கஜினி (2008 திரைப்படம்)

கஜினி (இந்தி: घजनी) கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பாலிவுட் திரைப்படம் ஆகும். இது அதே பெயரில் வெளிவந்த தமிழ் திரைப்படத்தின் இந்தி வடிவமாகும். தமிழிலும் முருகதாஸ் இயக்கத்தில் தான் இது வெளிவந்தது. கஜினி படக்கரு கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கிய "முமண்டோ" என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் அடிப்படையில் உருவானதாகும். இப்படத்தில் அமீர் கான், அசின் தொட்டுங்கல் மற்றும் ஜியா கான் பிரதான பாத்திரங்களிலும் பிரதீப் ரவாத் மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த பட வேடத்திற்காக, அமீர் கான் உடல்பயிற்சி நிலையத்தில் தனது பிரத்யேக பயிற்சியாளரின் கண்காணிப்பில் ஓர் ஆண்டு தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார்.

கஜினி
சுவரொட்டி
இயக்கம்A. R. Murugadoss
தயாரிப்புGeetha Arts
கதைA. R. Murugadoss
இசைA. R. Rahman
நடிப்புAamir Khan
Asin Thottumkal
Jiah Khan
Pradeep Rawat
Riyaz Khan
ஒளிப்பதிவுRavi K. Chandran
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்Geetha Arts
விநியோகம்Studio 18
Adlabs
வெளியீடு25 திசம்பர் 2008
ஓட்டம்3 hrs 1 min
நாடுஇந்தியா
மொழிHindi
ஆக்கச்செலவுINR 45 crores
மொத்த வருவாய்INR 250 crores
US$ $38,316,564 [1]

இந்தப் படம் நுட்பமான காதல் உணர்வுகளும் கொண்ட ஒரு அதிரடி பரபரப்பு திரைப்படமாகும். இது ஆன்டெரோகிரேடு அம்னீசியா என்னும் சற்று நேரத்தில் ஞாபகம் மறைந்து விடும் நோயைக் கொண்ட ஒரு செல்வந்தரான தொழிலதிபரின் வாழ்க்கையை ஆராய்கிறது. ஒரு மோதலில் அவரது காதலியான ஒப்புருவாளர் (model) கல்பனா கொல்லப்படுகிறார். போலராய்டு உடனடி கேமரா புகைப்படங்களின் உதவியுடனும் தனது உடலில் நிரந்தரமாகப் பச்சை குத்திக் கொண்டும் அந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார் நாயகன். அமீர் கானின் இந்த பாத்திரமானது, இந்த திரைப்படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கஜினி தி கேம் என்னும் 3-டி காணொளி கும்மாளத்திலும் இடம் பெற்றுள்ளது.[2]

கதைச் சுருக்கம் தொகு

மருத்துவக் கல்லூரி மாணவியான சுனிதாவும், அவளது நண்பர்களும் மனித மூளை குறித்த ஒரு ஆய்வுத் திட்டத்தில் பணிபுரிவதில் இருந்து படம் துவங்குகிறது. ஆன்டெரோகிரேடு அம்னீசியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நகரின் புகழ்பெற்ற (முன்னாள்) தொழிலதிபரான சஞ்சய் சிங்கானியாவின் வித்தியாசமான வழக்கை ஆராய்வதற்கு அப்பெண் விரும்புகிறாள். குற்றவியல் விசாரணையின் கீழ் இருப்பதால் சஞ்சயின் ஆவணங்களை காண அவளது பேராசிரியர் அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனாலும் சுனிதா இந்த விடயத்தை தானாகவே ஆய்வு செய்ய தீர்மானிக்கிறாள்.

சஞ்சய் இன்னொருவனை கொடூரமாகக் கொலை செய்வதாக அறிமுகமாகிறான். அந்த மனிதனின் போலராய்டு படத்தை எடுக்கும் அவன், அதில் "முடிந்தது" என்று நேர முத்திரையிடுகிறான். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை நினைவு அழிந்து விடுகிறதான ஆன்டெரோகிரேடு அம்னீசியாவின் ஒரு வித்தியாசமான வகை சஞ்சய்க்கு இருப்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் தனது நினைவைப் புதுப்பிக்க சஞ்சய் புகைப்படங்கள், குறிப்புகள், மற்றும் தனது உடலில் குத்திக் கொள்ளும் பச்சைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஏற்பாட்டைப் பயன்படுத்துகிறான். ஒவ்வொரு நாள் காலையிலும் குளியலறைக்குள் சஞ்சய் செல்லும் போது, குழாய்க்கு அருகில் "சட்டையைக் கழற்று" என்னும் குறிப்பைக் காண்கிறான். தனது சட்டையைக் கழற்றும்போது, தனது மார்பில் ஏராளமான பச்சைகள் இருப்பதைக் காண்கிறான். "கல்பனாவை கொன்று விட்டார்கள்" என்கிற பச்சையை அவன் காணும் போது, சஞ்சய் கல்பனாவைக் கொன்றவர்களை பழிவாங்கத் தான் அலைகிறான் என்பதும், கல்பனாவின் கொலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவராக திட்டம்போட்டுக் கொல்கிறான் என்பதும் தெரியவருகிறது. பல்வேறு குறிப்புகள் மற்றும் பச்சைகளைக் கொண்டு பார்க்கும்போது, அவனது பிரதான இலக்கு "கஜினி" என்பது தெரிய வருகிறது. கஜினி நகரில் சமூகத்தில் பெயர்பெற்ற நபராக இருப்பது இறுதியில் தெரியவருகிறது.

