செருகளத்தூர் சாமா
செருகளத்தூர் சாமா அல்லது சிறுகளத்தூர் சாமா (Serukalathur Sama, சூன் 26, 1904 - ) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பொதுவாகவே புராணக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் கிருஷ்ணர் வேடத்தில் அதிக முறை நடித்துள்ளார். இவர் 1930 ஆம் 40 ஆம் ஆண்டுக் காலங்களில் திரைப்படங்களில் நடித்தார்.[1]
செருகளத்தூர் சாமா | |
---|---|
1943 இல் செருகளத்தூர் சாமா | |
பிறப்பு | சூன் 26, 1904 |
இறப்பு | தெரியவில்லை |
பணி | நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1934 – 1960கள் |
பெற்றோர் | வைத்தியநாத ஐயர் |
பிள்ளைகள் | மூவர் |
இளமைக் காலம்
தொகுசாமாவின் இயற்பெயர் சுவாமிநாதன் என்பதாகும். தஞ்சாவூரில் சிறுகளத்தூர் என்ற ஊரில் மிராசுதாரராக இருந்த வைத்தியநாதய்யர் என்பவருக்குப் பிறந்தார்.[2] சாமாவின் ஐந்தாவது வயதில் தாயார் இறந்து விடவே, தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய்மாமன் இவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அத்துடன் கருநாடக இசையையும் கற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி சோதனையில் சித்தி பெற்ற பின்னர் திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். திருமணம் முடித்த பின்னர் வேலை தேடும் பொருட்டு தம்பியுடன் சென்னை சென்றார். அங்கு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது. இரண்டு மாதங்கள் அங்கு பணியாற்றிய பின்னர் சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் எழுத்தராகப் பத்து ஆண்டு காலம் பணியாற்றினார்.[2] இங்கு பணியாற்றிய காலத்தில் இவரது சில பாடல்களை ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனத்தினர் இசைத்தட்டுகளில் வெளியிட்டனர்.[2] இதனால் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
திரைப்படங்களில் பணி
தொகுஜி.பி.சி. ஸ்டூடியோவில் மேக்கப்மேன் ஆகப் பணியாற்றிய மாமா ராஜு என்பவர் சாமாவை நேசனல் மூவிடோன் ஸ்டூடியோவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களது முதல் படமான வள்ளி கல்யாணம் படத்தில் நாரதராக நடித்தார்.[2] அதன் பின்னர், இயக்குநர் ஏ. நாராயணனின் கீழ் பணியில் சேர்ந்தார். ஓராண்டு காலம் அவருடன் பணியாற்றிய பின்னர் திரௌபதி வஸ்திராபகரணம் (1934) திரைப்படத்தில் கிருஷ்ணனாக வேடமேற்று நடித்தார். தொடர்ந்து மாயா பஜார் (1935), கருடகர்வ பங்கம், பாமா பரிணயம், சிந்தாமணி ஆகிய அடுத்தடுத்த படங்களில் கிருஷ்ணன் வேடத்திலேயே நடித்தார். சிந்தாமணி படத்தில் இவர் பாடிய பாடல்கள் இவருக்குப் புகழ் தேடித் தந்தன. பின்னர் அம்பிகாபதி படத்தில் கம்பன் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
பாரத் பிக்சர்சு என்ற பெயரில் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சாமா ஆரம்பித்தார். இதன் மூலம் 1940 ஆம் ஆண்டில் ஷைலக் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இப்படத்தில் அவர் ஷைலக்காக நடித்தார். இப்படம் அவருக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து சுபத்ரா அர்ஜூனா (1941), ராஜசூயம் (1942) என இரண்டு திரைப்படங்களைத் தயாரித்தார். இப்படங்களும் தோல்வியடையவே, கம்பனியை மூடி விட்டார்.[2]
சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பட்டங்கள்
தொகு- நடிகமணி என்ற பட்டத்தை சுத்தானந்த பாரதியார் வழங்கினார்.[3]
- திரை அரசன் என்ற பட்டத்தை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வழங்கினார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுவருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1934 | திரௌபதி வஸ்திராபகரணம் | கிருஷ்ணர் | |
1937 | சிந்தாமணி | கிருஷ்ணர் | |
அம்பிகாபதி | கம்பர் | ||
1943 | சிவகவி | ||
1942 | நந்தனார் | ||
1950 | பீதல பாட்லு | ||
ஏழை படும் பாடு | பாதிரியார் | ||
சகுந்தலை (திரைப்படம்) | கண்ணுவர் | ||
ராஜ முக்தி | |||
பர்மா ராணி | புத்தபிக்கு | ||
கிருஷ்ணன் தூது | |||
பரசுராமர் | |||
விஷ்ணு லீலா | |||
மனோன்மணி | |||
அருந்ததி | |||
ராஜ ராஜேஸ்வரி | |||
ஆரவல்லி சூரவல்லி | |||
ஜீவ ஜோதி | |||
விஜயகுமாரி | |||
மர்மயோகி | யோகி | ||
ராஜசூயம் | |||
பக்த ஹனுமான் | |||
பர்த்ருஹரி | |||
பக்த காளத்தி | |||
சுபத்ரா அர்ஜூனா | |||
திருவள்ளுவர் | |||
மாயா பஜார் | |||
பாமா பரிணயம் | |||
திருநீலகண்டர் | |||
சைலக் | சைலக் | ||
மீரா | |||
1962 | பட்டினத்தார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ blast from the past-RANDOR GUY-Rajasuyam (1942), தி இந்து, நாள்:அக்டோபர் 5, 2013
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "நடிகமணி சிறுகளத்தூர் சாமா". குண்டூசி: பக்: 9-12, 62-64. பெப்ரவரி 1951.
- ↑ சிறுகளத்தூரும் நாகர்கோவிலும், அறந்தை நாராயணன், தினமணி கதிர்
வெளி இணைப்புகள்
தொகு- திருமலை மூர்த்தி. "Not another Actor: Serukalathur Sama". சிறப்பு ஒலிபரப்புச் சேவை. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2014.