறுக்கமுடியாத உண்மைதான்." 
 18. "MK Stalin named DMK working president". indianexpress. பார்த்த நாள் சனவரி 5, 2017.
 19. "Stalin at the helm". இந்து. பார்த்த நாள் சனவரி 5, 2017.
 20. "Statistical report on Tamil Nadu Assembly election 1984". Election Commission of India (1984). மூல முகவரியிலிருந்து 13 நவம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது.
 21. "Statistical report on Tamil Nadu Assembly election 1989". Election Commission of India (1989). மூல முகவரியிலிருந்து 6 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது.
 22. "Statistical report on Tamil Nadu Assembly election 1991". Election Commission of India (1991). மூல முகவரியிலிருந்து 7 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது.
 23. "Statistical report on Tamil Nadu Assembly election 1996". Election Commission of India (1996). மூல முகவரியிலிருந்து 7 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது.
 24. "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India (2001). மூல முகவரியிலிருந்து 6 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது.
 25. "Statistical report on Tamil Nadu Assembly election 2006". Election Commission of India (2006).
 26. "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India (2011).
 27. "The verdict 2016". The Hindu (Chennai): p. 6. 19 May 2016. 
 28. "Green cover". The Times of India (Chennai): p. 2. 19 May 2016. 
 29. https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2213.htm?ac=13

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._ஸ்டாலின்&oldid=3315419" இருந்து மீள்விக்கப்பட்டது