மும்பை போலிஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் யாதவ் தொடர்ச்சியான கொலைகளின் வழக்கை துப்பறிய வருகிறார். சஞ்சய் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு வரும் அவர் சஞ்சயைத் தாக்கி அவனை முடக்கியும் விடுகிறார். ஏராளமான புகைப்படங்களும் குறிப்புகளும் இருப்பதைக் கண்டு அர்ஜூன் யாதவ் அதிர்ச்சியடைகிறார். 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு சம்பவங்களை சஞ்சய் பட்டியலிட்டு வைத்திருக்கும் இரண்டு டயரிகளை அவர் பார்க்கிறார். யாதவ் 2005 டயரியைப் படிக்கும்போது, படம் 2005 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி செல்கிறது. சஞ்சய் சிங்கானியா ஏர் வாய்ஸ் கை பேசி நிறுவனத்துக்கு சொந்தக்காரராக இருக்கும் ஒரு புகழ்வாய்ந்த தொழிலதிபரின் வாரிசு. வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு குடும்ப தொழிலை கவனிப்பதற்காக இந்தியா திரும்புகிறான். தனது தொழில் விஷயமாக, ஜெயிக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகையும் மாடலுமான கல்பனா குடியிருக்கும் வீட்டின் மேல் தனது நிறுவனத்தின் விளம்பரப் பலகை வைப்பதற்காக, கல்பனாவைப் பார்க்க தனது ஆட்களை அனுப்புகிறான் சஞ்சய். இதனை காதல் தூதாக தவறாகப் புரிந்து கொள்கிறார் கல்பனாவின் வடிவழகு/விளம்பர நிறுவன முதலாளி, இதனையடுத்து (பணம் கொழிக்கும் ஏர்வாய்ஸ் விளம்பர வாய்ப்பு மற்றும் மற்ற ஆதாயங்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்)கல்பனாவை இந்த வாய்ப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறார். நிறுவனத்தின் முன்னணி மாடலாகவும் அவர் கல்பனாவை உயர்த்துகிறார். கல்பனா பொதுவாகவே அழகானவள், அன்பானவள். இதனை (இன்னும் நல்ல வடிவழகு வேலைகளை அவளுக்கு பெற்றுத் தரக் கூடிய) ஒரு வெகுளித்தனமான விளையாட்டாகக் கருதும் அவள் சஞ்சயின் நண்பியாக நடிக்கத் துவங்குகிறாள்.

கடைசியில் கல்பனாவை சந்திக்கிறான் சஞ்சய், ஆனால் அவளிடம் தனது பெயர் சச்சின் என்றும், ஒரு சிறிய நகரத்தில் இருந்து இந்த பெருநகரத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடி வந்திருக்கும் சாதாரண மனிதன் என்றும் கூறுகிறான். கல்பனா அவனுக்கு சின்ன சின்ன வடிவழகு வாய்ப்புகள் வாங்கித் தருகிறாள். கடைசியில் அவனது குணத்தால் அவள் கவரப்படுகிறாள், சச்சினும் அவளது அன்பிலும் பரந்த மனத்திலும் கிறங்கிப் போய் இருக்கிறான். (ஆதரவில்லாத ஏழை மற்றும் அனாதைகளுக்கு உதவ அவள் எப்போதும் தயாராக இருப்பதை அவன் எத்தனையோ முறைகள் கவனித்திருக்கிறான்.) அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், கடைசியில் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சஞ்சய் கூறுகிறான். தனக்கு கொஞ்சம் அவகாசம் தருமாறு கல்பனா கூறுகிறாள். அவள் ஒத்துக் கொண்ட பின், தன்னைப் பற்றிய உண்மைகளை அவளிடம் கூறலாம்; அவள் மறுத்து விட்டால், சத்தமில்லாமல் ஒதுங்கி விட வேண்டியது தான், எந்த பிரச்சினையும் செய்யக் கூடாது என்று சஞ்சய் தீர்மானிக்கிறான்.

படம் இன்றைய காலத்திற்குத் திரும்புகிறது, யாதவ் 2006 டயரியை படிக்கப் போகிறார். அப்போது அங்கு வரும் சஞ்சய் யாதவைத் தாக்கி அவரைக் கட்டிப் போடுகிறான். ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கஜினி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அவனைப் பின்தொடர்கிறான் சஞ்சய். கஜினியின் சில புகைப்படங்களை எடுக்கும் அவன் அவனைக் கொல்லத் தீர்மானிக்கிறான் (அது ஏனென்று தனக்கு தெரியாத போதிலும்). விழாவில் அவன் சுனிதாவைச் சந்திக்கிறான்; அவன் வைத்திருக்கும் கோப்புகளின் அட்டைகளில் இருந்து அவனை அடையாளம் கண்டு கொள்ளும் சுனிதா, அவனுடன் நட்பு பாராட்ட தீர்மானிக்கிறாள். அன்று மாலை, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கஜினியின் அடியாள் ஒருவனை சஞ்சய் அடித்துக் கொல்கிறான். கஜினிக்காக அவன் காத்திருக்கிறான், கடைசியில் இன்னொரு முறை கஜினி மீதான தாக்குதலை நடத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறான். சாவதற்கு முன் அந்த அடியாள் இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், கல்பனா கொல்லப்பட்டதையும், சஞ்சய் ஒரு நோயாளியாக ஆனதையும் கஜினிக்கு ஞாபகமூட்டுகிறான். குழம்பிப் போகும் கஜினிக்கு சஞ்சயின் முகம் கூட சரியான நினைவுக்கு வரவில்லை.

இதற்கிடையில், சஞ்சயின் வீட்டிற்கு வரும் சுனிதா அங்கு யாதவ் அடிவாங்கி கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். கஜினி தான் சஞ்சயின் இலக்கு என்பதையும் அவள் கண்டுபிடிக்கிறாள். சஞ்சய் தான் அந்த தொடர் கொலைகளுக்கு சொந்தக்காரன் என்பதை யாதவ் கூறுகிறார். அந்த இரண்டு டயரிக்களையும் கண்டுபிடிக்கும் சுனிதா யாதவை விடுவிக்கிறாள். திடீரென அங்கு வருகிறான் சஞ்சய்; அவனுக்கு அவர்கள் இருவருமே யார் எனத் தெரியாமல் அவர்களை அங்கிருந்து விரட்டி விடுகிறான். யாதவ் கடைசியில் ஒரு பஸ்ஸில் அடிபடுகிறான். சுனிதா வெறி பிடித்த சஞ்சயிடம் இருந்து மயிரிழையில் தப்பிக்கிறாள். கஜினி ஆபத்தில் இருப்பதாகக் கருதும் அவள், சஞ்சய் அவனைத் தேடி வருவதை அவனிடம் கூறுகிறாள். இவ்வாறு பெயர் தெரிந்த இலக்காகி விட்ட நிலையில், சஞ்சயை கொல்வதற்காக அவனது வீட்டிற்கு வருகிறான் கஜினி. அங்கு அனைத்து புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளையும் அழிக்கும் அவன், தனது ஆள் ஒருவன் மூலம் சஞ்சய் மனதை மாற்றி சஞ்சய் உடலில் இருக்கும் அத்தனை பச்சைகள் மேலும் வேறு பச்சைகளை குத்தி விடச் செய்கிறான் (இவ்வாறு பழையவற்றை அழிக்கிறான்). இனி தன்னை அவனால் அடையாளம் காண முடியாத வகையில் அத்தனை தடயங்களையும் அழித்து விட்ட திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு அகலுகிறான் கஜினி.

இதனிடையே, தனது அறையில், 2006 டயரியைப் படிக்கிறாள் சுனிதா. படம் 2006 க்கு பின்னோக்கி செல்கிறது. கல்பனா சஞ்சயின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டாள் என்பது தெரிகிறது. டயரி திடீரென முடிந்து போகிறது. இதனை மேலும் துருவிப் பார்க்கையில், 2006 ஆம் ஆண்டின் ஏதோ ஒரு சமயத்தில், கல்பனா ஒரு விபச்சார மோசடிக் கும்பலின் வஞ்சத்திற்குள் மாட்டியிருக்கிறாள் என்பதை சுனிதா கண்டுகொள்கிறாள். ஒரு வடிவழகு வேலைக்காக அவள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள், அப்போது 25 அப்பாவி இளம்பெண்கள் கோவாவுக்கு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதை அவள் கண்ணுறுகிறாள். அவள் அந்த பெண்களைக் காப்பாற்றுகிறாள். அந்த பெண்கள் மோசடிக் கும்பலின் தலைவன் கஜினி என்பவன் என்பது மட்டும் தான் தெரியும் என்கிறார்கள். அந்த பெண்களின் வாயை மூட தனக்குத் தெரிந்த வழிகளையும் வழிமுறைகளையும் (லஞ்சம் வாங்கும் போலிசார் மற்றும் அரசியல்வாதிகளின் மூலம்) பயன்படுத்தும் கஜினி, தானே கல்பனாவைத் தேடும் முயற்சியில் இறங்குகிறான். கஜினியும் அவனது ஆட்களும் கல்பனாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைந்து அவளுக்காகக் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தற்சமயமாக கல்பனாவை சந்திக்க வருகிறான் சஞ்சய். அவனிடம் அவள் சொல்லும் கடைசி வார்த்தை "கஜினி". அடியாட்கள் கல்பனாவைத் தாக்குகிறார்கள். சஞ்சய் குறுக்கே புகுந்து தடுக்க யத்தனிக்கும்போது, கஜினி அவன் தலையில் ஓங்கி இரும்புக் கம்பியால் அடிக்கிறான். சரியும் சஞ்சயின் பார்வையில் கடைசியாகப் பதிவது கஜினி கல்பனாவை இரும்புக் கம்பி கொண்டு கொடூரமாகக் கொல்வது தான்.

இப்போது இந்த அதிர்ச்சிகரமான உண்மை குறித்து தெரிந்து கொண்ட சுனிதா, சஞ்சயைக் கண்டுபிடித்து அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். அடக்க முடியாத வெறியுடன் அவன் கஜினியைத் தேடி கிளம்புகிறான். மும்பை நகரில் கஜினியின் மறைவிடத்திற்கு சென்று சேரும் சஞ்சய், கஜினியின் அடியாட்கள் அனைவரையும் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்கிறான், பின் கஜினியைத் துரத்துகிறான். கஜினியை அவன் கொல்லப் போகும் போது ஞாபக இழப்பு சுழற்சி வந்து விடுகிறது. கஜினி இப்போது திருப்பிக் கொண்டு சஞ்சயை குத்தி விடுகிறான். கல்பனாவை அவன் எவ்வாறு கொலை செய்தான் என்னும் பயங்கர சம்பவத்தை சஞ்சயிடம் கொடூரம் கொப்பளிக்கக் கூறுகிறான், கடைசி நிமிட திடீர் வலிமையைத் திரட்டி கஜினியை வெல்கிறான் சஞ்சய். கஜினி கல்பனாவைக் கொன்ற அதே வழியில் சஞ்சய் கஜினியைக் கொல்கிறான்.

இப்போதும் ஞாபக மறதி நோய் தொடர, சஞ்சய், ஒரு அனாதை இல்லத்தில் சேவை செய்வதுடன் முடிகிறது படம். கல்பனா ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த போது கல்பனாவும் சஞ்சயும் ஒன்றாகக் கால்பதித்த சாந்துப்பூச்சு பாளத்தை, கல்பனாவுடனான அவனது நினைவுகளைப் புதுப்பிக்கும் வகையில், அவனுக்கு சிறு பரிசாகத் தருகிறாள் சுனிதா. சஞ்சய்க்கு ஞாபகங்கள் மீண்டதா இல்லையா என்பதை பார்வையாளனே தீர்மானித்துக் கொள்ளும்படி விடப்பட்டிருக்கிறது [ஆனாலும் கடைசிக் காட்சியில், அவனுக்கு கடந்த காலம் நிழலாடுவதைக் காண்பிப்பது, முன்பு சொன்னது நடந்திருப்பதாகக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறது].

நடிப்பு தொகு

 • அமீர் கான் தான் சஞ்சய் சிங்கானியா . சஞ்சய் சிங்கானியா ஒரு பணம் கொழிக்கும் தொழிலதிபர்; ஒரு செல் பேசி சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். சஞ்சய் கல்பனா மீது காதல் கொள்கிறான், கல்பனா பின்னாளில் இறந்து போகிறார். அதே சம்பவத்தில் சஞ்சய்க்கு ஒருவகை ஞாபக மறதி நோயும் பற்றிக் கொள்கிறது, அவன் தலையில் ஓங்கி இரும்புக் கம்பியால் அடித்ததால் 15 நிமிடங்களுக்கு முன்னால் நடந்த எதனையும் அவனால் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியாமல் போகிறது. சிகிச்சைக்குப் பின், சஞ்சய் சிங்கானியா தனது காதலியின் கொலைக்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்று அலைகிறான், தனது குறைபாட்டின் காரணமாக, தனது நோக்கம் என்ன என்பதை தனக்குத் தானே அறிந்து கொள்ள தனது உடம்பு முழுக்க பச்சை குத்திக் கொண்டிருக்கிறான். இந்த பாத்திரத்துக்கு சரியான உடல் பொருத்தம் அமைய வேண்டும் என்பதற்காக அமீர் கான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார், தனது சொந்த உடற்பயிற்சி மையத்தில் ஒரு பிரத்யேக பயிற்சியாளரின் கீழ் தொடர்ந்து பயிற்சி செய்து மிகப் பொருத்தமான உடலமைப்பை பெற்றார், 16 அங்குல புஜங்களையும் 8 மடிப்பு தசைகளையும் ஈட்டினார்.


 • அசின் தொடும்கல் தான் கல்பனா . தொழில்முறையில் கல்பனா ஒரு ஃபேஷன் மாடலாக இருக்கிறாள், தன்னை வெற்றிகரமான தொழிலதிபர் சஞ்சய் சிங்கானியாவின் நண்பி என்று விளம்பரம் பெறுவதற்காக கூறிக் கொள்கிறாள். பின்னர், சச்சின் என்கிற சாதாரண மனிதன் எனக் கருதி, சஞ்சய் மேல் காதல் கொள்கிறாள். இரக்க குணமுள்ளவளாகக் காட்டப்படும் கல்பனா, கஜினி மற்றும் அவனது ஆட்களின் சிறுமிகளின் கிட்னிக்களை திருடி விற்பதற்கான சதித் திட்டத்தை முறியடிப்பதன் மூலம், அவர்களின் கோபத்திற்கு இலக்காகிறாள். சஞ்சய் கண் முன்னாலேயே கல்பனா கொல்லப்படுகிறாள், இதனையடுத்து தான் கதையின் மைய அம்சமான பழிவாங்கும் படலம் துவங்குகிறது.


 • ஜியா கான் டாக்டர் சுனிதா வாக நடித்துள்ளார். சுனிதா சஞ்சய்க்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறார், அனுமதி தரப்படாத நிலையிலும், இவர் சஞ்சய் சிங்கானியா மற்றும் அவரது ஞாபக மறதி நோய் குறித்து ஆராய முயலுகிறார். சஞ்சய் குறித்த புதிர்களையும், அவனது கடந்த காலத்தின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்ப்பதற்காக முயலும் சுனிதா தான் சந்திக்க விரும்பும் மனநோயாளி குறித்த தகவல்களைக் கண்டுபிடிக்க பல்வேறு இடங்களுக்கும் செல்கிறாள், இதனால் படம் முழுக்க இவர் தோன்றுகிறார். சஞ்சய்க்கும் இவளுக்கும் இடையில் ஆரம்பத்தில் மோதல் இருந்தாலும், பின் சஞ்சய் கஜினியை சந்திக்க இவள் உதவுகிறாள்.


 • பிரதீப் ரவாத் கஜினி தர்மாத்மா வாக நடித்துள்ளார். தொடர் கொலைகள் புரிந்திருக்கும் கஜினி, தனக்கு அவப்பெயர் ஈட்டித் தந்து தனது திட்டங்களைக் கெடுக்கும் கல்பனாவைக் கொடூரமாகக் கொலை செய்கிறான். நிழல் உலக கூட்டமாக இருக்கும் இவனுக்கு ஏராளமான தொடர்புகளும் பெரிய மனிதர்களின் நெருக்கமும் இருக்கிறது. படத்தில், பல்வேறு சட்டவிரோதமான குற்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இவன் இருப்பதாகக் காட்டப்படுகிறது.


 • ரியாஸ் கான் இன்ஸ்பெக்டர் அர்ஜூனாக நடித்துள்ளார். சஞ்சய் சிங்கானியாவின் கொலைகளைத் துப்பறியும் திறமை மிக்க போலிஸ் இன்ஸ்பெக்டராக அர்ஜூன் வருகிறார். சஞ்சயின் கடந்த கால வாழ்க்கை குறித்தும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளும் நிலையில், படத்தின் பின்பாதியில் விபத்தில் சிக்கி இறந்து போகிறார்.

வெளியீடு தொகு

வர்த்தக வசூல் தொகு

சுமார் 1500 பிரிண்டுகளுடன் 25 டிசம்பர் 2008 அன்று கஜினி வெளியானது, இதில் 213 பிரிண்டுகள் வெளிநாட்டு சந்தைகளுக்கு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு கட்டணம் செலுத்தும் விமர்சனங்கள் மட்டும் சுமார் 650 கிடைத்தன, இது சுமார் 70 மில்லியன் ரூபாயை ஈட்டித் தந்தது. கஜினியின் உள்நாட்டு விநியோக உரிமைகளை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சுமார் 530 மில்லியன் ரூபாய்க்கும், அத்துடன் இன்னுமொரு 500 மில்லியன் ரூபாய்க்கு டிவிடி உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றை ஆட்லேப்ஸ் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் விற்றது, ஆனால் ரப் நே பனா தே ஜோடி விஷயத்தில் இது 120 நாட்களுக்குள் சாதனையை விஞ்சியது.

பாக்ஸ் ஆஃபிஸ் மோஜோ புள்ளிவிவரப்படி, மார்ச் 12 2009 நிலவரப்படி, உலகெங்கும் மொத்தம் 66 நாட்கள்[3] ஓடியதில் கஜினி ஈட்டித் தந்த மொத்த வசூல் சுமார் 250 கோடி ரூபாய்[சான்று தேவை] ($38,316,564 அமெரிக்க டாலர்கள்).

2-வட்டு தொகுப்பு பதிப்பு டிவிடி பிக் ஹோம் வீடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சர்வதேச விநியோக நிறுவனமான ஆட்லேப்ஸ் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் சில்லறை விலையாக 19.99 அமெரிக்க டாலர்களுடன் மார்ச் 13, 2009 அன்று விநியோகத்திற்கு வந்தது. தொடர்ந்த மிதமிஞ்சிய வன்முறைக்காக 15+ வயதினருக்கானது என்னும் தர மதிப்பீடு சான்றிதழை இது பிரித்தானிய போர்டு ஆஃப் பிலிம் சர்டிபிகேஷனிடம் இருந்து பெற்றது.[4]

வீடியோ கேம் தொகு

கஜினி - தி கேம் என்ற பெயரில் கம்ப்யூட்டர்களுக்கான வீடியோ கேம் ஒன்று FXLabs ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்த தயாரிப்பில் உருவாக்கப்பட்டு எரோஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டது.

விளையாட்டுச் சுருக்கம் - அமீர் கான் ஆக இருக்க என்றாவது கனவு கண்டிருக்கிறீர்களா? இதோ அதற்கான வாய்ப்பு, 'கஜினி' என்னும் பாலிவுட் வெற்றிப்படத்தின் அடிப்படையிலான இந்தியாவின் முதல் 3டி கம்ப்யூட்டர் கேமில் நீங்கள் அமீர்கானாக ஆகலாம். அமீர் கான் விவரிப்பில் சஞ்சயின் பார்வையில் கதையை உணருங்கள். ஒவ்வொரு துப்பாக, ஆதாரங்களின் ஒரு சிறு தடயத்தை பின்பற்ற அமீர் தனது குரலில் வழிகாட்டுவதை நீங்கள் கேட்கலாம். உங்களை தாக்க காத்திருக்கும் ஏராளமான கூலிப்படை ஆட்களுடன் சண்டை போடுவதற்கு அவரின் சண்டை நகர்வுகளைப் பயன்படுத்துங்கள். உண்மைத் திரைப்படத்தில் இருந்து கணினித்திரையுலகுக்குள் அற்புதமாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ள செட்டுகளுக்குள் சஞ்சய் நகரும் போது கஜினியின் உலகத்தை அவன் வழியாக ஊடுருவுங்கள். கதையை முழுமையாகக் கிரகித்த நிலையில் பட அனுபவத்தை உங்கள் கணினியில் மறு உருவாக்கம் செய்யுங்கள்.

படத்தின் அடிப்படையில் அமைந்த இந்த விளையாட்டு கதையின் நாயகனின் பார்வையில் இருந்து செல்வதாக அமைந்ததாகும், இந்த விளையாட்டு ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது, இதில் விளையாடுபவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சஞ்சய் தற்காப்புக் கலைகள், ஆயுதங்கள், மற்றும் ஹிட்மேன் விளையாட்டுகளில் இருப்பது போன்ற துணைப் பொருட்களின் உதவி கொண்டு பல்வேறு கட்டங்களை சாதிக்கிறார்.[5] தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் சில்லறை விலையான 14.99 அமெரிக்க டாலர்களில் இந்தியாவின் முதல் உண்மையான 3டி கணினி விளையாட்டு என்று இந்த விளையாட்டு புகழப் பெற்றது, 15 வயதுக்கு மேற்பட்டோர் தான் இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற விநியோகஸ்தர் பரிந்துரையை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்யவில்லை என்றாலும்.[6]

விமர்சன வரவேற்பு தொகு

படம் விமர்சகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. சிஃபியின் சோனியா சோப்ரா இந்த திரைப்படத்திற்கு 4.5 நட்சத்திரங்களை வழங்கியதோடு, "அமீர், அசின், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய நான்கு A க்களுக்காக" இந்த திரைப்படத்தை கட்டாயம் பார்க்கலாம் எனப் பரிந்துரைத்தார்.[7] சிஎன்என் ஐபிஎன்னின் ராஜீவ் மசந்த் இந்த படத்திற்கு 3 நட்சத்திரங்கள் மதிப்பீட்டை அளித்தார்: "கஜினி மிகக் குறிப்பாக மிகச் சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், அது தளும்ப தளும்ப பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது".[8] பாலிவுட் டிரேட் நியூஸ் நெட்வொர்க்கின் மார்ட்டின் டிசௌசா இந்த படத்திற்கு 3.5 நட்சத்திரங்களுடனான மதிப்பீட்டை வழங்கினார், திரைக்கதையில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டிய அவர் படத்தின் அதிரடிக் காட்சிகளைப் பாராட்டினார்.[9] இந்த படம் "எல்லா அம்சங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாக" தெரிவித்த தரண் ஆதர்ஷ் படத்திற்கு 4.5 நட்சத்திரங்களை அளித்தார்.[10] படத்தில் அமீர் கானின் நடிப்பு மிகச் சிறந்த அம்சம் எனப் பாராட்டு தெரிவித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் நிகாத் காஷ்மி படத்திற்கு 3.5 நட்சத்திரங்கள் அளித்தார்.[11] இந்த படத்தில் அமீரின் நடிப்பு தான் இன்று வரை அவர் நடித்ததில் மிகச் சிறந்ததாகும் என ஜீ நியூஸ் வர்ணித்தது.[12] ரீடிஃப்பின் சுகன்யா வர்மா படத்திற்கு 3.5 நட்சத்திரங்களை வழங்கினார்.[13] நல்ல திரைக்கதை, இயக்கம், மற்றும் அமீர் கான் மற்றும் அசின் தொடும்கல்லின் சிறந்த நடிப்பு இவற்றுக்காக பாலிவுட் மூவிஸ் விமர்சனம் இப்படத்திற்கு 4 நட்சத்திர தர மதிப்பீட்டை வழங்கியது.[14] எக்ஸ்பிரஸ் இந்தியாவின் சுப்ரா குப்தா 'கஜினி' ரொம்ப நீளமாய் இருக்கிறது, மிகுந்த வன்முறை கொண்டிருக்கிறது என்று கூறியதோடு, ஜியா கானின் நடிப்பு மற்றும் நடனத் திறமைகளையும் விமர்சித்தார், ஆனால் அமீர் கான் மற்றும் அசினின் நடிப்பை அவர் பாராட்டினார்.[15]

ஆனாலும் சில எதிர்மறை விமர்சனங்களும் கிடைத்தன. இந்தியா டைம்ஸின் கவுரவ் மலானி படத்தின் நீளத்தை விமர்சித்து நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி படத்திற்கு 2 நட்சத்திரங்களை வழங்கினார்.[16] தமிழ் திரைப்பட பாணியில் நடிப்பும் சண்டைக் காட்சிகளும்[சான்று தேவை] அமைந்ததாக சில விமர்சகர்கள் கூறினர். ரீடிஃப்பின் ராஜா சென் அசினின் நடிப்பை விமர்சித்திருந்ததோடு, "அளவுகடந்த உணர்வு எதிர்மறையான விஷயங்களில் ஒன்றாக அமைந்திருப்பதாக" முடித்து, படத்திற்கு 2.5/5 நட்சத்திரங்கள் தரமதிப்பீட்டை வழங்கினார்.[17] ஏஓஎல் இந்தியாவின் நோயான் ஜோதி பராசரா கூறுகிறார்: "இந்த தழுவல் அத்தனை அவசியமில்லாதது என்பதை அநேக ஒப்பீடுகள் அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன. ஆனாலும் அதே இயக்குநர் இயக்கியிருக்கும் தமிழ் பதிப்புடன் ஒப்பிடுகையில் கஜினி வெற்றி பெறுகிறது".[18]

IMDB இல், கஜினி இப்போது 6.9 பார்வையாளர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.[19]

முன்மாதிரி தொகு

கஜினி மற்றும் அதே பெயரிலான தமிழ் பதிப்பு இரண்டுமே அமெரிக்க திரைப்படமான முமண்டோ என்னும் படத்தின் அடிப்படையிலானவையாகும், அந்த படமே கூட முமண்டோ மோரி என்னும் சிறுகதையில் இருந்து எடுத்தாளப்பட்டதாகும். கொள்ளையடிக்க வந்த சமயத்தில் தனது மனைவியை கற்பழித்து கொலை செய்து விட்டான் என்று தான் கருதும் ஒருவனை பழிவாங்க அலைகிறார் ஒரு முன்னாள் காப்பீடு மோசடி புலன்விசாரணை அதிகாரி லியோனார்டு ஷெல்பி, இந்த வேடத்தில் கை பியர்ஸ் நடித்தார். தனது மனைவி மீதான தாக்குதல் சமயத்தில் சம்பவிக்கும் மிகப்பெரும் தலை அதிர்ச்சி காரணமாக லியோனார்டுக்கு ஆன்டெரோகிரேடு அம்னீசியா வந்து சேருகிறது. உடனடி போலராய்டு புகைப்படங்களின் பின்னால் குறிப்புகள் எழுதி வைப்பது, தனது உடம்பு மீது தகவல்களை பச்சைக் குத்திக் கொள்வது ஆகிய சில சிந்தனைகள் எல்லாம் இந்த படத்தில் இருந்து முன்மாதிரி கொள்ளப்பட்டவையாகும்.

கைபேசி உள்ளடக்கம் தொகு

இந்தியாகேம்ஸ் கஜினி என்பது இந்த படத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கைபேசி விளையாட்டு பயன்பாடாகும். கைபேசிக்கான மென்பொருள் தளத்தில் இப்பெயரின் அடிப்படையில் 4 விளையாட்டுகளையும் ஒரு பயன்பாட்டையும் இந்தியாகேம்ஸ் உருவாக்கியுள்ளது. அல்டிமேட் ஒர்க்அவுட் , மெமரி ரிவைவல் , ப்ரெய்ன் ட்ரெக் , மற்றும் ஏராளமான சிறு விளையாட்டுகள் என இது வெவ்வேறு வகையான விளையாட்டுகளைக் கொண்டது.

இசை தொகு

Ghajini
Soundtrack
A. R. Rahman
வெளியீடு
November 24, 2008 (India)
ஒலிப்பதிவுPanchathan Record Inn and AM Studios
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்28:23
இசைத்தட்டு நிறுவனம்
T-Series
இசைத் தயாரிப்பாளர்A. R. Rahman
A. R. Rahman காலவரிசை
'Yuvvraaj
(2008)
Ghajini 'Slumdog Millionaire
(2009)

இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆறு பாடல்கள் இடம் பெற்றிருந்தன, பாடல்களை ப்ரசூன் ஜோஷி எழுதினார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்திருந்தார் என்றாலும், ரஹ்மான் இந்திப் பதிப்பிற்கென பிரத்யேகமாக புதிதாய் இசையமைத்தார்.

வரவேற்பு தொகு

இந்த இசைத்தட்டிற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனம் கிட்டியது. பாலிவுட் ஹங்காமா மிகவும் பாராட்டி விமர்சனம் எழுதியது: "படத்தின் கிறிஸ்துமஸ் வெளியீட்டிற்குப் பின் படத்தின் இசையானது 2009 ஆம் ஆண்டில் ஒரு அலையை உருவாக்கும். "பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்" பட்டியல் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்படும் சமயத்தில், கஜினியை உதாசீனப்படுத்துவது கடினம்".[20] Rediff.com மிகப் பாராட்டி மிக உயர்ந்த தர மதிப்பீடாக ஐந்து நட்சத்திரங்களை வழங்கியது, விமர்சகர் ரஹ்மானைப் புகழ்ந்தார்: "இது அவரின் மிகச் சிறந்த இசைகளில் ஒன்றாக இருக்கும். பாடல்கள் எல்லாம் அற்புதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் கூட கணிக்க முடியாத வகையில் ஒவ்வொன்றும் அடுத்ததுடன் மிகச்சரியான வகையில் தொடர்ச்சியாக பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது."[21]

இசைத்தடங்கள் தொகு

பாடல் பாடியவர்(கள்) நிமிடங்கள் குறிப்புகள்
குஸாரிஷ் ஜாவித் அலி & சோனு நிகம் 5:29 அமீர் கான் மற்றும் அசின் இடம்பெறும் பாடல்
ஏய் பச்சு சுசானே டி'மெலோ 3:48 படத்தில் அசின் பாடுவது
கைஸே முஜே பென்னி தயால் & ஸ்ரேயா கோஷல் 5:46 அமீர் கான் மற்றும் அசின் இடம்பெறும் பாடல்
பேகா கார்த்திக் 5:13 அமீர் கான் மற்றும் அசின் இடம்பெறும் பாடல்
லட்டூ ஸ்ரேயா கோஷல் 4:30 ஜியா கான் இடம்பெறும் பாடல்
கைஸே முஜே (வாத்திய கருவி இசை) வாத்திய இசை 4:01

விருதுகள் தொகு

மேலும் காண்க தொகு

 • மிக அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படங்கள் பட்டியல்

குறிப்புதவிகள் தொகு

 1. http://www.boxofficemojo.com/movies/?id=ghajini.htm
 2. "விரைவில் வருகிறது: கஜினி கணினி விளையாட்டு". Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
 3. "Ghajini's World-wide Gross". Box Office Mojo. 2009-07-29. பார்க்கப்பட்ட நாள் 2009-07-29. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 4. "Ghajini's DVD MSRP". Amazon. 2009-07-29. பார்க்கப்பட்ட நாள் 2009-07-29. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 5. "Ghajini - The Game". 2009-07-29. Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2009-07-29.
 6. "Ghajini - The Game MSRP". Eros Entertainment. 2009-07-29. Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2009-07-29. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 7. விமர்சனம்: நான்கு A க்களுக்காக கஜினியைப் பாருங்கள்
 8. "மசந்த்தின் தீர்ப்பு: கஜினி ஊமையாய் இருக்கிறது, அதனைக் கொண்டாடுகிறது". Archived from the original on 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 9. "கஜினி திரைப்பட விமர்சனம்". Archived from the original on 2010-01-31. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
 10. "கஜினி விமர்சனம்". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
 11. கஜினி
 12. "கஜினி - அமீரின் திரைப்படங்களிலேயே சிறந்த நடிப்பு!". Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
 13. கஜினி: இருண்ட நினைவுகளின் ஒரு மெல்லிய ஆல்பம்
 14. கஜினிக்கான பாலிவுட் திரைப்பட விமர்சனம்
 15. "கஜினி விமர்சனம்". Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
 16. கஜினி: திரைப்பட விமர்சனம்"
 17. ஹம் தோ ஹமாரே (மெமன்) தோ
 18. Noyon Jyoti Parasara (2008-12-29). "Ghajini - Movie Review". AOL India. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
 19. இணையதள திரைப்பட தரவுதளம் வழங்கும் கஜினி (2008) கதைச்சுருக்கம்
 20. Tuteja, Joginder (2008-11-24). "Ghajini music review". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.
 21. Sen, Raja (2008-11-25). "Rahman goes gloriously wild with Ghajini". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.

புற இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜினி_(2008_திரைப்படம்)&oldid=3924767" இலிருந்து மீள்விக்கப்பட்டது